வெள்ளி, 24 செப்டம்பர், 2010

மைதா முறுக்குகைமுறுக்கு, அச்சு முறுக்கு, தேன்குழல்ன்னு எத்தனையோ வகை சாப்பிட்டிருப்பீங்க...ஆனா, அத்தனையிலும் எளிதானது இந்த மைதா முறுக்கு. ஒருமுறை செய்து ருசிபார்த்தா அப்புறம், உங்க அடுப்படியில் அடிக்கடி மைதாமாவு காலியாகும்.

மைதா முறுக்கு செய்யத் தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1/4 கிலோ

எள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை

மைதாவை மெல்லிய துணியில் கட்டி, ஆவியில் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து ஆறிய மைதாவை உதிர்த்துவிட்டு, உப்பு கலந்த நீர், சீரகம், எள் சேர்த்து கெட்டியாக, முறுக்கு அச்சில் பிழியும் பக்குவத்தில் பிசைந்துகொள்ளவும். காரம் தேவையென்றால் சிறிது காரப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

பிசைந்த மாவை, சிறு சிறு தட்டுகளில் பிழிந்து,அதனை எண்ணெயில் இட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான, எளிதான மைதா முறுக்கு தயார்.

************


திங்கள், 20 செப்டம்பர், 2010

அம்மா நமக்கு...அப்பா அவங்களுக்கு!மகனோடயும் பேரன்களோடயும் ஃபிரான்ஸுக்குப் போறியாமே...பிள்ளைங்க, பேரன்னு வந்துட்டா, பொம்பளைகளுக்குப் புருஷனெல்லாம் ரெண்டாம்பட்சமாயிடுது...எங்கிட்ட நீ ஒரு வார்த்தைகூடக் கேட்கல பாத்தியா ... அடுப்படியிலிருந்த மனைவியிடம் அடிக்குரலில் கேட்டார் பழனிச்சாமி.

அவரை மெள்ள நிமிர்ந்துபார்த்த அவரோட மனைவி ராஜம்மா, "பள்ளிக்கூடத்து வாத்தியாராயிருந்து ரிட்டையர்டும் ஆயாச்சு...நமக்கும் கல்யாணமாகி நாப்பது வருஷம் ஆகப்போகுது.  ஆனா,இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்க...பேரன் சொன்னதை அப்படியே நம்பிட்டு எங்கிட்ட வந்து கேள்வி கேக்கிறீங்க...சரி, விபரம் என்னன்னு எப்படியும் இன்னிக்குள்ள உங்களுக்குப் புரிஞ்சிரும்... அதுக்குள்ள, மாடியில மழைத்தண்ணி இறங்காம அடைச்சி நிக்குதுன்னு நெனைக்கிறேன். அதைக்கொஞ்சம் பாருங்க..." என்றபடி மிச்சப் பாத்திரங்களையும் மடமடவென்று விளக்கிப்போட்டாள் அவர் மனைவி.

கேள்விகள் மனசில் கனத்திருக்க, மெதுவாய் மாடிப்படியேறி மனைவி சொன்ன வேலையைக் கவனிக்கப்போனார் பழனிச்சாமி. மாடியில், மகனின் அறைக்குள்ளிருந்து அதட்டலாய்க் கேட்டது மருமகளின் குரல்.

"அப்போ, இப்பவே, எனக்கு வீட்டுவேலைக்கு ஒரு ஆளைப் பாருங்க... உங்க பையனையும் பாத்துக்கிட்டு, சமையல், வீட்டுவேலைன்னு அல்லாடமுடியாது எனக்கு"

"மெள்ளப் பேசு சுசி...வேலைக்கு ஆள் கூட்டிப்போறது ஒண்ணும் சாதாரண விஷயமில்ல...விசா செலவு, மாசச்சம்பளம், அவங்களுக்கான மத்த செலவுகள்னு ஏகப்பட்ட செலவாயிரும்... அதுக்கு, எங்கம்மா சொன்ன மாதிரியே அப்பாவையும் சேர்த்துக் கூடக் கூட்டிட்டுப்போயிரலாம்" குரலை இறக்கிப்பேசினான் குமரவேலு, வாத்தியாரின் மகன்.

"ஓ...அவங்க ரெண்டு பேரும் வந்தா மட்டும் செலவு ஆகாதா? அதுலயும் உங்கப்பாவுக்கு சர்க்கரை வியாதி. அடிக்கடி ஆஸ்துமா அட்டாக் வேற... ஃபிரான்ஸில இருக்கிற குளிருக்கு, அவருக்கு மருத்துவம் பாக்கிறதுலயே நம்ம காசெல்லாம் காலியாயிரும்" 'சுள்'ளென்று விழுந்தாள் மருமகள்.

ஆனா, அப்பாவை விட்டுட்டு வரமாட்டேன்னு அம்மா திட்டவட்டமா சொல்லிட்டாங்களே...அப்ப என்னதான் பண்றது?

உங்க தங்கச்சியும் இதே ஊர்லதானே இருக்காங்க...சொத்துல மட்டும் மகளுக்கும் பங்கு உண்டுன்னு சொல்றாங்கல்ல, அதேமாதிரி, சுமையையும் அவங்க கொஞ்சம் பகிர்ந்துக்கட்டுமே...ஒரு ரெண்டுவருஷத்துக்கு,அவங்க உங்கப்பாவைப் பார்த்துக்கட்டும். நீங்க, உங்கம்மாவை எப்படியாவது பேசி சரிக்கட்டிக் கூப்பிட்டுவரப்பாருங்க...

"அம்மாவைப்பத்தி உனக்குத்தெரியாது சுசி...அவங்க எப்படியும் அப்பாவை விட்டுட்டு வரமாட்டாங்க. பிள்ளையையும் பார்த்துகிட்டு வேலையையும் கவனிக்கக் கஷ்டம்னா, பிள்ளைகள் வளர்ற வரைக்கும் உன் மனைவியையும் குழந்தைகளையும் இங்க விட்டுட்டுப் போ"ன்னு சொல்றாங்க அவங்க...

என்னது? நானும் பிள்ளைகளும் இங்க தனியா இருக்கணுமா?

தனியா இல்ல சுசி...அப்பா அம்மாகூடத்தான்...

அப்போ, நீங்களும் உங்கம்மா சொன்னதைக்கேட்டு எங்களை இங்க கழட்டி விட்டுட்டுப்போகலாம்னு நினைக்கிறீங்க...இல்லே?

ஐயோ, இல்ல சுசி... அம்மா சொன்னதைத்தான் நான் சொல்றேன்...

ஆனாலும் உங்கம்மாவுக்கு இந்த புத்தி கூடாதுங்க. உங்களை அங்க தனியா அனுப்பிட்டு, நானும் புள்ளைங்களும் இவங்களோட தொணதொணப்பைக் கேட்டுக்கிட்டு, இங்க இருக்கணுமோ? நல்லாத்தான் திட்டம்போடுறாங்க, நம்ம ரெண்டுபேரையும் பிரிக்கிறதுக்கு.

பெரிய வார்த்தையெல்லாம் பேசாத சுசி...நீ என்ன சொல்றியோ, அதையே தான் அம்மாவும் சொல்றாங்க...அப்பாவைத் தனியா விட்டுட்டு அவங்களால நம்மகூட வந்து இருக்கமுடியாதுன்னு...

ஓஹோ, அவங்களும் நாமளும் ஒண்ணா? வயசான காலத்துல பெத்தவங்க, பிள்ளைங்களுக்கு ஆதரவா அரவணைச்சுப் போகணுமே தவிர, அவங்கவங்க சௌகரியத்தைப் பாக்கக்கூடாது. ஆனாலும் உங்கம்மா இப்படிச் சொல்லியிருக்கக்கூடாது" என்று உணர்ச்சிவசப்பட்டாள் மருமகள்.

அப்ப, ஒண்ணு பண்ணலாம் சுசி... நீ வேணும்னா, உங்கம்மாவைக் கூப்பிட்டுப்பாரேன். அவங்களும் இங்கே தனியாத்தானே இருக்காங்க...என்றான் குமரவேலு.

எங்கம்மாவை எப்படிக் கூப்பிடமுடியும்? அவங்களுக்கு மகளிர் மன்றம், அதுஇதுன்னு ஆயிரம் வேலை...அதுமட்டுமில்லாம, அங்க இங்கன்னு நாலு இடத்துக்குப் போய்வந்து இருக்கிற அவங்க எப்படி அங்கவந்து நாலுசுவத்துக்குள்ள நம்மளோட அடைஞ்சு கிடக்கமுடியும்? அதெல்லாம் முடியாது என்று அவசரமாய் மறுதலித்தாள் சுமி.

அப்போ என்னதான் பண்ணட்டும் நான்? என்னோட சம்பளத்துல வேலைக்கு ஆள்கூட்டிட்டுப்போறதெல்லாம் சாத்தியமில்ல...நீ வேணும்னா அம்மா சொன்னமாதிரி கொஞ்சநாள் இங்க இருக்கிறியா?...பக்குவமாய் ஊசியை இறக்கினான் குமரவேலு.

ஐயோ, ஆள விடுங்க சாமி, நானே அங்க பிள்ளையையும் பாத்துக்கிட்டு, வீட்டையும் பாத்துத்தொலைக்கிறேன்...யாரோட உதவியும், உபகாரமும் நமக்கு வேண்டாம் என்றபடி, கதவை அடித்துச் சாத்திவிட்டு ஆத்திரத்துடன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் மருமகள்.

மனதிலிருந்த கேள்விகளின் கனம்குறைய, மாடியிலிருந்து இறங்கத்தொடங்கினார் பழனிச்சாமி வாத்தியார்.

ராஜம்மா, மாடியில அடைச்சிருந்த கசடெல்லாம் மழைத்தண்ணியோட கீழ இறங்கிடுச்சு...இனிமே எந்தப் பிரச்சனையும் இல்ல...என்றவர், தனக்குக் காரியம் ஆகணும்னா இந்தகாலத்துப் பிள்ளைகள் எவ்வளவு சுயநலமா இருக்குதுங்க என்று தனக்குள் வியந்தபடி மனைவியைப் பார்த்தார். அவர் கண்களில் எப்போதையும்விடச் சற்று அதிகமாகவே கனிவு தென்பட்டது. 

***********


ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

குழந்தைகளைக் குற்றம் சொல்லாதீங்க...

"எட்டுப் புள்ளைங்க எங்க வீட்ல...ஆனா, வீட்டுச்சத்தம் வெளியில கேக்காது. ஆனா, இந்த ஒண்ண வச்சுக்கிட்டு நான் படுறபாடு இருக்கே...கடவுளே, இன்னும் தலை இருக்கிற இடத்துக்குக் கழுத்து வந்தா இன்னும் என்னென்ன பண்ணுமோ..." என்று அலுத்துக்கொள்ளும் அம்மாக்களைப் பார்க்கும்போது, இந்தக்காலத்துக் குழந்தைகள்தான் அதிகமா குறும்புத்தனம் பண்றாங்களா, இல்லேன்னா, அப்பா அம்மாதான் அவங்களை அதிகமா குத்தம் சொல்றாங்களா என்ற கேள்வி இப்பல்லாம் அடிக்கடி மனசில் எழுகிறது.

"இப்பல்லாம், விருந்து விசேஷம்னு எங்கேயும் போறதில்லை, எல்லாம் இவங்க வளந்த பிறகுதான்..." என்ற என் உறவுக்காரப் பெண்ணை ஏனென்று கேட்டபோது, "எங்க போனாலும் இவனுங்க பண்ற சேட்டையில திட்டு வாங்கிட்டுத்தான் திரும்பவேண்டியிருக்குது. அதனால இவன்களுக்குப் புத்தி தெரிஞ்சப்புறம்தான் எல்லாம்" என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோதே, கையை உதறிவிட்டுத் தெரிச்சு ஓடித் தெருவில் விளையாடப்போன அந்தச் சிறுவனைப் பார்க்கும்போது மனசில் சங்கடம்தான் தோன்றியது.

"அன்னிக்கு, ஒரு கிரகப்பிரவேசத்துக்குப் போயிருந்தேன். எல்லாரும் வீட்டை சுத்திப்பாத்துட்டு இருந்தப்ப, எங்கே இவன்னு பாத்தா மொட்டை மாடி கட்டைச் சுவரில் ஏறி நிக்கிறான்.ஒற்றை நிமிஷம் பார்க்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சுப்பார்க்கவே முடியல..." என்று சொல்லிவிட்டுக் கண்கலங்கிய அந்தத் தோழியைப் பார்க்கையிலும் கஷ்டமாகத்தான் இருந்தது.

இங்கே அமீரகத்தில், காருக்கு அடியில் ஒளிந்து விளையாடிய ரெண்டு குழந்தைகள், தந்தை வந்து காரை ஸ்டார்ட் பண்ணின பிறகும்கூட வெளியே வராமல், விளையாட்டில் திளைத்திருக்க, சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் பத்திரிகைகளில் வந்தது.

அன்றைக்கு, அந்தச் சிறுமியைக் காணவில்லையென்று தெருவே தேடிக்கொண்டிருந்தது. பக்கத்துப் பள்ளிக்கூடத்தில், சாலையில், கடைகளில், அடுத்தவீடு எதிர்த்தவீடென்று எல்லா இடத்திலும் தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல்போகவே, மொட்டைமாடியில் பாத்தீங்களா என்று ஒருவர் கேட்க, மொத்தக் கூட்டமும் மொட்டைமாடிக்கு ஓடியது. அங்கே ஒற்றையாய் வசிக்கும் இளைஞனுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள் அந்த மூன்றுவயசுக் குழந்தை.

இந்தக் குழந்தையாக மாடிக்குப்போனதா, அல்லது அவன்தான் கூட்டிட்டுப்போனானா என்று ஆளாளுக்கு அவரவர் மனப்போக்கின்படிப் பேச, "இன்னும் கொஞ்சநேரம் கதை கேட்டுட்டு வரேம்மா..." என்று தன் அம்மாவிடம் கள்ளமில்லாமல் கேட்டது அந்தக் குழந்தை. ஆனா, அதுக்குப் பதிலாகக் கிடைச்சதோ கூட ரெண்டு அடி மட்டும்தான்.

பக்கத்து வீட்டுக்காரி பொறாமை பிடிச்சவ, மாடி வீட்டுக்காரன் ஒரு மாதிரி, எதிர்த்த வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியல என்று அக்கம்பக்கத்தில் யாருடனும் நட்புப் பாராட்டமுடியாமல் கட்டிப்போடப்படுகிற மொட்டுகள் என்னதான் செய்யும்? காலையில் எட்டுமணிக்கு ஆட்டோவில் ஏத்தி அனுப்பினா, மாலை நாலரை மணிக்கு வந்து, நாலு பிஸ்கட்டும் பாலும் குடிச்சிட்டு, டாம் அண்ட் ஜெரியையோ, டோரா புஜ்ஜியையோ பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அடுத்து, இருக்கவே இருக்கு ஹோம் வொர்க்.

கதையில் வருகிற டாம் அண்ட் ஜெரி மாதிரி குறும்பும் கும்மாளமுமாய் இருக்கவோ, டோராவை மாதிரி தானும் வெளியில் செல்லவும் விளையாடி மகிழவும் அந்தக் குழந்தையும் ஆசைப்படுமென்று ஏன் அம்மா அப்பாக்களுக்குப் புரியமாட்டேனென்கிறது?

என்றைக்காவது ஒருநாள் பார்க்கில் விளையாடக் கூட்டிப்போனால்கூட, ஒன்னோட சைக்கிளை வச்சு நீ மட்டும் விளையாடு, விச்சுகிட்ட குடுத்தே பிச்சுப் போட்டுடுவான், என் கண்ணை விட்டு விலகி, தள்ளிப்போகக்கூடாது, கடையில இருக்கிற கருமத்தையெல்லாம் கேக்கக்கூடாது, கண்டவங்ககூடல்லாம் கதை பேசக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டளைகள் விதிக்கப்பட, என்னசெய்வதென்றே புரியாமல் திணறித்தான்போகிறது குழந்தை.

குச்சி மிட்டாயும், குருவி பிஸ்கட்டும், பச்சை மாங்காயும், பப்படமும் வாங்கி எச்சில் ஒழுகச் சாப்பிட்டுவிட்டு, பச்சைக்குதிரை, பம்பரம், பாண்டி, குச்சிக்கம்பு, கோலிவிளையாட்டென்று இச்சைப்படி தெருவில் விளையாடி வளர்ந்த தலைமுறை, தன் பிள்ளைகளைக் கயிற்றில் கட்டிய கன்றுக்குட்டிகளைப்போல் வளர்ப்பதைப் பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச்சொல்லப்போனால், 'அட, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...காலம் கெட்டுக்கிடக்குது' என்றுசொல்லிவிட்டுக் கடந்து போய்விடுகிறார்கள் பெற்றவர்கள்.

விபாஷா...வயது பத்து, சிம்லாவில் ஐந்தாம்வகுப்புப் படிக்கும் இந்தச் சிறுமி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதிக்கு இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள். விஷயம் என்னன்னா, சிம்லாவில் சின்னக் குழந்தைகள் விளையாட வசதியாகப் பூங்கா ஏதும் இல்லாத காரணத்தால், குழந்தைகள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்க நேரிடுகிறது. அதனால் எங்களுக்கு வசதியாகப் பூங்கா ஒன்று அமைத்துத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறாள் அந்தச் சிறுமி. சிறுமியின் வேண்டுகோளைப் பரிசீலிக்கும்படி, அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்.

வெளையாடப்போறேன், வெளையாடப்போறேன்னு, சொன்னதையே திரும்பத்திரும்பச்சொல்லித் தொல்லை கொடுக்காதே சனியனே...என்று அர்ச்சனையை ஆரம்பிக்குமுன்னால் கொஞ்சம் யோசியுங்க. படிப்பு, ட்யூஷன், பரீட்சை, மதிப்பெண் என்று ஏகப்பட்ட இறுக்கத்திலிருக்கிற குழந்தைகள் கொஞ்சம் மனதைத் தளர்த்திக்கொள்ள நாம் அனுமதித்தே ஆகவேண்டும்.அவர்களுக்குப்பிடிக்கிற விதத்தில் அவ்வப்போதாவது விளையாட அனுமதிக்கவேண்டும். கூடி விளையாடச்செய்தல் குழந்தைகளுக்குள் குழுவாகச் சேரும் மனப்பான்மையை உண்டுபண்ணும்.

மனமகிழ்ச்சியுடன் வளரும் குழந்தைகள் வளர்ந்தபிறகு, தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அடக்குமுறைக்குள் சிக்கிய குழந்தைகள் வளர்ந்த பின்னாலும், அவசரமும் ஆத்திரமும்தான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நாம் யோசிக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

சனி, 18 செப்டம்பர், 2010

அழகாயிருக்க இதெல்லாம் அவசியம்!!!அழகாயிருக்கணுமென்ற ஆசை அனைவருக்கும் பொதுவானது. சமீபத்தில் ஆரோக்கியவாழ்வு பெண்களும் பெறலாம் என்ற யோகாசனம் பற்றிய நூலைப் படிக்கையில், நூலாசிரியர் டாக்டர் ஹேமா எழுதியிருந்த விஷயங்கள்தான் இவை...மொத்தத்தில் ஒரு யோகியைப்போல் வாழச்சொல்வதாகப்பட்டது எனக்கு. நீங்களும் படிச்சுப் பாருங்க...பெண்களில் அழகுடன் இருக்க ஆசைப்படாதவர் யார்?

மனதில் ஏற்படும் உற்சாகம்தான் மனதின் அழகை அதிகப்படுத்தி முகத்தில் பிரதிபலிக்கும்.யோகப்பயிற்சியின்மூலம் மனம் அமைதியாகிறது. மிகச்சிறிய விஷயங்களுக்காக மன உளைச்சல்பட்டவர்கள் யோகப்பயிற்சிக்குப்பிறகு, அமைதியோடு நிதானத்துடன் எதையும் அணுகுவார்கள்.சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இயங்குபவர்கள் சாதனை புரிந்து, மன உற்சாகம் பெற்று அகத்தின் அழகு முகத்தில் தெரியவரும்.

மேலும், நமது வலது மூளை தூண்டப்பட்டு,கருணை, அன்பு,பிறர்க்கு உதவும் பாங்கு முதலியன வளரும். வெறுப்பு, கொபம், எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.நாம் வாழ்க்கையை நல்லமுறையில் வாழக் கற்றுக்கொள்ளுவோம்.மன அமைதிபெற நம் ஆன்றோர்கள் கூறிய சில வழிகள்...

* பிறரைக் குறைகூறாதீர்கள்

*கடவுள் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று உணருங்கள்.

*பொறுப்புக்களிலிருந்து தட்டிக்கழிக்காமல் உறுதியுடன் நிறைவேற்றுங்கள்.

*தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

*யாருடனும் வீண் விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

*எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

*வெற்றியின் மிதப்பில் மிகையாக இருப்பதையும், தோல்வியில் துவளுவதையும் நிறுத்துங்கள்.

*எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பிறர்க்கு முடிந்தமட்டும் உதவுங்கள்.

*பொறுமையாயிருங்கள்.

*திருப்தியுடன் இருங்கள்.

*பிறர் பொருளுக்கு ஆசைப்படவேண்டாம்.

*உலகம் அநித்தியம், மாயை என்பதை உணருங்கள்.

*எதற்கும் வருத்தப்பட்டு, சக்தியை வீணாக்காதீர்கள்.

*பிறர் உங்களுக்குச் செய்த கெடுதலையும், நீங்கள் பிறருக்குச்செய்த நல்லதையும் உடனுக்குடன் மறந்துவிடுங்கள்.

* கடவுளை நம்புங்கள்.

*எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.

*நிகழ்காலத்தில் வாழுங்கள்.கடந்தகாலத்தின் நினைவுகளிலும், எதிர்காலத்துக் கனவுகளிலும் மூழ்கிவிடாமல் இருங்கள்.

இவையெல்லாம் யோகப்பயிற்சிமூலம் தானாகவே உங்களைத் தேடிவரும்.உடல்வாகும் உள்ள அழகும் பெற்று வனப்புடன் திகழலாம்.

*****

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

குடைமிளகாய் பொரியல்


குடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்.

தேவையான பொருட்கள்
-----------------------

பச்சை குடைமிளகாய் - 300 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
--------
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு -1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை
------------

குடைமிளகாயைக் கழுவி, காம்பு மற்றும் விதைப் பகுதியை நீக்கிவிட்டு, மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காயுடன், சீரகம், இஞ்சியைச் சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டு உப்புச் சேர்த்து வதக்கவும். மூடிவைக்க வேண்டியதில்லை. மிக விரைவில் வதங்கிவிடும். வதங்கி வரும்போது, மஞ்சள் பொடி, வத்தல் பொடி சேர்த்துக் கிளறிவிடவும்.

இறுதியில், அரைத்த தேங்காய் கலவையைக் கொட்டி, மசாலா வாசனை போகும் வரை நன்றாக வதக்கி இறக்கிவிடவும்.

சூப்பரான குடைமிளகாய் பொரியல் ரெடி. இந்தப் பொரியலை, உதிர வடித்த சாதத்துடன் கலந்து, காப்ஸிகம் ரைஸ் என்று பிள்ளைகளுக்கு லஞ்ச்பாக்ஸிற்கும் தயார் செய்து அனுப்பலாம்.

************

புதன், 8 செப்டம்பர், 2010

லால்பாக் பெங்களூரு

அமீரகத்தின் அதிகமான வெம்மை, கண்ணைக்கூசவைக்கும் வெயிலிலிருந்துவிலகி, பெங்களூரு வந்தபோது,அவ்வப்போது பெய்த மழையும்,உறுத்தாத இளம்வெயிலும்,கண்ணைக் குளிர்விக்கும் பசுமையும் மனதை நிறைத்தது. பாதிநாளை எங்களுடன் பகிர்ந்துகொண்ட லால்பாகின் அழகான காட்சிகளில் சில இங்கே...சில்க் காட்டன் மரமாம்...

லால்பாக் ஏரியில் நீந்திய பாம்பு...
சனி, 4 செப்டம்பர், 2010

அகரம்முதலான அனைத்துக்கும் காரணமாய்...அகரம் தொடங்கி நமக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்த அத்தனை ஆசிரியர்களும் நம் வணக்கத்துக்குரியவர்கள்தான். தாய்தான் நமக்கு முதல் ஆசிரியை என்று சொல்லுவார்கள். ஆனால்,ஆசிரியர்களாயிருந்த பெற்றோருக்குப் பிறந்து, ஆசிரியர்களாலேயே வளர்க்கப்பட்ட காரணத்தால் எப்போதும் என் மனதில் ஆசிரியர்களுக்கு உயர்வான ஒரு இடமுண்டு.

ஐந்தாம் வகுப்புவரை, ஆசிரியர்களாயிருந்த அப்பா அம்மாவுக்கு எங்கெல்லாம் மாற்றலாகிறதோ அங்கெல்லாம் சென்று படித்ததால், வீட்டிலிருக்கும்போதுகூட எனக்குப் பள்ளிக்கூடத்திலிருப்பதுபோலவே தோன்றும். ஆனால், ஒருநாள்கூட, வீட்டில் அப்பாவோ அம்மாவோ புத்தகத்தை எடுத்துப்படி என்று கட்டாயப்படுத்தியதில்லை. (பிள்ளை தானாவே படிக்கும் என்ற நம்பிக்கைதான்...)கண்டதைக் கற்றால் பண்டிதனாகலாம்னு அப்பா அடிக்கடி சொல்லக்கேட்டு, கடலை வாங்குகிற காகிதம் முதற்கொண்டு, எங்க ஊர் சின்னஞ்சிறு நூலகத்திலிருந்த எல்லாப் புத்தகங்களையும் புரட்டிப் பார்த்ததுண்டு.

அம்மாவின் பள்ளியைவிட்டு, ஆறாம் வகுப்புப் போனபோதுதான் புதிதாகச் சிறகுமுளைத்தது போலிருந்தது. டீச்சர் பொண்ணு என்கிற பெயர் மாறி, சொந்தப் பெயரோடு முன்னேறத் தொடங்கிய காலம். பின்னாலிருந்து இழுத்த அச்சத்தையும் தயக்கத்தையும் மாற்றி, 'உன்னால் முடியும், நீ எல்லாவற்றிலும் பங்கெடுக்கவேண்டும்' என்றுசொல்லி என்னுடைய முன்னேற்றத்துக்குப் பிள்ளையார் சுழியாயிருந்த என் சரித்திர ஆசிரியை எமிலிப்பொன் டீச்சரை என்றும் என்னால் மறக்கவேமுடியாது.

ப்ளஸ் ஒன் படித்தபோது, எனக்குக் கிடைத்த மிக அருமையான கணித ஆசிரியையைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். புரியலன்னு சொன்னா எத்தனை தடவையும் சொல்லித்தரத்தயங்காத ஆசிரியை அவர்கள்.அவங்க வகுப்பில் நடந்த ஒரு மறக்கமுடியாத சம்பவம்...

அன்றைக்கு கணிதத்தில் வகுப்புத் தேர்வு. ஒரு டெஸ்க்கில் ரெண்டுபேர் உட்கார்ந்து எழுத மற்றவர்கள் வகுப்பிற்குள்ளும், வராண்டாவிலும் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தோம்.திடீரென்று 'ஏய் எழுந்திரு' என்று டீச்சர் சத்தம்போட, எழுதிக்கொண்டிருந்த எல்லாரும் நிமிர்ந்தோம். வராண்டாவில் தரையில் உட்கார்ந்து தேர்வு எழுதிய ஒரு பெண், காலுக்கடியில் கணக்கு நோட்டை வைத்துப் பார்த்து எழுத, அது எங்க டீச்சர் கண்ணில் பட்டுவிட்டது. நீ எழுதியதுபோதும் பேப்பரைக் கொடுத்து விட்டுப்போ என்று கணக்கு டீச்சர் சொன்னதும், ஆயிரம் காரணம் சொல்லி சமாளித்துப் பார்த்தாள் அவள். அவற்றில் எதுவுமே நடக்காமல்போக, அழுதுகொண்டு வகுப்பை விட்டுப்போன விடுதி மாணவியான அந்தப்பெண், விடுதி அறைக்குச்சென்று பல்பை(bulb)நொறுக்கி வாயில்போட்டுக்கொண்டு, டீச்சர் திட்டியதால்தான் இப்படிச் செய்தேன் என்று நாடகமாடிவிட்டாள்.

வகுப்பில் அத்தனை பேருக்கும் கடும்கோபம், தான் தப்பு செய்ததோடு டீச்சர்மேல் பழிவரும்படி செய்திருக்கிறாளே என்று. ஆனால், அடுத்த நாள் வகுப்புக்கு வந்த எங்க டீச்சர், அவள் பழிபோட்டதில் எனக்கொன்றும் வருத்தமில்லை, ஆனால்,அவளுடைய செயலால் நல்லாப் படிக்கிற பிள்ளைகள்கூட அதிர்ச்சியில் நேற்று சரியாவே பரிட்சை எழுதல. அதுதான் எனக்கு வருத்தம் என்று சொன்னார்கள். இன்றுவரை அவர்களை மறக்கமுடியவில்லை.இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னன்னா, காப்பியடித்து மாட்டிக்கொண்ட அந்தப்பெண்ணும் ஒரு ஆசிரியரின் மகள். அவளால் அன்று இரண்டு ஆசிரியர்களுக்குச் சங்கடம்.

கல்லூரிக்காலத்தில் கிடைத்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களுமே குறிப்பிடத் தகுந்தவர்கள்தான். சின்ன விஷயமென்றாலும் அதனைச் சீர்தூக்கிப் பாராட்டி, இன்னும் என்னென்ன செய்தால் முன்னேற்றம் காணலாம் என்று, சொல்லிக் கொடுத்த தெய்வங்கள் அவர்கள். இன்றும் நான் கற்றுக்கொண்ட அந்த சாராள் தக்கர் கல்லூரியைக் கடந்து செல்ல நேர்ந்தால், கையெடுத்துக் கும்பிடத்தான் தோன்றுகிறது.

கல்லூரி நாட்களில், கவிதைப் போட்டிகளிலும் கவியரங்கங்களிலும் என்னைப் பங்கெடுக்கத்தூண்டி, என்னுடைய கவிதையைத் தானே பத்திரிகைக்கு அனுப்பி வைத்து, மாணவக் கவிஞர்கள் பகுதிக்கு எழுதச்சொல்லி ஊக்கமளித்த பேராசிரியை பிச்சம்மாள் அவர்களை என் வாழ்வில் மறக்க இயலாது.

வழக்கமாக நம் சிறுவயது ஆசிரியர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுவோம். ஆனால், ஆசிரியர்களுக்கு நம்மை நினைவிலிருக்காது. ஆனால்,போன வருஷம் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது, இதற்கு மாறாக நடந்தது ஒரு சம்பவம்.

வங்கியில் என்னைப் பார்த்துவிட்டு, என் அருகில்வந்து, "நீ இங்க தானேம்மா படிச்சே..." என்று கேட்ட அவர்களை, என்னால் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. 'ஆமா, ஆனா, நீங்க யாருன்னு தெரியலியே...' என்று நான் சொல்ல, அவங்க தன்னுடைய பேரைச் சொல்லவும், எனக்குக் கண்ணில் நிஜமாகவே கண்ணீர் வந்துவிட்டது.

என்னுடய ஆறாம் வகுப்பில், என் வகுப்பு ஆசிரியையாக இருந்த அவங்க, காலத்தின் கோலத்தில் எப்படியோ மாறிப்போயிருந்தாங்க. 'ஏன் டீச்சர் இப்படி ஆகிட்டீங்க...' என்று என்னையுமறியாமல் வார்த்தைகள் வந்துவிழ, 'என் கணவரும் இறந்துட்டாங்க, குழந்தைகளும் இல்லை, இப்போ,தனியாத்தான் இருக்கேன்' என்று அவங்க சொல்ல, மிகவும் வருத்தமாகிப்போனது. அத்தனை வருத்தத்திலும், "உங்க அம்மா ரொம்ப நல்லாப் படிப்பா... அவளை மாதிரி நீயும் நல்லாப் படிக்கணும்" என்று என் மகளின் தலையில் கைவைத்து ஆசியுரைத்தார்கள். நிஜமாகவே நெகிழ்ந்துதான் போனேன்.

குருவாக இருந்து குற்றங்கள் களையவைத்து, நம்மை உருவாக்கி உலகில் உயர்வினை அடையவைத்த அத்தனை ஆசிரியப் பெருமக்களையும் இந்த ஆசிரியர் தினத்தில் வாழ்த்தி வணங்குவோம்!

வாழாமல் வந்த வரலச்சுமி!


கழுவின பாத்திரத்தை அடுப்படியில கவுத்தி வச்சிட்டு கடுங்காப்பியைக் கையில் வாங்கிக்கிட்டு கிணத்தடியில போய் உங்காந்தாங்க லச்சுமி சித்தி.

காப்பியக் குடிச்சிட்டு, உளுந்தக் கழுவி கிரைண்டர்ல போடு. அப்டியே ராத்திரி சாப்பாட்டுக்கு ரசம் வச்சி தொவையலரைச்சிரு. பாத்துக்கிட்டிருந்த சீரியல்ல இருந்து கண்ணை நகர்த்தாம கவுரியத்தை சொன்னதும், கிணத்தடியிலிருந்து எந்திரிச்சி உளுந்துக் கிண்ணத்தை எடுத்துக்கிட்டு மறுபடியும் வெளிய போனாங்க லச்சுமி சித்தி. கால்ப்பக்கம் கிழிஞ்சிருந்த சேலையில் கால்தடுக்க, தூக்கிச் சொருகிக்கிட்டு, உக்காந்து உளுந்தைக் கழுவ ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல கிரைண்டர் ஓட ஆரம்பிச்சிது.

கைகள் அனிச்சையாய் வேலை செய்தாலும் சித்தியின் கண்கள் மட்டும் எப்பவும் வெறுமையாய் வேறெதையோ வெறித்துக்கொண்டிருக்கும். சின்ன வயசில் அத்தனை பேரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டு, ஜான்சிராணி என்ற செல்லப் பெயரோடு வளையவந்த சித்தி, இன்றைக்கு வேலைக்காரியைவிடக் கேவலமாய்ப்போனது கொடுமையிலும் கொடுமை.

ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டே பிள்ளைகள்தான் பார்வதி ஆச்சிக்கு. சித்திக்குக் கல்யாணம் பேசினப்ப ஆச்சிக்கு அதில் அத்தனை இஷ்டமில்லை. மாப்பிள்ளைக்கு,பக்கத்து ஊர்தான்னாலும்,  உத்யோகம் வடக்கே நாக்பூர்ல ரயில்வே வேலைனு சொன்னாங்க. அத்தனை தூரம் மகளை அனுப்பணுமான்னு தயங்கினாங்க ஆச்சி. ஆனா, நான் வாக்குக் குடுத்துட்டேன்னு சொல்லி, ஆச்சி வாயை அடைச்சிட்டாங்க தாத்தா.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பார்த்ததோட சரி. பொண்ணு வீட்டுக்காரங்க யாரும் மாப்பிள்ளையப் பாக்கல. ஆனா, மாப்பிள்ளைப் பையன் நல்ல நிறமாயிருப்பான்னு சொல்லிக்கிட்டாங்க. நாலு நாள்ல நாக்பூர்லயிருந்து மாப்பிள்ளையோட போட்டோ வந்துது. சித்தியையும் பாப்பு ஸ்டூடியோவுக்குக் கூட்டிக்கிட்டுப்போயி, பளிச்சுன்னு தெரியிறமாதிரி படம் எடுத்து, மாப்பிள்ளை வீட்ல கொண்டுபோய் குடுத்துட்டு வந்தாங்க தாத்தா.

முகூர்த்தத்தன்னிக்குதான் மாப்பிள்ளை வந்தார். காலைல ஆறுலேருந்து ஏழரைக்குள் கல்யாணம். ஏழு மணியாகியும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரல. ஏழே காலுக்கு வந்து அரக்கப்பரக்கத் தாலிகட்டி முடிச்சாங்க. அவங்களுக்குள்ளயே ஏதோ கசமுசன்னு பேசிக்கிட்டாங்க. மாப்பிள்ளை நல்ல நிறம், சித்தி நிறம் குறைச்சல்னாலும் சிரிச்ச முகமா லட்சணமா இருப்பாங்க. மணமேடையில் மாப்பிள்ளை ஒரு தடவைகூட பொண்ணு பக்கம் திரும்பவே இல்ல. முகத்திலும் எள்ளும்கொள்ளும் வெடிக்கிற மாதிரியே இருந்தாரு.

மறுவீட்டுக்குப் போகும்போது சித்தி ஒரே அழுகை. எல்லாம் பழகிட்டா சரியாயிடும்னு பக்குவம் சொல்லி அனுப்பி வச்சாங்க பெரியவங்க. ஆனா, கல்யாணத்துக்கு மறுநாளே, வேலை இருக்குதுன்னு சொல்லி நாக்பூர் கிளம்பிப் போயிட்டாராம் மாப்பிள்ளை. சித்திக்கிட்ட பேசக்கூட இல்லையாம்னு பின்னால பேசிக்கிட்டாங்க. வந்துருவான் வந்துருவான்னு மாமனாரும் மாமியாரும் சொல்ல, மூணு வருஷம் அங்கேயே இருந்தாங்க சித்தி. ஆனா, போன மாப்பிள்ளை வரவே இல்ல.

நாலாவது வருஷம் அவருக்கும் இன்னொரு பொண்ணுக்கும் கல்யாணம்ஆகி, ரெண்டு வயசில் பிள்ளையும் இருப்பதாகக் கடிதம் வர, அதைக் கேட்ட அதிர்ச்சியில், சோறு வடிக்கும்போது பாத்திரத்தைத் தவறவிட்டு, கை காலெல்லாம் தீப்பட்ட கொப்புளத்தோட ஆச்சி வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க சித்தி.

செல்லமா வளத்த பொண்ணு வாழாம வந்து நின்ன சோகத்தில் சீக்கிரமே போய்ச் சேந்துட்டாங்க ஆச்சியும் தாத்தாவும். ஆனா, எல்லாச் சோகத்தையும் உள்ளயே பூட்டிவச்சு உருக்குலைந்துபோன சித்தி, இன்னிக்கு தம்பி வீட்டுக்குச் சம்பளமில்லாத வேலைக்காரி.

வரலட்சுமியா வாழப்போனவங்க வாழாவெட்டியா வந்ததைக்கண்டு பலர் மனசு வருத்தப்பட்டாலும், சின்ன வயசில கொஞ்ச ஆட்டமா ஆடுனா, அதான் இன்னைக்கி அனுபவிக்கிறா என்று அழுக்கு வார்த்தைகளை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் பெண்களில் சிலர்.