திங்கள், 20 செப்டம்பர், 2010

அம்மா நமக்கு...அப்பா அவங்களுக்கு!



மகனோடயும் பேரன்களோடயும் ஃபிரான்ஸுக்குப் போறியாமே...பிள்ளைங்க, பேரன்னு வந்துட்டா, பொம்பளைகளுக்குப் புருஷனெல்லாம் ரெண்டாம்பட்சமாயிடுது...எங்கிட்ட நீ ஒரு வார்த்தைகூடக் கேட்கல பாத்தியா ... அடுப்படியிலிருந்த மனைவியிடம் அடிக்குரலில் கேட்டார் பழனிச்சாமி.

அவரை மெள்ள நிமிர்ந்துபார்த்த அவரோட மனைவி ராஜம்மா, "பள்ளிக்கூடத்து வாத்தியாராயிருந்து ரிட்டையர்டும் ஆயாச்சு...நமக்கும் கல்யாணமாகி நாப்பது வருஷம் ஆகப்போகுது.  ஆனா,இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்க...பேரன் சொன்னதை அப்படியே நம்பிட்டு எங்கிட்ட வந்து கேள்வி கேக்கிறீங்க...சரி, விபரம் என்னன்னு எப்படியும் இன்னிக்குள்ள உங்களுக்குப் புரிஞ்சிரும்... அதுக்குள்ள, மாடியில மழைத்தண்ணி இறங்காம அடைச்சி நிக்குதுன்னு நெனைக்கிறேன். அதைக்கொஞ்சம் பாருங்க..." என்றபடி மிச்சப் பாத்திரங்களையும் மடமடவென்று விளக்கிப்போட்டாள் அவர் மனைவி.

கேள்விகள் மனசில் கனத்திருக்க, மெதுவாய் மாடிப்படியேறி மனைவி சொன்ன வேலையைக் கவனிக்கப்போனார் பழனிச்சாமி. மாடியில், மகனின் அறைக்குள்ளிருந்து அதட்டலாய்க் கேட்டது மருமகளின் குரல்.

"அப்போ, இப்பவே, எனக்கு வீட்டுவேலைக்கு ஒரு ஆளைப் பாருங்க... உங்க பையனையும் பாத்துக்கிட்டு, சமையல், வீட்டுவேலைன்னு அல்லாடமுடியாது எனக்கு"

"மெள்ளப் பேசு சுசி...வேலைக்கு ஆள் கூட்டிப்போறது ஒண்ணும் சாதாரண விஷயமில்ல...விசா செலவு, மாசச்சம்பளம், அவங்களுக்கான மத்த செலவுகள்னு ஏகப்பட்ட செலவாயிரும்... அதுக்கு, எங்கம்மா சொன்ன மாதிரியே அப்பாவையும் சேர்த்துக் கூடக் கூட்டிட்டுப்போயிரலாம்" குரலை இறக்கிப்பேசினான் குமரவேலு, வாத்தியாரின் மகன்.

"ஓ...அவங்க ரெண்டு பேரும் வந்தா மட்டும் செலவு ஆகாதா? அதுலயும் உங்கப்பாவுக்கு சர்க்கரை வியாதி. அடிக்கடி ஆஸ்துமா அட்டாக் வேற... ஃபிரான்ஸில இருக்கிற குளிருக்கு, அவருக்கு மருத்துவம் பாக்கிறதுலயே நம்ம காசெல்லாம் காலியாயிரும்" 'சுள்'ளென்று விழுந்தாள் மருமகள்.

ஆனா, அப்பாவை விட்டுட்டு வரமாட்டேன்னு அம்மா திட்டவட்டமா சொல்லிட்டாங்களே...அப்ப என்னதான் பண்றது?

உங்க தங்கச்சியும் இதே ஊர்லதானே இருக்காங்க...சொத்துல மட்டும் மகளுக்கும் பங்கு உண்டுன்னு சொல்றாங்கல்ல, அதேமாதிரி, சுமையையும் அவங்க கொஞ்சம் பகிர்ந்துக்கட்டுமே...ஒரு ரெண்டுவருஷத்துக்கு,அவங்க உங்கப்பாவைப் பார்த்துக்கட்டும். நீங்க, உங்கம்மாவை எப்படியாவது பேசி சரிக்கட்டிக் கூப்பிட்டுவரப்பாருங்க...

"அம்மாவைப்பத்தி உனக்குத்தெரியாது சுசி...அவங்க எப்படியும் அப்பாவை விட்டுட்டு வரமாட்டாங்க. பிள்ளையையும் பார்த்துகிட்டு வேலையையும் கவனிக்கக் கஷ்டம்னா, பிள்ளைகள் வளர்ற வரைக்கும் உன் மனைவியையும் குழந்தைகளையும் இங்க விட்டுட்டுப் போ"ன்னு சொல்றாங்க அவங்க...

என்னது? நானும் பிள்ளைகளும் இங்க தனியா இருக்கணுமா?

தனியா இல்ல சுசி...அப்பா அம்மாகூடத்தான்...

அப்போ, நீங்களும் உங்கம்மா சொன்னதைக்கேட்டு எங்களை இங்க கழட்டி விட்டுட்டுப்போகலாம்னு நினைக்கிறீங்க...இல்லே?

ஐயோ, இல்ல சுசி... அம்மா சொன்னதைத்தான் நான் சொல்றேன்...

ஆனாலும் உங்கம்மாவுக்கு இந்த புத்தி கூடாதுங்க. உங்களை அங்க தனியா அனுப்பிட்டு, நானும் புள்ளைங்களும் இவங்களோட தொணதொணப்பைக் கேட்டுக்கிட்டு, இங்க இருக்கணுமோ? நல்லாத்தான் திட்டம்போடுறாங்க, நம்ம ரெண்டுபேரையும் பிரிக்கிறதுக்கு.

பெரிய வார்த்தையெல்லாம் பேசாத சுசி...நீ என்ன சொல்றியோ, அதையே தான் அம்மாவும் சொல்றாங்க...அப்பாவைத் தனியா விட்டுட்டு அவங்களால நம்மகூட வந்து இருக்கமுடியாதுன்னு...

ஓஹோ, அவங்களும் நாமளும் ஒண்ணா? வயசான காலத்துல பெத்தவங்க, பிள்ளைங்களுக்கு ஆதரவா அரவணைச்சுப் போகணுமே தவிர, அவங்கவங்க சௌகரியத்தைப் பாக்கக்கூடாது. ஆனாலும் உங்கம்மா இப்படிச் சொல்லியிருக்கக்கூடாது" என்று உணர்ச்சிவசப்பட்டாள் மருமகள்.

அப்ப, ஒண்ணு பண்ணலாம் சுசி... நீ வேணும்னா, உங்கம்மாவைக் கூப்பிட்டுப்பாரேன். அவங்களும் இங்கே தனியாத்தானே இருக்காங்க...என்றான் குமரவேலு.

எங்கம்மாவை எப்படிக் கூப்பிடமுடியும்? அவங்களுக்கு மகளிர் மன்றம், அதுஇதுன்னு ஆயிரம் வேலை...அதுமட்டுமில்லாம, அங்க இங்கன்னு நாலு இடத்துக்குப் போய்வந்து இருக்கிற அவங்க எப்படி அங்கவந்து நாலுசுவத்துக்குள்ள நம்மளோட அடைஞ்சு கிடக்கமுடியும்? அதெல்லாம் முடியாது என்று அவசரமாய் மறுதலித்தாள் சுமி.

அப்போ என்னதான் பண்ணட்டும் நான்? என்னோட சம்பளத்துல வேலைக்கு ஆள்கூட்டிட்டுப்போறதெல்லாம் சாத்தியமில்ல...நீ வேணும்னா அம்மா சொன்னமாதிரி கொஞ்சநாள் இங்க இருக்கிறியா?...பக்குவமாய் ஊசியை இறக்கினான் குமரவேலு.

ஐயோ, ஆள விடுங்க சாமி, நானே அங்க பிள்ளையையும் பாத்துக்கிட்டு, வீட்டையும் பாத்துத்தொலைக்கிறேன்...யாரோட உதவியும், உபகாரமும் நமக்கு வேண்டாம் என்றபடி, கதவை அடித்துச் சாத்திவிட்டு ஆத்திரத்துடன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் மருமகள்.

மனதிலிருந்த கேள்விகளின் கனம்குறைய, மாடியிலிருந்து இறங்கத்தொடங்கினார் பழனிச்சாமி வாத்தியார்.

ராஜம்மா, மாடியில அடைச்சிருந்த கசடெல்லாம் மழைத்தண்ணியோட கீழ இறங்கிடுச்சு...இனிமே எந்தப் பிரச்சனையும் இல்ல...என்றவர், தனக்குக் காரியம் ஆகணும்னா இந்தகாலத்துப் பிள்ளைகள் எவ்வளவு சுயநலமா இருக்குதுங்க என்று தனக்குள் வியந்தபடி மனைவியைப் பார்த்தார். அவர் கண்களில் எப்போதையும்விடச் சற்று அதிகமாகவே கனிவு தென்பட்டது. 

***********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக