திங்கள், 17 நவம்பர், 2008

ஐயோ...அப்பா...ஐயப்பா!


வரமளிப்பதில் வள்ளலான ஈசனுக்கு அன்றைக்கும் ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. பஸ்மாசுரனின் தவத்தில் மகிழ்ந்து, அதை மெச்சிய சிவபெருமான், அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்று வரமளித்த கையோடு, வரத்தைச் சோதிக்க வரமளித்த சிவனையே முதலாவதாகத் தேர்ந்தெடுத்தான் பஸ்மாசுரன்.

ஆலகாலமுண்ட சிவனுக்கே அவன் செயலைக் கண்டு அச்சம் வர, அரவணைப் பெருமானைத் துணைக்கழைத்தார் சிவபெருமான். செய்வது என்னவென்றறியாது சினம் கொண்டு சிவனைத் தேடிய பஸ்மாசுரன் முன் அழகேயுருவான மோகினியாய்த் தோன்றினார் மேகவண்ணன்.

மின்னலிடை மோகினியின், கண்ணசைவில் மயங்கினான் அசுரன்.
தங்க நிற மங்கையவள் தன் தளிருடல் அசைத்து ஆடத்தொடங்க, மோகத்தில் அசுரனும் மகுடிக்கு மயங்கிய அரவம்போல ஆட ஆரம்பித்தான். ஆடலின் நடுவில் தலைமேல் கைவைத்து அபிநயித்த மோகினியைக் கண்டு, தானும் அதுபோல அபிநயிக்க, பேராசையால் பெற்ற வரத்தினால் தானே புகைந்து சாம்பலானான் பஸ்மாசுரன்.

அசுரனை மயக்கி அழிக்க, அச்சுதன் கொண்ட மோகினியின் உருவத்தில் அரவம் அணிந்த ஈசனும் மயங்கி அவள் கரமலர் பிடிக்க, அங்கே உருவானார் அரிகரபுத்திரனான ஐயப்பன்.

அழகே உருவான அக்குழந்தையைக் கண்டத்தில்(கழுத்தில்) ஒரு மணிமாலையுடன், காட்டில் ஒரு மரத்தடியில் வைத்து, அங்கே வேட்டையாடவந்த பந்தளமன்னனின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்கச்செய்தனர் கடவுளர் இருவரும்.
அதுவரை பிள்ளைப்பேறில்லாதிருந்த பந்தள மன்னனும், பசித்திருந்தவன் முன் அமுதமே கிடைத்தாற்போல, பெறற்கரிய அப்பிள்ளையை எடுத்துக்கொண்டு அரண்மனை சென்றான். மணிகண்டன் எனப் பெயரிட்டு மகிமையோடு அப்பிள்ளையை வளர்த்துவந்தான் மன்னன் ராஜசேகரன்.

அப்போது, மன்னனின் மனைவியும் கருவுற்று மகனொருவனை ஈன்றெடுக்க, சொந்த மகனின் அரியணையை வந்த மகன் பறித்துவிடுவானோ என்ற அச்சம் எழுந்தது மன்னனின் மனைவிக்கு. அரண்மனை வைத்தியனின் உதவியுடன், ஆறாத வயிற்றுவலி வந்ததாய் நடித்த மன்னனின் மனைவி, வலிக்கு மருந்தாகப் புலிப்பால் கொண்டுவரும்படி அரிகர புத்திரனை ஆரண்யம் அனுப்பினாள்.

தாயின் நோய் தீர்க்க, தந்தை தடுத்தும் கேளாமல் கானகம் சென்ற ஐயப்பன், காட்டில் மகிஷி எனும் அரக்கியை வதம் செய்துவிட்டு, தேவர்களின் தலைவனான இந்திரனே புலியாகவும், தேவர்களே புலிக்கூட்டமாகவும் மாற, புலியின்மேல் அமர்ந்தபடி அரண்மனைக்கு வந்தாராம் மணிகண்டன்.

புலியின்மேல் அமர்ந்துவந்த தன் புத்திரனை நோக்கி வியப்புக்கொண்ட பந்தளமன்னன்,
"என் மகனாய் வளர்ந்து என்னை மகிமை செய்த நீ யார்?"

என்று வினவினாராம்.

அதற்கு மணிகண்டன்,

"தந்தையே, தேவர்களை வதைத்துவந்த மகிஷி எனும் அரக்கி, சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறக்கும் மகனால்மட்டுமே தனக்கு அழிவு நேரிடவேண்டும் என்று படைப்புக்கடவுளாகிய பிரம்மாவிடம் பெருவரம் பெற்றிருந்தாள். வரம் பெற்ற கர்வத்தினால், அவள் செய்த இம்சை தாளாமல் தேவர்கள் சிவனிடமும், விஷ்ணுவிடமும் முறையிட, அவ்விருவர் அருளால் படைக்கப்பட்டவன் நான்"

என்னும் உண்மையை மன்னனுக்குச் சொன்னாராம்.

ஐயனின் பிறவிப்பெருமையை உணர்ந்த மன்னனும் மக்களும், பந்தளநாட்டின் அரியணையேற்கத் திருவுளம் கொள்ளுமாறு வேண்ட, பந்தள மன்னனிடம் தன் பிறவியின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும்,தான் கானகம் சென்று தவம் செய்யப்போவதாகவும் சொன்னாராம் மணிகண்டன்.

பிள்ளைப்பாசத்தினால் வருந்திய பந்தளமன்னன்,

"அன்போடு வளர்த்த நான் இனி எவ்வாறு உன்னைவந்து காண்பது?"

என்று ஐயனாகிய மகனை வினவினாராம்.

"கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, நாற்பத்தொரு நாட்கள் நேர்த்தியாய் விரதமிருந்து என்னைக்காணவேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்துடன் வரும் யாரும், காடுமலை தாண்டிவந்து என்னைத் தரிசிக்கலாம்"

என்று மன்னனாகிய தந்தையிடம் சொன்னாராம் மணிகண்டன்.

பந்தள மன்னனும், ஆண்டுக்கொருமுறை மகனைக் காண, அவருக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டி, தலைச்சுமையாகச் சுமந்து, கல்லும் முள்ளும் காலிலே தைக்க, "ஐயோ, அப்பா" எனப் புலம்பியபடியே கானகம் தாண்டி, கடும் மலையேறிச் செல்வாராம். அதனாலேயே சபரிமலை வாசனுக்கு ஐயப்பன் என்று பெயர் வந்தது என்றும் செவிவழிக் கதையாகக் கூறுவர் மக்கள்.

நெய்த் தேங்காய் சுமந்து, ஐயனைக் காண, ஆண்டுதோறும் மக்கள் மாலையிடும் இப்புனிதமான கார்த்திகை மாதத்தில், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, எங்களைக் காத்து ரட்சிக்க வேணுமென்று நாமும் அரிகரசுதனாகிய ஐயன் ஐயப்பனை வேண்டி வணங்குவோமாக.

***********

புதன், 12 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(5)

சத்தியவதியின் புத்திரர் இருவர்

சாந்தனு மன்னனுக்கும், மீனவப்பெண் சத்தியவதிக்கும் சித்திராங்கதன்,விசித்திரவீர்யன் என்று புத்திரர் இருவர் பிறந்தனர். மகன்கள் இருவர் பிறந்த சில வருடங்களிலேயே மன்னன் சாந்தனு மரணமடைய, இளவரசர்கள் இருவரும் சிறியவர்களாக இருந்த காரணத்தால் பீஷ்மரே நாட்டின் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தார். சிலவருடங்களில் மன்னனின் மூத்தமகன் சித்திராங்கதன் அஸ்தினாபுரத்து அரியணையில் அமர்ந்தான்.

மிகுந்த பராக்கிரமத்துடன் ஆட்சிபுரிந்த சித்திராங்கதனைப் பற்றிக் கேள்விப்பட்ட அதே பெயருடைய கந்தர்வ மன்னன் ஒருவன் போட்டியினால் எழுந்த பகையின் காரணமாய், தன் பெயரைக்கொண்ட அரசனுடன் போரிட்டு அவனைக் கொன்றான். தனக்கு வாரிசெதுவும் இல்லாமல் மன்னன் சித்திராங்கதன் மரணமடைய அவனுடைய சகோதரனான விசித்திரவீர்யன் அரியணையேறினான்.

அரியணையிலமர்ந்தாலும் வயதில் இளையவனாயிருந்த காரணத்தால், பீஷ்மரின் ஆலோசனைப்படியே விசித்திரவீர்யன் நாட்டைக் கவனித்துவந்தான். அரசனாயிருந்த தம்பிக்கு மணமுடித்துவைக்க ஆசைப்பட்டார் பீஷ்மர்.

காசி நாட்டு மன்னன், அழகில் சிறந்த தன் மகள்கள் மூவருக்கு சுயம்வரம் நடத்துவதை அறிந்து அங்கு சென்றார் பீஷ்மர். பீஷ்மரின் பிரம்மச்சரிய சபதத்தை அறிந்த அனைவரும்,

"மகா பிரம்மச்சாரியான இவர், தானும் ஒரு மணமகன் போல இங்கு வந்திருக்கிறாரே..."

என்று ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டார்கள்.

அப்போது பீஷ்மர்,

"காசி மன்னா, நான் என் சகோதரனான விசித்திரவீர்யனுக்காகவே இச்சுயம்வரத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். வழிவழியாக,காசி நாட்டு இளவரசிகளை அஸ்தினாபுர அரச குடும்பத்தினருக்குத்தான் இதுவரை மணமுடித்துக்கொடுப்பது வழக்கம். இந்த நெறிமுறையை மாற்றி நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த சுயம்வரத்தை நான் அனுமதிக்கமாட்டேன்"

என்றுகூறி,

அங்கே குழுமியிருந்த மன்னர் அனைவரையும் போரிட்டு வென்று இளவரசிகள் மூவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டுவந்தார்.

அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற அப்பெண்கள் மூவரில், மூத்தவளான இளவரசி அம்பா, தான் சௌபலநாட்டு மன்னன் சால்வனை சுயம்வரத்தில் கண்டு,மனப்பூர்வமாக அவனுக்கு மாலையிட விரும்பியதாகக் கூற, அவளை உரிய பாதுகப்புடன் சால்வனின் நாட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு, அம்பிகாவையும், அம்பாலிகாவையும் தன் சகோதரன் விசித்திரவீர்யனுக்கு மணமுடித்துவைத்தார் பீஷ்மர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக, திருமணம் முடிந்த சிறிதுகாலத்திலேயே மன்னன் விசித்திரவீர்யனும் கொடிய காசநோயினால் மக்கட்செல்வம் இன்றி இறந்துபோனான். அன்னை சத்தியவதியோ வாரிசின்றிப்போன தன் வம்சத்தை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தாள்.

செவ்வாய், 11 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(4)

தந்தைக்கு மணமுடித்த தனயன்!

அன்றும் வழக்கம்போல் காட்டில் வேட்டையாடச் சென்றான் மன்னன் சாந்தனு. நீண்டநேரம் வேட்டையாடிக் களைத்தவன் யமுனையாற்றின் கரைக்கு வந்தான். அப்போது அங்கே படகோட்டிக்கொண்டிருந்த கண்ணிற்கினிய மங்கை ஒருத்தியைக் கண்டான். கண்டதும் காதலுற்றான்.

மீனவப்பெண்ணான அவள்பெயர் சத்தியவதி என்பதை அறிந்துகொண்ட மன்னன், அவளின் தந்தையைச் சந்தித்துப்பேச ஆவல்கொண்டான். மங்கை அவளுடன் மன்னனும் வந்ததுகண்டு அப்பெண்ணின் தந்தையான மீனவர் தலைவன், மன்னனுக்கு பழங்களும் பாலும் தந்து பக்குவமாய் உபசரித்தான்.

உபசரிப்பில் மகிழ்ந்தமன்னன், மீனவன் மகளை மனைவியாக்கிக்கொள்ள நினைக்கும் தன் ஆசையைத் தெரிவித்தான். அது கேட்ட அப்பெண்ணின் தந்தையும் மனம் மகிழ்ந்தான். மன்னனை மருமகனாக அடைய மனம் கசக்குமா என்ன? தன் சம்மதத்தைத் தெரிவித்த பெண்ணின் தந்தையனவன், மன்னனிடம் ,

"மன்னா, என் மகளை உங்களுக்கு மணமுடித்துத்தர எனக்கு சம்மதமே. ஆனால், என் மகளுக்குப் பிறக்கும் மைந்தர்களே உங்களுக்குப்பின் அரியணை ஏறவேண்டும். இதற்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் என் மகளை மணமுடித்துத் தருவேன்" என்று கூற,

மணிமுடிக்குக் காத்திருக்கும் மகன் தேவவிரதனை நினைத்து உள்ளம் வருந்தியவனாக அரண்மனை திரும்பினான் மன்னன்.

மன்னனின் மனவருத்தத்திற்கும் முகவாட்டத்திற்கும் காரணம் புரியாத மைந்தன் தேவவிரதன், ஒற்றர்கள்மூலம் நடந்ததை அறிந்தான். தந்தையின் துயரம்போக்க, தானே மீனவர் தலைவனைச் சென்று சந்தித்தான். தந்தைக்கு அவர் மகளைத்தருமாறு தேவவிரதன் கூற, தன் விண்ணப்பத்தைத் தெரிவித்தான் மீனவர் தலைவன்.

தந்தையின் மகிழ்ச்சிக்காகத் தன் அரியணையை விட்டுத்தருவதாக உறுதியளித்த தேவவிரதனை நம்பாத மீனவர் தலைவன்,

" அரியணைப்பதவியை இளவரசனாகிய நீங்கள் விட்டுத் தந்தாலும், உங்களுக்குப் பிறக்கும் சந்ததியினர் விட்டுத் தருவார்களா?"

என்று வினா எழுப்ப, தந்தையின் விருப்பத்திற்காக, தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ்வேன் என்றும் விண்ணையும் மண்ணையும், வானகத்து தேவர்களையும் சாட்சியாகக்கொண்டு சபதம் செய்தான். செயற்கரிய சபதம் செய்த தேவவிரதனை மலர்மாரி பொழிந்து வாழ்த்தினர் தேவர்கள். "இன்றுமுதல் நீ பீஷ்மன் என்று அழைக்கப்படுவாய்" என்று அசரீரி எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. பீஷ்மன் என்ற பெயருக்கு 'பிறரால் செயற்கரிய செயல்களைச்(சபதம்) செய்து முடிப்பவன்' என்பது பொருளாகும்.

மகனின் சபதம் கேட்டு மனம் நெகிழ்ந்தான் சாந்தனு மன்னன். தன்னலம் துறந்த மகனைச் சிறப்பிக்க,

"நீ விரும்பி உயிர் நீத்தாலன்றி உன் உயிரை யாராலும் பறிக்க இயலாது"

என்ற மாபெரும் வரத்தை மகனுக்கு அளித்தான்.

பின்னர்,மகன் பீஷ்மரின் விருப்பப்படியே சத்தியவதியை மணந்துகொண்டு மனநிறைவோடு வாழ்ந்தான் மன்னன் சாந்தனு.

திங்கள், 10 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(3)

தேவவிரதன் வந்தான்...

மன்னன் சாந்தனு அன்றும் வழக்கம்போல் கங்கைக்கரைக் காட்டில் வேட்டையாடச் சென்றிருந்தான். அப்போது கங்கையின் வெள்ளத்தைத் தன் அம்புகளால் அணைகட்டித் தடுத்திருந்த இளைஞனொருவனைக் கண்டான்.

"என்ன அற்புதமான திறமை" என்று அதிசயித்திருந்தவேளையில்,
கங்காதேவி மன்னன் முன் தோன்றினாள்.

"மன்னா, தங்களை அதிசயிக்கச்செய்தவன் வேறுயாருமல்ல... உங்கள் மகன் காங்கேயன் தான். கலைகளிற் சிறந்த இவன் தேவகுரு பிரஹஸ்பதியிடம் அரசியலையும், வசிஷ்டரிடம், வேதங்களையும், பரசுராமரிடம் வில்வித்தையையும் கற்றவன். இவனை வெல்ல யாருமிலாத அளவுக்கு நிகரில்லாதவனாக இவனை வளர்த்துள்ளேன்"

என்றுகூறித் தன் மகனை மன்னன் சாந்தனுவிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தாள் கங்காதேவி.

மகனைக் கண்டு மகிழ்ந்தான் சாந்தனு மன்னன். பேருவகையுடன் தன் மகனை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்தான். அருமை மகனுக்கு ஆளும் வழிவகைகளைக் கற்றுக்கொடுத்து அவனை நீதியும் நேர்மையும் உடையவனாக வளர்த்தான் மன்னன் சாந்தனு.

அன்னையைக் காணாத குறையைத் தவிர வேறெந்தக் குறையுமின்றி வளர்ந்தான் தேவவிரதன். அவனுடைய நற்பண்புகளால் மக்கள் மனதில் இடம்பெற்றான். உரிய பருவத்தில் தன் மகனை நாட்டின் இளவரசனாக அறிவித்தான் மன்னன் சாந்தனு.

சனி, 8 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(2)

அஷ்ட வசுக்களின் சாபவிமோசனம்

தேவர்களின் தலைவனான இந்திரனின் உதவியாளர்களாக அஷ்டவசுக்கள் எனப்பட்ட எண்மர் இருந்தனர். தாரா, துருவன்,சோமன், ஆகாஷ்,அனலன், அனிலன்,பிரத்யுசன், பிரபாசன் என்ற அவர்கள் அனைவரும் ஒருமுறை மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்தனர். அங்கே கேட்டதெல்லாம்தரும் காமதேனுவின் மகவான நந்தினி எனும் பசுவைக் கண்டு வியந்தனர்.

வசுக்களில் இளையவரான பிரபாசன் என்பவர்,

"துறவியான வசிஷ்ட முனிவருக்கு இந்த வரம்தரும் பசு எதற்கு?"

என்றுகூற, அதனை மற்றவர்களும் ஆமோதித்து, நந்தினிப்பசுவை தேவலோகத்திற்குக் கொண்டுசெல்ல முடிவுசெய்து அதனை ஆசிரமத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுவிட்டனர்.

வந்தார் வசிஷ்டர்... கொண்டார் கோபம்...

"அஷ்டவசுக்களும் பூவுலகில் மனிதர்களாகப் பிறக்கட்டும்"

என்று சாபமிட்டார்.
சாபமுற்றதை அறிந்து வசுக்கள் கலங்கி,

" மாதவ முனிவரே, எங்களை மன்னியுங்கள். அறியாமையால் பிழை செய்தோம். அதைப் பொறுத்தருளி, விமோசனம் தரவேண்டும்"

என்று அவர் பாதத்தில் விழுந்து வேண்டினார்கள்.

மனம் இரங்கிய முனிவர்,

"இந்தக் குற்றத்தைச் செய்யத்தூண்டிய காரணத்தால் பிரபாசனே இதற்குப் பொறுப்பாளனாகிறான். அதனால் அவன் பூவுலகில் நீண்டநாள் மனிதனாய் வாழவேண்டும். மற்ற எழுவரும் அவனுக்குத் துணை நின்றதால் பூவுலகில் பிறந்தவுடன் சாப விமோசனமடைவீர்கள்"

என்று அருள்புரிந்தார்.

சாபம் பெற்ற எண்மரும் கங்காதேவியிடம் வந்து, சாபமடைந்த எங்களுக்குத் தாயாகித் தயைபுரியவேண்டும் என்று வேண்டிட, கங்கையும் தாயாகி, மன்னன் சாந்தனுவின் குழந்தைகளாய்ப் பிறந்த எழுவரை நீரில் வீசிக்கொன்று, எட்டாம் குழந்தையாய்ப் பிறந்த பிரபாசனை இளைஞனாகும்வரை தானே வளர்க்கத் தன்னோடு அழைத்துச் சென்றாள்.

அஷ்ட வசுக்களின் ஆசை அவர்களை மனித உயிராகப் பிறக்கவைத்தது. கங்கையின் அருளால் அஷ்டவசுக்கள் சாபவிமோசனம் பெற்று மீண்டனர்.

புதன், 5 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(1)

1.கங்கை கொண்டான் சாந்தனு
***************************************

விஸ்வாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த மகளும், கண்வ முனிவரின் வளர்ப்பு மகளுமான சகுந்தலைக்கும் மன்னன் துஷ்யந்தனுக்கும்,பிறந்தவன் மாமன்னன் பரதன்.
அவனுடைய மாட்சிமை தாங்கிய பரதவம்சத்தில், பின்னர் வந்த மன்னன் பிரதீபனுக்கும் அவன் மனைவி சுனந்தாவுக்கும் மகனாகப் பிறந்தவன் மன்னன் சாந்தனு. அஸ்தினாபுர அரியணையிலமர்ந்து ஆட்சிசெய்துவந்த அவன் மிகுந்த அழகும், சிறந்த வீரமும், மேன்மையான குணங்களும் உடையவனாக விளங்கினான்.

மன்னன் சாந்தனு ஒருநாள் வேட்டைக்குச் செல்கையில், தாகம் அதிகரிக்கவே அருகிலிருந்த கங்கை நதியில் சென்று நீரருந்துகையில் அங்கே அழகே உருவான கன்னியொருத்தியைக்கண்டான்.கண்டதும் காதல் கொண்டான்.

"கண்ணிறைந்த பெண்ணழகியே, நீ யார்? எங்கிருந்து வந்தாய்?

என்று வினவிய அவன்,

"அஸ்தினாபுரத்தின் அரசனான என்னை மணம் செய்துகொள்ள சம்மதமா?"

என்று வினவினான்.

அதற்கு அந்தப்பெண்,

"அரசே, நான் யார் என்று கேட்காமலும், நான் செய்யும் செயல்களை ஏனென்று கேட்டுத் தடைசெய்யாமலும் இருக்க சம்மதமென்றால் நான் உங்களை மணப்பேன். தாங்கள் என் செயல்களைத் தடுத்தால் நான் அப்பொழுதே உங்களைவிட்டு விலகிவிடுவேன்"

என்றும் கூறினாள். மன்னன் சாந்தனுவும் அதற்கு மனப்பூர்வமாய் சம்மதித்து அவளை கந்தர்வ விவாகம் புரிந்து அரண்மனைக்கு அழைத்துவந்தான்.

மணவாழ்க்கை மகிழ்ச்சியோடு செல்ல,மன்னனின் மனைவிக்கு ஆண் மகவொன்று பிறந்தது. குழந்தை பிறந்த குதூகலச் செய்தி கேட்டு, தன் மனைவியைக் காணவந்த சாந்தனு, பிறந்த குழந்தையைத் தன் மனைவி கங்கையாற்றில் வீசிக் கொன்றதைக் கண்டான். கண்ட காட்சியினால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த மன்னன் தான் தன் மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்குவர, அவளிடம் ஏதும் கேளாமல் அமைதி காத்தான்.

இந்நிலையில் மன்னன் மனைவி மறுபடியும் தாய்மையுற்றாள். சென்றமுறைபோல் இனியும் செய்யமாட்டாள் என எண்ணி மன்னன் மகிழ்ந்திருந்தவேளையில், தான் பெற்ற இரண்டாவது குழந்தையையும் ஆற்றில் வீசிக் கொன்றாள் அவள். துயரத்தின் பிடியில் சிக்கித்தவித்தான் மன்னன் சாந்தனு. ஆனாலும், கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது என்பதற்காக வாய்மூடி மௌனித்திருந்தான்.

தொடர்ச்சியாய்ப் பிறந்த ஏழு குழந்தைகளையும் நீரில் வீசிக் கொன்றதைக் கண்டு சோகத்தில் ஆழ்ந்த அஸ்தினாபுரத்து அரசன், எட்டாவது குழந்தை பிறந்ததும் அதனை எடுத்துக்கொண்டு அவள் ஆற்றிற்குச் செல்கையில், குழந்தையில் அழகிலும், பிள்ளைப் பாசத்திலும், தனக்கொரு வாரிசு வேண்டுமே என்ற பரிதவிப்பிலும் துவண்டவனாய்,

" இரக்கமே இல்லாமல் பெற்ற குழந்தைகளைக் கொல்கிறாயே, நீ யார்? ஏன் இப்படிச் செய்கிறாய்?"

என்று மனம் பொறுக்காமல் அவளிடம் வினவினான்.

தான் கொடுத்த வாக்குறுதியை மன்னன் மீறி மன்னன் கேள்வியெழுப்பவே,

"மன்னா,நான் யாரென்று சொல்கிறேன், ஆனால் உங்கள் வாக்குறுதியை மீறியதால் இனியும் என்னால் உங்களுடன் வாழ இயலாது"

என்று கூறிய அப்பெண்,

"நான் தேவலோகத்திலிருந்து சாபம் தீர வந்த கங்காதேவி"

என்று கூறி, தன் முற்பிறப்புப்பற்றி மன்னனுக்குச் சொல்ல ஆரம்பித்தாள்.

"முன்னொரு பிறவியில், தேவர் சபையில் கங்காதேவியாகிய நான் நடனமாடுகையில் என் ஆடை சற்றே விலகியதைக் கண்டு அனைவரும் நிலம்நோக்க,அப்போது மகாபிஷக் எனும் பெயரில் மன்னனாய்ப் பிறந்திருந்த நீங்கள் என் அழகில் மயங்கி எனைப் பார்த்து ரசிக்க, பிரம்மதேவன் இட்ட சாபத்தின் பலனாகத்தான் நாமிருவரும் கணவன் மனைவியாக இப்பிறவியடைந்தோம்"

என்று கூறினாள்.

"நமக்குப் பிறந்த இக் குழந்தைகள் எண்மரும் சாப விமோசனத்துக்காக என் வயிற்றில் பிறந்த அஷ்ட வசுக்கள் ஆவர். நமக்குப் பிறந்த இந்த எட்டாவது குழந்தையை நான் சிலகாலம் வளர்த்து பின்னர் உங்களிடம் ஒப்படைப்பேன்"

என்றும் கூறி, மன்னன் சாந்தனுவை விட்டு விலகி தேவலோகம் சென்றாள் கங்காதேவி.

பாரதம் படிக்கலாம் வாங்க...

மகாபாரதம் என் பார்வையில்...
************************************
பாரத நாட்டின் பெருமைமிகு இதிகாசங்கள் இரண்டினுள் மகாபாரதமும் ஒன்று. வியாச முனிவர் வாய்மொழியாய் உரைக்க, விநாயகப்பெருமானே தன் தந்தத்தை எழுதுகோலாக்கி இந்நூலை எழுதியதாகக் கூறப்படும் புராணக்கதை இந்நூலின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகும்.

பாரத நாட்டிற்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த மன்னன் பரதனின் வம்சத்தில் எழுந்த போட்டியும் பொறாமையும், சூழ்ச்சியும் அதை வென்ற தர்மமும் ஆகிய அனைத்தையும் விளங்கக்கூறும் வாழ்க்கைக் காப்பியம் இது.

இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்களாலும் போற்றப்படும் இந்த இதிகாசம், வாழ்க்கைக்கான அறவழியை எடுத்துரைப்பதுடன், பார்த்தனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மாவின் வாயிலாக பகவத்கீதையையும் நமக்குப் போதிக்கிறது.

நாளைய பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகிய குழந்தைகளுக்கும், கதையின் சாராம்சம் தெரிந்தும், ஏனைய விஷயங்கள் தெரியாத என்னைப் போன்ற சில பெரியவர்களுக்கும் நம் பண்டைய பாரதத்தின் பாரம்பரியத்தை அறிய வைக்கும் நோக்குடன், நான் படித்ததைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுந்த சிறு முயற்சியே இந்த மகாபாரத நெடுங்கதையின் எளிமையான வடிவம்.

பாரதக்கதையின் பெருமைகள்
**************************************

பழம்பெருமைகள் நிறைந்த நம் பாரதநாடு முனிவரும் அறிஞர்களும் பிறந்த புண்ணியபூமி. வேதங்களும் வித்தைகளும் புரிந்த சித்தர்கள் வாழ்ந்த பூமி. பாரத மக்கள் அனைவரும் போற்றும் நால்வேதங்களாகிய ரிக், யஜூர், சாம,அதர்வண வேதங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாம் வேதம் எனப்படுமளவுக்கு பெருமைபெற்றது மகாபாரதக்காப்பியம்.

மகாபாரதக்கதை எண்ணிலாத கிளைக்கதைகளைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலில் கூறப்படாத நீதிக்கருத்துக்கள் எதுவுமே இல்லையெனுமளவுக்கு கதையின் தொடக்கமுதல் இறுதிவரை மனிதவாழ்விற்கான நியதிகள் நிறைந்துகாணப்படுகிறது. முழுக்கமுழுக்க இறை உபதேசமான பகவத்கீதை பாரதக்கதையின் மகுடம் எனலாம். பாரதக்கதையில் சொல்லப்படாத மனித குணங்களே இல்லையெனுமளவுக்கு இன்றைய வாழ்க்கையிலும் எந்த ஒரு மனிதனையும் சித்தரிக்கக்கூடிய கதைமாந்தர்களை நாம் பாரதக்கதையில் காணமுடியும்.

தந்தைக்காகவே தன்னலம் துறந்த பீஷ்மரையும், நட்புக்காக உயிரையும் கொடுத்த கர்ணனையும், பொறாமைக் குணத்தினால் பெருமையை இழந்த துரியோதனையும், தருமமே தன்னுருவாக வாழ்ந்த தர்மனையும், போர்முனையில் பாசத்தால் கலங்கி நின்ற அருச்சுனனையும், பதிபக்தியினால் கணவனுக்கு இல்லாத பார்வை தனக்கும் வேண்டாமென, கண்ணைக் கட்டிக்கொண்டே வாழ்ந்த காந்தாரியையும் இந்தக்காப்பியத்தில் காணலாம்.

பராசர முனிவரின் புதல்வனான வியாசரால் சொல்லப்பட்ட பாரதம், தும்பிக்கையோனால் கம்பீரமாக தேவமொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு, அக்கதை வியாசரால் அவரது புத்திரர் சுகருக்கு சொல்லப்பட்டு, தேவலோக சஞ்சாரியான நாரதமுனிவர் அந்நூலைக்கற்று தேவர்களுக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறுவர். தேவர்களின் காப்பியம் மனிதர்களை அடைந்து, பிற்காலத்தில் வில்லிப்புத்தூர் ஆழ்வாரால் வில்லிபாரதமாகவும், ராஜாஜி அவர்களால் வியாசர் விருந்தாகவும் படைக்கப்பட்டது. எட்டையபுரத்துக் கவிஞன் இந்நூலின் ஒருபகுதியைப் பாஞ்சாலியின் சபதம் என்றபெயரில் மக்களுக்குக் கொடுத்தார்.

இத்தனை பெருமைகள் நிறைந்த, கடவுளும் மனிதனாகிக் கலந்து வாழ்ந்த காப்பியத்தின் பெருமைகள் உலகுள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.