சனி, 28 நவம்பர், 2009

சம்பளம்!

"எங்கிட்ட காசு கிடையாது...சம்பளம் வந்தாத்தான் சாப்பாட்டுக்கே அரிசி வாங்கமுடியும். தயவு செஞ்சு என்னோட கொஞ்ச நஞ்ச நிம்மதியயும் கெடுக்காதீங்க. எரிச்சலுடன் சொல்லிவிட்டு, தானும் தன் மகனும் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குப் போனாள் பூமதி.

"அடேங்கப்பா, காசு கேட்டா, ராசா மவளுக்கு எவ்ளோ கோவம் வருது... புருஷங்காரன் கஷ்டம்னுசொல்லி காசுகேட்டா பொண்டாட்டிக்காரி தலைய அடகு வச்சாவது குடுக்கணும்டி...அத விட்டுட்டு அம்மாளுக்கு சந்தோஷம் போச்சாம்...நிம்மதிபோச்சாம்.... என்னத்தக் கொண்டுவாறாள்களோ இல்லையோ அப்பன் வீட்லருந்து இந்த திமிர மட்டும் மறக்காம கொண்டுவந்திர்றாளுக.."

உள்ளே போன போதை உசுப்பேத்திவிட்டிருக்க, உரக்கக் கத்திக்கொண்டிருந்தான் அழகேசன். பதில்சொல்லாமல் பாத்திரங்களை விளக்கிக்கொண்டிருந்தாள் பூமதி.

பூமதிக்கு உள்ளூரிலிருக்கும் தனியார் பள்ளியில் ஆயா உத்தியோகம். தன் ஐந்து வயது மகன் செந்திலையும் தான் வேலைசெய்யும் அந்தப் பள்ளியிலேயே சேர்த்திருந்தாள்.

திடீரென்று, "டேய் மவனே, அந்த நோட்டை இங்க கொண்டாடா..."

என்று குரல்கொடுத்தான் அழகேசன்.

 அப்பனோட கத்தலையும் அம்மாவின் பதிலையும்,மௌனமாக உள்வாங்கியபடி, எழுதுவதுமாதிரி உட்கார்ந்திருந்த மகன் செந்தில், ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, எழுந்துவந்து நோட்டை அப்பாவிடம் கொடுத்தான்.

அவன் கொடுத்த நோட்டில் "நிம்மதி, நிம்மதி" என்று தன் போதையில் நடுங்கும் விரல்களால் கோழி கிறுக்கியதுமாதிரி எழுதிவிட்டு,

"இந்தாடி, நீ கேட்ட நிம்மதி...தலைக்குமாட்டுல வச்சுட்டுத் தூங்கு"

என்று சொல்லி, ஏளனமாய்ச் சிரித்தபடி நோட்டை அவளிடம் விட்டெறிந்தான் அவன். கோபம் பெருகினாலும் அதைக் காட்ட இது தகுந்த சமயம் இல்லையென நினைத்தவளாக, அதை மனதிற்குள் அழுத்திக்கொண்டாள் பூமதி.  அழுத்தப்பட்ட ஆத்திரம் கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது.

சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தவள், நோட்டை எடுத்து மகனின் பைக்கட்டில் வைத்துவிட்டு, மகனைக் கூட்டிக்கொண்டுபோய் பாயில் படுக்கவைத்துவிட்டுத் தானும் படுத்துக்கொண்டாள்.

.............................................

மறுநாள் மாலை... பள்ளிக்கூடத்தைவிட்டு பூமதி மகனுடன் வெளியே வந்தபோது, வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான் அழகேசன்.

" பூவு, சம்பளம் வாங்கியிருப்பேல்ல, பணத்தைக்குடு...அடிக்குரலில் கேட்டான் அவன்.

பதில் பேசாமல், பையிலிருந்த கவரை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு, மகனைக் கையில் பிடித்தபடி வேகமாக நடந்தாள் அவள்.

என்னடி, கவர் மெலிஞ்சுபோயிருக்கு என்று குரல்கொடுத்தபடி, கவரைப் பிரித்தான் அழகேசன். அதற்குள், அவன் கேள்வி எட்டாத தூரத்துக்குச் சென்றிருந்தாள் அவள்.

கவருக்குள் எட்டாக மடித்த காகிதம் இருந்தது. "காசை எதுக்கு காகிதத்தில் மடிச்சுவச்சிருக்கா,கழுத..." என்று நினைத்தபடி காகிதத்தைப் பிரித்தான் அவன்....

உள்ளே "சம்பளம்" என்ற வார்த்தை தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. திகைத்தவனாக, பேப்பரைத் திருப்பிப் பின்னால் பார்த்தான். அங்கேயும் அதே வார்த்தை அவனைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.

***********

சனி, 21 நவம்பர், 2009

சுலபமான தக்காளிக் குழம்புகடைக்குப்போய் காய்கறி வாங்க நேரமில்லையா? வீட்ல தக்காளி, வெங்காயம் மட்டும்தான் இருக்கா? இருக்கிறதை வச்சு எளிதாகச் செய்யக்கூடிய குழம்பு இதோ...

தேவையான பொருட்கள் 

தக்காளி -கால் கிலோ
மிளகாய்த்தூள் -1தேக்கரண்டி
மல்லித்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி -1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காயளவு
உப்பு - தேவையான அளவு

அரைக்க

பெரிய வெங்காயம் (நறுக்கியது) -1
தேங்காய்துருவல் -1 கப்
சீரகம் -1 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் -1 குழி கரண்டி
நறுக்கிய வெங்காயம்- 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

*வெங்காயத்தை உரித்து நறுக்கி தேங்காய், சீரகத்துடன் அரைத்துக்கொள்ளவும்.

*புளியைக் கரைத்து வடிகட்டவும்.

*வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தை இட்டு சிவந்தவுடன் கடுகு சேர்த்து வெடிக்கவிட்டு கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

*தக்காளி வதங்கியதும் அதனுடன் புளிக்கரைசல், அரைத்த கலவை மற்றும் பொடிகள் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் மூடியிட்டுக் கொதிக்கவிடவும்.

*பின் மூடியை நீக்கி உப்பு சரிபார்த்துவிட்டு, மேலும் இரண்டு நிமிடங்கள் சிறு தீயில் வைத்து எண்ணெய் மிதந்ததும் இறக்கவும்.

சுலபமான தக்காளிக் குழம்பு தயார்.

இதனை, தாளித்த துவரம்பருப்புக் கூட்டுடனோ, முட்டை பொரியலுடனோ, இல்லை அப்பளத்துடனோ சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

செவ்வாய், 3 நவம்பர், 2009

நாசமத்துப்போற மக்கா....நல்ல தமிழ் பேசுங்க!

அம்மா, இன்னிக்கு என்ன டே?

வியாழக்கிழமை...

அப்டின்னா?

வெள்ளிக்கிழமைக்கு முன்னாடி வருமே அது...

time-table எடுத்துவைக்கணும்...சரியாச் சொல்லும்மா...

வெள்ளிக்கிழமைன்னா friday..அப்ப, இன்னிக்கு thursday,வியாழக்கிழமை...

thursday ன்னு முதல்லயே தெளிவாச் சொல்லவேண்டியதுதானே?

முகத்தைக் கோணலாக்கிச் சொல்கிறது வாண்டு...

"நீங்க இங்கேயிருந்துகிட்டு, வீட்டில தமிழ்லதான் பேசணும்னு எங்ககிட்ட சொல்றமாதிரி, தமிழ்நாட்டுல போய் சொல்லிப்பாருங்க...அப்புறம் என்னதான் பாஸ்போர்ட்டைக் காட்டினாக்கூட நீங்க துபாய்லதான் இருக்கிறீங்கன்னு நம்பமாட்டாங்க யாரும்..." பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்னாலும், நிஜம் சுடத்தான் செய்தது.

"வங்கிக்குப் போகணும், தானி ஒண்ணு கூட்டிக்கொண்டுவா" ன்னு சொன்னா, தமிழ்நாட்டுக்காரங்களே ஏதோ கீழ்ப்பாக்கத்து உருப்படியோன்னு சந்தேகமாத்தான் பார்ப்பாங்க.

அடுக்குப்பானையும் குதிருமா அழகா செம்மண் காவிபூசி, திண்ணையும் தூணுமா இருந்த கிராமத்துவீடுகளும், மாமம்மா பேசிய அழகு தமிழும்கூட இன்று மாறித்தான் போய்விட்டது.டவுண்பஸ்,லேட்டு,லெட்டர்,ஸ்டேஷன்,ஸ்பீக்கர்செட்டுன்னு அடுக்கடுக்கா ஆங்கிலம்தான் அவசரத்துக்கு வாய்ல வருது எல்லாருக்கும். 

குதிருன்னு சொன்னதும் நம்ம ஊர்ப் பழமொழி ஒண்ணு நினைவுக்கு வந்திருக்குமே... இடம் பொருள் அறியாமல் ஏதாவது உளறிக்கொட்டும்போது, "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லே"ங்கிற மாதிரி இப்படியா பேசுறதுன்னு கடிஞ்சுக்குவாங்க அந்தக்காலத்துப் பெரியவங்க.

குதிர், நெல்லைச் சேமித்துவைக்க அந்நாளைய வீடுகளில் ஆளுயரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் மண்பாண்டத்தின் பெயராகும். இதைக் குலுக்கை என்றும்கூடச் சொல்லுவாங்க.

குதிரிலில் சேமித்த நெல்லை எடுத்து,பெரிய பெரிய குத்துப்போணிகளில்,புழுங்க வச்சு, தட்டடியில கொட்டி, வரிவரியா கிண்டிக் காயவச்சு, பறவைகள் கொத்தாமலிருக்க பிள்ளைகளைக் காவல் வைக்க,

அக்கம்பக்கத்துப் பிள்ளைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு,

மழ வருது மழ வருது நெல்லள்ளுங்க,
முக்காப்படி அரிசிபோட்டு முறுக்கு சுடுங்க,
தஞ்சாவூரு மாமனுக்குக் கொஞ்சம் குடுங்க,
சும்மா வார மாமனுக்குச் சூடுபோடுங்க!

என்று கூடிப்பாடிக் குதூகலித்ததாக, மாமம்மா கதை சொல்ல, விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்ததுண்டு. மாமனின் அம்மா மாமம்மா, அம்மாவுடன் பிறந்த சகோதரன் அம்மாமன். எத்தனை அருமையான உறவுப் பெயர்களை மறந்துவிட்டோம்?

வெள்ளென எழுந்திருச்சி, செம்பு நெறைய நீத்துப்பாவத்தைக் குடிச்சிட்டு, வயலுக்குப்போயி, வேர்க்க விறுவிறுக்க கமலையில தண்ணியெறச்சு, வயலுக்குப் பாய்ச்சிட்டு, வீட்டுக்கு வந்து, கும்பா நிறைய பழைய சோறும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட அந்தக்கால மக்களின் உடலுரம் எங்கே, நாமெல்லாம் எங்கே!

வெள்ளென என்ற வார்த்தையை, விடியலில், அதிகாலையில் என்ற பொருளில் இன்னும் உபயோகிப்பார்கள். நீராகாரத்தை நீத்துப்பாவம் என்று சொல்லுவதை நெல்லை மாவட்ட முதியவர்களிடம் இன்னும் கேட்கலாம். கமலை என்பது மாடுகளை வைத்துக் கிணறுகளில் நீரிறைக்கும் முறை.

கும்பா, வட்டில் இரண்டும் அந்தக் காலத்து உணவு உண்ணும் பாத்திரங்களின் பெயர்களாம். கும்பா என்பது கிட்டத்தட்ட நம் சந்தனக் கிண்ணம் போலப் பெரியதாக இருக்குமாம்.நீருடன் உண்ணும் பழையசாதம் போன்றவற்றை உண்ண ஏற்றதாக இருக்குமாம். வட்டில் என்பது, தட்டுப்போல இன்னும் கொஞ்சம் உயரமான விளிம்புடன் வேலைப்பாடுகளுடன் கூடியதாய் இருக்குமென்று கூறக்கேட்டிருக்கிறேன்.

வைக்கப்படப்புல வாழக்கா பழுக்கவச்சு, கொச்சக் கயித்தில மட்டைவச்சு ஊஞ்சல்கட்டி, கருக்கலானதுகூடத் தெரியாம கூட்டாளிகளோட விளையாடிட்டு வீட்டுக்கு வந்தா, அம்மா சட்டகப்பையை அடுப்பில வச்சு, சூடுவைப்பேனென்று சுத்திவர, ஆச்சியோட மடியில் அடைக்கலம் புகுந்து...நம் தமிழ்க் குடும்பங்களில்தான் நினைத்து ரசிக்க எத்தனை எத்தனை விஷயங்கள்...

வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்

கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு

சட்டகப்பை - தோசை திருப்பும் கரண்டி

கருக்கல் - மாலை மயங்கிய வேளை

ஆச்சி - அப்பாவின் அம்மா.

இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ...

கடைசியா, தலைப்புக்கு வருவோம்...

அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது "அழிவில்லாமல் இரு" என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்...

ஆக, நாசமத்துப்போற மக்கா, மறந்துபோன நல்லதெல்லாம் மறுபடியும் நினைவில்கொண்டு, நல்ல தமிழை எல்லாரும் பேசிடுவோம்.

(இது ஒரு மீள்பதிவு)

******

குறுக்குத்துறையும் குருவித்துறையும்

என்னைக் கவர்ந்த ரெண்டு துறைகள் எதுன்னா, கட்டாயம் சொல்லுவேன் ஒண்ணு குறுக்குத்துறை இன்னொண்ணு குருவித்துறைன்னு( அறிவியல், தொழில்நுட்பம்னு ஏதாவது சொல்லுவேன்னு எதிர்பார்த்திருந்தா ஏமாற்றம்தான் :))காரணம் என்னன்னா,சொல்லப்போற ரெண்டுமே ஆற்றங்கரையில் அமைந்த ரெண்டு ஊர்களைப் பற்றிய விஷயங்கள்...

சொந்த மண்ணுன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு பாசம் குறுக்குத்துறையில. சிலநூறு அடிகளுக்கு அப்பாலிருக்கும் சிக்கநரசய்யன் கிராமம் எந்தையின் சொந்த ஊர். வீட்டில பல்விளக்க ஆரம்பிச்சு, குறுக்குத்துறை தாமிரபரணியில் வந்து வாய்கொப்பளிச்சு, கல்மண்டபத்திலிருந்து குதித்து நீச்சலடித்து,ஆழத்திலிருக்கும் அல்லியைக் பறித்துவந்து,ஈரம் காயாம முருகனைக் கும்பிட்ட கதையையெல்லாம் அத்தனை சுவாரசியமாய்ச் சொல்லுவாங்க என் அப்பா.

இதோ, ஆற்றங்கரையில் அழகிய கோயில்...கோயிலின் பின்னாலிருந்து எடுக்கப்பட்ட கோபுரத்தோற்றம்...அருகில், அரசமரத்தடிப் பிள்ளையார் கோயில்...
தன்னுடைய சிறுவயதில், ஆற்றங்கரைப் பாறைக்கருகில் தான் காசு சேர்த்துப் புதைத்துவைத்த கதையை என் அப்பா சொல்ல, ஆசையாய் என் பிள்ளைகள் அங்கே தோண்டிப்பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

காசுதோண்டிவைத்த பாறையும், தூரத்தெரியும் ரயில் பாலமும்...(படத்தை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்த்தால்தான் ரயில் பாலமெல்லாம் தெரியும்)நெல்லை நகரத்தின் சிறப்புகளில் இந்தக் குறுக்குத்துறை முருகனுக்கு ஒரு தனியிடம் உண்டு. காலருகில் ஓடும் தாமிரபரணியின் சலசலப்பில் வள்ளி தெய்வானையுடன் சுகமாக வீற்றிருக்கும் முருகப்பெருமான், செந்தூர்க் கோயிலுக்காகச் செய்யப்பட்ட சிலாரூபமென்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதனால், திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கொண்டவர்கள் இங்கே அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார்களாம்.

கோயிலின் முகப்பிலிருந்து...மாலை மயங்கிய பொழுதும், ஓடும் நீரின் மெல்லிய இசையும், கோயிலில் இருந்து எழுந்த தெள்ளிய மணியோசையும் மனதில் மிகவும் ரம்யமான உணர்வை ஏற்படுத்தியது.படித்துறையில் உட்கார்ந்து கால்களைக் கொஞ்சும் மீன்களோடு விளையாடிக்கொண்டிருந்தால் வீட்டுக்குக்கிளம்ப மனசே வராது.

அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்த கிராமம்,மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலிருக்கும் குருவித்துறை. பசுமைக்குள் புதைந்திருக்கும் சின்னஞ்சிறு கிராமம்.சின்னச்சின்ன வீடுகள், கோயில்கள், தென்னைமரச் சோலைகளென்று வைகைக்கரையில் அமைந்திருக்கும் அழகிய கிராமம் அது.

வைகையாற்றின் கரையில் வல்லவப் பெருமாளாக அருள்பாலிக்கிறார் வெங்கடேசப் பெருமான்.குரு பகவான் தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால், இந்த இடம் குருவின் துறையெனப் பெயர்பெற்று, பின் மருவி குருவித்துறையாகி, அயன் குருவித்துறையென்று என்று தற்போது அழைக்கப்படுகிறது.

குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் அவருக்குக் காட்சி தந்து, அவருடைய மகன் கசனை மீட்டு தந்தாராம். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லபப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் புகழ்பெற்ற குருஸ்தலமாகத் திகழ்கிறது.இந்த ஆலயம் ஊர்க்கோடியில் அமைந்திருந்தாலும் தேடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

இதோ, வல்லபப் பெருமாள் ஆலயம்...(படம் தினமலர்.காமில் வெளியானது)


இக்கோயில் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே பாருங்க.

நன்றி: தினமலர்.

மதுரையிலிருந்து அரசுப் பேருந்துகள் அடிக்கடி குருவித்துறைக்கு வந்து செல்கின்றன. கிராமத்திற்குள் போகும்போது கனகம்பீரமாகக் காட்சியளித்தது பெத்தண்ண சாமி கோயில். கிராமத்து மக்களின் காவல் தெய்வம் அவர். ஊர் மத்தியில் மையமாக அமைந்திருக்கிறது,
பத்திரகாளியம்மன் கோயில். சித்திரை மாதத்தில் இந்த அம்மனுக்கு சிறப்பாய்த் திருவிழா நடக்கிறது.

விவசாயம், பால் உற்பத்தி, மற்றும் தென்னை சார்ந்த தொழில்களும் இங்கு முக்கியமான தொழில்களாகத் தெரிகிறது.

இதோ, பத்திரகாளியம்மன் ஆலயத்திற்குள் உள்ளே நுழைந்ததும் செல்லப் பிள்ளையார்...சிவனின் ஓவியம் வரைந்திருப்பது ஆலயச்சுவரில் தான். மறுபுறத்து ஓவியத்தில் மகிஷனை வதைத்த மாகாளி...இதோ,பெத்தண்ண சாமி கோயில்...கம்பீரமாகக் குதிரையில்...குருவித்துறையை விட்டுப் புறப்படுகையில் இருட்டிவிட்டது. தூரத்து மலையில் நெருப்பு ஓவியமாகப் புகையுடன் தெரிந்தது காட்டுத்தீ. வழியில் கண்ட,கண்ணுக்கழகான காட்சிகள் மனதை நிறைத்திருந்தது.