அசையாத சொத்துன்னு எங்கிட்ட இந்த பத்துக்குப் பத்து ஓட்டுவீடும், ஒழுகுற அடுப்படியும்தான் இருக்கு...நா இருக்கிறவரைக்கும் அத உங்க யாருக்கும் குடுக்கப்போறதில்ல...என்ன யாரு கடேசிவரைக்கும் வச்சிப் பாத்துக்கிறீகளோ அவுகளுக்கு அதக் குடுக்கலாம்னு இருக்கேன். அது போக,அசையிற சொத்துன்னு இருக்கிற அஞ்சாறை இப்பப் பகுந்து குடுக்கிறேன்... யாரும் மொகஞ்சுளிக்கக்கூடாது அதான் முக்கியம்...
அம்மா சொல்லச்சொல்ல ஆர்வம் பெருகியது தங்கம்மாப் பாட்டியின் பிள்ளைகளுக்கு. களையெடுத்து, நாத்து நட்டு, கிடுகு முடைஞ்சு, கூடைபின்னி, வேப்பமுத்துப் பொறுக்கி, அதை வித்துக்காசாக்கி, இப்படி, எப்பாடுபட்டாவது
சிறுவாடு சேக்கிறதில் அம்மா கில்லாடி. அப்பப்ப, சேத்துவச்ச காசில பெருசா ஒரு டொகை இருக்கும் என்று மனசில் நினைச்சபடி, அம்மாவின் மொகத்த ஆர்வமாப் பாத்தா ஒரே மக அன்னம்.
ஏதோ இதுவரைக்கும், பாலை வித்தும், முட்டைகளை வித்தும், அப்பப்ப ஆட்டை வித்தும், விருந்து விசேஷம், மருந்து மாத்திரையின்னு பொழைப்ப நடத்திட்டேன். இனிமே அதெல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு, எல்லாத்தையும் உங்ககிட்ட, பிரிச்சுக் குடுக்கப்போறேன்.
நம்ம செம்மறி ஆட்டையும், ரெண்டு குட்டியையும், அத்தோட நா வளத்த நாட்டுக்கோழி பனிரெண்டையும் அன்னம் எடுத்துக்கட்டும். வெள்ளாட்டையும் மூணு குட்டியையும் குமரேசன் வச்சிக்கட்டும். பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் பால்த்தொரைக்குக் குடுக்கிறேன். இனிமே, என்ன யாரு வச்சிப்பாத்துக்கிறதுன்னு பேசி முடிவுபண்ணின பிற்பாடு, மத்தவிஷயங்கள முடிவு பண்ணிக்கிடலாம்...என்று, பாட்டி சொல்லிமுடிக்கவும், வள்ளுன்னு விழுந்தா அன்னம்.
ஆம்புளப் புள்ளன்னா அதுக்குத் தனிப் பவுசுதான்...என்னன்னாலும் பொட்டச்சிதானன்னு ஆட்டையும் கோழியையும் குடுத்து கைகழுவி உட்டுட்ட...எம்புருஷன்கிட்டபோய்ச்சொன்னா, இம்புட்டுத்தானா உன்னோட பொறந்தவீட்டுப் பவுசுன்னு சிரிப்பாச்சிரிப்பாரு...இதெல்லாம் நீங்களே வச்சிக்கங்க...ஒண்ணும் வேணாம் எனக்குன்னு, கண்ணக் கசக்கிக்கிட்டு ஒட்டுத்திண்ணையிலபோயி உக்காந்தா அன்னம்.
ஏதோ, அடிச்சுப்புடிச்சுக் கேட்டீகளேன்னு, இருக்கிறதையெல்லாம் உங்க மூணுவேருக்கும் பங்கு வச்சுக்குடுத்துட்டேன். என்னோட சக்திக்கு இதுவே பெருசுதான். இதுக்கும் சடைஞ்சுகிட்டா நான் எங்கதான் போறது? என்று மககிட்ட கேட்டுட்டு, பெத்ததுலேருந்து, ஒத்தயா நின்னு,உங்களப் பாத்துப்பாத்து வளத்த என்ன யாரு வச்சிப் பாக்கப்போறீங்கன்னு கேட்டதுக்கு இதுவரைக்கும் யாருமே பதிலே சொல்லல...
யாருக்குமே என்ன வச்சுப் பாத்துக்க விருப்பமில்ல...இல்லயாய்யா? என்றபடி ரெண்டு மகன்களையும் ஏறிட்டுப் பாத்தா தங்கம்மாப் பாட்டி. சந்தையிலபோயி யாவாரியக் கூட்டிட்டுவந்து, மாட்டையும் ஆட்டையும் விலை பேசணும் என்று பேசிக்கொண்டிருந்த அண்ணனும் தம்பியும் ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டுப் பேச ஆரம்பிச்சாங்க.
இல்லம்மா, நாங்களே பட்டணத்துல ஒண்டுக்குடித்தனத்துல இருக்கோம்... உன்னயும் அங்க கூட்டிட்டுப்போயி, வச்சிப் பாத்துக்க வசதிப்படாது. எங்களால முடிஞ்சது இருநூறோ முன்னூறோ மாசாமாசம் உனக்கு
அனுப்பிவச்சிர்றோம். நீ இங்கயே இருந்துக்க...தங்கச்சி ஒன்னப் பாத்துக்கிரட்டும். இந்த வீட்ட வேணும்னாலும் நீ அவளுக்கே குடுத்துரு...என்று, ஆளவிட்டாப்போதும் என்ற தோரணையில் அவசரமாச் சொன்னான் குமரேசன். அண்ணனுக்கு ஒத்து ஊதிவிட்டு, அவனுடன் சேர்ந்துகொண்டான் கதிரேசன்.
கண்ணக் கசக்கிக்கிட்டிருந்த அன்னத்துக்குக் கொஞ்சம் சந்தோஷம் வந்திருச்சு. அண்ணே, அம்மா இன்னும் நடையும் உடையுமாத்தான இருக்கு. அதனால, இந்த வீட்லயே இருக்கட்டும். நீங்க ரெண்டுபேரும், மாசாமாசம் ஆளுக்கு ஐநூறா அனுப்பிவச்சிருங்க. நா தினமும் வந்து அம்மாவப் பாத்துக்கிடுதேன், என்றபடி ஆட்டையும் கோழிகளையையும் பிடிச்சிக்கிட்டு, உள்ளூரில் தனக்கு இன்னொரு வீடும் கிடைக்கப்போகிற சந்தோஷத்தில், அடுத்த தெருவிலிருந்த தன் வீட்டுக்குக் கிளம்பிப்போனாள் அன்னம்.
அசையிற சொத்தான ஆடு மாட்டுக்குக் குடுத்த மதிப்பைக்கூட, தன் பிள்ளைகள் தனக்குக் குடுக்கலியேன்னு நினைத்து மருகியபடி, இருட்டியது கூடத் தெரியாம ஓட்டுவீட்டுத் திண்ணையில் ஒடுங்கிக் கிடந்த தங்கம்மா பாட்டி, மனசுகேக்காம, விறுவிறுன்னு எழுந்துபோயி வெளக்கேத்திவச்சிட்டு, நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும்...புள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டும்னு நெனைச்சுக்கிட்டு, தேவாரப் புத்தகத்த எடுத்துவச்சு, வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தாள்.
*********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக