திங்கள், 7 நவம்பர், 2011

சிக்கிலிங்கிராமம்

திருச்செந்தூர் பாஸஞ்சர் நெல்லை சந்திப்பில் வந்து நின்றது. விலுக்கென்று ஆடி நின்றதில் ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண்ணை மூடியிருந்த பெரியவர் கணேசனுக்கு விழிப்பு வந்தது. ரயில் நின்ற கையோடு, கடகடவென்று அத்தனைபேரும் இறங்கிப்போய்விட, கம்பார்ட்மெண்ட்டில் அவர்மட்டுமே இருந்தார். கையில் சுருட்டிவைத்திருந்த மஞ்சள் பையைக் கீழே வைத்துவிட்டுத் தலையை விரல்களால் கோதிவிட்டுக்கொண்டார். முன்னெல்லாம்,வாரநாட்களில் ஸ்ரீவைகுண்டத்தில் வேலைபார்த்துவிட்டு, வார இறுதியில் ஊருக்கு வரும்போதெல்லாம், வீட்டுக்குப்போகிற ஆசையும் அம்மா கையால் சாப்பிடுகிற ஆவலுமாய் ரயில் நின்ற கையோடு வேகவேகமா இறங்கி நடப்பார் அவர். இப்போது ஊரில் நமக்கென்று யாரிருக்கிறார்கள் என்ற விரக்திவந்து விழிகள் நிறைந்தாலும், ஊர் நினைப்போடு நாமாவது இருக்கிறோமே என்ற எண்ணத்துடன்,மெல்ல எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கி நின்றார்.

போவோரும் வருவோருமாகப் பிளாட்பாரம் நெரிசலாக இருந்தது. காலையில் எழுந்ததும், வீட்டில் குடித்த செம்புத்தண்ணீர் வெறும்வயிற்றில் அலைய, எதையாவது கொண்டா கொண்டா என்று இரைச்சலிட்டது வயிறு. ரயில் நிலையத்தின் வாசலில் ஆட்டோவும், டாக்ஸிகளுமாகப் பாதையை மறைத்துக்கொண்டு நின்றன. பெரியவரே, எங்க போகணும்? என்றவாறு பின்னால் வந்த ஆட்டோக்காரரை, பக்கதுலதாம்ப்பா....வண்டியெல்லாம் வேணாமென்று விலக்கிவிட்டு, பக்கவாட்டுப்பாதையில் நடந்தார் கணேசன்.

சாலைக்குமாரசாமி கோயில் வாசலில் செருப்புகளைக்கழற்றிவிட்டு , ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கும்பிட்டுவிட்டு நிமிர்ந்தார் கணேசன். சுற்றிலும் நடைபாதைக்கடைகளில், பழங்கள், காய்கறிகள், பழைய புத்தகங்கள், பாத்திரங்களென்று விற்பனைக்கு எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள் வியாபாரிகள். மெல்ல ரயில்வே லைன்வழியாக நடந்தார். ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே சிக்கிலிங்கிராமத்து வயல்காற்று தொட்டுத் தழுவிக்கொண்டதுபோலிருந்தது அவருக்கு.

இப்போதிருக்கிற தலைமுறைப் பிள்ளைகளிடம் சிக்கிலிங்கிராமம் என்று சொன்னால் நிச்சயமாய் அவர்களுக்குத் தெரியாது. சிக்க நரசய்யன் கிராமம் என்கிற பெயரைப் பழைய தலைமுறை மக்கள் பாசமாய் சிக்கிலிங்கிராமமென்று சொல்ல, இப்போதிருக்கிற மக்கள் அதை சி.என்.வில்லேஜ் என்று நாகரீகமாய்ச் சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள்.

வேகவேகமாய்க் கடந்துபோகிற வாகனங்களைப் பார்த்தபடி தெருவோரமாய் நடந்தார். "ஏடே,கணேசா, எப்டிப்பா இருக்கே...எவ்வளவு நாளாச்சு ஒன்னப்பாத்து. உடம்புக்கெல்லாம் எப்டி, சௌரியம்தான? என்றபடி நரைத்த தாடியும் மீசையுமாகக் கிட்டத்தில் வந்தவரைச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை கணேசனுக்கு. "நீங்க..." என்று தயங்கியவரைப்பார்த்து, "பாத்தியா, ஆளையே தெரியல உனக்கு. அதுக்குத்தான் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து போகணும்கிறது என்றவர், மரக்கடை முத்துவேல் மகன், உன் சிநேகிதன் சோமு என்றபடி கையைப்பிடிக்க,"அடடே சோமுவா நீ? என்னய்யா, ஆளேமாறி அடையாளம்தெரியாமபோயிட்ட? என்றவாரு அவரைத் தோளுடன் சேர்த்தணைத்துக்கொண்டார் கணேசன்.

சோமுவுக்கும் கணேசனுக்கும் சிக்லிங்கிராமத்தில் பக்கத்துப்பக்கத்துவீடுதான். எட்டாவதுவரைக்கும் சாஃப்டர் ஸ்கூலில் ஒன்றாகத்தான் படித்தார்கள். எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு, அப்பா வைத்திருந்த மரக்கடைக்கு வேலைக்குப்போய்விட்டார் சோமு. படித்துமுடித்து பத்தொன்பதாவது வயதிலேயே பள்ளிக்கூட வாத்தியாரானார் கணேசன். சின்னவயசில் சோமுவும் கூட்டாளிகளுமாய்ச் சேர்ந்து பக்கத்துத் தோப்பில் மாம்பழம் திருடிய கதையெல்லாம் நினைவுவந்தது கணேசனுக்கு. நன்றாகக் கனிந்த மாம்பழங்களைப் பறித்து, கல்லில் வைத்து உருட்டியெடுத்து, சின்னதாய்த் துளையிட்டு, உள்ளேயிருக்கிற சாறைக்குடித்துவிட்டு, அதில் காற்றை ஊதிக் கண்ணுக்குப்படுகிறமாதிரி வைத்துவிட்டு வருவார் சோமு. தோட்டத்துக்கு வருகிற தோட்டக்கார மாரிமுத்துத் தாத்தா, அதை எடுத்துப் பார்த்து ஏமாந்துபோய், ஏழெட்டு ஊருக்குக் கேட்கிறமாதிரி அந்தப்பயபுள்ள, இந்தப்பயபுள்ள என்று அப்பாக்களையும் சேர்த்து வைதுவிட்டுப்போவார்.இப்ப நினைத்தாலும் சிரிப்புவந்தது அவருக்கு.

இப்ப அந்த இடத்தில் தோப்புமில்லை மாமரங்களுமில்லை, வரிசையாக வீடுகட்டிப் பெரிய குடியிருப்பாக்கியிருந்தார்கள். அப்புறம், எப்டியிருக்கே சோமு? உன் வீட்டம்மா சௌக்கியமா? மக்களெல்லாம் உன்னை நல்லாப் பாத்துக்கிறாங்களா? போனமுறை வந்தப்ப நீ வெளியூர்ல இருக்கிறதாச் சொன்னாகளே? என்றபடி அவரைப்பார்த்து ஆதுரமாய்க் கேட்டார் கணேசன். பதில் சொல்லாமல், கோயில் பக்கம் பார்வையை ஓட்டினார் சோமு. என் வீட்டுக்காரிக்கு உடம்புக்கு சொகமில்லாம மதுரை ஆஸ்பத்திரியில வச்சிருந்தோம் கணேசா. ரெண்டுமாசம் முன்னால அவளும் மேல போயிட்டா. சாவுக்கு வந்த புள்ளைக, பதினாறு கழிஞ்சதும் அதது வேலைமுடிச்சிருச்சுன்னு ஊருக்குப் போயிட்டாக. இப்ப நா மட்டுந்தான் இருக்கேன். குறுக்குத்துறை முருகனும், சாலைக்குமார சாமியும்தான் சதம்னு நாளை ஓட்டிக்கிட்டிருக்கேன். நீ எப்படியிருக்கே? உன் வீட்ல எல்லாரும் சௌரியமா? ஏன் ஒத்தையா வந்துருக்கே? கூட யாரையாவது கூட்டிட்டு வரலாம்ல என்று கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார் சோமு.

அவுகவுக வேலையப் பாத்துக்கிட்டு எல்லாரும் நல்லாருக்காகடே. எனக்குத்தான் நம்ம ஊரு,சாமி, இன்னும் மக்க மனுஷங்க ஞாபகமெல்லாம் அடிக்கடி வந்துருது. அப்படி வரும்போதெல்லாம் பையன்கிட்ட சொல்லிட்டு, கொஞ்சம் காசையும் வாங்கிக்கிட்டு இங்க வந்துருவேன்.நாள்முழுக்க நம்ம ஊர்த் தண்ணியையும் காத்தையும் நல்லா அனுபவிச்சிட்டு, சாயங்காலத்து ரயில்ல திரும்பிப்போயிருவேன். மாசத்துக்கொருக்கா வந்துட்டுத்தான் இருக்கேன். உன் சம்சாரம் தவறின விஷயம் தெரியாமப்போச்சுது சோமு என்று ஆறுதலாய் அவர் கையைபிடித்துக்கொண்டார் கணேசன்.

அது கிடக்குது விடு.உனக்குத்தான் மாசாமாசம் பென்சன் பணம் வருமுல்ல...அப்புறம் எதுக்கு மகன் கிட்ட கையேந்தணும்? என்றார் சோமு. அதெல்லாம் கையெழுத்துப்போட்டுக் குடுக்கிறதோட சரி சோமு. அவனாப்பாத்து செலவுக்கு ஏதாவது குடுப்பான். சிலசமயம் அதுவுங்கூட மறந்துபோயிரும் அவனுக்கு. ஆனா, என்னதான் நடந்தாலும், மாசத்துக்கொருவாட்டி வந்து நம்ம மண்ணை மிதிக்காம இருக்கிறதில்லை என்றார் கணேசன்.

சொல்லச்சொல்லக் கேக்காம, இங்க அரமனைமாதிரியிருந்த வீட்ட வித்துப்புட்ட. அதுமட்டும் இருந்திருந்தா வந்த காலோடு திரும்பாம நாலுநாள் இங்க தங்கணும்னு தோணியிருக்கும்ல என்றார் சோமு. என்ன பண்றது சோமு, உபயோகமில்லாத பழைய பொருளையெல்லாம் உடனே வித்துப் பணமாக்கிரணும்னு பாக்குதுக இந்த காலத்துப் புள்ளைங்க. என்ன செய்ய? அழுத்திக் கேட்டாக. அதான் வித்துக்குடுத்துட்டேன் என்றார் கணேசன். "ம்ம்...சொத்துசொகம் மட்டுமில்ல, சொந்தத்துலகூட பழசாகி, உபயோகமில்லாமப் போச்சுன்னா உதறத்தான் செய்யிறாங்க" என்றபடி, துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார் சோமு.

அதைவிடு கணேசா, நம்ம கூட்டாளிகள் நாலுபேர்ல, இப்ப நீயும் நானும்தான் இருக்கோம். மத்தவங்கல்லாம் போய்ச் சேர்ந்துட்டாங்க. சரிய்யா...ஒன்னப்பாத்ததுல இன்னிக்கி ரொம்ப சந்தோசம். நான், நம்ம குறுக்குத்துறைவரைக்கும் போறேன். நீயும் கூட வரியா என்றார் கணேசன். இல்ல, கணேசா...நீ போயிட்டு வா.எனக்கு அவ்வளவுதூரம் நடக்கத் தோதுப்படாது. நா இங்க கோயில் திண்ணையிலதான் உக்காந்திருப்பேன் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுத் திரும்பி நடந்தார் கணேசன். அதற்குள், பின்னாலிருந்து கணேசா... என்று மெல்லமாய்க் கேட்டது சோமுவின் குரல். என்னய்யா, என்றபடித் திரும்பினார் கணேசன். அடுத்ததடவை நீ இங்க வரும்போது, நான் இருப்பனோ மாட்டனோ...என் வீட்டுக்காரி போனதுக்கப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிட்டும் நாளாகிப்போச்சுது. இப்ப, உங்கூட சேர்ந்து ஒருபிடி சாப்பிடணும்னு தோணுது கணேசா என்று மெல்லமாய்ச் சொன்னார் சோமு. பக்கென்று தொண்டைக்குழிக்குள் அடைத்தது கணேசனுக்கு.

சிறுவயசில்,சிக்கிலிங்கிராமத்துக்கே செல்லப்பிள்ளை சோமு. எல்லார் கூடவும் நல்லாப் பேசுவான். என்ன வேலை சொன்னாலும் செய்வான். பள்ளிக்கூடத்துக்கு வரும்போது கால்சட்டைப்பைக்குள் நெல்லுப்பொரியும் அச்சுவெல்லமும் அள்ளிப் போட்டுக்கொண்டுவருவான். வழி நெடுக அவன் அள்ளியள்ளித்தர ரெண்டுபேரும் தோளில் கைபோட்டுக்கொண்டே கதைபேசிக்கொண்டு நடப்பார்கள். மரக்கடைக்கு வேலைக்குப்போனபிறகும்கூட, பள்ளிக்கூடம் விடும் நேரத்துக்கு, வாசலில் சைக்கிளில் வந்து நிற்பான். அண்ணாச்சி கடையில் வறுத்தகடலை வாங்கிக்கொடுப்பான். அம்மா செய்ததாகச்சொல்லிக் கொழுக்கட்டை கொண்டுதருவான்.பள்ளிக்கூடத்திலிருந்து, விடாமல் பேசிக்கொண்டே வீடுவரைக்கும் வந்துவிட்டு மறுபடியும் வேலைக்குப்போவான். அவனுக்கா இந்த நிலைமை ஆறவில்லை அவருக்கு.

தோழனின் கையைப்பிடித்து மறுபடியும் சாலைக்குமாரசாமி கோயில்பக்கம் இருந்த ஒரு உணவகத்துக்கு அழைத்துச்சென்றார் கணேசன். ஹோட்டலுக்குள் நுழைந்ததும் என்ன சாப்பிடுறே சோமு? என்றார். ரெண்டு வடையும் ஒரு தோசையும் சொல்லு கணேசா என்றார். தனக்கும் அதையே கொண்டுவரச்சொன்னார். ருசித்துச் சாப்பிட்ட சோமுவைப்பார்த்துக்கொண்டே தானும் சாப்பிட்டார் கணேசன். ஆளுக்கொரு காப்பியும் குடித்துவிட்டு அங்கிருந்து வெளியில் வந்ததும், கணேசா, நீ குறுக்குத்துறைக்குப் போயிட்டுவா. எனக்கு மனசும் வயிறும் நெறஞ்சிருக்கு. நா இங்க கோயில் திண்ணையில கொஞ்சநேரம் தூங்குறேன். திரும்பி வரும்போது கட்டாயம் என்னப் பாத்துட்டுத்தான் போகணும் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுச் சிரித்தபடி நடந்தார் கணேசன்.

குறுக்குத்துறைக்குப்போனதும், படித்துறையில் உட்கார்ந்து, கைநிறைய ஆற்று நீரை அள்ளிக்குடித்தார். சட்டை நனைந்து நெஞ்சு குளிர்ந்தது அவருக்கு. முருகனைக் கும்பிட்டு, மனசிலிருந்த கவலையெல்லாம் முறையிட்டுவிட்டு, பின்பக்கத்து மண்டபத்துக்கு வந்து சரிந்து உட்கார்ந்தார். சின்ன வயசில் அம்மாவுடன் ஆற்றில் குளிக்கவரும்போது,குளித்தபின் அங்கே நின்றுதான் அம்மா உடைமாற்றிக்கொள்ளுவாள். அம்மா உடுப்புமாற்றுகிற வரைக்கும், ஆற்றில் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருப்பார் கணேசன். பைக்குள்ளிருந்து துண்டை எடுத்து விரித்துக்கொண்டு கால்களை நீட்டிப்படுத்தார். அம்மா மடியில் படுத்துக்கொண்ட அதே சுகம் தெரியக் கண்களை மூடிக்கொண்டார். சற்றுநேரம் உறங்கி எழுந்திருக்க, உடம்பும் மனசும் இலேசானதுபோலிருந்தது அவருக்கு. ரயிலுக்கு நேரமாகிவிட்டிருந்தது. சோமுவைப் போய்ப்பார்க்க நேரமில்ல. ரயில்வே ஸ்டேஷனைநோக்கி நடந்தார். இரவு எட்டரைக்கெல்லாம் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டார்.

மறுநாள், காலையில், வீட்டுத்திண்ணையில் சாய்வுநாற்காலியில் கண்ணைமூடிப் படுத்திருந்தார் கணேசன். தொலைபேசி மணியடித்தது. எடுத்துப்பேசிய அவருடைய மகன் சரவணன்,"அப்பா, சிக்கிலிங்கிராமத்தில, உங்க சினேகிதர் சோமுங்கிறவர் நேத்து இறந்துபோய்ட்டாராம்" என்று சொல்ல, "குடுத்துவச்சவன்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்ணைமூடிக்கொண்டார் கணேசன்.