சனி, 4 செப்டம்பர், 2010

அகரம்முதலான அனைத்துக்கும் காரணமாய்...



அகரம் தொடங்கி நமக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்த அத்தனை ஆசிரியர்களும் நம் வணக்கத்துக்குரியவர்கள்தான். தாய்தான் நமக்கு முதல் ஆசிரியை என்று சொல்லுவார்கள். ஆனால்,ஆசிரியர்களாயிருந்த பெற்றோருக்குப் பிறந்து, ஆசிரியர்களாலேயே வளர்க்கப்பட்ட காரணத்தால் எப்போதும் என் மனதில் ஆசிரியர்களுக்கு உயர்வான ஒரு இடமுண்டு.

ஐந்தாம் வகுப்புவரை, ஆசிரியர்களாயிருந்த அப்பா அம்மாவுக்கு எங்கெல்லாம் மாற்றலாகிறதோ அங்கெல்லாம் சென்று படித்ததால், வீட்டிலிருக்கும்போதுகூட எனக்குப் பள்ளிக்கூடத்திலிருப்பதுபோலவே தோன்றும். ஆனால், ஒருநாள்கூட, வீட்டில் அப்பாவோ அம்மாவோ புத்தகத்தை எடுத்துப்படி என்று கட்டாயப்படுத்தியதில்லை. (பிள்ளை தானாவே படிக்கும் என்ற நம்பிக்கைதான்...)கண்டதைக் கற்றால் பண்டிதனாகலாம்னு அப்பா அடிக்கடி சொல்லக்கேட்டு, கடலை வாங்குகிற காகிதம் முதற்கொண்டு, எங்க ஊர் சின்னஞ்சிறு நூலகத்திலிருந்த எல்லாப் புத்தகங்களையும் புரட்டிப் பார்த்ததுண்டு.

அம்மாவின் பள்ளியைவிட்டு, ஆறாம் வகுப்புப் போனபோதுதான் புதிதாகச் சிறகுமுளைத்தது போலிருந்தது. டீச்சர் பொண்ணு என்கிற பெயர் மாறி, சொந்தப் பெயரோடு முன்னேறத் தொடங்கிய காலம். பின்னாலிருந்து இழுத்த அச்சத்தையும் தயக்கத்தையும் மாற்றி, 'உன்னால் முடியும், நீ எல்லாவற்றிலும் பங்கெடுக்கவேண்டும்' என்றுசொல்லி என்னுடைய முன்னேற்றத்துக்குப் பிள்ளையார் சுழியாயிருந்த என் சரித்திர ஆசிரியை எமிலிப்பொன் டீச்சரை என்றும் என்னால் மறக்கவேமுடியாது.

ப்ளஸ் ஒன் படித்தபோது, எனக்குக் கிடைத்த மிக அருமையான கணித ஆசிரியையைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். புரியலன்னு சொன்னா எத்தனை தடவையும் சொல்லித்தரத்தயங்காத ஆசிரியை அவர்கள்.அவங்க வகுப்பில் நடந்த ஒரு மறக்கமுடியாத சம்பவம்...

அன்றைக்கு கணிதத்தில் வகுப்புத் தேர்வு. ஒரு டெஸ்க்கில் ரெண்டுபேர் உட்கார்ந்து எழுத மற்றவர்கள் வகுப்பிற்குள்ளும், வராண்டாவிலும் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தோம்.திடீரென்று 'ஏய் எழுந்திரு' என்று டீச்சர் சத்தம்போட, எழுதிக்கொண்டிருந்த எல்லாரும் நிமிர்ந்தோம். வராண்டாவில் தரையில் உட்கார்ந்து தேர்வு எழுதிய ஒரு பெண், காலுக்கடியில் கணக்கு நோட்டை வைத்துப் பார்த்து எழுத, அது எங்க டீச்சர் கண்ணில் பட்டுவிட்டது. நீ எழுதியதுபோதும் பேப்பரைக் கொடுத்து விட்டுப்போ என்று கணக்கு டீச்சர் சொன்னதும், ஆயிரம் காரணம் சொல்லி சமாளித்துப் பார்த்தாள் அவள். அவற்றில் எதுவுமே நடக்காமல்போக, அழுதுகொண்டு வகுப்பை விட்டுப்போன விடுதி மாணவியான அந்தப்பெண், விடுதி அறைக்குச்சென்று பல்பை(bulb)நொறுக்கி வாயில்போட்டுக்கொண்டு, டீச்சர் திட்டியதால்தான் இப்படிச் செய்தேன் என்று நாடகமாடிவிட்டாள்.

வகுப்பில் அத்தனை பேருக்கும் கடும்கோபம், தான் தப்பு செய்ததோடு டீச்சர்மேல் பழிவரும்படி செய்திருக்கிறாளே என்று. ஆனால், அடுத்த நாள் வகுப்புக்கு வந்த எங்க டீச்சர், அவள் பழிபோட்டதில் எனக்கொன்றும் வருத்தமில்லை, ஆனால்,அவளுடைய செயலால் நல்லாப் படிக்கிற பிள்ளைகள்கூட அதிர்ச்சியில் நேற்று சரியாவே பரிட்சை எழுதல. அதுதான் எனக்கு வருத்தம் என்று சொன்னார்கள். இன்றுவரை அவர்களை மறக்கமுடியவில்லை.இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னன்னா, காப்பியடித்து மாட்டிக்கொண்ட அந்தப்பெண்ணும் ஒரு ஆசிரியரின் மகள். அவளால் அன்று இரண்டு ஆசிரியர்களுக்குச் சங்கடம்.

கல்லூரிக்காலத்தில் கிடைத்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களுமே குறிப்பிடத் தகுந்தவர்கள்தான். சின்ன விஷயமென்றாலும் அதனைச் சீர்தூக்கிப் பாராட்டி, இன்னும் என்னென்ன செய்தால் முன்னேற்றம் காணலாம் என்று, சொல்லிக் கொடுத்த தெய்வங்கள் அவர்கள். இன்றும் நான் கற்றுக்கொண்ட அந்த சாராள் தக்கர் கல்லூரியைக் கடந்து செல்ல நேர்ந்தால், கையெடுத்துக் கும்பிடத்தான் தோன்றுகிறது.

கல்லூரி நாட்களில், கவிதைப் போட்டிகளிலும் கவியரங்கங்களிலும் என்னைப் பங்கெடுக்கத்தூண்டி, என்னுடைய கவிதையைத் தானே பத்திரிகைக்கு அனுப்பி வைத்து, மாணவக் கவிஞர்கள் பகுதிக்கு எழுதச்சொல்லி ஊக்கமளித்த பேராசிரியை பிச்சம்மாள் அவர்களை என் வாழ்வில் மறக்க இயலாது.

வழக்கமாக நம் சிறுவயது ஆசிரியர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுவோம். ஆனால், ஆசிரியர்களுக்கு நம்மை நினைவிலிருக்காது. ஆனால்,போன வருஷம் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது, இதற்கு மாறாக நடந்தது ஒரு சம்பவம்.

வங்கியில் என்னைப் பார்த்துவிட்டு, என் அருகில்வந்து, "நீ இங்க தானேம்மா படிச்சே..." என்று கேட்ட அவர்களை, என்னால் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. 'ஆமா, ஆனா, நீங்க யாருன்னு தெரியலியே...' என்று நான் சொல்ல, அவங்க தன்னுடைய பேரைச் சொல்லவும், எனக்குக் கண்ணில் நிஜமாகவே கண்ணீர் வந்துவிட்டது.

என்னுடய ஆறாம் வகுப்பில், என் வகுப்பு ஆசிரியையாக இருந்த அவங்க, காலத்தின் கோலத்தில் எப்படியோ மாறிப்போயிருந்தாங்க. 'ஏன் டீச்சர் இப்படி ஆகிட்டீங்க...' என்று என்னையுமறியாமல் வார்த்தைகள் வந்துவிழ, 'என் கணவரும் இறந்துட்டாங்க, குழந்தைகளும் இல்லை, இப்போ,தனியாத்தான் இருக்கேன்' என்று அவங்க சொல்ல, மிகவும் வருத்தமாகிப்போனது. அத்தனை வருத்தத்திலும், "உங்க அம்மா ரொம்ப நல்லாப் படிப்பா... அவளை மாதிரி நீயும் நல்லாப் படிக்கணும்" என்று என் மகளின் தலையில் கைவைத்து ஆசியுரைத்தார்கள். நிஜமாகவே நெகிழ்ந்துதான் போனேன்.

குருவாக இருந்து குற்றங்கள் களையவைத்து, நம்மை உருவாக்கி உலகில் உயர்வினை அடையவைத்த அத்தனை ஆசிரியப் பெருமக்களையும் இந்த ஆசிரியர் தினத்தில் வாழ்த்தி வணங்குவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக