சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2015

பாவம் பிள்ளைகள்!



ஞாயிற்றுக்கிழமை...காலை எட்டுமணி...

என்னங்க, இங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்களேன்... என்றாள் என் தர்மபத்தினி. 

என்னடா இது அதிசயம்? இன்னிக்கி அவ வாய்ஸ்ல ஒரு மென்மை தெரியுதேன்னு படிச்சிக்கிட்டிருந்த பேப்பரை பட்டுன்னு மூடி வச்சுட்டு பக்கத்துல போயி நின்னேன்.

"ஆமா, இது யாருன்னு தெரியிதா?" என்றாள், டேபிளின் மேல் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த என் மகளைக் காட்டி.

என்னம்மா, இது? நம்ம புள்ளையப் பாத்து இப்பிடிக் கேக்குறே...

"ஆமா, புள்ளைய எதுக்கு இப்பவே எழுப்பி உக்கார வச்சிருக்கே... அது உக்காந்துகிட்டே தூங்குது பாரு... முன்னெல்லாம் ஞாயித்துக்கிழமைல நாம ரெண்டுபேருமே கூட மத்தியானம் வரைக்கும் தூங்கியிருக்கோம்..." என்றேன் பெருமூச்சுடன்.

"அதெல்லாம் அந்தக்காலம்... நீங்க நடக்கிற கதைக்கு வாங்க..." என்றாள்.

"அந்தக்காலம் இல்லம்மா... இப்பத்தான்  ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தின காலம்..." என்ற என்னை அவள் உறுத்துப் பார்க்க, "சரி... உனக்கு அது கடந்த காலம்... என்னைப் பொருத்தவரைக்கும் அது ஒரு பொற்காலம்... விடு... இப்ப என்னை எதுக்குக் கூப்ட்டே?" என்றேன்.

"உங்க பொண்ணுக்கு ரெண்டு வயசு முடிஞ்சு ரெண்டு வாரம் ஆகுது ஞாபகம் இருக்கா?" என்றாள். 

"ஏன்மா இல்லாம? பார்ட்டி ஹால் புக் பண்ணி, கேக் வெட்டி, விருந்து வச்சு,  வந்தவங்களுக்கெல்லம் கிஃப்ட் குடுத்து, ஒரு சின்னத் திருவிழா மாதிரி செலிபரேட் பண்ணோமே... காசு எத்தனை ஆயிரம் செலவாச்சு... அதுகூட மறக்குமா என்ன?"

"ஓ... சந்தடி சாக்குல செலவுக்கணக்குக் காட்டுறீங்களோ?" என்று கண்ணை உருட்டி  என்னைப் பார்த்து அவள் கடுப்படிக்க, "இல்லம்மா... இயல்பாச் சொன்னேன்..." என்று அசடு வழிந்தேன்.

"சரி, ரெண்டு வயசாச்சு...பொறந்தநாள் கொண்டாடியாச்சு. இனிமே, அடுத்தது என்னன்னு ஏதாவது யோசிச்சீங்களா? " என்றாள். 

"அடுத்து என்ன? ரெண்டு வயசு தானே... இருவத்திரண்டு இல்லையே... என்னத்துக்கு இப்படி காலங்காத்தால டென்ஷன் பண்றா?" என்று மனசுக்குள் எரிச்சல்பட்டுக் கொண்டிருக்கும்போதே,

ஓ...ஒருவேளை, அடுத்து இவளுக்குப் பொறந்தநாள் வருதோ??? கடவுளே பொறந்தநாள் கொண்டாடியே நான் 
போண்டியாயிடுவேன் போலயே...என்று நினைத்து என் பிபி எகிறத்தொடங்க, அதற்குள் சட்டென்று நினைவுக்கு வந்தது. 

இப்பத்தானே நவம்பர்ல, டொமினொஸ் பீசா, அதோட கேக், ஆரெம்கேவில பட்டுப்புடவை, அதுக்கு மேட்சா ஒரு ஜோடி கம்மல்னு, ரெண்டு மாசத்துக்கு முன்னால பிறந்தநாள் கொண்டாடி இருவத்தஞ்சாயிரம் செலவு வச்சா... அப்போ, அவ பொறந்தநாள் இல்லை என்று மனசை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

அதற்குள், "நீங்கல்லாம் படிச்சவர் தானே...?" என்று எதிர்பார்க்காத இன்னொரு கேள்வி வந்து விழுந்தது. 

"என்னம்மா இப்பிடிக் கேட்டுட்டே? என்னோட படிப்பையும் வேலையையும் பாத்துத்தானே உங்கப்பா உன்னை எனக்குக் கட்டிவச்சார்" என்று நான் பெருமிதமாய் எதிர்க்கேள்வியை எழுப்பினேன்.

"ஹூக்கும்...பெரிய்ய படிப்பு...ஒத்தப் பிள்ளைய வச்சுக்கிட்டு அடுத்து என்ன செய்யணும்ன்னு கேட்டா, ஏதோ என்ட்ரன்ஸ் எக்சாம்ல எக்குத்தப்பா கேள்வி கேட்ட மாதிரி முழிக்கிறீங்க... என்னத்தைப் படிச்சித் தொலைச்சீங்களோ..." என்று அவள் எகிற, 

என்னது, ஒத்தப் பிள்ளையா... ஓ... ஒருவேளை, அவ அப்டி வராளோ? இன்னொரு குழந்தை வேணும்னு நம்ம வாயால சொல்லணும்னு எதிர்பார்க்கிறாபோல... என்று நினைத்து உள்ளம் துள்ள, அடச்சே... உண்மையிலேயே நான் சரியான மக்குதான்... "செல்லம், இப்பத்தான்டா புரியுது எனக்கு... நம்ம அனுக்குட்டிக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வேணும்னு தானே நீ நினைக்கிறே?" என்று நான் வாயெல்லாம் பல்லாகிக் கேட்டேன்.

"ஓஹ்ஹோ... அப்படியொரு எண்ணம் வேற இருக்கா உங்களுக்கு? இருக்கிற ஒரு குழந்தைக்கே அடுத்து என்ன பண்ணனும்னு அறிவு இல்ல, இன்னொரு குழந்தை வேற கேக்குதோ?" என்று சின்னப் பத்திரகாளியாய் அவள் சீற,

"ஐயோ... அப்போ அதுவுமில்லையா? நான் அம்பேல்... என்னன்னு நீயே சொல்லிரு தாயி..." என்று நான் அலுத்துப்போய் சரண்டராக, கண்ணுக்கு முன்னால் ஒரு காகிதத்தை நீட்டினாள். 

"லிட்டில் பட்ஸ் ப்ளே ஸ்கூல்" என்று பெரிய எழுத்தில் அதன் தலைப்பைப் பார்த்ததும் புரிந்தது, இதற்குத்தான் இத்தனை களேபரம் என்று. "ஏம்மா, ரெண்டு வயசுக்குள்ள ஸ்கூல்ல சேர்க்கணுமா? நானெல்லாம் நாலு வயசிலதான் ஸ்கூலுக்குப் போனேன்... நீயெல்லாம் கிராமத்துல அதைவிட லேட்டாக்கூட சேர்ந்திருப்பே, அப்டித்தானே?" என்று அவளைக் கேட்டேன் 

"நீங்க படிச்சுக்கிழிச்ச பவிசு தான் அன்றாடம் கிழியுதே... இன்னும் எதுக்கு அதையே பேசிட்டிருக்கீங்க? என்றவள், இந்த ஸ்கூல்ல, அடுத்த வருஷ அட்மிஷனுக்கு இப்ப ரிசர்வேஷன் நடக்குதாம். அதுக்கு இன்னிக்கு அப்ளிக்கேஷன் தராங்களாம். போன வருஷம் ரெண்டே மணி நேரத்துல அப்ளிக்கேஷனெல்லாம் தீர்ந்து போயிருச்சாம். என்னோட ஃப்ரெண்டோட  பையன், வத்சனுக்கு சரியாப் பேசக்கூடத் தெரியாது. அந்த ஸ்கூல்ல சேர்த்த பிறகு இப்ப என்னாமாப் பேசறான் தெரியுமா?" என்றாள். 

 "சரிம்மா, அந்தப் பையனுக்கு பேசத்தெரியலை... அப்பாவும் அம்மாவும் வேலைக்கு வேற போறாங்க... கூட இருந்து பேச யாருமில்லே... ஆயாகிட்ட விடவும் அவங்களுக்கு விருப்பமில்லே. அதனால அங்கே அனுப்பியிருக்காங்க. 

நம்ம பொண்ணுக்குத்தான் வீட்ல நீ கூட இருக்கியே... அவளும் இப்பவே கிளிமாதிரி அழகா, சமயத்துல உன்னை மாதிரியும் சூப்பரா பேசறா...அவளுக்கு எதுக்கு ப்ளே ஸ்கூல்லாம்...? இன்னும் குறைஞ்சது ஒரு வருஷமாவது போகட்டும். அப்புறமா நேரடியா ஸ்கூலுக்கு அனுப்பலாம்" என்றேன்.

என்னைப் பார்த்து எரித்துவிடுபவள்போல முறைத்தவள்,  "சாரதாவோட குழந்தை மூணு வயசுலய உலக மேப்ல உள்ள அத்தனை நாடுகளையும் அதோட தலைநகரங்களையும் புட்டுப்புட்டு வைக்குது. ஜூலி அவ கொழந்தையை ஐ ஏ எஸ் ஆக்கணும்னு இப்பவே ஜெனரல் நாலட்ஜ் கோச்சிங் அனுப்பிட்டிருக்கா. நர்மதாவோட பையன் அபாக்கஸ் ட்ரெயினிங் போறான். நம்ம பொண்ணு மட்டும் இன்னும் எதையுமே கத்துக்காம மக்கு மாதிரி வளரணுமா என்ன?"

இல்லம்மா...நீ புரிஞ்சுக்காம பேசுறே. இப்படி ரெண்டே வயசுல பள்ளிக்கூடத்துக்குத் தள்ளிவிடறதாலயோ, சின்ன வயசுலயே தலைநகரங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கிறதாலயோ, திருக்குறளைத் தலைப்பாடமா ஒப்பிக்கிறதாலயோ அறிவு வளர்ந்துடாது. குழந்தைகளுக்கு இயல்பா எந்த விஷயத்துல ஆர்வம் இருக்குன்னு படிப்படியா தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்தமாதிரி நாம சப்போர்ட் பண்ணி வழிநடத்தினாலே போதும்.

இப்பல்லாம் தினசரி செய்திகளைப் பார்த்தாலே புரியும் உனக்கு. படிப்பு விஷயத்துல அப்பா அம்மாவோட அதீத வற்புறுத்தல், பள்ளிக்கூடத்துல சந்திக்கிற படிப்பு சம்பந்தமான பிரச்சனைகள் தாங்காம நிறையக் குழந்தைகள்  சின்ன வயசிலயே தற்கொலை வரைக்கும் போயிடறாங்க. பள்ளிக்கூடப் படிப்பும் அதுல வாங்குற மதிப்பெண்களுமே முக்கியம்ங்கற நம்ம மனநிலை மாறணும். படிப்பு விஷயத்துல பிள்ளைகளை அடக்கியாளணும், அவங்களை நாம விரும்பின துறைல உக்காரவச்சிடணும்னு நினைக்கக்கூடாது"

நின்று, நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவள், சில வினாடிகள் மௌனமாய் என்னைப் பார்த்துவிட்டு உள்ளே போனாள். அப்பாடா, ஒருவழியா நாம சொன்னதை உணர்ந்து ஒத்துக்கிட்டா போலிருக்குது.  நம்ம பிள்ளையை 'ப்ளே ஸ்கூல்'ல இருந்து காப்பத்தியாச்சு என்ற சந்தோஷத்துடன், மகளின் அருகே போய் அவளைத் தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டேன்.

அதற்குள் உள்ளேயிருந்து திரும்பி வந்தவள், "இந்தக் கவர்ல ப்ரெட் சாண்ட்விச் இருக்கு. சட்டுன்னு சட்டையைப் போட்டுக்கிட்டுப்போயி, பத்து மணிக்கு ஸ்கூலோட ஆஃபீஸ் திறந்ததும் அப்ளிக்கேஷனை வாங்குங்க..." என்றாள்

"ஜானு, நான் இன்னும் குளிக்கக்கூட இல்லம்மா. அதுக்குள்ள என்ன அவசரம்...குளிச்சிட்டுக் கிளம்புறேன்..." என்றவனிடம்

"குளிச்சு, அலங்கரிச்சு, ஆடி அசைஞ்சு போயி, அப்ளிக்கேஷன் முடிஞ்சுபோச்சுன்னு வாங்காம மட்டும் வந்தீங்கன்னா அப்புறம்... " என்று அவள் வாக்கியத்தை உக்கிரமாக உச்சரித்து முடிப்பதற்குள் நான் வாசல் கேட்டில் இருந்தேன். என்னுடைய ஞாயிற்றுக்கிழமை ப்ரேக்ஃபாஸ்ட்  என் கையில் இருந்தது.

திங்கள், 24 மார்ச், 2014

சோறென்று சொன்னால் கேவலமா?

சில வருடங்களுக்குமுன், பழைய காகிதங்களைப் புரட்டிக்கொண்டிருந்த என் மகள், அம்மா, 'late' என்கிற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்னம்மா? என்றாள். தாமதம், அல்லது காலம் தாழ்த்தி என்று பொருள் கொள்ளலாமென்று செய்துகொண்டிருந்த வேலைகளுக்கிடையே சொல்லிவிட்டு மறந்துபோனேன். 

மறுநாள், பத்திரிகையில் நினைவு அஞ்சலியில் இருந்த ஒருத்தரைப் பார்த்து இவர் ''காலதாமதமான தாத்தாவா அம்மா?'' என்றாள். சட்டென்று எனக்கு எதுவும் விளங்கவில்லை. "அட, ட்யூப்லைட்  அம்மா, 'லேட்' ன்னா காலந்தாழ்த்தி, அல்லது தாமதம்ன்னு நேத்து நீங்கதானே சொன்னீங்க? என்றாள். 

முந்தினநாள் அவள் கேட்டது கல்யாணப்பத்திரிகையொன்றில் மணமகனின் தந்தை பெயருக்கு முன்னாலிருந்த 'லேட்' என்ற சொல்லைப் பார்த்து என்பது அப்புறம்தான் தெரிந்தது. "அட, அதைக் கேக்கிறியா? அந்த இடங்களில் 'லேட்' என்கிற வார்த்தை 'காலமான, இறந்துபோன' என்ற பொருளில் 'மங்கலமான' வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலப் பயன்பாட்டை அப்படியே பற்றிக்கொள்வதில் நம் மக்களுக்கு அலாதி ஈடுபாடு உண்டு. அப்படி வந்ததுதான் இதுவும்..." என்று விளக்கிச்சொன்னேன். 

இறந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படும் late மாதிரியே 'லேட்' என்கிற ஆங்கிலச்சொல்லுக்கான நேரடித் தமிழ் வார்த்தைகளும் பேச்சுவழக்கில் இறந்துபோனதாகத்தான் தோன்றியது எனக்கு. 
காலந்தாழ்த்தி, தாமதமாக எனும் வார்த்தைகள் உரைநடையில் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதோடு சரி. மற்றபடி, பல்லில்லாத பாட்டி முதல் பள்ளிக்கூடம் போகாத குழந்தை வரை எல்லாருக்குமே தாமதமாகிவிட்டது என்பதெல்லாம் மறந்துபோய் , 'லேட்டாயிருச்சு' என்று சொல்வதே லேட்டஸ்ட் ஃபாஷனாகி விட்டது. 

அப்டின்னா, இறந்தவர் என்பதைக் குறிப்பிடத் தமிழில் வார்த்தைகளே இல்லையா? என்றாள் மகள் மறுபடியும். ''ஏன் இல்லை? இருக்குதே... 'மறைந்த, காலமான, இறைவனடி சேர்ந்த' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்றேன்.'' அப்போ, இருக்கிற எத்தனையோ வார்த்தைகளை விட்டுவிட்டு எங்கிருந்தோ வந்த வார்த்தைகளைப் பிடிச்சு வச்சிருக்கோம் என்று சொல்லிச் சிரித்தாள் அவள். 

அவள் சிரிக்கையில், இந்த ஒருவார்த்தைக்கு மட்டுமா இந்த நிலைமை என்று நினைத்து எனக்கு மனசு வலித்தது, காலமாகிப்போன இன்னும் பல தமிழ் வார்த்தைகளை நினைத்து.

'late' மாதிரியே மிகச் சாதாரணமாகப் புழங்கப்படுகிற இன்னொரு வார்த்தை 'rice' செந்தமிழ்ச் சொல்லான சோறு என்பதைச் சொல்லவே சங்கடப்படுகிறது நம் நாகரீகத் தமிழ் மக்கள்கூட்டம். நினைக்கவே கஷ்டமாயிருக்கிற விஷயம் என்னன்னா, "சோழநாடு சோறுடைத்து" என்று பாடப்பட்ட பகுதியில்கூட "meals ready" போர்டுகளும், 'ரைஸ் வைக்கட்டுமா?' என்ற வார்த்தைகளையும், 'சாதம் போடவா?' என்ற கேள்விகளையும்தான் கேட்கமுடிகிறதே தவிர "இன்னுங் கொஞ்சம் சோறு போட்டுக்கோ..." என்று சொல்கிற வழக்கம் அனேகமாக மறைந்துவருகிறது. மொத்தத்தில், சோறும் "late சோறு" ஆகிவிட்டதென்று தோன்றுகிறது.


ஆங்கிலத்தில், ரைஸ் (rice) என்றால் அரிசி. வெறும் வேகாத அரிசி. Cooked rice, Steamed rice என்றால் அது வேகவைத்துச் சமைக்கப்பட்ட சோறு. இதை விட்டு, எல்லாமே ரைஸ் ஆகிப்போனது இன்று. வெந்ததுக்கும் வேகாததுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நம் தமிழ்மக்கள் என்று நினைக்கையில் வருத்தம்தான் வருகிறது. இனி, யாராவது ரைஸ் போடவா என்று கேட்டால், அவர்களிடம் எங்கே அரிசி போடணும், எங்கே சோறு போடணும் என்று கேள்வி கேட்டுக் கொஞ்சம் அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும் என்று ஆத்திரம்தான் வருகிறது.

ஆனால், மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் கொடுக்கிற விஷயம், தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோறு என்கிற சொல் இன்னும் மறக்காமல் உபயோகிக்கப்படுகிறது என்பதுதான். ஆனால், அதுவும் இந்தத் தலைமுறை தாண்டினால் இருக்குமா என்பது சந்தேகம்தான். 

அம்மா அப்பா என்று சொல்வதையே அகற்றி, மம்மி டாடியாக்கிவிட்ட தமிழகத்துக்கு, அவர்களுடைய முக்கிய உணவான சோற்றின் பெயர் மறந்துபோனதோ மறைந்து போவதோ ஒண்ணும் பெரிய விஷயமாயிருக்காது.

சனி, 8 பிப்ரவரி, 2014

பாசக்காரி சிறுகதை



நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தானும் பஸ்ஸுக்குப் பின்னால் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, மூச்சிரைக்க வந்து உட்கார்ந்தாள் முத்துப்பேச்சி.

சவத்துப்பய புள்ளைக...ஒத்த ரூவாய்க்குக் கூடவா வழியில்லாமப் போச்சு என்று திட்டியபடி, இடுப்பிலிருந்த துணி மூட்டையைத் தரையில் இறக்கிவைத்துவிட்டு, தன் பரட்டைத் தலைமுடியைத் தூக்கி முடிந்துகொண்டாள்.

அதற்குள் அடுத்தபஸ் வர, அவசர அவசரமாய் மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட எத்தனிக்கையில், சாலையிலிருந்த கல்லில் கால்தடுக்கி, கையிலிருந்த அவளது அழுக்கு மூட்டை விழுந்து சிதறியது. உள்ளிருந்த பழைய பள்ளிக்கூட யூனிஃபார்ம், பச்சைக்கலர் தாவணி, அட்டை கிழிந்துபோன ஐந்தாறு புத்தகங்கள், சட்டையில் குத்துகிற பேட்ஜ், குட்டிக்குட்டியாய்ப் பென்சில்களென்று அத்தனையும் தார்ச்சாலையில் பரவிக்கிடக்க, அதையெல்லாம் வேகமாகப் பொறுக்கியெடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பஸ் போயிருந்தது.

ஐயையோ... என்றபடி, திரும்பி நடந்தாள் அவள். எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்தார் தபால்காரர் சாமிக்கண்ணு. "என்ன, சாமிக்கண்ணு மாமா, வேலைக்கிப் போறியளா?" என்றபடி தன் காவிப்பற்களைக் காட்டிச் சிரித்தாள். "வீட்ல அத்தையும் மக்களும் சௌக்கியமா?", என்று அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டு, ஒரு அஞ்சு ரூவா இருந்தாக் குடுங்க மாமா, காப்பித் தண்ணி வாங்கணும் என்று உரிமையுடன் கேட்க, "ஏய், அவனவன் இங்க கஞ்சிக்கே திண்டாடுறான், கிறுக்குக் கழுதைக்குக் காப்பி கேக்குதோ காப்பி" என்றபடி சைக்கிளை வேகமாய் மிதித்துக் கடந்துபோனார் அவர்.

எதிரில், கூட்டமாய் பஸ்சுக்குக் காந்திருந்தவர்களையும் ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு நலம் விசாரித்தபடிக்  காசு கேட்டும், காப்பிக்கான காசு தேறவில்லை அவளுக்கு. நகர்ந்துபோய், அங்கிருந்த கொடிமரத் தூணில் சரிந்து, காலை நீட்டி  உட்கார்ந்தாள். கால் பெருவிரலில் நகம் பெயர்ந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அதை அவள் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. வாய் மட்டும் எதையோ விடாமல் முணுமுணுத்தபடியிருக்க, கை அனிச்சையாய் அசைந்து அசைந்து போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக்கொண்டிருந்தது.

முத்துப்பேச்சிக்கும் அது தான் சொந்த ஊர். பத்தாவது படிக்கும்போது, அவளது மொத்தக் குடும்பமும் படகு விபத்தொன்றில் செத்துப்போக, ஒற்றையாய் உயிர்பிழைத்தவள் அவள். படித்த படிப்பும் பெற்றவர்களோடு போய்விட, ஒட்டுத்திண்ணையுடன்கூடிய ஓட்டுவீடு ஒன்றைத் தவிர வேறெதுவும் சொந்தமில்லாமல் போனது அவளுக்கு. வயிற்றுப் பாட்டுக்காக, பத்துப் பாத்திரம் விளக்கியும், பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர்க்குடம் சுமந்தும் பாடுபட்டவளை விட்டுவைக்கவில்லை விதி.

பள்ளத்துத் தெருவிலிருக்கிற தன் வீட்டுக்கு ஒருநாள், பனங்காட்டு வழியே நடந்துகொண்டிருந்தபோது, முகம்தெரியாத மனித மிருகங்கள் சில ஒன்றுசேர்ந்து அவளைச் சீரழித்துவிட, பித்துப்பிடித்தவளாகிப்போனாள் அவள்.

அதற்குப்பிறகு, இரவு பகலென்ற வித்தியாசங்களெல்லாம் அவளுக்கு மறந்துபோனது. ஆனால், உறவுமுறை சொல்லி அழைப்பது மட்டும் மறந்துபோகவில்லை. அத்தை, மாமா, சித்தி, பெரியம்மா என்று ஊர்க்காரர்கள் அத்தனை பேரையும் உறவுசொல்லிக் கூப்பிடுவாள். பதிலுக்கு அவளிடம் பாசமாய்ப் பேசவேண்டிய உறவுகளெல்லாம் முறைத்துக்கொண்டு போனாலும், மூச்சிரைக்கிறவரைக்கும் அவர்களுக்குப் பின்னால் ஓடிப்போய் காசு கேட்பாள்.

அவள் துரத்தலுக்குப் பயப்படாதவர்கள்கூட, அவள் உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவதைக் கேட்க விருப்பமில்லாமல், சில்லறையைக் கொடுத்துவிட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்து போவதுண்டு.

சுத்தமாய்க் கையில் காசு கிடைக்கவில்லையென்றால், முக்குக்கடைக் குமரேசன் கடையில் அக்கவுண்ட் உண்டு அவளுக்கு. கடை வாசலில்போய், "சித்தப்பா..." என்றபடி சிரித்துக்கொண்டு நிற்பாள். அவரும், கடை வாசலிலிருந்து அவளை  நகர்த்துகிற மும்முரத்தில், காப்பியையும் ரொட்டியையும் வேலையாளிடம் கொடுத்து, வேகமாய்க் கொடுத்தனுப்பச் சொல்லுவார். ரொட்டியும் காப்பியும் தவிர, தட்டு நிறையப் பலகாரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளமாட்டாள்.

பதிலாகச் சில சமயம், காசென்று கையில் என்ன கிடைத்தாலும், கொண்டுபோய் காப்பிக்கடைக் குமரேசனிடம்  நீட்டுவாள். அவரும் அதைப் பேசாமல் வாங்கிக்கொள்ளுவார். வாங்காமல் போனால் உறவுமுறையோடு வசவுமுறையையும் அவள் வாயிலிருந்து வந்து விழும்.

அவளைப் பற்றி, ஊருக்குள் யாருக்கும்  அக்கறையில்லையென்றாலும், அவள் எப்போதாவது சோறு தின்பாளா என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் காப்பிக் கடைக் குமரேசன் மனசில் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.

நாலு நாளாய் அடைமழையடித்து அன்றைக்குத்தான் வானம் வெளிச்சத்தைப் பார்த்திருந்தது. மழைநேரமென்பதால் காப்பி, டீ வியாபாரத்துக்குக் குறைவில்லாமல்தான் இருந்தது. சட்டென்றுதான் முத்துப்பேச்சியின்  ஞாபகம் வந்தது குமரேசனுக்கு.  ஐந்தாறு நாளாய் அவள் கடைப்பக்கம் வரவில்லையென்று தோன்றவே, கடைப் பையனிடம் விசாரித்தார். அவனும் பார்க்கவில்லையென்று பதில் சொன்னான்.

சரக்கெடுக்க சந்தைப்பக்கம் போகையில், பஸ் ஸ்டாண்ட் திண்ணைகளில் தேடினார். அங்கும் அவள் தென்படவில்லை.  பள்ளத்துத் தெரு வீடும் பஸ்டாண்டுமே கதியென்று இருப்பவள் எங்கே போயிருப்பாள் என்ற கேள்வி அவரது மனதைக் குடைந்தபடியிருக்க, அவரையுமறியாமல் அவரது சைக்கிள் அவளது ஓட்டு வீடிருந்த தெருப்பக்கம் போனது.

இறங்கிப்போய்ப் பார்க்கத் தோன்றாமல் ஏதோ உணர்வு பின்னுக்கு இழுக்க, ஐந்தாறு வீடு தள்ளியிருந்த  தனலச்சுமியிடம் விசாரித்தார். "தெரியலண்ணே, முந்தாநாளு ராத்திரி பெய்த மழையில அவ இருந்த வீடு சரிஞ்சுபோச்சு. அவ இப்ப, எந்த வீட்டுத் திண்ணையில ஏச்சுபேச்சு வாங்கிக்கிட்டுக் கெடக்காளோ என்றபடி, காலிக்குடத்தை எடுத்தபடி வெளிக்கிளம்பினாள் தனலச்சுமி.

எதற்கும் பார்ப்போமே என்று, இடிந்துகிடந்த அவளது ஓட்டு வீட்டுப்பக்கம் போனார் குமரேசன். திண்ணையில் அவளுடைய அழுக்குத்துணி மூட்டை அடைமழையில் நனைந்து கிடந்தது. உள்ளே இறங்கிச் சரிந்திருந்த ஓட்டுக் குவியலுக்குள் எட்டிப்பார்த்தார். ஒன்றும் தென்படவில்லை அவருக்கு. திரும்பி நாலைந்து அடிவைத்தபோது, "காப்பி குடு  சித்தப்பா...காலெல்லாம் வலிக்குது..." என்று ஈனஸ்வரத்தில் கேட்டது அவளது குரல் .

உடம்பெல்லாம் அதிரத் திரும்பினார் அவர். ஓட்டுக் குவியலுக்குள் மறுபடியும் அவளைத் தேடியது அவரது பார்வை. உடைந்த வீட்டின் ஒருபக்கத்து மண்சுவர் அவள் இடுப்புக்குக் கீழே விழுந்து நசுக்கியிருக்க, அங்கே, ஓடுகளுக்கிடையே ஒடுங்கிக்கிடந்தாள் அவள். அழுத்துகிற சுவருக்கும் அடைமழைக்கும் நடுவே சிக்கி உரக்கக் குரல்கொடுக்கக்கூடமுடியாமல் துவண்டுபோயிருந்தாள் முத்துப்பேச்சி. எப்போதும்போல, அவளது ஒற்றைக் கை மட்டும் ஓடுகளுக்கு வெளியே நீண்டபடி, தன்னிச்சையாக எதையோ யாசித்தபடி அசைந்துகொண்டிருந்தது.



சனி, 4 செப்டம்பர், 2010

வாழாமல் வந்த வரலச்சுமி!


கழுவின பாத்திரத்தை அடுப்படியில கவுத்தி வச்சிட்டு கடுங்காப்பியைக் கையில் வாங்கிக்கிட்டு கிணத்தடியில போய் உங்காந்தாங்க லச்சுமி சித்தி.

காப்பியக் குடிச்சிட்டு, உளுந்தக் கழுவி கிரைண்டர்ல போடு. அப்டியே ராத்திரி சாப்பாட்டுக்கு ரசம் வச்சி தொவையலரைச்சிரு. பாத்துக்கிட்டிருந்த சீரியல்ல இருந்து கண்ணை நகர்த்தாம கவுரியத்தை சொன்னதும், கிணத்தடியிலிருந்து எந்திரிச்சி உளுந்துக் கிண்ணத்தை எடுத்துக்கிட்டு மறுபடியும் வெளிய போனாங்க லச்சுமி சித்தி. கால்ப்பக்கம் கிழிஞ்சிருந்த சேலையில் கால்தடுக்க, தூக்கிச் சொருகிக்கிட்டு, உக்காந்து உளுந்தைக் கழுவ ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல கிரைண்டர் ஓட ஆரம்பிச்சிது.

கைகள் அனிச்சையாய் வேலை செய்தாலும் சித்தியின் கண்கள் மட்டும் எப்பவும் வெறுமையாய் வேறெதையோ வெறித்துக்கொண்டிருக்கும். சின்ன வயசில் அத்தனை பேரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டு, ஜான்சிராணி என்ற செல்லப் பெயரோடு வளையவந்த சித்தி, இன்றைக்கு வேலைக்காரியைவிடக் கேவலமாய்ப்போனது கொடுமையிலும் கொடுமை.

ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டே பிள்ளைகள்தான் பார்வதி ஆச்சிக்கு. சித்திக்குக் கல்யாணம் பேசினப்ப ஆச்சிக்கு அதில் அத்தனை இஷ்டமில்லை. மாப்பிள்ளைக்கு,பக்கத்து ஊர்தான்னாலும்,  உத்யோகம் வடக்கே நாக்பூர்ல ரயில்வே வேலைனு சொன்னாங்க. அத்தனை தூரம் மகளை அனுப்பணுமான்னு தயங்கினாங்க ஆச்சி. ஆனா, நான் வாக்குக் குடுத்துட்டேன்னு சொல்லி, ஆச்சி வாயை அடைச்சிட்டாங்க தாத்தா.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பார்த்ததோட சரி. பொண்ணு வீட்டுக்காரங்க யாரும் மாப்பிள்ளையப் பாக்கல. ஆனா, மாப்பிள்ளைப் பையன் நல்ல நிறமாயிருப்பான்னு சொல்லிக்கிட்டாங்க. நாலு நாள்ல நாக்பூர்லயிருந்து மாப்பிள்ளையோட போட்டோ வந்துது. சித்தியையும் பாப்பு ஸ்டூடியோவுக்குக் கூட்டிக்கிட்டுப்போயி, பளிச்சுன்னு தெரியிறமாதிரி படம் எடுத்து, மாப்பிள்ளை வீட்ல கொண்டுபோய் குடுத்துட்டு வந்தாங்க தாத்தா.

முகூர்த்தத்தன்னிக்குதான் மாப்பிள்ளை வந்தார். காலைல ஆறுலேருந்து ஏழரைக்குள் கல்யாணம். ஏழு மணியாகியும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரல. ஏழே காலுக்கு வந்து அரக்கப்பரக்கத் தாலிகட்டி முடிச்சாங்க. அவங்களுக்குள்ளயே ஏதோ கசமுசன்னு பேசிக்கிட்டாங்க. மாப்பிள்ளை நல்ல நிறம், சித்தி நிறம் குறைச்சல்னாலும் சிரிச்ச முகமா லட்சணமா இருப்பாங்க. மணமேடையில் மாப்பிள்ளை ஒரு தடவைகூட பொண்ணு பக்கம் திரும்பவே இல்ல. முகத்திலும் எள்ளும்கொள்ளும் வெடிக்கிற மாதிரியே இருந்தாரு.

மறுவீட்டுக்குப் போகும்போது சித்தி ஒரே அழுகை. எல்லாம் பழகிட்டா சரியாயிடும்னு பக்குவம் சொல்லி அனுப்பி வச்சாங்க பெரியவங்க. ஆனா, கல்யாணத்துக்கு மறுநாளே, வேலை இருக்குதுன்னு சொல்லி நாக்பூர் கிளம்பிப் போயிட்டாராம் மாப்பிள்ளை. சித்திக்கிட்ட பேசக்கூட இல்லையாம்னு பின்னால பேசிக்கிட்டாங்க. வந்துருவான் வந்துருவான்னு மாமனாரும் மாமியாரும் சொல்ல, மூணு வருஷம் அங்கேயே இருந்தாங்க சித்தி. ஆனா, போன மாப்பிள்ளை வரவே இல்ல.

நாலாவது வருஷம் அவருக்கும் இன்னொரு பொண்ணுக்கும் கல்யாணம்ஆகி, ரெண்டு வயசில் பிள்ளையும் இருப்பதாகக் கடிதம் வர, அதைக் கேட்ட அதிர்ச்சியில், சோறு வடிக்கும்போது பாத்திரத்தைத் தவறவிட்டு, கை காலெல்லாம் தீப்பட்ட கொப்புளத்தோட ஆச்சி வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க சித்தி.

செல்லமா வளத்த பொண்ணு வாழாம வந்து நின்ன சோகத்தில் சீக்கிரமே போய்ச் சேந்துட்டாங்க ஆச்சியும் தாத்தாவும். ஆனா, எல்லாச் சோகத்தையும் உள்ளயே பூட்டிவச்சு உருக்குலைந்துபோன சித்தி, இன்னிக்கு தம்பி வீட்டுக்குச் சம்பளமில்லாத வேலைக்காரி.

வரலட்சுமியா வாழப்போனவங்க வாழாவெட்டியா வந்ததைக்கண்டு பலர் மனசு வருத்தப்பட்டாலும், சின்ன வயசில கொஞ்ச ஆட்டமா ஆடுனா, அதான் இன்னைக்கி அனுபவிக்கிறா என்று அழுக்கு வார்த்தைகளை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் பெண்களில் சிலர்.