கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 டிசம்பர், 2018

கொள்ளை கொண்ட கதை!

அது ஒரு அடர்ந்த கானகம்...அங்கே ஒரு கொள்ளைக்காரன். அவன் பேரு ரத்னாகரன். அந்தக் காட்டுப்பகுதியில, வருகிற போகிறவங்ககிட்டயெல்லாம், வழிப்பறி செய்து வாழ்க்கையை நடத்திக்கிட்டிருந்தானாம்.

ஒருநாள், வழிப்பறி பண்ண யாருமே கிடைக்காம அலைஞ்சப்ப, அவங்கிட்ட, முதன்முதலாக வந்து மாட்டினாராம் ஒருத்தர்.  ஆனா, அவர்கிட்டே கொள்ளையடிக்கிறதுக்கு எதுவுமே இல்லையாம். கோபம் வந்திச்சு அந்தக் கொள்ளைக்காரனுக்கு.
கையிலயும் பையிலயும் ஒண்ணுமே இல்லாம இப்படி சுத்திக்கிட்டிருக்கியே, எப்படின்னு அவரைப் பார்த்துக் கேட்டானாம் கொள்ளையன். அதற்கு அந்த வழிப்போக்கர், என் பெயர் நாரதன்...திரிலோக சஞ்சாரி, காசில்லாமலே எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடியவன் என்று சொல்லிவிட்டு.  "நீ ஏன் இவ்வாறு கொள்ளைத் தொழில்செய்து காலம் கடத்துகிறாய் ?..." என்று கேட்டாராம்.

அதற்கு  அந்தக் கொள்ளையன், "என்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்களையும் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்" என்று சொன்னானாம். அதற்கு நாரதர், "அப்படியானால் நீ செய்கிற இந்தப் பாவமாகிய வழிப்பறியில், அவர்களுக்கும் பங்கிருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தக் கொள்ளையன், "ஏன் இல்லை, நான் கொள்ளையடிக்கிற பொருளில் பங்கிருக்கிற மாதிரியே, இந்தப் பாவத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றானாம்.

அதற்கு நாரதர், "எதற்கும், நீ இதை உன் குடும்பத்தினரிடம் கேட்டுவிட்டு, வந்து பதிலைச்சொல்" என்றாராம்.  அதற்கு அவன், நாரதரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தன் வீட்டுக்குப்போய், கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளப்போனானாம் ரத்னாகரன். திரும்பிவந்தபோது, திகைத்துப்போயிருந்தானாம் அவன்.

என்னாச்சு ரத்னாகரா? என்று அவனைக் கேட்டாராம் நாரதர். அதற்கு அவன், கட்டிவைத்திருந்த நாரத முனிவரை அவிழ்த்து விட்டுவிட்டு,"எங்கள் அனைவரையும்  காப்பாற்றுவது உன்னுடைய கடமையேயன்றி, நீ செய்யும் எந்தப் பாவத்திலும் எங்களுக்குப் பங்கில்லை என்று என் பெற்றவர்கள் முதற்கொண்டு எல்லாரும் மறுதலித்துவிட்டார்கள் ஐயா..." என்று மனவருத்தத்தோடு சொன்னானாம்.

அதற்கு நாரதர், "அதுதான் உண்மை ரத்னாகரா...பாவமோ புண்ணியமோ, அவனவன் செய்யும் செயல்களுக்கு அவனவனே பொறுப்பாவான். பாவப்பொருளில் மற்றவர்களுக்குப் பங்கிருந்தாலும், பெறப்போகும் தண்டனையில் அவர்களுக்குப் பங்கு கிடையாது" என்று கூறினாராம்.

தான் செய்த செயல்களால், தனக்குப் பாவங்கள் சேர்ந்துவிட்டதே என்று அஞ்சி நடுங்கினானாம் அவன். அன்றைக்கு மனம்திருந்திய அந்த ரத்னாகரனாகிய வால்மீகியிடமிருந்துதான்  இன்றைக்கும் பேசப்படுகிற  ராமாயணம் எனும் இதிகாசம் பிறந்தது!

செவ்வாய், 23 அக்டோபர், 2018

உறக்கமில்லாத இரவு

தட்டிலிருந்த கடைசிக் கவளத்தை மனைவியின் வாயில் ஊட்டியவன், "உனக்கு ஒண்ணும் பயமில்லையே மீரா? என்று சோகமாய்க் கேட்க, வாய் நிறைய சாதத்துடன் சிரித்தபடி, குறுக்கும் நெடுக்குமாகத் தலையசைத்தாள் மீரா.  தண்ணீரைக் குடித்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்தவள்,  "தைரியத்துல நானெல்லாம் திருநெல்வேலிலயே நம்பர் ஒன் தெரியுமா?  ஹாஸ்டல்ல இருந்தப்ப என்னோட தோழிங்க எல்லாரும், நைட்ல பாத்ரூம் போணும்னாகூட பாடிகார்டா என்னைத்தான் கூப்பிடுவாங்க. நீங்க எதுக்கு சின்னப்பிள்ளை மாதிரி கவலைப்படுறீங்க? என்று கணவனைத் தேற்றினாள் அவள்.

கல்யாணம் முடிந்து ஒருமாசம் ஆன பிறகு சரவணனுக்கு இன்றைக்குத்தான் முதலாவதாக நைட் ஷிஃப்ட். இரவு பத்திலிருந்து காலை ஆறுவரைக்கும். சுற்றிலும் வீடுகள், குடும்பங்கள் இருக்கிற பகுதியாய்ப் பார்த்துத்தான் வீடு எடுத்திருந்தான் என்றாலும் மனசுக்குள் மனைவியைத் தனியாக விடுவதற்குத் தைரியம் வரவில்லை அவனுக்கு.

"நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க...நான் என்னோட சின்ன அரண்மனையை 'சிக்'குன்னு பூட்டிக்கிட்டு செல்ஃபோன்ல பாட்டுக் கேட்டுக்கிட்டே தூங்கிருவேன் என்றவளை, அருகணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான் சரவணன்.

வாசலில் நின்றவன், " நீ உள்ள போயி பூட்டிக்கோ... அப்புறம் நான் கிளம்பறேன்" என்று சொல்ல, "அடடா... இது ரொம்ப சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு" என்றவள், கணவனின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். வெளியே சரவணனின் பைக் புறப்படும் சத்தம் கேட்டது. 

மெல்லிய முறுவலுடன் அடுக்களைப் பாத்திரங்களை ஒதுக்கி, சமையலறையைச் சுத்தம்செய்துவிட்டுத் திரும்புகையில், பின்னால் எதுவோ விழுந்து பாத்திரம் அதிர்ந்த சத்தம் கேட்டது. பதறிப்போய்த் திரும்பினாள் அவள். சுவரோரத்தில், குடத்தின் மூடியின் மேல் தலையை உயர்த்தியபடி உட்கார்ந்திருந்தது பல்லி ஒன்று. அவள் அருகில் செல்லவும், குதித்து மேடைக்கு அடியில் ஓடியது.  மேலே ட்யூப் லைட்டுக்குப் பின்னாலிருந்து விழுந்திருக்கும் போல... அதுதான் சத்தம் என்று நினைத்தவள், தண்ணீர்ப் பாத்திரங்களை நாளைக்கு வேறு இடத்தில் வைக்கணும் என்று நினைத்தபடி அடுக்களை விளக்கை அணைத்தாள்.

செல்போனைக் கையிலெடுத்து பாட்டுக்கேட்கலாம் என்று நினைத்த தருணத்தில் சட்டென்று அது சிணுங்கியது. சரவணனாய்த்தான் இருக்கும் என்று சந்தோஷத்துடன் எடுத்தவளை ஏதோ ராங் நம்பர் ஒன்று வெறுப்பேற்ற, அணைத்துவிட்டுப் படுக்கையில் உட்கார்ந்தாள்.  அருகிலிருந்த ஸ்டூலில் அடுக்கியிருந்த புத்தகங்கள் கண்ணில் படவே அந்த வாரத்துப் பெண்கள்  இதழைக் கையில் எடுத்தாள். 

முன்னெல்லாம் புத்தகம் வாங்கினால் வாங்கிய கையோடு அதை முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பாள். இப்போ, பதினைந்துநாள் முன்னால் வாங்கிய புத்தகம் பாதிகூடப் படிக்கப்படாமல் இருந்தது. நான்குபேராயிருந்த பிறந்த வீட்டிலிருந்து விலகிக் கணவனும் அவளுமாய் இரண்டுபேரே இருக்கிற குடும்பத்துக்கு வந்தாலும் எந்த நேரமும் ஏதாவது செய்வதற்கு இருந்தது அவளுக்கு. உறக்கம் வருவதற்குள் எடுத்த புத்தகத்தைப் படித்து முடித்துவிடவேண்டுமென்ற உத்வேகத்துடன் பக்கங்களைப் புரட்டுகையில் வாசல் பக்கம் ஏதோ கதவைப் பிறாண்டுகிற சத்தம் கேட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுக் கேட்ட அந்தச் சத்தம் ஏதோ சமிக்ஞை போல் தோன்றியது அவளுக்கு. இதயத்தின் துடிப்பு எகிறத் தொடங்கியது அவளுக்கு.

வாசலுக்குப் பக்கத்தில் சிறிய சன்னல் ஒன்றிருந்தது. வாசலில் விளக்கு எரிந்துகொண்டுதான் இருந்தது. எட்டிப்பார்க்கலாம் என்று நினத்தவளை ஏதோ உணர்வு பின்னுக்கு இழுத்தது. பூனையோ நாயாகவோ இருக்கும் அல்லது கீரிப்பிள்ளையாக இருக்குமோ என்று நினைத்தவள், என்ன சத்தம் வந்தாலும் கதவைமட்டும் திறக்கக்கூடாது என்று சரவணன் சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தச் சத்தம் நின்றுவிட, மறுபடியும் படுக்கையில் வந்து உட்காந்தாள்.

முள்காடாகவும் விளைநிலமாகவும் இருந்த பகுதியை அழித்து உருவான குடியிருப்புப் பகுதி அது. இப்போது குடியிருப்புப் பகுதியாய் மாறியிருந்தாலும், முன்னாளைய இப்பகுதி வாசிகளான பாம்பு, ஓணான், கீரிப்பிள்ளை ஆகியவை இன்றைக்கும் அவ்வப்போது வந்துபோவதுண்டு என்று வீடு பார்க்கவந்த அன்றைக்கே பக்கத்துவீட்டு வான்மதியின் மாமியார் சொன்னது நினைவுக்கு வந்தது.

  மனுஷங்களோட ஆக்ரமிப்புல உலகத்துல உள்ள உயிரினங்கள் ஒண்ணொண்ணா அழிஞ்சுகிட்டு வருது. அதுங்களும்தான் எங்க போகும் பாவம் என்று எண்ணியபடியே புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள். 

நான்கைந்து பக்கம்தான் புரட்டியிருப்பாள் அதற்குள் எரிந்துகொண்டிருந்த ட்யூப்லைட்டும் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் பட்டென்று நின்றுபோனது, "ஆஹா, கரண்ட் கட்...ஆனா, இன்வெர்டர் ஏன் வேலை செய்யலை? என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் உரைத்தது. இந்த மாசத்துல இருந்து ராத்திரி பத்து டூ பன்னிரண்டு கரண்ட் கட் என்று.

சரவணன் புறப்பட்டப்பவே கரண்ட் போயி, இவ்ளோ நேரம் இன்வெர்டர்லதான் ஓடியிருக்கும்போல என்று நினைத்தவள், கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்தில் அடுக்களைக்கு நடந்தாள். 

அடுக்களை அலமாரியில் மெழுகுவர்த்தியைத் தேடுவதற்குள் வெளிச்சம் அணைந்துவிட, கைகளால் தடவிக் கண்டுபிடித்தவள் மறுபடியும் செல்போனை உயிர்ப்பிக்காமல் தீப்பெட்டியை எடுக்க விளக்கு மாடத்தை நோக்கி நடந்தாள். சட்டென்று யார் மேலேயோ மோதியதுபோலிருந்தது அவளுக்கு. அவளையுமறியாமல் 'வீல்' என்று சத்தமிட்டவள், நடுங்குகிற கரங்களால் செல்ஃபோனை மறுபடியும் உயிர்ப்பித்தாள். சுற்றிலும் வெளிச்சம் பரவ அங்கே எதுவும் தென்படவில்லை.

பின்பக்கமாகவே நடந்து, மாடத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். ஆறுக்கு எட்டு அடுப்படியும் பத்துக்குப் பத்து படுக்கையறையும், சின்னதொரு குளியலறையும் உள்ள அந்த வீட்டில் அவளைத்தவிர யாரும் இல்லை. ஆனால், அவள்மீது மோதியது யார்? அது நிச்சயம் பிரமையில்லை, நிஜம்தான் என்று அவள் உள்ளுணர்வு உறுத்த, அதற்குள் கரண்ட் வந்துவிட்டது.

அடுக்களை லைட்டையும் எரியவிட்டாள். வீடு பளிச்சென்றிருந்தது. கட்டிலுக்கடியில் குனிந்து பார்க்காமலே தெரிந்தது. அங்கே அவளைத் தவிர யாருமில்லை. குளியலறைக் கதவு வெளிப்பக்கம் தாளிடப்பட்டிருந்தது ஆனாலும் விளக்கைப் போட்டுவிட்டுத் திறந்துபார்த்தாள். அதுவும் காலியாக இருந்தது. வாசல்கதவும் பூட்டித் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. முதல்முறையாக மனசிலிருந்த தைரியம் போக, பயம் வந்து ஒட்டிக்கொண்டதை உணர்ந்தாள். 

இனிமேல் நிச்சயம் உறங்கமுடியாது என்று தோன்றவே, செல்போனை உயிர்ப்பித்து, சரவணனின் எண்ணை அழுத்தினாள். நடந்ததைச் சொன்னால் அவனும் பயப்படுவானா அல்லது பகடி பண்ணுவானா என்ற எண்ணம் வர, அதை நேரிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள்.

அலைபேசியில், "என்னடா, இன்னுமா நீ தூங்கல? என்றான் சரவணன். "என்னமோ தெரியலங்க...தூக்கமே வரல. இனிமே, நானும் ராத்திரி பூரா முழிச்சிருந்துட்டு, பகல்ல நீங்க வந்ததும் தூங்கலாம்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, "அசட்டுக் கழுத...விளையாடாம சீக்கிரம் தூங்கு. எனக்கு வேலை இருக்கு என்று சிரித்தபடி இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.
மனதில் பயம் பிறாண்ட,அம்மா சொல்வதுபோல சஷ்டிக் கவசத்தின் வரிகளை உச்சரித்தபடியே கணினியை எடுத்து உயிர்ப்பித்தாள்.

தனக்குத் தோன்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டு கூகிளில் தேட ஆரம்பித்தாள். அவளைப் போலவே இன்னும் பலர் எழுதியிருக்க, அதை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தாள். சுவாரசியம் பற்றிக்கொண்டது. சிலரின் அனுபவங்கள் சிரிக்கவைப்பதாயும் சில அனுபவங்கள் சில்லிடவைப்பதாயும் இருந்தது. அடுத்ததாய், தனிமையின் பயத்தை விரட்டுவது எப்படி என்று இன்னொரு தலைப்பைத் தேட ஆரம்பித்தாள். பக்கம்பக்கமாய் விரிந்தது பலரின் அனுபவங்களும் அறிவுரைகளும். சுற்றியிருந்த அத்தனையும் மறந்துபோக புதுப்புது விஷயங்களை வாசித்து அதிலேயே ஆழ்ந்துபோனாள். ஆக, அன்றைக்கு கூகிளின் துணையுடன் தொலைந்துபோனது அவளது தூக்கமும்  தனிமையும்.



வியாழன், 10 செப்டம்பர், 2015

மூதுரைக் கதைகள் - 2 புலி கிடந்த புதர்



மாலை மணி ஐந்து முப்பது. அலுவலகம் காலியாய்த் தெரிந்தது. இருந்த ஒன்றிரண்டுபேரும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

"சண்முகம் சார், உங்களுக்கு காப்பி, டீ ஏதாச்சும் வாங்கியாரவா?" என்றபடி அவரது இருக்கைக்கு அருகில் வந்து நின்றார் பியூன் மாணிக்கம். "வேண்டாம் மாணிக்கம் கொஞ்ச நேரம் கழிச்சு டிபனே வாங்கிட்டு வந்துட்டு நீ வீட்டுக்குக் கிளம்பு. நான், இன்னிக்கி நைட் ஷிஃப்டும் முடிச்சுதான் வீட்டுக்குப் போகணும்" என்றபடி ஃபைலில் பார்வையைப் புதைத்துக்கொண்டார் சண்முகம்.

"அப்போ, காலாற நடந்துபோயி டீ சாப்டுட்டு வந்து உக்காரலாமே சார்...காலைல வந்ததுலே இருந்து ஃபைலே கதின்னு இருக்கீங்களே...மத்தியானம் கூட வெளியே போகல...உடம்பு கிடம்பு சரியில்லயா சார்?" என்று அக்கறையுடன் அவர் முகத்தைப் பார்த்தார் மாணிக்கம். மாணிக்கத்துக்கும் அவருக்கும் அலுவலக இடைவெளிகளை மீறிய நல்ல நட்பு உண்டு.

நிமிர்ந்து அவரைப் பார்த்தவர், "நீ போயி வேலையைப் பாரு மாணிக்கம்" என்றபடி, அலைபேசியை எடுத்து அரிசிக்கடை செட்டியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்துபோய் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பவந்து அமர்ந்தார். காதுகளில் காலையில் மனைவி பரமு சொன்ன வார்த்தைகள் திரும்பத்திரும்ப எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

"வக்கத்த வாத்தியாரும் வேண்டாம், போக்கத்த போலீசும் வேண்டாம்னு சல்லடை போட்டுத் தேடிப் பிடிச்சு இந்த ஆக்கங்கெட்ட ஆபீசருக்குக் கட்டிவச்சார் எங்க அப்பா. இங்க என்ன வாழுது? ஒரு நல்லது கெட்டதுக்கு முன்னால நிக்கிற மாதிரியா இருக்கு? ஆசைஆசையா வாங்கின நகைய அடகு வச்சுத்தான் பிள்ளையைப் படிக்கவைக்கவேண்டியிருக்கு. 

நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது...வீட்டுக்கு வரும்போது என்னோட வளையலோட வரணும். இல்லேன்னா..." என்றவாறு அவள் அடுப்படிக்குள் நுழையவும் இவர் ஆபீசுக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். காலையில் காப்பி கொடுக்கையில் ஆரம்பித்த அர்ச்சனை அதுவரைக்கும் ஓயவில்லை.

மகனைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க ஏகப்பட்ட செலவாகிவிட்டது அவருக்கு. சேமிப்பெல்லாம் கரைந்துபோக, இறுதியில், போனவருஷம் தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த வளையலை வங்கியில் வைக்கவேண்டியதாகிவிட்டது. அதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்.

அடுத்த வாரம் வருகிற அண்ணன் மகனின் பிறந்த நாளுக்கு அந்த வளையல் இல்லாமல் போகமுடியாது என்ற பிடிவாதம் வேறு. அவரவருக்கு இருக்கிற பிரச்சனையில், உன்னோட கையில் கிடக்கிற வளையல் புதுசா பழசா என்று யாரும் பார்க்கப்போவதில்லை" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார். பரமு கேட்பதாயில்லை. 

அரிசிக்கடை செட்டியாரிடம் வட்டிக்குப் பணம் கேட்டிருந்தார். நாளைதான் கிடைக்கும். அதற்குள் வீட்டுக்குப்போய் இன்னும் கொஞ்சம் வாய்ப்பரப்பு வாங்கிக்கொள்ள விருப்பமில்லை சண்முகத்துக்கு.

சண்முகத்தைப்போலப் பலரும் இல்லற வாழ்க்கையில் சங்கடப்படுவது தெரிந்துதான் அன்றைக்கே ஔவை மூதாட்டி, சுடுசொல் பேசுகிற இல்லாள் அமைந்த வீடு, புலி பதுங்கிக்கிடக்கும் புதருக்கு சமமானது என்று அழுத்திச் சொல்லியிருக்கிறாள்.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்".

மூதுரையின் இருபத்தோராவது பாடலில், மனைவி நல்லவளாக அமைகிற குடும்பத்தில், இல்லாதது எதுவுமே இல்லை. அங்கே எல்லாச் சிறப்புகளும் நிறைந்திருக்கும். அவளே, சுடுசொல்லால் தகிக்கிறவளாக அமைந்துவிட்டால், அந்த வீடு புலி பதுங்கிக் கிடக்கிற புதரைப்போல அச்சத்தைத் தருவதாக அமைந்துவிடும் என்று அழகாகச் சொல்லுகிறாள் ஔவைப்பாட்டி.

பாட்டி சொன்னதைக் கேட்டுக்கிட்டா நல்லதுதானே?


                                                    **************











வெள்ளி, 3 டிசம்பர், 2010

மக்கு மண்டூகம்!

'உக்கார்டா, மக்கு மண்டூகமே...'ன்னு, தப்பா பதில் சொல்றவங்களைத் தலையில் தட்டி உக்காரவைக்கிறது வெயிலுமுத்து வாத்தியாரின் வழக்கம்.

 அது அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் அஞ்சாங் கிளாஸ் வகுப்பறை.  கதிரேசன் கணக்கு வாத்தியார் பையன். ஆனா, வீட்டுப்பாடமெல்லாம் அவனுக்கு விஷம் மாதிரி. ஆகவே ஆகாது. ஏதாவதொரு சாக்குச் சொல்லித் தப்பிச்சிருவான். அப்பிடியே கோவம் வந்து, வாத்தியார் வெளியே அனுப்பிட்டார்னாகூட, வேலிப்பக்கம் போயி தட்டான் பிடிக்க ஆரம்பிச்சிருவான்.

ஆனா, அன்னிக்கு ஒருநாள்,கதிரேசனுக்குக் கிடைத்த தண்டனைக்கும், அவனோட அப்பா,கணக்கு வாத்தியாரோட அறிவுரைக்கும் பிறகு, வாத்தியார் வகுப்புன்னாலே வீட்டுப் பாடத்தை முடிச்சிட்டு, வாய்மேல விரலை வச்சுக்கிட்டு நல்ல பிள்ளைகளா உக்காந்திருப்பாங்க எல்லாரும்.

அன்னிக்கு, வகுப்புக்கு வந்ததும் வீட்டுப்பாட நோட்டை கொண்டுவந்து அடுக்கச்சொன்னார் செல்லத்துரை வாத்தியார். எல்லாரும் அடுக்கினாங்க, கதிரேசனைத் தவிர. அடுக்கின நோட்டுகளை ஆறுமுகத்தை எண்ணச் சொன்ன வாத்தியார், தான் பிள்ளைகளின் தலைகளை எண்ண ஆரம்பிச்சார்.

வழக்கம்போலவே ஒண்ணு குறைச்சல். வேற யாரையும் கூப்பிடல அவர். நேரா, கதிரேசனைக் கூப்பிட்டாரு. அசால்ட்டா எழுந்திரிச்சான் கதிரேசன். வழக்கம்போல அர்ச்சனையும், ஆரத்தியும் முடிஞ்சப்புறம், வகுப்பறைக்கு வெளியே அவனை முழங்கால்போட்டு நிக்கவச்சார் அவர். அப்பத்தானா அந்த வழியே வரணும் அவனோட அப்பா? வந்தார்...நின்னார்...வகுப்புஆசிரியர்ட்ட என்னன்னு கேட்டார். அவரும் சொன்னார்.

நாங்கல்லாம், ஒரு கணக்கு வாத்தியார் தமிழ் சொல்லிக்கொடுத்துக் கேட்டது அன்னிக்கித்தான். வகுப்புக்குள்ளிருந்து செந்தூர்ப்பாண்டியைக் கூப்பிட்டார் அவர். செந்தூரோட அப்பா, ரைஸ்மில்லுல கூலிவேலை பார்க்கிறார். அம்மாவுக்கும் படிப்புத் தெரியாது. ஆனா, செந்தூர்ப்பாண்டி, தினமும் எங்க வீட்டுக்குவந்து, எங்கிட்ட சந்தேகத்தையெல்லாம் கேட்டு நிவர்த்தி பண்ணிக்கிட்டு, வீட்டுப்பாடமும் எழுதிட்டுதான் வீட்டுக்குப் போவான்.

ஆனா, இவனோட அப்பா நானும் வாத்தியார், இவங்கம்மாவும் டீச்சர்தான். ஆனா, இவன், ஒரு நாள்கூட பாடத்துல சந்தேகம்னோ, படிச்சுத்தந்தது புரியலேன்னோ ஒரு தடவைகூட எங்கிட்டயோ அவங்கம்மா கிட்டயோ சந்தேகம் கேட்டதில்ல. இந்த விவேகசிந்தாமணிப் பாடலைப் புரிஞ்சுகிட்டீங்கன்னா, யாரும் இவனைமாதிரி இருக்கமாட்டீங்க.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.

 தாமரைப்பூவோடு கூடவே குளத்தில் பிறந்து வளருகிற தவளைக்கு, (அதாங்க...மண்டூகம்) 
அந்தத் தாமரையிலிருக்கிற தேனைக் குடிக்கணும்னு தெரியாது. ஆனா, எங்கோ காட்டிலிருந்து வருகிற வண்டு, அதைக் குடிச்சிட்டுப்போகும்.

அதே மாதிரிதான், நல்லவர்களோட பல காலமாய்ப் பழகினாலும் அவர்களைப்பற்றியும் அவங்களோட பெருமைகளைப்பற்றியும்  முழுசா தெரிஞ்சுக்கமாட்டாங்க சில முட்டாள்கள். ஆனா, கற்றவர்கள் அவர்களை எளிதில் இனங்கண்டுகொண்டு, அவங்களோடு பழகிப் பெருமைகளை உணர்ந்து சந்தோஷப்படுவாங்க.

அதே மாதிரிதான் இவனும் என்று சொல்லிட்டு, வகுப்பறை வாசலில், முழங்காலில் நின்ன மகனைப் பாத்தார். அவன் எட்டத் தெரிகிற வயலையும், வாய்க்காலில் நீந்துகிற வாத்துகளையும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தான்.
 
அதுவரைக்கும், மக்கு மண்டூகம்னா என்னன்னு விளங்காம இருந்த எங்களுக்கு, வாத்தியார் எவ்வளவு விவரமா திட்டியிருக்கார்ன்னு விளங்கிச்சு. ஆனா, கதிரேசனால கடைசி வரைக்கும் அதை விளங்கிக்கவே முடியல.

                                               *********



திங்கள், 8 நவம்பர், 2010

மனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...


கடவுள் உலகத்து உயிர்களை ஒவ்வொன்றாக உருவாக்கிக்கொண்டிருந்த நேரம்...

முதலாவதாக, அவர் ஒரு கழுதையைப் படைத்தாராம். அந்தக் கழுதையிடம், நீயொரு கழுதை... காலையிலிருந்து மாலைவரை நீ பாரம்சுமந்து பணிசெய்ய வேண்டும்.நீ புல்லைத் தின்னலாம். ஆனால், உனக்கு புத்தியெல்லாம் கிடையாது. உனக்கு ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதற்குக் கழுதை சொன்னதாம், கடவுளே,கழுதையான எனக்கு ஐம்பது வருடங்கள் அதிகம். அதனால்,எனது ஆயுளை இருபது வருடங்களாகக் குறைத்துவிடுங்கள் என்று. கடவுளும் அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அடுத்ததாக, ஒரு நாயைப் படைத்து, நீ நாயென்று அழைக்கப்படுவாய். மனிதனுக்கு நல்ல நண்பனாக இருந்து, அவனுடைய வீட்டைப் பாதுகாக்கவேண்டும். வீட்டில் மிஞ்சுகிறபொருட்களையே நீ உணவாக உண்ணவேண்டும். உனக்கு வாழ்நாள் முப்பது வருடங்கள் என்றாராம்.

அதற்கு அந்த நாய், கடவுளே,முப்பது வருடங்கள் அதிகம். எனக்கு பதினைந்து வருடங்களே போதும் என்றாதாம். கடவுளும் அதை வழங்கினாராம்.

அடுத்ததாக,கடவுள் ஒரு குரங்கைப் படைத்தாராம். நீ மரத்துக்கு மரம் தாவி,வித்தைகள் செய்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவாய்.உனக்கு ஆயுள் இருபது வருடங்கள் என்றார்.

அதற்குக் குரங்கு, எனக்குப் பத்தே வருடங்கள் போதும் என்றதாம். கடவுளும் அதை ஒத்துக்கொண்டாராம்.


அடுத்ததாகக் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதனே,பகுத்தறிவுடன் உன்னைப் படைத்திருக்கிறேன். நீ உன் அறிவைப் பயன்படுத்தி, உலகத்திலுள்ள மிருகங்களையெல்லாம் அடிமைப்படுத்தி ஆளலாம்.உலகையே உன் வசப்படுத்தப்போகும் உனது ஆயுள் இருபது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதைக்கேட்ட மனிதன், என்ன சொல்லியிருப்பான்??????????????

நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையேதான் செய்தான்:)

அதாவது, அவன் கடவுளிடம், உலகையே ஆளுமளவுக்கு அறிவுடன் படைக்கப்பட்ட எனக்கு, இருபது வருடங்கள் ரொம்பவும் குறைவு. அதனால், கழுதை வேண்டாமென்ற முப்பது வருடங்களையும், நாய் மறுதலித்த பதினைந்து வருடங்களையும், குரங்கு கொடுத்த பத்து வருடங்களையும் நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டானாம்.

அதற்கு, அப்படியே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டாராம் கடவுளும்.
அன்றிலிருந்து, கடவுளிடம் கேட்டுவாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு மனிதனும்,முதல் இருபது வருடங்கள் முழுமையான மனிதனாகவும்,

திருமணத்தின் பின்வரும் முப்பது வருடங்கள், ஒரு கழுதையைப்போல, குடும்ப பாரத்தைச் சுமக்கமாட்டாமல் சுமந்தும்,

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், வீட்டின் காவலாக முன்வாசலில் முடங்கி, மிச்சமானதைத் தின்று,ஒரு நாயைப்போலவும்,

வயதாகி முதிர்ந்ததும், குரங்கினைப்போல் வீட்டுக்கு வீடு, அதாவது மகளின் வீடு மகனின் வீடு என்று தாவி, பேரன் பேத்திகளை மகிழ்விக்க வித்தைகளைச்செய்தும் வாழ்கிறானாம்.

இது எப்படி இருக்கு? இது,மின்னஞ்சலில் வந்த கதையென்றாலும் படித்து முடிக்கையில் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.

***********


வெள்ளி, 5 ஜூன், 2009

பாரதம் படிக்கலாம் வாங்க...(6)

அம்பாவின் அவலமும்,அவள்செய்த சபதமும்
************************************************

பீஷ்மர் அனுப்பிய பாதுகாவலர்களுடன் சௌபல நாட்டை அடைந்தாள் அம்பா. தான் விரும்பிய மன்னன் சால்வனிடன் சென்று நடந்த விபரங்களை எடுத்துரைத்தாள். பீஷ்மர் தன்னை விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுமாறு அனுப்பிவைத்ததையும் கூறினாள் அவள்.

அம்பாவின் வாய்மொழியைக் கேட்ட மன்னன் சால்வன், ஏற்கெனவே தான் பீஷ்மரிடம் தோல்வி அடைந்த கசப்பான நினைவினில் தோய்ந்திருந்தபடியால்,

" சுயம்வரத்தில் நடந்த போரில் இறுதிவரை போராடி பீஷ்மரிடம் தோற்றுப்போனேன் நான். இனி என்னால் உன்னை மணக்க இயலாது. நீ சென்று உன்னைச் சிறையெடுத்துச்சென்ற பீஷ்மரையே திருமணம் புரிந்துகொள்"

என்று மனவெறுப்புடன்கூறி, அம்பாவை மீண்டும் அஸ்தினாபுரத்துக்கே அனுப்பிவிட்டான்.

மீண்டும் வந்து பீஷ்மரைச் சந்தித்தாள் அம்பா. மன்னன் சால்வன் தன்னை நிராகரித்ததைக் கூறினாள் அவரிடம். அம்பாவின் துயரம் கண்டு மனவருத்தமடைந்த பீஷ்மர், தம்பி விசித்திரவீரியனிடம் அம்பாவையும் மணம்புரிந்துகொள்ளுமாறு கூறினார்.

" இன்னொருவனை விரும்பிய பெண்னை நான் மணம்புரியமாட்டேன்" என்று விசித்திரவீரியனும் மறுக்க,அம்பாவின் மனதில் இயலாமையால் எழுந்த கோபம் இன்னும் அதிகமாகியது.

"பீஷ்மரே, உம்மால்தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. அதனால் நீரே என்னைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்"

என்று சினத்துடன் கூற, சத்தியம் தவறாத பீஷ்மர், தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாய் வாழ்வதாகச் செய்த சபதத்தை எடுத்துரைத்து, அம்பாவின் வேண்டுகோளை மறுத்தார்.

அம்பாவின் கோபம் அளவின்றிப் பெருக, பீஷ்மரைப் பழிவாங்கிடும் வெறியும், வெறுப்பும் அவள் மனதில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

"பீஷ்மரே, என் வாழ்வின் அத்தனை வலிகளுக்கும் காரணமான உம்மைக் கொல்லாமல் விடமாட்டேன்"

என்று சபதம் செய்தாள் அம்பா.

பீஷ்மருக்கு எதிரியான மன்னர்களை ஒன்றுகூட்டி அஸ்தினாபுரத்தின்மேல் படையெடுக்கத் திட்டமிட, பீஷ்மரின் போர்த்திறமைக்கு அஞ்சிய மன்னர்கள் அம்பாவின் வேண்டுகோளை நிராகரித்தனர்.

மன்னர்கள் மறுதலிக்க, மாயோன் மருகனாகிய சுப்ரமணியக்கடவுளின் கருணை வேண்டினாள் அம்பா. அம்பாவின்முன் தோன்றிய அழகுக்கடவுள் அவளுக்கு வாடாத மலர்களுடைய தாமரைமலர் மாலையைக் கொடுத்து,

"இந்த மாலையைச் சூடுபவன் எவனோ, அவன் பீஷ்மருக்கு எதிரியாவான்"

என்று கூற,வாடாமலர் மாலையைச் சூடும் வீரனைத் தேடலானாள் அம்பா. பீஷ்மரின் பராக்கிரமம் அறிந்த யாரும் அம்மாலையைச் சூட முன்வராதுபோக, இறுதியாக மன்னன் துருபதனின் மாளிகைக்குச் சென்று, தன் வேண்டுதலை ஏற்று, மாலையைச் சூடிக்கொள்ளுமாறு கூற, அம்பாவின் துயரம் அதிகரிக்கும்படியாக, துருபத மன்னனும் அதைச் சூட மறுத்துவிட்டான்.

மன்னன் மறுத்த மாலையை, அவன் மாளிகையின் வாயிற்கதவில் தொங்கவிட்டுவிட்டு, கானகம் நோக்கிக் கவலையுடன் சென்றாள் அம்பா. கானகத்தில் கண்ட துறவிகளில் சிலர், அவளுடைய சோகக்கதையைக் கேட்டு, பீஷ்மரின் குருவாகிய பரசுராமரிடம் செல்லும்படி அறிவுறுத்தினர்.

குருவின் ஆணையை பீஷ்மர் மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன், பரசுராமரைச் சென்று சந்தித்தாள் அம்பா. தன் அளவிலாத சோகத்தை அவரிடம் எடுத்துரைத்தாள். அம்பாவின் கதை அவரை நெகிழச்செய்ய, தன் சீடனான பீஷ்மரிடம் அவளை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார் பரசுராமர். தன் உறுதிமொழியை மனதில்கொண்டு மறுத்தார் பீஷ்மர். எடுத்த சபதத்தை எக்காரணம்கொண்டும் விடமாட்டேன் என்று கூறிய பீஷ்மரின் பதில் பரசுராமரையும் ஆத்திரம் கொள்ளச் செய்தது.

ஆத்திரம் வலுத்து, ஆசானும் மாணவனும் ஆயுதமேந்திப் போரிட ஆரம்பித்தனர். பலநாள் நீடித்தபோர் இறுதியில் பரசுராமர் பீஷ்மரிடம் தன் தோல்வியை ஒத்துக்கொள்ள, பரசுராமர் அம்பாவிடம், பீஷ்மரின் கருணையைப் பெறுதலே கடைசி வழியென்று கூற,பீஷ்மரின் காலில் விழுவதைக் காட்டிலும் பிறைசூடிய பரமனின் பாதத்தில் சரணடைவதே சிறந்தவழியென்று எண்ணி, சிவனை நாடி இமயம் சென்று கடுந்தவம் இயற்றலானாள் அம்பா.

தவத்தில் அகமகிழ்ந்து அம்பாவின் முன் தோன்றினார் ஆலகாலமுண்ட சிவபெருமான். பீஷ்மரைக் கொல்லவேண்டுமென்ற அம்பாவின் வேண்டுகோளைக் கேட்டு,

" பெண்ணே, நீ வேண்டும் வரம் இறை நியதிக்கு மாறானது. யாராலும் கொல்ல இயலாத ஆசிகளையும்,வரத்தையும் பெற்றவன் பீஷ்மன்.ஆனால், மனிதப் பிறவியெடுத்த எவரும் ஒருநாள் மரணமடைந்துதான் ஆகவேண்டும். அதனால், பீஷ்மரை கொல்லும் வரத்தை உனக்கு நான் வழங்குகிறேன். ஆயினும், உன்னுடய இந்தப் பிறவியில் நீ அவரை வெல்ல இயலாது. இன்னொரு பிறவியெடுத்து நீ துருபத மன்னனின் மகளாகப் பிறக்கும்போது உன்னுடைய இந்த ஆசை நிறைவேறும்"

என்று வரமளித்தார் சிவபெருமான்.

அடுத்த பிறவிவரை காத்திருந்து தன் ஆவேசத்தைத் தீர்த்துக்கொள்ள இயலாத அம்பா, துருபத மன்னனின் நாட்டுக்குச் சென்று அங்கு அரண்மனை முன்னர், தீயை வளர்த்து, அந்த நெருப்பில் புகுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

தோல்வியும்,துயரமுமாய், தன் உயிரைமுடித்த அம்பா, துருபத மன்னனின் மகளாக மறுபிறவியெடுத்தாள். பிறவியைக் கடந்தும் பிறழாத உறுதியுடன், இளமை முதலே யுத்தநெறிகளைக் கற்றுத் தெளிந்தாள் அவள். சில ஆண்டுகளுக்குப்பின் அரண்மனை வாயிலில் கிடந்த, அச்சத்தின் காரணமாய் யாரும் தொடாமலே இருந்த, ஆறுமுகக்கடவுள் கொடுத்த அழகிய மலர்மாலையை எடுத்துச் சூடிக்கொண்டாள்.

மகள் சிகண்டினியின் செயலால், அவளுக்கும் தனக்கும் பீஷ்மரால் ஆபத்துவரும் என்று எண்ணிய துருபத மன்னன், அவளை அரண்மனையைவிட்டு காட்டுக்கு அனுப்பிவிட்டான்.காட்டில் கந்தர்வன் ஒருவனின் உதவியால் ஆணாக மாறி சிகண்டி என அழைக்கப்பட்டாள் சிகண்டினி.

சிகண்டி எனும் ஆணின் உருவத்தில் இருந்தபடி,தன் இணையற்ற போர்த்திறனால் புகழ்பெற்று ,மக்களால் மஹாரதி என்று அழைக்கப்பட்டாள் அவள். மனமெங்கும் பரவிய பழியுணர்ச்சியுடன் பீஷ்மரைக் கொல்லும் நாளுக்காகக் காத்திருக்கலானாள் சிகண்டியின் உருவிலிருந்த சினம்கொண்ட அம்பா.

புதன், 12 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(5)

சத்தியவதியின் புத்திரர் இருவர்

சாந்தனு மன்னனுக்கும், மீனவப்பெண் சத்தியவதிக்கும் சித்திராங்கதன்,விசித்திரவீர்யன் என்று புத்திரர் இருவர் பிறந்தனர். மகன்கள் இருவர் பிறந்த சில வருடங்களிலேயே மன்னன் சாந்தனு மரணமடைய, இளவரசர்கள் இருவரும் சிறியவர்களாக இருந்த காரணத்தால் பீஷ்மரே நாட்டின் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தார். சிலவருடங்களில் மன்னனின் மூத்தமகன் சித்திராங்கதன் அஸ்தினாபுரத்து அரியணையில் அமர்ந்தான்.

மிகுந்த பராக்கிரமத்துடன் ஆட்சிபுரிந்த சித்திராங்கதனைப் பற்றிக் கேள்விப்பட்ட அதே பெயருடைய கந்தர்வ மன்னன் ஒருவன் போட்டியினால் எழுந்த பகையின் காரணமாய், தன் பெயரைக்கொண்ட அரசனுடன் போரிட்டு அவனைக் கொன்றான். தனக்கு வாரிசெதுவும் இல்லாமல் மன்னன் சித்திராங்கதன் மரணமடைய அவனுடைய சகோதரனான விசித்திரவீர்யன் அரியணையேறினான்.

அரியணையிலமர்ந்தாலும் வயதில் இளையவனாயிருந்த காரணத்தால், பீஷ்மரின் ஆலோசனைப்படியே விசித்திரவீர்யன் நாட்டைக் கவனித்துவந்தான். அரசனாயிருந்த தம்பிக்கு மணமுடித்துவைக்க ஆசைப்பட்டார் பீஷ்மர்.

காசி நாட்டு மன்னன், அழகில் சிறந்த தன் மகள்கள் மூவருக்கு சுயம்வரம் நடத்துவதை அறிந்து அங்கு சென்றார் பீஷ்மர். பீஷ்மரின் பிரம்மச்சரிய சபதத்தை அறிந்த அனைவரும்,

"மகா பிரம்மச்சாரியான இவர், தானும் ஒரு மணமகன் போல இங்கு வந்திருக்கிறாரே..."

என்று ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டார்கள்.

அப்போது பீஷ்மர்,

"காசி மன்னா, நான் என் சகோதரனான விசித்திரவீர்யனுக்காகவே இச்சுயம்வரத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். வழிவழியாக,காசி நாட்டு இளவரசிகளை அஸ்தினாபுர அரச குடும்பத்தினருக்குத்தான் இதுவரை மணமுடித்துக்கொடுப்பது வழக்கம். இந்த நெறிமுறையை மாற்றி நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த சுயம்வரத்தை நான் அனுமதிக்கமாட்டேன்"

என்றுகூறி,

அங்கே குழுமியிருந்த மன்னர் அனைவரையும் போரிட்டு வென்று இளவரசிகள் மூவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டுவந்தார்.

அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற அப்பெண்கள் மூவரில், மூத்தவளான இளவரசி அம்பா, தான் சௌபலநாட்டு மன்னன் சால்வனை சுயம்வரத்தில் கண்டு,மனப்பூர்வமாக அவனுக்கு மாலையிட விரும்பியதாகக் கூற, அவளை உரிய பாதுகப்புடன் சால்வனின் நாட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு, அம்பிகாவையும், அம்பாலிகாவையும் தன் சகோதரன் விசித்திரவீர்யனுக்கு மணமுடித்துவைத்தார் பீஷ்மர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக, திருமணம் முடிந்த சிறிதுகாலத்திலேயே மன்னன் விசித்திரவீர்யனும் கொடிய காசநோயினால் மக்கட்செல்வம் இன்றி இறந்துபோனான். அன்னை சத்தியவதியோ வாரிசின்றிப்போன தன் வம்சத்தை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தாள்.

செவ்வாய், 11 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(4)

தந்தைக்கு மணமுடித்த தனயன்!

அன்றும் வழக்கம்போல் காட்டில் வேட்டையாடச் சென்றான் மன்னன் சாந்தனு. நீண்டநேரம் வேட்டையாடிக் களைத்தவன் யமுனையாற்றின் கரைக்கு வந்தான். அப்போது அங்கே படகோட்டிக்கொண்டிருந்த கண்ணிற்கினிய மங்கை ஒருத்தியைக் கண்டான். கண்டதும் காதலுற்றான்.

மீனவப்பெண்ணான அவள்பெயர் சத்தியவதி என்பதை அறிந்துகொண்ட மன்னன், அவளின் தந்தையைச் சந்தித்துப்பேச ஆவல்கொண்டான். மங்கை அவளுடன் மன்னனும் வந்ததுகண்டு அப்பெண்ணின் தந்தையான மீனவர் தலைவன், மன்னனுக்கு பழங்களும் பாலும் தந்து பக்குவமாய் உபசரித்தான்.

உபசரிப்பில் மகிழ்ந்தமன்னன், மீனவன் மகளை மனைவியாக்கிக்கொள்ள நினைக்கும் தன் ஆசையைத் தெரிவித்தான். அது கேட்ட அப்பெண்ணின் தந்தையும் மனம் மகிழ்ந்தான். மன்னனை மருமகனாக அடைய மனம் கசக்குமா என்ன? தன் சம்மதத்தைத் தெரிவித்த பெண்ணின் தந்தையனவன், மன்னனிடம் ,

"மன்னா, என் மகளை உங்களுக்கு மணமுடித்துத்தர எனக்கு சம்மதமே. ஆனால், என் மகளுக்குப் பிறக்கும் மைந்தர்களே உங்களுக்குப்பின் அரியணை ஏறவேண்டும். இதற்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் என் மகளை மணமுடித்துத் தருவேன்" என்று கூற,

மணிமுடிக்குக் காத்திருக்கும் மகன் தேவவிரதனை நினைத்து உள்ளம் வருந்தியவனாக அரண்மனை திரும்பினான் மன்னன்.

மன்னனின் மனவருத்தத்திற்கும் முகவாட்டத்திற்கும் காரணம் புரியாத மைந்தன் தேவவிரதன், ஒற்றர்கள்மூலம் நடந்ததை அறிந்தான். தந்தையின் துயரம்போக்க, தானே மீனவர் தலைவனைச் சென்று சந்தித்தான். தந்தைக்கு அவர் மகளைத்தருமாறு தேவவிரதன் கூற, தன் விண்ணப்பத்தைத் தெரிவித்தான் மீனவர் தலைவன்.

தந்தையின் மகிழ்ச்சிக்காகத் தன் அரியணையை விட்டுத்தருவதாக உறுதியளித்த தேவவிரதனை நம்பாத மீனவர் தலைவன்,

" அரியணைப்பதவியை இளவரசனாகிய நீங்கள் விட்டுத் தந்தாலும், உங்களுக்குப் பிறக்கும் சந்ததியினர் விட்டுத் தருவார்களா?"

என்று வினா எழுப்ப, தந்தையின் விருப்பத்திற்காக, தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ்வேன் என்றும் விண்ணையும் மண்ணையும், வானகத்து தேவர்களையும் சாட்சியாகக்கொண்டு சபதம் செய்தான். செயற்கரிய சபதம் செய்த தேவவிரதனை மலர்மாரி பொழிந்து வாழ்த்தினர் தேவர்கள். "இன்றுமுதல் நீ பீஷ்மன் என்று அழைக்கப்படுவாய்" என்று அசரீரி எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. பீஷ்மன் என்ற பெயருக்கு 'பிறரால் செயற்கரிய செயல்களைச்(சபதம்) செய்து முடிப்பவன்' என்பது பொருளாகும்.

மகனின் சபதம் கேட்டு மனம் நெகிழ்ந்தான் சாந்தனு மன்னன். தன்னலம் துறந்த மகனைச் சிறப்பிக்க,

"நீ விரும்பி உயிர் நீத்தாலன்றி உன் உயிரை யாராலும் பறிக்க இயலாது"

என்ற மாபெரும் வரத்தை மகனுக்கு அளித்தான்.

பின்னர்,மகன் பீஷ்மரின் விருப்பப்படியே சத்தியவதியை மணந்துகொண்டு மனநிறைவோடு வாழ்ந்தான் மன்னன் சாந்தனு.

திங்கள், 10 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(3)

தேவவிரதன் வந்தான்...

மன்னன் சாந்தனு அன்றும் வழக்கம்போல் கங்கைக்கரைக் காட்டில் வேட்டையாடச் சென்றிருந்தான். அப்போது கங்கையின் வெள்ளத்தைத் தன் அம்புகளால் அணைகட்டித் தடுத்திருந்த இளைஞனொருவனைக் கண்டான்.

"என்ன அற்புதமான திறமை" என்று அதிசயித்திருந்தவேளையில்,
கங்காதேவி மன்னன் முன் தோன்றினாள்.

"மன்னா, தங்களை அதிசயிக்கச்செய்தவன் வேறுயாருமல்ல... உங்கள் மகன் காங்கேயன் தான். கலைகளிற் சிறந்த இவன் தேவகுரு பிரஹஸ்பதியிடம் அரசியலையும், வசிஷ்டரிடம், வேதங்களையும், பரசுராமரிடம் வில்வித்தையையும் கற்றவன். இவனை வெல்ல யாருமிலாத அளவுக்கு நிகரில்லாதவனாக இவனை வளர்த்துள்ளேன்"

என்றுகூறித் தன் மகனை மன்னன் சாந்தனுவிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தாள் கங்காதேவி.

மகனைக் கண்டு மகிழ்ந்தான் சாந்தனு மன்னன். பேருவகையுடன் தன் மகனை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்தான். அருமை மகனுக்கு ஆளும் வழிவகைகளைக் கற்றுக்கொடுத்து அவனை நீதியும் நேர்மையும் உடையவனாக வளர்த்தான் மன்னன் சாந்தனு.

அன்னையைக் காணாத குறையைத் தவிர வேறெந்தக் குறையுமின்றி வளர்ந்தான் தேவவிரதன். அவனுடைய நற்பண்புகளால் மக்கள் மனதில் இடம்பெற்றான். உரிய பருவத்தில் தன் மகனை நாட்டின் இளவரசனாக அறிவித்தான் மன்னன் சாந்தனு.

சனி, 8 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(2)

அஷ்ட வசுக்களின் சாபவிமோசனம்

தேவர்களின் தலைவனான இந்திரனின் உதவியாளர்களாக அஷ்டவசுக்கள் எனப்பட்ட எண்மர் இருந்தனர். தாரா, துருவன்,சோமன், ஆகாஷ்,அனலன், அனிலன்,பிரத்யுசன், பிரபாசன் என்ற அவர்கள் அனைவரும் ஒருமுறை மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்தனர். அங்கே கேட்டதெல்லாம்தரும் காமதேனுவின் மகவான நந்தினி எனும் பசுவைக் கண்டு வியந்தனர்.

வசுக்களில் இளையவரான பிரபாசன் என்பவர்,

"துறவியான வசிஷ்ட முனிவருக்கு இந்த வரம்தரும் பசு எதற்கு?"

என்றுகூற, அதனை மற்றவர்களும் ஆமோதித்து, நந்தினிப்பசுவை தேவலோகத்திற்குக் கொண்டுசெல்ல முடிவுசெய்து அதனை ஆசிரமத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுவிட்டனர்.

வந்தார் வசிஷ்டர்... கொண்டார் கோபம்...

"அஷ்டவசுக்களும் பூவுலகில் மனிதர்களாகப் பிறக்கட்டும்"

என்று சாபமிட்டார்.
சாபமுற்றதை அறிந்து வசுக்கள் கலங்கி,

" மாதவ முனிவரே, எங்களை மன்னியுங்கள். அறியாமையால் பிழை செய்தோம். அதைப் பொறுத்தருளி, விமோசனம் தரவேண்டும்"

என்று அவர் பாதத்தில் விழுந்து வேண்டினார்கள்.

மனம் இரங்கிய முனிவர்,

"இந்தக் குற்றத்தைச் செய்யத்தூண்டிய காரணத்தால் பிரபாசனே இதற்குப் பொறுப்பாளனாகிறான். அதனால் அவன் பூவுலகில் நீண்டநாள் மனிதனாய் வாழவேண்டும். மற்ற எழுவரும் அவனுக்குத் துணை நின்றதால் பூவுலகில் பிறந்தவுடன் சாப விமோசனமடைவீர்கள்"

என்று அருள்புரிந்தார்.

சாபம் பெற்ற எண்மரும் கங்காதேவியிடம் வந்து, சாபமடைந்த எங்களுக்குத் தாயாகித் தயைபுரியவேண்டும் என்று வேண்டிட, கங்கையும் தாயாகி, மன்னன் சாந்தனுவின் குழந்தைகளாய்ப் பிறந்த எழுவரை நீரில் வீசிக்கொன்று, எட்டாம் குழந்தையாய்ப் பிறந்த பிரபாசனை இளைஞனாகும்வரை தானே வளர்க்கத் தன்னோடு அழைத்துச் சென்றாள்.

அஷ்ட வசுக்களின் ஆசை அவர்களை மனித உயிராகப் பிறக்கவைத்தது. கங்கையின் அருளால் அஷ்டவசுக்கள் சாபவிமோசனம் பெற்று மீண்டனர்.

புதன், 5 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(1)

1.கங்கை கொண்டான் சாந்தனு
***************************************

விஸ்வாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த மகளும், கண்வ முனிவரின் வளர்ப்பு மகளுமான சகுந்தலைக்கும் மன்னன் துஷ்யந்தனுக்கும்,பிறந்தவன் மாமன்னன் பரதன்.
அவனுடைய மாட்சிமை தாங்கிய பரதவம்சத்தில், பின்னர் வந்த மன்னன் பிரதீபனுக்கும் அவன் மனைவி சுனந்தாவுக்கும் மகனாகப் பிறந்தவன் மன்னன் சாந்தனு. அஸ்தினாபுர அரியணையிலமர்ந்து ஆட்சிசெய்துவந்த அவன் மிகுந்த அழகும், சிறந்த வீரமும், மேன்மையான குணங்களும் உடையவனாக விளங்கினான்.

மன்னன் சாந்தனு ஒருநாள் வேட்டைக்குச் செல்கையில், தாகம் அதிகரிக்கவே அருகிலிருந்த கங்கை நதியில் சென்று நீரருந்துகையில் அங்கே அழகே உருவான கன்னியொருத்தியைக்கண்டான்.கண்டதும் காதல் கொண்டான்.

"கண்ணிறைந்த பெண்ணழகியே, நீ யார்? எங்கிருந்து வந்தாய்?

என்று வினவிய அவன்,

"அஸ்தினாபுரத்தின் அரசனான என்னை மணம் செய்துகொள்ள சம்மதமா?"

என்று வினவினான்.

அதற்கு அந்தப்பெண்,

"அரசே, நான் யார் என்று கேட்காமலும், நான் செய்யும் செயல்களை ஏனென்று கேட்டுத் தடைசெய்யாமலும் இருக்க சம்மதமென்றால் நான் உங்களை மணப்பேன். தாங்கள் என் செயல்களைத் தடுத்தால் நான் அப்பொழுதே உங்களைவிட்டு விலகிவிடுவேன்"

என்றும் கூறினாள். மன்னன் சாந்தனுவும் அதற்கு மனப்பூர்வமாய் சம்மதித்து அவளை கந்தர்வ விவாகம் புரிந்து அரண்மனைக்கு அழைத்துவந்தான்.

மணவாழ்க்கை மகிழ்ச்சியோடு செல்ல,மன்னனின் மனைவிக்கு ஆண் மகவொன்று பிறந்தது. குழந்தை பிறந்த குதூகலச் செய்தி கேட்டு, தன் மனைவியைக் காணவந்த சாந்தனு, பிறந்த குழந்தையைத் தன் மனைவி கங்கையாற்றில் வீசிக் கொன்றதைக் கண்டான். கண்ட காட்சியினால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த மன்னன் தான் தன் மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்குவர, அவளிடம் ஏதும் கேளாமல் அமைதி காத்தான்.

இந்நிலையில் மன்னன் மனைவி மறுபடியும் தாய்மையுற்றாள். சென்றமுறைபோல் இனியும் செய்யமாட்டாள் என எண்ணி மன்னன் மகிழ்ந்திருந்தவேளையில், தான் பெற்ற இரண்டாவது குழந்தையையும் ஆற்றில் வீசிக் கொன்றாள் அவள். துயரத்தின் பிடியில் சிக்கித்தவித்தான் மன்னன் சாந்தனு. ஆனாலும், கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது என்பதற்காக வாய்மூடி மௌனித்திருந்தான்.

தொடர்ச்சியாய்ப் பிறந்த ஏழு குழந்தைகளையும் நீரில் வீசிக் கொன்றதைக் கண்டு சோகத்தில் ஆழ்ந்த அஸ்தினாபுரத்து அரசன், எட்டாவது குழந்தை பிறந்ததும் அதனை எடுத்துக்கொண்டு அவள் ஆற்றிற்குச் செல்கையில், குழந்தையில் அழகிலும், பிள்ளைப் பாசத்திலும், தனக்கொரு வாரிசு வேண்டுமே என்ற பரிதவிப்பிலும் துவண்டவனாய்,

" இரக்கமே இல்லாமல் பெற்ற குழந்தைகளைக் கொல்கிறாயே, நீ யார்? ஏன் இப்படிச் செய்கிறாய்?"

என்று மனம் பொறுக்காமல் அவளிடம் வினவினான்.

தான் கொடுத்த வாக்குறுதியை மன்னன் மீறி மன்னன் கேள்வியெழுப்பவே,

"மன்னா,நான் யாரென்று சொல்கிறேன், ஆனால் உங்கள் வாக்குறுதியை மீறியதால் இனியும் என்னால் உங்களுடன் வாழ இயலாது"

என்று கூறிய அப்பெண்,

"நான் தேவலோகத்திலிருந்து சாபம் தீர வந்த கங்காதேவி"

என்று கூறி, தன் முற்பிறப்புப்பற்றி மன்னனுக்குச் சொல்ல ஆரம்பித்தாள்.

"முன்னொரு பிறவியில், தேவர் சபையில் கங்காதேவியாகிய நான் நடனமாடுகையில் என் ஆடை சற்றே விலகியதைக் கண்டு அனைவரும் நிலம்நோக்க,அப்போது மகாபிஷக் எனும் பெயரில் மன்னனாய்ப் பிறந்திருந்த நீங்கள் என் அழகில் மயங்கி எனைப் பார்த்து ரசிக்க, பிரம்மதேவன் இட்ட சாபத்தின் பலனாகத்தான் நாமிருவரும் கணவன் மனைவியாக இப்பிறவியடைந்தோம்"

என்று கூறினாள்.

"நமக்குப் பிறந்த இக் குழந்தைகள் எண்மரும் சாப விமோசனத்துக்காக என் வயிற்றில் பிறந்த அஷ்ட வசுக்கள் ஆவர். நமக்குப் பிறந்த இந்த எட்டாவது குழந்தையை நான் சிலகாலம் வளர்த்து பின்னர் உங்களிடம் ஒப்படைப்பேன்"

என்றும் கூறி, மன்னன் சாந்தனுவை விட்டு விலகி தேவலோகம் சென்றாள் கங்காதேவி.

பாரதம் படிக்கலாம் வாங்க...

மகாபாரதம் என் பார்வையில்...
************************************
பாரத நாட்டின் பெருமைமிகு இதிகாசங்கள் இரண்டினுள் மகாபாரதமும் ஒன்று. வியாச முனிவர் வாய்மொழியாய் உரைக்க, விநாயகப்பெருமானே தன் தந்தத்தை எழுதுகோலாக்கி இந்நூலை எழுதியதாகக் கூறப்படும் புராணக்கதை இந்நூலின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகும்.

பாரத நாட்டிற்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த மன்னன் பரதனின் வம்சத்தில் எழுந்த போட்டியும் பொறாமையும், சூழ்ச்சியும் அதை வென்ற தர்மமும் ஆகிய அனைத்தையும் விளங்கக்கூறும் வாழ்க்கைக் காப்பியம் இது.

இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்களாலும் போற்றப்படும் இந்த இதிகாசம், வாழ்க்கைக்கான அறவழியை எடுத்துரைப்பதுடன், பார்த்தனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மாவின் வாயிலாக பகவத்கீதையையும் நமக்குப் போதிக்கிறது.

நாளைய பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகிய குழந்தைகளுக்கும், கதையின் சாராம்சம் தெரிந்தும், ஏனைய விஷயங்கள் தெரியாத என்னைப் போன்ற சில பெரியவர்களுக்கும் நம் பண்டைய பாரதத்தின் பாரம்பரியத்தை அறிய வைக்கும் நோக்குடன், நான் படித்ததைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுந்த சிறு முயற்சியே இந்த மகாபாரத நெடுங்கதையின் எளிமையான வடிவம்.

பாரதக்கதையின் பெருமைகள்
**************************************

பழம்பெருமைகள் நிறைந்த நம் பாரதநாடு முனிவரும் அறிஞர்களும் பிறந்த புண்ணியபூமி. வேதங்களும் வித்தைகளும் புரிந்த சித்தர்கள் வாழ்ந்த பூமி. பாரத மக்கள் அனைவரும் போற்றும் நால்வேதங்களாகிய ரிக், யஜூர், சாம,அதர்வண வேதங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாம் வேதம் எனப்படுமளவுக்கு பெருமைபெற்றது மகாபாரதக்காப்பியம்.

மகாபாரதக்கதை எண்ணிலாத கிளைக்கதைகளைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலில் கூறப்படாத நீதிக்கருத்துக்கள் எதுவுமே இல்லையெனுமளவுக்கு கதையின் தொடக்கமுதல் இறுதிவரை மனிதவாழ்விற்கான நியதிகள் நிறைந்துகாணப்படுகிறது. முழுக்கமுழுக்க இறை உபதேசமான பகவத்கீதை பாரதக்கதையின் மகுடம் எனலாம். பாரதக்கதையில் சொல்லப்படாத மனித குணங்களே இல்லையெனுமளவுக்கு இன்றைய வாழ்க்கையிலும் எந்த ஒரு மனிதனையும் சித்தரிக்கக்கூடிய கதைமாந்தர்களை நாம் பாரதக்கதையில் காணமுடியும்.

தந்தைக்காகவே தன்னலம் துறந்த பீஷ்மரையும், நட்புக்காக உயிரையும் கொடுத்த கர்ணனையும், பொறாமைக் குணத்தினால் பெருமையை இழந்த துரியோதனையும், தருமமே தன்னுருவாக வாழ்ந்த தர்மனையும், போர்முனையில் பாசத்தால் கலங்கி நின்ற அருச்சுனனையும், பதிபக்தியினால் கணவனுக்கு இல்லாத பார்வை தனக்கும் வேண்டாமென, கண்ணைக் கட்டிக்கொண்டே வாழ்ந்த காந்தாரியையும் இந்தக்காப்பியத்தில் காணலாம்.

பராசர முனிவரின் புதல்வனான வியாசரால் சொல்லப்பட்ட பாரதம், தும்பிக்கையோனால் கம்பீரமாக தேவமொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு, அக்கதை வியாசரால் அவரது புத்திரர் சுகருக்கு சொல்லப்பட்டு, தேவலோக சஞ்சாரியான நாரதமுனிவர் அந்நூலைக்கற்று தேவர்களுக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறுவர். தேவர்களின் காப்பியம் மனிதர்களை அடைந்து, பிற்காலத்தில் வில்லிப்புத்தூர் ஆழ்வாரால் வில்லிபாரதமாகவும், ராஜாஜி அவர்களால் வியாசர் விருந்தாகவும் படைக்கப்பட்டது. எட்டையபுரத்துக் கவிஞன் இந்நூலின் ஒருபகுதியைப் பாஞ்சாலியின் சபதம் என்றபெயரில் மக்களுக்குக் கொடுத்தார்.

இத்தனை பெருமைகள் நிறைந்த, கடவுளும் மனிதனாகிக் கலந்து வாழ்ந்த காப்பியத்தின் பெருமைகள் உலகுள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.