நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 டிசம்பர், 2018

கொள்ளை கொண்ட கதை!

அது ஒரு அடர்ந்த கானகம்...அங்கே ஒரு கொள்ளைக்காரன். அவன் பேரு ரத்னாகரன். அந்தக் காட்டுப்பகுதியில, வருகிற போகிறவங்ககிட்டயெல்லாம், வழிப்பறி செய்து வாழ்க்கையை நடத்திக்கிட்டிருந்தானாம்.

ஒருநாள், வழிப்பறி பண்ண யாருமே கிடைக்காம அலைஞ்சப்ப, அவங்கிட்ட, முதன்முதலாக வந்து மாட்டினாராம் ஒருத்தர்.  ஆனா, அவர்கிட்டே கொள்ளையடிக்கிறதுக்கு எதுவுமே இல்லையாம். கோபம் வந்திச்சு அந்தக் கொள்ளைக்காரனுக்கு.
கையிலயும் பையிலயும் ஒண்ணுமே இல்லாம இப்படி சுத்திக்கிட்டிருக்கியே, எப்படின்னு அவரைப் பார்த்துக் கேட்டானாம் கொள்ளையன். அதற்கு அந்த வழிப்போக்கர், என் பெயர் நாரதன்...திரிலோக சஞ்சாரி, காசில்லாமலே எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடியவன் என்று சொல்லிவிட்டு.  "நீ ஏன் இவ்வாறு கொள்ளைத் தொழில்செய்து காலம் கடத்துகிறாய் ?..." என்று கேட்டாராம்.

அதற்கு  அந்தக் கொள்ளையன், "என்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்களையும் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்" என்று சொன்னானாம். அதற்கு நாரதர், "அப்படியானால் நீ செய்கிற இந்தப் பாவமாகிய வழிப்பறியில், அவர்களுக்கும் பங்கிருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தக் கொள்ளையன், "ஏன் இல்லை, நான் கொள்ளையடிக்கிற பொருளில் பங்கிருக்கிற மாதிரியே, இந்தப் பாவத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றானாம்.

அதற்கு நாரதர், "எதற்கும், நீ இதை உன் குடும்பத்தினரிடம் கேட்டுவிட்டு, வந்து பதிலைச்சொல்" என்றாராம்.  அதற்கு அவன், நாரதரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தன் வீட்டுக்குப்போய், கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளப்போனானாம் ரத்னாகரன். திரும்பிவந்தபோது, திகைத்துப்போயிருந்தானாம் அவன்.

என்னாச்சு ரத்னாகரா? என்று அவனைக் கேட்டாராம் நாரதர். அதற்கு அவன், கட்டிவைத்திருந்த நாரத முனிவரை அவிழ்த்து விட்டுவிட்டு,"எங்கள் அனைவரையும்  காப்பாற்றுவது உன்னுடைய கடமையேயன்றி, நீ செய்யும் எந்தப் பாவத்திலும் எங்களுக்குப் பங்கில்லை என்று என் பெற்றவர்கள் முதற்கொண்டு எல்லாரும் மறுதலித்துவிட்டார்கள் ஐயா..." என்று மனவருத்தத்தோடு சொன்னானாம்.

அதற்கு நாரதர், "அதுதான் உண்மை ரத்னாகரா...பாவமோ புண்ணியமோ, அவனவன் செய்யும் செயல்களுக்கு அவனவனே பொறுப்பாவான். பாவப்பொருளில் மற்றவர்களுக்குப் பங்கிருந்தாலும், பெறப்போகும் தண்டனையில் அவர்களுக்குப் பங்கு கிடையாது" என்று கூறினாராம்.

தான் செய்த செயல்களால், தனக்குப் பாவங்கள் சேர்ந்துவிட்டதே என்று அஞ்சி நடுங்கினானாம் அவன். அன்றைக்கு மனம்திருந்திய அந்த ரத்னாகரனாகிய வால்மீகியிடமிருந்துதான்  இன்றைக்கும் பேசப்படுகிற  ராமாயணம் எனும் இதிகாசம் பிறந்தது!

செவ்வாய், 11 டிசம்பர், 2018

விரிச்சி கேட்டல்!

பிரச்சனைகளின் கனம்தாளாமல் மனசுகிடந்து மறுகும்போது, அருகிலிருந்து யாராவது ஆறுதலாய் நாலு நல்லவார்த்தை சொல்லமாட்டார்களா என்று ஏங்கிப்போகிறது மனித மனது. அப்போது, மனசு நிறைகிறமாதிரி, நல்ல நிகழ்வுகளேதேனும் நடந்தாலோ, நல்ல வார்த்தைகளைக் கேட்டாலோ சுமை குறைந்து நம்பிக்கை பிறக்கிறது வாழ்க்கையில்.

படிக்கிற காலத்தில், கல்லூரி விடுதியிலிருந்தபோது, மனதின் இத்தகைய ஆதங்கம் இன்னோர் வடிவில் விரிவதைப் பார்த்ததுண்டு. வீட்டிலிருந்து, மாதக்கட்டணம் கட்ட மணியார்டர் வரவில்லையே என்ற கவலை,  போன கடிதத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்த தவிப்பு, எழுதிய செமஸ்டரில் எல்லாப் பாடமும் பாஸாகவேண்டுமென்ற வேண்டுதல் எல்லாவற்றிற்கும் பதிலாக, யார் கையிலாவது பைபிளைக் கொண்டுவந்து கொடுத்து, ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து அதிலிருக்கிற முதல்வசனத்தைப் படி என்று கேட்பாள் எஸ்தர் மரியம்.

நல்லதாய் ஏதாவது வசனம் வந்துவிட்டால், அன்றைக்கு முழுக்க அவள்முகம் சந்தோஷத்தில் ஜொலிக்கும். இல்லாமல், ஏதாவது வித்தியாசமாய் வந்தாலோ, நாள் முழுக்கப் புலம்பிக்கொண்டே இருப்பாள். எஸ்தர் மாதிரியில்லாமல், இன்னும் சிலர், தாங்களாகவே ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வாசித்துவிட்டு, ஆண்டவர் என்னோடு பேசிவிட்டார் என்று, இறுக்கம் தளர்ந்தவர்களாய் எழுந்துபோவார்கள்.

இங்கேயும் அப்படியொரு காட்சி...

"அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை 
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரனோக்கி யாய்மகள்
நடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாய ரென்போள்

நன்னர் நன்மொழி கேட்டன மதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது நீநின்
பருவர லெவ்வம் களைமாயோயென"

கார்காலம் வந்துவிட்டது. போருக்குச் சென்ற தலைவனைக் காணாமலும் அவனிடமிருந்து செய்தியேதும் வராமலும் கலங்கிநிற்கிறாள் தலைவி. அவளுடைய அந்த நிலையைக் காணப்பொறுக்காத அவளின் வீட்டிலிருந்த  முதிய பெண்கள், நெல்லுடன் முல்லை மலர்களைத் தூவி, இறைவனை வழிபட்டுவிட்டு, ஊருக்குள்ளே சென்று, தலைவிக்காக விரிச்சி கேட்டு நிற்கின்றனர். 

அப்போது, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட சிறு பசுங்கன்றானது, பசியினால் சுற்றிச்சுற்றி வருவதைக்கண்ட ஆயர்குலத்துப் பெண்மணியொருத்தி, அக்கன்றினை நோக்கி, "கோலுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்ற கோவலர்கள் பின்னேயிருந்து வழிநடத்த, உன் தாய் 
இப்போது வந்துவிடுவாள், வருந்தாதே" என்று கூறியதைக் கேட்கிறார்கள். 

நல்லமொழியை விரிச்சியாகக் கேட்ட அவர்கள், சஞ்சலத்தில் தவிக்கும் தலைவியிடம் வந்து, நாங்கள் கேட்ட நல்ல வார்த்தைகளும், கண்ட சகுனமும் நல்லதையே சொல்லுகிறது. அதனால்,போருக்குச் சென்ற தலைவன் பகைவர்களை வெற்றிகொண்ட திறைப்பொருளுடன் விரைவில் உன்னிடம் வருவான். நீ கலங்காமல் காத்திரு என்று கூறுகிறார்கள். 

இது, முல்லைப்பாட்டு காட்டுகிற சங்ககாலக் காட்சி. அக்காலக் காட்சியை அடியொற்றிய நிகழ்வுகளை இக்காலத்திலும் நாம் காணும்போது, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்களில் சிலவற்றை இன்றைக்கும் நம் மக்களில் சிலர் மறவாதிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.  


செவ்வாய், 23 அக்டோபர், 2018

உறக்கமில்லாத இரவு

தட்டிலிருந்த கடைசிக் கவளத்தை மனைவியின் வாயில் ஊட்டியவன், "உனக்கு ஒண்ணும் பயமில்லையே மீரா? என்று சோகமாய்க் கேட்க, வாய் நிறைய சாதத்துடன் சிரித்தபடி, குறுக்கும் நெடுக்குமாகத் தலையசைத்தாள் மீரா.  தண்ணீரைக் குடித்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்தவள்,  "தைரியத்துல நானெல்லாம் திருநெல்வேலிலயே நம்பர் ஒன் தெரியுமா?  ஹாஸ்டல்ல இருந்தப்ப என்னோட தோழிங்க எல்லாரும், நைட்ல பாத்ரூம் போணும்னாகூட பாடிகார்டா என்னைத்தான் கூப்பிடுவாங்க. நீங்க எதுக்கு சின்னப்பிள்ளை மாதிரி கவலைப்படுறீங்க? என்று கணவனைத் தேற்றினாள் அவள்.

கல்யாணம் முடிந்து ஒருமாசம் ஆன பிறகு சரவணனுக்கு இன்றைக்குத்தான் முதலாவதாக நைட் ஷிஃப்ட். இரவு பத்திலிருந்து காலை ஆறுவரைக்கும். சுற்றிலும் வீடுகள், குடும்பங்கள் இருக்கிற பகுதியாய்ப் பார்த்துத்தான் வீடு எடுத்திருந்தான் என்றாலும் மனசுக்குள் மனைவியைத் தனியாக விடுவதற்குத் தைரியம் வரவில்லை அவனுக்கு.

"நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க...நான் என்னோட சின்ன அரண்மனையை 'சிக்'குன்னு பூட்டிக்கிட்டு செல்ஃபோன்ல பாட்டுக் கேட்டுக்கிட்டே தூங்கிருவேன் என்றவளை, அருகணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான் சரவணன்.

வாசலில் நின்றவன், " நீ உள்ள போயி பூட்டிக்கோ... அப்புறம் நான் கிளம்பறேன்" என்று சொல்ல, "அடடா... இது ரொம்ப சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு" என்றவள், கணவனின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். வெளியே சரவணனின் பைக் புறப்படும் சத்தம் கேட்டது. 

மெல்லிய முறுவலுடன் அடுக்களைப் பாத்திரங்களை ஒதுக்கி, சமையலறையைச் சுத்தம்செய்துவிட்டுத் திரும்புகையில், பின்னால் எதுவோ விழுந்து பாத்திரம் அதிர்ந்த சத்தம் கேட்டது. பதறிப்போய்த் திரும்பினாள் அவள். சுவரோரத்தில், குடத்தின் மூடியின் மேல் தலையை உயர்த்தியபடி உட்கார்ந்திருந்தது பல்லி ஒன்று. அவள் அருகில் செல்லவும், குதித்து மேடைக்கு அடியில் ஓடியது.  மேலே ட்யூப் லைட்டுக்குப் பின்னாலிருந்து விழுந்திருக்கும் போல... அதுதான் சத்தம் என்று நினைத்தவள், தண்ணீர்ப் பாத்திரங்களை நாளைக்கு வேறு இடத்தில் வைக்கணும் என்று நினைத்தபடி அடுக்களை விளக்கை அணைத்தாள்.

செல்போனைக் கையிலெடுத்து பாட்டுக்கேட்கலாம் என்று நினைத்த தருணத்தில் சட்டென்று அது சிணுங்கியது. சரவணனாய்த்தான் இருக்கும் என்று சந்தோஷத்துடன் எடுத்தவளை ஏதோ ராங் நம்பர் ஒன்று வெறுப்பேற்ற, அணைத்துவிட்டுப் படுக்கையில் உட்கார்ந்தாள்.  அருகிலிருந்த ஸ்டூலில் அடுக்கியிருந்த புத்தகங்கள் கண்ணில் படவே அந்த வாரத்துப் பெண்கள்  இதழைக் கையில் எடுத்தாள். 

முன்னெல்லாம் புத்தகம் வாங்கினால் வாங்கிய கையோடு அதை முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பாள். இப்போ, பதினைந்துநாள் முன்னால் வாங்கிய புத்தகம் பாதிகூடப் படிக்கப்படாமல் இருந்தது. நான்குபேராயிருந்த பிறந்த வீட்டிலிருந்து விலகிக் கணவனும் அவளுமாய் இரண்டுபேரே இருக்கிற குடும்பத்துக்கு வந்தாலும் எந்த நேரமும் ஏதாவது செய்வதற்கு இருந்தது அவளுக்கு. உறக்கம் வருவதற்குள் எடுத்த புத்தகத்தைப் படித்து முடித்துவிடவேண்டுமென்ற உத்வேகத்துடன் பக்கங்களைப் புரட்டுகையில் வாசல் பக்கம் ஏதோ கதவைப் பிறாண்டுகிற சத்தம் கேட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுக் கேட்ட அந்தச் சத்தம் ஏதோ சமிக்ஞை போல் தோன்றியது அவளுக்கு. இதயத்தின் துடிப்பு எகிறத் தொடங்கியது அவளுக்கு.

வாசலுக்குப் பக்கத்தில் சிறிய சன்னல் ஒன்றிருந்தது. வாசலில் விளக்கு எரிந்துகொண்டுதான் இருந்தது. எட்டிப்பார்க்கலாம் என்று நினத்தவளை ஏதோ உணர்வு பின்னுக்கு இழுத்தது. பூனையோ நாயாகவோ இருக்கும் அல்லது கீரிப்பிள்ளையாக இருக்குமோ என்று நினைத்தவள், என்ன சத்தம் வந்தாலும் கதவைமட்டும் திறக்கக்கூடாது என்று சரவணன் சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தச் சத்தம் நின்றுவிட, மறுபடியும் படுக்கையில் வந்து உட்காந்தாள்.

முள்காடாகவும் விளைநிலமாகவும் இருந்த பகுதியை அழித்து உருவான குடியிருப்புப் பகுதி அது. இப்போது குடியிருப்புப் பகுதியாய் மாறியிருந்தாலும், முன்னாளைய இப்பகுதி வாசிகளான பாம்பு, ஓணான், கீரிப்பிள்ளை ஆகியவை இன்றைக்கும் அவ்வப்போது வந்துபோவதுண்டு என்று வீடு பார்க்கவந்த அன்றைக்கே பக்கத்துவீட்டு வான்மதியின் மாமியார் சொன்னது நினைவுக்கு வந்தது.

  மனுஷங்களோட ஆக்ரமிப்புல உலகத்துல உள்ள உயிரினங்கள் ஒண்ணொண்ணா அழிஞ்சுகிட்டு வருது. அதுங்களும்தான் எங்க போகும் பாவம் என்று எண்ணியபடியே புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள். 

நான்கைந்து பக்கம்தான் புரட்டியிருப்பாள் அதற்குள் எரிந்துகொண்டிருந்த ட்யூப்லைட்டும் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் பட்டென்று நின்றுபோனது, "ஆஹா, கரண்ட் கட்...ஆனா, இன்வெர்டர் ஏன் வேலை செய்யலை? என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் உரைத்தது. இந்த மாசத்துல இருந்து ராத்திரி பத்து டூ பன்னிரண்டு கரண்ட் கட் என்று.

சரவணன் புறப்பட்டப்பவே கரண்ட் போயி, இவ்ளோ நேரம் இன்வெர்டர்லதான் ஓடியிருக்கும்போல என்று நினைத்தவள், கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்தில் அடுக்களைக்கு நடந்தாள். 

அடுக்களை அலமாரியில் மெழுகுவர்த்தியைத் தேடுவதற்குள் வெளிச்சம் அணைந்துவிட, கைகளால் தடவிக் கண்டுபிடித்தவள் மறுபடியும் செல்போனை உயிர்ப்பிக்காமல் தீப்பெட்டியை எடுக்க விளக்கு மாடத்தை நோக்கி நடந்தாள். சட்டென்று யார் மேலேயோ மோதியதுபோலிருந்தது அவளுக்கு. அவளையுமறியாமல் 'வீல்' என்று சத்தமிட்டவள், நடுங்குகிற கரங்களால் செல்ஃபோனை மறுபடியும் உயிர்ப்பித்தாள். சுற்றிலும் வெளிச்சம் பரவ அங்கே எதுவும் தென்படவில்லை.

பின்பக்கமாகவே நடந்து, மாடத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். ஆறுக்கு எட்டு அடுப்படியும் பத்துக்குப் பத்து படுக்கையறையும், சின்னதொரு குளியலறையும் உள்ள அந்த வீட்டில் அவளைத்தவிர யாரும் இல்லை. ஆனால், அவள்மீது மோதியது யார்? அது நிச்சயம் பிரமையில்லை, நிஜம்தான் என்று அவள் உள்ளுணர்வு உறுத்த, அதற்குள் கரண்ட் வந்துவிட்டது.

அடுக்களை லைட்டையும் எரியவிட்டாள். வீடு பளிச்சென்றிருந்தது. கட்டிலுக்கடியில் குனிந்து பார்க்காமலே தெரிந்தது. அங்கே அவளைத் தவிர யாருமில்லை. குளியலறைக் கதவு வெளிப்பக்கம் தாளிடப்பட்டிருந்தது ஆனாலும் விளக்கைப் போட்டுவிட்டுத் திறந்துபார்த்தாள். அதுவும் காலியாக இருந்தது. வாசல்கதவும் பூட்டித் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. முதல்முறையாக மனசிலிருந்த தைரியம் போக, பயம் வந்து ஒட்டிக்கொண்டதை உணர்ந்தாள். 

இனிமேல் நிச்சயம் உறங்கமுடியாது என்று தோன்றவே, செல்போனை உயிர்ப்பித்து, சரவணனின் எண்ணை அழுத்தினாள். நடந்ததைச் சொன்னால் அவனும் பயப்படுவானா அல்லது பகடி பண்ணுவானா என்ற எண்ணம் வர, அதை நேரிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள்.

அலைபேசியில், "என்னடா, இன்னுமா நீ தூங்கல? என்றான் சரவணன். "என்னமோ தெரியலங்க...தூக்கமே வரல. இனிமே, நானும் ராத்திரி பூரா முழிச்சிருந்துட்டு, பகல்ல நீங்க வந்ததும் தூங்கலாம்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, "அசட்டுக் கழுத...விளையாடாம சீக்கிரம் தூங்கு. எனக்கு வேலை இருக்கு என்று சிரித்தபடி இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.
மனதில் பயம் பிறாண்ட,அம்மா சொல்வதுபோல சஷ்டிக் கவசத்தின் வரிகளை உச்சரித்தபடியே கணினியை எடுத்து உயிர்ப்பித்தாள்.

தனக்குத் தோன்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டு கூகிளில் தேட ஆரம்பித்தாள். அவளைப் போலவே இன்னும் பலர் எழுதியிருக்க, அதை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தாள். சுவாரசியம் பற்றிக்கொண்டது. சிலரின் அனுபவங்கள் சிரிக்கவைப்பதாயும் சில அனுபவங்கள் சில்லிடவைப்பதாயும் இருந்தது. அடுத்ததாய், தனிமையின் பயத்தை விரட்டுவது எப்படி என்று இன்னொரு தலைப்பைத் தேட ஆரம்பித்தாள். பக்கம்பக்கமாய் விரிந்தது பலரின் அனுபவங்களும் அறிவுரைகளும். சுற்றியிருந்த அத்தனையும் மறந்துபோக புதுப்புது விஷயங்களை வாசித்து அதிலேயே ஆழ்ந்துபோனாள். ஆக, அன்றைக்கு கூகிளின் துணையுடன் தொலைந்துபோனது அவளது தூக்கமும்  தனிமையும்.



புதன், 9 டிசம்பர், 2015

அடைமழையும் ஔவையின் மொழியும்!



மாரி அல்லது காரியம் இல்லை இது ஔவையின் மொழி. மழையில்லாவிட்டால் இவ்வுலகில் எதுவுமே இல்லைதான். ஆனால், இப்படியொரு மழையை சென்னை மாநகரமோ அதைச் சுற்றியிருக்கிற மக்களோ எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். 

ஆனால், இந்த மழை ஏகப்பட்ட காரியங்களைச் சத்தமின்றிச் செய்திருக்கிறது என்பதும் நிஜம். மக்களின் மனதில் நிறைய மாற்றங்களை விதைத்திருக்கிறது. இவர் இன்னார் என்பதையும் இது இன்னாதது என்பதையும் உரக்கச் சொல்லியிருக்கிறது, அடித்துச் சொல்லியிருக்கிறது. இந்த மாற்றம் எளிதில் நீங்காது என்றுதான் தோன்றுகிறது. 

மாரி அல்லது காரியம் இல்லை என்ற மொழி எவ்வளவு உண்மையோ அதைப்போல, அடுத்து வரும் ஔவையின் மொழியும். வானம் சுருங்கில் தானம் சுருங்கும். உண்மைதான். அப்படியென்றால் வானம் பெருகின் தானம் பெருகும் என்பதுதானே பொருள்? இங்கே வானம் பெருகி எம்மக்களின் தானம் செய்யும் குணத்தை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. இங்கே, பாதிக்கப்பட்டவர்களைவிட உதவி செய்ய முன்வருபவர்கள் அதிகம் என்று பாராட்டவைத்திருக்கிறது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரும் பணக்காரர்கள்வரை எத்தனையோபேர் பணமும் பொருளுமாக மனமுவந்து கொடுத்திருக்கிறார்கள்.  எத்தனை எத்தனையோ மக்கள் தங்கள் மக்களின் இன்னல் காணப் பொறுக்காமல் இறங்கி வந்து வேலை செய்கிறார்கள். எத்தனை எத்தனையோ இளைஞர்கள் ஓய்வு உறக்கமின்றி, ஓடி ஓடி உழைக்கிறார்கள். இவற்றையெல்லாம் காணக் கொடுத்ததும் இந்த மழையின் செயல்தான்.

அடுத்ததாக இன்னொரு ஔவையின் மொழி... நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. இதைத்தான் நம் மக்கள் தவறாக உணர்ந்துகொண்டார்கள் போலிருக்கிறது. நீர்நிலைகளை உடைய ஊரில் குடியிரு என்பது இதற்கான பொருள். ஆனால் நேரடியாக நீர்நிலைகளிலேயே குடியேறிவிட்டார்கள் நம் மக்கள். குடியேறியது மட்டுமா மிச்சமிருக்கிற நீர் வழித்தடங்களையும் மக்காத கழிவுகளால் மறைத்துவிட்டார்கள். இங்கே விளைந்ததுதான் அத்தனை துயரமும்.

இதைத்தான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தன் இன்னொரு மொழியால் எச்சரிக்கிறாள் ஔவை. இந்த மழை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைதான். இப்படியே போனால் இந்தச் சென்னையை என்னால் கூடக் காப்பாற்றமுடியாது என்று இயற்கையின் வாயிலாக இறைவன் கொடுத்திருக்கிற எச்சரிக்கை. 

அன்றைக்குச் செய்ததற்கெல்லாம் இன்றைக்கு பலன் கிடைத்திருக்கிறது. இனி, என்றைக்கும் இது நடக்காமலிருக்கவேண்டுமானால், இனிவரும் மழைக்குள் நம் தவறுகளைத் திருத்திச் சீர்செய்தல் மிக மிக அவசியம்.

                                                              ******

வியாழன், 1 ஜனவரி, 2015

பாவம் பிள்ளைகள்!



ஞாயிற்றுக்கிழமை...காலை எட்டுமணி...

என்னங்க, இங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்களேன்... என்றாள் என் தர்மபத்தினி. 

என்னடா இது அதிசயம்? இன்னிக்கி அவ வாய்ஸ்ல ஒரு மென்மை தெரியுதேன்னு படிச்சிக்கிட்டிருந்த பேப்பரை பட்டுன்னு மூடி வச்சுட்டு பக்கத்துல போயி நின்னேன்.

"ஆமா, இது யாருன்னு தெரியிதா?" என்றாள், டேபிளின் மேல் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த என் மகளைக் காட்டி.

என்னம்மா, இது? நம்ம புள்ளையப் பாத்து இப்பிடிக் கேக்குறே...

"ஆமா, புள்ளைய எதுக்கு இப்பவே எழுப்பி உக்கார வச்சிருக்கே... அது உக்காந்துகிட்டே தூங்குது பாரு... முன்னெல்லாம் ஞாயித்துக்கிழமைல நாம ரெண்டுபேருமே கூட மத்தியானம் வரைக்கும் தூங்கியிருக்கோம்..." என்றேன் பெருமூச்சுடன்.

"அதெல்லாம் அந்தக்காலம்... நீங்க நடக்கிற கதைக்கு வாங்க..." என்றாள்.

"அந்தக்காலம் இல்லம்மா... இப்பத்தான்  ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தின காலம்..." என்ற என்னை அவள் உறுத்துப் பார்க்க, "சரி... உனக்கு அது கடந்த காலம்... என்னைப் பொருத்தவரைக்கும் அது ஒரு பொற்காலம்... விடு... இப்ப என்னை எதுக்குக் கூப்ட்டே?" என்றேன்.

"உங்க பொண்ணுக்கு ரெண்டு வயசு முடிஞ்சு ரெண்டு வாரம் ஆகுது ஞாபகம் இருக்கா?" என்றாள். 

"ஏன்மா இல்லாம? பார்ட்டி ஹால் புக் பண்ணி, கேக் வெட்டி, விருந்து வச்சு,  வந்தவங்களுக்கெல்லம் கிஃப்ட் குடுத்து, ஒரு சின்னத் திருவிழா மாதிரி செலிபரேட் பண்ணோமே... காசு எத்தனை ஆயிரம் செலவாச்சு... அதுகூட மறக்குமா என்ன?"

"ஓ... சந்தடி சாக்குல செலவுக்கணக்குக் காட்டுறீங்களோ?" என்று கண்ணை உருட்டி  என்னைப் பார்த்து அவள் கடுப்படிக்க, "இல்லம்மா... இயல்பாச் சொன்னேன்..." என்று அசடு வழிந்தேன்.

"சரி, ரெண்டு வயசாச்சு...பொறந்தநாள் கொண்டாடியாச்சு. இனிமே, அடுத்தது என்னன்னு ஏதாவது யோசிச்சீங்களா? " என்றாள். 

"அடுத்து என்ன? ரெண்டு வயசு தானே... இருவத்திரண்டு இல்லையே... என்னத்துக்கு இப்படி காலங்காத்தால டென்ஷன் பண்றா?" என்று மனசுக்குள் எரிச்சல்பட்டுக் கொண்டிருக்கும்போதே,

ஓ...ஒருவேளை, அடுத்து இவளுக்குப் பொறந்தநாள் வருதோ??? கடவுளே பொறந்தநாள் கொண்டாடியே நான் 
போண்டியாயிடுவேன் போலயே...என்று நினைத்து என் பிபி எகிறத்தொடங்க, அதற்குள் சட்டென்று நினைவுக்கு வந்தது. 

இப்பத்தானே நவம்பர்ல, டொமினொஸ் பீசா, அதோட கேக், ஆரெம்கேவில பட்டுப்புடவை, அதுக்கு மேட்சா ஒரு ஜோடி கம்மல்னு, ரெண்டு மாசத்துக்கு முன்னால பிறந்தநாள் கொண்டாடி இருவத்தஞ்சாயிரம் செலவு வச்சா... அப்போ, அவ பொறந்தநாள் இல்லை என்று மனசை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

அதற்குள், "நீங்கல்லாம் படிச்சவர் தானே...?" என்று எதிர்பார்க்காத இன்னொரு கேள்வி வந்து விழுந்தது. 

"என்னம்மா இப்பிடிக் கேட்டுட்டே? என்னோட படிப்பையும் வேலையையும் பாத்துத்தானே உங்கப்பா உன்னை எனக்குக் கட்டிவச்சார்" என்று நான் பெருமிதமாய் எதிர்க்கேள்வியை எழுப்பினேன்.

"ஹூக்கும்...பெரிய்ய படிப்பு...ஒத்தப் பிள்ளைய வச்சுக்கிட்டு அடுத்து என்ன செய்யணும்ன்னு கேட்டா, ஏதோ என்ட்ரன்ஸ் எக்சாம்ல எக்குத்தப்பா கேள்வி கேட்ட மாதிரி முழிக்கிறீங்க... என்னத்தைப் படிச்சித் தொலைச்சீங்களோ..." என்று அவள் எகிற, 

என்னது, ஒத்தப் பிள்ளையா... ஓ... ஒருவேளை, அவ அப்டி வராளோ? இன்னொரு குழந்தை வேணும்னு நம்ம வாயால சொல்லணும்னு எதிர்பார்க்கிறாபோல... என்று நினைத்து உள்ளம் துள்ள, அடச்சே... உண்மையிலேயே நான் சரியான மக்குதான்... "செல்லம், இப்பத்தான்டா புரியுது எனக்கு... நம்ம அனுக்குட்டிக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வேணும்னு தானே நீ நினைக்கிறே?" என்று நான் வாயெல்லாம் பல்லாகிக் கேட்டேன்.

"ஓஹ்ஹோ... அப்படியொரு எண்ணம் வேற இருக்கா உங்களுக்கு? இருக்கிற ஒரு குழந்தைக்கே அடுத்து என்ன பண்ணனும்னு அறிவு இல்ல, இன்னொரு குழந்தை வேற கேக்குதோ?" என்று சின்னப் பத்திரகாளியாய் அவள் சீற,

"ஐயோ... அப்போ அதுவுமில்லையா? நான் அம்பேல்... என்னன்னு நீயே சொல்லிரு தாயி..." என்று நான் அலுத்துப்போய் சரண்டராக, கண்ணுக்கு முன்னால் ஒரு காகிதத்தை நீட்டினாள். 

"லிட்டில் பட்ஸ் ப்ளே ஸ்கூல்" என்று பெரிய எழுத்தில் அதன் தலைப்பைப் பார்த்ததும் புரிந்தது, இதற்குத்தான் இத்தனை களேபரம் என்று. "ஏம்மா, ரெண்டு வயசுக்குள்ள ஸ்கூல்ல சேர்க்கணுமா? நானெல்லாம் நாலு வயசிலதான் ஸ்கூலுக்குப் போனேன்... நீயெல்லாம் கிராமத்துல அதைவிட லேட்டாக்கூட சேர்ந்திருப்பே, அப்டித்தானே?" என்று அவளைக் கேட்டேன் 

"நீங்க படிச்சுக்கிழிச்ச பவிசு தான் அன்றாடம் கிழியுதே... இன்னும் எதுக்கு அதையே பேசிட்டிருக்கீங்க? என்றவள், இந்த ஸ்கூல்ல, அடுத்த வருஷ அட்மிஷனுக்கு இப்ப ரிசர்வேஷன் நடக்குதாம். அதுக்கு இன்னிக்கு அப்ளிக்கேஷன் தராங்களாம். போன வருஷம் ரெண்டே மணி நேரத்துல அப்ளிக்கேஷனெல்லாம் தீர்ந்து போயிருச்சாம். என்னோட ஃப்ரெண்டோட  பையன், வத்சனுக்கு சரியாப் பேசக்கூடத் தெரியாது. அந்த ஸ்கூல்ல சேர்த்த பிறகு இப்ப என்னாமாப் பேசறான் தெரியுமா?" என்றாள். 

 "சரிம்மா, அந்தப் பையனுக்கு பேசத்தெரியலை... அப்பாவும் அம்மாவும் வேலைக்கு வேற போறாங்க... கூட இருந்து பேச யாருமில்லே... ஆயாகிட்ட விடவும் அவங்களுக்கு விருப்பமில்லே. அதனால அங்கே அனுப்பியிருக்காங்க. 

நம்ம பொண்ணுக்குத்தான் வீட்ல நீ கூட இருக்கியே... அவளும் இப்பவே கிளிமாதிரி அழகா, சமயத்துல உன்னை மாதிரியும் சூப்பரா பேசறா...அவளுக்கு எதுக்கு ப்ளே ஸ்கூல்லாம்...? இன்னும் குறைஞ்சது ஒரு வருஷமாவது போகட்டும். அப்புறமா நேரடியா ஸ்கூலுக்கு அனுப்பலாம்" என்றேன்.

என்னைப் பார்த்து எரித்துவிடுபவள்போல முறைத்தவள்,  "சாரதாவோட குழந்தை மூணு வயசுலய உலக மேப்ல உள்ள அத்தனை நாடுகளையும் அதோட தலைநகரங்களையும் புட்டுப்புட்டு வைக்குது. ஜூலி அவ கொழந்தையை ஐ ஏ எஸ் ஆக்கணும்னு இப்பவே ஜெனரல் நாலட்ஜ் கோச்சிங் அனுப்பிட்டிருக்கா. நர்மதாவோட பையன் அபாக்கஸ் ட்ரெயினிங் போறான். நம்ம பொண்ணு மட்டும் இன்னும் எதையுமே கத்துக்காம மக்கு மாதிரி வளரணுமா என்ன?"

இல்லம்மா...நீ புரிஞ்சுக்காம பேசுறே. இப்படி ரெண்டே வயசுல பள்ளிக்கூடத்துக்குத் தள்ளிவிடறதாலயோ, சின்ன வயசுலயே தலைநகரங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கிறதாலயோ, திருக்குறளைத் தலைப்பாடமா ஒப்பிக்கிறதாலயோ அறிவு வளர்ந்துடாது. குழந்தைகளுக்கு இயல்பா எந்த விஷயத்துல ஆர்வம் இருக்குன்னு படிப்படியா தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்தமாதிரி நாம சப்போர்ட் பண்ணி வழிநடத்தினாலே போதும்.

இப்பல்லாம் தினசரி செய்திகளைப் பார்த்தாலே புரியும் உனக்கு. படிப்பு விஷயத்துல அப்பா அம்மாவோட அதீத வற்புறுத்தல், பள்ளிக்கூடத்துல சந்திக்கிற படிப்பு சம்பந்தமான பிரச்சனைகள் தாங்காம நிறையக் குழந்தைகள்  சின்ன வயசிலயே தற்கொலை வரைக்கும் போயிடறாங்க. பள்ளிக்கூடப் படிப்பும் அதுல வாங்குற மதிப்பெண்களுமே முக்கியம்ங்கற நம்ம மனநிலை மாறணும். படிப்பு விஷயத்துல பிள்ளைகளை அடக்கியாளணும், அவங்களை நாம விரும்பின துறைல உக்காரவச்சிடணும்னு நினைக்கக்கூடாது"

நின்று, நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவள், சில வினாடிகள் மௌனமாய் என்னைப் பார்த்துவிட்டு உள்ளே போனாள். அப்பாடா, ஒருவழியா நாம சொன்னதை உணர்ந்து ஒத்துக்கிட்டா போலிருக்குது.  நம்ம பிள்ளையை 'ப்ளே ஸ்கூல்'ல இருந்து காப்பத்தியாச்சு என்ற சந்தோஷத்துடன், மகளின் அருகே போய் அவளைத் தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டேன்.

அதற்குள் உள்ளேயிருந்து திரும்பி வந்தவள், "இந்தக் கவர்ல ப்ரெட் சாண்ட்விச் இருக்கு. சட்டுன்னு சட்டையைப் போட்டுக்கிட்டுப்போயி, பத்து மணிக்கு ஸ்கூலோட ஆஃபீஸ் திறந்ததும் அப்ளிக்கேஷனை வாங்குங்க..." என்றாள்

"ஜானு, நான் இன்னும் குளிக்கக்கூட இல்லம்மா. அதுக்குள்ள என்ன அவசரம்...குளிச்சிட்டுக் கிளம்புறேன்..." என்றவனிடம்

"குளிச்சு, அலங்கரிச்சு, ஆடி அசைஞ்சு போயி, அப்ளிக்கேஷன் முடிஞ்சுபோச்சுன்னு வாங்காம மட்டும் வந்தீங்கன்னா அப்புறம்... " என்று அவள் வாக்கியத்தை உக்கிரமாக உச்சரித்து முடிப்பதற்குள் நான் வாசல் கேட்டில் இருந்தேன். என்னுடைய ஞாயிற்றுக்கிழமை ப்ரேக்ஃபாஸ்ட்  என் கையில் இருந்தது.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

யார் அம்மா?

"அம்மா....இவளப் பாரும்மா...கலரிங் புக்கைக் குடுக்கமாட்டேங்கறா..."என்று கத்தினான் சின்னவன் சதீஷ்

"அடியேய், உனக்கும் அவனுக்கும் அஞ்சு வயசு வித்தியாசம்டி, அவன்கிட்ட போயி மல்லுக்கட்டறியே என்றாள் கோமதி", பன்னிரண்டு வயதான சாருவின் அம்மா.

"அஞ்சு வயசு வித்தியாசம்...அதுக்கு நான் என்னம்மா பண்ணட்டும்? அஞ்சு வயசு சின்னவங்கிறதுக்காக இந்தப் பையன் பண்ற தொல்லையெல்லாம் தாங்கிக்கணுமா நான்?" என்று அழத் தயாரானாள் சாரு.

"அதென்னடி, இந்தப்பையன், அந்தப்பையன்னு பேசறே... அவன் உன் தம்பிடீ..." என்றவளிடம்,

"இதையே திருப்பி அவனுக்கும் சொல்லிக்குடும்மா... அவ உன்னோட அக்காடா..."ன்னு என்றாள் சாரு.

"அவனுக்கும் உன்னோட வயசு வந்தா அவனும் புரிஞ்சுக்குவான். கொஞ்சநாள் பொறுத்துக்கோடீ..."

"ஓ...அவனுக்கும் என்னோட வயசு வரணும்னா இன்னும் அஞ்சு வருஷம்...அதுவரைக்கும் இந்தக் கழுதை பண்ணுறதையெல்லாம் நான் தாங்கிக்கணும். ஆனா, அப்பவும் அவன் என்னோட அஞ்சு வயசு சின்னவனா தானே இருப்பான். அதுமட்டுமில்லாம, இதே வசனத்தை நீயும் மறக்கமாட்டியே..." என்று சாரு பதில் சொல்ல, அவளிடம்

"பெரிய பொண்னுன்னா கொஞ்சம் பொறுத்துத்தான் போகணும்டா குட்டி" என்றாள் கோமதி.

"ஆமாம்மா, நீ பெரியவ... நீ பெரியவன்னு சொல்லியே என்னோட சின்னவயசு  ஆசையெல்லாம் மழுங்கடிச்சிட்டே... ஏம்மா நீ என்ன மொதல்ல பெத்தே?  இவன் பொறந்த அன்னிலேருந்து நான் நானா இல்லை... அவனுக்கு அக்காவாதான் இருக்கேன்.

அவன் பொறந்ததுலே இருந்து, ஒரு அஞ்சு வயசுப் பொண்ணுக்குரிய என்னோட எதிர்பார்ப்புகளை நீங்க யாரும் புரிஞ்சுக்கலை. ஆனா, ஒரு அக்காவா, மூத்த பொண்ணா உங்க எதிர்பார்ப்புகளைத்தான் நான் நிறைவேத்தியிருக்கேன்.

அவனைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிட்டுப் போணும். பஸ்ல இருந்து இறக்கி வகுப்புல கொண்டு விடணும்.  பஸ்ல போகும்போது தூங்கிட்டா எழுப்பி விடணும். வாந்தி எடுத்தா துடைச்சு விடணும். லஞ்ச் டைம்ல, அவனைச் சாப்பிட வைக்கணும். அவன் க்ளாஸில எதையாச்சு தொலைச்சிட்டா தேடிக் குடுக்கணும். இவன் கூட யாராச்சும் சண்டை போட்டா விலக்கி விடணும். திரும்பி வரும்போது பஸ்ஸுக்கு வராம விளையாடிட்டு இருக்கிறவனைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து பஸ்ல உக்கார வைக்கணும். ஆக, இவனையே கவனிச்சு கவனிச்சு, எனக்கு என்னோட வேலையைக் கூடக் கவனிக்கமுடியாமப் போகுது"  என்று சாரு அடுக்கிக்கொண்டே போக,

"ஏய், என்ன இது... கொஞ்சம் விட்டா பெரியமனுஷி மாதிரி பேசிட்டே போறே..." என்றாள் கோமதி.

"ம்ம்...ஆமாம்மா...பெரியவ மாதிரி நடந்துக்கணும்...ஆனா, பேசக்கூடாது...அப்டித்தானே?

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. நான் நாலாவது படிச்சப்ப அரைப் பரிட்சையில கணக்குல கம்மி மார்க்ன்னு என்னைக் கரண்டிக் கணையால அடிச்சே ஞாபகம் இருக்கா? உனக்கு எங்கே இருக்கப்போகுது... இன்னமும் பாரு... அந்தத் தழும்பு என் கால்லயும் மனசுலயும் அப்டியே இருக்கு. ஆனா, அந்தப் பரிட்சைக்கு முந்தினநாள் என்ன நடந்திச்சுன்னு ஞாபகம் இருக்கா? இருக்காது உனக்கு.

அன்னிக்கி இந்தப் பையன், அதான் உன்னோட அருமை மகன், அப்பாவோட சைக்கிள்ல ஏறி, கீழே விடுந்து அடிபட்டுக்கிட்டான். அவனைத் தூக்கிட்டு நீங்கல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஓடுனீங்க... என்னை அடுத்த வீட்டுல விட்டுட்டு... நான் அங்கேயிருந்து அழுது அழுது எதுவுமே படிக்கல. ஸோ, நான் குறைஞ்ச மார்க் வாங்கக் காரணம் நீங்க... ஆனா, அடி வாங்கினது நான். 

இது மட்டுமா, இன்னும் பாட்டி வீட்டுக்குப் போனப்ப அவன் பைப் தொட்டியில விழுந்து அடிபட்டுக்கிட்டான். ஓடிவந்த நீ, அப்பவும் என்னைத்தான் திட்டினே... நான் ஏன் அவனைக் கவனிச்சுக்கலேன்னு...

நீயே நினைச்சுப் பாரும்மா. நான் சின்னவளா இருந்தப்ப எனக்கு அம்மாவா இருந்த மாதிரி, தம்பிக்கும் நீதானே அம்மா? அப்போ, நீ ஏன் அவனை கவனிச்சுக்கக்கூடாது? உன்னோட பொறுப்பையெல்லாம் என் மேல இறக்கி வச்சிட்டமாதிரி, அவனை  நான் ஏன் கவனிச்சுக்கணும்?  அவன் செய்யிறதெல்லாம் நான் ஏன் பொறுத்துக்கணும்? அவனால நான் ஏன் திட்டும் அடியும் வாங்கி அழணும்?

போனவாரம் கூட இப்படித்தான்... என்று அவள் இன்னொரு சம்பவத்துக்கு  நீதி கேட்க ஆயத்தமாக, அவளை ஓடிச்சென்று இறுக அணைத்துக்கொண்டாள் கோமதி. அம்மாவின் அணைப்பில் குலுங்கிக்குலுங்கி அழுதுவிட்டாள் குழந்தை.

 அழுகிற அந்தக் குழந்தையின் உடல் குலுங்கக் குலுங்க, கோமதியின் மனசில் குற்றவுணர்ச்சி பெருக்கெடுத்தது. சின்னச் சின்ன விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியம், இந்தக் குழந்தையின் மனசில் எத்தனை பரிதவிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று நினைக்கையில் அவளுக்கு உடம்பு நடுங்கியது.

மகளின் மனபாரத்தைக் குறைப்பதற்கான முதல் முயற்சியாக, "அம்மாவை மன்னிச்சுக்கடா குட்டி" என்று சொல்லி, அழுகிற மகளின் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டாள்.  இனி, அவனுக்கும் அம்மாவா உங்க ரெண்டு பேரையும் நானே கவனிச்சிக்கிறேன் என்று சொன்னபோது, அவள் கண்களும் நிறைந்திருந்தது.

                                                          *******


வெள்ளி, 6 ஜூன், 2014

ஆடி அழைப்பு!

போனவருஷம் ஆனிமாதம் கடைசீ முகூர்த்தத்துல, திருவளர்ச்செல்வி அகிலாவுக்கும் திருவளர்ச்செல்வன் தினகரனுக்கும் கல்யாணம், அதாங்க எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும். கல்யாணமான மூணாவது நாள் மறுவீட்டுக்குப் போயிட்டு அதே நாள் திரும்பி வந்தா, அஞ்சாவது நாள் காலையில அப்பாவும் அம்மாவும் என் புகுந்த வீட்டுக்கு வந்து நிக்கிறாங்க. ஓடிப்போயி அம்மாவைக் கட்டிக்கிட்டேன்.

அவங்க வந்த விஷயம் என்னன்னு பாத்தா, "நாளைக்கு ஆடி பிறக்குது சம்பந்தி... முன்னமாதிரி இப்பல்லாம் ஒரு மாசம் பிரிச்சு வைக்கிறது சாத்தியமில்லேன்னாலும் சாஸ்திரத்துக்கு ஒரு வாரமோ இல்ல நாலஞ்சு  நாளாவது பிரிச்சு வைக்கணும்னு எங்கம்மா அபிப்ராயப்படுறாங்க..." என்று அவங்கம்மாவை நடுவில் நிறுத்தி, அப்பா என் மாமனாரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் "அதுக்கென்ன சம்பந்தி...உங்க பொண்ணு, உங்க வீட்டுல இருந்துட்டு வரதுல என்ன தப்பு? அதுவுமில்லாம பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரி... அதுக்கெல்லாம் ஒரு காரண காரியம் இருக்கும் என்று ஆமோதித்தார்.

ஆஹா, இதுதானா விஷயம்? ஆனா, நம்ம ஆத்துக்காரர் இதுக்கு அக்செப்ட் பண்ணமாட்டாரேன்னு நினைச்சிக்கிட்டு அவரைப் பாத்தா, அவரும் மாமனார் சொன்னா மறுவார்த்தை கிடையாதுங்கிறமாதிரி  சந்தோஷமாத்தான் தலையாட்டிட்டு இருந்தாரு. "என்னடா இது? அஞ்சே நாளுக்குள்ள மனுஷன் ரங்கமணீ என்ஜாய்னு என்னை விட்டுட்டு சந்தோசமா இருக்க ப்ளான் பண்ணுறாரோன்னு சந்தேகத்தோட பாத்தா, அந்தநேரம் பாத்து அவரும் என்னைப் பார்த்துட்டு, சட்டுன்னு "அச்சச்சோ...நான் எப்படி சமாளிப்பேன்..."என்கிற தோரணையில் முகத்தை மாற்றி வைத்துக்கொண்டார்.

ஆஹா, இந்தக் கூட்டணியை உடைச்சு, ஆடித் தீர்மானத்தைத் தோற்கடிக்கணுமே என்ற திட்டம் மனசில் எழ, என் மாமனார் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசியே தீரணும் என்ற திட சித்தம் கொண்ட என் மாமியாரை  எங்கே என்று தேடின என் கண்கள். அத்தை அப்போ தான் குளிச்சுமுடிச்சு குங்குமமும் மஞ்சளுமா வந்து நின்னங்க. "வாங்க அண்ணி, உங்களை இப்படிப் பார்த்தா, அப்படியே சாட்சாத் அம்பாளைப் பாக்கிற மாதிரியே இருக்குன்னு..." எங்க அம்மா சொல்ல, அத்தை அப்படியே 'அவுட்' ஆனது அப்பட்டமாய்த் தெரிஞ்சது. "ஆஹா, அம்மா கவுத்திட்டியே..." என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அத்தை உட்பட அத்தனைபேருமாய்ச் சேர்ந்து ஆடித் தீர்மானத்தைக் கூடி நிறைவேற்றியிருந்தார்கள்.

வேறு வழியில்லை... நாளைக்குப் புறப்பட்டுத்தான் ஆகவேண்டும். என்னதான் சொல்லுங்க, கல்யாணமான உடனே பொண்ணுங்களுக்கு புருஷன் மேல அதீதப் பாசம் வந்துருது. அம்மா வீட்டுக்குப் போகணும்னு ஆசை இருந்தாலும்கூட அங்கயும் அவர் கூட இருந்தால் நல்லாருக்கும்னு தோணுது. 

அடுப்படியில் இருந்த என்கிட்ட இவர், "அம்மு, நீ உன்னோட ட்ரெஸ் எல்லாம் எடுத்து தயாரா வச்சுக்கோ... நளைக்குக் கிளம்பணும்ல" என்று சொல்ல, மனுஷன் என்னைத் தள்ளிவிடுறதுல எவ்வளவு குறியா இருக்காரு பாரு...ஒருவேளை, நாலஞ்சு நாள்ன்னு சொன்னது இவருக்கு நாலஞ்சு வாரம்னு புரிஞ்சிருச்சோ? என்று மனக்குரல் எச்சரிக்க, "நாலே நாள் தானேங்க... அங்கயே தேவையானதெல்லாம் இருக்கு" என்றேன் நான். 

"ஓ...அப்போ சரி" என்றவரைப் பார்த்தால், இவருக்கு என்னை அணுப்பணுமேன்னு கொஞ்சம் கூட வருத்தம் இருக்கிறமாதிரி தெரியலை...ஒருவேளை அவங்க அப்பா அம்மாவோட கண்டிப்புக்காகத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ? என்ற ரீதியில் ஒரு பார்வையை வீச,அதைக் கரெக்டாப் புரிஞ்சுகிட்ட அவர், "நாலஞ்சு நாள்தானேம்மா... உன்னைக் கொண்டு விட்டுட்டு நான் வந்துருவேன். அப்புறம் இடையில ரெண்டே நாள். மூணாவதுநாள் நான் திரும்பவும் கூப்பிட வரப்போறேன். அதுக்கெதுக்குக் கவலைப்படுறே?" என்று அவர் கெஞ்சலாய்ச் சொல்லவும், "சேச்சே, எங்க வீட்டுக்குப் போறதுல எனக்கு என்ன வருத்தம்...உங்களை நினைச்சாத்தான்..."என்று கீழே விழுந்தாலும் மூக்கில மண் ஒட்டாத பாவனையில் சமாளித்தேன். 

மறுநாள், காலையில சாப்பிட்ட கையோடு கிளம்பினோம். பைக்கில ஏறிப் புடவைத் தலைப்பை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவர் தோளையும் பிடித்துக்கொண்டு பிரயாணிக்கையில், மனசுக்குள்ள திக்குதிக்குனு இருந்திச்சு. இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போயிட்டிருக்கக்கூடாதான்னு நினைக்கிறதுக்குள்ள, திடுக்குன்னு அம்மாவீடு வந்திருச்சு. உள்ளபோயி கொஞ்சநேரம் சம்பிரதாயமாப் பேசிட்டிருந்துட்டு, மதியம் விருந்தைச் சாப்பிட்ட கையோடு இவர் கிளம்ப எத்தனிக்க, எனக்குக் கண்ணீர் குளம்கட்ட ஆரம்பித்தது.  தொண்டைக்குள்ள  வேற, என்னவோ அடைச்ச மாதிரி வலிக்குது. ஆனாலும், அதை அடக்கு அடக்குன்னு அடிமனசு சொல்லவே அழுத்தமா முகத்த வச்சுக்கிட்டேன்.

அவர் என்னன்னா போருக்குப் புறப்பட்ட கட்டபொம்மன் ஜக்கம்மா கிட்ட சொன்ன கணக்கா, போயிட்டு வரேன் அம்மு, ரெண்டுநாள்ல வரேன்" என்று சொல்லிட்டுக் கிளம்பினார். நானும் அவரோட வாசல் வரைக்குக் கூடப்போனேன். அழுகை அழுகையா வந்தாலும், அழுகைக்குள் அலட்சியத்தை நுழைத்துச் சிரிக்கிறமாதிரி சிரித்து, "ஆல் த பெஸ்ட்" என்று  அவரைப் பார்த்துச் சொன்னேன். அதை என் முகம் எப்படிப் பிரதிபலிச்சுதோ தெரியலை, "என்ன ஆச்சு உனக்கு? முகமே சரியில்லை...எதுக்கும் டாக்டரைப் பாத்து சைனஸ் இருக்கானு செக் பண்ணிட்டு வந்துரு..." என்று சொல்ல, எனக்கு என் மண்டையைக் கொண்டுபோயி மாடிப் படிக்கட்டுல முட்டிக்கலாம் போல இருந்திச்சு. ஆனாலும், மௌனமாத் தலையாட்டிக்கிட்டேன்.

ஆனாலும் இவருக்கு எவ்வளவு கல் மனசு? ஒருவேளை, இந்த ஆம்பளைங்களோ இப்படித்தானோ? என்று அலுத்துக்கொண்டபடி வீட்டுக்குள் நுழைய, "என்ன அகிலாக்குட்டி, ஒரு மாசம்கூட ஆகல அதுக்குள்ள வீட்டுக்காரனை விட்டுப் பிரியமுடியலை போலிருக்குதே..." என்று பாட்டி  என் வாயைப் பிடுங்க, "அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி, புறப்படும்போதே  கொஞ்சம் தலைவலி என்று சொல்லிவிட்டு அருகில் உட்கார்ந்தேன். 

ம்ம்... நீ சொல்லலேன்னாலும் உன் முகம்தான் முழுசையும் சொல்லுதே... கல்யாணமான கொஞ்சநாள்ல கட்டிக்கிட்டவனைப் பிரியிறது கஷ்டமாத்தான் இருக்கும். அந்தக் காலத்துலல்லாம் ஆடியில பிரிச்சு வைக்கிறதுக்கு ஆளுக்கொரு காரணம் சொல்லுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரே காரணம்தான். பிரிச்சு வைக்கையில் பிரியம் கூடும். 

அதுமட்டுமில்லாம ஆடிமாசம் அம்மனோட மாசம். ஒரு குடும்பத்தில பொறக்குற ஒவ்வொரு பொண்ணும் அந்த சக்தியோட அம்சம். அவளை ஆடியில அழைச்சு அவளுக்கு சீர்செய்து சந்தோஷப்படுத்துறது அந்தப் பராசக்தியையே சந்தோஷப்படுத்துறது மாதிரி... அதுமட்டுமில்லாம பொண்களை மதிக்கணும்னு வாயால சொல்லி, வார்த்தைகளால எழுதினாமட்டும் பத்தாது, இதமாதிரி வீட்டில இருந்தே சொல்லிக்கொடுக்கணும். 

ஆடிமாசம் பொறந்தா அண்ணன், தம்பிகள் அவங்க கூடப்பிறந்தவளுக்குப் பச்சைப்புடவை குடுக்கணும், மஞ்சள் புடவை குடுக்கணும்னு புரளி பரப்பி விடறாங்களே அதெல்லாம் இந்தமாதிரி விஷயங்களை மனசுல வச்சுத்தான். அதனாலதான் நானும், உங்க அப்பா கிட்ட சொல்லி உன்னை ஒண்ணுரெண்டு நாளாவது வந்து இருக்கட்டும்னு அழைச்சிட்டு வரச்சொன்னேன் என்று என் தலையை ஆதுரமாய் வருடியபடி பாட்டி சொல்லிவிட்டு,"சரி கண்ணு...தலை வலிக்குதுன்னு சொன்னேல்ல, நீ போயி கொஞ்சநேரம் படுத்துக்கோ" என்று சொல்ல, எழுந்து அறைக்குள்போய்க் கட்டிலில் விழுந்தேன். 

இப்ப அவர் எங்க போயிருப்பார்? வீட்டுக்குப் போயிருப்பாரா, இல்லே வழியில இருப்பாரா? ஃபோன் போட்டுக் கேட்டுப் பாப்போமா என்ற நினைப்பு வர, "அடங்குடி அகிலா, முதல்ல அவரு பத்திரமா பைக்க ஓட்டிக்கிட்டு வீடுபோய்ச் சேரட்டும் என்று எச்சரித்தது மனக்குரல். அப்படியே கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அதில இருந்த அவரோட ஒவ்வொரு பழைய மெசேஜையும் படிச்சுப் பாத்து மனசு நெகிழ, அதற்குள் கையிலிருந்த ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது. 

நான் எதிர்பார்த்தமாதிரி, அவரே தான்...ஆனாலும் உடனே எடுக்காதே, நாமளும் பிசியாத்தான் இருக்கோம்னு காட்டிக்கவேண்டாமா என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்ல, ஏழெட்டு ரிங் போனதும் எடுத்து, "சொல்லுங்கங்க, வீட்டுக்குப் போயிட்டீங்களா? என்றேன். 

"ம்ம்...வந்துட்டேன் அம்மு. ஆனா, உன்னை அங்கே விட்டுட்டு வரும்போதுகூட எனக்கு ஒண்ணும் தெரியல. ஆனா, இங்க வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சா, ஒவ்வொரு இடத்துலயும் நீதான் தெரியிற. எனக்கு நம்ம ரூம்க்குள்ள இருக்கவே முடியல தெரியுமா? அழகா விரிச்சிருக்கிற படுக்கை, அடுக்கி வச்சிருக்கிற துணிகள், பளிச்சுன்னு சுத்தமா இருக்கிற மேஜைன்னு எதைப் பாத்தாலும் உன்னோட ஞாபகம்தான் வருது. 

ஏதோ தொண்டைக்குள்ள கல்லைப் போட்டுக்கிட்டமாதிரி, நெஞ்சுக்குள்ள அடைக்குது. நீ என்னன்னா, கூலா, போயிட்டு வாங்க, பெஸ்ட் ஆஃப் லக்னு சொல்லி வழியனுப்புறே. ஆனாலும் பொண்ணுங்க மனசு கல்லுதான் போல... என்று எதிர்முனையில் அவர் புலம்ப, "ஆஹா...நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று கத்தவேண்டும்போலிருந்தது எனக்கு. ஆனாலும், ஒரு ஓரத்துல, இவர் உண்மையாத்தான் சொல்றாரா? என்ற பொண்ணுங்களுக்கே உரிய சந்தேகமும் எழாமல் இல்லை.

சரி சரி, மூணு நாள் தானே, சமாளிச்சுக்கங்க...என்று என் பங்குக்கு அவர் வீசிய ஈட்டியையே திருப்பி எடுத்து வீச, "இல்லம்மா, என்னால முடியாது... என்னதான் அப்பா அம்மா கூட இருந்தாலும் நீ இல்லாதது வீடே வெறுமையாத் தெரியிது. இன்னிக்கி மட்டும் சமாளிச்சுக்கிறேன். நாளைக்குக் காலையில நீ கிளம்பிரு. ஆடியும் போதும் அவங்க சம்பிரதாயமும் போதும்" என்று அவர் சொல்ல, மனசுக்குள் ஒரு இனம்புரியாத கர்வம் எட்டிப்பார்த்தது. அத்தோடு, அவரை நினைக்கப் பாவமாவும் இருந்தது. 

இப்படிப்பட்ட ஒரு தேடலைக் கணவன் மனைவிக்குள் உண்டாக்குவதற்காகத்தான் இதுமாதிரிப் பிரித்துவைக்கிற சம்பிரதாயத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் என்று பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. ஒன்றிரண்டு நாளுக்கே இப்படியென்றால் முன்னை மாதிரி ஒருமாசம் பிரித்துவைத்தால், ஐயோ முடியவே முடியாது என்ற எண்ணத்துடன்,"சரி...சரி, அவசரப் படாதீங்க, நாளைக்குக் காலையில ஆஃபீஸ் போனீங்கன்னா நாள் முழுக்க ஓடிப்போயிரும். அப்புறம் நாளை மறுநாள் ஒரேநாள். அதுக்கடுத்தநாள் நீங்களே இங்க வரப்போறீங்க. வரும்போது உங்களுக்காக, உங்களுக்குப் பிடிச்ச ஒரு பரிசோட காத்திருப்பேன், சரியா? என்று நான் சொல்ல, அவர் அது என்னவென்று கேட்டு என்னை நச்சரிக்க, அப்புறம் என்ன, அந்த அஞ்சாறு நாளும் ஏர்டெல்லுக்கு எங்களால் நிறைய்ய வருமானம்!

                         ******

திங்கள், 24 மார்ச், 2014

சோறென்று சொன்னால் கேவலமா?

சில வருடங்களுக்குமுன், பழைய காகிதங்களைப் புரட்டிக்கொண்டிருந்த என் மகள், அம்மா, 'late' என்கிற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்னம்மா? என்றாள். தாமதம், அல்லது காலம் தாழ்த்தி என்று பொருள் கொள்ளலாமென்று செய்துகொண்டிருந்த வேலைகளுக்கிடையே சொல்லிவிட்டு மறந்துபோனேன். 

மறுநாள், பத்திரிகையில் நினைவு அஞ்சலியில் இருந்த ஒருத்தரைப் பார்த்து இவர் ''காலதாமதமான தாத்தாவா அம்மா?'' என்றாள். சட்டென்று எனக்கு எதுவும் விளங்கவில்லை. "அட, ட்யூப்லைட்  அம்மா, 'லேட்' ன்னா காலந்தாழ்த்தி, அல்லது தாமதம்ன்னு நேத்து நீங்கதானே சொன்னீங்க? என்றாள். 

முந்தினநாள் அவள் கேட்டது கல்யாணப்பத்திரிகையொன்றில் மணமகனின் தந்தை பெயருக்கு முன்னாலிருந்த 'லேட்' என்ற சொல்லைப் பார்த்து என்பது அப்புறம்தான் தெரிந்தது. "அட, அதைக் கேக்கிறியா? அந்த இடங்களில் 'லேட்' என்கிற வார்த்தை 'காலமான, இறந்துபோன' என்ற பொருளில் 'மங்கலமான' வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலப் பயன்பாட்டை அப்படியே பற்றிக்கொள்வதில் நம் மக்களுக்கு அலாதி ஈடுபாடு உண்டு. அப்படி வந்ததுதான் இதுவும்..." என்று விளக்கிச்சொன்னேன். 

இறந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படும் late மாதிரியே 'லேட்' என்கிற ஆங்கிலச்சொல்லுக்கான நேரடித் தமிழ் வார்த்தைகளும் பேச்சுவழக்கில் இறந்துபோனதாகத்தான் தோன்றியது எனக்கு. 
காலந்தாழ்த்தி, தாமதமாக எனும் வார்த்தைகள் உரைநடையில் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதோடு சரி. மற்றபடி, பல்லில்லாத பாட்டி முதல் பள்ளிக்கூடம் போகாத குழந்தை வரை எல்லாருக்குமே தாமதமாகிவிட்டது என்பதெல்லாம் மறந்துபோய் , 'லேட்டாயிருச்சு' என்று சொல்வதே லேட்டஸ்ட் ஃபாஷனாகி விட்டது. 

அப்டின்னா, இறந்தவர் என்பதைக் குறிப்பிடத் தமிழில் வார்த்தைகளே இல்லையா? என்றாள் மகள் மறுபடியும். ''ஏன் இல்லை? இருக்குதே... 'மறைந்த, காலமான, இறைவனடி சேர்ந்த' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்றேன்.'' அப்போ, இருக்கிற எத்தனையோ வார்த்தைகளை விட்டுவிட்டு எங்கிருந்தோ வந்த வார்த்தைகளைப் பிடிச்சு வச்சிருக்கோம் என்று சொல்லிச் சிரித்தாள் அவள். 

அவள் சிரிக்கையில், இந்த ஒருவார்த்தைக்கு மட்டுமா இந்த நிலைமை என்று நினைத்து எனக்கு மனசு வலித்தது, காலமாகிப்போன இன்னும் பல தமிழ் வார்த்தைகளை நினைத்து.

'late' மாதிரியே மிகச் சாதாரணமாகப் புழங்கப்படுகிற இன்னொரு வார்த்தை 'rice' செந்தமிழ்ச் சொல்லான சோறு என்பதைச் சொல்லவே சங்கடப்படுகிறது நம் நாகரீகத் தமிழ் மக்கள்கூட்டம். நினைக்கவே கஷ்டமாயிருக்கிற விஷயம் என்னன்னா, "சோழநாடு சோறுடைத்து" என்று பாடப்பட்ட பகுதியில்கூட "meals ready" போர்டுகளும், 'ரைஸ் வைக்கட்டுமா?' என்ற வார்த்தைகளையும், 'சாதம் போடவா?' என்ற கேள்விகளையும்தான் கேட்கமுடிகிறதே தவிர "இன்னுங் கொஞ்சம் சோறு போட்டுக்கோ..." என்று சொல்கிற வழக்கம் அனேகமாக மறைந்துவருகிறது. மொத்தத்தில், சோறும் "late சோறு" ஆகிவிட்டதென்று தோன்றுகிறது.


ஆங்கிலத்தில், ரைஸ் (rice) என்றால் அரிசி. வெறும் வேகாத அரிசி. Cooked rice, Steamed rice என்றால் அது வேகவைத்துச் சமைக்கப்பட்ட சோறு. இதை விட்டு, எல்லாமே ரைஸ் ஆகிப்போனது இன்று. வெந்ததுக்கும் வேகாததுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நம் தமிழ்மக்கள் என்று நினைக்கையில் வருத்தம்தான் வருகிறது. இனி, யாராவது ரைஸ் போடவா என்று கேட்டால், அவர்களிடம் எங்கே அரிசி போடணும், எங்கே சோறு போடணும் என்று கேள்வி கேட்டுக் கொஞ்சம் அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும் என்று ஆத்திரம்தான் வருகிறது.

ஆனால், மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் கொடுக்கிற விஷயம், தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோறு என்கிற சொல் இன்னும் மறக்காமல் உபயோகிக்கப்படுகிறது என்பதுதான். ஆனால், அதுவும் இந்தத் தலைமுறை தாண்டினால் இருக்குமா என்பது சந்தேகம்தான். 

அம்மா அப்பா என்று சொல்வதையே அகற்றி, மம்மி டாடியாக்கிவிட்ட தமிழகத்துக்கு, அவர்களுடைய முக்கிய உணவான சோற்றின் பெயர் மறந்துபோனதோ மறைந்து போவதோ ஒண்ணும் பெரிய விஷயமாயிருக்காது.

ஞாயிறு, 2 மார்ச், 2014

காதல் தமிழ்

ஒரு குடும்பக் காட்சி...வேலைக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் கணவனை எண்ணிக் கலங்குகிறாள் ஒரு கிராமத்துப்பெண்.

"கல்யாணம் கழிஞ்ச இருபதாவது நாள் வேலைக்காக வெளிநாட்டுக்குப் போனாங்க. ரெண்டு வருஷத்துக்கப்புறம் ஒருமாசம் லீவுல வந்தாங்க. வந்தநாள் தொடங்கி இன்னிக்கி இருவத்தாறு நாள் ஆச்சு. இன்னும் ரெண்டு மூணு நாள்ல திரும்பவும் பிரயாணம். இடையிலஇவங்க வர நாளைக் கணக்குவச்சிஅக்கா பொண்ணுக்குக் கல்யாணம்தம்பி மகனுக்குக் காதுகுத்து,இன்னும் எங்க அத்தை வேண்டிக்கிட்ட கோயிலுக்கெல்லாம் வழிபாடுபிரயாணம்இன்னும் விருந்து விசேஷமுன்னு போனதுல அவுகளோட உக்காந்து பேச எனக்கு ஒருமணி நேரம் சேர்ந்தாப்பல கிடைக்கல.

இதுலஇனி அவுக கிளம்புறதுக்கு முன்னாடி பண்டம் பலகாரம் செய்யவும்சேகரிச்சுக் குடுக்கவேண்டிய மருந்துமசாலாப்பொடியெல்லாம் தயார் பண்ணவும் ரெண்டு நாளும் போயிரும். நேத்து மெதுவா, "ஏங்கஇன்னும் ஒரு வாரம் இருந்துட்டுப் போகக்கூடாதா...ன்னு கேட்டா, "கிறுக்குக் கழுதமுட்டாத்தனமாப் பேசாத...இப்பவே நாலு காசு சம்பாதிச்சாத்தானே நாளைக்கு கௌரவமா வாழமுடியும். அதனால, வேலைதான் முக்கியம்"னு எனக்கு உபதேசம் பண்றாக.

"இருக்கட்டும்...இங்க ஒருத்தி நம்மளையே உசிரா நெனைச்சிக்கிட்டு இருக்காளேன்னு கொஞ்சமும் கரிசனமோபிரியமோ இல்லாம அவுக வேலைதான் முக்கியம்னா அவங்க பத்திரமாப் போயிட்டுவரட்டும். பைத்தியக்காரி எம்மேலயும்என் மனசு மேலயும் அக்கறையே இல்லாத அவங்க அறிவாளின்னாஅவுகளையே நினைச்சிட்டு இருக்கிற நான் முட்டாளாவே இருந்துட்டுப்போறேன்..." என்று அழுகை முட்டிக்கொண்டுவரஅதை அடக்கத் தவிக்கிறாள் அன்னலட்சுமி.

இன்றைக்கு நாம் பார்க்கிற அன்னலட்சுமிக்கும், அன்றைய குறுந்தொகைத் தலைவிக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே பாருங்கள்...

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து    
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,    
உரவோர் உரவோர் ஆக!   
மடவம் ஆகமடந்தைநாமே!

"பொருள்தான் முக்கியமென்று அருளும் அன்பும் இன்றி என்னைப் பிரிந்து செல்லும் என் தலைவன் அறிவுடையவன் என்றால் அவனைப் பிரியமுடியாமல் தவிக்கிற நான் அறிவிலியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று தலைவனின் பிரிவுபற்றி அறிவுறுத்துகிற தோழியிடம் புலம்புகிறாள் நம் சங்க காலத் தலைவி.
இது கோப்பெருஞ்சோழன் இயற்றிய குறுந்தொகைப் பாடல் காட்சி.

காலம் மாறியிருக்கலாம்,காட்சிகள் மாறியிருக்கலாம்,வாழ்க்கையும் வசதிகளும் மாறியிருக்கலாம். ஆனால்,காதலும் அன்பும் காலங்காலமாய் என்றைக்கும் அதேபோலத்தான் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. இன்றைக்கும் மனிதனை மனிதனாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இது இன்னோர் குடும்பக் காட்சி.

பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து சென்றுவிட்டான் தலைவன். கண்கள் நீரணியக் கலங்கித் தவிக்கிற தலைவியைக் காணப் பொறுக்கவில்லை தோழிக்கு. தலைவியாகிய உன்னை இவ்வாறு தவிக்க விட்டுவிட்டுஇத்தனை காலம் பிரிந்திருத்தல் பொறுப்புள்ள தலைவனுக்கு அழகோஎன்று அவனைப் பழித்துரைக்கிறாள் தோழி. அதைக்கேட்ட தலைவி முன்னிலும் வருத்தமுற்று அழுகிறாள்.  "பொருள்தேடிப் பிரிந்து சென்ற என் தலைவனின் பிரிவைக்கூட கண்ணீருடன் நான் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால்நீ உன் வாயால் தலைவனைப் பழித்துரைக்கிற வார்த்தைகள்தான் என்னை மிகவும் வருத்தமுறச் செய்கின்றன" என்று.

"நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்த நங்காதலர்
அமைவில ராகுதல் நோமென் நெஞ்சே."

இமைகளைச் சுடும்படி கண்ணீர் பெருகிவரப் பிரிவினால் தவிப்பதைக் காட்டிலும்தோழியின் பழித்துரைக்கும் சொற்கள் ரொம்பவே வதைக்கின்றன தலைவியை!

இப்போதும், பட்டிக்காட்டுப்பெண்ணோ, பட்டினத்து யுவதியோ, தன்னுடைய கணவனை அவனுடைய தாயோ தந்தையோஅல்லது அவனது உடன்பிறந்தவர்களோ திட்டினால் கூட அதைத் தாங்கிக்கொள்வது ஒரு மனைவிக்குக் கஷ்டம்தான். அவனுக்காகத் தான் பரிந்துபேசி அவர்களிடம்  அவப்பெயர் சம்பாதித்தாலும் அவள் அதற்காக வருந்துவதில்லை. அவளுக்கு அவள் கணவன் முக்கியம். தன் கணவனைத் தான் என்னசொல்லியும் பழிக்கலாம்ஆனால்,அதேசமயம் அடுத்தவர் யாரேனும் பழித்துச் சொல்லிவிட்டால், அவளுக்கு அழுகையோ ஆங்காரமோ அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு வந்துவிடுகிறது. காலங்கள் கடந்துகலாச்சாரம் நவீனப்பட்டும்கூட இந்தக் குணமும் இன்னும் மாறாமல்தான் இருக்கிறது. ஆக மொத்தத்தில்எல்லாம் காதல் செய்கிற வேலை...

- சுந்தரா

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை!

படம்: நன்றி!

வீதியெங்கும் மக்கள் கூட்டம். வருவோரும் போவோருமாக உயிர்ப்போடு விளங்கும் தெருக்கள். மதுரை நகரத்தின் நாளங்காடி...

"மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்"

அங்கே, விற்க விற்கக் குறையாமல் பொருட்கள் வந்திறங்கியபடியே இருக்க, விற்பனைக்கு வந்த பொருட்களை இறக்கிவைக்கிற ஓசையும், அவற்றை விலைகொடுத்து அள்ளிச்செல்லுகின்ற மக்கள் கூட்டம் எழுப்பும் ஒலியும் சேர்கையில் ஆற்றுநீர் ஓடிவந்து அலைகடலோடு கலப்பதுபோன்ற  ஆரவாரம் அங்கே.

தெருக்களில், சுவை மிக்க பலகாரக்கடைகள், வட்டத் தட்டுக்களில், கட்டிவைத்த, கொட்டிவைத்த பூக்களை விற்கும் கடைகள், மகரந்தம் போல மென்மையாக வாசனைத் திரவியங்களைப் பொடித்து விற்கும் கடைகள், வெற்றிலை பாக்குக் கடைகள், சங்கு மற்றும் சுட்ட சுண்ணாம்பினை விற்கும் கடைகள் என்று பலவிதமான கடைகள். 

சங்குகளை அறுத்துப் பதமாக்கி அவற்றில் வளையல் செய்கிறவர்களும், ஒளிபொருந்திய வயிரக்கல்லில் துளையிடும் தொழில் செய்பவர்களும், பொன்னை உரசிப்பார்த்து வாங்குகிற பொன் வியாபாரிகளும், செம்பினை எடைபோட்டு வாங்கும் வணிகர்களும், ஆடை விற்பனை செய்பவர்களும், குஞ்சம் கட்டி விற்பவரும், பூக்களும், சந்தனமுமாகிய நறுமணப் பொருட்களை விற்பவர்களும், ஓவியம் வரைபவர்களும், கடலின் கரையில் படியும் கருமணல் படிவுகளைப்போல, தெருவோரங்களில் புடவைகளை விரித்துக்கட்டி நெசவு செய்பவர்களும், ஒருவர் கால் மற்றவர்மேல் படுமளவுக்கு நெருக்கமாக நின்று விற்பனை செய்துகொண்டிருந்தனர்.

"பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர"

மா, பலா போன்ற இனிய கனிவகைகளையும், கீரைவகைகளையும் விற்கிறவர்களும், அமிர்தம் போன்ற இனிமையுடைய கற்கண்டினை விற்பவர்களும், இறைச்சியுடன் கலந்து சமைத்த சோறாகிய உணவினை (பிரியாணி???) விற்பவர்களும், கிழங்கு வகைகளை விற்பவர்களும், இனிப்புச் சுவையுடைய சோற்றினை வழங்குபவர்களும் இருக்க, அவற்றை வாங்கி ஆங்காங்கே நின்று உண்பவர்களுமாகக் கலகலப்பாகக் காணப்பட்டது அந்த வீதி.

இவை தவிர, இரவு நேர அங்காடிகளில், மரக்கலங்களில் வந்திறங்குகிற பொருட்களை வாங்குவோரும், தாம் கொண்டுவந்த பொருட்களை விலைக்கு விற்றுக் கிடைத்த பொருளுக்கு மதுரை மாநகரில் கிடைக்கிற அழகிய அணிகலன்களை வாங்கிச்செல்லுகிற வெளிநாட்டு வணிகர்களும் சேர, அலை ஓசையும் அவற்றோடு விளையாடும் நீர்ப்பறவைகளின் ஓசையும் இயைந்ததுபோல எங்கும் ஓசை நிறைந்திருந்தது. 

இவையெல்லாம், பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சி காட்டுகிற மதுரையும் அவற்றில் நடக்கிற வியாபாரங்களைப் பற்றிய செய்தியுமாகும். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்திருந்தும், இன்னும் அதே உயிர்ப்புடன் உறங்கா நகரமாக இயங்குகிற மதுரையை நினைக்கையில் மனசு வியக்கத்தான் செய்கிறது. இன்றைக்கு வைகையைக் காணோம், வறட்சியாகிப்போச்சு என்று ஆயிரம்தான் சொன்னாலும் என்றைக்கும் மதுரை மதுரைதான்!!!


-சுந்தரா

திங்கள், 10 பிப்ரவரி, 2014

ஊரார் பிள்ளை



தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவரவர் பிள்ளைகளைப் பிடித்து, இழுத்துக்கொண்டுபோய் ட்யூஷன் நடத்துமிடங்களில் அடைத்துவிட்டு, அம்மாக்கள் டீயும் கையுமாய் டி.வி சீரியல்களில் ஆழ்ந்திருந்த நேரம்...வீட்டுக்கருகிலிருந்த  காந்திசிலைகிட்ட கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள் எட்டுவயசு சிந்துவும் அவள் தம்பி அருணும்.

அம்மா வர நேரமானால், அண்ணாச்சி கடையில் ஆளுக்கொரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கிட்டு, நாலைந்து வீடுகள் தள்ளியிருந்த இந்திரா ஆன்ட்டி வீட்டில் தொல்லைபண்ணாம உட்கார்ந்திருக்கணுமென்பது ஏற்கெனவே அவர்கள் அம்மா அனு சொல்லிவைத்திருந்த விஷயம். இந்திராவும் அனுவும் ஒரே ஊர்க்காரங்க என்பதோடு ஒரே பள்ளியில் படித்தவர்களும் கூட.

பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு, இந்திரா ஆன்ட்டி வீட்டுக் காலிங்பெல்லை மாற்றிமாற்றி அடித்தார்கள் ரெண்டுபேரும். வழக்கத்துக்கு மாறாக, சந்துரு அங்கிள், இந்திரா ஆன்ட்டியின் கணவர்வந்து கதவைத் திறந்தார்.

கையிலிருந்த கண்ணாடி கிளாசில் மிரிண்டாவுடன் நின்ற அவர், "என்ன பசங்களா, உங்க அம்மா இன்னும் வரலியா? என்றார். அம்மாவுக்கு இன்னிக்கு ஓவர்டைம் இருக்குதாம். அவங்க வரவரைக்கும் இங்கயே இருக்கச்சொன்னாங்க அங்கிள்...என்றான் அருண். அதற்குள், "ஆன்ட்டி, குடிக்கத் தண்ணி வேணும்..." என்று உட்புறம் பார்த்துக் குரல்கொடுத்தாள் சிந்து

"ஆன்ட்டி வீட்ல இல்லைடா, கோயிலுக்குப் போயிருக்காங்க...தண்ணிதானே வேணும், நானே கொண்டுவரேன்" என்றபடி உள்ளேபோனார் அங்கிள். ஆன்ட்டி வீட்ல இல்லேன்னதும் சந்தோஷம் கிளம்பியது அருணுக்கு. ஆன்ட்டி பார்க்கிற அறுவையான சீரியல்களைப் பார்க்காமல், ஆதித்யா சேனல் பார்க்கலாமென்று வேகவேகமாக ரிமோட்டைக் கையிலெடுத்தான். "ஆதித்யா வேண்டாண்டா அருண்...அனிமல் ப்ளானட் பார்க்கலாம்" என்றாள் சிந்து அதற்குள், இரண்டு டம்ளர்களில் மிரிண்டாவும் சின்ன பாட்டிலில் தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தார் சந்துரு அங்கிள்.

நீங்க ரெண்டுபேரும் சண்டைபோட்டுக்க வேணாம்..."அருண், நீ பெட்ரூம் டிவியில ஆதித்யா பாரு, நானும் சிந்து குட்டியும் ஹால் டிவியில அனிமல் ப்ளானட் பாக்குறோம்  என்று ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்து உட்காரவைத்தார் அங்கிள். உடனே, மிரிண்டா கிளாசுடன் சந்தோஷமாக அறைக்குள் ஓடினான் அருண் .கையிலிருந்த மிரிண்டாவை ஒரேமூச்சில் குடித்துவிட்டு, படுக்கையில் சரிந்தபடி டிவியைப் பார்க்க ஆரம்பித்தான் அவன்.  கொஞ்ச நேரம் கார்டூன் கதாபாத்திரங்களுடன் கூடக்கூடப் பேசிக்கொண்டிருந்தவன் பத்துநிமிஷத்தில் தூங்கிப்போய்விட்டான்.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான் சந்துரு.  பிரதோஷ பூஜை முடித்து, பிரசாதத்துடன் உள்ளே நுழைந்தாள் இந்திரா. இன்னிக்கும் நீங்க சீக்கிரமா வந்துட்டீங்களா?  வந்து ஒண்ணும் சாப்பிட்டிருக்கமாட்டிங்கல்ல, காபி போட்டுத்தரவா என்று கேட்டபடி ஹாலுக்கு வந்தாள். அதற்குள் சிந்துவும் சோஃபாவில் சரிந்து உறங்கியிருந்தாள். இன்னிக்கும் இந்தப் பசங்க இங்க வந்துதான் லூட்டியடிச்சுதா? என்று எரிச்சலுடன் கேட்டவள் எப்பத்தான் இவங்க அப்பாவும் அம்மாவும் புள்ளைங்க விஷயத்துல கரிசனம் காட்டப்போறாங்களோ என்று கணவனிடம் சொன்னபடி பூஜையறைக்குப் போனாள் இந்திரா.

படுக்கையறையிலும் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, அங்கே உறங்கிக்கொண்டிருந்த அருணைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் அளவு மீறிப்போய்விட்டது. அழுக்குக் காலோட இதுங்கள சோபாவுலகூட நான் உக்காரவிடமாட்டேன். நீங்க என்னன்னா, படுக்கைல ஏறி அழுக்காக்கவிட்டுட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க" என்று இறைந்தவளிடம் "இதுக்குப்போயி கோவப்படுறியே இந்திரா, நம்ம வீட்ல குழந்தைங்க இருந்திருந்தா கட்டில்ல ஏறி விளடமாட்டாங்களா?" என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முற்பட, "ஓ... எனக்குக் குழந்தையில்லைன்னு வேற குத்திக் காட்டுறீங்களோ?

காசு காசுன்னு இவங்க அப்பாவும் அம்மாவும் காலநேரம் தெரியாம அலையிறாங்க...அவங்க வரதுக்குள்ள இதுங்க தூங்கிடுது. காலையில, விடிஞ்சும் விடியாமலும் எழுப்பி மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்பிடுறாங்க. ஸ்கூல்ல இருந்து வந்ததும் தண்ணியைக் குடுங்க, டிவியைப் போடுங்க ன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க. சொல்லப்போனா இதுங்க அப்பா அம்மா இதுங்ககிட்ட உட்கார்ந்து அஞ்சு நிமிஷமாவது பேசுவாங்களோ என்னவோன்னு கூடத் தெரியலை. ஆனா நாம  இதுங்களோட கேள்விக்கெல்லாம் பதில்சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு..." என்று அவள் எரிச்சலில் படபடக்க,

"நாம தெரிஞ்சவங்க பக்கத்துல இருக்கோம்னு தைரியம்தான் இந்திரா. அவங்க ரெண்டு பேரும் குறைஞ்ச சம்பளக்காரங்க. குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கணும்னா ஓவர்டைம் பாத்தாதான் ஓரளவுக்கு அவங்களுக்குக் கட்டுப்படியாகும் என்ற கணவனிடம், "ஓ, அப்போ அவங்க காசு சம்பாதிக்கிறதுக்காக நான் அவங்க புள்ளைங்களுக்கு ஆயா வேலை பாக்கணுமோ?  என்று அவள் குரலை உயர்த்திக் கூப்பாடு போட,

தெருமுனையில், நிறுத்தத்தில் நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினாள் அருணின் அம்மா அனு.  ஓவர்டைமோட சேர்த்து இந்த மாசம் ஒம்பதாயிரம் கிடைச்சிருக்கு. சிந்து கேட்ட வீடியோ கேமும், அருணுக்கு ஒரு சைக்கிளும் இந்த மாசம் கட்டாயம் வாங்கிரணும் என்று மனசுக்குள் நினைத்தபடி, முக்குக் கடை அண்ணாச்சியிடம் குழந்தைகளுக்குப் பிடித்த ரெண்டு மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொண்டு, ஓட்டமும்நடையுமாக வீட்டை நோக்கி வேகவேகமாய் வந்தவள் இந்திரா வீட்டில் போய்ப் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்காய் அழைப்புமணியை அழுத்துவதற்குள் அங்கே கேட்ட சம்பாஷணை அவளை முகத்திலறைந்தது. ஒருநிமிஷம் செயலற்றுப்போய் நின்றுவிட்டாள் அவள்.

அதே நேரம், இந்திராவிடம் மேலும்மேலும் பேசிச் சண்டையை வளர்க்க விரும்பாத சந்துரு,  "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்னு பழமொழியே சொல்லுவாங்க...இருக்கிற நிலையைப் பார்த்தா இனி நமக்கு அந்த பாக்கியமே இல்லாம போயிடும்போல.." என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி,..."சரி, நான், கடைக்குப்போயி சிகரெட் வாங்கிட்டு வந்துடறேன். நீ கதவைச் சத்திக்கோ..." என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான்.

வாசலில் நின்ற அனுவைப் பார்த்ததும் சட்டென்று அவன் முகம் சங்கடத்தில் வெளிர, அதைக் கண்டுகொள்ளாமல், அப்போதுதான் வந்தவள்போல, கையிலிருந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள்.  "இந்திராவையும் கூப்பிடுங்க... எங்க வீட்டுக்காரருக்கு அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதனால நான் இன்னியோட வேலையை விட்டுட்டேன். கூடிய சீக்கிரம் அந்தப்பக்கமாவே வீடு பாத்திட்டுப் போயிரலாம்னு இருக்கோம்" என்றவள், "சிந்தூ, அருண்..." என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தாள். உள்ளிருந்து அவர்களை எழுப்பிக் கூட்டிக்கொண்டுவந்தாள் இந்திரா. அப்பாடா என்ற ஒரு விடுதலை அவள் முகத்தில் தெரிந்தது. "இன்னிக்கும் இங்கயே தூங்கிருச்சுங்களா? தேங்ஸ் இந்திரா..." என்று அவள் முகத்தைப் பார்த்து மெல்லச் சொன்னவள் பிள்ளைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஆனால், அனு, சொல்வது உண்மையில்லை என்று உள்ளுக்குள் ஏதோ உணர்த்த, மறுகிய மனத்துடன் வெளியிறங்கி நடந்தான் சந்துரு.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தித்திப்பாய் ஒரு தீபாவளி!


டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திறந்து கடைக்குள் நுழைந்தார் கதிரேசன். காலையிலேயே, தீபாவளிக்கான கடைசிநேர வியாபாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. காசை வாங்கிப்போடுவதும் கடன் சொல்லுபவர்களுக்குக் கணக்கெழுதிவைப்பதுமாக விறுவிறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தார் கணக்கப்பிள்ளை கருணாகரன்.

முதலாளி கதிரேசன் உள்ளே நுழைந்ததும் அவரது கண்களை ஒரேயொரு வினாடி நேரடியாகச் சந்தித்து மீண்டது கருணாகரனின் கண்கள். ஒன்றும் விசேசமில்லை என்று அந்தப் பார்வையிலிருந்து புரிந்துகொண்டார் கதிரேசன். மனசுக்கு சங்கடமாயிருந்தாலும் பிரச்சனையைத் தன்னால் தீர்த்துவிடமுடியுமென்ற தெளிவோடு தானும் கடைப்பையன்களுடன் சேர்ந்து வியாபாரத்தில் மூழ்கினார் கதிரேசன்.

பதினோருமணி சுமாருக்குக் கடையில், கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தது. தனக்கும் மற்றவர்களுக்கும் தேனீர் வாங்கிவரச்சொல்லிவிட்டு, கணக்கப்பிள்ளையிடம் கல்லாவில் எவ்வளவு தேறும் பாருங்க என்றார் கதிரேசன். சில்லறையும் தாளுமா ரெண்டாயிரத்துக்கிட்ட இருக்கும்ங்க, என்ற கணக்கப்பிள்ளை, "அண்ணாச்சி, நாம வேணும்னா டீச்சர் வீட்டுக்கும், வக்கீலய்யா வீட்டுக்கும் ஒருதடவை ஆளனுப்பிக் கேட்டுப்பாப்பமா?" என்றார்.

"இல்லையில்லை...வேணாம் கணக்கு...அவுக ரெண்டுபேரும் கைக்குக் காசு வந்ததும் தவறாம கொண்டுவந்து குடுக்கிறவங்க. என்ன பிரச்சனையோ, இப்பக் கொஞ்சம் தாமதமாயிருச்சு. நாமளா போய்க் கேட்டா சங்கடப்படுவாக" என்று அவசரமாய்க் கதிரேசன் மறுக்க, "அதுவும் சரிதான்... "என்றபடி அமைதியாகத் தன் கோப்பைத் தேநீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார் கணக்கு கருணாகரன்.

கடையின் மற்ற சம்பளக்காரர்களுக்கெல்லாம் ஒருவாரம் முன்னதாகவே சம்பளம் போட்டுவிட்டார் கதிரேசன். தீபாவளிக்கென்று, புதுக்கம்பெனியொன்றிலிருந்து, முறுக்கு, சீடை, மைசூர்பாகு, சோன்பப்டியென்று நிறைய வாங்கி அடுக்கிவிட்டதால், கையிருப்புக் கரைந்துவிட, கடைசியில், கணக்குப்பிள்ளைக்கும் தன் வீட்டுச் செலவுக்கும் பணம் தட்டுப்பாடாகிப்போனது அவருக்கு. அதற்கு, முக்கியமான ரெண்டு இடத்திலிருந்து வரவேண்டிய பணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கதிரேசன். அந்தப் பணம் மட்டும் கிடைத்திருந்தால் தீபாவளிக்கு முந்தினநாளில் உட்கார்ந்து, காசுக்காக யோசித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்காதே என்ற எண்ணம் ஓடியது அவர் மனதில்.

மதியத்துக்குமேல் வீட்டுக்குத் துணியெடுக்க விடுப்புக்கேட்டிருந்தார் கணக்கு.  அதற்குள், எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டுமேயென்ற தவிப்பு கதிரேசனுக்கு. அவரிடம், "கடையைப் பாத்துக்கங்க கணக்கு, நான் வீடுவரைக்குப் போயிட்டுவந்துர்றேன் என்றார் கதிரேசன். அவரது மனதின் நோக்கம் புரிந்த பதைப்புடன், "அண்ணாச்சி, இப்ப ஒண்ணும் அவசரமில்லை. வருசாவருசம் தீபாவளி வரும். பணம் வரட்டும் நாம பாத்துக்கிடலாம்" என்றார் கணக்குப்பிள்ளை கருணாகரன். அவரைத் திரும்பிப்பார்த்துப் புன்னகைத்த கதிரேசன், காசுக்காகக் கத்திச் சண்டைபோடுகிற வேலையாட்களுக்கு மத்தியில் இத்தனை நல்ல ஊழியர் கிடைத்திருக்கிற சந்தோஷத்துடன்  "இருங்க, நான் இப்ப வந்துர்றேன்..." என்றபடி புறப்பட்டார்.

வீட்டுக்குள் நுழையும்போதே அதிரச வாசனை ஆளைத் தூக்கியது. "அடடா, அதுக்குள்ள சாப்பாட்டு நேரமாயிருச்சா? காலையிலயே, பலகாரம் செய்ய உட்காந்ததால, சமையல் கொஞ்சம் தாமதமாயிருச்சு என்றபடி, கழுவின கையைத் தலைப்பில் துடைத்தபடி அடுப்படியிலிருந்து வெளியில் வந்தாள் கற்பகம்.

கைச்செலவுக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் அவருக்குக் கடைசியாய் உதவுகிற அட்சயபாத்திரம் அவள்தான். "ஒண்ணும் அவசரமில்லம்மா... நீ நிதானமாப் பண்ணு. நான் ஒரு அவசரமான வேலையா வந்தேன்" என்றபடி அமர்ந்தவர், மெல்ல அவளுடைய முகத்தை நிமிர்ந்துபார்த்தார்.

என்ன கேட்டாலும் மறுக்காத மனைவியென்றாலும், அவளை நல்லநாளும் அதுவுமாய் சங்கடப்படுத்தப்போகிறோமேயென்று கதிரேசனின் மனசு மறுகியது. தாலிக்கொடியும் ரெண்டு வளையலும் தவிர, ஒரு ரெட்டைவடச் சங்கிலியுண்டு அவளிடம். விசேச நாட்களில் மட்டும் அந்த ரெட்டைச்சரம் அவள் கழுத்தில் மின்னும். மற்றபடி அநேக நாட்கள் அடகுக்கடையிலோ அல்லது அடுப்படி அலுமினிய டப்பாவிலோதான் இருக்கும்.

கறுப்புக்கு நகை போட்டா கண்ணுக்கு நிறைவா இருக்கும்னு அப்ப அம்மா சொன்னமாதிரி, அந்த ஒத்தை நகையைப்போட்டதும் பட்டுன்னு ஒரு பிரகாசம் கூடிரும் அவ முகத்தில். அந்தப் பிரகாசத்தை நாளைக்குப் பார்க்கமுடியாதேயென்ற தவிப்புடன், கைவிரல்களால் கணக்குப்போட்டபடி குனிந்து உட்கார்ந்திருந்தார் அவர். "என்னங்க, உடம்புக்கு முடியலியா? காலையிலேருந்து கடையில நிறைய வேலையா? சூடா காப்பி போட்டுத்தரவா?" என்றபடி அவருடைய நெற்றியைத் தொட்டுப்பார்த்தாள் அவள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..." என்றவர்,  "குடிக்க ஒரு டம்ளர் தண்ணி எடுத்துக்கிட்டு, அதோட, அந்த..." என்று தொடங்கியவர், "சொல்ல மறந்துபோச்சுங்க..." என்றபடி அவள் ஆரம்பிக்கவும்,  முகத்தைப்பார்த்து நிறுத்தினார். "நம்ப டீச்சரம்மா இல்ல, அவங்க வீட்ல, ஊர்லேருந்து விருந்தாளிங்க வந்திருக்காங்களாம். அதனால,கடைப்பக்கம்வந்து காசு குடுக்க முடியலன்னு, இப்பத்தான் வந்து ஆறாயிரம் பணமும், அவங்க வீட்ல செஞ்ச அச்சுமுறுக்கும் கொண்டுவந்து கொடுத்துட்டுப்போனாங்க" என்றாள் கற்பகம்.

"அடக் கழுத... இத, நான் வந்ததும் சொல்லியிருந்தா நான் இங்க உக்காந்துகிட்டு, உன்னயும் உன் அழகையும் நினைச்சு மறுகியிருக்கமாட்டேன்ல்ல" என்றபடி கண்கள் மின்னச் சிரித்தார் அவர். கணவனின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்டவளாக, "ஓ...நீங்க ரெட்டைவடத்தைத் தட்டிட்டுப்போக வந்தீங்களாக்கும்" என்றபடி சிரித்தவள், "ஒண்ணும் பிரச்சனையில்லை, அதிகமாக் காசு தேவைப்பட்டா அதையும் வேணுன்னா கொண்டுபோங்க" என்றாள்.

"அதெல்லாம் இனி தேவைப்படாது கற்பகம். இப்பவே ஆரம்பிச்சாச்சு நமக்கு தீபாவளி என்றவர், நீ, சாயங்காலம், பிள்ளைகளைக் கூட்டிட்டுப்போயி, அவுங்களுக்குப் பிடிச்ச பட்சணம், பட்டாசு எல்லாம் வாங்கிக்குடு. கடையடைச்சிட்டு வரும்போது நான் எல்லாருக்கும் துணியெடுத்துட்டு வந்துர்றேன்.  இப்போதைக்கு, நீ செஞ்சு வச்சிருக்கிற அதிரசத்துல, கொஞ்சம்  எடுத்துக்குடு என்றபடி, வாசலை நோக்கி நடந்தார் அவர்.

அலைபேசி ஒலித்தது. குரலிலேயே விஷயம் புரிந்தது அவருக்கு. "அண்ணாச்சி, நீங்க புறப்பட்ட பத்தே நிமிஷத்துல வக்கீலய்யா வீட்லருந்து மொத்தப் பணமும் வந்திருச்சு. நீங்கவேற அவசரப்பட்டு வேற எந்த ஏற்பாடும் செஞ்சிடாதீங்க..." என்றார் கணக்கப்பிள்ளை கருணாகரன்.

சந்தோஷம் கணக்கு...இங்கயும் ஒரு வரவு வந்திருக்கு. நான் இப்பவே, இனிப்போட வரேன். இந்த தீபாவளி நம்ம எல்லாருக்கும் சந்தோஷமான தீபாவளிதான் என்றபடி, அலைபேசியை அணைத்துவிட்டு, மனைவியின் பக்கம் திரும்பினார் கதிரேசன். கணவனின் சந்தோஷத்தைப்பார்த்து கற்பகத்தின் முகமும் மகிழ்ச்சியில் நிறைய, ரெட்டைவடம் போடாமலே இன்னிக்கி ரெட்டை அழகாயிருக்கே நீ"  என்றபடி மனைவியின் கன்னத்தில் தட்டிவிட்டுக் கடைக்குப் புறப்பட்டார் கதிரேசன்.

புதன், 28 செப்டம்பர், 2011

இப்படியும் ஒரு கொடுமை நடக்குமா???

இரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கியமான பேச்சாக இருக்கிறது. ஆனால், படிக்கப்படிக்கப் பெருகுகிறது, பேசப்பேசப் பொங்குகிறது நெஞ்சிலிருக்கிற சோகம்.

அதிகாலை ஐந்துமணியிலிருந்து எழுமணிவரைக்கும் எல்லா அம்மாக்களும் ஏகப்பட்ட பிஸியாக இருப்பது வழக்கம். பிள்ளைகளை எழுப்பி, உணவு தயாரித்துக்கொடுத்து பள்ளிக்கு அனுப்புதல், கணவருக்கான பணிவிடைகளைச் செய்தல், இத்தோடு தானும் வேலைக்குச் செல்வதென்றால் அதற்கான ஏற்பாடுகளைச்செய்தலென்று இயந்திரகதியில் இயங்கிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்காகச் சில குடும்பங்களில் அந்த அவசரவேளையில் அப்பாக்களும் சற்று உதவிசெய்வதுண்டு.

அப்பா வெளிநாடு சென்றிருக்க, அம்மாமட்டுமே அத்தனையையும் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்த அந்தக் குடும்பத்தில் அன்றைக்கு விழுந்திருக்கிறது விதியின் பார்வை. பதினான்கு வயது மகளைப் பள்ளிப்பேருந்தில் ஏற்றிவிட்டுவருவதற்காக அம்மா கீழே சென்றிருக்க, (அநேகமாக அதுவரை உறங்கிக்கொண்டிருந்த) ஐந்தே வயதான அந்தச் சிறுவன் விழித்து எழுந்து, எட்டாவது மாடியின் கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே நிற்கிற அம்மாவையும் அக்காவையும் எட்டிப்பார்த்திருக்கிறான்.

எப்படி ஏறினானென்றும் தெரியவில்லை, எப்படித் தவறினானென்றும் புரியவில்லை. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்த சிறுவனைப்பார்த்து கட்டிடத்துக் காவலரும் மற்றவர்களும் சேர்ந்து அதிர்ந்து அலற, கவனித்த அந்தச் சிறுவனின் தாய் அலறியடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு ஓடியிருக்கிறார், மகனை உள்ளே இழுத்துக் காப்பாற்ற.

அங்கே, அம்மாவையும் முந்திவிட்டிருக்கிறது அநியாய விதி. அதற்குள் சிறுவன்  எட்டாவது மாடியிலிருந்து விழுந்து, ரத்தக் குளத்தில் மூழ்கிப்போனான். வீட்டுக்கு வந்து, ஜன்னல்வழியாக மகனின் நிலையைக்கண்ட அந்த அம்மா, மறுபடியும் கீழே ஓடியிருக்கிறாள்.

செத்துக்கொண்டிருந்த மகனின் கையைப் பற்றியபடி அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்தவள், "இது துரதிருஷ்டமான நாள்" என்று அரபியில் சொல்லி அலறியபடியே, மறுபடியும்  தன் வீட்டுக்கு ஓடிச்சென்று, மகன் விழுந்த அதே ஜன்னல் திறப்பின் வழியே, தன் உடலை வலுக்கட்டாயமாக நுழைத்து, அத்தனைபேர் கண்முன்னாலும் விழுந்து உயிரைவிட்டிருக்கிறாள். மகனை முந்தி, முதலில் போயிருக்கிறது அவளது உயிர்.

அம்மாவும் தம்பியும் கண்முன்னே அடுத்தடுத்து விழுந்து இறந்துபோக, அப்பாவும் அருகிலில்லாமல், என்ன நிலையிலிருந்திருக்கும் அந்தப் பதினான்கு வயதான சிறுமியின் மனசு என்று எண்ணிப்பார்க்கக்கூடமுடியவில்லை. 

பிள்ளைகளுக்குச் சிறுதுயரம் வந்தால்கூடத் தாங்காது பெற்றமனசு. அதில் இப்படிப்பட்ட இடியே விழுந்தால்????
இது, உயரமான மாடிக் கட்டிடங்களில் வசிக்கிற சிறுகுழந்தைகளை வைத்திருக்கிற பெற்றோருக்கான எச்சரிக்கைப் பதிவு. குழந்தைகளை உங்கள் கண்காணிப்பின்றி, ஒருபோதும் வீட்டில் தனியே விடாதீர்கள். அது பின்னர், தாங்கமுடியாத துயரங்களுக்கு வழிவகுத்துவிடலாம்.

வியாழன், 10 மார்ச், 2011

கண்ணோட்டமும் களிமண் உருண்டைகளும்!


கடற்கரையோரமாய்க் காலார நடந்துகொண்டிருந்தான் அந்த மனிதன். நீண்டதூரம் நடந்துசென்றபிறகு, கடலோரத்தில் சில குகைகள் தென்பட்டன அவனுக்கு. அவற்றுள் நுழைந்துபார்த்தான் அவன். அங்கிருந்த குகைகளில் ஒன்றில் ஒரு சிறிய சாக்குப்பை இருந்தது. அதற்குள் நிறையக் களிமண் உருண்டைகள் இருந்தது. யாரோ உருட்டிக் காயவைத்த விளையாட்டு உருண்டைகளைப்போல் தோன்றியது அவனுக்கு.

அந்தச் சாக்குப் பையை கையிலெடுத்துக்கொண்ட அவன் திரும்புகிற வழியில் ஒவ்வொரு உருண்டையாய்க் கடலுக்குள் எறிந்துகொண்டே வந்தான். முக்கால்வாசி உருண்டைகளைக் கடலுக்குள் வீசியபின், எதேச்சையாக அவன் வீசிய ஒரு களிமண் உருண்டை பாறையொன்றில் பட்டு உடைந்தது. உடைந்த களிமண் உருண்டைக்குள்ளிருந்து கண்ணைப்பறிக்கிற வைரக்கல் ஒன்று வெளிப்பட்டது.

'ஆஹா' என வியந்த அவன் மிச்சமிருந்த ஒருசில உருண்டைகளையும் உடைத்துப் பார்த்தான். அத்தனைக்குள்ளும் வைரக்கற்கள் இருந்தன. 'ஐயோ மோசம் போனேனே, விலைமதிப்பில்லாத வைரங்கள் பலவற்றை அதன் மதிப்புத்தெரியாமல் கடலில் வீசியெறிந்துவிட்டேனே' என்று வருந்தியபடியே கடல்கரையில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தானாம் அவன்.

மனிதர்களின் கண்ணோட்டத்தைப் பற்றி விளக்குவதற்காகச் சொல்லப்படுகிற கதையிது. அநேக சமயங்களில் மனிதர்களாகிய நாமும் இப்படித்தான் இருக்கிறோம். புறத்தோற்றத்தைப் பார்த்துப் பலரை உதாசீனப்படுத்திவிடுகிறோம். புறக்காரணிகளான, பணம், பதவி,அழகு,அந்தஸ்து இவற்றைமட்டும் கவனித்துவிட்டு, எத்தனையோ உறவுகளையும் நட்புகளையும் அலட்சியமாய்க் கடந்துபோய்விடுகிறோம். அவர்களுக்குள்ளும் அளப்பரிய அன்பும் நட்பும், நமக்குப் பயன்படக்கூடிய எத்தனையோ நல்லவிஷயங்களும் இருக்குமென்பதை அறிந்துகொள்ளாமலே போய்விடுகிறோம்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உயர்ந்த குணம் இருக்கும். மேல்தோற்றத்தில் அது கொஞ்சம் மறைந்துபோயிருக்கலாம். ஆனால், அதைக் கண்டுணர்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது என்றென்றைக்கும் இன்பத்தைக் கொடுக்கும்.

இது,மின்னஞ்சலில் வந்த கதை. இன்னும் சிலருக்கு உதவுமென்ற நம்பிக்கையோடு இங்கே...

வெள்ளி, 4 மார்ச், 2011

என்னதான் நினைக்கிறது இளைய தலைமுறை?


அம்மா,இங்க வாங்களேன்...

என்னடா?

இங்க வந்துபாருங்க...

இருடா, வேலையா இருக்கேன்...

சரிம்மா, நீங்க பிஸின்னா உங்க மெயில் ஐடிக்கு அனுப்பிவைக்கிறேன். அப்புறமா பாத்துக்கோங்க...

பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றைக்காண்பிக்க வந்தவன் நகர்ந்துபோனான்.

இருடா தம்பி, பிஸியெல்லாம் இல்லை, பத்து நிமிஷவேலைதான் இப்ப வந்துர்றேன்.

பத்து நிமிஷமா?...அப்போ நான் பிசியாயிடுவேனே...

அட, நீங்க பிசியாயிருவீங்களா? எல்லாம் நேரம்தான். சாருக்கு அப்படியென்ன வேலையிருக்குதாம்?

கம்ப்யூட்டர்ல ஆன்லைன் கேம் விளையாடப்போறேம்மா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஆன்லைனில் இருக்காங்க.

நாலுநாள்ல பரிட்சை இருக்கு...அதுக்குப் படிக்காம ஆன்லைன் கேமா?

அம்மா, படிப்புக்குன்னு நேரம் ஒதுக்குறமாதிரி, என்ஜாய் பண்றதுக்கும் நேரம் ஒதுக்கணும்மா. இல்லன்னா, லைஃப் போரடிச்சுப்போயிடும்.

அதுசரி, இந்தத் தலைமுறைக்கு என்ன தெரியுதோ இல்லையோ, பிஸி, என்ஜாய் இந்த ரெண்டு வார்த்தைகளும் நல்லாவே தெரிஞ்சிருக்கு.

சரியாத்தான் தெரிஞ்சுவச்சிருக்கீங்க...அம்மா, உங்க காலத்துலல்லாம் நீங்க பிஸியாவே இருந்ததில்லையா?

இருப்போம்...படிப்பு, விளையாட்டுன்னு. ஆனா, உங்க அளவுக்கு இல்ல...


ஆமா,அப்பல்லாம் கம்ப்யூட்டர் கிடையாதில்ல... ஃபேஸ்புக்,சாட்,வீடியோ கேம்ஸ் இதெல்லாம் இல்லாம உங்களுக்கெல்லாம் எப்படிம்மா டைம்பாஸ் ஆச்சு?

ஏன் ஆகாது? அக்கம்பக்கத்துக் குழந்தைகளோட விதவிதமா விளையாடுவோம். வாரப்புத்தகம், லைப்ரரி புஸ்தகம் வாங்கிவச்சுப் படிப்போம். ஏகப்பட்ட கைவேலைகள் செய்வோம், வீட்டுத்தோட்டம் போடுவோம்...

அதெல்லாம் இருக்கட்டும்...அப்பல்லாம், பாடத்துல ஏதாவது சந்தேகம் வந்தா என்ன பண்ணுவீங்க?

பெரியவங்ககிட்ட இல்லேன்னா டீச்சர்கிட்ட கேப்போம், புத்தகங்களை ரெஃபர் பண்ணித் தெரிஞ்சுக்குவோம்.

ரெண்டே ஆப்ஷன்தானா? கூகிள் ஹெல்ப் இல்லாம நீங்கல்லாம் எப்படித்தான் படிச்சீங்களோ?

அதுசரி, கூகிள் மூலமா,இப்ப நீங்க நிறையத் தெரிஞ்சுக்கிறீங்க. அப்ப நாங்க ஒரு குறிப்பிட்ட அளவு தெரிஞ்சுக்கிட்டோம்.

என்னத்தைத்தான் தெரிஞ்சுக்கிட்டீங்களோ? சின்ன சர்க்கிளுக்குள்ள சர்க்கஸ் பண்ணியிருக்கீங்க...

சரி அதுபோகட்டும்...அப்பல்லாம், டிவி கூடக் கிடையாதுல்லம்மா?

ஆமாடா...டிவியெல்லாம் நான் ஹைஸ்கூல் படிக்கிறப்பதான் ஃபேமஸாச்சு. அப்பவும் தூர்தர்ஷன்,ரூபவாஹினின்னு ரெண்டே ரெண்டு சேனல்தான் உண்டு.

ரெண்டே ரெண்டு சேனலா? இப்ப நாம இருநூறுக்கும் மேல பார்க்கிறோமே...

ஆமா, அப்ப ரெண்டுதான்... அதிலும் சாயங்காலம்தான் தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதுவும் சிலநேரம் தெளிவாத் தெரியாது. மாடியில ஏறி, ஆன்டெனாவை அங்கயும் இங்கயும் திருப்பி வைப்போம். அந்த அளவுக்கு சோதிக்கும்.

ஆன்டெனாவா? அப்ப, கேபிள் கனெக்ஷனெல்லாம் கிடையாதா?

ம்ஹூம்... மாடியில ஒரு ஏழெட்டு மீட்டர் உயரத்துல இரும்புக்கம்பியை வச்சு, அதுல கொடைக்கானலுக்கு ஒண்ணு, சிலோனுக்கு ஒண்ணுன்னு ரெண்டு ஆன்டெனா மாட்டியிருப்பாங்க. அதிலிருந்து ஒயரெடுத்து டிவியில குடுக்கணும்.

அடப்பாவமே...

இதென்ன பெரிய பாவம்? வெள்ளிக்கிழமை வந்தா, தூர்தர்ஷன்ல எட்டுமணிக்கு ஆறேழு மொழிகள்ளேருந்து பாடல்கள் போடுவாங்க. அதுல ஒரேயொரு தமிழ்ப்பாட்டு வரும். அதப்பாக்க நாங்கல்லாம் எப்படிக் காத்துக்கிடப்போம் தெரியுமா? சிலநேரம் அதுகூடப் போடமாட்டாங்க. அவ்வளவு ஏமாத்தமா இருக்கும்.

ஐயோ பாவம்மா நீங்கல்லாம்... இப்ப நாங்க ஐபாட், வாக்மேன்னு எங்களுக்குப் பிடிச்ச பாட்டைப் பிடிச்சநேரம் கேக்கிறோம். இந்த சௌகரியம்கூட இல்லாத அந்தக் காலத்தை நீங்க என்னவோ, அப்படி இப்படீன்னு பெருமையாப் பேசுறீங்க.


ஐபாட், வாக்மேன் இல்லாட்டி என்ன? அப்போ,ஆல் இண்டியா ரேடியோவும், இலங்கை வானொலியும் இருந்துச்சில்ல...

அதுல எப்பவும் பாட்டுப் போடுவாங்களா?

எப்பவும் கிடையாது, அதெல்லாம் ஃஎப்.எம் வந்த பிறகுதான்...
சினிமாப்பாட்டு,கர்நாடக இசை, கிராமியப்பாடல்கள், செய்திகள், நாடகம்,வேளாண்மை நிகழ்ச்சிகள், வினாடிவினா இன்னும் ஞாயிற்றுக்கிழமை வந்தா, ஒலிச்சித்திரம்கூடப் போடுவாங்க.

கேலிச்சித்திரம் கேள்விப்பட்டிருக்கேன். ஒலிச்சித்திரமா, அதென்னம்மா?

அதா, ஒரு முழுப்படத்தோட வசனத்தையும் அப்படியே ரேடியோவுல போடுவாங்க.

அப்போ,வசனத்தைமட்டும் கேட்பீங்களா?

ஆமா....படத்தோட கதை தெரிஞ்சிடும்ல.

நல்லாக்கேட்டீங்க கதையை...ஐயோ ஐயோ :)


பாவம்மா நீங்க. நிஜமாவே நாங்கல்லாம் கடவுளுக்கு இப்ப தேங்க்ஸ் சொல்லணும்மா. இவ்வளவு வசதிகள் வளர்ந்த காலத்துல எங்களைப் படைச்சிருக்காரேன்னு.

ஆனா, ஒரே ஒரு கஷ்டம்தான் இப்ப...

என்னடா?

உங்க லெக்சரைக் கேட்ட நேரத்துல, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சைன் ஆஃப் பண்ணிட்டுப் போயிட்டாங்க :)

அடிக் கழுதைய...அதுவும் நல்லதுதான், புத்தகத்தையெடுத்துப் படி...

படிக்கணுமா, அம்மா ஆளவிடுங்க...என்றபடி அங்கிருந்து நழுவினான் அவன்.

******


புதன், 9 பிப்ரவரி, 2011

சிவன் சொத்து!

மண்ணின் மேலும் மதங்களின் மேலும் மக்கள் கொண்டிருக்கும் பற்று மிகவும் சென்சிடிவான ஒன்று. 

குடும்பங்களுக்கிடையே சிக்கிக்கொண்ட சில கோயில்களே கோர்ட் வரைக்கும் இழுக்கப்படும்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான எல்லையில் ஒரு கோயில் அமைந்திருந்தால்?

 பதினொன்றாம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாக விளங்கும் அந்தக் கோயில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் நடந்திருக்கும் கம்போடிய தாய்லாந்து நாடுகளுக்கிடையேயான போரில், இந்தக் கோயில், மேலும் சிதைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.


பிரசாத் பிரியா விஹார், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கு இறையாயிருந்தவன் என்பதற்குச் சான்றுரைக்கும் வகையில், கெமர் பேரரசின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிவாலயம் இது. அமைந்திருப்பது கம்போடிய, தாய்லாந்து எல்லையில் இருக்கும் டாங்கிரெக் மலையின்மீது. எல்லைச்சாமி மாதிரி இரண்டு நாடுகளுக்கிடையே இருப்பதுதான் இங்கு பிரச்சனையே.

எல்லைக்கு நடுவில், கோயில் எங்கே இருக்குது பாருங்க...


1962 ம் ஆண்டிலேயே இந்தச் சொத்துப் பிரச்சனை தலைதூக்க, பிரச்சனையில் தலையிட்ட பன்னாட்டு நீதிமன்றம், இந்தக் கோயில் கம்போடியாவுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும் ஆசை யாரைவிட்டது? அதனால், இன்றுவரை ஓயவில்லை பிரச்சனை. 

தமிழகத்தில், பழங்காலச் சிவன் கோயில்கள் பலவற்றிற்கு, அக்கால மன்னர்கள் ஏராளமான சொத்துக்களை எழுதி வைத்ததாகவும், தற்காலத்தில் அத்தகைய சொத்துக்களெல்லாம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாகவும் படித்ததும் கேட்டதும் உண்டு. கிராமங்களில் அப்படிப்பட்ட சம்பவங்களைக் கேள்விப்பட்டவர்கள் சொல்வார்கள், சிவன் சொத்து குலநாசம் என்று. அதாவது சிவனுக்குரிய சொத்தை அபகரித்துப் பயன்படுத்துபவர்களின் குலம் தழைக்காமல் அழிந்துபோகும் என்று. இங்கே ரெண்டு நாட்டுப் பிரச்சனையில் யார் குலத்தைக் குற்றம்சொல்வது?


மன்னர்களின் காலத்தில் மதிப்போடிருந்த ஆன்மீகத் தலங்கள் பல, பிற்கால அரசியல் மாற்றங்களால் பிரச்சனைகளில் சிக்கியிருப்பதை நாம் பல நாடுகளில் பார்க்கமுடிகிறது. இந்து மதத்தின் பழம்பெருமைக்குச் சான்றாக நிற்கும் இந்தச் சிவன் சொத்து,  இரண்டு நாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு அழிந்துபோகக்கூடாதென்று, உலக இந்துக் கலச்சார அமைப்பு ஒன்று உலகெங்குமிருக்கிற இந்து மக்களின் ஆதரவை வேண்டியிருக்கிறது.

அதை இங்கே பார்க்கலாம்...

மக்களுக்குக் கஷ்டம்ன்னு வந்தா கடவுள்கிட்டபோய் முறையிடலாம். ஆனா, கடவுளுக்கே கஷ்டம்வந்தா எங்கேபோய் முறையிடுவதாம்????

எல்லாம் அவனோட திருவிளையாடல்ன்னு சிவனேன்னு இருக்கவேண்டியதுதான்.

தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து.
படங்கள் உபயம்: google