"எட்டுப் புள்ளைங்க எங்க வீட்ல...ஆனா, வீட்டுச்சத்தம் வெளியில கேக்காது. ஆனா, இந்த ஒண்ண வச்சுக்கிட்டு நான் படுறபாடு இருக்கே...கடவுளே, இன்னும் தலை இருக்கிற இடத்துக்குக் கழுத்து வந்தா இன்னும் என்னென்ன பண்ணுமோ..." என்று அலுத்துக்கொள்ளும் அம்மாக்களைப் பார்க்கும்போது, இந்தக்காலத்துக் குழந்தைகள்தான் அதிகமா குறும்புத்தனம் பண்றாங்களா, இல்லேன்னா, அப்பா அம்மாதான் அவங்களை அதிகமா குத்தம் சொல்றாங்களா என்ற கேள்வி இப்பல்லாம் அடிக்கடி மனசில் எழுகிறது.
"இப்பல்லாம், விருந்து விசேஷம்னு எங்கேயும் போறதில்லை, எல்லாம் இவங்க வளந்த பிறகுதான்..." என்ற என் உறவுக்காரப் பெண்ணை ஏனென்று கேட்டபோது, "எங்க போனாலும் இவனுங்க பண்ற சேட்டையில திட்டு வாங்கிட்டுத்தான் திரும்பவேண்டியிருக்குது. அதனால இவன்களுக்குப் புத்தி தெரிஞ்சப்புறம்தான் எல்லாம்" என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோதே, கையை உதறிவிட்டுத் தெரிச்சு ஓடித் தெருவில் விளையாடப்போன அந்தச் சிறுவனைப் பார்க்கும்போது மனசில் சங்கடம்தான் தோன்றியது.
"அன்னிக்கு, ஒரு கிரகப்பிரவேசத்துக்குப் போயிருந்தேன். எல்லாரும் வீட்டை சுத்திப்பாத்துட்டு இருந்தப்ப, எங்கே இவன்னு பாத்தா மொட்டை மாடி கட்டைச் சுவரில் ஏறி நிக்கிறான்.ஒற்றை நிமிஷம் பார்க்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சுப்பார்க்கவே முடியல..." என்று சொல்லிவிட்டுக் கண்கலங்கிய அந்தத் தோழியைப் பார்க்கையிலும் கஷ்டமாகத்தான் இருந்தது.
இங்கே அமீரகத்தில், காருக்கு அடியில் ஒளிந்து விளையாடிய ரெண்டு குழந்தைகள், தந்தை வந்து காரை ஸ்டார்ட் பண்ணின பிறகும்கூட வெளியே வராமல், விளையாட்டில் திளைத்திருக்க, சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் பத்திரிகைகளில் வந்தது.
அன்றைக்கு, அந்தச் சிறுமியைக் காணவில்லையென்று தெருவே தேடிக்கொண்டிருந்தது. பக்கத்துப் பள்ளிக்கூடத்தில், சாலையில், கடைகளில், அடுத்தவீடு எதிர்த்தவீடென்று எல்லா இடத்திலும் தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல்போகவே, மொட்டைமாடியில் பாத்தீங்களா என்று ஒருவர் கேட்க, மொத்தக் கூட்டமும் மொட்டைமாடிக்கு ஓடியது. அங்கே ஒற்றையாய் வசிக்கும் இளைஞனுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள் அந்த மூன்றுவயசுக் குழந்தை.
இந்தக் குழந்தையாக மாடிக்குப்போனதா, அல்லது அவன்தான் கூட்டிட்டுப்போனானா என்று ஆளாளுக்கு அவரவர் மனப்போக்கின்படிப் பேச, "இன்னும் கொஞ்சநேரம் கதை கேட்டுட்டு வரேம்மா..." என்று தன் அம்மாவிடம் கள்ளமில்லாமல் கேட்டது அந்தக் குழந்தை. ஆனா, அதுக்குப் பதிலாகக் கிடைச்சதோ கூட ரெண்டு அடி மட்டும்தான்.
பக்கத்து வீட்டுக்காரி பொறாமை பிடிச்சவ, மாடி வீட்டுக்காரன் ஒரு மாதிரி, எதிர்த்த வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியல என்று அக்கம்பக்கத்தில் யாருடனும் நட்புப் பாராட்டமுடியாமல் கட்டிப்போடப்படுகிற மொட்டுகள் என்னதான் செய்யும்? காலையில் எட்டுமணிக்கு ஆட்டோவில் ஏத்தி அனுப்பினா, மாலை நாலரை மணிக்கு வந்து, நாலு பிஸ்கட்டும் பாலும் குடிச்சிட்டு, டாம் அண்ட் ஜெரியையோ, டோரா புஜ்ஜியையோ பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அடுத்து, இருக்கவே இருக்கு ஹோம் வொர்க்.
கதையில் வருகிற டாம் அண்ட் ஜெரி மாதிரி குறும்பும் கும்மாளமுமாய் இருக்கவோ, டோராவை மாதிரி தானும் வெளியில் செல்லவும் விளையாடி மகிழவும் அந்தக் குழந்தையும் ஆசைப்படுமென்று ஏன் அம்மா அப்பாக்களுக்குப் புரியமாட்டேனென்கிறது?
என்றைக்காவது ஒருநாள் பார்க்கில் விளையாடக் கூட்டிப்போனால்கூட, ஒன்னோட சைக்கிளை வச்சு நீ மட்டும் விளையாடு, விச்சுகிட்ட குடுத்தே பிச்சுப் போட்டுடுவான், என் கண்ணை விட்டு விலகி, தள்ளிப்போகக்கூடாது, கடையில இருக்கிற கருமத்தையெல்லாம் கேக்கக்கூடாது, கண்டவங்ககூடல்லாம் கதை பேசக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டளைகள் விதிக்கப்பட, என்னசெய்வதென்றே புரியாமல் திணறித்தான்போகிறது குழந்தை.
குச்சி மிட்டாயும், குருவி பிஸ்கட்டும், பச்சை மாங்காயும், பப்படமும் வாங்கி எச்சில் ஒழுகச் சாப்பிட்டுவிட்டு, பச்சைக்குதிரை, பம்பரம், பாண்டி, குச்சிக்கம்பு, கோலிவிளையாட்டென்று இச்சைப்படி தெருவில் விளையாடி வளர்ந்த தலைமுறை, தன் பிள்ளைகளைக் கயிற்றில் கட்டிய கன்றுக்குட்டிகளைப்போல் வளர்ப்பதைப் பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச்சொல்லப்போனால், 'அட, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...காலம் கெட்டுக்கிடக்குது' என்றுசொல்லிவிட்டுக் கடந்து போய்விடுகிறார்கள் பெற்றவர்கள்.
விபாஷா...வயது பத்து, சிம்லாவில் ஐந்தாம்வகுப்புப் படிக்கும் இந்தச் சிறுமி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதிக்கு இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள். விஷயம் என்னன்னா, சிம்லாவில் சின்னக் குழந்தைகள் விளையாட வசதியாகப் பூங்கா ஏதும் இல்லாத காரணத்தால், குழந்தைகள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்க நேரிடுகிறது. அதனால் எங்களுக்கு வசதியாகப் பூங்கா ஒன்று அமைத்துத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறாள் அந்தச் சிறுமி. சிறுமியின் வேண்டுகோளைப் பரிசீலிக்கும்படி, அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்.
வெளையாடப்போறேன், வெளையாடப்போறேன்னு, சொன்னதையே திரும்பத்திரும்பச்சொல்லித் தொல்லை கொடுக்காதே சனியனே...என்று அர்ச்சனையை ஆரம்பிக்குமுன்னால் கொஞ்சம் யோசியுங்க. படிப்பு, ட்யூஷன், பரீட்சை, மதிப்பெண் என்று ஏகப்பட்ட இறுக்கத்திலிருக்கிற குழந்தைகள் கொஞ்சம் மனதைத் தளர்த்திக்கொள்ள நாம் அனுமதித்தே ஆகவேண்டும்.அவர்களுக்குப்பிடிக்கிற விதத்தில் அவ்வப்போதாவது விளையாட அனுமதிக்கவேண்டும். கூடி விளையாடச்செய்தல் குழந்தைகளுக்குள் குழுவாகச் சேரும் மனப்பான்மையை உண்டுபண்ணும்.
மனமகிழ்ச்சியுடன் வளரும் குழந்தைகள் வளர்ந்தபிறகு, தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அடக்குமுறைக்குள் சிக்கிய குழந்தைகள் வளர்ந்த பின்னாலும், அவசரமும் ஆத்திரமும்தான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நாம் யோசிக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக