சனி, 10 ஜனவரி, 2009

*ஒரு மருத்துவரின் நாட்குறிப்பு*"ஒரு மருத்துவரின் நாட்குறிப்பு' எனும் இந்தக்கவிதை ஆங்கில எழுத்தாளர் 'விக்ரம் சேத்' என்பவரால் ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதப்பட்டது.

இந்த நாட்குறிப்பினை எழுதியவர் பிரபல ஜப்பானிய கவிஞரும் மருத்துவருமான "டாகே-சான்கி சி" ஆவார்.

உலகச் சரித்திரத்தில் ஒரு கறைபடிந்த நாள்...ஆகஸ்ட் 6, 1945.

ஜப்பானின் ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா, 'லிட்டில் பாய்' எனும்
அபாயம் சுமந்த அணுகுண்டினை வீசிய நாள். 80,000 உயிர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பலியாயினர்.
ஜப்பானிலிருந்த 55 மருத்துவமனைகளில் 3 மட்டுமே தப்பியது.

குண்டு வீசப்பட்டதும் கிளம்பிய வெப்பம் சூரிய வெப்பத்தைக்காட்டிலும் 900 மடங்கு அதிகம்.
உடைகள் உருகி ஆவியாகிட, மனித உடல்கள் பஸ்பமாகின.
குண்டுவீச்சுக்குப்பின் ஏற்பட்ட உடல் உபாதைகளால் இறந்தவர்கள் சுமார் 97,000 பேர்.
ஆகமொத்தம் 200,000 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கொடுமையை விளக்கும் நாட்குறிப்பினை எழுதிய மருத்துவரான கவிஞர், அவரது 24 வயதில் நடந்த அணுகுண்டுவீச்சின் அனுபவத்தை எழுதிவைத்துவிட்டு, 36 ம் வயதில் அணுக்கதிர்வீச்சினால் ஏற்பட்ட 'லூக்கேமியா' எனும் நோயினால் மரணமடைந்தார்.

நடந்து முடிந்த நடுங்கவைக்கும் நிகழ்வை ஆங்கிலக் கவிதையின் மூலத்திலிருந்து என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் மொழிபெயர்த்திருக்கிறேன்.போரெனும் புயலுக்குள் சிக்கித்தவிக்கும் நம் பூமிப்பந்தினை அமைதியெனும் அச்சில் சுழலவைக்க அனைவரும் முயற்சி செய்யவேண்டிய இத்தருணத்திற்கு ஏற்றதாய் இக்கவிதை அமைந்திருக்கிறது.


இதோ கவிதை...

ஒரு மருத்துவரின் நாட்குறிப்பு

அழகும் அமைதியும் கைகோர்த்து இணைய
கதகதப்புடன் விரிந்ததோர் அரைகுறை விடியல்...

படர்ந்த நிழலும் பளபளக்கும் இலைகளும்
பார்வைக்கு இதமாகப் பளிச்சிட்ட வேளையில்,
சட்டென்ற ஒளிமின்னல், தொடர்ந்தது மற்றொன்று
திக்கென்று அதிர்வுடன் திகைத்தேன் நானும்...

ஒளியுடன் எரிந்த விளக்குப் போலவே
வேதிப்பொருளோ? விளங்கவில்லை எனக்கு...

மனதின் கேள்விகள் அடங்கிடும் முன்னரே
மண்ணும் மரமுமாய்ச் சரிந்ததென் உலகம்
புழுதியாய் எழுந்த புகையின் மத்தியில்
தோட்டத்தில் நின்றேன் புதிதாய் உணர்ந்தேன்...

உடுத்திய ஆடைகள் மர்மமாய் மறைந்திட
நிர்வாணக்கோலத்தில் நின்ற என்தொடையினில்
மரத்தின் செதிலொன்று தைத்துச் செருகியது...

கிழிந்தஎன் கன்னத்தில் கண்ணாடித் துண்டொன்று
வெளிப்பட, வலப்பாகம் குருதி சொரிந்தது...
இத்தனை அவலங்கள் நடந்திடும்போதிலும்
அறியாமல் திகைத்தேன் நடந்தது என்னவென்று...

எங்கேயென் மனைவி? அதிர்வுடன் அழைத்தேன்
எங்கேயிருக்கிறாய் யெக்கோ சான் என்று
ரத்தம் பீறிடக் கதறினேன் அழுகையில்...

கழுத்தின் நாளங்கள் கசிந்து வழிந்திட
உயிரின் அச்சத்தில் அழைத்தேன் என் மனைவியை...

வெளிறியமுகமும், குருதியின் சுவடுமாய்
அஞ்சிடும் படியாய் எழுந்தாளென் துணைவி...

முட்டியைத் தாங்கிப் பிடித்த கரத்துடன்
கண்ணுக்குத் தென்பட்டாள் தேற்றினேன் அவளை
கடிதாக வெளியாற வேண்டுமென் றெண்ணி
தடுமாறி நடக்கையில் ஏதோ தடுக்கியது காலில்...

திடுக்கிட்டுப் பார்க்கையில் தலையென்று உணர்ந்து
மன்னித்து விடுங்களென்று மருகி உரைக்கையில்
உயிரற்ற தலையென்று உணர்ந்தேன், பயம்கொண்டேன்...

நசுங்கிய உடல்கண்டு நடுங்கி நிற்கையில்
எதிரிருந்த இல்லம் இடிந்து நொறுங்கிட
நெருப்பும் தூசுமாய்ப் பரவியது அங்கே...

காற்றோடு கலந்து பரவிய நெருப்பொடு
மனதின் எண்ணமோ மருத்துவம் தேடியது...

உதவிபெற் றிடவும் உதவி செய்திடவும்
இயலாத நிலையிலும் தவித்தது மனது...
பொருந்தாத எண்ணமென் றறிந்த போதிலும்
உதவ விரும்பிடும் மனதினை வியந்தேன்...

கால்கள் சோர்ந்திடத் தரையினில் அமர்ந்தேன்
தாகம் எழுந்தது நீரெங்கும் இல்லை
மூச்சுக் குறுகிடத் துளித் துளியாக
ஆற்றல் பெருகிட எழுந்து நின்றேன்...

ஆடை யில்லாமை உணர்ந்தேன் அக்கணம்
நாண மெதுவும் தோன்றவு மில்லை...

காணக்கிடைத்த போர்வீரனொருவன்
கழுத்துத் துணியதை அமைதியாய்க் கொடுத்திட
காய்ந்த குருதியால் கால்கள் விறைத்ததால்
நடக்க இயலாமல் உரைத்தேன் மனைவியிடம்...

சென்று நீயாவது பிழைத்திடு என்றதும்
நின்று மறுத்திடத் தோன்றியும் வழியின்றி
சென்றாள் அவளும், சூழ்ந்தது தனிமை
கொன்றுயிர் குடிக்கும் கூற்றுவன்போலவே...

வென்றிட மனமும் வேகமாய்த் துடித்திட
ஒன்றும் இயலாமல் துவண்டது தேகம்...

நிழலாய் நடக்கும் மனிதப் பிறவிகள்
ஆவிகள் போலவும் பொம்மைகள் போலவும்
அசைந்து நடந்தனர் அமைதியைப் போர்த்தியே
உடலை ஒட்டாமல் நீட்டிய கரங்களுடன்
மெதுவாய் நடந்தனர் ஊமையாய் மாறியே...

நேராகக் கரங்களை இயல்பாய் விடுகையில்
தீயாகத் தகிக்கும் தசைகள் உரசினால்
இன்னமும் தகிக்கும் என்ற பயத்தினால்
புண்ணான கரங்களை விரித்தநிலையிலே
மருத்துவ மனைநோக்கிச் சென்றனர் அனைவரும்...

பெண் ஒருத்தியும் பிள்ளையும் வழியினில்
நீராடி நிற்றல்போல் உடையின்றித் தெரிந்திடப்
பார்வையைத் திருப்பினேன் பரிதாபம் கொண்டேன்...

மற்றொரு மனிதனும் அப்படித் தெரிந்திட
ஆடையைப் பறித்திட்ட மாயம் எதுவென்று
மனதுள் வியந்தேன் மறுமொழி அறியேன்...

மண்ணில் அமர்ந்துதன் வலியைச் சுமந்தபடி
மருள்விழி முதியவள் மௌனத்தில் உறைந்திட
மக்களனைவரும் அமைதியை அணிந்திட
அங்கே,
அழுகையோ வார்த்தையோ எதுவுமே இல்லை...

-விக்ரம் சேத்