திங்கள், 13 டிசம்பர், 2010

அறை எண் ஐம்பத்தாறும் அக்காவின் பாசமும்!


 குழந்தைக்குத் திருச்செந்தூரில் முடியெடுத்துக் காதுகுத்தப்போறதா கதிரேசன் நாலுநாள் முன்னாடியே வந்து அழைச்சிட்டுப் போயிருந்தான். செல்வியும் அவள் கணவன் சண்முகமும் காலையிலேயே திருச்செந்தூருக்கு வந்துட்டாங்க.  மொட்டையடிச்சிட்டு வந்து, காதுகுத்தப் போகும்போது, தன் மகளுக்கு, அக்கா செல்வி வாங்கிட்டு வந்த கம்மலை  வச்சுத்தான் காதுகுத்தணும் என்று சொன்னான் கதிரேசன். செல்விக்கும் சண்முகத்துக்கும் மெத்தச் சந்தோஷமாயிருந்தது.

மதியம் மணி ஐயரில் சாப்பிட்ட கையோடு,  வந்திருந்த உறவுக்காரங்கல்லாம் ஆளாளுக்குக் கிளம்ப ஆரம்பிச்சாங்க. ஆளுக்கொரு ஸ்வீட் பாக்கெட் வாங்கிக்கொடுத்து, வழியனுப்பிவைத்தான் கதிரேசன். "அக்கா, நீயும் அத்தானும் வீட்டுக்கு வந்துட்டுத்தான் போகணும்" என்றான் செல்வியிடம்.

"இல்ல, கதிரேசா... நானும் அத்தானும் இங்கேருந்து அப்டியே பழனிக்குப் புறப்படுறோம். பழனிலேர்ந்து வந்ததும் பஞ்சாமிர்தத்தோட வீட்டுக்கு வாரேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாங்க செல்வியும் சண்முகமும்.

"செல்வி, பழனிக்கு விடிகாலை மூணு மணிக்கு ஒரு பஸ் இருக்கு. அதுல புறப்பட்டா வசதியா இருக்கும்.  அதனால, இங்கயே ஒரு ஹோட்டல்ல தங்கி ரெஸ்ட் எடுத்துட்டுக் கிளம்பலாம்" என்றார் சண்முகம். சரியென்றாள் செல்வி.

கோவிலுக்குப் பக்கத்திலேயே அறைகள் இருந்தது. ஆனா, ஒண்ணொண்ணும் ரொம்ப வித்தியாசமாத் தெரிஞ்சுது. முதலில் இருந்த விடுதிக்குள் நுழைஞ்சாங்க ரெண்டுபேரும்.  ரிசப்ஷனில் இருந்தவனின் தோற்றம், ஏதோ திரைப்படத்தில் பார்த்த ஆதிகால மனிதனை நினைவுபடுத்தியது செல்விக்கு.

பேர் விலாசம் எழுதிக்கொண்டபின், சாவியைக் கையில் கொடுத்து உதவியாளரையும் கூட அனுப்பிவிட, உதவியாள் கதவைத் திறந்து லைட்டைப் போட்டான். அறையின் ஓரத்தில் கட்டிலும், அருகில் ஒரு மேஜை நாற்காலியும் இருந்தது. அறையின் சுவர்களில் ஒன்றிரண்டு ஓவியங்கள். ஒவ்வொன்றும் தன்னையே உறுத்துப் பார்க்கிறமாதிரி இருக்க, முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் அவள். செல்வியின் கண்கள் அறையின் மிச்சப்பகுதியைச் சுற்றிவந்தபோது, கட்டிலுக்குப் பக்கத்தில் பளபளப்பாய் ஏதோ தெரிந்தது. ஒரு அடி முன்னே சென்று பார்த்தவள், "ஐயோ பாம்புங்க..." என்று அலறினாள் அவள்.

சுவரோரமாய்ச் சுருண்டிருந்தது அந்தப் பாம்பு. குறைஞ்சது ஆறடியாவது இருக்கும். விடுதி உதவியாளர் குரல்கொடுக்க, ஒன்றிரண்டுபேர் ஓடிவந்து பாம்பை அடித்தார்கள். " வேணாங்க...நமக்கு இந்த ரூம் வேணாங்க..." என்று கணவனின் காதில் பயத்துடன் முணுமுணுத்தாள் செல்வி. "இன்னும் ஆறேழு மணிநேரம் இங்க இருக்கப்போறோம். அதுக்காக இன்னொரு இடம் தேடணுமா? இதெல்லாம் சின்ன  விஷயம்...மறந்துரு" என்றார் சண்முகம்.

அதற்குள் ரிஷப்ஷனில் இருந்தவர் அவர்களை அழைத்து, மன்னிப்புக் கேட்டுவிட்டு, வேறொரு அறையின் சாவியைக் கொடுக்க, அந்த அறையில் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டபின் உள்ளே நுழைந்தாள் செல்வி. அதற்குள் வீட்டிலிருந்து மகள் மஹாலட்சுமி செல்ஃபோனில் அழைக்க, நடந்ததை மகள்கிட்ட சொன்னாள் செல்வி. அறைக்குள் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

செல்வியின் கணவருக்கு ஏற்கெனவே பிளட் பிரஷர் உண்டு. அவர், செல்வி, நான் வெளிய போயி மஹா கிட்ட பேசிட்டு, அப்டியே எனக்கு பிரஷர் மாத்திரையும் வாங்கிட்டு வந்திர்றேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கதவைச் சாத்திவிட்டுப் படுக்கையில் படுத்தாள் செல்வி.

அறையின் மேற்பரப்பு வித்தியாசமாக இருந்தது ஒரு மரம் விரிந்து நிழலாயிருப்பதுபோல இருந்தது. வரைந்திருக்கிறார்களோ என்று உற்றுப்பார்த்தாள் செல்வி. மரம் அசைகையில் இடைவெளியில் வானம்கூடத் தெரிந்தது. அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு. அறையின் விதானம் முழுவதும்,அடர்த்தியான கண்ணாடியென்று. அட, இப்படிக்கூட இருக்குமா? என்று வியப்புடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

பத்து நிமிஷத்தில் வருகிறேனென்ற சண்முகத்தைக் காணவில்லை. அறைக்கு வெளியே போய்ப்பார்க்கலாம் என்று, வெளியேவந்து கொஞ்சநேரம் நின்றாள் அவள். சண்முகம் வரவில்லை. கதவைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று பார்க்கலாமென்று புறப்பட்டாள். அறை வாசலிலிருந்து மூன்றுபக்கமும் பாதை இருந்தது.  வரும்போது, எந்தப் பாதையில் வந்தோமென்று அவளுக்கு நினைவில்லை. ஏதாவது ஒரு பாதையில் போவோமென்று எதிரில் இருந்த பாதையில் போனாள் செல்வி.

வளைவில் மாடிப்படிகள் தெரிந்தது. ஆனால், கைப்பிடிச்சுவர் இல்லை.
அட, இதுகூட புதுமாடலா இருக்குதே என்று வியந்தபடி, இறங்கத்தொடங்கினாள். பிடித்துக்கொள்ள மேலே வலைப்பின்னல்போன்ற அமைப்பு இருந்தது. அதைப் பிடித்துக்கொண்டு இறங்கியவளின் பிடி சட்டென்று நழுவியது. படிக்கட்டில் அலறியபடியே வேகமாக உருண்டாள் அவள். பத்துப்பதினைந்துபேர் ஓடிவந்தார்கள். அவர்களில் சண்முகமும் இருந்தார்.

"கொஞ்சநேரம் அறைக்குள்ள இருக்கமுடியலியா உனக்கு..." என்றபடி அவளை எழுப்பிவிட்டார் சண்முகம். படபடப்பில் கண்கள் இருண்டது செல்விக்கு. "சரிசரி, உடம்பெல்லாம் வேர்த்துப்போயிருக்கு இப்படி உக்காரு..." என்றபடி, அருகிலிருந்த  இருக்கையில் உட்காரவைத்தார். அதிலிருந்தும் நழுவி விழப்போனவள் "ஐயோ..." என்றபடி எழுந்து, கணவனின் கையைப் பிடித்தாள்.

என்ன ஆச்சு செல்வி...என்னாச்சு?  என்றபடி அவளின் தோளைத்தொட்டு உலுக்கினார் சண்முகம். "ஒண்ணுமில்லீங்க..." என்றபடி முகத்தைத் துடைத்துவிட்டுச், சுற்றும்முற்றும் பார்த்தாள் செல்வி. தன் வீட்டுக் கட்டிலில்தான் இருக்கிறோம் என்று தெளிவானது அவளுக்கு. "எப்பவும்போல ஏதாவது கனவா?" என்று சலிப்புடன் கேட்டுவிட்டுத், திரும்பிப்படுத்தார் சண்முகம்.

தான் கண்டது கனவுன்னு நம்பவே முடியவில்லை செல்விக்கு.  தம்பி கதிரேசனைப் பார்த்தேனே கனவில்... என்னைக்கூட வீட்டுக்குக் கூப்பிட்டானே அவன்...ஏன் திடீர்ன்னு இப்படியொரு கனவு? அவனை நினைக்கக்கூட இல்லியே...

கதிரேசனுக்கும்  சண்முகத்துக்கும் மனசு கசந்துபோய் ஆறேழு வருஷமாச்சு. திடீர்ன்னு அவன் ஏன் கனவில் வந்தான்? அவனுக்கு ஏதாச்சும் கஷ்டமாயிருக்குமோ?  அம்மாவைக் கூப்பிட்டு விசாரிப்போமா என்று நினனத்தாள் அவள்.  ஆனால், மணி இரவு மூன்று. அம்மாவைக் கூப்பிட்டா நிச்சயம் பயந்து போவாங்க. தன்னுடைய தவிப்பைச் சண்முகத்திடம் கேட்கவும் பயமாயிருந்தது அவளுக்கு. ஆனாலும் முடியவில்லை...

மெல்ல அவரின் தோளைத் தொட்டுத் திருப்பியவள் கேட்டாள், "ஏங்க, கனவுல பாம்பு வந்தா கெட்டது நடக்கும்னு சொல்லுவாங்களே...அது நிஜமா? என்றாள் தயக்கமாய். "அம்மா தாயே, இப்பிடி, என்னைத் தூங்கவிடாம உயிரை எடுத்தேன்னா, நிச்சயம் கெட்டது நடக்கும். மனுஷனை ராத்திரிக்கூடத் தூங்கவிடாம தொணதொணன்னு கேள்வி கேட்டுக்கிட்டு...சத்தமில்லாம படுப்பியா..." என்றபடி, திரும்பிப் படுத்துக்கொண்டார் சண்முகம். 

"இது என்ன கனவு? நல்லதா, கெட்டதா? கெட்டதாயிருந்தா கனவுக்கு ஏதும் பின்விளைவு இருக்குமோ? கடவுளே, கதிரேசனுக்கு எந்தக் குறையும் வரக்கூடாது" என்று அவளையுமறியாமல் வேண்டிக்கொண்டது மனசு. சுவர்க்கடிகாரம் மணி நான்கு என்று காட்டியது. கண்களை இறுகமூடினாலும் அந்தக் கனவும் கதிரேசனுமே வந்துவந்துபோக, விட்டத்தைப் பார்த்தபடி கொட்டக்கொட்ட விழித்திருந்தாள் செல்வி.

**********

சனி, 11 டிசம்பர், 2010

ஆசையில் விழுந்த அடி!

பேருந்து நிலைய வாசலிலிருந்து தன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பினான் குமரேசன். மணி மூணரை...வயிறு பசியில் கூப்பாடு போட்டது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது கஸ்தூரி முக்குக்கடைப் பாட்டியிடம் வாங்கிக்கொடுத்த இட்லியும் காரச்சட்னியும் எப்பவோ காணாமல்போயிருந்தது.

மதியம் ரெண்டு மணியாகும்போது, கணேசன் கடையில ரெண்டு வடை வாங்கிச் சாப்பிடலாம்னு நினைச்சப்ப, அடையாமலிருக்கிற ஆட்டோமேல் வாங்கிய கடனும்,கொடுக்காமலிருக்கிற மூணுமாச வாடகையும் நினைவுக்கு வரவே, பசியையை அடக்கிக்கிட்டு சவாரிக்குக் கிளம்பினான் அவன்.

குமரேசனுக்கு மூணு குழந்தைகள். மூணுபேரும் வீட்டுப் பக்கத்திலிருக்கிற ஆரம்பப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறார்கள். குமரேசன் மனைவி கஸ்தூரி, பூ வாங்கிக் கட்டி, பக்கத்துக் காலனியில் தினமும் விற்றுவிட்டுவருவாள். ரெண்டுபேரும் முழுக்கமுழுக்க உழைச்சாலும், முழுசாய்ப் போதாத வருமானம்.

சின்னப்பையனுக்கு உடம்பு சுகமில்லாம போனப்ப வாங்கின கடனுக்கு, தன்னுடைய ஆட்டோவை அடகு வைத்துப் பணம் வாங்கியிருந்தான் அவன். வாங்கின கடனுக்கு அன்றாடம் நூறு ரூவா கட்டணும். அதுபோக வீட்டு வாடகை,  பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு வரவுக்கு மீறிச் செலவுகள்தான் வந்தது. இப்பல்லாம் ஸ்டாண்டிலும் ஆட்டோக்கள் அதிகமாகிவிட்டது. சில நாட்கள் குமரேசனால் தவணைக் காசைக்கூடக் கட்டமுடிவதில்லை.

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை, ஆட்டோ வருமாய்யா என்ற அந்தக்குரல் அசைத்தது. ராஜாஜி ஆஸ்பத்திரிக்குப் போகணும்னு  ஒரு வயசான அம்மாவும், கைக்குழந்தையோட ஒரு பெண்ணும் வந்துநின்னாங்க. ரெண்டுபேர்முகத்திலும் அப்பிக்கிடந்தது சோகம்.

"போலாம்மா..." என்று அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, ஆட்டோவைக் கிளப்பினான் அவன். "என்ன பெரியம்மா, ஆஸ்பத்திரிக்குப் போறீகளே,  உடம்புக்கு சுகமில்லியா? என்று மெல்லப் பேச்சுக்கொடுத்தான் குமரேசன். "ஆமாய்யா... என் பேரன்...இந்தா, இவளோட புருஷன், சைக்கிள்ல போகையில பாவி அந்த மினிபஸ்ஸுக்காரன் இடிச்சுத் தட்டிவிட்டுட்டான். இப்ப அவன் ஒத்தக்கால் ஒடிஞ்சு, ஆஸ்பத்திரியில கெடக்கான்.

மூணுநாளா ஆஸ்பத்திரியும் வீடுமா அல்லாடிக்கிட்டுக் கெடக்கொம்யா...ஒழைச்சு குடும்பத்தக் காப்பத்தவேண்டிய புள்ள, ஒடம்புக்கு முடியாம கெடக்குது. அந்த மீனாச்சித் தாயிதான் அவன முழுசா சொகமாக்கி, சீக்கிரம் வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்...அந்தப் பொண்ணு இடையில் தடுத்தும் கேக்காம, ஆத்தாமையை அவனிடம் கொட்டியது பாட்டி.

வருத்தப்படாதீங்க பாட்டி...உங்க பேரனுக்கு சீக்கிரமே சரியாயிரும்...பாண்டிகோயிலுக்குப் பதினோருரூவா நேர்ந்து முடிஞ்சுவையிங்க என்று ஆறுதலாய்ப் பேசியவன், அவர்களை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டுட்டு, பெட்ரோல் போடும்போதுதான் பார்த்தான். ஆட்டோவின் பின்னால், சாமான்வைக்கும் இடத்தில், ஒரு துணிப்பை இருந்ததை.

எடுத்துப் பிரித்துப் பார்த்தான். உள்ளே, ஏழெட்டு ஆரஞ்சுப்பழங்களும், ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் இருந்தது. சின்ன துணிக்கடை பர்ஸ் ஒன்றில் முன்னூத்தம்பது ரூபாயும் இருந்தது. பாட்டியும் அந்தப் பொண்ணும்தான் அதைத் தவறவிட்டிருக்கணும் என்று தோன்றியது அவனுக்கு.

அவங்களப் பாத்தாலும் கஷ்டப்பட்டவங்களாத்தான் தெரிஞ்சிது. ஆனாலும், நம்ம நெலமையைவிட மோசமா இருக்காது என்று நினைத்துக்கொண்டவனாய், பர்சிலிருந்த பணத்தை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, பெட்ரோலுக்குக் காசுகொடுத்துவிட்டுக் கிளம்பினான் .

நூறை கடனுக்குக் கட்டினாலும் மிச்சம் இருநூறுத்தம்பது ரூவா இருக்குது. புள்ளைகளுக்குப் புடிச்ச புரோட்டா சால்னா வாங்கிக் குடுக்கலாம். கஸ்தூரிக்கு பலகாரக் கடையில கொஞ்சம் பூந்தி. அப்புறம், ஆரஞ்சுப்பழம் சின்னவனுக்கு ரொம்பப் பிடிக்கும். மனசு சந்தோஷத்தில் நிறைய, சிம்மக்கல் தாண்டியதும் ஆட்டோவை உள்ரோட்டில் சல்லென்று திருப்பினான். உள்ரோட்டிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு ரிவர்சில் வந்த வண்டியைக் கவனிக்கவில்லை அவன்.

பட்டென்று மூளையில் உறைக்க, அதற்குள் கிட்டத்தில் வந்துவிட்ட மினிலாரியைக் கண்டு, சட்டென்று வண்டியைத் திருப்பினான் அவன். சந்தின் முனையிலிருந்த கரண்ட் கம்பத்தில் முட்டிக்கொண்டு நின்றது ஆட்டோ.

"எழவெடுத்தபயலே, கண்ணப் பொடதியிலயா வச்சிட்டுவந்தே...பட்டப் பகல்லயே தண்ணியப் போட்டுட்டு ஓட்டுறானுகளோ என்னவோ" என்று, கூடக்கொஞ்சம் கெட்ட வார்த்தை போட்டுத் திட்டிவிட்டுப்போனான் லாரிக்காரன். குமரேசனுக்குப் படபடப்பு நிற்கவில்லை.

கூட்டம் கூடிவிட்டது. பக்கத்துப் பெட்டிக்கடைக்காரர் ஒரு சோடாவை ஒடச்சுக் கொடுத்துட்டு, பாத்து வரக்கூடாதாய்யா...ஏதோ, ஏரோப்ளேன் ஓட்டுறமாதிரில்ல விர்ருன்னு வந்து திரும்புற...யாரு செய்த புண்ணியமோ, நீ  நெத்தியில ஒரு வெட்டுக் காயத்தோட  தப்பிச்சிட்டே...ரத்தம் வழியுது பாரு...சட்டுன்னு போயி, ராஜாஜி ஆஸ்பத்திரியில ஒரு கட்டுப் போட்டுட்டு,  அப்புறமா பொழப்பப் பாரு என்று அவர் பங்குக்கு வைதார்.

ஏதோ ஞாபகத்துல, சட்டுன்னு திரும்பிட்டேண்ணே... என்று நடுக்கத்தோடு சொன்னபடி, சோடாவுக்குக் காசெடுத்து நீட்டினான் அவன். காசெல்லாம் வேண்டாம். இனியாவது பத்திரமா ஓட்டிட்டுப்போ என்று பெட்டிக்கடைக்காரர் சொல்ல, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஆட்டோவை நகர்த்தினான் குமரேசன்.

வண்டியின் முன்னாடி லைட்டும், கண்ணாடியும் உடைந்துபோயிருந்தது. நெற்றியில் அடிபட்டது விண்விணென்று தெரித்தது. திரும்பியபோது பின்னாடியிருந்த துணிப்பை மறுபடியும்  கண்ணில் பட்டது. ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டாம்னு நினைச்சாலும் விதி அங்க போக வச்சிருச்சே என்று நினைத்தான் அவன்.

முன்னூத்தம்பதுக்கு ஆசைப்பட்டு, இப்ப ஆட்டோவுக்கு ஐநூறுக்குமேல் செலவாகும்னு தோணியது அவனுக்கு. ஆனா, அடிமட்டும் பலமாப் பட்டிருந்தா அந்தப் பாட்டியோட பேரனை மாதிரி, தானும் ஆஸ்பத்திரிப் படுக்கையில் விழுந்திருப்போம் என்ற நினைப்புத் தோன்ற, கால்வரைக்கும் நடுக்கம் ஓடியது குமரேசனுக்கு.

வண்டியை மெதுவாகப் பின்னுக்கு நகர்த்தினான். தூரத்தில் தெரிஞ்ச மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, சட்டைப் பையில் எடுத்துவைத்த முன்னூத்தைம்பது ரூபாய் காசை  மறுபடியும் அந்தப் பர்சில் வைத்துவிட்டு, ஆட்டோவைத் திருப்பினான் குமரேசன். அது  ராஜாஜி ஆஸ்பத்திரியை நோக்கிப் புறப்பட்டது.

*********

செவ்வாய், 7 டிசம்பர், 2010

உள் வீட்டுச் சண்டை


ஏண்டா, வாணி வீட்டுக்குப் போனியா? வாசல்பக்கத்திலிருந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா, பார்வையை உயர்த்திக்கேட்டார்.

ஆஹா, மாட்டிக்கிட்டமோன்னு, மனசு படபடத்தது அகிலுக்கு.

இல்லப்பா...வந்துப்பா...விளையாடும்போது, பந்துபோயி அவங்க பால்கனியில விழுந்துருச்சு. அதான், கொண்டுவந்து குடுங்கன்னு கேக்கப்போனேன்.

அப்போ, பந்தை வாங்கிட்டுப் பேசாம வந்துட்டே...அப்டித்தானே? சந்தேகக் கண்களோடு கொக்கிபோட்டான் சண்முகம், அகிலின் அப்பா.

நானாப் பேசலப்பா...வாணியக்காதான் வந்து பேசிச்சு. அரைப்பரிச்சை எப்படான்னு அவங்கம்மாவுக்குக் கேக்காம மெதுவாக் கேட்டுச்சு...நான் அடுத்த வாரம்னேன். அதுக்கு, பரிட்சைக்குப் படிக்காம பந்து விளையாடுறியாடா நீன்னு கேட்டுட்டு, காதைப் பிடிச்சுத் திருகிட்டே சிரிச்சுச்சு. அதுக்குக்கூட நான் பதிலே சொல்லலப்பா...அப்பாவியாய்ச் சொன்னான் அகில்.

அப்புறம், இந்தப் பச்ச மாங்காகூட, நானாக் கேக்கல. அக்காவாத்தான் ரெண்டு துண்டு குடுத்துச்சு. உச்சுக் கொட்டிக்கொண்டே சொன்னான் அகில்.

அதற்குள், காப்பியுடன் அங்கே வந்தாள் அகிலின் அம்மா.

புள்ளைகிட்ட என்ன புலன் விசாரணை நடக்குது? என்று சந்தேகமாய்ப் பார்க்க, ஒண்ணுமில்ல புனிதா, அரைப் பரிச்சை லீவுக்கு அம்மாச்சி வீட்டுக்குப் போகலாமான்னு கேட்டான்...அப்பாவுக்கு, ஆஃபீஸ்ல வேலையிருக்கு. நீயும் அம்மாவும் போயிட்டுவாங்கன்னு சொன்னேன்...என்று சண்முகம் சொல்ல, காப்பாற்றிய அப்பா முகத்தையும், காப்பி ஆற்றிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தையும் மாறிமாறிப்பார்த்தபடி, அங்கிருந்து மெதுவாய் நகர ஆரம்பித்தான் அகில். மகனின் கைகளைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டான் சண்முகம்.

எப்பத்தான் உங்களுக்கு வேலையில்லாம இருந்திச்சு? என்னவோ பண்ணுங்க" என்று சலித்தபடி, உள்ளே போனாள் புனிதா. கேட்காத தூரத்துக்கு அவள் போய்விட்டதை உறுதிசெய்துகொண்டவனாய், மகனிடம் விட்டதைத் தொடர்ந்தான் சண்முகம்.   அக்காவைத் தவிர,வேற யாரையும் பாக்கலயாடா நீ? மகனின் கண்களை ஊடுருவினான் அவன்.

அப்பா, அதுவந்து...அதுவந்து...ஆச்சியையும் பாத்தேம்ப்பா...

ஆச்சியைப் பாத்தியா? என்னடா சொன்னாங்க ஆச்சி? உள்பக்கம் பார்த்துவிட்டு, மெதுவாகக் கேட்டான் சண்முகம்.

என் கன்னத்தைத் தொட்டு முத்தம் கொடுத்துட்டு, கண்ணத் தொடைச்சிக்கிட்டாங்கப்பா. அப்புறம், உங்க அப்பன் எப்பிடியிருக்கான்னு எங்கிட்ட மெள்ளமா கேட்டாங்கப்பா... என்றான் அகில்.

கண்கள் நிறைந்தது சண்முகத்துக்கு. வேறெங்கோ பார்த்தபடி சில நிமிஷங்கள் சண்முகம் பேசாமல் உட்கார்ந்திருக்கவே, அப்பா நான் போகவாப்பா? என்றான் அகில்.

இருப்பா, என்று மகனை இருத்திய சண்முகம், "தம்பி, இன்னும் ஒருதடவை அங்க பந்துபோய் விழுந்திச்சுன்னா, எங்க அப்பாவுக்கு, எப்பவும் அவங்க அம்மா நெனைப்பாவே இருக்காம்னு ஆச்சிகிட்ட சொல்லுப்பா... என்றபடி, வந்த கண்ணீரை மகனிடமிருந்து மறைக்க முயற்சித்தான் அவன்.

அப்பாவின் கவலைக்கு முழுசாக அர்த்தம் புரியலேன்னாலும், ஆச்சியைப் பார்த்தால் அது தீருமென்று விளங்கியது அகிலுக்கு. தன் கையிலிருந்த பந்தை அங்கிருந்தபடியே ஓங்கிஅடித்தான் அவன். தடுப்புச்சுவரைத் தாண்டிப்போய், அடுத்த வீட்டுத் தாழ்வாரத்தில் விழுந்தது அது.

யார்டா அது? வீட்டுக்குள்ள பந்தடிக்கிறது? வெளியே வந்து  குரல் கொடுத்தாங்க ஆச்சி.

அப்பாவைத் தூக்கிவிடச்சொல்லி, அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தபடி, 'நாந்தான் ஆச்சி' என்றான் அகில். அந்தப் பக்கமிருந்து பந்தும் பார்வையும் இந்தப்பக்கம் வந்துவிழ, பாசத்தைப் பரிமாறிக்கொண்டன பார்வைகள்.
 
அப்பாவின் முகத்தைத் திரும்பிப்பார்த்துச் சிரித்தான் அகில். பரிசாக, மகனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான் சண்முகம்.

********

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

இது, ரகசியமாய்ச் செய்யவேண்டிய விஷயம்!

இதை யாரும் செய்யலாம்...எப்பவும் செய்யலாம். ஆனா, சுத்திலும் யாரும் இல்லைன்னு உறுதிபண்ணிக்கிட்டுச் செய்யணும். ஏன்னா, உங்களப் பாத்த அதிர்ச்சியில, யாராச்சும்,பயத்தில நடுங்கிப்போகவோ,இல்லைன்னா, உங்களுக்கு புத்தி தடுமாறிப்போச்சுன்னு நினைக்கவோ சான்ஸ் இருக்குது.

முப்பது வயசுக்குமேல ஆயிட்டாலே முகத்தசைகள்ல சுருக்கம், தொய்வு ஏற்பட ஆரம்பிச்சிடும்னு சொல்லுவாங்க. நல்ல ரத்த ஓட்டம் கிடைச்சா இதெல்லாம் கொஞ்சம் தள்ளிப்போடமுடியும்னும் சொல்றாங்க. குறிப்பா, கணினியில் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு, கழுத்துக்குமேல போதுமான ரத்தஓட்டம் இல்லாம, கண்களில் சோர்வும், கழுத்தில் வலியும் ஏற்படும். தலைப்பகுதிக்கு ரத்தஓட்டத்தை ஏற்படுத்தும் இந்தப் பயிற்சி, அதற்கெல்லாம் நல்ல தீர்வாக இருக்கும்.

இதை சிங்காசனம்ன்னு சொல்லுவாங்க. அதாவது கண்ணை உருட்டி, நாக்கை வெளியே நீட்டிக்கிட்டு செய்யும்போது சிங்கம் மாதிரி இருக்குமாம். இந்தப் பயிற்சியைச்  செய்யும்போது, நீங்களே கண்ணாடியைப் பார்த்துக்கிட்டு, சிங்கமாத் தெரியுதா, அசிங்கமாத் தெரியுதான்னு முடிவு பண்ணிக்கிடுங்க :)

இப்ப சிங்காசனத்துக்கு வருவோம்...

வஜ்ராசனத்தில், அதாங்க முட்டிக்கால்போட்டு, மடக்கிய கால்களின்மேல் உட்கார்ந்துக்கோங்க.

கைகளைக் கால்முட்டியின்மேல் வைத்து, நிமிர்ந்து உட்காருங்க.

கண்களை நல்ல அகலமாத் திறங்க.

முடிஞ்ச அளவுக்கு, காற்றை நாசியில் உள்ளிழுத்துக்கோங்க.

சில வினாடிகளுக்கப்புறம், வாயைத் திறந்து, நாக்கை முடிஞ்ச அளவுக்கு வெளியே நீட்டியபடியே வேகமா,காற்றை வெளியே விடுங்க.

உங்களால முடிஞ்சவரைக்கும் அப்படியே இருங்க...விட்டுவிட்டு மூணு தடவை செய்யுங்க.




படத்திலிருப்பதுதான் சிங்கமுத்ரா...கண்களை அகல விரித்து, நாக்கை நீட்டி, முகத்தசைகளுக்குக் கொடுக்கும் பயிற்சி


இந்தப் பயிற்சியில் முகத்தசைகள் அத்தனையும் வேலை செய்வதால் நல்ல ரத்தஓட்டம் ஏற்படுவதோடு, தொண்டைப்பகுதிக்கும்,கண்களுக்கும் கூட ரொம்ப நல்லது.

அடிக்கடி செய்து, உங்களை நீங்களே பயமுறுத்திக்கணும்னு அவசியம் இல்லை. ஒருநாளைக்கு ரெண்டு தடவை போதும்.

இது, முகத்திலிருக்கிற  90 தசைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால இதன் அவசியம் உணர்ந்தவங்க கட்டாயம் செய்யுங்க. செய்யுமிடத்தில், எதிரே கண்ணாடி இருந்தா ரொம்ப நல்லது. (கண்ணாடிக்கெல்லாம் சேதாரம் வராது ...நம்புங்க )



                                                      *****************

வெள்ளி, 3 டிசம்பர், 2010

மக்கு மண்டூகம்!

'உக்கார்டா, மக்கு மண்டூகமே...'ன்னு, தப்பா பதில் சொல்றவங்களைத் தலையில் தட்டி உக்காரவைக்கிறது வெயிலுமுத்து வாத்தியாரின் வழக்கம்.

 அது அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் அஞ்சாங் கிளாஸ் வகுப்பறை.  கதிரேசன் கணக்கு வாத்தியார் பையன். ஆனா, வீட்டுப்பாடமெல்லாம் அவனுக்கு விஷம் மாதிரி. ஆகவே ஆகாது. ஏதாவதொரு சாக்குச் சொல்லித் தப்பிச்சிருவான். அப்பிடியே கோவம் வந்து, வாத்தியார் வெளியே அனுப்பிட்டார்னாகூட, வேலிப்பக்கம் போயி தட்டான் பிடிக்க ஆரம்பிச்சிருவான்.

ஆனா, அன்னிக்கு ஒருநாள்,கதிரேசனுக்குக் கிடைத்த தண்டனைக்கும், அவனோட அப்பா,கணக்கு வாத்தியாரோட அறிவுரைக்கும் பிறகு, வாத்தியார் வகுப்புன்னாலே வீட்டுப் பாடத்தை முடிச்சிட்டு, வாய்மேல விரலை வச்சுக்கிட்டு நல்ல பிள்ளைகளா உக்காந்திருப்பாங்க எல்லாரும்.

அன்னிக்கு, வகுப்புக்கு வந்ததும் வீட்டுப்பாட நோட்டை கொண்டுவந்து அடுக்கச்சொன்னார் செல்லத்துரை வாத்தியார். எல்லாரும் அடுக்கினாங்க, கதிரேசனைத் தவிர. அடுக்கின நோட்டுகளை ஆறுமுகத்தை எண்ணச் சொன்ன வாத்தியார், தான் பிள்ளைகளின் தலைகளை எண்ண ஆரம்பிச்சார்.

வழக்கம்போலவே ஒண்ணு குறைச்சல். வேற யாரையும் கூப்பிடல அவர். நேரா, கதிரேசனைக் கூப்பிட்டாரு. அசால்ட்டா எழுந்திரிச்சான் கதிரேசன். வழக்கம்போல அர்ச்சனையும், ஆரத்தியும் முடிஞ்சப்புறம், வகுப்பறைக்கு வெளியே அவனை முழங்கால்போட்டு நிக்கவச்சார் அவர். அப்பத்தானா அந்த வழியே வரணும் அவனோட அப்பா? வந்தார்...நின்னார்...வகுப்புஆசிரியர்ட்ட என்னன்னு கேட்டார். அவரும் சொன்னார்.

நாங்கல்லாம், ஒரு கணக்கு வாத்தியார் தமிழ் சொல்லிக்கொடுத்துக் கேட்டது அன்னிக்கித்தான். வகுப்புக்குள்ளிருந்து செந்தூர்ப்பாண்டியைக் கூப்பிட்டார் அவர். செந்தூரோட அப்பா, ரைஸ்மில்லுல கூலிவேலை பார்க்கிறார். அம்மாவுக்கும் படிப்புத் தெரியாது. ஆனா, செந்தூர்ப்பாண்டி, தினமும் எங்க வீட்டுக்குவந்து, எங்கிட்ட சந்தேகத்தையெல்லாம் கேட்டு நிவர்த்தி பண்ணிக்கிட்டு, வீட்டுப்பாடமும் எழுதிட்டுதான் வீட்டுக்குப் போவான்.

ஆனா, இவனோட அப்பா நானும் வாத்தியார், இவங்கம்மாவும் டீச்சர்தான். ஆனா, இவன், ஒரு நாள்கூட பாடத்துல சந்தேகம்னோ, படிச்சுத்தந்தது புரியலேன்னோ ஒரு தடவைகூட எங்கிட்டயோ அவங்கம்மா கிட்டயோ சந்தேகம் கேட்டதில்ல. இந்த விவேகசிந்தாமணிப் பாடலைப் புரிஞ்சுகிட்டீங்கன்னா, யாரும் இவனைமாதிரி இருக்கமாட்டீங்க.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.

 தாமரைப்பூவோடு கூடவே குளத்தில் பிறந்து வளருகிற தவளைக்கு, (அதாங்க...மண்டூகம்) 
அந்தத் தாமரையிலிருக்கிற தேனைக் குடிக்கணும்னு தெரியாது. ஆனா, எங்கோ காட்டிலிருந்து வருகிற வண்டு, அதைக் குடிச்சிட்டுப்போகும்.

அதே மாதிரிதான், நல்லவர்களோட பல காலமாய்ப் பழகினாலும் அவர்களைப்பற்றியும் அவங்களோட பெருமைகளைப்பற்றியும்  முழுசா தெரிஞ்சுக்கமாட்டாங்க சில முட்டாள்கள். ஆனா, கற்றவர்கள் அவர்களை எளிதில் இனங்கண்டுகொண்டு, அவங்களோடு பழகிப் பெருமைகளை உணர்ந்து சந்தோஷப்படுவாங்க.

அதே மாதிரிதான் இவனும் என்று சொல்லிட்டு, வகுப்பறை வாசலில், முழங்காலில் நின்ன மகனைப் பாத்தார். அவன் எட்டத் தெரிகிற வயலையும், வாய்க்காலில் நீந்துகிற வாத்துகளையும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தான்.
 
அதுவரைக்கும், மக்கு மண்டூகம்னா என்னன்னு விளங்காம இருந்த எங்களுக்கு, வாத்தியார் எவ்வளவு விவரமா திட்டியிருக்கார்ன்னு விளங்கிச்சு. ஆனா, கதிரேசனால கடைசி வரைக்கும் அதை விளங்கிக்கவே முடியல.

                                               *********



புதன், 1 டிசம்பர், 2010

கணவன் மனைவிக்குள்ள இதெல்லாம் சகஜம்ப்பா...


எப்பவும் நியூஸ் பேப்பர் படிச்சிட்டிருக்கிற கணவனிடம் மனைவி : நான் பொண்ணாப் பொறந்ததுக்கு ஒரு நியூஸ்பேப்பரா பொறந்திருக்கலாம். எப்பவும் உங்க கையிலயாவது இருந்திருப்பேன்.

கணவன் :நானும் அப்படித்தான் நினைக்கிறேன். தினமும் ஒண்ணு புதுசாக் கிடைக்குமுல்ல....

                                                                                *****

 மனைவி :- ஏங்க, நம்ம கல்யாண சர்டிஃபிகேட்டையே ரொம்ப நேரமா பாத்துட்டு உக்கார்ந்திருக்கீங்களே, ஏன்?

கணவன் : ஒண்ணுமில்லை...ச்சும்மா...

மனைவி : சும்மா சொல்லுங்க, அந்தநாள் ஞாபகந்தானே?

கணவன் :இல்லே...இதில, எங்கியாவது expiry date போட்டிருக்குதான்னு பாக்குறேன்...

மனைவி : ???????????

                                                                           *****

மருத்துவர் : உங்க கணவருக்கு, இப்ப பூரணமான ஓய்வு தேவை. அதுக்காக தூக்க மாத்திரை எழுதியிருக்கேன்.

மனைவி : இதை அவருக்கு எப்பக் கொடுக்கணும் டாக்டர்?

மருத்துவர் : அவருக்கா, இல்லீங்க...தூக்கமாத்திரை உங்களுக்கு.

மனைவி :?????

                                                                           *****

மனைவி : ஏங்க, உங்களோட கண்ணாடியை மட்டும் கழட்டிட்டீங்கன்னா, நீங்க இருவது வருஷத்துக்கு முன்னால இருந்தமாதிரியேதான் இருக்கீங்க...

கணவன் : ஓ அப்படியா, நான் கண்ணாடியைக் கழட்டினாதான்
நீயும் அப்ப பாத்தமாதிரியே தெரியிற.

                                                                            *****

இறந்ததும் நரகத்துக்குப்போன கணவன், அங்கிருந்த ஒரு காவல் பூதத்திடம் கேட்டானாம் : நான் என் மனைவிக்கு ஒரு ஃபோன் போடணும். அதுக்கு உங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கணும்?

பூதம் : இங்க வந்த பிறகுமா அந்த ஆசை உனக்கு? நரகத்தில இருந்து நரகத்துக்கு ஃப்ரீ தான்...நீ எவ்வளவு வேணும்னாலும் பேசிக்கோ.

                                                                             *****

அப்பா : கல்யாணத்துக்குப்பிறகு வாழ்க்கை தலைகீழா மாறிடுச்சு...அப்பல்லாம், நான் பெரிய பணக்காரனா இருந்தேன்...

மகள் : இப்பமட்டும் என்ன ஆச்சு? நாம நல்லாத்தானே இருக்கோம்?

அப்பா : இப்ப உங்கம்மா பணக்காரியா இருக்கா...நான் அவளுக்குப் பாதுகாவலாத்தானே இருக்கேன் :(

                                                                           *****

மனைவி : ஏங்க, என் மனைவியும் உங்க குழந்தை மாதிரியேதான்னு உங்க நண்பர்கிட்ட சொன்னீங்களாமே? உங்களுக்கு எம்மேல அவ்வளவு பிரியமா?

கணவன் : அந்தக் குழந்தைமாதிரியே, நீயும் கையில கிடைச்சதைவச்சு அடிப்பேன்னு அப்படியேவா அவங்ககிட்ட சொல்லமுடியும்?


பி.கு : இது ஒரு மின்னஞ்சல் பகிர்வு.


செவ்வாய், 23 நவம்பர், 2010

ஹெச் ஐ வி பாசிட்டிவ்...மற்றதெல்லாம் நெகட்டிவ்...

'தாயற்றபோதே சீரற்றுப்போகும்' என்று சொல்வழக்கு ஒண்ணு உண்டு நம்ம ஊரில்.  அது அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கும் அப்படியே பொருந்தித்தான் போனது....

அவளுக்கு வயது பதினெட்டு. அவளோடு சேர்த்து வீட்டில் ஆறு பிள்ளைகள். அத்தனையையும் விட்டுவிட்டு செத்துப்போனாள் அவளுடைய தாய்.  கட்டிய மனைவி காலமானதும், பிள்ளைகள் ஆறுபேரையும் விட்டுவிட்டு, எங்கேயோ போய்விட்டார் அவர்களுடைய தந்தை.

ஆளுக்கொரு திசையாய்ப்போனார்கள் பிள்ளைகள் ஆறுபேரும். ஒற்றையாகிப்போனாள் பதினெட்டு வயசு ரெபேக்கா. காய்கிற வயிற்றுக்கு உணவும், காப்பாற்றிக் கைகொடுக்கக் கொஞ்சம் அன்பும் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்த அவளுக்கு, அந்த ஆண்மகனின் அருகாமை ஆறுதலாயிருந்தது. அவனே எல்லாமென்று நம்பிய அவளுக்கு அவனிடமிருந்து பரிசாகக் கிடைத்ததோ இரண்டு. ஒன்று, வயிற்றில் உருவான குழந்தை, இன்னொன்று பால்வினை நோய்.

இரண்டாவதின் காரணம் அறியமுற்பட்டபோதுதான் உணர்ந்தாள், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையானவனாக இருக்கவில்லை, பல பெண்களுடன் பழக்கம் வைத்திருக்கிறான்  என்பதை.  விளைவு விவாகரத்தில் முடிந்தது வாழ்க்கை. இடையில்விட்ட உயர்நிலைப் படிப்பைத் தொடரலாம் என நினைத்தாள் அவள். ஆனால், கல்வியில் கவனத்தை ஒருமுகப்படுத்தமுடியாமல், எல்லாத்தேர்வுகளிலும் தோல்வியுற்றாள் அவள். வெறுமையாய்ப்போன வாழ்வில், வேதனைகளைக் கிறுக்கிச்சென்றது விதியின் கைகள்.

மனதில் நிறைந்த வெறுமையையும் வேதனையையும் துடைக்க, இன்னுமொரு  இதமான துணை கிடைக்காதா என்று ஏங்கினாள் அவள். இருபத்துமூன்று வயதில் இன்னொரு திருமணமும் செய்துகொண்டாள்.

வாழ்ந்து ஜெயிக்கவேண்டுமென்ற உத்வேகத்தில்,  வேலைதேடி மும்முரமாய் இறங்கினாள் அவள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் உள்ளூரிலுள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையின் ஒளியை உணரத்தொடங்கினாள் அவள்.

முந்தைய திருமணத்தின் வலியும், ஏற்கெனவே இருக்கிற ஒரு குழந்தையை வளர்த்தால்போதும் என்ற நினைப்பும், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் துரத்தியது அவளிடமிருந்து. ஆனாலும், இரண்டு வருடங்களுக்குப்பிறகு, இரண்டாவது கணவனின் ஆசைக்கு ஒத்துக்கொண்டு, ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள் அவள்.

ஒரே வயதுதான் ஆகியிருந்தது அவள் மகனுக்கு. அதற்குள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள் அவள். உடம்பில் என்னவென்றே தெரியாமல், திடீர்திடீரென்று தோன்றுகிற தடிப்புகளும், அடிக்கடி வருகிற காய்ச்சலுமாக அவதிப்பட்டாள் அவள். காரணம் என்னவென்று சோதித்தபோது, எல்லாமே காலங்கடந்துபோயிருந்தது. ஹெச் ஐ வி நோய்க்கிருமிகள் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவிப்போயிருந்தன அவளுக்கு.

அவள் மட்டுமின்றி, பிறந்த ஆண்குழந்தையும் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தாள். இரண்டாவது திருமணவாழ்க்கை கொடுத்த வெகுமதி அது என்று உணர அதிகநேரமாகவில்லை அவளுக்கு. அவள் கணவனோ, மனைவியின் சுகவீனம் பற்றி எதுவுமே அறியாதவனாக, இரவு விடுதிகளிலும், மதுக்கடைகளிலும் விழுந்துகிடந்தான்.

அடுத்ததாக வந்தது, அவளுக்கு எலும்புருக்கி நோய். உடம்பின் எதிர்ப்புசக்தி மிகக்குறைவாக இருந்த காரணத்தால், உட்கொண்ட மருந்துகள்கூட உதவாமல் போயின. அரசின் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்கள் அவளும் அவளது இரண்டு வயது மகனும். எயிட்ஸ் நோய்க்கான பதினைந்துநாளுக்கான ஆரம்ப சிகிச்சைக்கு ஆயத்தமானார்கள்.

 சின்ன உடம்பில் செலுத்தப்பட்ட வீரியமான மருந்துகள், அவற்றின் உக்கிரம் தாங்கமுடியாமல் ஏழாம் நாளே இறந்துபோனான் அவளது மகன். இழப்பின் துயரம், எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் வீரியம் இரண்டுமாகச் சேர்ந்து, விதவிதமான வலிகளை உண்டாக்கியது அவள் உடம்பில். மூத்த மகளையும் பராமரிக்கமுடியாதவளாக, அவளைத் தன் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள் ரெபேக்கா.

பட்ட காலிலே படும் என்பதுபோல, விட்டுச்செல்லமாட்டேனென்று மறுபடியும் வந்தது எலும்புருக்கிநோய், கொஞ்சங்கொஞ்சமாக அவள் உடல், அசையக்கூடமுடியாமல் ஆகிப்போனது. அப்புறம் எடுத்த சிகிச்சைகளாலும் பயிற்சிகளாலும் உட்காரக்கூடிய அளவுக்கு ஓரளவுக்குத் தேறியிருக்கிறாள்.

ஆனால், இத்தனைக்கும் காரணமான அவள் கணவன், உடம்பில், ஏகப்பட்ட சுகவீனங்கள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படாமல் தன் மைனர் வாழ்க்கையைத் தொடர்ந்தபடியிருக்க, இறப்புக்கும் பிழைப்புக்கும் இடையில் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறாள் அவள்.

இது, உலகின் எங்கோ ஒரு மூலையில், மலாவி என்ற ஆப்பிரிக்கநாட்டில் வசிக்கிற பெண்ணொருத்தியின் கதைதான் என்றாலும், இந்தியாவில் தென்பாதி மாநிலங்களிலும், வடகிழக்கில் மணிப்பூர், நாகாலாந்திலும்தான்  எயிட்ஸ் மிக அதிகமாகப் பரவியிருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயம்.


2007 ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.31 மில்லியன் மக்கள், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் 3.5 சதவீதம்பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது. புள்ளிராஜாக்கள்முதல் பள்ளிக்கூடக்குழந்தைகள் வரை எல்லோரிடமும் பரவியிருக்கும் இந்த உயிர்க்கொல்லி நோயை இல்லாமல் செய்ய எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வு மிக அவசியம்.அதைவிட முக்கியமாக, தனிமனித ஒழுக்கம் மிகமிக அவசியம்.

இதில், கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னன்னா, இந்த ஒன்றிரண்டு வருடங்களில் எயிட்ஸ் நோய் பரவுவது கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்.

பி.கு: மேலேயிருக்கிற படத்தைப்பார்த்ததும், மனசில் சட்டென்று தாக்கியது ரெண்டு விஷயம்...ஒண்ணு, நம்ம இந்திய நாட்டின் மொட்டையான உருவ அமைப்பு, இன்னொண்ணு, அதிகம் பாதிக்கப்பட்ட தென் மாநிலங்களில், கேரளா இல்லாமலிருப்பதும்,அதற்குக் காரணமான அடிப்படைக் கல்வியும், விழிப்புணர்வும் மற்ற மாநிலங்களில் போதுமான அளவு இல்லாமலிருப்பதும்தான். ஆக, கேரளாவைப் பார்த்து, நாம நிறைய கத்துக்கணும்.

**********


ஞாயிறு, 21 நவம்பர், 2010

நமக்கிருக்கிற மரியாதையைப் பாருங்க...

இந்தப் பிறவியில் புண்ணியம் செய்யுங்கள்...அப்பொழுதுதான், அடுத்த பிறவியிலாவது இந்தியனாகப் பிறக்கலாம் என்று சீனாவிலுள்ள ஒரு பள்ளிக்கூடச் சுவற்றில் எழுதப்பட்டிருந்ததாக முன்னர் எங்கோ படித்த ஞாபகம்..

இதுமாதிரியே நம்ம சந்த்ரயான் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டபோது, கத்தார் நாட்டுப் பத்திரிக்கையொன்று, இந்தியத் தொழிலாளர்களை இளக்காரமாக நினைக்காதீர்கள். அவர்களுக்குச் சந்திரனுக்கே ராக்கெட் விடுமளவுக்கு அறிவுத்திறமை உண்டென்று எழுதியதாகவும் படித்ததுண்டு. இன்றைக்கு, இங்கே துபாயிலுள்ள பத்திரிக்கையொன்றில் படித்ததும் அதுமாதிரி ஒரு விஷயம்தான்...

துபாய் மெட்ரோ ரயிலின், கோல்ட் க்ளாஸில் (அதுதாங்க ஃபர்ஸ்ட் க்ளாஸ்) பயணிக்கச் சீட்டுவாங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை, அந்தப் பெட்டியில் கண்காணிப்புப் பணியிலிருந்த இன்னொரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், இது முதல் வகுப்புப்பயணிகள் ஏறக்கூடிய பெட்டி, நீங்கள் ஏறக்கூடாது என்று உரத்த குரலில் அதட்டியிருக்கிறாள். அதற்கு, ஏறிய அந்தப் பெண்,  என்னிடமும் கோல்ட் க்ளாஸ் டிக்கெட் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறாள். ஆனாலும்,  நம்பாமல் அந்தப் பெண்ணுடைய, பயணச்சீட்டை வாங்கிப் பரிசோதித்தபின்னும்கூட, நம்பிக்கையில்லாமல் அவளைப் பார்த்தாளாம் அந்தக் கண்காணிப்பு அதிகாரி.

இந்த நிகழ்ச்சியால் கோபமுற்ற அந்த பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண், பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க. அங்கேதான் நிக்குது நம்ம இந்தியர்களின் பெருமை.

அந்தப்பெண், தன்னுடைய கடிதத்தில், என்னிடம் சரியான பயணச்சீட்டு இருந்தும், பயணம் முழுக்க என்னைச் சந்தேகமாகப் பார்த்தீர்கள். நாளை இதுபோல, சோர்வுற்ற ஒரு இந்தியத் தொழிலாளி வந்து ஏறும்போது, அவரையும் இதுபோல இகழ்ச்சியாகப் பார்த்து, சந்தேகமாகக் கேள்வி கேட்காதீங்க. ஏன்னா, அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தை விட்டுவிட்டு, மெட்ரோவில் பயணிக்கவந்திருக்கலாம். அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று எழுதியிருக்காங்க...என்ன ஒரு மரியாதை பாருங்க....எனக்குப் படிக்கும்போதே புல்லரிச்சிருச்சு :) 

*********


வெள்ளி, 19 நவம்பர், 2010

அவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...

விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். வயது 65 இருக்கும். பணியிலிருக்கும்வரைக்கும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிவந்த பெண்மணி, இப்போது சர்க்கரை வியாதியின் பிடியில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தாங்க. 

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கவும், மெல்ல வெளியில்வந்தது அவங்க மனக்குறைகள். "வீட்ல, ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைப் பாக்கிறாங்க. வெளியில போறாங்க வர்றாங்க.ஆனா, என்னையும் எங்கேயாவது கூட்டிட்டுப்போகணும்னா பிடிக்கமாட்டேங்குது இவங்களுக்கு..." என்றுசொல்லி வருத்தப்பட்டாங்க அவங்க.

அதைக் கேட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவங்க கணவர், "எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போகணுனுதான் ஆசைம்மா. ஆனா, இவளால, வேகமா நடக்கமுடியல, கோயில்களுக்குப் போனால்கூட, கொஞ்சநேரம் செருப்பில்லாம நடக்க கஷ்டப்படுவா. வாகனத்தில் பிரயாணம் பண்ணும்போதும், யாராவது தெரியாம காலில் லேசா இடிச்சிட்டாலோ, மிதிச்சிட்டாலோகூட வலி தாங்கமுடியாம துடிச்சுப்போயிடுறா."

"அது மட்டுமில்லாம, விருந்து வைபவங்களுக்குப்போய், தாமதமாய்ச் சாப்பிட்டாலோ அல்லது, சாப்பாடு வித்தியாசமானதாயிருந்தாலோ உடம்புக்கு ஒத்துக்காம ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிடுறா. அதனாலதான் கூடியவரைக்கும் வெளியில கூட்டிப்போறதைத் தவிர்க்கிறோம்" என்று அவரும் வருத்தமாய்ச் சொன்னார். கேட்கும்போது அதுவும் நியாயமானதாய்த்தான் இருந்தது.

அப்புறம், அவங்ககிட்ட கொஞ்சநேரம் ஆறுதலாய்ப் பேசிவிட்டு, முடிஞ்ச அளவுக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கிட்டு, தூரமாக எங்கேயும் போகலேன்னாலும் பக்கத்தில் நடந்துபோய் நாலுபேரைப் பாருங்க. கோயிலுக்குப் போனால்கூட, காலில் ஒரு சாக்ஸ் போட்டுக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டுவந்தேன். ஆனாலும், அன்றிலிருந்து, முதுமையும் நோயும் சேர்ந்து ஒருத்தரை எந்த அளவு முடக்கிவிடுகிறதுன்னு மனசுக்குள் ஒரு கலக்கம்.

ஆனா, நேத்து துபாயிலிருக்கிற முஷ்ரிஃப் பார்க்குக்குப் போனபோது, நான் பார்த்த இரண்டு காட்சிகள் வியப்பைத் தோற்றுவித்தது மறுக்கமுடியாத நிஜம்.முதலாவது பார்த்த அந்த முதியவருக்கு வயது நிச்சயம் எண்பத்தைந்துக்கு மேலிருக்கும். திக்கித்திக்கிப் பேசுகிறார். கொஞ்சம் கூன்போட்டு நடக்கிறார். ஆனால்,அத்தனை நிதானம் இல்லை. எல்லாரும் புல்தரையில் பாயில் உட்கார்ந்துகொண்டு, அவரை எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பெஞ்ச்சில் உட்காரவைத்தார்கள்.

ஐந்து நிமிடம்கூட இருக்காது, அந்த இடத்தைவிட்டு எழுந்து கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார் பெரியவர்.அவரையே கவனித்துக்கொண்டிருந்த அவரது பேரன், ஓடிப்போய், கையைப் பிடித்துக் கூட்டிவந்து உட்காரவைத்தான். அடுத்த சில நிமிஷங்களில், மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பித்தார் அவர். அப்போது. அவரது பேத்தியாக இருக்கவேண்டும், பத்துப்பன்னிரண்டு வயசுப்பெண்குழந்தை கையில் உணவுத் தட்டுடன் ஓடிவந்து, அவரை உட்காரவைத்து, தட்டிலிருந்த சாப்பாட்டை ஸ்பூனால் ஊட்ட ஆரம்பித்தது அவருக்கு.

சாப்பிட்டு முடிப்பதற்குள் பத்துப்பன்னிரண்டு தடவை எழுந்து நடக்க ஆரம்பித்தவரைப் பொறுமையாக உடகாரவைத்து, முழுச் சாப்பாட்டையும் ஊட்டிவிட்டது அந்தக்  குழந்தை. பார்க்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது.

மாலையில் பார்க்கிலிருந்து புறப்படும்போது கண்ட இன்னொரு காட்சி, ஏற்கெனவே பார்த்த காட்சியை மறக்கடித்து விடும்போலிருந்தது. இருபதுக்குமேல் உறுப்பினர்களுடைய அரபுக் குடும்பம் அது.

அப்போதுதான் வந்து இறங்கினார்கள். அதில், ஒரு பாட்டி. அந்தப் பாட்டிக்கும் எண்பது வயசுக்குமேலிருக்கும். கால்கள் நடக்கமுடியவில்லை.மடங்கியிருந்தது. கூடவே இறங்கியது ஒரு வீல்சேர். ஆனால், இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் மேடு பள்ளமாயிருந்ததால், அந்தப் பாட்டியின் பேத்தி போலிருந்த டீனேஜ் வயசுப் பெண்கள் இருவர் பாட்டியை இருபுறமும் பிடித்துக் குழந்தையைப்போல தூக்கிக்கொண்டே போனார்கள்.

புல்தரைக்குப்போனதும் வீல்சேரை விரித்து உட்காரச்சொன்னார்கள். மறுத்த பாட்டி, தன்னைக் கீழே விடச்சொல்லி, புல்தரையில் உட்கார்ந்து, இரு கைகளையும் ஊன்றி, சிறு குழந்தைபோல அங்கேயும் இங்கேயும் வேகமாகத் தவழ்ந்துபோனது. பார்க்கும்போதே கண்ணில் நீர் துளிர்த்தது எங்களுக்கு. ஆனால் பாட்டியின் முகத்தில் அத்தனை பரவசம்,சந்தோஷம். வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளியில்வந்த குதூகலம்போல் தெரிந்தது.

பார்த்துவிட்டுப் புறப்பட்ட எனக்கு மனசுமுழுக்கப் பாட்டிதான் நிறைந்திருந்தது. அதையும் மீறி எழுந்தது இந்தக் கேள்வி. ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ? 

********


திங்கள், 8 நவம்பர், 2010

மனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...


கடவுள் உலகத்து உயிர்களை ஒவ்வொன்றாக உருவாக்கிக்கொண்டிருந்த நேரம்...

முதலாவதாக, அவர் ஒரு கழுதையைப் படைத்தாராம். அந்தக் கழுதையிடம், நீயொரு கழுதை... காலையிலிருந்து மாலைவரை நீ பாரம்சுமந்து பணிசெய்ய வேண்டும்.நீ புல்லைத் தின்னலாம். ஆனால், உனக்கு புத்தியெல்லாம் கிடையாது. உனக்கு ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதற்குக் கழுதை சொன்னதாம், கடவுளே,கழுதையான எனக்கு ஐம்பது வருடங்கள் அதிகம். அதனால்,எனது ஆயுளை இருபது வருடங்களாகக் குறைத்துவிடுங்கள் என்று. கடவுளும் அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அடுத்ததாக, ஒரு நாயைப் படைத்து, நீ நாயென்று அழைக்கப்படுவாய். மனிதனுக்கு நல்ல நண்பனாக இருந்து, அவனுடைய வீட்டைப் பாதுகாக்கவேண்டும். வீட்டில் மிஞ்சுகிறபொருட்களையே நீ உணவாக உண்ணவேண்டும். உனக்கு வாழ்நாள் முப்பது வருடங்கள் என்றாராம்.

அதற்கு அந்த நாய், கடவுளே,முப்பது வருடங்கள் அதிகம். எனக்கு பதினைந்து வருடங்களே போதும் என்றாதாம். கடவுளும் அதை வழங்கினாராம்.

அடுத்ததாக,கடவுள் ஒரு குரங்கைப் படைத்தாராம். நீ மரத்துக்கு மரம் தாவி,வித்தைகள் செய்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவாய்.உனக்கு ஆயுள் இருபது வருடங்கள் என்றார்.

அதற்குக் குரங்கு, எனக்குப் பத்தே வருடங்கள் போதும் என்றதாம். கடவுளும் அதை ஒத்துக்கொண்டாராம்.


அடுத்ததாகக் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதனே,பகுத்தறிவுடன் உன்னைப் படைத்திருக்கிறேன். நீ உன் அறிவைப் பயன்படுத்தி, உலகத்திலுள்ள மிருகங்களையெல்லாம் அடிமைப்படுத்தி ஆளலாம்.உலகையே உன் வசப்படுத்தப்போகும் உனது ஆயுள் இருபது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதைக்கேட்ட மனிதன், என்ன சொல்லியிருப்பான்??????????????

நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையேதான் செய்தான்:)

அதாவது, அவன் கடவுளிடம், உலகையே ஆளுமளவுக்கு அறிவுடன் படைக்கப்பட்ட எனக்கு, இருபது வருடங்கள் ரொம்பவும் குறைவு. அதனால், கழுதை வேண்டாமென்ற முப்பது வருடங்களையும், நாய் மறுதலித்த பதினைந்து வருடங்களையும், குரங்கு கொடுத்த பத்து வருடங்களையும் நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டானாம்.

அதற்கு, அப்படியே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டாராம் கடவுளும்.
அன்றிலிருந்து, கடவுளிடம் கேட்டுவாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு மனிதனும்,முதல் இருபது வருடங்கள் முழுமையான மனிதனாகவும்,

திருமணத்தின் பின்வரும் முப்பது வருடங்கள், ஒரு கழுதையைப்போல, குடும்ப பாரத்தைச் சுமக்கமாட்டாமல் சுமந்தும்,

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், வீட்டின் காவலாக முன்வாசலில் முடங்கி, மிச்சமானதைத் தின்று,ஒரு நாயைப்போலவும்,

வயதாகி முதிர்ந்ததும், குரங்கினைப்போல் வீட்டுக்கு வீடு, அதாவது மகளின் வீடு மகனின் வீடு என்று தாவி, பேரன் பேத்திகளை மகிழ்விக்க வித்தைகளைச்செய்தும் வாழ்கிறானாம்.

இது எப்படி இருக்கு? இது,மின்னஞ்சலில் வந்த கதையென்றாலும் படித்து முடிக்கையில் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.

***********


ஞாயிறு, 24 அக்டோபர், 2010

இந்தப் புள்ள(ப்பூச்சி)யும் பாவம்தான்...



கல்யாணமாகி நாலுமாசம்தாங்க ஆச்சு...தலைநகரத்தில் தனிக்குடித்தனம்...


போனவாரம்,அம்மா வீட்டுக்குப்போகணும்னு ஆசையாச் சொன்னா...

கழுத, காசு போனாப்போகுதுன்னு கால்டாக்சி புடிச்சு, அத்தனைபேருக்கும்,அதாங்க,அவங்கவீட்டு நாய்க்கு உட்பட பிடிச்சதெல்லாம் வாங்கிக்கிட்டு அழைச்சிட்டுப்போனேன்.

இந்தவாரம், எங்க அம்மாவைப் பாத்துட்டுவரலாம்னு நான் சொன்னேன். எட்டாம் நம்பர் பஸ்சைப்பிடிச்சுப் போயிட்டு,சட்டுபுட்டுன்னு திரும்பிவாங்கன்னு பதில்சொல்றா.

*******************

நேத்து, புதுப்புடவை கட்டியிருக்கேன். நல்லாருக்கான்னு சொல்லுங்கன்னு வந்து நின்னா...

'உன்னோட கலருக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்மா'ன்னு இயல்பாச் சொன்னேன்.

என்னோட கலருக்கு...? கறுப்பா இருக்கேன்னுதானே இப்படிக் குத்திக்காட்டுறீங்கன்னு சொல்லி கண்ணைக் கசக்கினது மட்டுமில்லாம, என்னோட மொத்தக் குடும்பத்தையும் இழுத்து, அத்தனைபேரும் அவலட்சணம்னு ஒத்த வரியில தீர்ப்பு சொல்லிட்டுப்போயிட்டா...


*******************

அன்னிக்கி, டி.வி யைப் பாத்துக்கிட்டே அப்பிடியே கொஞ்சம் கண்ணசந்துட்டேன். ஏங்க தூங்குறீங்களான்னு கேட்டுட்டே உலுக்கி எழுப்பினா. என்னவோ ஏதோன்னு எழுந்து உக்கார்ந்தா,கனவுல நமீதாவோட டூயட் பாடுறீங்களோன்னு நெனச்சேன் என்று சொல்லிட்டு நமட்டுச் சிரிப்புச்சிரிச்சா...

சரி, நல்லமூடுல இருக்காளேன்னு நினைச்சுக்கிட்டு, கம்ப்யூட்டர் முன்னால உக்கார்ந்துகிட்டிருந்தவளை, என்னம்மா தூக்கம்வரலியான்னு சும்மாத்தான் கேட்டேன்.

பாத்தாத்தெரியல...பார்வை நல்லாத்தானே இருக்கு? கேக்குறாரு பாரு கேள்வின்னு கெத்தா சொல்லிட்டு, ஆணாதிக்கவாதிகளை அடக்குவது எப்படிங்கிற இடுகைக்கு நல்லதா ஒரு பாயிண்ட் நினைச்சுவச்சிருந்தேன்...இப்ப எல்லாம் மறந்துபோச்சுன்னு,எண்டரைத் தட்டிக்கிட்டே எல்லாப்பழியையும் எம்மேலபோட்டுட்டு, மறுபடியும் அண்ணாந்து பாத்து ஆணியவாதிகளைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டா.


******************

சம்பளம் வந்திருக்குமே,கொண்டாங்க கவரைன்னு கேட்டா...

அப்படியே எடுத்து அலுங்காமக் குடுத்தேன்.

உன்னோட சம்பளக் கவரைக் காட்டுன்னு, ஒருநாளாவது கேட்டுரணும்னு நானும் நாலுமாசமா நினைச்சு,கொஞ்சங்கொஞ்சமா தைரியத்தைக் கூட்டிக்கிட்டு பக்கத்திலபோய் நின்னேன். ஆனா, கிட்டப்போய் நின்னதும் வாயில காத்துமட்டுமே வந்து தொலைக்க, 'சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா அம்மா கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணுன்னு' அடிக்குரல்ல அந்தக்காலப் பாட்டை முணுமுணுத்துக்கிட்டே அங்கயிருந்து நகர்ந்துவந்துட்டேன்.


*********************

என்னங்க,வர்ற தீபாவளியன்னிக்கி, நான் காலைல அஞ்சுமணிக்கே எந்திரிச்சு, வாசல்ல ரங்கோலி போடப்போறேன்னு சொன்னா...

சரிம்மா, நல்லவிஷயம்தானே,போடுன்னேன்.

ஆனா,அதுக்குமுன்னாடி,நீங்க நாலுமணிக்கே எந்திரிச்சு ஹீட்டரை ஆன் பண்ணிட்டு,காஃபியும் போட்டுவச்சிரணுன்னு அடுத்ததாச் சொன்னா. அன்னிக்கித் தூக்கமும் பாழான்னு,அம்மியிலபோயி முட்டிக்கலாம்போல இருந்திச்சு..ஆனாலும், அவமுன்னால வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன்.


*******************

தீபாவளிக்குத் துணியெடுக்க, தி.நகர் போவோம்னு சொன்னா. சரி, தலதீபாவளியாச்சே...
சேலை துணிமணியோட, சின்னதா,தங்கத்துலயும் ஏதாவது வாங்கிக்குடுக்கணும்னு மனசுல நினைச்சுக்கிட்டு, சரிம்மா போவோம்ன்னேன்.

பச்சப்புள்ள பஞ்சுமுட்டாய்க்கு ஆசப்படுறமாதிரி, பாக்கிற சேலையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்னா. மனசு நோகக்கூடாதேன்னு நானும் மறுக்காம தலையாட்டினேன். கடைசியில பத்துப்பதினோரு சேலைக்கு பில்போடச்சொல்லிட்டு, காசிருக்கில்லே என்று,கரிசனமாவேற கேட்டா.

கடைசியில,ரெண்டு பிக் ஷாப்பரையும் தூக்கமுடியாம கையில தூக்கிக்கிட்டு, இனிமே உங்களுக்குத் துணியெடுப்போம் வாங்கன்னு சொன்னா. இருக்கிற பதினஞ்சு ரூவா பஸ்சுக்குத்தான் சரியாவரும்னு நினைச்சிக்கிட்டே, தலையை வலிக்குது, வாம்மா வீட்டுக்குப் போவோம்னு, வலிய அவளை இழுத்துட்டுவந்தேன்.


*********************


ஆமா,,,இப்ப நீங்க ஏதோ எங்கிட்ட கேட்டமாதிரி இருந்திச்சே...

என்னது?? தங்கமா....???

உங்களுக்கெல்லாம்,என்னப்பாத்தாப் பாவமாவே இல்லயாங்க?????

*********************

சனி, 23 அக்டோபர், 2010

அசைகிற சொத்தும் அசையாத சொத்தும்!


அசையிற சொத்து, அசையாத சொத்து எல்லாத்திலயும் பொம்பளப் புள்ளைக்கும் சரிசமமா பங்கிருக்கு... அதப் பிரிச்சுக்குடுங்கன்னு, உங்க அக்கா வீட்டுக்காரர் வந்து கேட்டுட்டுப் போயிருக்காரு...அதனாலதான் உங்க ரெண்டுபேரையும் வரச்சொன்னேம்ப்பா...டவுனிலிருந்து வந்து நின்ன மகன்களிடம் விஷயத்தை விளக்கிச்சொன்னாள் தங்கம்மா பாட்டி.

அசையாத சொத்துன்னு எங்கிட்ட இந்த பத்துக்குப் பத்து ஓட்டுவீடும், ஒழுகுற அடுப்படியும்தான் இருக்கு...நா இருக்கிறவரைக்கும் அத உங்க யாருக்கும் குடுக்கப்போறதில்ல...என்ன யாரு கடேசிவரைக்கும் வச்சிப் பாத்துக்கிறீகளோ அவுகளுக்கு அதக் குடுக்கலாம்னு இருக்கேன். அது போக,அசையிற சொத்துன்னு இருக்கிற அஞ்சாறை இப்பப் பகுந்து குடுக்கிறேன்... யாரும் மொகஞ்சுளிக்கக்கூடாது அதான் முக்கியம்...

அம்மா சொல்லச்சொல்ல ஆர்வம் பெருகியது தங்கம்மாப் பாட்டியின் பிள்ளைகளுக்கு. களையெடுத்து, நாத்து நட்டு, கிடுகு முடைஞ்சு, கூடைபின்னி, வேப்பமுத்துப் பொறுக்கி, அதை வித்துக்காசாக்கி, இப்படி, எப்பாடுபட்டாவது
சிறுவாடு சேக்கிறதில் அம்மா கில்லாடி. அப்பப்ப, சேத்துவச்ச காசில பெருசா ஒரு டொகை இருக்கும் என்று மனசில் நினைச்சபடி, அம்மாவின் மொகத்த ஆர்வமாப் பாத்தா ஒரே மக அன்னம்.

ஏதோ இதுவரைக்கும், பாலை வித்தும், முட்டைகளை வித்தும், அப்பப்ப ஆட்டை வித்தும், விருந்து விசேஷம், மருந்து மாத்திரையின்னு பொழைப்ப நடத்திட்டேன். இனிமே அதெல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு, எல்லாத்தையும் உங்ககிட்ட, பிரிச்சுக் குடுக்கப்போறேன்.

நம்ம செம்மறி ஆட்டையும், ரெண்டு குட்டியையும், அத்தோட நா வளத்த நாட்டுக்கோழி பனிரெண்டையும் அன்னம் எடுத்துக்கட்டும். வெள்ளாட்டையும் மூணு குட்டியையும் குமரேசன் வச்சிக்கட்டும். பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் பால்த்தொரைக்குக் குடுக்கிறேன். இனிமே, என்ன யாரு வச்சிப்பாத்துக்கிறதுன்னு பேசி முடிவுபண்ணின பிற்பாடு, மத்தவிஷயங்கள முடிவு பண்ணிக்கிடலாம்...என்று, பாட்டி சொல்லிமுடிக்கவும், வள்ளுன்னு விழுந்தா அன்னம்.

ஆம்புளப் புள்ளன்னா அதுக்குத் தனிப் பவுசுதான்...என்னன்னாலும் பொட்டச்சிதானன்னு ஆட்டையும் கோழியையும் குடுத்து கைகழுவி உட்டுட்ட...எம்புருஷன்கிட்டபோய்ச்சொன்னா, இம்புட்டுத்தானா உன்னோட பொறந்தவீட்டுப் பவுசுன்னு சிரிப்பாச்சிரிப்பாரு...இதெல்லாம் நீங்களே வச்சிக்கங்க...ஒண்ணும் வேணாம் எனக்குன்னு, கண்ணக் கசக்கிக்கிட்டு ஒட்டுத்திண்ணையிலபோயி உக்காந்தா அன்னம்.

ஏதோ, அடிச்சுப்புடிச்சுக் கேட்டீகளேன்னு, இருக்கிறதையெல்லாம் உங்க மூணுவேருக்கும் பங்கு வச்சுக்குடுத்துட்டேன். என்னோட சக்திக்கு இதுவே பெருசுதான். இதுக்கும் சடைஞ்சுகிட்டா நான் எங்கதான் போறது? என்று மககிட்ட கேட்டுட்டு, பெத்ததுலேருந்து, ஒத்தயா நின்னு,உங்களப் பாத்துப்பாத்து வளத்த என்ன யாரு வச்சிப் பாக்கப்போறீங்கன்னு கேட்டதுக்கு இதுவரைக்கும் யாருமே பதிலே சொல்லல...

யாருக்குமே என்ன வச்சுப் பாத்துக்க விருப்பமில்ல...இல்லயாய்யா? என்றபடி ரெண்டு மகன்களையும் ஏறிட்டுப் பாத்தா தங்கம்மாப் பாட்டி. சந்தையிலபோயி யாவாரியக் கூட்டிட்டுவந்து, மாட்டையும் ஆட்டையும் விலை பேசணும் என்று பேசிக்கொண்டிருந்த அண்ணனும் தம்பியும் ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டுப் பேச ஆரம்பிச்சாங்க.

இல்லம்மா, நாங்களே பட்டணத்துல ஒண்டுக்குடித்தனத்துல இருக்கோம்... உன்னயும் அங்க கூட்டிட்டுப்போயி, வச்சிப் பாத்துக்க வசதிப்படாது. எங்களால முடிஞ்சது இருநூறோ முன்னூறோ மாசாமாசம் உனக்கு
அனுப்பிவச்சிர்றோம். நீ இங்கயே இருந்துக்க...தங்கச்சி ஒன்னப் பாத்துக்கிரட்டும். இந்த வீட்ட வேணும்னாலும் நீ அவளுக்கே குடுத்துரு...என்று, ஆளவிட்டாப்போதும் என்ற தோரணையில் அவசரமாச் சொன்னான்  குமரேசன். அண்ணனுக்கு ஒத்து ஊதிவிட்டு, அவனுடன் சேர்ந்துகொண்டான் கதிரேசன்.

கண்ணக் கசக்கிக்கிட்டிருந்த அன்னத்துக்குக் கொஞ்சம் சந்தோஷம் வந்திருச்சு. அண்ணே, அம்மா இன்னும் நடையும் உடையுமாத்தான இருக்கு. அதனால, இந்த வீட்லயே இருக்கட்டும். நீங்க ரெண்டுபேரும், மாசாமாசம் ஆளுக்கு ஐநூறா அனுப்பிவச்சிருங்க. நா தினமும் வந்து அம்மாவப் பாத்துக்கிடுதேன், என்றபடி ஆட்டையும் கோழிகளையையும் பிடிச்சிக்கிட்டு, உள்ளூரில் தனக்கு இன்னொரு வீடும் கிடைக்கப்போகிற சந்தோஷத்தில், அடுத்த தெருவிலிருந்த தன் வீட்டுக்குக் கிளம்பிப்போனாள் அன்னம்.

அசையிற சொத்தான ஆடு மாட்டுக்குக் குடுத்த மதிப்பைக்கூட, தன் பிள்ளைகள் தனக்குக் குடுக்கலியேன்னு நினைத்து மருகியபடி, இருட்டியது கூடத் தெரியாம ஓட்டுவீட்டுத் திண்ணையில் ஒடுங்கிக் கிடந்த தங்கம்மா பாட்டி, மனசுகேக்காம, விறுவிறுன்னு எழுந்துபோயி வெளக்கேத்திவச்சிட்டு,  நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும்...புள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டும்னு நெனைச்சுக்கிட்டு, தேவாரப் புத்தகத்த எடுத்துவச்சு, வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தாள். 

                                           *********************

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

சாலை விபத்துகளும் சரியும் கனவுகளும்!



அம்மா, இனிமே எனக்கு ஸ்கூலுக்கு ஸ்நாக்ஸ் குடுக்கும்போது கூடகொஞ்சம் சேத்துக்குடும்மா என்றாள் என் மகள்.

சரிடா, யாருக்கு ஃபிரெண்டுக்கா? என்றேன்.

பிரெண்டுதான்...ஆனா, குட்டி ஃபிரண்ட்...நாலுவயசுதான், என்றாள்.

அதென்னடா, கே.ஜி புள்ளையா என்றேன்.

ஆமாம்மா... என்றாள்.

தினமும் காலையில போகும்போது அந்தப்பொண்ணு எங்ககூட வரும். ஸ்கூல் பஸ்ஸில் தன்னோட இடத்துல அஞ்சு நிமிஷம்கூட உக்காராது...பேரு அஜிதா. ஒவ்வொருத்தர் மடியிலயா வந்து உக்காந்துகிட்டு, ஏதாவது சொல்லிக்கிட்டு, இல்லேன்னா கேட்டுக்கிட்டு வரும். எங்க எல்லாருக்கும் அது பெட்.

ஆனா, நேத்திலேருந்து அந்தக்குழந்தைமேல எல்லாருக்கும் பாசத்தோட, பரிதாபமும் சேந்துகிடுச்சு.

நேத்து காலையில ஸ்கூலுக்கு பஸ்ஸில் வந்தப்போ, எங்க வீட்டுக்கு கெஸ்டெல்லாம் வந்திருக்காங்க. ஆனா, எங்கம்மா மட்டும் அழுதுகிட்டு, ரூமைவிட்டு வெளியவே வரல,என் குட்டித்தம்பியைக்கூட தூக்கல...என்று அஜிதா கவலையாகச் சொன்னது.

பக்கத்திலிருந்த ஒரு பெண், பஸ்ஸில் வந்து, தன் காலைச் சிற்றுண்டியாக பர்கர் (burger) சாப்பிட்டதைப் பாத்துட்டு, எங்கப்பாவும் எங்களை ஷாப்பிங் கூட்டிட்டுப்போகும்போது, பர்கர் ஐஸ்க்ரீமெல்லாம் வாங்கிக்குடுப்பாங்க ஆனா, இனிமே எங்கப்பா எங்களைக் கடைக்கெல்லாம் கூட்டிப்போகமுடியாது...அப்பா, வெளிநாட்டுக்குப் போயிட்டாங்களாம். இனிமே, நான் வளந்து, படிச்சு, கல்யாணம் பண்ணும்போதுதான் திரும்பி வருவாங்களாம்...எங்க வீட்டுக்கு வந்திருக்கிற கிராண்ட்மா (grand mother)சொன்னாங்க என்று அஜிதா சொன்னப்ப எங்க யாருக்கும் எதுவும் புரியல.

ஆனா, மத்தியானம் கே ஜி ஸ்டூடண்ட்ஸையெல்லாம் பன்னிரண்டுமணிக்குக் கொண்டுவிட்டுட்டு, அடுத்து எங்களைக் கூட்டிட்டுவரும்போதுதான் பஸ் கண்டக்டர் சொன்னார், அஜிதாவோட அப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி ரோட் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அஜிதாவுக்கு விபரம் தெரியவேண்டாம்னுட்டு, அதை வீட்ல வச்சுக்காம ஸ்கூலுக்கு அனுப்பிட்டிருக்காங்க என்று.

கேட்டதும் எனக்கு தொண்டைக்குள்ள வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சும்மா...ஒருத்தரையொருத்தர் பாத்து வந்த கண்ணீரை அடக்கிக்கிட்டோம். இன்னிக்கும் அஜிதா ஸ்கூலுக்கு வரும். ஒவ்வொருத்தர் மடியிலயும் வந்து உக்காந்து அவங்க வீட்டுக்கதையைச் சொல்லும். நினைக்கவே கஷ்டமா இருக்கும்மா என்று சொல்லிவிட்டு, பஸ் வரவும் கிளம்பினாள் என் மகள்.

அவளைக் கையசைத்து வழியனுப்பமுடியாமல் செயலற்றுப்போய் நின்றேன் நான்.

பி.கு:-சாலையில் பாதுகாப்பு, நம் சகலருக்கும் உயிர் காப்பு!

********

திங்கள், 11 அக்டோபர், 2010

மருமக வந்த நேரம்!



காலைலேருந்தே தூறல் விழுந்துகிட்டுதான் இருக்கு...வங்காள விரிகுடாவுல புயல் வந்துருக்காம். இன்னும் நாலுநாளைக்கு மழை இருக்கும்னு சொல்றாக... என்று மதினிக்காரியிடம் சொன்னபடி, ரேடியோவைப் போடப்போனா செவந்தி.

கரண்டு இல்லாம இருந்தது தெரியவர, போச்சா...எலக்ட்ரி லைட்ட நம்பி எல போடாதன்னு சும்மாவா சொன்னாக...உரக்க நாலுதூறல் விழுந்தாப்போதும், உடனே கரண்டை நிப்பாட்டிருவானுங்களே,வேலையத்தபசங்க...என்று வைதபடி வெளியே போனா செவந்தி.

எதிரே, பேச்சியக்கா வீட்டுல போட்டிருந்த கல்யாணப் பந்தலில் ஆட்டுக்குட்டிகள் ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தன. வெளியூர்ல கல்யாணம் முடிஞ்சி, விளக்குவச்சதும் பொண்ணும் மாப்பிள்ளையும் வருவாகன்னு ராசாத்தி சொன்னது ஞாபகம் வந்தது அவளுக்கு.

சாயங்காலத்துக்குள்ள நாலுநேரம் வந்துவந்து போயிட்டுது கரண்டு. திரும்ப வந்ததும், குறை கரண்டாயிருக்க, எதுக்கும் தேவைன்னு, சிம்னி விளக்கத் தொடச்சு மண்ணெண்ணெய் ஊத்தி,எடுத்து வச்சா செவந்தி.

அதுக்குள்ள, செவந்தியக்கா, பேச்சியக்கா வீட்டு மாப்பிள்ளையும் பொண்ணும் தெருமுக்குல வந்துட்டாகளாம்...என்று குரல் கொடுத்தபடி, வேடிக்கைபாக்க ஓடிப்போனா லெச்சுமி. விடாம, தூறல் விழுந்துகிட்டேயிருக்க, அக்கம்பக்கத்துக்காரவுகல்லாம் அவுகவுக வீட்டுவாசல் கிட்டயே நின்னு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சாக.

நாலுவீடுதள்ளிக் காரு வரும்போது, மறுபடியும் பட்டுன்னு போயிட்டுது கரண்டு. மணமகளே மருமகளேன்னு பாட ஆரம்பிச்சு, விக்கிக்கிட்டு நின்னுபோச்சு பாட்டு. "அடி ஆத்தி, பேச்சியம்மா வீட்டுக்கு மருமக வாரநேரம், பூரா ஊரும்ல இருட்டாப் போச்சுது... என்று, நீட்டி முழக்கியது நல்லம்மாக் கிழவி.

அட, ஆமால்ல... என்று உச்சுக்கொட்டியபடி ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டாங்க அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க. அதுவரைக்கும், பளிச்சுன்னு இருந்த பேச்சியக்கா முகமும், தீஞ்சுபோன பல்பாட்டம் ஓஞ்சு போக, உள்ள வரும்போதே நல்ல யோகத்தோடதான் வந்திருக்க.... என்று, வந்த மருமக கிட்ட வாசப்படியிலயே எரிஞ்சு விழுந்தா பேச்சியக்கா.

**********

சனி, 9 அக்டோபர், 2010

நவராத்திரியும் நரிப்பயறு புளிக்குழம்பும்!

நவராத்திரியும் நரிப்பயறு புளிக்குழம்பும்!


நவராத்திரி விரத காலம் பயறு வகைகளை நிறைய பயன்படுத்தும் காலம். பொதுவாகவே மழைக் காலம் நம் உடம்பில் பலவகை நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட காலத்தில் உடம்புக்கு அதிகமான நோய்எதிர்ப்பு சக்தி தேவை. அதற்காகத்தான் நவராத்திரி காலத்தில் நிறைய பயறுவகைத் தானியங்களை உண்ணும் வழக்கம் வந்ததுன்னு சொல்லுவாங்க.

* பயறுவகைகள் எல்லாமே அதிகமான புரதச் சத்துக்களைக் கொண்டிருக்கின்றன.

* பயறு வகைகளில் நார்ச்சத்து, அதிகமென்பதால் இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

* தினமும் ஒரு கப் வேகவைத்த ஏதாவதொரு பயறை உணவில் சேர்த்துக்கொண்டால் அன்றாடத் தேவையில் 63% நார்ச்சத்து அதிலிருந்து நமக்குக் கிடைத்துவிடுகிறது.

* இது தவிர, மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற அத்தியாவசியச் சத்துக்களும் இவற்றிலுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு இவை அதிகம் உதவுகிறது.

எல்லாம் சரி, அதென்ன நரிப்பயிறுன்னுதானே யோசிக்கிறீங்க?
நேத்து யாராவது சொல்லியிருந்தா நானும் இதேமாதிரிதான் யோசிச்சிருப்பேன். ஏன்னா, இந்தப் பயறோட தமிழ்ப்பெயர் இப்பத்தான் எனக்கும் தெரிஞ்சிது. ஆங்கிலத்தில் இதுக்குப்பேரு Black Eye Beans. தமிழ்ல நரிப்பயறு...ஏன் இந்தப் பெயரை வச்சாங்கன்னு எனக்குத் தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லிட்டுப்போங்க.

சரி, இப்ப இந்த நரிப்பயறை வச்சு புளிக்குழம்பு பண்ண என்னென்ன பொருட்கள் தேவைன்னு பார்க்கலாம்.

நரிப்பயறு - 1/2 கப்

தக்காளி - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

சிறிய கத்தரிக்காய் - 2

தேங்காய்த்துருவல் - 1 கப்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

சாம்பார்ப் பொடி - 1 தேக்கரண்டி

புளி - சிறு எலுமிச்சையளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு -தேவைக்கு

தாளிக்க...

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை...


பயறை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வச்சுக்கங்க.

காய்கறிகளை நறுக்கி வச்சுக்கங்க.

புளியைக் கரைச்சு வடிகட்டி வச்சுக்கங்க.

தேங்காய்த் துருவலுடன் சீரகம் சேர்த்து அரைச்சு வச்சுக்கங்க.


செய்முறை:-

அடுப்பில் வாணலியை வச்சு, தேவையான அளவு எண்ணெய் விட்டுக்கணும்.

தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளிச்சு,அதில் வெங்காயம் பச்சை மிளகாயப் போட்டு வதக்கணும்.

வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காய், அப்புறம் தக்காளியையும் போட்டு வதக்கணும்.

தக்காளி கரைஞ்சு வரும்போது புளிக் கரைசலை ஊத்தி, அத்துடன் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும்.

கலவை,ரெண்டு நிமிஷம் கொதிக்கவிட்டு, அரைச்ச தேங்காய் சீரக விழுதைச் சேர்க்கவும்.

வேகவைத்த பயறைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போடவும்.

குழம்பை மூடி, எண்ணெய் பிரியும்வரை சிறுதீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.

நரிப்பயறு புளிக்குழம்பு ரெடி.

பின் குறிப்பு :- பயறு சாப்பிட்டு வரும் பின் விளைவுகளுக்கு வெள்ளைப்பூண்டு அக்கா, அல்லது பெருங்காயப் பாட்டியின் உதவியை நாடலாம்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

எங்களுக்கு விவாகரத்து வேண்டும்!



ஊரிலிருந்து அந்த அப்பா, அமெரிக்காவிலிருக்கும் தம் மகனை அழைத்துச் சொன்னார்,

" உன்னுடைய இந்த நாளை வீணடிப்பதற்காக நான் வருத்தப்படுகிறேன் மகனே... ஆனால், இதற்கு மேலும் இதைச் சொல்லாமல் நாளைக் கடத்தமுடியாது. 35 வருஷ கல்யாண வாழ்க்கையில்,இதுவரை பட்ட கஷ்டமெல்லாம்போதும். நான் உன் அம்மாவை விவாகரத்து செய்யப்போகிறேன் " என்று.

அப்பா, என்ன சொல்றீங்க நீங்க? சற்றேறக்குறைய அலறினான் மகன்.

இதற்குமேலும் எங்களால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு வெறுத்துப்போய்விட்டது இந்த வாழ்க்கை.

திரும்பத்திரும்ப இதையே பேசுவதிலும் எனக்கு விருப்பமில்லை. அதனால், ஹாங்காங்கில் இருக்கும் உன் தங்கையிடமும் நீயே இந்த விஷயத்தைச் சொல்லிவிடு என்றபடி ஃபோனை வைத்துவிட்டார் அந்த அப்பா.

அண்ணனிடமிருந்து வந்த அழைப்பைக் கேட்டதும் அதிர்ந்துபோனாள் தங்கை. இவங்க நினைச்சா, உடனே விவாகரத்து செஞ்சுக்குவாங்களா? பிரச்சனையை என்னிடம் விடு... நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, உடனே, தன் அப்பாவை அழைத்தாள் அவள்.

நீங்க என்னதான் நினைச்சுட்டிருக்கீங்க மனசில... உங்க இஷ்டப்படி, நீங்க அம்மாவை விவாகரத்துச் செய்யமுடியாது. இப்பவே நானும் அண்ணனும் அங்கே புறப்பட்டு வருகிறோம். அதுவரைக்கும் ஏதாவது பிரச்சனை பண்ணினீங்கன்னா... இருக்கு. என்ன, நான் சொல்றது காதில விழுதா? என்று கத்திவிட்டுத் தொலைபேசியை வைத்தாள்.

முதியவரும் தொலைபேசியை வைத்துவிட்டுத் துணைவியாரிடம் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சொன்னார், அவங்க ரெண்டு பேரும் இப்பவே புறப்பட்டு வராங்க... நம்ம கல்யாண நாளுக்கு. அதுவும் அவங்களோட சொந்த செலவில்...என்று சொல்லிவிட்டு கண்களில் கண்ணீர் வருமளவுக்கு உரக்கச்சிரித்தார். கூடவே சேர்ந்துகிட்டாங்க அவர் மனைவியும்.

இது, பிள்ளைகளுக்காக ஏங்குகிற பெற்றோரைப்பற்றி, நான் மின்னஞ்சலில் படித்த சாதாரணமாகச் சொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையாயிருந்தாலும், அது சொல்லும் அர்த்தத்தைக் கட்டாயம் எல்லாரும் புரிஞ்சிக்கணும்.

1. வருஷத்தின் 365 நாளும் யாரும் வேலைவேலையென்று பரபரப்பாக இருப்பதில்லை.

2.வருஷத்தின் சில நாட்கள், வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதால் வானமொன்றும் இடிந்து நம் தலையில் விழுவதில்லை.

3.அலுவலக வேலையும், பணம் சம்பாதிப்பதுமே நம் வாழ்க்கையில்லை. அதற்கு மேலும் அன்பு பாசமென்று விலை மதிப்பற்ற சில விஷயங்களும் இருக்கிறது.

கடல்கடந்து வாழும் மக்களே...கவனம் வையுங்க!

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சில அழகான பழமொழிகள்!


அநேகப் பழமொழிகள் அழகாக இருந்தாலும், அழகைப்பற்றிமட்டும் சொல்லக்கூடிய சில பழமொழிகள் இவை...

* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

* அழகு, அடைத்த கதவுகளையும் திறக்கும்.

* அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.

* அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகளோ கசப்பு.

* அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்.

* அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.

* அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.

* அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.

* அழகும், மணமுமுள்ள பூக்கள் சாலையோரத்தில் வாழாது.


                                                        ******

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

மைதா முறுக்கு



கைமுறுக்கு, அச்சு முறுக்கு, தேன்குழல்ன்னு எத்தனையோ வகை சாப்பிட்டிருப்பீங்க...ஆனா, அத்தனையிலும் எளிதானது இந்த மைதா முறுக்கு. ஒருமுறை செய்து ருசிபார்த்தா அப்புறம், உங்க அடுப்படியில் அடிக்கடி மைதாமாவு காலியாகும்.

மைதா முறுக்கு செய்யத் தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1/4 கிலோ

எள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை

மைதாவை மெல்லிய துணியில் கட்டி, ஆவியில் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து ஆறிய மைதாவை உதிர்த்துவிட்டு, உப்பு கலந்த நீர், சீரகம், எள் சேர்த்து கெட்டியாக, முறுக்கு அச்சில் பிழியும் பக்குவத்தில் பிசைந்துகொள்ளவும். காரம் தேவையென்றால் சிறிது காரப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

பிசைந்த மாவை, சிறு சிறு தட்டுகளில் பிழிந்து,அதனை எண்ணெயில் இட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான, எளிதான மைதா முறுக்கு தயார்.

************


திங்கள், 20 செப்டம்பர், 2010

அம்மா நமக்கு...அப்பா அவங்களுக்கு!



மகனோடயும் பேரன்களோடயும் ஃபிரான்ஸுக்குப் போறியாமே...பிள்ளைங்க, பேரன்னு வந்துட்டா, பொம்பளைகளுக்குப் புருஷனெல்லாம் ரெண்டாம்பட்சமாயிடுது...எங்கிட்ட நீ ஒரு வார்த்தைகூடக் கேட்கல பாத்தியா ... அடுப்படியிலிருந்த மனைவியிடம் அடிக்குரலில் கேட்டார் பழனிச்சாமி.

அவரை மெள்ள நிமிர்ந்துபார்த்த அவரோட மனைவி ராஜம்மா, "பள்ளிக்கூடத்து வாத்தியாராயிருந்து ரிட்டையர்டும் ஆயாச்சு...நமக்கும் கல்யாணமாகி நாப்பது வருஷம் ஆகப்போகுது.  ஆனா,இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்க...பேரன் சொன்னதை அப்படியே நம்பிட்டு எங்கிட்ட வந்து கேள்வி கேக்கிறீங்க...சரி, விபரம் என்னன்னு எப்படியும் இன்னிக்குள்ள உங்களுக்குப் புரிஞ்சிரும்... அதுக்குள்ள, மாடியில மழைத்தண்ணி இறங்காம அடைச்சி நிக்குதுன்னு நெனைக்கிறேன். அதைக்கொஞ்சம் பாருங்க..." என்றபடி மிச்சப் பாத்திரங்களையும் மடமடவென்று விளக்கிப்போட்டாள் அவர் மனைவி.

கேள்விகள் மனசில் கனத்திருக்க, மெதுவாய் மாடிப்படியேறி மனைவி சொன்ன வேலையைக் கவனிக்கப்போனார் பழனிச்சாமி. மாடியில், மகனின் அறைக்குள்ளிருந்து அதட்டலாய்க் கேட்டது மருமகளின் குரல்.

"அப்போ, இப்பவே, எனக்கு வீட்டுவேலைக்கு ஒரு ஆளைப் பாருங்க... உங்க பையனையும் பாத்துக்கிட்டு, சமையல், வீட்டுவேலைன்னு அல்லாடமுடியாது எனக்கு"

"மெள்ளப் பேசு சுசி...வேலைக்கு ஆள் கூட்டிப்போறது ஒண்ணும் சாதாரண விஷயமில்ல...விசா செலவு, மாசச்சம்பளம், அவங்களுக்கான மத்த செலவுகள்னு ஏகப்பட்ட செலவாயிரும்... அதுக்கு, எங்கம்மா சொன்ன மாதிரியே அப்பாவையும் சேர்த்துக் கூடக் கூட்டிட்டுப்போயிரலாம்" குரலை இறக்கிப்பேசினான் குமரவேலு, வாத்தியாரின் மகன்.

"ஓ...அவங்க ரெண்டு பேரும் வந்தா மட்டும் செலவு ஆகாதா? அதுலயும் உங்கப்பாவுக்கு சர்க்கரை வியாதி. அடிக்கடி ஆஸ்துமா அட்டாக் வேற... ஃபிரான்ஸில இருக்கிற குளிருக்கு, அவருக்கு மருத்துவம் பாக்கிறதுலயே நம்ம காசெல்லாம் காலியாயிரும்" 'சுள்'ளென்று விழுந்தாள் மருமகள்.

ஆனா, அப்பாவை விட்டுட்டு வரமாட்டேன்னு அம்மா திட்டவட்டமா சொல்லிட்டாங்களே...அப்ப என்னதான் பண்றது?

உங்க தங்கச்சியும் இதே ஊர்லதானே இருக்காங்க...சொத்துல மட்டும் மகளுக்கும் பங்கு உண்டுன்னு சொல்றாங்கல்ல, அதேமாதிரி, சுமையையும் அவங்க கொஞ்சம் பகிர்ந்துக்கட்டுமே...ஒரு ரெண்டுவருஷத்துக்கு,அவங்க உங்கப்பாவைப் பார்த்துக்கட்டும். நீங்க, உங்கம்மாவை எப்படியாவது பேசி சரிக்கட்டிக் கூப்பிட்டுவரப்பாருங்க...

"அம்மாவைப்பத்தி உனக்குத்தெரியாது சுசி...அவங்க எப்படியும் அப்பாவை விட்டுட்டு வரமாட்டாங்க. பிள்ளையையும் பார்த்துகிட்டு வேலையையும் கவனிக்கக் கஷ்டம்னா, பிள்ளைகள் வளர்ற வரைக்கும் உன் மனைவியையும் குழந்தைகளையும் இங்க விட்டுட்டுப் போ"ன்னு சொல்றாங்க அவங்க...

என்னது? நானும் பிள்ளைகளும் இங்க தனியா இருக்கணுமா?

தனியா இல்ல சுசி...அப்பா அம்மாகூடத்தான்...

அப்போ, நீங்களும் உங்கம்மா சொன்னதைக்கேட்டு எங்களை இங்க கழட்டி விட்டுட்டுப்போகலாம்னு நினைக்கிறீங்க...இல்லே?

ஐயோ, இல்ல சுசி... அம்மா சொன்னதைத்தான் நான் சொல்றேன்...

ஆனாலும் உங்கம்மாவுக்கு இந்த புத்தி கூடாதுங்க. உங்களை அங்க தனியா அனுப்பிட்டு, நானும் புள்ளைங்களும் இவங்களோட தொணதொணப்பைக் கேட்டுக்கிட்டு, இங்க இருக்கணுமோ? நல்லாத்தான் திட்டம்போடுறாங்க, நம்ம ரெண்டுபேரையும் பிரிக்கிறதுக்கு.

பெரிய வார்த்தையெல்லாம் பேசாத சுசி...நீ என்ன சொல்றியோ, அதையே தான் அம்மாவும் சொல்றாங்க...அப்பாவைத் தனியா விட்டுட்டு அவங்களால நம்மகூட வந்து இருக்கமுடியாதுன்னு...

ஓஹோ, அவங்களும் நாமளும் ஒண்ணா? வயசான காலத்துல பெத்தவங்க, பிள்ளைங்களுக்கு ஆதரவா அரவணைச்சுப் போகணுமே தவிர, அவங்கவங்க சௌகரியத்தைப் பாக்கக்கூடாது. ஆனாலும் உங்கம்மா இப்படிச் சொல்லியிருக்கக்கூடாது" என்று உணர்ச்சிவசப்பட்டாள் மருமகள்.

அப்ப, ஒண்ணு பண்ணலாம் சுசி... நீ வேணும்னா, உங்கம்மாவைக் கூப்பிட்டுப்பாரேன். அவங்களும் இங்கே தனியாத்தானே இருக்காங்க...என்றான் குமரவேலு.

எங்கம்மாவை எப்படிக் கூப்பிடமுடியும்? அவங்களுக்கு மகளிர் மன்றம், அதுஇதுன்னு ஆயிரம் வேலை...அதுமட்டுமில்லாம, அங்க இங்கன்னு நாலு இடத்துக்குப் போய்வந்து இருக்கிற அவங்க எப்படி அங்கவந்து நாலுசுவத்துக்குள்ள நம்மளோட அடைஞ்சு கிடக்கமுடியும்? அதெல்லாம் முடியாது என்று அவசரமாய் மறுதலித்தாள் சுமி.

அப்போ என்னதான் பண்ணட்டும் நான்? என்னோட சம்பளத்துல வேலைக்கு ஆள்கூட்டிட்டுப்போறதெல்லாம் சாத்தியமில்ல...நீ வேணும்னா அம்மா சொன்னமாதிரி கொஞ்சநாள் இங்க இருக்கிறியா?...பக்குவமாய் ஊசியை இறக்கினான் குமரவேலு.

ஐயோ, ஆள விடுங்க சாமி, நானே அங்க பிள்ளையையும் பாத்துக்கிட்டு, வீட்டையும் பாத்துத்தொலைக்கிறேன்...யாரோட உதவியும், உபகாரமும் நமக்கு வேண்டாம் என்றபடி, கதவை அடித்துச் சாத்திவிட்டு ஆத்திரத்துடன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் மருமகள்.

மனதிலிருந்த கேள்விகளின் கனம்குறைய, மாடியிலிருந்து இறங்கத்தொடங்கினார் பழனிச்சாமி வாத்தியார்.

ராஜம்மா, மாடியில அடைச்சிருந்த கசடெல்லாம் மழைத்தண்ணியோட கீழ இறங்கிடுச்சு...இனிமே எந்தப் பிரச்சனையும் இல்ல...என்றவர், தனக்குக் காரியம் ஆகணும்னா இந்தகாலத்துப் பிள்ளைகள் எவ்வளவு சுயநலமா இருக்குதுங்க என்று தனக்குள் வியந்தபடி மனைவியைப் பார்த்தார். அவர் கண்களில் எப்போதையும்விடச் சற்று அதிகமாகவே கனிவு தென்பட்டது. 

***********


ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

குழந்தைகளைக் குற்றம் சொல்லாதீங்க...

"எட்டுப் புள்ளைங்க எங்க வீட்ல...ஆனா, வீட்டுச்சத்தம் வெளியில கேக்காது. ஆனா, இந்த ஒண்ண வச்சுக்கிட்டு நான் படுறபாடு இருக்கே...கடவுளே, இன்னும் தலை இருக்கிற இடத்துக்குக் கழுத்து வந்தா இன்னும் என்னென்ன பண்ணுமோ..." என்று அலுத்துக்கொள்ளும் அம்மாக்களைப் பார்க்கும்போது, இந்தக்காலத்துக் குழந்தைகள்தான் அதிகமா குறும்புத்தனம் பண்றாங்களா, இல்லேன்னா, அப்பா அம்மாதான் அவங்களை அதிகமா குத்தம் சொல்றாங்களா என்ற கேள்வி இப்பல்லாம் அடிக்கடி மனசில் எழுகிறது.

"இப்பல்லாம், விருந்து விசேஷம்னு எங்கேயும் போறதில்லை, எல்லாம் இவங்க வளந்த பிறகுதான்..." என்ற என் உறவுக்காரப் பெண்ணை ஏனென்று கேட்டபோது, "எங்க போனாலும் இவனுங்க பண்ற சேட்டையில திட்டு வாங்கிட்டுத்தான் திரும்பவேண்டியிருக்குது. அதனால இவன்களுக்குப் புத்தி தெரிஞ்சப்புறம்தான் எல்லாம்" என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோதே, கையை உதறிவிட்டுத் தெரிச்சு ஓடித் தெருவில் விளையாடப்போன அந்தச் சிறுவனைப் பார்க்கும்போது மனசில் சங்கடம்தான் தோன்றியது.

"அன்னிக்கு, ஒரு கிரகப்பிரவேசத்துக்குப் போயிருந்தேன். எல்லாரும் வீட்டை சுத்திப்பாத்துட்டு இருந்தப்ப, எங்கே இவன்னு பாத்தா மொட்டை மாடி கட்டைச் சுவரில் ஏறி நிக்கிறான்.ஒற்றை நிமிஷம் பார்க்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சுப்பார்க்கவே முடியல..." என்று சொல்லிவிட்டுக் கண்கலங்கிய அந்தத் தோழியைப் பார்க்கையிலும் கஷ்டமாகத்தான் இருந்தது.

இங்கே அமீரகத்தில், காருக்கு அடியில் ஒளிந்து விளையாடிய ரெண்டு குழந்தைகள், தந்தை வந்து காரை ஸ்டார்ட் பண்ணின பிறகும்கூட வெளியே வராமல், விளையாட்டில் திளைத்திருக்க, சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் பத்திரிகைகளில் வந்தது.

அன்றைக்கு, அந்தச் சிறுமியைக் காணவில்லையென்று தெருவே தேடிக்கொண்டிருந்தது. பக்கத்துப் பள்ளிக்கூடத்தில், சாலையில், கடைகளில், அடுத்தவீடு எதிர்த்தவீடென்று எல்லா இடத்திலும் தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல்போகவே, மொட்டைமாடியில் பாத்தீங்களா என்று ஒருவர் கேட்க, மொத்தக் கூட்டமும் மொட்டைமாடிக்கு ஓடியது. அங்கே ஒற்றையாய் வசிக்கும் இளைஞனுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள் அந்த மூன்றுவயசுக் குழந்தை.

இந்தக் குழந்தையாக மாடிக்குப்போனதா, அல்லது அவன்தான் கூட்டிட்டுப்போனானா என்று ஆளாளுக்கு அவரவர் மனப்போக்கின்படிப் பேச, "இன்னும் கொஞ்சநேரம் கதை கேட்டுட்டு வரேம்மா..." என்று தன் அம்மாவிடம் கள்ளமில்லாமல் கேட்டது அந்தக் குழந்தை. ஆனா, அதுக்குப் பதிலாகக் கிடைச்சதோ கூட ரெண்டு அடி மட்டும்தான்.

பக்கத்து வீட்டுக்காரி பொறாமை பிடிச்சவ, மாடி வீட்டுக்காரன் ஒரு மாதிரி, எதிர்த்த வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியல என்று அக்கம்பக்கத்தில் யாருடனும் நட்புப் பாராட்டமுடியாமல் கட்டிப்போடப்படுகிற மொட்டுகள் என்னதான் செய்யும்? காலையில் எட்டுமணிக்கு ஆட்டோவில் ஏத்தி அனுப்பினா, மாலை நாலரை மணிக்கு வந்து, நாலு பிஸ்கட்டும் பாலும் குடிச்சிட்டு, டாம் அண்ட் ஜெரியையோ, டோரா புஜ்ஜியையோ பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அடுத்து, இருக்கவே இருக்கு ஹோம் வொர்க்.

கதையில் வருகிற டாம் அண்ட் ஜெரி மாதிரி குறும்பும் கும்மாளமுமாய் இருக்கவோ, டோராவை மாதிரி தானும் வெளியில் செல்லவும் விளையாடி மகிழவும் அந்தக் குழந்தையும் ஆசைப்படுமென்று ஏன் அம்மா அப்பாக்களுக்குப் புரியமாட்டேனென்கிறது?

என்றைக்காவது ஒருநாள் பார்க்கில் விளையாடக் கூட்டிப்போனால்கூட, ஒன்னோட சைக்கிளை வச்சு நீ மட்டும் விளையாடு, விச்சுகிட்ட குடுத்தே பிச்சுப் போட்டுடுவான், என் கண்ணை விட்டு விலகி, தள்ளிப்போகக்கூடாது, கடையில இருக்கிற கருமத்தையெல்லாம் கேக்கக்கூடாது, கண்டவங்ககூடல்லாம் கதை பேசக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டளைகள் விதிக்கப்பட, என்னசெய்வதென்றே புரியாமல் திணறித்தான்போகிறது குழந்தை.

குச்சி மிட்டாயும், குருவி பிஸ்கட்டும், பச்சை மாங்காயும், பப்படமும் வாங்கி எச்சில் ஒழுகச் சாப்பிட்டுவிட்டு, பச்சைக்குதிரை, பம்பரம், பாண்டி, குச்சிக்கம்பு, கோலிவிளையாட்டென்று இச்சைப்படி தெருவில் விளையாடி வளர்ந்த தலைமுறை, தன் பிள்ளைகளைக் கயிற்றில் கட்டிய கன்றுக்குட்டிகளைப்போல் வளர்ப்பதைப் பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச்சொல்லப்போனால், 'அட, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...காலம் கெட்டுக்கிடக்குது' என்றுசொல்லிவிட்டுக் கடந்து போய்விடுகிறார்கள் பெற்றவர்கள்.

விபாஷா...வயது பத்து, சிம்லாவில் ஐந்தாம்வகுப்புப் படிக்கும் இந்தச் சிறுமி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதிக்கு இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள். விஷயம் என்னன்னா, சிம்லாவில் சின்னக் குழந்தைகள் விளையாட வசதியாகப் பூங்கா ஏதும் இல்லாத காரணத்தால், குழந்தைகள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்க நேரிடுகிறது. அதனால் எங்களுக்கு வசதியாகப் பூங்கா ஒன்று அமைத்துத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறாள் அந்தச் சிறுமி. சிறுமியின் வேண்டுகோளைப் பரிசீலிக்கும்படி, அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்.

வெளையாடப்போறேன், வெளையாடப்போறேன்னு, சொன்னதையே திரும்பத்திரும்பச்சொல்லித் தொல்லை கொடுக்காதே சனியனே...என்று அர்ச்சனையை ஆரம்பிக்குமுன்னால் கொஞ்சம் யோசியுங்க. படிப்பு, ட்யூஷன், பரீட்சை, மதிப்பெண் என்று ஏகப்பட்ட இறுக்கத்திலிருக்கிற குழந்தைகள் கொஞ்சம் மனதைத் தளர்த்திக்கொள்ள நாம் அனுமதித்தே ஆகவேண்டும்.அவர்களுக்குப்பிடிக்கிற விதத்தில் அவ்வப்போதாவது விளையாட அனுமதிக்கவேண்டும். கூடி விளையாடச்செய்தல் குழந்தைகளுக்குள் குழுவாகச் சேரும் மனப்பான்மையை உண்டுபண்ணும்.

மனமகிழ்ச்சியுடன் வளரும் குழந்தைகள் வளர்ந்தபிறகு, தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அடக்குமுறைக்குள் சிக்கிய குழந்தைகள் வளர்ந்த பின்னாலும், அவசரமும் ஆத்திரமும்தான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நாம் யோசிக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

சனி, 18 செப்டம்பர், 2010

அழகாயிருக்க இதெல்லாம் அவசியம்!!!



அழகாயிருக்கணுமென்ற ஆசை அனைவருக்கும் பொதுவானது. சமீபத்தில் ஆரோக்கியவாழ்வு பெண்களும் பெறலாம் என்ற யோகாசனம் பற்றிய நூலைப் படிக்கையில், நூலாசிரியர் டாக்டர் ஹேமா எழுதியிருந்த விஷயங்கள்தான் இவை...மொத்தத்தில் ஒரு யோகியைப்போல் வாழச்சொல்வதாகப்பட்டது எனக்கு. நீங்களும் படிச்சுப் பாருங்க...



பெண்களில் அழகுடன் இருக்க ஆசைப்படாதவர் யார்?

மனதில் ஏற்படும் உற்சாகம்தான் மனதின் அழகை அதிகப்படுத்தி முகத்தில் பிரதிபலிக்கும்.யோகப்பயிற்சியின்மூலம் மனம் அமைதியாகிறது. மிகச்சிறிய விஷயங்களுக்காக மன உளைச்சல்பட்டவர்கள் யோகப்பயிற்சிக்குப்பிறகு, அமைதியோடு நிதானத்துடன் எதையும் அணுகுவார்கள்.சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இயங்குபவர்கள் சாதனை புரிந்து, மன உற்சாகம் பெற்று அகத்தின் அழகு முகத்தில் தெரியவரும்.

மேலும், நமது வலது மூளை தூண்டப்பட்டு,கருணை, அன்பு,பிறர்க்கு உதவும் பாங்கு முதலியன வளரும். வெறுப்பு, கொபம், எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.நாம் வாழ்க்கையை நல்லமுறையில் வாழக் கற்றுக்கொள்ளுவோம்.மன அமைதிபெற நம் ஆன்றோர்கள் கூறிய சில வழிகள்...

* பிறரைக் குறைகூறாதீர்கள்

*கடவுள் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று உணருங்கள்.

*பொறுப்புக்களிலிருந்து தட்டிக்கழிக்காமல் உறுதியுடன் நிறைவேற்றுங்கள்.

*தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

*யாருடனும் வீண் விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

*எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

*வெற்றியின் மிதப்பில் மிகையாக இருப்பதையும், தோல்வியில் துவளுவதையும் நிறுத்துங்கள்.

*எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பிறர்க்கு முடிந்தமட்டும் உதவுங்கள்.

*பொறுமையாயிருங்கள்.

*திருப்தியுடன் இருங்கள்.

*பிறர் பொருளுக்கு ஆசைப்படவேண்டாம்.

*உலகம் அநித்தியம், மாயை என்பதை உணருங்கள்.

*எதற்கும் வருத்தப்பட்டு, சக்தியை வீணாக்காதீர்கள்.

*பிறர் உங்களுக்குச் செய்த கெடுதலையும், நீங்கள் பிறருக்குச்செய்த நல்லதையும் உடனுக்குடன் மறந்துவிடுங்கள்.

* கடவுளை நம்புங்கள்.

*எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.

*நிகழ்காலத்தில் வாழுங்கள்.கடந்தகாலத்தின் நினைவுகளிலும், எதிர்காலத்துக் கனவுகளிலும் மூழ்கிவிடாமல் இருங்கள்.

இவையெல்லாம் யோகப்பயிற்சிமூலம் தானாகவே உங்களைத் தேடிவரும்.உடல்வாகும் உள்ள அழகும் பெற்று வனப்புடன் திகழலாம்.

*****

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

குடைமிளகாய் பொரியல்


குடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்.

தேவையான பொருட்கள்
-----------------------

பச்சை குடைமிளகாய் - 300 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
--------
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு -1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை
------------

குடைமிளகாயைக் கழுவி, காம்பு மற்றும் விதைப் பகுதியை நீக்கிவிட்டு, மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காயுடன், சீரகம், இஞ்சியைச் சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டு உப்புச் சேர்த்து வதக்கவும். மூடிவைக்க வேண்டியதில்லை. மிக விரைவில் வதங்கிவிடும். வதங்கி வரும்போது, மஞ்சள் பொடி, வத்தல் பொடி சேர்த்துக் கிளறிவிடவும்.

இறுதியில், அரைத்த தேங்காய் கலவையைக் கொட்டி, மசாலா வாசனை போகும் வரை நன்றாக வதக்கி இறக்கிவிடவும்.

சூப்பரான குடைமிளகாய் பொரியல் ரெடி. இந்தப் பொரியலை, உதிர வடித்த சாதத்துடன் கலந்து, காப்ஸிகம் ரைஸ் என்று பிள்ளைகளுக்கு லஞ்ச்பாக்ஸிற்கும் தயார் செய்து அனுப்பலாம்.

************

புதன், 8 செப்டம்பர், 2010

லால்பாக் பெங்களூரு

அமீரகத்தின் அதிகமான வெம்மை, கண்ணைக்கூசவைக்கும் வெயிலிலிருந்துவிலகி, பெங்களூரு வந்தபோது,அவ்வப்போது பெய்த மழையும்,உறுத்தாத இளம்வெயிலும்,கண்ணைக் குளிர்விக்கும் பசுமையும் மனதை நிறைத்தது. பாதிநாளை எங்களுடன் பகிர்ந்துகொண்ட லால்பாகின் அழகான காட்சிகளில் சில இங்கே...























சில்க் காட்டன் மரமாம்...

























லால்பாக் ஏரியில் நீந்திய பாம்பு...




சனி, 4 செப்டம்பர், 2010

அகரம்முதலான அனைத்துக்கும் காரணமாய்...



அகரம் தொடங்கி நமக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்த அத்தனை ஆசிரியர்களும் நம் வணக்கத்துக்குரியவர்கள்தான். தாய்தான் நமக்கு முதல் ஆசிரியை என்று சொல்லுவார்கள். ஆனால்,ஆசிரியர்களாயிருந்த பெற்றோருக்குப் பிறந்து, ஆசிரியர்களாலேயே வளர்க்கப்பட்ட காரணத்தால் எப்போதும் என் மனதில் ஆசிரியர்களுக்கு உயர்வான ஒரு இடமுண்டு.

ஐந்தாம் வகுப்புவரை, ஆசிரியர்களாயிருந்த அப்பா அம்மாவுக்கு எங்கெல்லாம் மாற்றலாகிறதோ அங்கெல்லாம் சென்று படித்ததால், வீட்டிலிருக்கும்போதுகூட எனக்குப் பள்ளிக்கூடத்திலிருப்பதுபோலவே தோன்றும். ஆனால், ஒருநாள்கூட, வீட்டில் அப்பாவோ அம்மாவோ புத்தகத்தை எடுத்துப்படி என்று கட்டாயப்படுத்தியதில்லை. (பிள்ளை தானாவே படிக்கும் என்ற நம்பிக்கைதான்...)கண்டதைக் கற்றால் பண்டிதனாகலாம்னு அப்பா அடிக்கடி சொல்லக்கேட்டு, கடலை வாங்குகிற காகிதம் முதற்கொண்டு, எங்க ஊர் சின்னஞ்சிறு நூலகத்திலிருந்த எல்லாப் புத்தகங்களையும் புரட்டிப் பார்த்ததுண்டு.

அம்மாவின் பள்ளியைவிட்டு, ஆறாம் வகுப்புப் போனபோதுதான் புதிதாகச் சிறகுமுளைத்தது போலிருந்தது. டீச்சர் பொண்ணு என்கிற பெயர் மாறி, சொந்தப் பெயரோடு முன்னேறத் தொடங்கிய காலம். பின்னாலிருந்து இழுத்த அச்சத்தையும் தயக்கத்தையும் மாற்றி, 'உன்னால் முடியும், நீ எல்லாவற்றிலும் பங்கெடுக்கவேண்டும்' என்றுசொல்லி என்னுடைய முன்னேற்றத்துக்குப் பிள்ளையார் சுழியாயிருந்த என் சரித்திர ஆசிரியை எமிலிப்பொன் டீச்சரை என்றும் என்னால் மறக்கவேமுடியாது.

ப்ளஸ் ஒன் படித்தபோது, எனக்குக் கிடைத்த மிக அருமையான கணித ஆசிரியையைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். புரியலன்னு சொன்னா எத்தனை தடவையும் சொல்லித்தரத்தயங்காத ஆசிரியை அவர்கள்.அவங்க வகுப்பில் நடந்த ஒரு மறக்கமுடியாத சம்பவம்...

அன்றைக்கு கணிதத்தில் வகுப்புத் தேர்வு. ஒரு டெஸ்க்கில் ரெண்டுபேர் உட்கார்ந்து எழுத மற்றவர்கள் வகுப்பிற்குள்ளும், வராண்டாவிலும் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தோம்.திடீரென்று 'ஏய் எழுந்திரு' என்று டீச்சர் சத்தம்போட, எழுதிக்கொண்டிருந்த எல்லாரும் நிமிர்ந்தோம். வராண்டாவில் தரையில் உட்கார்ந்து தேர்வு எழுதிய ஒரு பெண், காலுக்கடியில் கணக்கு நோட்டை வைத்துப் பார்த்து எழுத, அது எங்க டீச்சர் கண்ணில் பட்டுவிட்டது. நீ எழுதியதுபோதும் பேப்பரைக் கொடுத்து விட்டுப்போ என்று கணக்கு டீச்சர் சொன்னதும், ஆயிரம் காரணம் சொல்லி சமாளித்துப் பார்த்தாள் அவள். அவற்றில் எதுவுமே நடக்காமல்போக, அழுதுகொண்டு வகுப்பை விட்டுப்போன விடுதி மாணவியான அந்தப்பெண், விடுதி அறைக்குச்சென்று பல்பை(bulb)நொறுக்கி வாயில்போட்டுக்கொண்டு, டீச்சர் திட்டியதால்தான் இப்படிச் செய்தேன் என்று நாடகமாடிவிட்டாள்.

வகுப்பில் அத்தனை பேருக்கும் கடும்கோபம், தான் தப்பு செய்ததோடு டீச்சர்மேல் பழிவரும்படி செய்திருக்கிறாளே என்று. ஆனால், அடுத்த நாள் வகுப்புக்கு வந்த எங்க டீச்சர், அவள் பழிபோட்டதில் எனக்கொன்றும் வருத்தமில்லை, ஆனால்,அவளுடைய செயலால் நல்லாப் படிக்கிற பிள்ளைகள்கூட அதிர்ச்சியில் நேற்று சரியாவே பரிட்சை எழுதல. அதுதான் எனக்கு வருத்தம் என்று சொன்னார்கள். இன்றுவரை அவர்களை மறக்கமுடியவில்லை.இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னன்னா, காப்பியடித்து மாட்டிக்கொண்ட அந்தப்பெண்ணும் ஒரு ஆசிரியரின் மகள். அவளால் அன்று இரண்டு ஆசிரியர்களுக்குச் சங்கடம்.

கல்லூரிக்காலத்தில் கிடைத்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களுமே குறிப்பிடத் தகுந்தவர்கள்தான். சின்ன விஷயமென்றாலும் அதனைச் சீர்தூக்கிப் பாராட்டி, இன்னும் என்னென்ன செய்தால் முன்னேற்றம் காணலாம் என்று, சொல்லிக் கொடுத்த தெய்வங்கள் அவர்கள். இன்றும் நான் கற்றுக்கொண்ட அந்த சாராள் தக்கர் கல்லூரியைக் கடந்து செல்ல நேர்ந்தால், கையெடுத்துக் கும்பிடத்தான் தோன்றுகிறது.

கல்லூரி நாட்களில், கவிதைப் போட்டிகளிலும் கவியரங்கங்களிலும் என்னைப் பங்கெடுக்கத்தூண்டி, என்னுடைய கவிதையைத் தானே பத்திரிகைக்கு அனுப்பி வைத்து, மாணவக் கவிஞர்கள் பகுதிக்கு எழுதச்சொல்லி ஊக்கமளித்த பேராசிரியை பிச்சம்மாள் அவர்களை என் வாழ்வில் மறக்க இயலாது.

வழக்கமாக நம் சிறுவயது ஆசிரியர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுவோம். ஆனால், ஆசிரியர்களுக்கு நம்மை நினைவிலிருக்காது. ஆனால்,போன வருஷம் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது, இதற்கு மாறாக நடந்தது ஒரு சம்பவம்.

வங்கியில் என்னைப் பார்த்துவிட்டு, என் அருகில்வந்து, "நீ இங்க தானேம்மா படிச்சே..." என்று கேட்ட அவர்களை, என்னால் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. 'ஆமா, ஆனா, நீங்க யாருன்னு தெரியலியே...' என்று நான் சொல்ல, அவங்க தன்னுடைய பேரைச் சொல்லவும், எனக்குக் கண்ணில் நிஜமாகவே கண்ணீர் வந்துவிட்டது.

என்னுடய ஆறாம் வகுப்பில், என் வகுப்பு ஆசிரியையாக இருந்த அவங்க, காலத்தின் கோலத்தில் எப்படியோ மாறிப்போயிருந்தாங்க. 'ஏன் டீச்சர் இப்படி ஆகிட்டீங்க...' என்று என்னையுமறியாமல் வார்த்தைகள் வந்துவிழ, 'என் கணவரும் இறந்துட்டாங்க, குழந்தைகளும் இல்லை, இப்போ,தனியாத்தான் இருக்கேன்' என்று அவங்க சொல்ல, மிகவும் வருத்தமாகிப்போனது. அத்தனை வருத்தத்திலும், "உங்க அம்மா ரொம்ப நல்லாப் படிப்பா... அவளை மாதிரி நீயும் நல்லாப் படிக்கணும்" என்று என் மகளின் தலையில் கைவைத்து ஆசியுரைத்தார்கள். நிஜமாகவே நெகிழ்ந்துதான் போனேன்.

குருவாக இருந்து குற்றங்கள் களையவைத்து, நம்மை உருவாக்கி உலகில் உயர்வினை அடையவைத்த அத்தனை ஆசிரியப் பெருமக்களையும் இந்த ஆசிரியர் தினத்தில் வாழ்த்தி வணங்குவோம்!

வாழாமல் வந்த வரலச்சுமி!


கழுவின பாத்திரத்தை அடுப்படியில கவுத்தி வச்சிட்டு கடுங்காப்பியைக் கையில் வாங்கிக்கிட்டு கிணத்தடியில போய் உங்காந்தாங்க லச்சுமி சித்தி.

காப்பியக் குடிச்சிட்டு, உளுந்தக் கழுவி கிரைண்டர்ல போடு. அப்டியே ராத்திரி சாப்பாட்டுக்கு ரசம் வச்சி தொவையலரைச்சிரு. பாத்துக்கிட்டிருந்த சீரியல்ல இருந்து கண்ணை நகர்த்தாம கவுரியத்தை சொன்னதும், கிணத்தடியிலிருந்து எந்திரிச்சி உளுந்துக் கிண்ணத்தை எடுத்துக்கிட்டு மறுபடியும் வெளிய போனாங்க லச்சுமி சித்தி. கால்ப்பக்கம் கிழிஞ்சிருந்த சேலையில் கால்தடுக்க, தூக்கிச் சொருகிக்கிட்டு, உக்காந்து உளுந்தைக் கழுவ ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல கிரைண்டர் ஓட ஆரம்பிச்சிது.

கைகள் அனிச்சையாய் வேலை செய்தாலும் சித்தியின் கண்கள் மட்டும் எப்பவும் வெறுமையாய் வேறெதையோ வெறித்துக்கொண்டிருக்கும். சின்ன வயசில் அத்தனை பேரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டு, ஜான்சிராணி என்ற செல்லப் பெயரோடு வளையவந்த சித்தி, இன்றைக்கு வேலைக்காரியைவிடக் கேவலமாய்ப்போனது கொடுமையிலும் கொடுமை.

ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டே பிள்ளைகள்தான் பார்வதி ஆச்சிக்கு. சித்திக்குக் கல்யாணம் பேசினப்ப ஆச்சிக்கு அதில் அத்தனை இஷ்டமில்லை. மாப்பிள்ளைக்கு,பக்கத்து ஊர்தான்னாலும்,  உத்யோகம் வடக்கே நாக்பூர்ல ரயில்வே வேலைனு சொன்னாங்க. அத்தனை தூரம் மகளை அனுப்பணுமான்னு தயங்கினாங்க ஆச்சி. ஆனா, நான் வாக்குக் குடுத்துட்டேன்னு சொல்லி, ஆச்சி வாயை அடைச்சிட்டாங்க தாத்தா.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பார்த்ததோட சரி. பொண்ணு வீட்டுக்காரங்க யாரும் மாப்பிள்ளையப் பாக்கல. ஆனா, மாப்பிள்ளைப் பையன் நல்ல நிறமாயிருப்பான்னு சொல்லிக்கிட்டாங்க. நாலு நாள்ல நாக்பூர்லயிருந்து மாப்பிள்ளையோட போட்டோ வந்துது. சித்தியையும் பாப்பு ஸ்டூடியோவுக்குக் கூட்டிக்கிட்டுப்போயி, பளிச்சுன்னு தெரியிறமாதிரி படம் எடுத்து, மாப்பிள்ளை வீட்ல கொண்டுபோய் குடுத்துட்டு வந்தாங்க தாத்தா.

முகூர்த்தத்தன்னிக்குதான் மாப்பிள்ளை வந்தார். காலைல ஆறுலேருந்து ஏழரைக்குள் கல்யாணம். ஏழு மணியாகியும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரல. ஏழே காலுக்கு வந்து அரக்கப்பரக்கத் தாலிகட்டி முடிச்சாங்க. அவங்களுக்குள்ளயே ஏதோ கசமுசன்னு பேசிக்கிட்டாங்க. மாப்பிள்ளை நல்ல நிறம், சித்தி நிறம் குறைச்சல்னாலும் சிரிச்ச முகமா லட்சணமா இருப்பாங்க. மணமேடையில் மாப்பிள்ளை ஒரு தடவைகூட பொண்ணு பக்கம் திரும்பவே இல்ல. முகத்திலும் எள்ளும்கொள்ளும் வெடிக்கிற மாதிரியே இருந்தாரு.

மறுவீட்டுக்குப் போகும்போது சித்தி ஒரே அழுகை. எல்லாம் பழகிட்டா சரியாயிடும்னு பக்குவம் சொல்லி அனுப்பி வச்சாங்க பெரியவங்க. ஆனா, கல்யாணத்துக்கு மறுநாளே, வேலை இருக்குதுன்னு சொல்லி நாக்பூர் கிளம்பிப் போயிட்டாராம் மாப்பிள்ளை. சித்திக்கிட்ட பேசக்கூட இல்லையாம்னு பின்னால பேசிக்கிட்டாங்க. வந்துருவான் வந்துருவான்னு மாமனாரும் மாமியாரும் சொல்ல, மூணு வருஷம் அங்கேயே இருந்தாங்க சித்தி. ஆனா, போன மாப்பிள்ளை வரவே இல்ல.

நாலாவது வருஷம் அவருக்கும் இன்னொரு பொண்ணுக்கும் கல்யாணம்ஆகி, ரெண்டு வயசில் பிள்ளையும் இருப்பதாகக் கடிதம் வர, அதைக் கேட்ட அதிர்ச்சியில், சோறு வடிக்கும்போது பாத்திரத்தைத் தவறவிட்டு, கை காலெல்லாம் தீப்பட்ட கொப்புளத்தோட ஆச்சி வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க சித்தி.

செல்லமா வளத்த பொண்ணு வாழாம வந்து நின்ன சோகத்தில் சீக்கிரமே போய்ச் சேந்துட்டாங்க ஆச்சியும் தாத்தாவும். ஆனா, எல்லாச் சோகத்தையும் உள்ளயே பூட்டிவச்சு உருக்குலைந்துபோன சித்தி, இன்னிக்கு தம்பி வீட்டுக்குச் சம்பளமில்லாத வேலைக்காரி.

வரலட்சுமியா வாழப்போனவங்க வாழாவெட்டியா வந்ததைக்கண்டு பலர் மனசு வருத்தப்பட்டாலும், சின்ன வயசில கொஞ்ச ஆட்டமா ஆடுனா, அதான் இன்னைக்கி அனுபவிக்கிறா என்று அழுக்கு வார்த்தைகளை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் பெண்களில் சிலர்.

சனி, 26 ஜூன், 2010

மடித்துச் சுருட்டிய மஞ்சள் பை!

 


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்டத்துக்குக் குறைவிருக்காது. பஸ்சில் ஒருதடவை பர்சோடு பணத்தைப் பறிகொடுத்ததிலிருந்து, வெளியே வந்தா எப்பவும் கொஞ்சம் 'அலர்ட்டா' இருக்கிறது வழக்கம். அதுவும் பிள்ளைகளோடு போனா ரொம்பவே எச்சரிக்கையாயிருக்கிறதுண்டு.

மகளுக்கு புத்தகங்களை வாங்கிவிட்டு, பஸ்ஸுக்கு வந்து நின்னப்போ, பக்கத்தில் என் அப்பா வயசுப் பெரியவர் ஒருத்தரும் வந்து நின்னார். திரும்புகையில் ஸ்நேகமாய்ச் சிரித்தார், பதிலுக்கு நானும் சிரித்தேன். என் மகனிடம் பேச ஆரம்பித்தார். அதற்குள், கலைந்த தலையும், லுங்கியுமாக ஒரு ஆள், அவரிடம், "ஐயா, காலுக்கடியில, காசைத் தவறவிட்டிருக்கீங்க பாருங்க..." என்றான். ஒரு பத்து ரூபாயும் ரெண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளும் அவர் அருகில் கீழே கிடந்தது.

அவர் குனியுமுன்னால் என் மகன் குனிந்து எடுத்து, இந்தாங்க தாத்தா என்று அவரிடம் கொடுத்தான். அவர், என்னோடதா என்று திகைத்தாலும், சட்டைப் பையில் வாங்கி வச்சுக்கிட்டார். ஆனாலும், முகத்தில் சந்தேக ரேகை ஓடியது. அடுத்த ஐந்து நிமிஷத்தில், நான் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, இன்னொரு சின்னப்பையன் வந்து, அவர் சட்டையின் பின்னால் தெரியாதது மாதிரி, கையிலிருந்த ஐஸ்கிரீமைக் கொட்டிவிட்டான்.

அவன், அம்மா மாதிரி இருந்த பெண்மணி ஒருத்தி வந்து, "பெரியவரே, பையன் தெரியாம உங்க சட்டையில, ஐஸ்கிரீமைத் தடவிட்டான். பக்கத்துக் கடையில தண்ணி வாங்கித் தாறேன். நீங்க கழுவிக்குங்க..." என்றாள். அவர், கையிலிருந்த மஞ்சள் பையைக் கீழே வைக்காமல், கையில் கோர்த்துக்கொண்டே சட்டையை லேசாக சுத்தம் செய்துவிட்டு வந்து, மறுபடியும் எங்க பக்கத்தில் நின்றார். நான் அந்தப் பெண்ணையே கவனித்துக்கொண்டிருந்தேன்.

முதலில் கீழே காசு கிடக்குதுன்னு சொன்னவன், ஐஸ்கிரீம் கொட்டிய சிறுவன், அவன் அம்மா, கையில் பிளாஸ்டிக் கோணிப்பையுடன் ஒருவன் என்று ஒரு நாலைந்து பேர் அந்தப் பெரியவரையே கவனித்தபடி, அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தார்கள். அதற்குள் பேருந்து வந்துவிட, நாங்கள் முன்னாலும் அந்த ஆட்களில் ரெண்டுபேர் பின்னாலும் ஏறிக்கொண்டார்கள். பஸ்சில் ஏறியதும் நான் அந்தப் பெரியவரிடம் சொன்னேன், ஐயா கீழே கிடந்த பணம், மேலே கொட்டிய ஐஸ்கிரீம் எல்லாமே வேண்டுமென்றே அவங்க செய்தமாதிரி இருந்தது என்று.

அதற்கு அவர், நானும் நினைச்சேம்மா, நான் பையில ஒரேயொரு அஞ்சு ரூபாதான் வச்சிருந்தேன் பஸ்சுக்கு. இப்ப மாசத் தொடக்கம் இல்லியா, வயசானவன், பென்ஷன் பணத்தை வாங்கி, மஞ்சப் பையில சுத்தி வச்சிட்டுப்போறேன்னு நினைச்சிருப்பாங்க. ஆனா, நான் என் நண்பர் வீட்டுக்குப்போன இடத்தில அவங்க, வீட்ல காய்ச்ச ரெண்டு வாழைக்காய் கொடுத்தாங்க. அதைத்தான் பையில சுருட்டி வச்சிருந்தேன். அப்படியே பையைத் திருடியிருந்தாலும் அவங்க அநியாயத்துக்கு ஏமாந்துதான் போயிருப்பாங்க என்று சொல்லிவிட்டு, வாழைக்காயை வெளியில் எடுத்துக்காட்டிச் சிரித்தார்.

ஆக, எங்கிட்ட திருடணும்னு நினைச்சு எனக்கு இருபது ரூபாய் குடுத்துட்டுப்போயிருக்காங்க...
பஸ்ஸை விட்டு இறங்கினதும், போற வழியில பிள்ளையார் கோயில் உண்டியல்ல போட்டுட்டுப் போகணும் என்றபடி அந்தப் பெரியவர் இறங்கிப்போனார். பின்னால் ஏறிய அந்த ஆட்கள் இருக்கிறார்களா என்று திரும்பிப்பார்த்தேன். அவர்களைக் காணவில்லை. அவர்கள் கைவரிசையைக் காட்ட அடுத்த ஒருத்தர் அகப்பட்டிருப்பாரோ என்னவோ...

                                                     **************

வெள்ளி, 28 மே, 2010

தும்மலும் தீர்க்காயுசும்!


அச்சு அச்சுன்னு அடுக்கடுக்கா தும்மல் போடுவாங்க கோமதியக்கா. "அட,அபசகுனம் புடிச்சவ, தும்மிட்டாளா...இனி போன காரியம் வெளங்கினமாதிரிதான்..." என்று.
வாசல்புறத்திலிருந்து வெறுப்போடு முனங்குவாங்க அவங்க மாமியார். அக்காவுக்கு கண்ணீர் கோர்த்துக்கொள்ளும் உடனே.

வந்தா நிறுத்தமுடியாது, வருமுன்னாலும் தடுக்கமுடியாது என்ற வகையில் இந்தத் தும்மலுக்கு முக்கிய இடமுண்டு. இதிலயும், ரெட்டைத்தும்மல் போட்டா ரொம்ப நல்லதுன்னு அடுத்த தும்மலை ஆர்வமா எதிர்பார்க்கவும் செய்வாங்க சிலர்.

கல்யாணமோ, வைபவமோ ஏதாவது நடக்கும்போது யாரும் தும்மல் தும்மிடக்கூடாதுன்னு, தும்மல் வந்தா, மூக்கைத் தேச்சுவிடு. தும்மல்போட்டுராதன்னு எப்பவும் எல்லாருக்கும் எச்சரிக்கை குடுப்பாங்க எங்க பெரியம்மா.

ஆனா, தும்மல் என்பது நாம, உடலுக்கு ஒவ்வாத பொருட்களைச் சுவாசிக்க நேர்ந்தால் அதைக் கண்டுபிடித்து உடனே வெளியேற்றும் அருமையான டெக்னிக் என்பது மருத்துவம் தெரிஞ்சவங்க சொல்ற விஷயம். சிலர் அதிகாலையில அடுக்கடுக்கா தும்மல்போடுவாங்க. உறக்கத்தின்போது உடலில்சேர்ந்த தேவையற்ற நீரை அதிகாலையில் உடம்பு வெளியேற்றும் முயற்சியே அதுவாகும். இது நல்ல உடம்புக்கான அறிகுறிதான் என்றும் சொல்லுவாங்க சிலர்.

சின்னக்குழந்தைங்க தும்மும்போது "நூறு" ன்னு சொல்லி, நூறு வயசு வாழணும் என்று குறிப்பாக வாழ்த்துவாங்க எங்க பக்கத்துப் பெரியவங்க. தும்முகிற அந்த வினாடியில் இதயம் நின்று மறுபடியும் இயங்கத் தொடங்குமாம். அதனால்தான் அந்த வாழ்த்து. தான் பெற்ற பிள்ளைகள் பேரன் பேத்தியெடுத்திருந்தாலும், அந்தப் பிள்ளைகள் தும்மும்போதும் பெற்றதாய் உட்காந்து, நூறுன்னு வாழ்த்துவதைப்பார்க்க மனசு நெகிழத்தான்செய்யும்.

இங்கேயும் ஒரு தும்மல் காட்சி...வள்ளுவரின் வார்த்தைகளில் எப்படி அழகாகியிருக்குதுன்னு பாருங்க.

"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"

தலைவன் தும்முகிறான். உடனே அவனை வாழ்த்துகிறாள் தலைவி. ஆனால், வாழ்த்திய அடுத்த நிமிடமே, நான் இங்கே அருகிலிருக்கும்போது,வேறு யார் உங்களை நினைத்ததால் தும்மினீர்கள்?" என்று கேட்டு ஊடல்கொண்டு அழத்தொடங்குகிறாள் அவள்.

அடுத்து ஒரு சமயம், அவள் அழுதுவிடுவாளோ என்ற எண்ணத்தில், வந்த தும்மலை அடக்குகிறான் அவன். ஆனால் அவளோ, "உனக்கு வேண்டியவர்கள் நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாதென்று வந்த தும்மலை அடக்குகிறாயோ?" என்று வருந்தி அழுகிறாள்.

"தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"

ரெண்டே ரெண்டு வரிகளில் ரெண்டுபேரோட மன உணர்வுகள் எவ்வளவு அழகா வெளிப்பட்டிருக்கு பாருங்க. இதுமாதிரி இன்னும் பல உணர்வுகளை வள்ளுவர் வார்த்தைகள்ல படிக்கணும்னா, காமத்துப்பால் புலவி நுணுக்கம் பகுதியில் படிக்கலாம்.

*********