வியாழன், 24 டிசம்பர், 2009

அழகான அல் அயின்

செயற்கையாக எவ்வளவுதான் அழகுபடுத்தினாலும், இயற்கைக்கு இருக்கும் சிறப்பு என்றும் அதிகம்தான். கண்ணுக்கெட்டியதூரம்வரை சுற்றிலும் தெரியும் கட்டிடக்காடுகளிலிருந்து விடுபட்டு இயற்கையின் குளிர்ச்சியை அனுபவிக்க சமயம் கிடைக்கும்போதெல்லாம் கட்டுச்சோறும் களைகட்டும் நண்பர் பட்டாளமுமாகக் கிளம்பிவிடுவது அமீரகத்து மக்களுக்கு வாடிக்கையான விஷயம்.

அமீரகத்தைப்பொறுத்தவரை குறிப்பிட்டுச்சொல்லும்படியாக சில இடங்களே இயற்கையின் அழகினை இன்னும் தங்களிடம் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன.அவற்றில் இந்த
அல் அயினும் (Al ain)ஒன்று. துபாயில் உள்ள ஹத்தா (Hatta)என்னும் மலைப்பகுதியைப்பற்றி இங்கே இருக்கும் பதிவில் பார்க்கலாம்.

துபாயிலிருந்து சாலை வழியாக கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர்கள். இருபுறமும் அலையலையாய் விரியும் அழகிய பாலை மணல்வெளி. பாலைவன நாட்டில் நாளைக் கழிக்கும் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரக்கூடிய பசுஞ்சோலை நகரம் அல் அய்ன். ஈச்சமரங்களும் மற்ற பயிர்வகைகளும் இங்கு அதிகமாக வளர்க்கப்படுகிறது. இங்கே அழகான பாலைவனச் சோலைகள் நிறைய உண்டு.

தலைநகரம் அபுதாபியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அல் அய்ன், ஐக்கிய அரபுக்குடியரசின் முதல் ஆட்சியாளரான ஷேக் செய்யத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பிறந்த ஊர். இங்கு அமைந்திருக்கும் ஜெபல் ஹஃபீத் எனப்படும் மலைப்பகுதி இந்நகருக்குப் பெருமைசேர்க்கும் இன்னொரு விஷயமாகும்.ஐக்கிய அரபுக்குடியரசில் இருக்கும் மிக உயர்ந்த மலை இது.

மஞ்சள் நிற மலையைப் பாருங்க...

 


மலை மட்டுமல்லாமல் அழகிய பூங்காக்கள்,மிருகக்காட்சி சாலை,க்ரீன் முபாசரா (green Mubazzara)எனும் பசுமைப்பகுதி, அங்கு காணப்படும் வெந்நீர் ஊற்று, மற்றும் பாரம்பரியச் சின்னங்களுடைய தொல்பொருள்கூடம் போன்றவை இங்கே பார்வையாளர்களை அதிகம் கவரக்கூடிய அம்சங்களாகும். சில படங்களாய்ப் பார்த்தால் இவையெல்லாம் பாலைவன நாட்டில் எடுக்கப்பட்டதா என்ற ஐயம்கூட எழலாம். அந்த அளவுக்குப் பசுமை தென்படுகிறது இங்கே.




 


 


 



 


 


 

புதன், 9 டிசம்பர், 2009

என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்?

பள்ளி செல்லும் காலத்திலிருந்தே இதுமாதிரி, நிறைய பயமுறுத்தல்களைப் பார்த்தாகிவிட்டது. "இன்னும் நாலே வருஷத்தில் நாமெல்லாம் அழிஞ்சுபோயிருவோம்.  நமக்கெல்லாம் முதுமையே வராமல் முடிவு வந்துடும்" என்றெல்லாம் பிள்ளைப்பருவத்தில் பேசித்திரிந்திருக்கிறோம்.

அதுபோல இப்போது இன்னுமொரு பயமுறுத்தல் 21/12 /2012 என்ற இலக்கில் மீண்டும் தொடங்கி மக்களை அச்சுறுத்தத்தொடங்கியுள்ளது, அதிலும் அதிகமாக, பள்ளி மற்றும் கல்லூரிப் பிள்ளைகளை.

நம்ம நாட்காட்டியில் நாளைக்கு என்ன கிழமையென்று தெரியாதவர்கள்கூட இப்போது மாயர்களின் நாட்காட்டியைப்பற்றி மாய்ந்துமாய்ந்து பேசுவது ஆச்சர்யம்தான்.

மாயர்கள், கிமு வில் தோன்றி, கி பி பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து, தென்னமெரிக்காவில் குறிப்பாகச் சொல்லப்போனால் குவாதிமாலா பகுதியில் வாழ்ந்த, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்த மனித இனமென்று சொல்கிறார்கள். இவர்கள் வேறுயாருமல்ல, தென்னகத்துத் தமிழினம்தான் என்றுகூட எங்கோ படித்ததாக நினைவு.

திடீரென்று இவர்களுடைய நாட்காட்டிக்கு என்ன ஆனதென்று உங்களுக்குக் கேள்வி எழலாம். மேலே சொல்லப்பட்ட மாயர்களின் நாட்காட்டி, கி.பி. 2012-ல் முடிவடைவது தான் இதற்கெல்லாம் காரணம்.

மாற்றங்கள் பலவற்றைப் பார்த்துப்பார்த்தே பழகிப்போனது நம் மனித இனம். மேடுகள் பள்ளமாகவும், வீடுகள் மணல்மேடுகளாகவும், ஆறு ஊராகவும், ஊரே ஆறாகவும், கடல்கரை குடியிருப்பாகவும், குடியிருப்புக்கள் கடலுக்குள்ளும் கால ஓட்டத்தில் மாறிப்போன கதையைக் கண்டும் கேட்டும் வளர்ந்திருக்கிறோம்.

ஆற்றில் வருகிற நீரெல்லாம் மணலெடுத்த பள்ளத்தில் நிரம்பிவிட, நீருக்குள் இருந்த பகுதியெல்லாம் இன்று மண்மேடாகி மரங்கள் மண்டிக்கிடப்பதை ஆற்றில்மணல் அள்ளும் பகுதியிலிருப்பவர்கள் அனைவரும் கண்கூடாகப் பார்த்திருப்பார்கள்.

அதுபோல,சின்ன வயசிலிருந்தே எங்க ஊர்ப்பக்கம் முதுமொழிமாதிரி ஒன்று சொல்வார்கள். "திருச்செந்தூர் அழிய, துவாரகாபுரி  தெரிய..." என்று. ஒருபுறம் பள்ளமாக மறுபுறம் உயரத்துக்கு வரும் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டியது. தென்கோடியிலிருக்கும் திருச்செந்தூர் கடலுக்குள் போகும்போது நாட்டின் மேற்குக்கோடியிலிருக்கும் கடல்கொண்ட துவாரகை மீண்டும் வெளியே தென்படும் என்பது முன்னோர் கணக்கு.

இன்றைய நிலைமையில் உலக வெப்பமயமாதலை, வருமென்று சொல்கிற பேரழிவோடு சம்பந்தப்படுத்தி மக்கள் கொஞ்சம் அதிகமாகவே பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். கடலோர நகரங்கள் தங்கள் பரப்பளவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறதென்பது நிரூபிக்கப்பட்ட உண்மைதான்.வந்துபோன சுனாமி இந்த அழிவிற்கான எச்சரிக்கை மணியை அடித்துவிட்டுச் சென்றிருக்கிறது.

வரும்காலத்திலும் இதுபோன்ற பெரும் சுனாமிகளையும், புதையவைக்கும் பூகம்பங்களையும், சுழன்றழிக்கும் சூறாவளிகளையும் உலகம் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

5125 வருடங்களைக் கொண்ட மாயர்களின் நாட்காட்டி வரும் 21/12/ 2012 அன்றுடன் முடிவுறுகிறது என்கிறார்கள். அந்தக் கணக்குப்படி, அந்த நாளுக்குப்பின் பூமிப்பந்துக்கு ஏதேனும் பேரழிவு நேரலாமென்ற அச்சமே மனிதர்களை ஆட்டிப்படைப்பதோடு, "2012" என்ற பெயரில் படமாகவும் வந்து இன்னும் பயமுறுத்தத்தொடங்கியுள்ளது.

இருக்கிற நாட்களை உற்சாகமாய்க் கழிக்கவிடாமல் மக்களைக் குழப்பிவிட்டு அதில் குளிர்காய்வதே இவர்களுக்கு வழக்கமாய்ப்போய்விட்டது. படத்தைப் பார்க்கலாம், படமெடுத்தவரின் கற்பனையை ரசிக்கலாம்...ஆனா, அதையே நினைச்சு பயந்துகிட்டிருந்தா அடுத்துவரும் நாளெல்லாம் அர்த்தமில்லாமல்போய்விடும்.

அதனால, இதில் நாம புத்தியோடு சிந்திச்சுப் புரிஞ்சுக்கவேண்டியது என்னன்னா, படம் பார்ப்பவருக்கு பயம் சேரும், படமெடுத்தவருக்குப் பணம் சேரும் என்ற எளிதான கணக்கைத்தான்.

சொல்லிக்கொண்டிருக்கிற கெடுவுக்கு இன்னுமிருப்பது கிட்டத்தட்ட 1105 நாட்கள்தான். அப்போது பார்க்கலாம் என்னதான் நடக்கிறதென்று. அதுவரைக்கும் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டுட்டு, முடிஞ்சவரைக்கும் இயற்கையை சேதப்படுத்தாம, அவரவர் கடமையை ஒழுங்கா செய்துட்டு வருவோம்.

அதுக்கப்புறம் இந்த 2012 ஆம் வருடத்தில் என்ன நடந்துதுன்னு அடுத்த
2013 ல் விவரமா மீண்டும் பேசுவோம்!

******

சனி, 28 நவம்பர், 2009

சம்பளம்!

"எங்கிட்ட காசு கிடையாது...சம்பளம் வந்தாத்தான் சாப்பாட்டுக்கே அரிசி வாங்கமுடியும். தயவு செஞ்சு என்னோட கொஞ்ச நஞ்ச நிம்மதியயும் கெடுக்காதீங்க. எரிச்சலுடன் சொல்லிவிட்டு, தானும் தன் மகனும் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குப் போனாள் பூமதி.

"அடேங்கப்பா, காசு கேட்டா, ராசா மவளுக்கு எவ்ளோ கோவம் வருது... புருஷங்காரன் கஷ்டம்னுசொல்லி காசுகேட்டா பொண்டாட்டிக்காரி தலைய அடகு வச்சாவது குடுக்கணும்டி...அத விட்டுட்டு அம்மாளுக்கு சந்தோஷம் போச்சாம்...நிம்மதிபோச்சாம்.... என்னத்தக் கொண்டுவாறாள்களோ இல்லையோ அப்பன் வீட்லருந்து இந்த திமிர மட்டும் மறக்காம கொண்டுவந்திர்றாளுக.."

உள்ளே போன போதை உசுப்பேத்திவிட்டிருக்க, உரக்கக் கத்திக்கொண்டிருந்தான் அழகேசன். பதில்சொல்லாமல் பாத்திரங்களை விளக்கிக்கொண்டிருந்தாள் பூமதி.

பூமதிக்கு உள்ளூரிலிருக்கும் தனியார் பள்ளியில் ஆயா உத்தியோகம். தன் ஐந்து வயது மகன் செந்திலையும் தான் வேலைசெய்யும் அந்தப் பள்ளியிலேயே சேர்த்திருந்தாள்.

திடீரென்று, "டேய் மவனே, அந்த நோட்டை இங்க கொண்டாடா..."

என்று குரல்கொடுத்தான் அழகேசன்.

 அப்பனோட கத்தலையும் அம்மாவின் பதிலையும்,மௌனமாக உள்வாங்கியபடி, எழுதுவதுமாதிரி உட்கார்ந்திருந்த மகன் செந்தில், ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, எழுந்துவந்து நோட்டை அப்பாவிடம் கொடுத்தான்.

அவன் கொடுத்த நோட்டில் "நிம்மதி, நிம்மதி" என்று தன் போதையில் நடுங்கும் விரல்களால் கோழி கிறுக்கியதுமாதிரி எழுதிவிட்டு,

"இந்தாடி, நீ கேட்ட நிம்மதி...தலைக்குமாட்டுல வச்சுட்டுத் தூங்கு"

என்று சொல்லி, ஏளனமாய்ச் சிரித்தபடி நோட்டை அவளிடம் விட்டெறிந்தான் அவன். கோபம் பெருகினாலும் அதைக் காட்ட இது தகுந்த சமயம் இல்லையென நினைத்தவளாக, அதை மனதிற்குள் அழுத்திக்கொண்டாள் பூமதி.  அழுத்தப்பட்ட ஆத்திரம் கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது.

சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தவள், நோட்டை எடுத்து மகனின் பைக்கட்டில் வைத்துவிட்டு, மகனைக் கூட்டிக்கொண்டுபோய் பாயில் படுக்கவைத்துவிட்டுத் தானும் படுத்துக்கொண்டாள்.

.............................................

மறுநாள் மாலை... பள்ளிக்கூடத்தைவிட்டு பூமதி மகனுடன் வெளியே வந்தபோது, வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான் அழகேசன்.

" பூவு, சம்பளம் வாங்கியிருப்பேல்ல, பணத்தைக்குடு...அடிக்குரலில் கேட்டான் அவன்.

பதில் பேசாமல், பையிலிருந்த கவரை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு, மகனைக் கையில் பிடித்தபடி வேகமாக நடந்தாள் அவள்.

என்னடி, கவர் மெலிஞ்சுபோயிருக்கு என்று குரல்கொடுத்தபடி, கவரைப் பிரித்தான் அழகேசன். அதற்குள், அவன் கேள்வி எட்டாத தூரத்துக்குச் சென்றிருந்தாள் அவள்.

கவருக்குள் எட்டாக மடித்த காகிதம் இருந்தது. "காசை எதுக்கு காகிதத்தில் மடிச்சுவச்சிருக்கா,கழுத..." என்று நினைத்தபடி காகிதத்தைப் பிரித்தான் அவன்....

உள்ளே "சம்பளம்" என்ற வார்த்தை தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. திகைத்தவனாக, பேப்பரைத் திருப்பிப் பின்னால் பார்த்தான். அங்கேயும் அதே வார்த்தை அவனைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.

***********

சனி, 21 நவம்பர், 2009

சுலபமான தக்காளிக் குழம்பு



கடைக்குப்போய் காய்கறி வாங்க நேரமில்லையா? வீட்ல தக்காளி, வெங்காயம் மட்டும்தான் இருக்கா? இருக்கிறதை வச்சு எளிதாகச் செய்யக்கூடிய குழம்பு இதோ...

தேவையான பொருட்கள் 

தக்காளி -கால் கிலோ
மிளகாய்த்தூள் -1தேக்கரண்டி
மல்லித்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி -1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காயளவு
உப்பு - தேவையான அளவு

அரைக்க

பெரிய வெங்காயம் (நறுக்கியது) -1
தேங்காய்துருவல் -1 கப்
சீரகம் -1 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் -1 குழி கரண்டி
நறுக்கிய வெங்காயம்- 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

*வெங்காயத்தை உரித்து நறுக்கி தேங்காய், சீரகத்துடன் அரைத்துக்கொள்ளவும்.

*புளியைக் கரைத்து வடிகட்டவும்.

*வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தை இட்டு சிவந்தவுடன் கடுகு சேர்த்து வெடிக்கவிட்டு கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

*தக்காளி வதங்கியதும் அதனுடன் புளிக்கரைசல், அரைத்த கலவை மற்றும் பொடிகள் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் மூடியிட்டுக் கொதிக்கவிடவும்.

*பின் மூடியை நீக்கி உப்பு சரிபார்த்துவிட்டு, மேலும் இரண்டு நிமிடங்கள் சிறு தீயில் வைத்து எண்ணெய் மிதந்ததும் இறக்கவும்.

சுலபமான தக்காளிக் குழம்பு தயார்.

இதனை, தாளித்த துவரம்பருப்புக் கூட்டுடனோ, முட்டை பொரியலுடனோ, இல்லை அப்பளத்துடனோ சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

செவ்வாய், 3 நவம்பர், 2009

நாசமத்துப்போற மக்கா....நல்ல தமிழ் பேசுங்க!

அம்மா, இன்னிக்கு என்ன டே?

வியாழக்கிழமை...

அப்டின்னா?

வெள்ளிக்கிழமைக்கு முன்னாடி வருமே அது...

time-table எடுத்துவைக்கணும்...சரியாச் சொல்லும்மா...

வெள்ளிக்கிழமைன்னா friday..அப்ப, இன்னிக்கு thursday,வியாழக்கிழமை...

thursday ன்னு முதல்லயே தெளிவாச் சொல்லவேண்டியதுதானே?

முகத்தைக் கோணலாக்கிச் சொல்கிறது வாண்டு...

"நீங்க இங்கேயிருந்துகிட்டு, வீட்டில தமிழ்லதான் பேசணும்னு எங்ககிட்ட சொல்றமாதிரி, தமிழ்நாட்டுல போய் சொல்லிப்பாருங்க...அப்புறம் என்னதான் பாஸ்போர்ட்டைக் காட்டினாக்கூட நீங்க துபாய்லதான் இருக்கிறீங்கன்னு நம்பமாட்டாங்க யாரும்..." பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்னாலும், நிஜம் சுடத்தான் செய்தது.

"வங்கிக்குப் போகணும், தானி ஒண்ணு கூட்டிக்கொண்டுவா" ன்னு சொன்னா, தமிழ்நாட்டுக்காரங்களே ஏதோ கீழ்ப்பாக்கத்து உருப்படியோன்னு சந்தேகமாத்தான் பார்ப்பாங்க.

அடுக்குப்பானையும் குதிருமா அழகா செம்மண் காவிபூசி, திண்ணையும் தூணுமா இருந்த கிராமத்துவீடுகளும், மாமம்மா பேசிய அழகு தமிழும்கூட இன்று மாறித்தான் போய்விட்டது.டவுண்பஸ்,லேட்டு,லெட்டர்,ஸ்டேஷன்,ஸ்பீக்கர்செட்டுன்னு அடுக்கடுக்கா ஆங்கிலம்தான் அவசரத்துக்கு வாய்ல வருது எல்லாருக்கும். 

குதிருன்னு சொன்னதும் நம்ம ஊர்ப் பழமொழி ஒண்ணு நினைவுக்கு வந்திருக்குமே... இடம் பொருள் அறியாமல் ஏதாவது உளறிக்கொட்டும்போது, "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லே"ங்கிற மாதிரி இப்படியா பேசுறதுன்னு கடிஞ்சுக்குவாங்க அந்தக்காலத்துப் பெரியவங்க.

குதிர், நெல்லைச் சேமித்துவைக்க அந்நாளைய வீடுகளில் ஆளுயரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் மண்பாண்டத்தின் பெயராகும். இதைக் குலுக்கை என்றும்கூடச் சொல்லுவாங்க.

குதிரிலில் சேமித்த நெல்லை எடுத்து,பெரிய பெரிய குத்துப்போணிகளில்,புழுங்க வச்சு, தட்டடியில கொட்டி, வரிவரியா கிண்டிக் காயவச்சு, பறவைகள் கொத்தாமலிருக்க பிள்ளைகளைக் காவல் வைக்க,

அக்கம்பக்கத்துப் பிள்ளைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு,

மழ வருது மழ வருது நெல்லள்ளுங்க,
முக்காப்படி அரிசிபோட்டு முறுக்கு சுடுங்க,
தஞ்சாவூரு மாமனுக்குக் கொஞ்சம் குடுங்க,
சும்மா வார மாமனுக்குச் சூடுபோடுங்க!

என்று கூடிப்பாடிக் குதூகலித்ததாக, மாமம்மா கதை சொல்ல, விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்ததுண்டு. மாமனின் அம்மா மாமம்மா, அம்மாவுடன் பிறந்த சகோதரன் அம்மாமன். எத்தனை அருமையான உறவுப் பெயர்களை மறந்துவிட்டோம்?

வெள்ளென எழுந்திருச்சி, செம்பு நெறைய நீத்துப்பாவத்தைக் குடிச்சிட்டு, வயலுக்குப்போயி, வேர்க்க விறுவிறுக்க கமலையில தண்ணியெறச்சு, வயலுக்குப் பாய்ச்சிட்டு, வீட்டுக்கு வந்து, கும்பா நிறைய பழைய சோறும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட அந்தக்கால மக்களின் உடலுரம் எங்கே, நாமெல்லாம் எங்கே!

வெள்ளென என்ற வார்த்தையை, விடியலில், அதிகாலையில் என்ற பொருளில் இன்னும் உபயோகிப்பார்கள். நீராகாரத்தை நீத்துப்பாவம் என்று சொல்லுவதை நெல்லை மாவட்ட முதியவர்களிடம் இன்னும் கேட்கலாம். கமலை என்பது மாடுகளை வைத்துக் கிணறுகளில் நீரிறைக்கும் முறை.

கும்பா, வட்டில் இரண்டும் அந்தக் காலத்து உணவு உண்ணும் பாத்திரங்களின் பெயர்களாம். கும்பா என்பது கிட்டத்தட்ட நம் சந்தனக் கிண்ணம் போலப் பெரியதாக இருக்குமாம்.நீருடன் உண்ணும் பழையசாதம் போன்றவற்றை உண்ண ஏற்றதாக இருக்குமாம். வட்டில் என்பது, தட்டுப்போல இன்னும் கொஞ்சம் உயரமான விளிம்புடன் வேலைப்பாடுகளுடன் கூடியதாய் இருக்குமென்று கூறக்கேட்டிருக்கிறேன்.

வைக்கப்படப்புல வாழக்கா பழுக்கவச்சு, கொச்சக் கயித்தில மட்டைவச்சு ஊஞ்சல்கட்டி, கருக்கலானதுகூடத் தெரியாம கூட்டாளிகளோட விளையாடிட்டு வீட்டுக்கு வந்தா, அம்மா சட்டகப்பையை அடுப்பில வச்சு, சூடுவைப்பேனென்று சுத்திவர, ஆச்சியோட மடியில் அடைக்கலம் புகுந்து...நம் தமிழ்க் குடும்பங்களில்தான் நினைத்து ரசிக்க எத்தனை எத்தனை விஷயங்கள்...

வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்

கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு

சட்டகப்பை - தோசை திருப்பும் கரண்டி

கருக்கல் - மாலை மயங்கிய வேளை

ஆச்சி - அப்பாவின் அம்மா.

இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ...

கடைசியா, தலைப்புக்கு வருவோம்...

அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது "அழிவில்லாமல் இரு" என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்...

ஆக, நாசமத்துப்போற மக்கா, மறந்துபோன நல்லதெல்லாம் மறுபடியும் நினைவில்கொண்டு, நல்ல தமிழை எல்லாரும் பேசிடுவோம்.

(இது ஒரு மீள்பதிவு)

******

குறுக்குத்துறையும் குருவித்துறையும்

என்னைக் கவர்ந்த ரெண்டு துறைகள் எதுன்னா, கட்டாயம் சொல்லுவேன் ஒண்ணு குறுக்குத்துறை இன்னொண்ணு குருவித்துறைன்னு( அறிவியல், தொழில்நுட்பம்னு ஏதாவது சொல்லுவேன்னு எதிர்பார்த்திருந்தா ஏமாற்றம்தான் :))காரணம் என்னன்னா,சொல்லப்போற ரெண்டுமே ஆற்றங்கரையில் அமைந்த ரெண்டு ஊர்களைப் பற்றிய விஷயங்கள்...

சொந்த மண்ணுன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு பாசம் குறுக்குத்துறையில. சிலநூறு அடிகளுக்கு அப்பாலிருக்கும் சிக்கநரசய்யன் கிராமம் எந்தையின் சொந்த ஊர். வீட்டில பல்விளக்க ஆரம்பிச்சு, குறுக்குத்துறை தாமிரபரணியில் வந்து வாய்கொப்பளிச்சு, கல்மண்டபத்திலிருந்து குதித்து நீச்சலடித்து,ஆழத்திலிருக்கும் அல்லியைக் பறித்துவந்து,ஈரம் காயாம முருகனைக் கும்பிட்ட கதையையெல்லாம் அத்தனை சுவாரசியமாய்ச் சொல்லுவாங்க என் அப்பா.

இதோ, ஆற்றங்கரையில் அழகிய கோயில்...



கோயிலின் பின்னாலிருந்து எடுக்கப்பட்ட கோபுரத்தோற்றம்...



அருகில், அரசமரத்தடிப் பிள்ளையார் கோயில்...




தன்னுடைய சிறுவயதில், ஆற்றங்கரைப் பாறைக்கருகில் தான் காசு சேர்த்துப் புதைத்துவைத்த கதையை என் அப்பா சொல்ல, ஆசையாய் என் பிள்ளைகள் அங்கே தோண்டிப்பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

காசுதோண்டிவைத்த பாறையும், தூரத்தெரியும் ரயில் பாலமும்...(படத்தை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்த்தால்தான் ரயில் பாலமெல்லாம் தெரியும்)



நெல்லை நகரத்தின் சிறப்புகளில் இந்தக் குறுக்குத்துறை முருகனுக்கு ஒரு தனியிடம் உண்டு. காலருகில் ஓடும் தாமிரபரணியின் சலசலப்பில் வள்ளி தெய்வானையுடன் சுகமாக வீற்றிருக்கும் முருகப்பெருமான், செந்தூர்க் கோயிலுக்காகச் செய்யப்பட்ட சிலாரூபமென்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதனால், திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கொண்டவர்கள் இங்கே அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார்களாம்.

கோயிலின் முகப்பிலிருந்து...



மாலை மயங்கிய பொழுதும், ஓடும் நீரின் மெல்லிய இசையும், கோயிலில் இருந்து எழுந்த தெள்ளிய மணியோசையும் மனதில் மிகவும் ரம்யமான உணர்வை ஏற்படுத்தியது.படித்துறையில் உட்கார்ந்து கால்களைக் கொஞ்சும் மீன்களோடு விளையாடிக்கொண்டிருந்தால் வீட்டுக்குக்கிளம்ப மனசே வராது.

அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்த கிராமம்,மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலிருக்கும் குருவித்துறை. பசுமைக்குள் புதைந்திருக்கும் சின்னஞ்சிறு கிராமம்.சின்னச்சின்ன வீடுகள், கோயில்கள், தென்னைமரச் சோலைகளென்று வைகைக்கரையில் அமைந்திருக்கும் அழகிய கிராமம் அது.

வைகையாற்றின் கரையில் வல்லவப் பெருமாளாக அருள்பாலிக்கிறார் வெங்கடேசப் பெருமான்.குரு பகவான் தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால், இந்த இடம் குருவின் துறையெனப் பெயர்பெற்று, பின் மருவி குருவித்துறையாகி, அயன் குருவித்துறையென்று என்று தற்போது அழைக்கப்படுகிறது.

குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் அவருக்குக் காட்சி தந்து, அவருடைய மகன் கசனை மீட்டு தந்தாராம். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லபப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் புகழ்பெற்ற குருஸ்தலமாகத் திகழ்கிறது.இந்த ஆலயம் ஊர்க்கோடியில் அமைந்திருந்தாலும் தேடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

இதோ, வல்லபப் பெருமாள் ஆலயம்...(படம் தினமலர்.காமில் வெளியானது)


இக்கோயில் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே பாருங்க.

நன்றி: தினமலர்.

மதுரையிலிருந்து அரசுப் பேருந்துகள் அடிக்கடி குருவித்துறைக்கு வந்து செல்கின்றன. கிராமத்திற்குள் போகும்போது கனகம்பீரமாகக் காட்சியளித்தது பெத்தண்ண சாமி கோயில். கிராமத்து மக்களின் காவல் தெய்வம் அவர். ஊர் மத்தியில் மையமாக அமைந்திருக்கிறது,
பத்திரகாளியம்மன் கோயில். சித்திரை மாதத்தில் இந்த அம்மனுக்கு சிறப்பாய்த் திருவிழா நடக்கிறது.

விவசாயம், பால் உற்பத்தி, மற்றும் தென்னை சார்ந்த தொழில்களும் இங்கு முக்கியமான தொழில்களாகத் தெரிகிறது.

இதோ, பத்திரகாளியம்மன் ஆலயத்திற்குள் உள்ளே நுழைந்ததும் செல்லப் பிள்ளையார்...



சிவனின் ஓவியம் வரைந்திருப்பது ஆலயச்சுவரில் தான். மறுபுறத்து ஓவியத்தில் மகிஷனை வதைத்த மாகாளி...



இதோ,பெத்தண்ண சாமி கோயில்...



கம்பீரமாகக் குதிரையில்...



குருவித்துறையை விட்டுப் புறப்படுகையில் இருட்டிவிட்டது. தூரத்து மலையில் நெருப்பு ஓவியமாகப் புகையுடன் தெரிந்தது காட்டுத்தீ. வழியில் கண்ட,கண்ணுக்கழகான காட்சிகள் மனதை நிறைத்திருந்தது.

சனி, 24 அக்டோபர், 2009

பேர் படும் பாடு!!!

அங்கிரு...அங்கிரு...குரல் கேட்டுத் திரும்பினேன்.(சட்டுன்னு சாலமன் பாப்பையா மனசுக்குள் வந்துபோனார்) யாரை, யாரு, எங்கேயிருக்கச் சொல்றாங்கன்னு ஏதும் புரியாமல் குரல்வந்த திக்கை எட்டிப்பார்த்தேன்.

விடுவிடுன்னு ஓடிவந்திச்சு அந்தப்பொண்ணு. என்ன பாட்டிம்மா கூப்டியான்னு கேட்டுச்சு. ஆச்சர்யம் எனக்கு. அங்கிருன்னு ஒரு பேரான்னு அதிசயித்து, ஆமா, ஒம்பேரு என்னம்மான்னேன். அதுவா, எம்பேரு அங்கயற்கண்ணி...அதைத்தான் எங்க வீட்ல இப்புடிக் கூப்பிடுவாங்கன்னு சொல்லிச் சிரிச்சது. அம் கயல் கண்ணி,(அழகிய கயல் போன்ற கண்களை உடையவள்) எத்தனை அழகான செந்தமிழ்ப்பெயர்...அதுக்கு இந்தக் கதியான்னு திகைச்சுப்போனேன்.

இதுமாதிரி, நான் ஆறாப்புப் படிச்சப்ப எனக்கு ஒரு டீச்சர் இருந்தாங்க. பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்கல்லாம் அவங்களை வளவளத்தா டீச்சர்ன்னு சொல்லுவாங்க. புதுசா சேர்ந்த எனக்கு இது ஏன்னு புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது, அறம்வளர்த்தாள் ங்கிற அவங்க பேரை வசதிக்கேத்தமாதிரி வளவளத்தான்னு மாத்தி வச்சிருக்காங்கன்னு.

இதுமாதிரி, எங்க குடும்பத்தில எனக்கு நாட்னம்,செவனி ன்னு ஒரு சித்தியும் பெரியம்மாவும் இருக்காங்க. விவரம் தெரியிறவரைக்கும் நானும் அப்படியேதான் சொல்லியிருக்கேன். அப்புறமா ஆர்வக்கோளாறுல விசாரிச்சப்பதான் தெரிஞ்சிது சிவகனி, செவனியாவும், நாகரத்தினம் நாட்னமாகவும் ஆனது.

அது மாதிரி, உம்மாச்சின்னு சாமியைச் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா சும்மாச்சி தெரியுமா? என்னோட படிச்ச ஒரு இஸ்லாமியப் பெண்ணோட பேர் இது.என்னடி பேர் இதுன்னு எதேச்சையா விசாரிச்சா, சுலைமான் நாச்சி ங்கிற பேர்தான் சும்மாச்சியா ஆயிருச்சுன்னு குரல் கம்மச் சொல்லிச்சு அந்தப் பொண்ணு.

நம்மளோட பேர் தான் இப்படிப் பாடாப்படுதுன்னா, உறவுப்பெயர்கள் சிலது படும்பாடு இன்னும் சுவாரஸ்யம். என்னோட மாமா பையன் பிறந்து, பேச ஆரம்பிச்ச காலத்தில். சொல்லிக் குடுத்த ஒரு உறவுப்பெயரை அவன்பாணியில் புரிஞ்சுகிட்டு, மீமி ன்னு கூப்பிட ஆரம்பிச்சான். அவனுக்கப்புறம், அந்தக் குடும்பத்தில் பிறந்த நாலு பிள்ளைகளும் அவனை மாதிரியே அவங்களை மீமின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இன்னும் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்க. முதல்முதலா கூப்பிட ஆரம்பிச்சு இன்னிக்கிவரைக்கும் தொடர்ந்துகிட்டிருக்கிற என் மாமா பையனுக்கு இப்ப வயசு முப்பது. எல்லாம் சரி, ஆனா மீமின்னா என்னன்னு சொல்லவேண்டாமா? மீமின்னு அவன் கூப்பிட்டது அவனோட பெரியம்மாவை :)

இதுமட்டுமில்ல, ஊர்ப்பெயர் சிலதுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்குது. என் சினேகிதி ஒருத்தி (அவளுக்கு, நாசரேத் பக்கத்து ஊர்) அடிக்கடி சவைச்சாங்குடியிருப்புன்னு சொல்லிட்டிருப்பா. அதென்ன சவைச்சாங்குடியிருப்பு? யாரை யார் சவைச்சான்னு கிண்டலாக் கேட்டேன் நான். அப்புறம்தான் தெரிஞ்சிது...சவரித்த நாடார் குடியிருப்பு என்ற பெயர்தான் சவைச்சாங்குடியிருப்பு ஆச்சுதுன்னு.

அதுமாதிரி, குற்றாலம் பக்கத்தில பம்புளி ன்னு ஒரு ஊர் பேர் சொல்லுவாங்க. விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அந்த ஊரோட பேர் பைம்பொழில் (பசுமையான சோலை)ன்னு. எத்தனை அழகான பேரை இப்படி சிதைச்சிட்டாங்களேன்னு எரிச்சல்தான் வந்தது.

இதைப் படிக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்... இதுமாதிரி நிறைய பெயர்த் திரிபுகளை நீங்களும் கேட்டிருப்பீங்க. கேட்ட விஷயங்களை நீங்களும் இங்கே பகிர்ந்துக்கிட்டா அதை மத்தவங்களும் தெரிஞ்சுக்குவாங்க... நன்றி :)

*******

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வாசல்படி வாஸ்துவும், விளையாடும் கிரகங்களும்



"எம் புள்ளைக்குப் பொறுப்பில்லையா? என்ன பேச்சுப் பேசுற நீ?"

நீ நேத்து வந்தவ...அவனை வளர்த்து, ஆளாக்கி,படிக்க வச்சு,கல்யாணமும் கட்டிவச்ச
எங்களுக்குத்தெரியாதா அவனைப்பத்தி?

ஏதோ அவனைப் புடிச்ச கெட்ட நேரம்...ஏழரைச் சனி அவனை இப்படி ஆட்டிவைக்குது...அதோட நீ வந்து சேர்ந்த நேரம் வேற...தனக்குன்னு புள்ள குட்டின்னு வந்தா எல்லாம் தானா திருந்திடுவான். நீ அதுக்கான வழியைப்பாரு"

என்று ஆக்ரோஷமாகத் தன் மருமகளை அடக்கினாள் மாமியார் கமலம்மாள்.மனைவியின் கத்தலுக்கு மறுமொழி பேசாமல் மருமகளைப் பரிதாபமாகப் பார்த்தார் சண்முகம், கமலத்தின் கணவர்.

தெளிவாகப் புரிந்தது பூரணிக்கு... தன் கணவனின் செயல்களையெல்லாம் தன் மாமியார் நியாயப்படுத்துவதால்தான், அவன் தான் செய்வதைத் தவறென்று உணராமலே இருக்கிறான் என்று புரிந்ததால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேலையைக் கவனிக்கலானாள் அவள்.


அன்றைக்கு, காலையில் அவள் எழுந்து அறையைவிட்டு வெளியில்வந்தபோது, முன்வாசலில் மேஸ்திரியுடன் பேசிக்கொண்டிருந்தாள் அவள் மாமியார்.

"என்னாச்சு மாமா?" என்று மாமனாரிடம் மெதுவாகக் கேட்டாள் பூரணி.

அவர், வாசல்ப் பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு, மகனுக்காக ஏதோ வாஸ்து ஜோசியர்கிட்ட போனாளாம் உங்க அத்தை. அவர்,வாஸ்துப்படி,தலைவாசலுக்கு எதிரா பின்பக்கம் கதவு,ஜன்னல் இருந்தா அந்த வீட்ல காசு விரயமாகும்னு சொன்னாராம்.சும்மாவே ஆடுவா உங்க அத்தை... இதுபோதாதா அவளுக்கு, ஆளைக் கூப்பிட்டு வாசலையும் சன்னலையும் அடைக்கச்சொல்லிட்டிருக்கா...என்று மெதுவாகச் சொன்னார் அவர்.

ஆனா, இனிமே வீட்டுக் குப்பையை வெளியில்போடக்கூட வீட்டைச் சுத்திச்சுத்தி வெளியே போகணுமே...அதுவுமில்லாம வீட்டுக்குள்ள வெளிச்சமும் இருக்காது,காற்றோட்டமும் இருக்காதே என்றாள் பூரணி.

சரிதாம்மா...ஆனா, வாசலையும் ஜன்னலையும் அடைச்சிட்டா ஊதாரி மகன் உருப்பட்டுடுவான்னு நம்பிக்கை அவளுக்கு...இதில,நாம எது சொன்னாலும் எடுபடாது இப்போ என்று சொல்லிவிட்டு அகன்றார் அவர்.

கையில் காப்பியுடன் கிணற்றுத்தொட்டியில் உட்கார்ந்து பறவைகளின் குரலைக்கேட்கும் சுகம் இனிக் கிடைக்காது என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டாள் பூரணி.அவளுக்கு மிகவும் பிடித்தமான,பின்வாசல் முல்லைக்கொடியும்,கிணற்றுத்தொட்டியும் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பதுபோலிருந்தது அவளுக்கு .

இடத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த வாரத்தில் வந்து வேலையை ஆரம்பிப்பதாகச் சொல்லிவிட்டுப்போனார் மேஸ்திரி.

ஏதேதோ யோசித்தவாறே தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் பூரணி.

அன்று, காலையில் எழுந்து, தனக்கும் கணவனுக்குமாகக் காப்பியைக் கலந்தவள்,கணவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் குடிக்காமல் சென்று படுக்கையில் சரிந்தாள்.

என்னாச்சு பூரணி? ஏன் திரும்பவும் வந்து படுத்துட்டே? என்றான் மகேஷ்.

"தலை சுத்துதுங்க" என்று சொல்லிவிட்டு சுவர்ப்பக்கம் திரும்பிப்படுத்தாள் அவள்.

மகன் விஷயத்தைச் சொல்ல, மருமகளை வந்து எட்டிப்பார்த்தாள் கமலம்மாள்.

" எதுக்கும் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடுவோம் என்று அம்மா சொல்ல, நீ மெதுவா குளிச்சுட்டு ரெடியாகு பூரணி...நான் ஆட்டோவுக்குச் சொல்லிட்டு வரேன் என்று புறப்பட்டான் மகேஷ்.

"நாள் அதிகமா ஆகலேங்கிறதால,இப்ப எதுவும் தெளிவாசொல்லமுடியல கமலாம்மா... இன்னும் ஒருவாரம் போகட்டும்.டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம். அதுவரைக்கும் இந்த மாத்திரையை வாங்கிக்குடுங்க" என்று சொல்லிச் சீட்டை நீட்டினாள் குடும்ப டாக்டர்.

"பாத்து வீட்டுக்குக் கூட்டிப்போம்மா" எனக்கு வேலையிருக்கு என்றுசொல்லிவிட்டு ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்த நண்பனுடன் பைக்கில் புறப்பட்டான் மகேஷ். அங்கேயிங்கேன்னு சுத்திட்டு அர்த்தராத்திரியில வராம, நேரத்தோட வீட்டுக்கு வாப்பா என்றாள் கமலம்.தலையசைத்துவிட்டுச் சென்றான் மகேஷ்.

வீட்டுக்கு வந்தபோது, வாசலில் மேஸ்திரி கடப்பாறை மண்வெட்டியுடன் ஆட்கள் சகிதமாக வேலைக்கு வந்திருந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த ரெண்டே நிமிஷத்தில் வயிற்றைப்பிடித்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தாள் பூரணி. பதறிப்போனாள் கமலம். ஓடிச்சென்று அளுடைய சிநேகிதியான அடுத்தவீட்டு மாமியை அழைத்து வந்தாள்.

வீட்டுக்குள் ஏதோ பதட்டம் என்றவுடன் வேலையைத் தொடங்காமல் தயங்கி நின்றார்கள் பணியாட்கள்.

என்னாச்சு கமலா? ஏன் இவால்லாம் வாசல்ல எமகிங்கராள் மாதிரி கடப்பாறையும் கம்புமா நிக்கறா என்று கேட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தாள் மாமி.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தவளைப் பார்த்ததும் புரிந்துகொண்டவளாய், குமட்டறதுன்னு காலையில ஏதும் சாப்பிட்டிருக்க மாட்டாய். உடம்பு சூட்டோட வாயுவும் சேர்ந்து வயத்தை வலிக்கிறதுன்னு நினைக்கிறேன் என்று சொன்னவளாய்,

கமலா நீபோய் இவளுக்கு சூடா குடிக்க ஏதாவது கொண்டா என்றுவிட்டு, பூரணியின் மாமனாரிடம் கேட்டு வேலையாட்கள் வந்த காரணத்தையும் தெரிந்துகொண்டாள்.

பாலைக் குடிச்சிட்டு, அடிவயித்தில விளக்கெண்ணெய் தடவிக்கிட்டு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு பூரணி.அப்புறமும் வலியிருந்தா ஆஸ்பத்திரிக்குப்போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, கமலாவை அழைத்துத் தன் அருகில் உட்காரச் சொன்னாள் ஜானகி மாமி.

கமலா,எங்காத்து மாமாவைப்பத்தி நீ என்ன நினைக்கிறாய் என்றாள்.

திடீரென்று வந்த கேள்வியால் திகைத்த கமலம்," அவருக்கென்ன ஜானகி, அவருண்டு அவரோட வேலையுண்டுன்னு இருக்கார். உன்னையும் பிளைங்களையும் நல்லா வச்சிருக்கார்.ரொம்ப சிக்கனம்னு நீதான் குறைபட்டுக்குவே" என்றாள் கமலம்.

நம்ப ரெண்டுபேரோட வீடும் அடுத்தடுத்து ஒரேமாதிரி கட்டியதுதானே...வாஸ்து அமைப்பெல்லாம் ஒண்ணுபோலத்தானே இருக்குது. அப்ப எங்காத்துக்காரர் கஞ்சனாகவும், உன் பிள்ளை செலவாளியாவும் இருக்காங்கன்னா அதுக்கு வாஸ்து எப்படிப் பொறுப்பாகும்?

கிழக்குத்திசை வாசலும், மேற்குத்திசையில் பின்வாசலும் ஏகப்பட்ட ஜன்னல்களுமாய் எத்தனை அம்சமா கட்டியிருக்காங்க, அதைப்போய் மூடணும்ன்னு ஆளைக் கூட்டிவந்திருக்கியே என்றாள் மாமி.

படிக்கிற காலத்திலேயிருந்து மகன் கேட்கிறப்பல்லாம் காசைக்கொடுத்து நீ அவனை செலவாளியா வளத்துட்டே. சொந்தமா பிசினஸ் வச்சிக்கொடுத்து,போதாக்குறைக்கு சொந்தத்திலேயே ஒரு பொண்ணையும் கொண்டுவந்து கட்டி வச்சிட்டே. அவனுக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியாமப் போயிடுத்து. இனிமே, கொடுக்கிற கையைக் கொஞ்சம் சுருக்கிப்பார்...அவன் தன்னால சரியாயிடுவான். சம்பாதிச்சுட்டு வர்றதைவச்சு அவங்களோட செலவுகளைச் செய்யச்சொல். அவன் கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா, எந்தக் கிரகமும் எதிர்க்க நிக்காது என்று சொல்லிச் சிரித்தாள் மாமி.

கமலம், மாமியின் வார்த்தைகளை ஆமோதித்ததுதான் தாமதம், வாசலில் சென்று வந்தவர்களுக்கு அன்றைய கூலியைக் கொடுத்துவிட்டு வேலைசெய்யவேண்டாமென்று அனுப்பிவைத்தார் சண்முகம். எங்கே புழக்கடை வாசலில், பூவாசக் காற்றோடு புத்தகம் படிக்கும் சந்தோஷம் கெட்டுப்போய்விடுமோ என்ற கவலை அவருக்கு.

வயிற்றுவலி கொஞ்சம் தணிந்தாற்போலிருந்தது பூரணிக்கு.எழுந்து அமர்ந்தவள் ஜன்னல் வழியாகப் பின்பக்கம் பார்த்தாள்.மரக்கிளையில்,கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுக்குக் கொஞ்சிக்கொஞ்சி இரைகொடுத்துக்கொண்டிருந்தது குருவியொன்று.

உட்புறம் திரும்பினாள்... அங்கே,உரக்கப்பேசிக்கொண்டிருந்த மாமி அவள் கண்களுக்கு சாமியாகத் தெரிந்தாள்.

*********

சனி, 10 அக்டோபர், 2009

அச்சு முறுக்கு (தீபாவளி ஸ்பெஷல்)

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு - 2 கப்

சர்க்கரை - 1 கப்

முட்டை - 1

எள் - 2 தேக்கரண்டி

ஏலக்காய் (பொடித்தது)-2

உப்பு - ஒரு சிட்டிகை

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:-

மைதாமாவில், எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ( முட்டையைத் தனியாக நன்றாக அடித்துவிட்டு கலக்கணும்)தோசை மாவுப்பதத்தில் கலந்துகொள்ளவும்.

தட்டையான,அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்குக் கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்கவும்.

கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணையில் அமிழ்த்தவும்.

கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாகக் கழன்றுவிடும். அதனைத் திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான, இனிப்பு அச்சுமுறுக்கு தயார்.

************

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

துபாய் மால் (The Dubai Mall) தொடர்ச்சி - புதிய படங்களுடன்

ஏற்கெனவே சில மாதங்களுக்குமுன்,

"இந்தப்பதிவில்" துபாய் மால் (The Dubai Mall)

பற்றிச் சொல்லியாச்சு.

இன்னும் சில புதிய பகுதிகளைப் பற்றி படங்களுடன் மீண்டும்...

துபாய் மால் ஆரம்பித்த புதிதில் சென்றபோது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஆள்நடமாட்டம் இருந்தது. நேற்று மறுபடியும் செல்ல வாய்ப்புக் கிடைத்தபோது, சும்மா சொல்லக்கூடாது...நல்ல முன்னேற்றம் தெரிந்தது. முன்பைவிடக் கடைகளும் அதிகமாக, கூட்டமும் அதிகமாகத்தான் இருந்தது.
ரமதான் விடுமுறையும் ஆரம்பமாகியிருப்பதால் கடைகளெல்லாம் விதவிதமான விளம்பரங்களோடு களைகட்டியிருந்தன.





கடைகளைத் தவிர்த்து காட்சிக்கு விருந்தாகும் விஷயங்களும் நிறைய இருக்கத்தான் செய்யுது. பரந்து விரிந்த இடவசதி. நேர்த்தியான அலங்காரங்கள்,ஆங்காங்கே உட்கார அழகிய இருக்கைகள்,உணவுக்கூடத்தருகே குழந்தைகள் விளையாடத் தனிப் பகுதி என்று எல்லாமே அழகாக அமைத்திருக்கிறார்கள்.



சுத்தமாய் மின்னும் தரைப்பரப்பும் இத்தனை இடவசதியும் இருந்தா நம்ம ஊரில் கட்டுச்சோறு கொண்டுவந்து குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்கன்னு சொல்லிச் சிரித்தார் ஒருவர் :)

இதோ,இரைச்சலுடன் ஜொலிக்கிற நீரருவி, குதிக்கும் மனிதச் சிற்பங்களுடன்...








மையப்பகுதியில் மின்னும் நட்சத்திர அலங்காரம்...






நிறம் மாறும் தரைப்பகுதி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.



 


நிஜமோ என எண்ணவைத்த மலர்க் குவியல்கள்...


 


 


இந்தமுறையும் எல்லாத் தளங்களையும் முழுவதுமாய்ப் பார்க்கமுடியவில்லை. சென்றமுறை பார்க்காமல்விட்ட பகுதிகளை மட்டுமே பார்த்தோம். ஆனாலும் அதுக்கே நாலுமணி நேரம் ஆகிப்போச்சு.ஏன்னா, மாலின் (mall)பரப்பளவு அத்தனை பெரியது. இன்னும் பார்க்காமல் விட்ட பகுதிகளெல்லாம் இனிவரும் அடுத்தபதிவில்...

***********

சனி, 12 செப்டம்பர், 2009

துபாய் மெட்ரோ (Dubai Metro)

இந்த ஊர் (துபாய்)ராஜாவுக்கு புதுமையும் பிரம்மாண்டமுமான விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் கொஞ்சம் அதிகம். பொருளாதார நெருக்கடி, வெளியேறும் மக்கள் என எத்தனையோ இடர்ப்பாடுகளை துபாய் சந்தித்தாலும், சொன்ன மாதிரியே 9/9/2009 இரவு 9 மணி 9 நிமிடத்தில் துபாயின் கனவு ரயில் முதலில் அரசகுடும்பத்தினரை மட்டும் சுமந்துகொண்டு புறப்பட்டது. மறுநாள் காலைமுதல், பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது துபாய் மெட்ரோ சேவை.

கடந்த இரண்டு நாட்களாக மெட்ரோ நிலையங்கள் முழுக்கக் கூட்டமோ கூட்டம். இதுவரை ரயிலில்லாத ஊரில், புதிதாக ரயிலைப் பார்த்த சந்தோஷம். காரில் வந்து, காரை நிலையத்தில் நிறுத்திவிட்டு, ரயிலில் ஏறிச் சென்றுவிட்டுத் திரும்பும் உற்சாக மக்கள்கூட்டம். இந்த ரயில், ஓட்டுனர் இல்லாத, முழுக்கமுழுக்க கணினியின் கட்டுப்பாட்டில் இயங்குவதென்பதால் எப்படித்தான் இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வம். அதே ஆர்வத்துடன்தான் புறப்பட்டோம் நாங்களும்.

முதல் கட்டமாக இப்போது பத்து ரயில் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன. முதல் நாளில் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 67,000 என்றும், இரண்டாம் நாள் வெள்ளியன்று அரைநாள் மட்டுமே இயக்கப்பட்டதால் அன்று பயணித்தவர்கள் 47,000 என்றும் அறிவித்துள்ளனர்.

நாங்கள் போகும்போது,இரவு நேரமானதால் விளக்கொளியில் மின்னியது மெட்ரோ ஸ்டேஷன்.



இதோ, ரயில்நிலையத்தின் உட்புற வேலைப்பாடுகளை,வியப்போடு பார்க்கும் மக்கள்...




உதவிக்கென்று ஊழியர்கள் பலர்...




நாங்கள் ஸ்டேஷனை அடைவதற்குச் சற்றுமுன்தான், ரயிலின் எமர்ஜென்சி வாயிலின் ((emergency exit) பட்டனை யாரோ தவறுதலாக அழுத்தியதால் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக ரயிலில் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் ரயில் சேவையைத் தொடங்கியிருந்தார்கள்.

ரயிலில் பயணம் செய்ய கோல்ட் கார்ட், சில்வர் கார்ட், ப்ளூ கார்ட், ரெட் கார்ட் என வித்தியாசமான வசதிகளுடன் கூடிய நுழைவு அட்டைகள் விற்பனையாகிறது. நமக்கேற்ற ஒன்றினைத் தெரிவுசெய்து வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட் வாங்கியதும் அதை அங்குள்ள தானியங்கிக் கருவியில் காட்டியதும் நமக்கான பாதை திறந்து உள்ளே அனுமதிக்கிறது.




மேலே சென்று ரயில் வந்துநிற்கும் இடத்தினை அடைந்தோம். கண்ணாடியால் முழுவதும் மூடப்பட்டுள்ளது ரயில் வந்துநிற்கும் பகுதி. ரயில் வந்து நின்றதும் அந்தப்பகுதியின் வாயில்கள் திறந்துகொள்கிறது.



ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் வந்தவாறே இருக்க நாங்களும் ஒன்றில் ஏறினோம். ஏறியதும் ஒரு ஆப்பிரிக்கப் பெண் ஊழியர் வந்து, யாரும் வாசல் பட்டனை அழுத்திவிடக்கூடாதென்று எச்சரிக்கை செய்துவிட்டுப்போக, தொடங்கியது ரயில் பயணம்.

ரயிலில் கோல்ட் கார்ட் கஸ்டமர்களுக்கு அதாவது 
வி ஐ பி க்களுக்கான முதல் வகுப்புப் பெட்டி ஒன்று, அதனையடுத்து பெண்கள் குழந்தைகளுக்கான பெட்டி, அதனையடுத்து நான்கு பொதுப் பெட்டிகள், ஆக மொத்தம் ஆறு. எந்தப்பெட்டியில் ஏறினாலும் கடைசிவரை சென்றுவரலாம்.

உள்ளேயும் வெளியேயும் முழுக்கமுழுக்க நீலநிற வேலைப்பாடுகளுடன்
அழகாகவே இருந்தது ரயில்.

இது ரயிலின் நுழைவாயிலில்...







உயரத்தில் போகும் ரயிலிலிருந்து துபாயின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களைப் பார்த்தவாறே செல்வது சுவாரசியமாகத்தான் இருந்தது.ரயில்முழுக்க வயர்லெஸ் இணைய இணைப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால் ஆளாளுக்கு அவர்களுடைய செல்ஃபோனைச் சோதித்தவாறே இருந்தனார்.



இறுதி ஸ்டேஷன் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பிய ரயிலில் புறப்பட்ட இடத்துக்கே வந்துசேர்ந்தோம். ரயிலில் வந்து பஸ்சில் வேறு இடத்துக்குச் செல்லவேண்டியவர்களுக்கு வசதியாக, நிலையத்திற்குள்ளேயே தொலைக்காட்சித் திரையில் அறிவிப்பு வருகிறது. பஸ் வர எவ்வளவு நேரமாகும் என்று அறிந்துகொண்டு நிலையத்தைவிட்டு வெளியில் சென்றால்போதும்.



இதோ, இருளில் அடுத்த இலக்கை நோக்கி வேகமாக விரைகிறது துபாய் ரயில்...


**********

வியாழன், 10 செப்டம்பர், 2009

கறிவேப்பிலைத் துவையல்




தேவையான பொருட்கள்:-


கறிவேப்பிலை - 1 கப்

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 6

எண்ணெய் - 1 தேக்கரண்டி

பூண்டு - 1 பல்

புளி - பாக்கு அளவு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:-

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இரண்டையும் வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.

அதனுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து, கறிவேப்பிலை முறுகலாகும்வரை வறுக்கவும்.

வறுத்தவற்றை ஆறவிடவும்.

ஆறியபின்,தேங்காய்த்துருவல்,தேவையான உப்பு, புளி,பூண்டு இவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

இந்தத் துவையல் சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி இவற்றுடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

உளுத்தம்பருப்பு தோலுள்ளதாகவும் இருக்கலாம். சுவை நன்றாகவே இருக்கும்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

பாரதம் படிக்கலாம் வாங்க (7)

வியாசரின் வரலாறும் குருவம்ச விருத்தியும்

அஸ்தினாபுரத்து மன்னன் சாந்தனுவின் மனைவியான மீனவப்பெண் சத்தியவதி, தன் திருமணத்திற்குமுன் ஒருநாள், தந்தைக்குப் பதிலாகத் தான் யமுனை நதியில் படகோட்டிக்கொண்டிருந்த வேளையில்,வசிஷ்ட முனியின் வழித்தோன்றலான பராசர முனிவர் அங்கு வந்தார். மீனவப்பெண்ணவளின் அழகில் மயங்கிய அவர் அவளை விரும்பி,அவளோடு கூடிவாழ, அவர்களுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. கரிய நிறமாயிருந்ததால் அக்குழந்தைக்கு கிருஷ்ணன் என்றும், யமுனை நதியின் இடையில் அமைந்த தீவினில் பிறந்ததால் துவிபாயனன் என்றும் அம்மகனுக்குப் பெயரிட்டனர்.(துவீபம் என்றால் தீவு என்று அர்த்தமாகும். உதாரணமாக,சிங்களத்வீபம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமல்லவா?)

சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்த, புத்திரர் இருவரும் சந்ததியின்றி இறந்துபோக, பராசரர் மூலம் தனக்குப் பிறந்த தன் மூத்த மகனான வியாசமுனிவரிடம் சென்று குருவம்சம் தழைக்க வழிசெய்யுமாறு கூறினாள் அன்னை சத்தியவதி.

அன்னையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வியாசமுனிவரும், விசித்திரவீரியனின் மனைவியரான அம்பிகா, அம்பாலிகாவைத் தன்னிடம் அனுப்பிவைக்குமாறும் தன்னுடைய யோக சக்தியினால் தான் அவர்களுக்கு புத்திரபாக்கியம் தருவதாகவும் கூறினார்.

மகனின் பதிலில் மகிழ்ந்த அன்னை சத்தியவதி முதலில் அம்பிகாவை வியாசரிடம் அனுப்பி வைத்தாள். வியாசரின் உருவத் தோற்றத்தைக் கண்டு அஞ்சியதாலும், கூச்ச உணர்வினாலும் வியாசரின் அருகில் வந்ததும் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் அம்பிகா. அதனால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறக்க அதற்கு திருதராஷ்டிரன் எனப் பெயரிட்டனர்.

பார்வையற்ற குழந்தை பின்னாளில் அரியணை ஏற இயலாது என்று எண்ணிய சத்தியவதி, தம் இரண்டாவது மருமகளான அம்பாலிகாவை முன்னதாகவே எச்சரிக்கை செய்து, வியாசரின் யோகத்துக்கு ஒத்துழைக்குமாறு கூறி அனுப்பிவைத்தாள். ஆனால், அச்சத்தின் காரணமாய் அவளும் முகம் வெளுத்துப்போக, அவளுக்கு பாண்டு எனும் பெயருடைய உடல் வெளுத்த,சோகையுற்ற பிள்ளை பிறந்தது. இந்தக் குழந்தையும் சத்தியவதிக்கு திருப்தியளிக்காததால் மீண்டும் மகன் வியாசரைச் சென்று வேண்டினாள்.

அன்னையின் வேண்டுதலை ஏற்று, வியாசமுனிவரும் மருமகள் இருவரில் ஒருத்தியை மீண்டும் அனுப்பிவைக்குமாறு சத்தியவதியிடம்கூற, இந்தமுறை, அம்பிகாவும் அம்பாலிகாவும் சேர்ந்து, அவர்களுடைய பணிப்பெண் ஒருத்தியை அலங்கரித்து வியாசரிடம் அனுப்பி வைத்தனர். அச்சமோ, பயமோ இன்றி வியாசரின் யோகமுறைக்கு உடன்பட்ட அப்பணிப்பெண்ணுக்கு, அறிவும் ஆரோக்கியமுமான ஆண் குழந்தை பிறந்தது. அவரே பின்னாளில் விதுரர் என அழைக்கப்பட்டார்.

ஆக, வாரிசின்றிப்போன குருவம்சம் வியாசரின் மூலமாக வாரிசை அடைந்தது.

செவ்வாய், 7 ஜூலை, 2009

ஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (2) **மந்த்ராலயம்**

முதல்நாளை ஆதோனியில் கழித்துவிட்டு,மறுநாள், மகான் ராகவேந்திரரின் மந்திராலயத்தைப் பார்க்கப் புறப்பட்டோம். ஆதோனியிலிருந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரப்பயணம்.வழியெங்கும் மலைகளும், வானம்பார்த்த பூமியுமாகக் காணப்பட்டது.





முதலில் துங்கபத்ரா நதியினைப் பார்த்துவிட்டு அப்புறம் ஆலயத்திற்குள் சென்றோம்.

சிறிதளவே நீரோடிய துங்கபத்திரா நதி...



முதல்முறையாக அங்கு செல்வதால் ஆலய வரலாற்றை அங்கிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பகவான் நாராயணன் தூணிலிருந்து நரசிம்மமாக வெளிப்பட்டு, குடல்கிழித்து உயிர்குடித்த இரண்யகசிபுவின் மகன் பக்தப் பிரகலாதனின் அவதாரமாகவே மகான் ராகவேந்திரர் இங்கு வழிபடப்படுகிறார்.

நதிக்கரையில் மரங்கள் சூழ்ந்த பிருந்தாவனப் பகுதியில் மகான் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்ததாகவும் அவர் இறைவனோடு கலந்து முக்தியடைந்த இடத்தில் துளசிமாடம் போன்ற அமைப்புடன் சமாதியும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறக் கேட்டோம்.ஆலயத்தில் அமைதி குடிகொண்டிருந்தது. சுத்தம் சுத்தம் எங்குபார்த்தாலும் சுத்தம்.மகானின் அமைதி நிலவும் ஆலயத்தில் மோனத் தவமிருக்கும் பக்தர்கள் பலரைக் காணமுடிகிறது.

தரிசனம் முடிந்து வெளிவருகையில் துளசிதள தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆலய வளாகத்தினுள்ளேயே போஜன சாலையும் அமைத்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்த மரங்களுக்கிடையேதான் மகானின் ஆலயம் அமைந்திருக்கிறது.



கோவில் அமைந்திருக்கும் இடம் முன்பு மாஞ்சாலா என்ற கிராமமாக இருந்ததாகவும், மந்திராலயம் கோவிலுக்கு இடமளித்த அம்மையாரும் மாஞ்சாலம்மன் என்ற பெயரில் வழிபடப்படுவதாகவும் கூறினர். முகப்பிலமைந்திருக்கும் மாஞ்சாலம்மன் சன்னிதியைத்தான் ராகவேந்திரரை வழிபடுமுன் அனைவரும் வழிபடுகிறார்கள்.

இதோ, ராகவேந்திர பிருந்தாவனத்தின் அழகிய நுழைவாயில்...





ஆலய முகப்பின் முழுத்தோற்றம்...



ஆலயத்தின் முகப்பில் ராகவேந்திரர் திருவுருவம்...



ஆலயத்தின் வெளியே அழகிய பிருந்தாவனம். மலர்ச் செடிகள் பூத்து அழகூட்டுகிறது. செயற்கை நீரூற்றுகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.







பிருந்தாவனத்து மான்களில் சில...



ஆலயத்திற்குவரும் பக்தர்கள் தங்க வசதியாக, மிக அருகிலேயே அறைகள் உள்ளது.வங்கி வசதிகளும் அருகிலேயே உள்ளது.

ஆலயத்திலிருந்து ஆதோனிக்குத் திரும்பும்போது நேரம் இரவாகிவிட்டது. அந்தப் பாதையில் வழிப்பறிக்கொள்ளைகள் அடிக்கடி நடக்குமென்று கூடவந்தவர்கள் சொல்லி கிலியைக் கிளப்ப, மந்திராலய மகானை மனதில் நினைத்தபடி எந்தத் தொந்தரவுமில்லாமல் வந்துசேர்ந்தோம்.

மொத்தத்தில் இந்த ஆந்திரப்பயணம் மனதுக்கு மிகவும் நிறைவாய் அமைந்திருந்தது.