புதன், 9 டிசம்பர், 2015

அடைமழையும் ஔவையின் மொழியும்!



மாரி அல்லது காரியம் இல்லை இது ஔவையின் மொழி. மழையில்லாவிட்டால் இவ்வுலகில் எதுவுமே இல்லைதான். ஆனால், இப்படியொரு மழையை சென்னை மாநகரமோ அதைச் சுற்றியிருக்கிற மக்களோ எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். 

ஆனால், இந்த மழை ஏகப்பட்ட காரியங்களைச் சத்தமின்றிச் செய்திருக்கிறது என்பதும் நிஜம். மக்களின் மனதில் நிறைய மாற்றங்களை விதைத்திருக்கிறது. இவர் இன்னார் என்பதையும் இது இன்னாதது என்பதையும் உரக்கச் சொல்லியிருக்கிறது, அடித்துச் சொல்லியிருக்கிறது. இந்த மாற்றம் எளிதில் நீங்காது என்றுதான் தோன்றுகிறது. 

மாரி அல்லது காரியம் இல்லை என்ற மொழி எவ்வளவு உண்மையோ அதைப்போல, அடுத்து வரும் ஔவையின் மொழியும். வானம் சுருங்கில் தானம் சுருங்கும். உண்மைதான். அப்படியென்றால் வானம் பெருகின் தானம் பெருகும் என்பதுதானே பொருள்? இங்கே வானம் பெருகி எம்மக்களின் தானம் செய்யும் குணத்தை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. இங்கே, பாதிக்கப்பட்டவர்களைவிட உதவி செய்ய முன்வருபவர்கள் அதிகம் என்று பாராட்டவைத்திருக்கிறது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரும் பணக்காரர்கள்வரை எத்தனையோபேர் பணமும் பொருளுமாக மனமுவந்து கொடுத்திருக்கிறார்கள்.  எத்தனை எத்தனையோ மக்கள் தங்கள் மக்களின் இன்னல் காணப் பொறுக்காமல் இறங்கி வந்து வேலை செய்கிறார்கள். எத்தனை எத்தனையோ இளைஞர்கள் ஓய்வு உறக்கமின்றி, ஓடி ஓடி உழைக்கிறார்கள். இவற்றையெல்லாம் காணக் கொடுத்ததும் இந்த மழையின் செயல்தான்.

அடுத்ததாக இன்னொரு ஔவையின் மொழி... நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. இதைத்தான் நம் மக்கள் தவறாக உணர்ந்துகொண்டார்கள் போலிருக்கிறது. நீர்நிலைகளை உடைய ஊரில் குடியிரு என்பது இதற்கான பொருள். ஆனால் நேரடியாக நீர்நிலைகளிலேயே குடியேறிவிட்டார்கள் நம் மக்கள். குடியேறியது மட்டுமா மிச்சமிருக்கிற நீர் வழித்தடங்களையும் மக்காத கழிவுகளால் மறைத்துவிட்டார்கள். இங்கே விளைந்ததுதான் அத்தனை துயரமும்.

இதைத்தான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தன் இன்னொரு மொழியால் எச்சரிக்கிறாள் ஔவை. இந்த மழை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைதான். இப்படியே போனால் இந்தச் சென்னையை என்னால் கூடக் காப்பாற்றமுடியாது என்று இயற்கையின் வாயிலாக இறைவன் கொடுத்திருக்கிற எச்சரிக்கை. 

அன்றைக்குச் செய்ததற்கெல்லாம் இன்றைக்கு பலன் கிடைத்திருக்கிறது. இனி, என்றைக்கும் இது நடக்காமலிருக்கவேண்டுமானால், இனிவரும் மழைக்குள் நம் தவறுகளைத் திருத்திச் சீர்செய்தல் மிக மிக அவசியம்.

                                                              ******