திங்கள், 22 டிசம்பர், 2008

உருளைக்கிழங்கு புளிக்குழம்பு

கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பாகற்காய்ன்னு பல காய்களை வச்சு புளிக்குழம்பு செய்திருப்பீங்க. புதுசா, இந்த உருளைக்கிழங்கு புளிக்குழம்பையும் செய்து பார்த்தீங்கன்னா கட்டாயம் பிடிச்சுப்போகும் உங்களுக்கு.

இவையெல்லாம் வேண்டும்...

உருளைக்கிழங்கு - 1 பெரியதாக

சிறிய வெங்காயம் - 5 அல்லது 6

புளி - எலுமிச்சை அளவு

வத்தல் தூள் - 1 டீ ஸ்பூன்

மல்லித்தூள் -2 டீ ஸ்பூன்

சாம்பார்ப்பொடி - 1 டீ ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

வெல்லம் - பாக்கு அளவு

தாளிக்க...

எண்ணெய் - தேவையான அளவுக்கு

கடுகு, வெந்தயம் _ தலா 1/2 ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

இதுபோலச் செய்யணும்...

சிறிய வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை விரல் அளவு துண்டுகளாக (ஃபிங்கர் சிப்ஸுக்கு நறுக்குவதைவிட கொஞ்சம் பருமனாக)நறுக்கிக்கொள்ளவும்.புளியைக் கரைத்து அதனுடன் மஞ்சள்பொடி, வத்தல், மல்லித்தூள், சாம்பார்ப்பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு,கடலைப்பருப்பு, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கவும். கிழங்கு வதங்கியதும் கரைத்துவைத்த புளி,மசாலாக் கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். எடுத்துவைத்திருக்கும் வெல்லத்தைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து குழம்பு சற்று கெட்டியானதும் இறக்கவும்.

தேவையென்றால், கடைசியில் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டும் இறக்கலாம்.

புதன், 17 டிசம்பர், 2008

அமீரகத் தலைநகரில் அழகின் ஆலயம் - 2

மசூதியின் தரைப்பரப்பெங்கும் வண்ணமயமான அழகு. பலவண்ண சிறுசிறு மார்பிள் கற்களைச் சேர்த்து தரையெங்கும் அமைத்திருந்த பூக்களும் இலைகளும் மிகவும் அழகாக இருந்தது.

அவற்றில் சில இதோ...


மசூதியைச் சுற்றி வருகையில் ஒவ்வொருபுறமும் ஒவ்வொரு அழகாய்த் தெரிந்தது. ஆனால்,சில இடங்களில், இன்னமும் பணிகள் முழுமையடையாமலும் தென்பட்டது....நீரில் பிரதிபலிக்கும் நெடிய தூண்களின் அழகு...மசூதியின் உயர்ந்த கோபுர அமைப்பில் ஒன்றும் அருகில் நிலாவும்...வி.ஐ.பி க்களுக்கான சிறப்பு வாயில்...மசூதியின் உட்புறச் சுற்றுப்பாதை...மசூதிக்கு வெளியே, இன்னொரு சிறிய மசூதியில் மன்னர் ஷேக் செய்யத் அவர்களை அடக்கம் செய்த இடம் உள்ளது. இங்கே புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.அதனால் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட அந்த மசூதியின் புகைப்படம்...மாபெரும் கனவுகளுடன், அமீரகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மன்னர் ஷேக் செய்யத் அவர்களின் நினைவிடத்தையும் தரிசித்துவிட்டு அபுதாபி நகரத்திற்குப் புறப்பட்டோம்.

அமீரகத் தலைநகரில் அழகின் ஆலயம் - 1

அபுதாபி நகருக்குள் நுழையுமுன்னதாகவே சாலைவழியில் கண்ணைக் கவரும் அபுதாபியின் கிராண்ட் மாஸ்க் ( Grand Mosque)எனப்படும் ஷேக் செய்யத் மசூதியைப் பலமுறை காரில் இருந்தே பார்த்துக்கொண்டு சென்றதுண்டு.

இதோ,தொலைவிலிருந்து...சமீபத்திய விடுமுறையின்போது அதை அருகில் போய் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது போங்க...ஓவ்வொரு கல்லிலும் கலைநயமும் காசின் நயமும் நல்லாவே தெரியுது.

கொஞ்சம் அருகிலிருந்து...கிட்டத்தட்ட 22,000 சதுரமீட்டர் பரப்பில், 30,000 பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் அளவுக்கு மிகப்பெரியதாக அமைந்துள்ளது மசூதி. 70 மீட்டர் உயரமுள்ள நான்கு கோபுர அமைப்புகளுடன் மிகப் பிரம்மாண்டமாய் அமைந்திருக்கும் இந்த மசூதியின் அருகிலேயே, இம்மசூதியைக் கட்டிய ஷேக் செய்யத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அழகிய இம்மசூதியை தொழுகை நேரங்கள் தவிர மற்றெல்லா நேரத்திலும், பிற மதத்தவரும் சென்று பார்க்கலாம் என்று கூறினார்கள். நாங்கள் போனபோது வெளிநாட்டவர்கள்தான் அதிகம் தென்பட்டனர்.மின்னொளியில் மசூதியின் தோற்றம்...
நுழைவாயிலில் தென்பட்ட பூவேலைப்பாடுகள்...உட்புற நுழைவாயிலொன்று...உள்ளே நுழைந்ததும் கண்ணைக்கவர்ந்த அழகிய தூண்கள்...
அரபு நாட்டின் அடையாளமான ஈச்சமரத்தைப் போன்று இந்தத் தூண்கள் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், எனக்கென்னவோ தூணின் மீது தாமரையைக் கவிழ்த்துவைத்ததுபோலத் தெரிந்தது.நீங்களே பாருங்களேன்...அரபி வாசகங்களுடன் உட்புறச் சன்னல்கள்...விதானத்தில் தெரிந்த சித்திரவேலைப்பாடுகள்...ஒளியின் உபயத்தால் தங்கமாக மின்னும் விதானம்...

திங்கள், 17 நவம்பர், 2008

ஐயோ...அப்பா...ஐயப்பா!


வரமளிப்பதில் வள்ளலான ஈசனுக்கு அன்றைக்கும் ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. பஸ்மாசுரனின் தவத்தில் மகிழ்ந்து, அதை மெச்சிய சிவபெருமான், அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்று வரமளித்த கையோடு, வரத்தைச் சோதிக்க வரமளித்த சிவனையே முதலாவதாகத் தேர்ந்தெடுத்தான் பஸ்மாசுரன்.

ஆலகாலமுண்ட சிவனுக்கே அவன் செயலைக் கண்டு அச்சம் வர, அரவணைப் பெருமானைத் துணைக்கழைத்தார் சிவபெருமான். செய்வது என்னவென்றறியாது சினம் கொண்டு சிவனைத் தேடிய பஸ்மாசுரன் முன் அழகேயுருவான மோகினியாய்த் தோன்றினார் மேகவண்ணன்.

மின்னலிடை மோகினியின், கண்ணசைவில் மயங்கினான் அசுரன்.
தங்க நிற மங்கையவள் தன் தளிருடல் அசைத்து ஆடத்தொடங்க, மோகத்தில் அசுரனும் மகுடிக்கு மயங்கிய அரவம்போல ஆட ஆரம்பித்தான். ஆடலின் நடுவில் தலைமேல் கைவைத்து அபிநயித்த மோகினியைக் கண்டு, தானும் அதுபோல அபிநயிக்க, பேராசையால் பெற்ற வரத்தினால் தானே புகைந்து சாம்பலானான் பஸ்மாசுரன்.

அசுரனை மயக்கி அழிக்க, அச்சுதன் கொண்ட மோகினியின் உருவத்தில் அரவம் அணிந்த ஈசனும் மயங்கி அவள் கரமலர் பிடிக்க, அங்கே உருவானார் அரிகரபுத்திரனான ஐயப்பன்.

அழகே உருவான அக்குழந்தையைக் கண்டத்தில்(கழுத்தில்) ஒரு மணிமாலையுடன், காட்டில் ஒரு மரத்தடியில் வைத்து, அங்கே வேட்டையாடவந்த பந்தளமன்னனின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்கச்செய்தனர் கடவுளர் இருவரும்.
அதுவரை பிள்ளைப்பேறில்லாதிருந்த பந்தள மன்னனும், பசித்திருந்தவன் முன் அமுதமே கிடைத்தாற்போல, பெறற்கரிய அப்பிள்ளையை எடுத்துக்கொண்டு அரண்மனை சென்றான். மணிகண்டன் எனப் பெயரிட்டு மகிமையோடு அப்பிள்ளையை வளர்த்துவந்தான் மன்னன் ராஜசேகரன்.

அப்போது, மன்னனின் மனைவியும் கருவுற்று மகனொருவனை ஈன்றெடுக்க, சொந்த மகனின் அரியணையை வந்த மகன் பறித்துவிடுவானோ என்ற அச்சம் எழுந்தது மன்னனின் மனைவிக்கு. அரண்மனை வைத்தியனின் உதவியுடன், ஆறாத வயிற்றுவலி வந்ததாய் நடித்த மன்னனின் மனைவி, வலிக்கு மருந்தாகப் புலிப்பால் கொண்டுவரும்படி அரிகர புத்திரனை ஆரண்யம் அனுப்பினாள்.

தாயின் நோய் தீர்க்க, தந்தை தடுத்தும் கேளாமல் கானகம் சென்ற ஐயப்பன், காட்டில் மகிஷி எனும் அரக்கியை வதம் செய்துவிட்டு, தேவர்களின் தலைவனான இந்திரனே புலியாகவும், தேவர்களே புலிக்கூட்டமாகவும் மாற, புலியின்மேல் அமர்ந்தபடி அரண்மனைக்கு வந்தாராம் மணிகண்டன்.

புலியின்மேல் அமர்ந்துவந்த தன் புத்திரனை நோக்கி வியப்புக்கொண்ட பந்தளமன்னன்,
"என் மகனாய் வளர்ந்து என்னை மகிமை செய்த நீ யார்?"

என்று வினவினாராம்.

அதற்கு மணிகண்டன்,

"தந்தையே, தேவர்களை வதைத்துவந்த மகிஷி எனும் அரக்கி, சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறக்கும் மகனால்மட்டுமே தனக்கு அழிவு நேரிடவேண்டும் என்று படைப்புக்கடவுளாகிய பிரம்மாவிடம் பெருவரம் பெற்றிருந்தாள். வரம் பெற்ற கர்வத்தினால், அவள் செய்த இம்சை தாளாமல் தேவர்கள் சிவனிடமும், விஷ்ணுவிடமும் முறையிட, அவ்விருவர் அருளால் படைக்கப்பட்டவன் நான்"

என்னும் உண்மையை மன்னனுக்குச் சொன்னாராம்.

ஐயனின் பிறவிப்பெருமையை உணர்ந்த மன்னனும் மக்களும், பந்தளநாட்டின் அரியணையேற்கத் திருவுளம் கொள்ளுமாறு வேண்ட, பந்தள மன்னனிடம் தன் பிறவியின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும்,தான் கானகம் சென்று தவம் செய்யப்போவதாகவும் சொன்னாராம் மணிகண்டன்.

பிள்ளைப்பாசத்தினால் வருந்திய பந்தளமன்னன்,

"அன்போடு வளர்த்த நான் இனி எவ்வாறு உன்னைவந்து காண்பது?"

என்று ஐயனாகிய மகனை வினவினாராம்.

"கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, நாற்பத்தொரு நாட்கள் நேர்த்தியாய் விரதமிருந்து என்னைக்காணவேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்துடன் வரும் யாரும், காடுமலை தாண்டிவந்து என்னைத் தரிசிக்கலாம்"

என்று மன்னனாகிய தந்தையிடம் சொன்னாராம் மணிகண்டன்.

பந்தள மன்னனும், ஆண்டுக்கொருமுறை மகனைக் காண, அவருக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டி, தலைச்சுமையாகச் சுமந்து, கல்லும் முள்ளும் காலிலே தைக்க, "ஐயோ, அப்பா" எனப் புலம்பியபடியே கானகம் தாண்டி, கடும் மலையேறிச் செல்வாராம். அதனாலேயே சபரிமலை வாசனுக்கு ஐயப்பன் என்று பெயர் வந்தது என்றும் செவிவழிக் கதையாகக் கூறுவர் மக்கள்.

நெய்த் தேங்காய் சுமந்து, ஐயனைக் காண, ஆண்டுதோறும் மக்கள் மாலையிடும் இப்புனிதமான கார்த்திகை மாதத்தில், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, எங்களைக் காத்து ரட்சிக்க வேணுமென்று நாமும் அரிகரசுதனாகிய ஐயன் ஐயப்பனை வேண்டி வணங்குவோமாக.

***********

புதன், 12 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(5)

சத்தியவதியின் புத்திரர் இருவர்

சாந்தனு மன்னனுக்கும், மீனவப்பெண் சத்தியவதிக்கும் சித்திராங்கதன்,விசித்திரவீர்யன் என்று புத்திரர் இருவர் பிறந்தனர். மகன்கள் இருவர் பிறந்த சில வருடங்களிலேயே மன்னன் சாந்தனு மரணமடைய, இளவரசர்கள் இருவரும் சிறியவர்களாக இருந்த காரணத்தால் பீஷ்மரே நாட்டின் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தார். சிலவருடங்களில் மன்னனின் மூத்தமகன் சித்திராங்கதன் அஸ்தினாபுரத்து அரியணையில் அமர்ந்தான்.

மிகுந்த பராக்கிரமத்துடன் ஆட்சிபுரிந்த சித்திராங்கதனைப் பற்றிக் கேள்விப்பட்ட அதே பெயருடைய கந்தர்வ மன்னன் ஒருவன் போட்டியினால் எழுந்த பகையின் காரணமாய், தன் பெயரைக்கொண்ட அரசனுடன் போரிட்டு அவனைக் கொன்றான். தனக்கு வாரிசெதுவும் இல்லாமல் மன்னன் சித்திராங்கதன் மரணமடைய அவனுடைய சகோதரனான விசித்திரவீர்யன் அரியணையேறினான்.

அரியணையிலமர்ந்தாலும் வயதில் இளையவனாயிருந்த காரணத்தால், பீஷ்மரின் ஆலோசனைப்படியே விசித்திரவீர்யன் நாட்டைக் கவனித்துவந்தான். அரசனாயிருந்த தம்பிக்கு மணமுடித்துவைக்க ஆசைப்பட்டார் பீஷ்மர்.

காசி நாட்டு மன்னன், அழகில் சிறந்த தன் மகள்கள் மூவருக்கு சுயம்வரம் நடத்துவதை அறிந்து அங்கு சென்றார் பீஷ்மர். பீஷ்மரின் பிரம்மச்சரிய சபதத்தை அறிந்த அனைவரும்,

"மகா பிரம்மச்சாரியான இவர், தானும் ஒரு மணமகன் போல இங்கு வந்திருக்கிறாரே..."

என்று ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டார்கள்.

அப்போது பீஷ்மர்,

"காசி மன்னா, நான் என் சகோதரனான விசித்திரவீர்யனுக்காகவே இச்சுயம்வரத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். வழிவழியாக,காசி நாட்டு இளவரசிகளை அஸ்தினாபுர அரச குடும்பத்தினருக்குத்தான் இதுவரை மணமுடித்துக்கொடுப்பது வழக்கம். இந்த நெறிமுறையை மாற்றி நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த சுயம்வரத்தை நான் அனுமதிக்கமாட்டேன்"

என்றுகூறி,

அங்கே குழுமியிருந்த மன்னர் அனைவரையும் போரிட்டு வென்று இளவரசிகள் மூவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டுவந்தார்.

அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற அப்பெண்கள் மூவரில், மூத்தவளான இளவரசி அம்பா, தான் சௌபலநாட்டு மன்னன் சால்வனை சுயம்வரத்தில் கண்டு,மனப்பூர்வமாக அவனுக்கு மாலையிட விரும்பியதாகக் கூற, அவளை உரிய பாதுகப்புடன் சால்வனின் நாட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு, அம்பிகாவையும், அம்பாலிகாவையும் தன் சகோதரன் விசித்திரவீர்யனுக்கு மணமுடித்துவைத்தார் பீஷ்மர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக, திருமணம் முடிந்த சிறிதுகாலத்திலேயே மன்னன் விசித்திரவீர்யனும் கொடிய காசநோயினால் மக்கட்செல்வம் இன்றி இறந்துபோனான். அன்னை சத்தியவதியோ வாரிசின்றிப்போன தன் வம்சத்தை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தாள்.

செவ்வாய், 11 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(4)

தந்தைக்கு மணமுடித்த தனயன்!

அன்றும் வழக்கம்போல் காட்டில் வேட்டையாடச் சென்றான் மன்னன் சாந்தனு. நீண்டநேரம் வேட்டையாடிக் களைத்தவன் யமுனையாற்றின் கரைக்கு வந்தான். அப்போது அங்கே படகோட்டிக்கொண்டிருந்த கண்ணிற்கினிய மங்கை ஒருத்தியைக் கண்டான். கண்டதும் காதலுற்றான்.

மீனவப்பெண்ணான அவள்பெயர் சத்தியவதி என்பதை அறிந்துகொண்ட மன்னன், அவளின் தந்தையைச் சந்தித்துப்பேச ஆவல்கொண்டான். மங்கை அவளுடன் மன்னனும் வந்ததுகண்டு அப்பெண்ணின் தந்தையான மீனவர் தலைவன், மன்னனுக்கு பழங்களும் பாலும் தந்து பக்குவமாய் உபசரித்தான்.

உபசரிப்பில் மகிழ்ந்தமன்னன், மீனவன் மகளை மனைவியாக்கிக்கொள்ள நினைக்கும் தன் ஆசையைத் தெரிவித்தான். அது கேட்ட அப்பெண்ணின் தந்தையும் மனம் மகிழ்ந்தான். மன்னனை மருமகனாக அடைய மனம் கசக்குமா என்ன? தன் சம்மதத்தைத் தெரிவித்த பெண்ணின் தந்தையனவன், மன்னனிடம் ,

"மன்னா, என் மகளை உங்களுக்கு மணமுடித்துத்தர எனக்கு சம்மதமே. ஆனால், என் மகளுக்குப் பிறக்கும் மைந்தர்களே உங்களுக்குப்பின் அரியணை ஏறவேண்டும். இதற்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் என் மகளை மணமுடித்துத் தருவேன்" என்று கூற,

மணிமுடிக்குக் காத்திருக்கும் மகன் தேவவிரதனை நினைத்து உள்ளம் வருந்தியவனாக அரண்மனை திரும்பினான் மன்னன்.

மன்னனின் மனவருத்தத்திற்கும் முகவாட்டத்திற்கும் காரணம் புரியாத மைந்தன் தேவவிரதன், ஒற்றர்கள்மூலம் நடந்ததை அறிந்தான். தந்தையின் துயரம்போக்க, தானே மீனவர் தலைவனைச் சென்று சந்தித்தான். தந்தைக்கு அவர் மகளைத்தருமாறு தேவவிரதன் கூற, தன் விண்ணப்பத்தைத் தெரிவித்தான் மீனவர் தலைவன்.

தந்தையின் மகிழ்ச்சிக்காகத் தன் அரியணையை விட்டுத்தருவதாக உறுதியளித்த தேவவிரதனை நம்பாத மீனவர் தலைவன்,

" அரியணைப்பதவியை இளவரசனாகிய நீங்கள் விட்டுத் தந்தாலும், உங்களுக்குப் பிறக்கும் சந்ததியினர் விட்டுத் தருவார்களா?"

என்று வினா எழுப்ப, தந்தையின் விருப்பத்திற்காக, தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ்வேன் என்றும் விண்ணையும் மண்ணையும், வானகத்து தேவர்களையும் சாட்சியாகக்கொண்டு சபதம் செய்தான். செயற்கரிய சபதம் செய்த தேவவிரதனை மலர்மாரி பொழிந்து வாழ்த்தினர் தேவர்கள். "இன்றுமுதல் நீ பீஷ்மன் என்று அழைக்கப்படுவாய்" என்று அசரீரி எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. பீஷ்மன் என்ற பெயருக்கு 'பிறரால் செயற்கரிய செயல்களைச்(சபதம்) செய்து முடிப்பவன்' என்பது பொருளாகும்.

மகனின் சபதம் கேட்டு மனம் நெகிழ்ந்தான் சாந்தனு மன்னன். தன்னலம் துறந்த மகனைச் சிறப்பிக்க,

"நீ விரும்பி உயிர் நீத்தாலன்றி உன் உயிரை யாராலும் பறிக்க இயலாது"

என்ற மாபெரும் வரத்தை மகனுக்கு அளித்தான்.

பின்னர்,மகன் பீஷ்மரின் விருப்பப்படியே சத்தியவதியை மணந்துகொண்டு மனநிறைவோடு வாழ்ந்தான் மன்னன் சாந்தனு.

திங்கள், 10 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(3)

தேவவிரதன் வந்தான்...

மன்னன் சாந்தனு அன்றும் வழக்கம்போல் கங்கைக்கரைக் காட்டில் வேட்டையாடச் சென்றிருந்தான். அப்போது கங்கையின் வெள்ளத்தைத் தன் அம்புகளால் அணைகட்டித் தடுத்திருந்த இளைஞனொருவனைக் கண்டான்.

"என்ன அற்புதமான திறமை" என்று அதிசயித்திருந்தவேளையில்,
கங்காதேவி மன்னன் முன் தோன்றினாள்.

"மன்னா, தங்களை அதிசயிக்கச்செய்தவன் வேறுயாருமல்ல... உங்கள் மகன் காங்கேயன் தான். கலைகளிற் சிறந்த இவன் தேவகுரு பிரஹஸ்பதியிடம் அரசியலையும், வசிஷ்டரிடம், வேதங்களையும், பரசுராமரிடம் வில்வித்தையையும் கற்றவன். இவனை வெல்ல யாருமிலாத அளவுக்கு நிகரில்லாதவனாக இவனை வளர்த்துள்ளேன்"

என்றுகூறித் தன் மகனை மன்னன் சாந்தனுவிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தாள் கங்காதேவி.

மகனைக் கண்டு மகிழ்ந்தான் சாந்தனு மன்னன். பேருவகையுடன் தன் மகனை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்தான். அருமை மகனுக்கு ஆளும் வழிவகைகளைக் கற்றுக்கொடுத்து அவனை நீதியும் நேர்மையும் உடையவனாக வளர்த்தான் மன்னன் சாந்தனு.

அன்னையைக் காணாத குறையைத் தவிர வேறெந்தக் குறையுமின்றி வளர்ந்தான் தேவவிரதன். அவனுடைய நற்பண்புகளால் மக்கள் மனதில் இடம்பெற்றான். உரிய பருவத்தில் தன் மகனை நாட்டின் இளவரசனாக அறிவித்தான் மன்னன் சாந்தனு.

சனி, 8 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(2)

அஷ்ட வசுக்களின் சாபவிமோசனம்

தேவர்களின் தலைவனான இந்திரனின் உதவியாளர்களாக அஷ்டவசுக்கள் எனப்பட்ட எண்மர் இருந்தனர். தாரா, துருவன்,சோமன், ஆகாஷ்,அனலன், அனிலன்,பிரத்யுசன், பிரபாசன் என்ற அவர்கள் அனைவரும் ஒருமுறை மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்தனர். அங்கே கேட்டதெல்லாம்தரும் காமதேனுவின் மகவான நந்தினி எனும் பசுவைக் கண்டு வியந்தனர்.

வசுக்களில் இளையவரான பிரபாசன் என்பவர்,

"துறவியான வசிஷ்ட முனிவருக்கு இந்த வரம்தரும் பசு எதற்கு?"

என்றுகூற, அதனை மற்றவர்களும் ஆமோதித்து, நந்தினிப்பசுவை தேவலோகத்திற்குக் கொண்டுசெல்ல முடிவுசெய்து அதனை ஆசிரமத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுவிட்டனர்.

வந்தார் வசிஷ்டர்... கொண்டார் கோபம்...

"அஷ்டவசுக்களும் பூவுலகில் மனிதர்களாகப் பிறக்கட்டும்"

என்று சாபமிட்டார்.
சாபமுற்றதை அறிந்து வசுக்கள் கலங்கி,

" மாதவ முனிவரே, எங்களை மன்னியுங்கள். அறியாமையால் பிழை செய்தோம். அதைப் பொறுத்தருளி, விமோசனம் தரவேண்டும்"

என்று அவர் பாதத்தில் விழுந்து வேண்டினார்கள்.

மனம் இரங்கிய முனிவர்,

"இந்தக் குற்றத்தைச் செய்யத்தூண்டிய காரணத்தால் பிரபாசனே இதற்குப் பொறுப்பாளனாகிறான். அதனால் அவன் பூவுலகில் நீண்டநாள் மனிதனாய் வாழவேண்டும். மற்ற எழுவரும் அவனுக்குத் துணை நின்றதால் பூவுலகில் பிறந்தவுடன் சாப விமோசனமடைவீர்கள்"

என்று அருள்புரிந்தார்.

சாபம் பெற்ற எண்மரும் கங்காதேவியிடம் வந்து, சாபமடைந்த எங்களுக்குத் தாயாகித் தயைபுரியவேண்டும் என்று வேண்டிட, கங்கையும் தாயாகி, மன்னன் சாந்தனுவின் குழந்தைகளாய்ப் பிறந்த எழுவரை நீரில் வீசிக்கொன்று, எட்டாம் குழந்தையாய்ப் பிறந்த பிரபாசனை இளைஞனாகும்வரை தானே வளர்க்கத் தன்னோடு அழைத்துச் சென்றாள்.

அஷ்ட வசுக்களின் ஆசை அவர்களை மனித உயிராகப் பிறக்கவைத்தது. கங்கையின் அருளால் அஷ்டவசுக்கள் சாபவிமோசனம் பெற்று மீண்டனர்.

புதன், 5 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(1)

1.கங்கை கொண்டான் சாந்தனு
***************************************

விஸ்வாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த மகளும், கண்வ முனிவரின் வளர்ப்பு மகளுமான சகுந்தலைக்கும் மன்னன் துஷ்யந்தனுக்கும்,பிறந்தவன் மாமன்னன் பரதன்.
அவனுடைய மாட்சிமை தாங்கிய பரதவம்சத்தில், பின்னர் வந்த மன்னன் பிரதீபனுக்கும் அவன் மனைவி சுனந்தாவுக்கும் மகனாகப் பிறந்தவன் மன்னன் சாந்தனு. அஸ்தினாபுர அரியணையிலமர்ந்து ஆட்சிசெய்துவந்த அவன் மிகுந்த அழகும், சிறந்த வீரமும், மேன்மையான குணங்களும் உடையவனாக விளங்கினான்.

மன்னன் சாந்தனு ஒருநாள் வேட்டைக்குச் செல்கையில், தாகம் அதிகரிக்கவே அருகிலிருந்த கங்கை நதியில் சென்று நீரருந்துகையில் அங்கே அழகே உருவான கன்னியொருத்தியைக்கண்டான்.கண்டதும் காதல் கொண்டான்.

"கண்ணிறைந்த பெண்ணழகியே, நீ யார்? எங்கிருந்து வந்தாய்?

என்று வினவிய அவன்,

"அஸ்தினாபுரத்தின் அரசனான என்னை மணம் செய்துகொள்ள சம்மதமா?"

என்று வினவினான்.

அதற்கு அந்தப்பெண்,

"அரசே, நான் யார் என்று கேட்காமலும், நான் செய்யும் செயல்களை ஏனென்று கேட்டுத் தடைசெய்யாமலும் இருக்க சம்மதமென்றால் நான் உங்களை மணப்பேன். தாங்கள் என் செயல்களைத் தடுத்தால் நான் அப்பொழுதே உங்களைவிட்டு விலகிவிடுவேன்"

என்றும் கூறினாள். மன்னன் சாந்தனுவும் அதற்கு மனப்பூர்வமாய் சம்மதித்து அவளை கந்தர்வ விவாகம் புரிந்து அரண்மனைக்கு அழைத்துவந்தான்.

மணவாழ்க்கை மகிழ்ச்சியோடு செல்ல,மன்னனின் மனைவிக்கு ஆண் மகவொன்று பிறந்தது. குழந்தை பிறந்த குதூகலச் செய்தி கேட்டு, தன் மனைவியைக் காணவந்த சாந்தனு, பிறந்த குழந்தையைத் தன் மனைவி கங்கையாற்றில் வீசிக் கொன்றதைக் கண்டான். கண்ட காட்சியினால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த மன்னன் தான் தன் மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்குவர, அவளிடம் ஏதும் கேளாமல் அமைதி காத்தான்.

இந்நிலையில் மன்னன் மனைவி மறுபடியும் தாய்மையுற்றாள். சென்றமுறைபோல் இனியும் செய்யமாட்டாள் என எண்ணி மன்னன் மகிழ்ந்திருந்தவேளையில், தான் பெற்ற இரண்டாவது குழந்தையையும் ஆற்றில் வீசிக் கொன்றாள் அவள். துயரத்தின் பிடியில் சிக்கித்தவித்தான் மன்னன் சாந்தனு. ஆனாலும், கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது என்பதற்காக வாய்மூடி மௌனித்திருந்தான்.

தொடர்ச்சியாய்ப் பிறந்த ஏழு குழந்தைகளையும் நீரில் வீசிக் கொன்றதைக் கண்டு சோகத்தில் ஆழ்ந்த அஸ்தினாபுரத்து அரசன், எட்டாவது குழந்தை பிறந்ததும் அதனை எடுத்துக்கொண்டு அவள் ஆற்றிற்குச் செல்கையில், குழந்தையில் அழகிலும், பிள்ளைப் பாசத்திலும், தனக்கொரு வாரிசு வேண்டுமே என்ற பரிதவிப்பிலும் துவண்டவனாய்,

" இரக்கமே இல்லாமல் பெற்ற குழந்தைகளைக் கொல்கிறாயே, நீ யார்? ஏன் இப்படிச் செய்கிறாய்?"

என்று மனம் பொறுக்காமல் அவளிடம் வினவினான்.

தான் கொடுத்த வாக்குறுதியை மன்னன் மீறி மன்னன் கேள்வியெழுப்பவே,

"மன்னா,நான் யாரென்று சொல்கிறேன், ஆனால் உங்கள் வாக்குறுதியை மீறியதால் இனியும் என்னால் உங்களுடன் வாழ இயலாது"

என்று கூறிய அப்பெண்,

"நான் தேவலோகத்திலிருந்து சாபம் தீர வந்த கங்காதேவி"

என்று கூறி, தன் முற்பிறப்புப்பற்றி மன்னனுக்குச் சொல்ல ஆரம்பித்தாள்.

"முன்னொரு பிறவியில், தேவர் சபையில் கங்காதேவியாகிய நான் நடனமாடுகையில் என் ஆடை சற்றே விலகியதைக் கண்டு அனைவரும் நிலம்நோக்க,அப்போது மகாபிஷக் எனும் பெயரில் மன்னனாய்ப் பிறந்திருந்த நீங்கள் என் அழகில் மயங்கி எனைப் பார்த்து ரசிக்க, பிரம்மதேவன் இட்ட சாபத்தின் பலனாகத்தான் நாமிருவரும் கணவன் மனைவியாக இப்பிறவியடைந்தோம்"

என்று கூறினாள்.

"நமக்குப் பிறந்த இக் குழந்தைகள் எண்மரும் சாப விமோசனத்துக்காக என் வயிற்றில் பிறந்த அஷ்ட வசுக்கள் ஆவர். நமக்குப் பிறந்த இந்த எட்டாவது குழந்தையை நான் சிலகாலம் வளர்த்து பின்னர் உங்களிடம் ஒப்படைப்பேன்"

என்றும் கூறி, மன்னன் சாந்தனுவை விட்டு விலகி தேவலோகம் சென்றாள் கங்காதேவி.

பாரதம் படிக்கலாம் வாங்க...

மகாபாரதம் என் பார்வையில்...
************************************
பாரத நாட்டின் பெருமைமிகு இதிகாசங்கள் இரண்டினுள் மகாபாரதமும் ஒன்று. வியாச முனிவர் வாய்மொழியாய் உரைக்க, விநாயகப்பெருமானே தன் தந்தத்தை எழுதுகோலாக்கி இந்நூலை எழுதியதாகக் கூறப்படும் புராணக்கதை இந்நூலின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகும்.

பாரத நாட்டிற்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த மன்னன் பரதனின் வம்சத்தில் எழுந்த போட்டியும் பொறாமையும், சூழ்ச்சியும் அதை வென்ற தர்மமும் ஆகிய அனைத்தையும் விளங்கக்கூறும் வாழ்க்கைக் காப்பியம் இது.

இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்களாலும் போற்றப்படும் இந்த இதிகாசம், வாழ்க்கைக்கான அறவழியை எடுத்துரைப்பதுடன், பார்த்தனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மாவின் வாயிலாக பகவத்கீதையையும் நமக்குப் போதிக்கிறது.

நாளைய பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகிய குழந்தைகளுக்கும், கதையின் சாராம்சம் தெரிந்தும், ஏனைய விஷயங்கள் தெரியாத என்னைப் போன்ற சில பெரியவர்களுக்கும் நம் பண்டைய பாரதத்தின் பாரம்பரியத்தை அறிய வைக்கும் நோக்குடன், நான் படித்ததைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுந்த சிறு முயற்சியே இந்த மகாபாரத நெடுங்கதையின் எளிமையான வடிவம்.

பாரதக்கதையின் பெருமைகள்
**************************************

பழம்பெருமைகள் நிறைந்த நம் பாரதநாடு முனிவரும் அறிஞர்களும் பிறந்த புண்ணியபூமி. வேதங்களும் வித்தைகளும் புரிந்த சித்தர்கள் வாழ்ந்த பூமி. பாரத மக்கள் அனைவரும் போற்றும் நால்வேதங்களாகிய ரிக், யஜூர், சாம,அதர்வண வேதங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாம் வேதம் எனப்படுமளவுக்கு பெருமைபெற்றது மகாபாரதக்காப்பியம்.

மகாபாரதக்கதை எண்ணிலாத கிளைக்கதைகளைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலில் கூறப்படாத நீதிக்கருத்துக்கள் எதுவுமே இல்லையெனுமளவுக்கு கதையின் தொடக்கமுதல் இறுதிவரை மனிதவாழ்விற்கான நியதிகள் நிறைந்துகாணப்படுகிறது. முழுக்கமுழுக்க இறை உபதேசமான பகவத்கீதை பாரதக்கதையின் மகுடம் எனலாம். பாரதக்கதையில் சொல்லப்படாத மனித குணங்களே இல்லையெனுமளவுக்கு இன்றைய வாழ்க்கையிலும் எந்த ஒரு மனிதனையும் சித்தரிக்கக்கூடிய கதைமாந்தர்களை நாம் பாரதக்கதையில் காணமுடியும்.

தந்தைக்காகவே தன்னலம் துறந்த பீஷ்மரையும், நட்புக்காக உயிரையும் கொடுத்த கர்ணனையும், பொறாமைக் குணத்தினால் பெருமையை இழந்த துரியோதனையும், தருமமே தன்னுருவாக வாழ்ந்த தர்மனையும், போர்முனையில் பாசத்தால் கலங்கி நின்ற அருச்சுனனையும், பதிபக்தியினால் கணவனுக்கு இல்லாத பார்வை தனக்கும் வேண்டாமென, கண்ணைக் கட்டிக்கொண்டே வாழ்ந்த காந்தாரியையும் இந்தக்காப்பியத்தில் காணலாம்.

பராசர முனிவரின் புதல்வனான வியாசரால் சொல்லப்பட்ட பாரதம், தும்பிக்கையோனால் கம்பீரமாக தேவமொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு, அக்கதை வியாசரால் அவரது புத்திரர் சுகருக்கு சொல்லப்பட்டு, தேவலோக சஞ்சாரியான நாரதமுனிவர் அந்நூலைக்கற்று தேவர்களுக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறுவர். தேவர்களின் காப்பியம் மனிதர்களை அடைந்து, பிற்காலத்தில் வில்லிப்புத்தூர் ஆழ்வாரால் வில்லிபாரதமாகவும், ராஜாஜி அவர்களால் வியாசர் விருந்தாகவும் படைக்கப்பட்டது. எட்டையபுரத்துக் கவிஞன் இந்நூலின் ஒருபகுதியைப் பாஞ்சாலியின் சபதம் என்றபெயரில் மக்களுக்குக் கொடுத்தார்.

இத்தனை பெருமைகள் நிறைந்த, கடவுளும் மனிதனாகிக் கலந்து வாழ்ந்த காப்பியத்தின் பெருமைகள் உலகுள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

புதன், 22 அக்டோபர், 2008

தீபாவளி ஸ்பெஷல் - முந்திரிக்கொத்து

தீபாவளி வந்தாலே பத்துநாளைக்கு முன்பாகவே பட்சணங்கள் செய்து, டப்பாக்களில் சேகரித்துவைக்கத் தொடங்கிவிடுவார்கள்.பக்குவமாய் அரைத்து, சுத்தமாகப் பாகுவைத்து, சுகாதாரமான எண்ணெயில் பொரித்தெடுத்து, அன்பும் ஆரோக்கியமுமாய் செய்யப்பட்ட அன்றைய பலகாரங்களின் சுவை, இன்று கலர்கலராக, ரகம்ரகமாகக் கடைகளில் நாம் வாங்கி உண்ணும் தின்பண்டங்களில் இருக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமே.

சிறுவயதில் அம்மா பலகாரம் செய்துவைத்தாலே அடுக்களையைச் சுற்றி குட்டிப்பூனைகளாட்டம் வளையவந்ததை மறக்கமுடியுமா என்ன? இந்த தீபாவளிக்கு எளிமையான இந்தப் பாரம்பரிய இனிப்பைச் செய்து நீங்களும் உங்க குடும்பத்தை அசத்துங்க :)

சிறுசிறு பயற்றமாவு உருண்டைகளை, இரண்டிரண்டாகவோ அல்லது மூன்றுமூன்றாகவோ மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கும்போது, பார்ப்பதற்கு திராட்சைக்கொத்துபோல் தோன்றுவதால் இதற்கு இந்தப்பெயர் வைத்திருக்கிறார்கள்.

தேவையான பொருட்கள்

பாசிப்பயறு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
மைதா மாவு - 200 கிராம்
ஏலக்காய் - 3
உப்பு - சிறிதளவு
எண்ணெய் -பொரிப்பதற்கு

செய்முறை:

பாசிப்பயற்றை வாசனை வரும்வரை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடி செய்துகொள்ளவேண்டும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி, அத்துடன் ஏலக்காய்களைப் பொடிசெய்து போட்டு, லேசாக கரண்டியில் ஒட்டக்கூடிய பதத்தில் பாகு காய்ச்சிக்கொள்ளவும். பாகில், அரைத்த பயற்றமாவைப் போட்டுக் கிளறி சிறுசிறு எலுமிச்சை வடிவில் உருட்டிக்கொள்ளவும். உருண்டைகள் சூடு ஆறியதும், மைதாமாவை சிறிது உப்பு சேர்த்து, தோசை மாவுக்குக் கரைப்பதைவிட சற்று நீர்க்கவே கரைத்து, அந்தமாவில் இரண்டு அல்லது மூன்று உருண்டைகளாகச் சேர்த்து முக்கியெடுத்து, சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவேண்டும்.

மிகச் சுவையான இந்த இனிப்புப் பலகாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை ஒருவாரம்வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

***********

திங்கள், 26 மே, 2008

சீரக சாதம் | ஜீரக சாதம் | Jeera Rice

தினமும் அதே சாதம்தானா என்று வீட்டில் சலிப்பாய்க் குரல் எழும்புகிறதா? ஒரு மாறுதலுக்காய் மிகச் சுலபமான ஜீரகசாதம் செய்து அசத்துங்க...

Variety Rice Recipe - Jeera Rice


தேவையான பொருட்கள்

பாஸ்மதி/சோனா மசூரி அரிசி - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
நெய் - 1 மேஜைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 3
முந்திரிப்பருப்பு - 10
தண்ணீர் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
__________

1. அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

2. குக்கரில் எண்ணெய் + நெய் விட்டு சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, சீரகம் மற்றும் முந்திரிப்பருப்புப் போட்டு வறுக்கவும். 

ஜீரகம் வெடித்ததும் அதில் வடிகட்டிய அரிசியைச் சேர்த்து, கூடவே தயிரையும் சேர்த்து, 2 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த அரிசியில் தேவையான அளவு நீரை ஊற்றி, அளவாக உப்புச் சேர்த்துக் கலந்துவிடவும்.

3. குக்கரை மூடி சிறுதீயில் வைத்து 1 அல்லது 2 விசில் விட்டதும் இறக்கிவிடலாம்.

மிக எளிதான இந்த ஜீரக சாதத்தை, எந்தவகை காய்கறி குருமாவுடனோ, அல்லது அசைவ உணவுவகைகளுடனோ சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள வடகமோ, அப்பளமோ இருந்தால் மிக நன்றாக இருக்கும்.
                                                            ***

செவ்வாய், 13 மே, 2008

பாலை மலைத்தொடரைப் பார்க்கலாம் வாங்க...ஆண்டுத்தேர்வு விடுமுறையின்போது, கண்ணுக்கெட்டிய தூரம் தென்படும் கான்கிரீட் காடுகளிலிருந்து விலகி மலைப்பகுதிக்குச் செல்லலாமென ஓர் எண்ணம்...மலையென்றதும் நம்ம ஊர் குற்றாலம், கொடைக்கானல் மாதிரி எதையாவது கற்பனை செய்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே அதுபோல இயற்கையழகுக்கு ஏங்கும் விழிகளைக் கொஞ்சமேனும் திருப்தி செய்ய பாலையில் மலைப் பிரதேசம் தேடி ஒரு சிறு பயணம்...ஹத்தா(hatta) வை நோக்கிய பயணத்தை காலை 8.30 க்குத் தொடங்கினோம்.எங்களுக்கு முன்பாகவே கதிரவன் பிரகாசமாய்ப் புறப்பட்டிருந்தார்

துபாயிலிருந்து கிட்டத்தட்ட 110 கிலோமீட்டர்கள் தொலைவில், ஓமான் நாட்டு எல்லையில் ஹஜர் (hajjar ranges) மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. மக்கள் நெருக்கம் குறைந்த இயற்கை இன்னமும் அதிகம் சிதைக்கப் படாத பகுதி...

வழிநெடுகே விரியும் பாலை மணல்வெளி...மேயும் ஒட்டகங்கள்...கண்ணுக்கு எட்டிய தூரம்வரை விரியும் பாலை மணல் மேடுகள்...பாலைவன மணல் திட்டுகளில் காணப்பட்ட உற்சாகமான பொழுதுபோக்குகள் இதோ...
பாலைவன மணலில் 4 wheel drive வாகனங்களிலும், dune buggy எனும் பைக்கிலும்
ஏறி இறங்கி விளையாடுதல் இங்கு மிகவும் பிரசித்தம்


வழியில் ஆங்காங்கே இறங்கி இளைப்பாறிவிட்டு, ஹத்தாவை அடைகையில் சூரியன் உச்சிக்கு வந்திருந்தார். முதலில் சென்ற இடம் Hill park. பூக்கள் இல்லாத ஒரு பூங்கா. சிறு குன்றில் அமைக்கப்பட்ட அரேபிய அமைப்பு ஒற்றைக் கோபுரத்துடன் ஓர் இளைப்பாறும் இடம்.மலைப்பூங்காவின் உச்சியிலுள்ள கோபுரம்...மலைப்பூங்காவில் உணவருந்தி இளைப்பாறிவிட்டு, ஹத்தா அணைக்கட்டைப் (hatta dam)பார்க்கப் புறப்பட்டோம். ஆறில்லை அருவியில்லை... ஆனால் அணைக்கட்டு உண்டு. சுற்றிலும் மலைத்தொடர்கள். நடுவில் நீர்த்தேக்கம். பலமுறை இந்த இடத்திற்குச் சென்றிருந்தாலும் இந்தமுறைதான் அதிகமான நீருடன் பார்த்திருக்கிறோம். சென்றமுறை, அணைக்கட்டிற்குள் நாங்கள் பந்து விளையாடிய பிரதேசம் இந்தமுறை நீருக்குள்...

இந்த அணைக்கட்டுத்தவிர Wadi என்று சொல்லப்படும் நீரூற்றுக்களும் இங்கு உண்டு. மேடுபள்ளமான மலைப்பாதையைக் கடந்து சென்றபின் கால்களைத் தழுவும் நீரோடைகளையும் காணலாம். வழிதவறிச் சென்றால் வேறெங்காவது சென்று மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
சாலைகளில்லாத காரணத்தால் பயணத்தில் எச்சரிக்கை மிக அவசியம்.

இதோ,அணைக்கட்டிற்கு ஏறிச் செல்லும் பாதை...அணைக்கட்டின் மேலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...

நீர்த்தேக்கத்தின் பச்சைவண்ண நீரில் பொன்னிற மீன்கள்...
பொரியெல்லாம் கிடைக்காததால் பிரிட்டானியா பிஸ்கட் சாப்பிட்ட அழகு...


குளிரக்குளிர நீரில் விளையாடிவிட்டு அணைக்கட்டைவிட்டு வெளியேறினோம்.
அணியிலிருந்து இறங்குகையில்...அணைக்கட்டைவிட்டுப் புறப்பட்டு, செயற்கை கலக்காத இயற்கையின் இன்னும் சில பக்கங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

வழியிலுள்ள மலைத்தொடர்கள்...


வழியெங்கும் காணப்பட்ட இயற்கையை ரசித்தபடியே மீண்டும் வரும்நாளை எதிபார்த்தபடி வீட்டை நோக்கி விரைந்தது எங்கள் வாகனம்.

கோடை விடுமுறையில் குளிர்ச்சியான நினைவுகள்

போனவருஷம் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது,விமானம் ஏறுவதற்கு முன்பே பதினைந்து நாளுக்கான பயணத்திட்டம் போட்டாகிவிட்டது. மாமியார், நாத்தனார்கள், கொழுந்தனார், என் பெற்றோர் என்று ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் ஒதுக்கிய நாட்கள் போக, மிச்சநாட்களை மலைக்கோட்டை விநாயகர், உறையூர் வெக்காளியம்மன், பழனி தண்டாயுதபாணி, திருச்செந்தூர் முருகன் என்று கடவுள்களுக்கு ஒதுக்கிவிட எல்லா நாளும் பரபரப்பான பயணங்களாகவே இருந்தது.

பழனி முருகனுக்கு ஒதுக்கப்பட்ட நாளுக்கு முன்தினம் பலவீட்டுச் சாப்பாடும் பலஊர்த் தண்ணீரும் சேராமல் மூத்தமகள் படுத்துக்கொள்ள, "பழனியாண்டவரை இங்கிருந்தே நினைச்சுக்கோ... அடுத்தவருஷம் வரும்போது கட்டாயம் போயிடலாம்" என்று அம்மா சொல்ல பழனித்திட்டம் கேன்சலானது.

பகல் பத்துமணியிருக்கும்... வாடகைக்கு எடுத்த வண்டி சும்மாதானே நிக்கிது, நாம பக்கத்து கிராமத்தில எங்க பெரியம்மா வீட்டுக்குப் போய்வரலாமே என்று என் கணவர் சொல்ல, மகளை அம்மாவிடம் விட்டுவிட்டு கிளம்ப ஆயத்தமானோம். "நல்லவேளை எனக்கு உடம்பு முடியல... நீங்க போற ஊருக்கு ரோடே கிடையாதுடா" என்று என் மகள் தன் தம்பியை வெறுப்பேத்த, அவனும், "அம்மா, நான் சுட்டி டிவி பாத்திட்டு இருக்கிறேன் நீங்க போயிட்டுவாங்க" என்று ஆரம்பிக்க, அவனை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு புறப்பட்டோம்.

வண்டியிலேறியதும்தான் உரைத்தது, ஒரு ஃபோன் கூடப் பண்ணாமல் புறப்படுகிறோமே என்று...ஃபோன் பண்ணுவதற்கு அவர்கள் நம்பர் தெரியாது அதுவேறு விஷயம்...
என் கணவர், அதெல்லாம் நகரத்துப் பழக்கம் இங்கே அதெல்லாம் தேவையில்லை என்று சமாதானம் சொல்ல அரைமனசுடன் புறப்பட்டோம்.

முக்கிய சாலையைத் தாண்டி, மண்சாலையில் நுழைந்தது வாகனம். இருபுறமும் வயல்கள், எதிர்ப்பட்ட ஒரே ஒரு மினி பஸ், பாதையைக் கடந்து செல்லும் பசு மாடுகள், பறவைகள் தவிர ஆள் நடமாட்டமே இல்லை. இயற்கையை ரசித்துக்கொண்டே ஒருவழியாக ஊருக்குள் நுழைந்து வீட்டிற்குப்போனால் வீட்டில் யாருமில்லை. வாசலில் கோழிகள் மேய்ந்துகொண்டிருக்க, திண்ணையில் ஆடுகள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. "பாட்டி வயலுக்குப் போயிருக்காங்க, இப்ப வந்துருவாங்க..." என்று பக்கத்துவீட்டுச் சின்னப்பெண் தகவல் கொடுத்துவிட்டு, கையோடு போய் கூட்டிக்கொண்டும் வந்துவிட்டாள்.

எங்களைப் பார்த்ததுதான் தாமதம் அத்தைக்கு சந்தோஷம் தாங்கவில்லை. "ஐயா, என்னைப் பாக்கவா இவ்வளவு தூரம் வேகாத வெயில்ல வந்தீக" என்று சொல்லிச்சொல்லி மாய்ந்துபோய், நார்க்கட்டிலை எடுத்துப்போட்டு உட்காரச் சொல்லிவிட்டு, பக்கத்துவீட்டுப் பையனைக்கூப்பிட்டு பதநீரும் நுங்கும் வாங்கிவரச் சொன்னார்கள்.பதப்படுத்திய பாலையும், பலமாசம் ஷெல்பிலிருந்த ஜூஸையும் குடித்து மரத்துப்போயிருந்த ருசி நரம்புகள் விழித்துக்கொள்ள, நுங்கு கலந்த பதநீர் தேவாமிர்தமாய் தொண்டையில் இறங்கியது. அதற்குள் பாட்டியோட கொழுந்தனார் மகன் வெளிநாட்டிலேருந்து குடும்பத்தோடு வந்திருக்காங்க
என்ற செய்தி தெரிந்து, பத்துப்பதினைந்துபேர் வந்து எங்களை வித்தியாசமாய்ப் பார்த்துவிட்டு, ஏதாவது உதவி செய்யணுமா என்று அத்தையிடம் கேட்டுவிட்டுப் போனார்கள்.

அடுத்த அரைமணி நேரத்தில் வறுத்தமீனும், பொரித்த முட்டையுமாக ஒரு விருந்தே சமைத்து அத்தை அசத்திவிட, என் கணவர் என்னிடம் மெதுவாகக் கிசுகிசுத்தார்..."பார்த்தியா,போன் பண்ணாம போறோமேன்னு வருத்தப்பட்டியே, போன் பண்ணிட்டுப் போனாலே பிஸ்கட்டையும் காப்பியையும் கொண்டுவந்து வைத்துவிட்டு, மொபைல் போனில் பேசிக்கொண்டே நாங்க ரொம்ப பிசி என்று காட்டிக்கொள்(ல்லு)ளும் மனுஷங்க ஊர்ல வாழ்ந்து பழகிட்ட உனக்கு இதெல்லாம் ரொம்ப அதிசயமா இருக்குமே" என்று சிரிக்க, செயற்கையின் சாயம் கொஞ்சமும் கலக்காத அந்த பாசம் என்னை "ஆமா" என்று தலையசைக்க வைத்தது.

சாப்பிட்ட பின் சிறிது நேரம் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெறும்போது, திண்ணையில் எங்களுக்காக ஒரு குட்டிச் சாக்குப்பை தயாராக இருந்தது. "என்ன பெரியம்மா?" என்று என் கணவர் கேட்க,ஒண்ணுமில்லைய்யா, நம்ம வயல்ல விளைஞ்ச கடலை, மரத்துல பறிச்ச ரெண்டுமூணு எழனி, கொஞ்சம் கொய்யாப்பழம் அவ்வளவுதான்...வீட்டிலபோயி என் பெரிய பேத்திக்கு ரெண்டு எழனிய வெட்டிக்குடு, சூடு தணிஞ்சி உடம்பு சரியாப்போயிடும் என்று சொல்ல, நெகிழ்ந்து போனவளாய் பையை எடுத்து வண்டியில் வைத்தேன். பை கனமாக இருந்தது. ஆனால், மனசு அந்த உபசரிப்பின் மகிழ்ச்சியில் லேசாகி மிதந்தது.

*******

திங்கள், 5 மே, 2008

மழை மேகத்தின் முதல்துளி...


மேகங்களெல்லாம் மழையாகப் பொழிகிறதா என்ன...
சுழற்றிவீசும் சூறைக்காற்றில் கலைந்துபோகும் மேகங்கள் கணக்கிலடங்காதவை. கடலில் நீர்குடித்து மலையில் மழையாய்ப் பெய்து, சரிவில் அருவியாய் இறங்கி, சமவெளியில் ஆறாய்ப் பெருகிடும் மேகத்திற்குத்தான் எத்தனை வடிவங்கள்?

சின்ன வயதில் கால்களை மணலில் அளையவிட்டு, விழிகளால் வானத்தை அளந்த காலத்தில், சிங்கமாய் சிறுநரியாய்,ஒட்டகமாய் ஓடும் குதிரையாய், அம்மா பொரித்த கோணல் அப்பளமாய், அப்பா வாங்கிக்கொடுத்த பஞ்சுமிட்டாயாய் எத்தனை வேஷமிட்டு நம் கற்பனையோடு கதைபேசியிருக்கும்?

ஒளிகொடுக்கும் சூரியனுக்கு வழிகொடுக்காத நந்திபோல உருவம் மறைத்திடும் இந்த நீர்க்குவியல்தான் எத்தனை அழகு? மேகங்கள் இல்லாத வானத்தில் வலம்வரும் நிலவுகூட அழகில்லைதான்...சின்னதும் பெரியதுமாய் எண்ண இயலா மேகப்பொதிகள் சூரியனின் யானைப்படைகளாகவும், குதிரைக்கூட்டமாகவும் அணிவகுத்துச்செல்லும் அழகுக்கு ஈடென்ன சொல்ல இயலும்?

வானில் பறக்கையில் நம்மோடு கைகுலுக்கி, பூமிக்கும் வானுக்குமிடையில் போர்வையாய் விரிந்திருக்கும் மேகத்திரை மறைவில் நாம் தொலைந்துதான் போகிறோம். மேகத்தைப் பாடாத கவிஞன் கண்ணில்லாதவனென்றே சொல்லிவிடலாம்.

உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே...

என்றும்,

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

என்றும் இளையநிலாவைப் பொழியவிட்டு நம் இதயங்களில் நிறைந்த பாடலை யாரும் மறக்கவேமுடியாது.

மாயனாம் கண்ணனைக் குறிப்பிடுகையில் கார்மேக வண்ணனென்று கனிவோடு அழைப்பதும், சிலம்பின் நாடுகாண் காதையில்,

"மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்"

வேங்கடவனின் திருத்தோற்றம் கூறுகையில்,மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லினைப் பூண்டு, நல்ல நிறமுடைய மேகம் நிற்பதுபோல, சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்று சிறப்பித்துக் கூறுவதும் வான்மேகத்துக்குக் கிடைத்த விருதுகள் எனலாம்.

அழகான மேகங்கள் சில சமயங்களில் அமிலமேகமாக மாறி,காடுகள் கழனிகளை அழித்துச் சிதைப்பதுமுண்டு.வாகனங்கள் வெளியிடும் புகையின் மாசுகளும், தொழிற்சாலைப் புகைக்கழிவுகளும் அமிலமழைக்கு முக்கியக் காரணங்களாகும்.

மேகமின்றி மழையில்லை, மழையின்றிப் பயிரில்லை, பயிரின்றி உயிரில்லை...இப்படி எல்லாவற்றிற்கும் ஆதிமூலமான அழகு மேகங்கள் இந்த பூமிப்பந்தினுக்கு இன்னும் பொலிவூட்டட்டும்!

**********