சனி, 4 செப்டம்பர், 2010

வாழாமல் வந்த வரலச்சுமி!


கழுவின பாத்திரத்தை அடுப்படியில கவுத்தி வச்சிட்டு கடுங்காப்பியைக் கையில் வாங்கிக்கிட்டு கிணத்தடியில போய் உங்காந்தாங்க லச்சுமி சித்தி.

காப்பியக் குடிச்சிட்டு, உளுந்தக் கழுவி கிரைண்டர்ல போடு. அப்டியே ராத்திரி சாப்பாட்டுக்கு ரசம் வச்சி தொவையலரைச்சிரு. பாத்துக்கிட்டிருந்த சீரியல்ல இருந்து கண்ணை நகர்த்தாம கவுரியத்தை சொன்னதும், கிணத்தடியிலிருந்து எந்திரிச்சி உளுந்துக் கிண்ணத்தை எடுத்துக்கிட்டு மறுபடியும் வெளிய போனாங்க லச்சுமி சித்தி. கால்ப்பக்கம் கிழிஞ்சிருந்த சேலையில் கால்தடுக்க, தூக்கிச் சொருகிக்கிட்டு, உக்காந்து உளுந்தைக் கழுவ ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல கிரைண்டர் ஓட ஆரம்பிச்சிது.

கைகள் அனிச்சையாய் வேலை செய்தாலும் சித்தியின் கண்கள் மட்டும் எப்பவும் வெறுமையாய் வேறெதையோ வெறித்துக்கொண்டிருக்கும். சின்ன வயசில் அத்தனை பேரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டு, ஜான்சிராணி என்ற செல்லப் பெயரோடு வளையவந்த சித்தி, இன்றைக்கு வேலைக்காரியைவிடக் கேவலமாய்ப்போனது கொடுமையிலும் கொடுமை.

ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டே பிள்ளைகள்தான் பார்வதி ஆச்சிக்கு. சித்திக்குக் கல்யாணம் பேசினப்ப ஆச்சிக்கு அதில் அத்தனை இஷ்டமில்லை. மாப்பிள்ளைக்கு,பக்கத்து ஊர்தான்னாலும்,  உத்யோகம் வடக்கே நாக்பூர்ல ரயில்வே வேலைனு சொன்னாங்க. அத்தனை தூரம் மகளை அனுப்பணுமான்னு தயங்கினாங்க ஆச்சி. ஆனா, நான் வாக்குக் குடுத்துட்டேன்னு சொல்லி, ஆச்சி வாயை அடைச்சிட்டாங்க தாத்தா.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பார்த்ததோட சரி. பொண்ணு வீட்டுக்காரங்க யாரும் மாப்பிள்ளையப் பாக்கல. ஆனா, மாப்பிள்ளைப் பையன் நல்ல நிறமாயிருப்பான்னு சொல்லிக்கிட்டாங்க. நாலு நாள்ல நாக்பூர்லயிருந்து மாப்பிள்ளையோட போட்டோ வந்துது. சித்தியையும் பாப்பு ஸ்டூடியோவுக்குக் கூட்டிக்கிட்டுப்போயி, பளிச்சுன்னு தெரியிறமாதிரி படம் எடுத்து, மாப்பிள்ளை வீட்ல கொண்டுபோய் குடுத்துட்டு வந்தாங்க தாத்தா.

முகூர்த்தத்தன்னிக்குதான் மாப்பிள்ளை வந்தார். காலைல ஆறுலேருந்து ஏழரைக்குள் கல்யாணம். ஏழு மணியாகியும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரல. ஏழே காலுக்கு வந்து அரக்கப்பரக்கத் தாலிகட்டி முடிச்சாங்க. அவங்களுக்குள்ளயே ஏதோ கசமுசன்னு பேசிக்கிட்டாங்க. மாப்பிள்ளை நல்ல நிறம், சித்தி நிறம் குறைச்சல்னாலும் சிரிச்ச முகமா லட்சணமா இருப்பாங்க. மணமேடையில் மாப்பிள்ளை ஒரு தடவைகூட பொண்ணு பக்கம் திரும்பவே இல்ல. முகத்திலும் எள்ளும்கொள்ளும் வெடிக்கிற மாதிரியே இருந்தாரு.

மறுவீட்டுக்குப் போகும்போது சித்தி ஒரே அழுகை. எல்லாம் பழகிட்டா சரியாயிடும்னு பக்குவம் சொல்லி அனுப்பி வச்சாங்க பெரியவங்க. ஆனா, கல்யாணத்துக்கு மறுநாளே, வேலை இருக்குதுன்னு சொல்லி நாக்பூர் கிளம்பிப் போயிட்டாராம் மாப்பிள்ளை. சித்திக்கிட்ட பேசக்கூட இல்லையாம்னு பின்னால பேசிக்கிட்டாங்க. வந்துருவான் வந்துருவான்னு மாமனாரும் மாமியாரும் சொல்ல, மூணு வருஷம் அங்கேயே இருந்தாங்க சித்தி. ஆனா, போன மாப்பிள்ளை வரவே இல்ல.

நாலாவது வருஷம் அவருக்கும் இன்னொரு பொண்ணுக்கும் கல்யாணம்ஆகி, ரெண்டு வயசில் பிள்ளையும் இருப்பதாகக் கடிதம் வர, அதைக் கேட்ட அதிர்ச்சியில், சோறு வடிக்கும்போது பாத்திரத்தைத் தவறவிட்டு, கை காலெல்லாம் தீப்பட்ட கொப்புளத்தோட ஆச்சி வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க சித்தி.

செல்லமா வளத்த பொண்ணு வாழாம வந்து நின்ன சோகத்தில் சீக்கிரமே போய்ச் சேந்துட்டாங்க ஆச்சியும் தாத்தாவும். ஆனா, எல்லாச் சோகத்தையும் உள்ளயே பூட்டிவச்சு உருக்குலைந்துபோன சித்தி, இன்னிக்கு தம்பி வீட்டுக்குச் சம்பளமில்லாத வேலைக்காரி.

வரலட்சுமியா வாழப்போனவங்க வாழாவெட்டியா வந்ததைக்கண்டு பலர் மனசு வருத்தப்பட்டாலும், சின்ன வயசில கொஞ்ச ஆட்டமா ஆடுனா, அதான் இன்னைக்கி அனுபவிக்கிறா என்று அழுக்கு வார்த்தைகளை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் பெண்களில் சிலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக