செவ்வாய், 12 நவம்பர், 2019

ஷாம்பூ, சீயக்காய் இல்லாமல் இயற்கையாகத் தலை அலசும் வழி!
தலை முடியைச் சுத்தம் செய்ய விலை அதிகமான பொருட்கள் தேவையில்லை. வீட்டிலிருக்கும் எளிதான பொருட்களே போதும். மூன்றே பொருட்களால் மின்னும் தலை முடியைப் பெறலாம். 

இயற்கையான இந்த முறையில் தலை அலசும்போது, முடிகளுக்கு மினுமினுப்பும், கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியும் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

இது, நம் முன்னோர் உபயோகித்த முறை மட்டுமல்ல, இன்னமும் சிலரால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் முறை.

செயற்கையான ஷாம்பூக்களில் கலக்கப்படும் இரசாயனங்கள் வேண்டாம் என்று இயற்கையான, பழங்காலத்து முறையான சீயக்காய் பயன்படுத்துவதுண்டு. ஆனால், சீயக்காயில் தலை அலசும்போது, கண்களில் பட்டால் கண்கள் சிவந்துபோகும். இந்தப் பொடியை நாம் பயன்படுத்தும்போது, அத்தகைய பிரச்சனை வருவதில்லை.

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்தக் குளியல் பொடியப் பற்றி விபரமாக அறிந்துகொள்ள, கீழுள்ள காணொளியைப் பாருங்கள்.

திங்கள், 4 நவம்பர், 2019

ஆசாரக்கோவை - ஒரு அறிமுகம்ஆசாரங்கள் எனப்படும் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் பற்றி விவரிக்கும் நூல் ஆசாரக்கோவை. இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்த நூலை எழுதியவர், கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் காலம், ஐந்தாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.

மக்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க முறைகளைப் பற்றி இந்த நூல் தொகுத்துத் தருகிறது. கோவை என்ற பெயருக்குத் தொகுப்பு என்று பொருள். இந்த நூலில், 100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும், வெண்பா எனும் பாடல் வகையைச் சார்ந்தது. வெண்பா என்பது, இறுதி அடி மூன்று சீராகவும் மற்ற அடிகள் நான்கு சீராகவும் அமைந்து வரக்கூடிய பாடல் வகை. 

ஆசாரக்கோவையில், உண்ணும் முறை பற்றிச் சொல்லவே பல பாடல்கள் உள்ளன. எந்த திசை நோக்கி உணவு அருந்த வேண்டும், பெரியோர் இருக்குமிடத்தில் எப்படி உணவருந்த வேண்டும், எந்த உணவை முதலிலும் எதனைக் கடைசியிலும் உண்ணவேண்டும் என்றெல்லாம் பலவிதமான நெறிமுறைகளைப் பற்றி ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

இது தவிர, உறங்கும் முறை, நீராடும் முறை, காலை எழுந்ததும் என்னென்ன செய்யவேண்டும், நீராட வேண்டிய சமயங்கள் எவையெவை, பழங்கால மக்கள் கடைப்பிடித்த வழக்கங்கள் என்னென்ன, எவையெல்லாம் செய்யத்தகாத காரியங்கள் என்றெல்லாம் பலவிதமான நடைமுறை ஒழுக்கங்கள் பற்றி இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த நூலிலுள்ள பாடல்களை ஒவ்வொன்றாக அறிந்துகொள்ள கீழிருக்கும் இணைப்பை பாருங்கள்...