சனி, 11 டிசம்பர், 2010

ஆசையில் விழுந்த அடி!

பேருந்து நிலைய வாசலிலிருந்து தன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பினான் குமரேசன். மணி மூணரை...வயிறு பசியில் கூப்பாடு போட்டது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது கஸ்தூரி முக்குக்கடைப் பாட்டியிடம் வாங்கிக்கொடுத்த இட்லியும் காரச்சட்னியும் எப்பவோ காணாமல்போயிருந்தது.

மதியம் ரெண்டு மணியாகும்போது, கணேசன் கடையில ரெண்டு வடை வாங்கிச் சாப்பிடலாம்னு நினைச்சப்ப, அடையாமலிருக்கிற ஆட்டோமேல் வாங்கிய கடனும்,கொடுக்காமலிருக்கிற மூணுமாச வாடகையும் நினைவுக்கு வரவே, பசியையை அடக்கிக்கிட்டு சவாரிக்குக் கிளம்பினான் அவன்.

குமரேசனுக்கு மூணு குழந்தைகள். மூணுபேரும் வீட்டுப் பக்கத்திலிருக்கிற ஆரம்பப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறார்கள். குமரேசன் மனைவி கஸ்தூரி, பூ வாங்கிக் கட்டி, பக்கத்துக் காலனியில் தினமும் விற்றுவிட்டுவருவாள். ரெண்டுபேரும் முழுக்கமுழுக்க உழைச்சாலும், முழுசாய்ப் போதாத வருமானம்.

சின்னப்பையனுக்கு உடம்பு சுகமில்லாம போனப்ப வாங்கின கடனுக்கு, தன்னுடைய ஆட்டோவை அடகு வைத்துப் பணம் வாங்கியிருந்தான் அவன். வாங்கின கடனுக்கு அன்றாடம் நூறு ரூவா கட்டணும். அதுபோக வீட்டு வாடகை,  பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு வரவுக்கு மீறிச் செலவுகள்தான் வந்தது. இப்பல்லாம் ஸ்டாண்டிலும் ஆட்டோக்கள் அதிகமாகிவிட்டது. சில நாட்கள் குமரேசனால் தவணைக் காசைக்கூடக் கட்டமுடிவதில்லை.

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை, ஆட்டோ வருமாய்யா என்ற அந்தக்குரல் அசைத்தது. ராஜாஜி ஆஸ்பத்திரிக்குப் போகணும்னு  ஒரு வயசான அம்மாவும், கைக்குழந்தையோட ஒரு பெண்ணும் வந்துநின்னாங்க. ரெண்டுபேர்முகத்திலும் அப்பிக்கிடந்தது சோகம்.

"போலாம்மா..." என்று அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, ஆட்டோவைக் கிளப்பினான் அவன். "என்ன பெரியம்மா, ஆஸ்பத்திரிக்குப் போறீகளே,  உடம்புக்கு சுகமில்லியா? என்று மெல்லப் பேச்சுக்கொடுத்தான் குமரேசன். "ஆமாய்யா... என் பேரன்...இந்தா, இவளோட புருஷன், சைக்கிள்ல போகையில பாவி அந்த மினிபஸ்ஸுக்காரன் இடிச்சுத் தட்டிவிட்டுட்டான். இப்ப அவன் ஒத்தக்கால் ஒடிஞ்சு, ஆஸ்பத்திரியில கெடக்கான்.

மூணுநாளா ஆஸ்பத்திரியும் வீடுமா அல்லாடிக்கிட்டுக் கெடக்கொம்யா...ஒழைச்சு குடும்பத்தக் காப்பத்தவேண்டிய புள்ள, ஒடம்புக்கு முடியாம கெடக்குது. அந்த மீனாச்சித் தாயிதான் அவன முழுசா சொகமாக்கி, சீக்கிரம் வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்...அந்தப் பொண்ணு இடையில் தடுத்தும் கேக்காம, ஆத்தாமையை அவனிடம் கொட்டியது பாட்டி.

வருத்தப்படாதீங்க பாட்டி...உங்க பேரனுக்கு சீக்கிரமே சரியாயிரும்...பாண்டிகோயிலுக்குப் பதினோருரூவா நேர்ந்து முடிஞ்சுவையிங்க என்று ஆறுதலாய்ப் பேசியவன், அவர்களை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டுட்டு, பெட்ரோல் போடும்போதுதான் பார்த்தான். ஆட்டோவின் பின்னால், சாமான்வைக்கும் இடத்தில், ஒரு துணிப்பை இருந்ததை.

எடுத்துப் பிரித்துப் பார்த்தான். உள்ளே, ஏழெட்டு ஆரஞ்சுப்பழங்களும், ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் இருந்தது. சின்ன துணிக்கடை பர்ஸ் ஒன்றில் முன்னூத்தம்பது ரூபாயும் இருந்தது. பாட்டியும் அந்தப் பொண்ணும்தான் அதைத் தவறவிட்டிருக்கணும் என்று தோன்றியது அவனுக்கு.

அவங்களப் பாத்தாலும் கஷ்டப்பட்டவங்களாத்தான் தெரிஞ்சிது. ஆனாலும், நம்ம நெலமையைவிட மோசமா இருக்காது என்று நினைத்துக்கொண்டவனாய், பர்சிலிருந்த பணத்தை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, பெட்ரோலுக்குக் காசுகொடுத்துவிட்டுக் கிளம்பினான் .

நூறை கடனுக்குக் கட்டினாலும் மிச்சம் இருநூறுத்தம்பது ரூவா இருக்குது. புள்ளைகளுக்குப் புடிச்ச புரோட்டா சால்னா வாங்கிக் குடுக்கலாம். கஸ்தூரிக்கு பலகாரக் கடையில கொஞ்சம் பூந்தி. அப்புறம், ஆரஞ்சுப்பழம் சின்னவனுக்கு ரொம்பப் பிடிக்கும். மனசு சந்தோஷத்தில் நிறைய, சிம்மக்கல் தாண்டியதும் ஆட்டோவை உள்ரோட்டில் சல்லென்று திருப்பினான். உள்ரோட்டிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு ரிவர்சில் வந்த வண்டியைக் கவனிக்கவில்லை அவன்.

பட்டென்று மூளையில் உறைக்க, அதற்குள் கிட்டத்தில் வந்துவிட்ட மினிலாரியைக் கண்டு, சட்டென்று வண்டியைத் திருப்பினான் அவன். சந்தின் முனையிலிருந்த கரண்ட் கம்பத்தில் முட்டிக்கொண்டு நின்றது ஆட்டோ.

"எழவெடுத்தபயலே, கண்ணப் பொடதியிலயா வச்சிட்டுவந்தே...பட்டப் பகல்லயே தண்ணியப் போட்டுட்டு ஓட்டுறானுகளோ என்னவோ" என்று, கூடக்கொஞ்சம் கெட்ட வார்த்தை போட்டுத் திட்டிவிட்டுப்போனான் லாரிக்காரன். குமரேசனுக்குப் படபடப்பு நிற்கவில்லை.

கூட்டம் கூடிவிட்டது. பக்கத்துப் பெட்டிக்கடைக்காரர் ஒரு சோடாவை ஒடச்சுக் கொடுத்துட்டு, பாத்து வரக்கூடாதாய்யா...ஏதோ, ஏரோப்ளேன் ஓட்டுறமாதிரில்ல விர்ருன்னு வந்து திரும்புற...யாரு செய்த புண்ணியமோ, நீ  நெத்தியில ஒரு வெட்டுக் காயத்தோட  தப்பிச்சிட்டே...ரத்தம் வழியுது பாரு...சட்டுன்னு போயி, ராஜாஜி ஆஸ்பத்திரியில ஒரு கட்டுப் போட்டுட்டு,  அப்புறமா பொழப்பப் பாரு என்று அவர் பங்குக்கு வைதார்.

ஏதோ ஞாபகத்துல, சட்டுன்னு திரும்பிட்டேண்ணே... என்று நடுக்கத்தோடு சொன்னபடி, சோடாவுக்குக் காசெடுத்து நீட்டினான் அவன். காசெல்லாம் வேண்டாம். இனியாவது பத்திரமா ஓட்டிட்டுப்போ என்று பெட்டிக்கடைக்காரர் சொல்ல, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஆட்டோவை நகர்த்தினான் குமரேசன்.

வண்டியின் முன்னாடி லைட்டும், கண்ணாடியும் உடைந்துபோயிருந்தது. நெற்றியில் அடிபட்டது விண்விணென்று தெரித்தது. திரும்பியபோது பின்னாடியிருந்த துணிப்பை மறுபடியும்  கண்ணில் பட்டது. ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டாம்னு நினைச்சாலும் விதி அங்க போக வச்சிருச்சே என்று நினைத்தான் அவன்.

முன்னூத்தம்பதுக்கு ஆசைப்பட்டு, இப்ப ஆட்டோவுக்கு ஐநூறுக்குமேல் செலவாகும்னு தோணியது அவனுக்கு. ஆனா, அடிமட்டும் பலமாப் பட்டிருந்தா அந்தப் பாட்டியோட பேரனை மாதிரி, தானும் ஆஸ்பத்திரிப் படுக்கையில் விழுந்திருப்போம் என்ற நினைப்புத் தோன்ற, கால்வரைக்கும் நடுக்கம் ஓடியது குமரேசனுக்கு.

வண்டியை மெதுவாகப் பின்னுக்கு நகர்த்தினான். தூரத்தில் தெரிஞ்ச மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, சட்டைப் பையில் எடுத்துவைத்த முன்னூத்தைம்பது ரூபாய் காசை  மறுபடியும் அந்தப் பர்சில் வைத்துவிட்டு, ஆட்டோவைத் திருப்பினான் குமரேசன். அது  ராஜாஜி ஆஸ்பத்திரியை நோக்கிப் புறப்பட்டது.

*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக