செவ்வாய், 19 ஜனவரி, 2010

மருந்தெல்லாம் மாறிப்போச்சு!!!

ஆண்டு விடுமுறையில ஊருக்குவந்தா முதல் நாலைஞ்சுநாள் நம்மளைக் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்கு. சாப்பாடு, தண்ணீர் வித்தியாசத்தால உடம்புசரியில்லாமப் போறது இப்பல்லாம் வாடிக்கையாயிடுச்சு.

போனவருஷமும் இதையெல்லாம் கடந்து, உறவுக்காரங்க வீடுகளுக்கு விசிட் அடிக்கத்தொடங்கியிருந்தோம்.விருந்து, உபசாரமெல்லாம் கொஞ்சம் அதிகமாகிப்போக, கடைசியில் அஜீரணம்தான் மிஞ்சியது. ஆளாளுக்கு டைஜின் சாப்பிடு, ஜெலுசிலைக் குடி, ஈனோவைக் குடின்னு ஏகப்பட்ட அறிவுரை சொன்னாங்க. "எலுமிச்சம்பழச்சாறில் உப்புப்போட்டுக் குடிக்கலாமே" என்றேன் நான். ஐயே, அதெல்லாம் பாட்டி காலத்து வைத்தியம். பட்டுன்னு பலன் குடுக்காது. இது உடனே கேட்கும்ன்னுசொல்லி, மாத்திரையைக் கையில திணிச்சாங்க.

ஆஹா,இப்பல்லாம் நம்ம ஊர்ல,அறிவுரை மாதிரியே மருந்து மாத்திரையும்ம் தாராளமாய்க் கிடைக்கிதேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டேன். சாப்பாட்டுக்கான சாமான்கள் இருக்கோ இல்லையோ, இப்பல்லாம், எல்லார் வீட்டிலும் அவரவருக்கென்று ஒரு வண்டி மாத்திரை இருக்கிறது. இதை,அவங்க சாப்பிடுறதுமில்லாம அடுத்தவங்களுக்கு ரெக்கமெண்டேஷன் வேற பண்றாங்க...

அதிலும், சின்னக்குழந்தைங்க இருக்கும் வீடுன்னா சொல்லவே வேண்டாம். அலமாரி நிறைய அடுக்கிவச்சிருக்காங்க மருந்துகளை.ஒண்ணு வேலை செய்யலேன்னா இன்னொண்ணுன்னு ஏகப்பட்ட ஆப்ஷன் இருக்கு அதில.

முன்னெல்லாம், சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில, சுக்கு, மிளகு, திப்பிலி,அக்கரா, சித்தரத்தை, ஜாதிக்காய், மாயக்காய்ன்னு மருந்துப் பொருட்கள் உள்ள ஒரு டப்பாவும், அதை உரசிக்கொடுக்க ஒரு உரைகல்லும் கட்டாயம் இருக்கும்.பிள்ளை வளர்ப்பான் என்று சொல்லுகிற வசம்புக்கு இதில் ஸ்பெஷல் இடம் உண்டு. அதை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, உரசி நாக்கில் தேச்சு விடுவாங்க. குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப் பொருமலுக்கும், வாய்வுக் கோளாறுகளுக்கும் வசம்பு அருமருந்துன்னு சொல்லுவாங்க.

வாரத்தில் ரெண்டு நாள்,இந்த மருந்துகளை உரைகல்லில் உரசி, நாக்கில் தடவி விடுவாங்க.சிலர், இந்த மருந்துகளோடு சுத்தமான தங்கத்தையும் கொஞ்சம் உரசிக்கொடுப்பாங்க. பிள்ளை தளதளன்னு தங்கமாட்டம் இருக்குமாம் :)

முன்னெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில, வீட்டில அம்மா, பாட்டின்னு குழந்தைகளைக் கொண்டாட ஆள் இருப்பாங்க. இன்று, அவசர யுகம்... அனுபவமும், அறிவுரை சொல்ல ஆளும் இல்லாத இளம் பெற்றோர்கள். ஒரு பிள்ளை பெற்று வளர்ப்பதற்குள் 'போதும்டா சாமீ' என்று சலிச்சுக்கிறாங்க.மூணு குழந்தைகள் இருக்குன்னு சொன்னா, உங்களுக்கு கோயிலே கட்டலாம்னு அதிசயப்படுறாங்கன்னா பாருங்களேன்...

ஓடியாடி வேலைசெய்தா உடம்புக்கு நல்லது, கூடிவிளையாடினா குழந்தைகளுக்கு நல்லது. ஆனா, ரெண்டுமே இல்ல இப்போ. குனிஞ்சு நிமிர்ந்து வேலைசெய்றதையே மறந்தாச்சு நாம. கூட்டுப்பறவைகளா மாறிட்டாங்க குழந்தைங்க. தொலைக்காட்சியும் கணினியும்தான் வீட்டில் ஓயாமல் உழைக்கிறதாகிப்போச்சு.

வாரம் ஒருமுறை சுக்குக்கஷாயம், மாசத்துக்கொருதடவை வேப்பிலை மருந்து, ஜலதோஷம் வந்தா சுக்குக்காப்பி,வயிற்றுப்பிரச்சனைன்னா, ஓமத்திரவம்ன்னு சின்னச்சின்ன, எளிதாகக்கிடைக்கிற பொருள்களாலேயே சுகப்படுத்திக்கொண்டோம் அந்தக்காலத்தில்.

ஆனா இப்ப,சின்ன விஷயத்துக்கெல்லாம், ஏகப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டு, பின்னாடி வரப்போகும் பக்கவிளைவுகளின் தீவிரம் புரியாமலிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. பெரியவர்கள் சொன்னால் கேட்கக்கூடிய பொறுமையும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்துக்கும் இன்ஸ்டன்ட் ரெமெடி வேணும். அதுமட்டும்தான் அவங்களுக்கு முக்கியம்.

ஆறேழு தும்மல் போடுறதுக்குள்ள அதிக சக்தியுள்ள ஆன்டிபயாட்டிக்கை சாப்பிட்டு, வெளியே வரவேண்டிய நீரை உள்ளேயே அழுத்தி, வயிற்றுப் பாதிப்பு மற்றும் இன்னபிற விஷயங்களையும் இலவச இணைப்பாக வரவழைத்துக்கொள்கிறார்கள்.

கொள்ளை விலைக்கு மருந்தையும் வாங்கி, சொல்லாமலே கூடவரும் பாதிப்புகளையும் அனுபவிப்பதைவிட, சரியான நேரத்தில் தூங்கி, சரியான உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டு, அளவான உடற்பயிற்சியோடு அவசியமான ஆரோக்கியமுறைகளைக் கடைப்பிடிச்சா, அநாவசியப் பிரச்சனைகள் பலவற்றை நாம தவிர்க்கலாம்.

அதையும் மீறி, சீரியசான பிரச்சனைகளுக்கு மருத்துவரைப் பார்க்கலாம், தவறில்லை. ஆனா, சின்னச்சின்ன விஷயங்களுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம்கொடுத்து, ஏதேதோ மருந்துகளைச் சாப்பிட்டு எதிர்ப்பு சக்தியைக் கெடுத்துக்கொள்ளாமலிருப்பது ரொம்பரொம்ப முக்கியம்.

***************

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

கலிகாலப் புகையும், கம்பராமாயணத்தில் புகையும்!

நெருப்பில்லாம புகையாதுன்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்க...அன்றைக்கு, ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக வெளிப்பட்ட அடர்த்தியான புகை,அதைக் கண்காணித்துக் கத்திய ஃபயர் அலாரம், ரெண்டுமாகச் சேர்ந்து அந்தப் பன்னிரண்டுமாடிக் கட்டிடத்திலிருந்த பலகுடும்பங்களைக் பதற்றமடையச்செய்துவிட்டது.காரணம் ரெண்டு முட்டையும் ரெண்டுபேரின் அவசரமும்.

வேலைக்குப்போகிற அவசரத்தில் தனக்கும் கணவருக்குமாக ரெண்டு முட்டையை வேக வைத்த அந்த பெண்,அலுவலக வாகனம் வந்துவிட்டதால் அவசரத்தில் முட்டையை மறந்துபோய் வீட்டைப்பூட்டிக்கொண்டு போய்விட,தண்ணீர் முழுக்க வற்றிப்போய்
பொறாமைக்காரனின் மனசுபோல,புகையாய்ப் புகைய ஆரம்பித்திருக்கிறது சட்டியிலிருந்த முட்டைகள். அதைக்கண்டு,எறும்பு கடித்த சிறுபிள்ளையாய் வீறிட்டிருக்கிறது அங்கேயிருந்த புகையைக் கண்காணிக்கும் கருவி.

அப்புறம் பூட்டிய வீட்டின் கதவு, வீட்டுக்காரர்களின் அனுமதியுடன் உடைக்கப்பட்டு, புகைக்கான காரணம் புரிந்துகொள்ளப்பட்டு, பதற்றம் தணிக்கப்பட்டது தனிக்கதை.

புகை, தற்போது உலக மக்களுக்கு கிலியைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு விஷயமாகிவிட்டது. சுற்றுகிற பூமியைச் சூடாக்கி, துருவப்பகுதிகளில் பனியை உருகவைக்கும் பற்பல வேதிப்பொருட்களின் வெளிப்பாடான இந்தப் புகை இன்று எல்லா நாட்டினருக்கும் எமனாகத்தான் தெரிகிறது.

நல்லதும் கெட்டதுமாக எல்லா இடத்திலும் புகை, மனித வாழ்க்கையில் கலந்துதான் காணப்படுகிறது.பூஜையறையிலிருந்து புறப்படும் தூப,தீபப்புகையிலிருந்து,விரல் நுனியில் புகையும் புகையிலைப் புகையும்,வழியெல்லாம் வெளியாகும் வாகனப்புகையும்,ரசாயனத் தன்மையுள்ள தொழிற்சாலைகளின் புகையுமாக வானவெளியெல்லாம் விஷமாகிப்போய்விட்டது இன்று.

போகிப்பண்டிகையன்று, சென்னை நகரமே புகைமூடிப்போவதாகப் பலவருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம் போகியன்று வாகனங்களின் பழைய டயர்களை எரிப்பவர்கள்மேல் வழக்குப்பதிவுசெய்யுமாறு, காவல்துறை இணை ஆணையர் உத்தரவிட,
69 பேர் பிடிபட்டதாக செய்திகள் சொல்லுகிறது.

இதெல்லாம் இப்படியிருக்க, இராமாயண காலத்திலும் ஊர்கள் பல்வேறுவகைப் புகைகளினால் சூழப்பட்டிருந்ததை பாலகாண்டம் நாட்டுப்படலப் பாடலொன்று அழகாகச் சொல்லுகிறது.

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,

நகல்இன் ஆலை நறும்புகை, நான்மறை

புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்,

முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.

வீடுகளில் வாசனைக்காக எரிக்கப்படும் அகில் கட்டைகளின் புகையும், சமையல் செய்யும்போது விறகுகளை எரிக்கும் புகையும், கரும்பு ஆலைகளில் கரும்புச்சாற்றைக் காய்ச்சும்போது எழுகின்ற புகையும், நான்கு மறைகளும் ஓதப்படும் வேள்விகளில் எழும் ஹோமப்புகையுமாக ஊரைச் சூழ்ந்து, மேகங்களைப் போல் படர்ந்து வானின் எல்லாப் பரப்பிலும் வியாபித்து நின்றதாகக் காட்டுகிறான் கம்பன்.

சாலையில் புகைவிடும் வாகனங்கள் இல்லையென்றாலும் ஆலைகளின் புகை அந்தக்காலம்தொட்டு இருந்துவந்திருக்கிறது.

ஆக, பகையாகிப் பலருக்கும் தொல்லை கொடுக்கின்ற புகை, இன்றைக்கு மட்டுமல்ல, அன்றைக்கும்கூட மக்களின் வாழ்க்கைமுறையோடு இணைந்தபடி,இடைவிடாமல் புகைந்துகொண்டேதான் இருந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளமுடிகிறது.

******

செவ்வாய், 12 ஜனவரி, 2010

பொங்கல் நினைவுகள்!

புத்தாண்டின் பூரிப்பையும் அள்ளிக்கொண்டு பொங்கல் வந்தாச்சு...ஊர்ல இருந்திருந்தா இந்நேரம் உட்காரவே நேரமிருந்திருக்காது. இங்கேயிருப்பதால் சாவகாசமா பதிவே போடமுடியுது :)

பொங்கலன்று, அமீரகத்திலிருந்து,பாதிக் காசில் நம்ம ஊருக்கு போன் பண்ணலாம்ன்னு இங்குள்ள தொலைத்தொடர்புத்துறை (Etisalat)அறிவித்ததைத் தவிர பொங்கலுக்கு வேற ஒண்ணும் ஸ்பெஷலா இல்லை. முன்னெல்லாம், ஊரிலிருக்கும்போது, மார்கழி பிறந்ததுமே பொங்கலுக்கான கோலாகலம் கூடிவிடும்.

வெள்ளையடிக்கிறது,வேண்டாத சாமான்களைக் கழிக்கிறது,பரணிலிருக்கிற பாத்திரங்களையெல்லாம் எடுத்துக் கழுவிக் காயவைக்கிறதுன்னு வேலைக்குப் பஞ்சமே இருக்காது.அத்தோடு பண்டிகைக் காலத்து சுவாரசியமும் கொஞ்சமும் குறையாம இருக்கும். புதுசுபுதுசா கோலம் போடுறதும், கலர்ப்பொடி வாங்குவதும், வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்பிவைப்பதுமாக உற்சாகம் களைகட்டும்.

இப்பல்லாம் கேஸ் அடுப்பில், குக்கர் பொங்கல் வச்சாலும், அந்தநாட்களில், களிமண்ணில் பொங்கல் கட்டிசெய்து,காவிப்பட்டை கட்டிய முன் வாசலில் அடுப்புக்கூட்டி, பனை ஓலையை விறகாக்கிப் பொங்கல் வைத்த ஞாபகம் வராமலில்லை.

அடுப்புக் கட்டி செய்யக் களிமண் கொண்டுவந்ததும், கட்டி செய்யிறாங்களோ இல்லையோ, சின்னச்சின்னதா சட்டி பானையும், செப்பு சாமான்களும் செய்து காயவைத்த நினைவுகள் இன்னும் மனசில் காயாமலிருக்கிறது.

ஒதுங்கவைக்கிறேன்னு சாமான்களை உடைச்ச நினைவுகளையும், கழுவி வைக்கிறேன்னு,நிலைக்கண்ணாடியைக் கொண்டுபோய் வாய்க்கால் தண்ணீரில் அமிழ்த்திக் காலிபண்ணிய கதையையும் என்றைக்கு நினைத்தாலும் சிரிப்புத்தான் மிஞ்சும்.

அடுப்படி பிளாஸ்டிக் டப்பாக்களைக் கழுவுறேன்னு சொல்லி,நல்லபுள்ளையா வாங்கிட்டு வாய்க்காலுக்குப்போயி, டப்பாக்களைக் கப்பலாக்கிக் கூட்டாளிகளுடன் போட்டிபோட்டு விளையாடிய நினைவுகளெல்லாம் இப்போதும் மனசில் ஏக்கத்தை வரவழைக்கத்தான்செய்கிறது.

இப்பல்லாம் நம்ம ஊரில்கூட வருஷாவருஷம் வெள்ளையடிக்கிறதும்,வாசலில் காவிப்பட்டைபோட்டு அலங்கரிக்கிறதும், வெளிவாசலில் பொங்கல் வைக்கிறதும் குறைஞ்சிருந்தாலும், தமிழர் திருநாளான பொங்கலின் வருகை எல்லோருக்கும் பூரிப்பைத் தருவதாகத்தான் இருக்கிறது.

மஞ்சளும் மலர்களும் மணம்சேர்க்க, பொங்கலும் கரும்பும் சுவைகூட்ட நாம் எங்கேயிருந்தாலும் பொங்கல் திருநாளின் பெருமைகள் கொஞ்சமும் குறையாமல், வளர்ந்துவரும் சந்ததிக்கும் நம் பழமையான பாரம்பரியத்தை எடுத்துச்சொல்லும் கடமையுணர்வோடு தைத்திருநாளைக் கொண்டாடுவோம்.

மனம்நிறைந்த மகிழ்ச்சியுடன் அத்திருநாளைக் கொண்டாடிட,
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

********

திங்கள், 4 ஜனவரி, 2010

புர்ஜ் துபாய் கோலாகலம்!

துபாயில் எப்போது,என்ன நடந்தாலும் அது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும்வகையில்தான் அமைகிறது, அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாகயிருந்தாலும் சரி. நேற்றைய கோலாகலம் அதற்கெல்லாம் சிகரம்வைத்தாற்போல இருந்தது என்று சொன்னால் அது கொஞ்சம்கூட மிகையாகாது.

ஆவலுடன் எதிர்பார்த்த அனைவரின் எண்ணத்தையும் பூர்த்திசெய்வதுபோல, உலகின் மிக உயரமான புர்ஜ் துபாய் நேற்று துபாய் மன்னர் ஷேக் முஹம்மத் பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களால் மிகவும் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது.

828 மீட்டர் உயரம், 160 தளங்கள்,1.5 பில்லியன் டாலர்கள் பொருட்செலவில், ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பினால் உண்டாக்கப்பட்ட பூமியின் மிக உயரமான பிரம்மாண்டம் இது.

ஆயிரக்கணக்கான வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு ஐந்துமணிக்கே விழா தொடங்கப்பட்டாலும், இரவு ஏழு மணிக்குமேல்தான் சிறப்பு விருந்தினர்கள் வருகைதர நிகழ்ச்சிகள் களைகட்டத் துவங்கியது.புர்ஜ் துபாயின் விளக்குகளை எரியவைத்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் மன்னர்.


 


அமீரகத்தின் தேசிய கீதத்துக்கு அழகாக வளைந்து நெளிந்து நடனமாடி மக்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தின அங்கிருந்த நீரூற்றுகள்.

 


 


அப்புறம், புர்ஜ் துபாய் ஒரு பாலைவன ரோஜாவின் வடிவத்தில் உருவாகி வளர்ந்த கதையை ஒலியும் ஒளியுமாக அங்கே அமைக்கப்பட்டிருந்த திரைகளில் காட்டினார்கள். புர்ஜ் துபாய் உருவான வரலாறைப் பெருமையுடன் பேசினார் மன்னர்.

கதை சொல்லச்சொல்ல நீரும் நெருப்பும் போட்டிபோட்டுக்கொள்ள நீரூற்றுகளும் மின்னும் லேசர் ஒளிஓவியமுமாக, கோலாகலம் தொடங்கியது.

 


 


 


 


 


 பின்னர், சுற்றிலுமிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு அந்த இடத்தை வாணவேடிக்கைகள் அலங்கரிக்க மக்களின் ஆச்சர்யக் கூச்சலும் கரகோஷமும் விண்ணைப்பிளந்தது.நிஜமாகவே சொற்களுக்குள் அடங்காத அற்புதமான காட்சிகள்.புர்ஜ் துபாயின் அடிமுதல் நுனிவரை ஒளிப்பூக்கள் சிதற, விண்ணை வெளிச்சமாக்கியது வாணவேடிக்கை. கண்ணிமைக்க மறந்தது மக்கள்கூட்டம்.

 


 


 


கண்களை நிறைத்த காட்சிகளால் சொர்க்கம்போலத்தான் தெரிந்தது அந்த இடம்.

*********