செவ்வாய், 23 நவம்பர், 2010

ஹெச் ஐ வி பாசிட்டிவ்...மற்றதெல்லாம் நெகட்டிவ்...

'தாயற்றபோதே சீரற்றுப்போகும்' என்று சொல்வழக்கு ஒண்ணு உண்டு நம்ம ஊரில்.  அது அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கும் அப்படியே பொருந்தித்தான் போனது....

அவளுக்கு வயது பதினெட்டு. அவளோடு சேர்த்து வீட்டில் ஆறு பிள்ளைகள். அத்தனையையும் விட்டுவிட்டு செத்துப்போனாள் அவளுடைய தாய்.  கட்டிய மனைவி காலமானதும், பிள்ளைகள் ஆறுபேரையும் விட்டுவிட்டு, எங்கேயோ போய்விட்டார் அவர்களுடைய தந்தை.

ஆளுக்கொரு திசையாய்ப்போனார்கள் பிள்ளைகள் ஆறுபேரும். ஒற்றையாகிப்போனாள் பதினெட்டு வயசு ரெபேக்கா. காய்கிற வயிற்றுக்கு உணவும், காப்பாற்றிக் கைகொடுக்கக் கொஞ்சம் அன்பும் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்த அவளுக்கு, அந்த ஆண்மகனின் அருகாமை ஆறுதலாயிருந்தது. அவனே எல்லாமென்று நம்பிய அவளுக்கு அவனிடமிருந்து பரிசாகக் கிடைத்ததோ இரண்டு. ஒன்று, வயிற்றில் உருவான குழந்தை, இன்னொன்று பால்வினை நோய்.

இரண்டாவதின் காரணம் அறியமுற்பட்டபோதுதான் உணர்ந்தாள், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையானவனாக இருக்கவில்லை, பல பெண்களுடன் பழக்கம் வைத்திருக்கிறான்  என்பதை.  விளைவு விவாகரத்தில் முடிந்தது வாழ்க்கை. இடையில்விட்ட உயர்நிலைப் படிப்பைத் தொடரலாம் என நினைத்தாள் அவள். ஆனால், கல்வியில் கவனத்தை ஒருமுகப்படுத்தமுடியாமல், எல்லாத்தேர்வுகளிலும் தோல்வியுற்றாள் அவள். வெறுமையாய்ப்போன வாழ்வில், வேதனைகளைக் கிறுக்கிச்சென்றது விதியின் கைகள்.

மனதில் நிறைந்த வெறுமையையும் வேதனையையும் துடைக்க, இன்னுமொரு  இதமான துணை கிடைக்காதா என்று ஏங்கினாள் அவள். இருபத்துமூன்று வயதில் இன்னொரு திருமணமும் செய்துகொண்டாள்.

வாழ்ந்து ஜெயிக்கவேண்டுமென்ற உத்வேகத்தில்,  வேலைதேடி மும்முரமாய் இறங்கினாள் அவள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் உள்ளூரிலுள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையின் ஒளியை உணரத்தொடங்கினாள் அவள்.

முந்தைய திருமணத்தின் வலியும், ஏற்கெனவே இருக்கிற ஒரு குழந்தையை வளர்த்தால்போதும் என்ற நினைப்பும், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் துரத்தியது அவளிடமிருந்து. ஆனாலும், இரண்டு வருடங்களுக்குப்பிறகு, இரண்டாவது கணவனின் ஆசைக்கு ஒத்துக்கொண்டு, ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள் அவள்.

ஒரே வயதுதான் ஆகியிருந்தது அவள் மகனுக்கு. அதற்குள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள் அவள். உடம்பில் என்னவென்றே தெரியாமல், திடீர்திடீரென்று தோன்றுகிற தடிப்புகளும், அடிக்கடி வருகிற காய்ச்சலுமாக அவதிப்பட்டாள் அவள். காரணம் என்னவென்று சோதித்தபோது, எல்லாமே காலங்கடந்துபோயிருந்தது. ஹெச் ஐ வி நோய்க்கிருமிகள் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவிப்போயிருந்தன அவளுக்கு.

அவள் மட்டுமின்றி, பிறந்த ஆண்குழந்தையும் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தாள். இரண்டாவது திருமணவாழ்க்கை கொடுத்த வெகுமதி அது என்று உணர அதிகநேரமாகவில்லை அவளுக்கு. அவள் கணவனோ, மனைவியின் சுகவீனம் பற்றி எதுவுமே அறியாதவனாக, இரவு விடுதிகளிலும், மதுக்கடைகளிலும் விழுந்துகிடந்தான்.

அடுத்ததாக வந்தது, அவளுக்கு எலும்புருக்கி நோய். உடம்பின் எதிர்ப்புசக்தி மிகக்குறைவாக இருந்த காரணத்தால், உட்கொண்ட மருந்துகள்கூட உதவாமல் போயின. அரசின் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்கள் அவளும் அவளது இரண்டு வயது மகனும். எயிட்ஸ் நோய்க்கான பதினைந்துநாளுக்கான ஆரம்ப சிகிச்சைக்கு ஆயத்தமானார்கள்.

 சின்ன உடம்பில் செலுத்தப்பட்ட வீரியமான மருந்துகள், அவற்றின் உக்கிரம் தாங்கமுடியாமல் ஏழாம் நாளே இறந்துபோனான் அவளது மகன். இழப்பின் துயரம், எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் வீரியம் இரண்டுமாகச் சேர்ந்து, விதவிதமான வலிகளை உண்டாக்கியது அவள் உடம்பில். மூத்த மகளையும் பராமரிக்கமுடியாதவளாக, அவளைத் தன் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள் ரெபேக்கா.

பட்ட காலிலே படும் என்பதுபோல, விட்டுச்செல்லமாட்டேனென்று மறுபடியும் வந்தது எலும்புருக்கிநோய், கொஞ்சங்கொஞ்சமாக அவள் உடல், அசையக்கூடமுடியாமல் ஆகிப்போனது. அப்புறம் எடுத்த சிகிச்சைகளாலும் பயிற்சிகளாலும் உட்காரக்கூடிய அளவுக்கு ஓரளவுக்குத் தேறியிருக்கிறாள்.

ஆனால், இத்தனைக்கும் காரணமான அவள் கணவன், உடம்பில், ஏகப்பட்ட சுகவீனங்கள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படாமல் தன் மைனர் வாழ்க்கையைத் தொடர்ந்தபடியிருக்க, இறப்புக்கும் பிழைப்புக்கும் இடையில் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறாள் அவள்.

இது, உலகின் எங்கோ ஒரு மூலையில், மலாவி என்ற ஆப்பிரிக்கநாட்டில் வசிக்கிற பெண்ணொருத்தியின் கதைதான் என்றாலும், இந்தியாவில் தென்பாதி மாநிலங்களிலும், வடகிழக்கில் மணிப்பூர், நாகாலாந்திலும்தான்  எயிட்ஸ் மிக அதிகமாகப் பரவியிருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயம்.


2007 ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.31 மில்லியன் மக்கள், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் 3.5 சதவீதம்பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது. புள்ளிராஜாக்கள்முதல் பள்ளிக்கூடக்குழந்தைகள் வரை எல்லோரிடமும் பரவியிருக்கும் இந்த உயிர்க்கொல்லி நோயை இல்லாமல் செய்ய எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வு மிக அவசியம்.அதைவிட முக்கியமாக, தனிமனித ஒழுக்கம் மிகமிக அவசியம்.

இதில், கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னன்னா, இந்த ஒன்றிரண்டு வருடங்களில் எயிட்ஸ் நோய் பரவுவது கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்.

பி.கு: மேலேயிருக்கிற படத்தைப்பார்த்ததும், மனசில் சட்டென்று தாக்கியது ரெண்டு விஷயம்...ஒண்ணு, நம்ம இந்திய நாட்டின் மொட்டையான உருவ அமைப்பு, இன்னொண்ணு, அதிகம் பாதிக்கப்பட்ட தென் மாநிலங்களில், கேரளா இல்லாமலிருப்பதும்,அதற்குக் காரணமான அடிப்படைக் கல்வியும், விழிப்புணர்வும் மற்ற மாநிலங்களில் போதுமான அளவு இல்லாமலிருப்பதும்தான். ஆக, கேரளாவைப் பார்த்து, நாம நிறைய கத்துக்கணும்.

**********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக