செவ்வாய், 23 ஜூன், 2009

கண்முன்னே அழியும் கலையொன்று...கடிதம்!
அப்பல்லாம், விடுதியிலேயிருந்து வீட்டுக்குக் கடிதம் போடும்போது, அப்பா, அம்மா, அக்கா, தம்பி, ஆடு,மாடு,அக்கம்பக்கத்துக்காரங்கன்னு அத்தனை பேரையும் விசாரிச்சு எழுதுவேன்.

அம்மா உன்னைப் பாக்காம, உன்னோட சமையலை சாப்பிடாம ரொம்ப கஷ்டமா இருக்கும்மான்னு எழுதினதுக்காக எங்கம்மா ரெண்டுமூணுநாள் கண்ணீர்விட்டதா சொல்லி, "மகளே, உன் பாசத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திட்டுக் கடிதம் எழுதும்மா" ன்னு அப்பா அடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

ஆனா, இப்ப ஒரு மகன் அவங்க அப்பாவுக்குஅஅனுப்பின மெயிலைப் பார்த்தபிறகு, இந்தக் காலத்தில பாசம்தான் குறைஞ்சுபோச்சா இல்லே, யாருக்கும் அதை வெளிப்படுத்தத் தெரியலியான்னு புரியவே இல்லேன்னு அநியாயத்துக்கு வருத்தப்பட்டார் அந்த பாவப்பட்ட அப்பா.

அவர், பிரிண்ட் எடுத்து வைத்திருந்த கடிதத்திலிருந்த விஷயம் இதுதான்...

hi dad,

h r u?

I have some urgent expenses here. Send Rs 2000 immediately.

tc

Ganesh

கொஞ்சமா எழுதினாலும் பையன் விஷயத்தில தெளிவாத்தான் இருக்கான்னு நான் நினைச்சுக்கிட்டேன்.

இன்லண்ட் லெட்டரிலும் ஏர் மெயிலிலும் இதயத்தைப் பரிமாறிக்கொண்ட காலம் அது...முன்னெல்லாம்,படிப்புக்காக விடுதியில இருந்தாலோ,வேலைக்காக வெளியூர்ல இருந்தாலோ வாரத்துக்கு ஒரு கடிதமாவது வீட்டுக்கு எழுதுவாங்க. கல்யாணமான புதுசுல மனைவியை விட்டு வேற ஊர்ல இருந்தா சொல்லவே வேண்டாம்... தினம்தினம் கடித மழைதான்.இந்தக் காலத்தில் செல்போனும், கணினியும் வந்து ஆக்ரமிச்சுகிட்டதால,கடிதம் எழுதுகிற அந்தக் கலையை நாம கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டுதான் வரோம்.

கணினியில தட்டித்தட்டி நிறைய பேருக்குக் கையெழுத்தே மறந்துபோச்சுங்கிறது தனிக்கதை.
எனக்கெல்லாம் இ கலப்பையில எழுதிப் பழகிட்டு, எங்கேயாவது கையால் எழுத நேர்ந்தா ஏகப்பட்ட எழுத்துப்பிழை வேற...

கல்லூரிக் காலத்தில கடிதம் எழுதும்போது இன்லாண்ட் லெட்டரில் ஒட்டும் இடம் தவிர எல்லா இடத்திலும் எழுதி நிறைத்ததுண்டு. எங்கம்மா எங்கிட்ட சொல்லுவாங்க, எல்லாரும் கடிதம் எழுதும்போது அன்புள்ள அம்மா அப்பாவுக்குன்னு ஆரம்பிப்பாங்க. ஆனா, உனக்கு அங்கேயும் அப்பாதான் முதல்ல, அம்மா அடுத்ததுதான்" என்று ஆதங்கப்படுவாங்க. அந்த அளவுக்கு கடிதங்கள் பாசத்தின் பிரதிபலிப்புகளாக இருக்கும்.

பல வருஷங்கள் முன்னால் எழுதிய கடிதங்களை எடுத்துத் திரும்பப் படித்துப்பார்ப்பதன் சுவாரசியமே தனிதான். முன்னெல்லாம் வீடுகளில், ஓட்டுச்சரிவிலோ அல்லது ஜன்னல் கம்பியிலோ ஒரு கனத்த கம்பியைத் தொங்கவிட்டு அதில அப்பப்போ வர்ற கடிதங்களை அழகா குத்தி அடுக்கி வச்சிருப்பாங்க.அன்புக்கு மட்டுமல்லாமல் பல அத்தியாவசியமான விஷயங்களில் சாட்சியாகவும் இருக்கும் இந்தக் கடிதங்கள்.எழுதியதை இல்லேன்னு சொல்லமுடியாதில்ல...

கடிதத்தில் எழுதும் விஷயங்கள் கல்வெட்டு மாதிரி.சிலர் எழுதும் கடிதங்களை பலமுறை படித்துப்பார்க்கத்தோன்றும்.உதாரணமா, என் தோழி ஒருத்தி எழுதிய கடிதங்களை நான் ஒன்றுக்குப் பத்து தடவை படித்ததுண்டு. புரியாம இல்லீங்க, அவ எழுதும் விதத்தில் எல்லா வார்த்தைகளும் அழகாகிவிட்டதுபோல ஒரு பிரமை தோன்றும் அப்போது.

"சின்னதொரு வட்டத்திற்குள் நிற்காம, அந்த வட்டத்தை விட்டு வெளியே வாங்க"ன்னு இருபது வருஷங்களுக்கு முன்னால் அவ எழுதிய அந்த பொருள் பொதிந்த வார்த்தைகளை இன்னும் மனசிலிருந்து அழிக்கத்தான் முடியல...

*************

ஞாயிறு, 21 ஜூன், 2009

ரோஜாப்பூ சட்னி

ரோஜாப்பூச்சட்னின்னதும், நிஜமாவே ரோஜாப்பூவை வச்சு செய்யிற சட்னின்னு நினைக்காதீங்க...இது காரணப்பெயராக்கும். பக்குவமா வதக்கி பதமா அரைச்செடுத்தா இந்தச் சட்னி ரோஜாப்பூ நிறத்தில் வரும். சிவப்பு ரோஜா இல்லை...பிங்க் ரோஜா.

தேவையான பொருட்கள்:-

பெரிய வெங்காயம் - 2

பழுத்த தக்காளி - 1

மிளகாய் வற்றல் - 6

உப்பு - தேவையான அளவு

தாளிக்க, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு...


பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கோங்க.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு,உளுந்து தாளித்து, அதில் மிளகாய்வற்றலைப் போடுங்க.

எண்ணெயில் மிளகாய் வறுபட்டதும், வெங்காயம் தக்காளியை உப்புச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கிக்கோங்க.

வதக்கிய கலவையை ஆறவிட்டு, மிக்சியில் அரைத்தெடுத்தால் ரோஜாப்பூச்சட்னி ரெடி.

இட்லி தோசைக்கு நன்றாக இருக்கும்.

பி.கு : மிளகாய் கருகினாலோ,வெங்காயம், தக்காளி அதிகமாக வதங்கினாலோ நிறம் சரியாக வராது.

**********

ஞாயிறு, 14 ஜூன், 2009

கருப்பட்டிக்காப்பியும், கடந்தகாலத்து நினைவுகளும்...


ரொம்பநாளா அழைச்சிட்டிருந்த ஒருத்தங்க வீட்டுக்குப் போயிருந்தோம்...

அந்தம்மாவின் கணவர் வந்து எங்களை வரவேற்று உட்காரச்சொன்னார். வீட்டுக்கார அம்மாவையோ பிள்ளைகளையோ யாரையும் காணோம். கொஞ்சம் நேரம் கழிச்சு அந்தம்மா வந்தாங்க புன்னகையோட. பிள்ளைகளை எங்கேன்னு கேட்டேன். ஒவ்வொருத்தரா அவங்கவங்க ரூமுக்குள்ள இருந்து வந்து எட்டிப்பாத்துட்டுப் போனாங்க.

பேச ஆரம்பித்தோம்...நாங்க கேள்வி கேட்க அவங்க அளவா பதில்மட்டும் சொல்லிட்டிருந்தாங்க. ஒருவேளை அதிகமா பேசத்தெரியாதோன்னு ஆச்சரியமாயிருந்தது.
(ஒருவேளை நாமதான் அளவுக்கதிகமா பேசுறோமோன்னு சந்தேகம்கூட வந்தது)

கொஞ்சநேரத்தில் வேலையாள் வர,காப்பியும் பிஸ்கட்டும் கொடுத்தாங்க. 50 மிலி சைசுக்கு அழகான கப். அதிலே ஆவி பறக்க காப்பி. காப்பியில ஆவி பறக்க, என் மனசு பழைய நினைவுகளில் பறக்க ஆரம்பிச்சிது.

ஆச்சி வீட்டு முற்றம்... மேலே கம்பியில் படந்த முல்லைக்கொடி.மயங்கிய மாலை...மணத்தோடு தழுவிய மெல்லிய காற்று.

பெரிய பாத்திரத்தில் மணக்கமணக்க கருப்பட்டிக் காப்பியும், அதனுள் பெரிய குழிக்கரண்டியுமாக சித்தி வந்து உட்கார, வாண்டுகள் பெரியவங்க அத்தனைபேரும் சுற்றி உட்கார்ந்திருப்போம். ஒரு பிளாப்பெட்டி (பனை ஓலையில் செய்த பெட்டி) நிறைய முறுக்கும், கால் லிட்டர் சைசுக்கு தம்ளர்களுமாய் ஆச்சி வர, ஒவ்வொருத்தருக்காய் காப்பியை ஆற்றி, அதுக்குள்ளே, ஆளுக்கு ரெண்டு கைமுறுக்கை நொறுக்கிப்போட்டு கையிலே கொடுக்க, காப்பியின் சுவையும் கதைபேசும் சுவாரசியமும் சேர, ஒரு டம்ளர் காப்பியைக் குடித்துவிட்டு இன்னும் வேணும்னு கைநீட்டிய அனுபவமும் ஒண்ணொண்ணாக நினைவுக்கு வந்தது. அப்பல்லாம், காப்பி குடித்து முடிந்ததும் வயிறு மட்டுமில்லை...மனசும் நிறைஞ்சிருக்கும்.

காப்பி குடிக்கையிலும், கையில் சோறு உருட்டித் தரும்போதும் எத்தனை கதைகள் பேசியிருப்போம்? எத்தனை விஷயங்கள் அறிந்திருப்போம்? இந்தக்காலத்தில் எத்தனைபேர் வீட்டில் எல்லாரும் ஒண்ணாக உட்கார்ந்து காப்பியோ, சாப்பாடோ சாப்பிடுகிறோம்? எத்தனைபேர் அந்நேரத்தில் மனசுவிட்டுப் பேசிக்கொள்கிறோம்?

எல்லாவற்றையும் மறந்துதான் போய்விட்டோம்...வீட்டில் ஆளுக்கொருமூலையில் ஒருத்தராக, அவரவர் விரும்பும்போது சாப்பிட்டுக்கொண்டு, தொலைக்காட்சியையோ, கணினித் திரையையோ வெறித்தபடி, வாய்விட்டுப்பேசக்கூட மனமில்லாததுபோல...மனசு நிறைய புழுக்கத்தைச் சுமந்தபடி...

சுருங்கிப்போனது காப்பி கப் மட்டுமா, நம் மனங்களும்தானா?

*************

சனி, 13 ஜூன், 2009

கண்ணாடி மேஜை வாங்கப்போறீங்களா? கவனம்!!!

புதுசா வீட்டுக்குக் கண்ணாடிமேஜை வாங்கப்போறீங்களா??? கவனம்!! ஏற்கெனவே உங்க வீட்டில் இருக்குதுன்னாலும் கவனம்!!!

நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை... இன்றும் விடுமுறையென்பதால் நேற்று உறங்கப்போகையில் இரவு மணி 1.45 இருக்கும். படுக்கப்போகும்போது, விடியலில் அப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.

காலையில் 6.30 க்கு விழிப்பு வந்தது. கண்ணைக் கசக்கியபடி அறையைவிட்டு வெளியே வந்தேன். முன்னறையில், தரையில் சின்னச்சின்ன ஒளிப்பிரதிபலிப்புகள். வெளியிலிருந்துவரும் வெளிச்சம் ஏதோ கண்ணாடியில்பட்டு எதிரொளிக்கிறதோ என்று உற்றுப்பார்த்தேன். தரையில் சின்னச்சின்ன கண்ணாடி மின்னல்கள். அவற்றிலொன்றைக் கையிலெடுத்துப் பார்த்தபடி, எங்கேயிருந்து வருகிறதென்று பார்வையை ஓட்டினேன். டைனிங் ரூம் கதவு பாதியளவு திறந்திருக்க, அங்கேயிருந்து கண்ணாடிச்சில்லுகள் வெளியே சிதறியிருப்பது தெரிந்தது. அதிர்ச்சியுடன் கால்களைச் செருப்புக்குள் நுழைத்தபடி அறைக்குள் எட்டிப்பார்த்தேன்.

வீட்டுக்குள் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மூளையில் பளிச்சிட, என் கணவரை எழுப்பி விஷயத்தைச் சொல்லிவிட்டு, குழந்தைகளின் அறைக்குள் சென்று பார்த்தேன். எல்லாரும் அசந்து தூங்கிக்கொண்டிருக்க, மறுபடியும் வந்து டைனிங் ரூமை எட்டிப்பார்த்தேன். அறையின் இன்டீரியருக்குப் பொருத்தமாகத் தேடிப்பிடித்து வாங்கி ஒரே மாதமான கண்ணாடி மேஜை சில்லுசில்லாகச் சிதறிப்போயிருந்தது. வேகமாய்ச்சென்று அறையின் திரையை விலக்கிப்பார்த்தேன். ஜன்னல் மூடியபடியே இருந்தது. வாசல் கதவினைப்பார்த்தேன். அதுவும் இரவில் நான் பூட்டியபடியே இருந்தது.

அறையில் மின்விசிறியின் சுவிட்சைப்போட்டேன். தலையில் விழுந்து சிதறியது கண்ணாடி அட்சதை. அதிர்ந்துதான் போனேன். அறையின் சுவரோரமெங்கும் தெறித்துச் சேர்ந்திருந்த கண்ணாடிச்சில்லுகள். கலவரம் நீங்காமல் வந்து கணினியை உயிர்ப்பித்துப் பார்த்தேன். என்னைப்போல் அனுபவம் ஏகப்பட்டவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறதை நினைத்து இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

வாங்கி இருபத்தொன்பதே நாளில், இப்படியிருந்த எங்க வீட்டு மேஜை,எந்த ஒரு அதிர்வுக்கும் ஆளாகாமல் இப்படி வெடித்துச் சிதறியதன் மர்மம் என்ன?மேஜையிலிருந்து சிதறிய பாத்திரம் வைக்கும் தட்டுகள்...இன்னமும் விழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் துண்டு...அறையின் மூலையெங்கும் சிதறல்கள்...மேஜைக்கு மேலிருந்த தண்ணீர் ஜாடி தானும் சிதறிப்போய்...என்னைப்போன்ற சிலரின் அனுபவங்கள்
இங்கே...

இன்னும் இங்கே...

இன்னும், இங்கேயும் கூட...

கண்ணாடியை உருவாக்கும்போது இடையில் ஏதேனும் காற்றுக்குமிழ்கள் இருந்தாலோ, கண்ணாடியைப் பொருத்துகையில் மெல்லிய நூலிழை விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலோ, இன்னும் சில தொழில்முறைக் கோளாறுகளாலோ இவ்வாறு கண்ணாடி வெடித்துச் சிதறும் வாய்ப்பு உண்டு என்றும் படித்துத் தெரிந்துகொண்டேன்.

ஆசையாய் வாங்கிய மேஜை சிதறிப்போனாலும், ஒரு சில இடங்களில் நிகழ்ந்ததுபோல ஆபத்தான காயங்களை யாருக்கு ஏற்படுத்தாமல் எல்லாரும் உறங்கும்வேளையில் உடைந்து சிதறியது ஒருவிதத்தில் நிம்மதியாகத்தான் இருந்தது.

இனிமேலும் வீட்டில் கண்ணாடி மேஜை வாங்கணுமா?

ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிச்சிட்டு வாங்குங்க...

*************

வெள்ளி, 12 ஜூன், 2009

உளுத்தங் கஞ்சி ( Urad Dal Porridge)உடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. எளிதாகச் செய்யப்படும் இந்த உளுத்தங் கஞ்சி மிகவும் மணமானதும் சுவையானதும் கூட. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவாகக் கொடுக்கக்கூடிய சத்தான உணவு இது.

தேவையான பொருட்கள்

தோலில்லாத வெள்ளை உளுந்து - 100 கிராம்

பச்சரிசி - 50 கிராம்

பால் -1/2 லிட்டர்

சர்க்கரை - தேவைக்கேற்ப

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:-

பாலை நன்றாகக் காய்ச்சி ஆறவிடவும். உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் நீரில் கழுவி, குக்கரில் வைத்து நன்றாகக் குழைய வேகவைத்துக்கொள்ளவும். குக்கரைத் திறந்தபின் வெந்த பருப்பையும் அரிசியையும் கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, பாலை அதில் சேர்க்கவும்.தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து சிட்டிகை உப்பும் சேர்த்துக் கலந்துவிடவும். சுவையான உளுத்தங் கஞ்சி தயார்.

தேவையானா, ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். ஆனா, அப்படிச் சேர்க்கும்போது உளுந்தோட இயல்பான வாசனை இல்லாம போயிடும். உளுத்தம்பருப்புக்குப் பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதுபோல கஞ்சி செய்யலாம்.

செவ்வாய், 9 ஜூன், 2009

அலைக்கரையில் அழகனின் வீடு | திருச்செந்தூர்

அறுபடைவீடெனும் அழகன் முருகனின் ஆலயங்கள் ஆறினைத் தன்னகத்தேகொண்ட பெருமையுடையது அன்னைத் தமிழ்நாடு. அவற்றுள் இரண்டாவது இடமாகச் சிறப்புபெற்றிருப்பது செந்திலம்பதியென்றும் திருச்சீரலைவாயென்றும் அழைக்கப்படும் திருச்செந்தூர்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுக்காலப் பழமையான வரலாறுடைய இந்தக் கோயில், குன்றுதோறாடிய குமரனுக்காக, அலைக்கரையில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பாகக் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புக் காணப்பட்டுள்ளதாகக் கூறுவதன்மூலம், இக்கோயிலின் தொன்மையையும் பெருமையையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.

இது, கடற்கரையிலிருந்து தெரியும் கந்தனின் ஆலயத்தோற்றம்...கோயில் வாயிலில் கொள்ளை அழகாய் குட்டி யானை...சேயோன் முருகன் சூரனை வதைத்து தேவர்களைக் காத்த நிகழ்வு இங்கே சூரசம்காரமாக ஆண்டுதோறும் அலைக்கரையில் நிகழ்த்தப்படுவது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாகும்.
கந்த சஷ்டியில் ஆறுநாளும் விரதமிருந்து அழகனை வேண்டினால், குழந்தையில்லாதவர்களுக்கும் குழந்தைப்பேறு நிச்சயம் என்பது இங்குள்ள மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனைச் சுருக்கமாக, "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்று கூறுவார்கள். அதாவது சஷ்டியாகிய கந்தனுக்குகந்த நாட்களில் விரதமிருந்தால் அகப் பையாகிய கருப்பையில் குழந்தைச் செல்வம் உருவாகிவரும் என்பது இதன் பொருளாகும்.

கந்தசஷ்டிக்கவசம் பாடிய தேவராயமுனிவர், தீராத வயிற்றுவலியினால் அவதிப்பட்டு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்தாராம். அச்சமயம் அங்கே நடந்துகொண்டிருந்த சஷ்டி விழாவினைக்கண்டு பக்தியுடன் பாலன் முருகனை வேண்டிக்கொள்ள, அவருடைய குறைதீர்ந்ததாகவும், அதனால் மனமகிழ்ந்த அவர் முருகப்பெருமான்மேல் கந்த சஷ்டிக்கவசம் இயற்றி, பாடிப் பரவினாரென்றும் பக்தர்கள் கூறுவர்.

கடற்கரையில் கந்தசஷ்டியின்போது சூரனை வதைத்தபின் சுப்பிரமணியக்கடவுள் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் மண்டபம் தூரத்தெரிகிறது. சூரசம்காரத்தன்று அலைக்கரையெங்கும் மக்களின் தலைகளாகக் காட்சியளிக்குமென்பார்கள்.ஆலயத்தின் ராஜகோபுரம் பராமரிப்புப்பணிகளுக்காகக் கூரையின் மறைவில்...கோபுரவாயில்...குளிர்நிழலில் உறங்கும் மக்கள்...கருவறைக்கோபுரம்...கற்சுவர் இடைவெளியில்...கடற்கரையை அடுத்து வள்ளி ஒளிந்ததாகக் கூறப்படும் வள்ளிகுகை உள்ளது இதன் உள்ளே பக்தர்கள் சென்று தரிசிக்க ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது இதுதான் வள்ளிகுகையின் நுழைவாயில்...உள்ளே தெரிகிறது வள்ளிகுகை...அலைகடலிலிருந்து சில அடிகள் தொலைவிலேயே நாழிக்கிணறு எனும் நன்னீர் ஊற்று உண்டு. கடலில் நீராடியபின் ஸ்கந்ததீர்த்தமெனும் இந்த நாழிக்கிணற்றிலும் நீராடினால் தீராத நோயும் தீருமென்பது ஐதீகம். சூரபதுமனை வென்ற தன் படையினரின் தாகம்தீர்க்க கந்தனே இக்கிணற்றை உண்டாக்கியதாகக் கூறுவார்கள்.

நாழிக்கிணற்றருகே நெடிதுயர்ந்த பனைமரங்கள்...ஓயாமல் அழகன் முருகனின் புகழ்பாடும் ஓங்கார அலைகள்...செந்திலதிபனின் ஆலயத்தில் பன்னீர் இலையில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் பிரசித்தமானது. சுப்பிரமணியக்கடவுளிடம் இந்த இலைவிபூதியை வாங்கியணிந்த விஸ்வாமித்திரமுனிவர், தன் காசநோயிலிருந்து விடுபட்டதாகவும் புராணங்கள் கூறுவதாகச் சொல்வார்கள். முருகனின் பன்னிரு கரங்கள்போல் இப்பன்னீர் இலையில் பன்னிரு நரம்புகள் ஓடுமென்றும் சொல்வார்கள்.

நவக்கிரகத்தலங்களில் இது குருவுக்கு உகந்த தலமாகும். பாஞ்சால மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் சுரங்கவழியாக தினமும் வந்து சுப்பிரமணியப்பெருமானைத் தரிசித்ததாகவும் கூறுவர். இன்றும் அன்றாடம் திருவிழாப்போல ஆயிரமாயிரம் மக்கள் இக்கோயிலுக்கு வந்து குமரனருள் பெற்றுச்செல்வதைக் காணமுடிகிறது.

ஆயிரம் பெருமைகளுடைய அழகன் முருகனின் ஆலயத்தை அனைவரும் தரிசித்து அவனருள் பெற்று அல்லலில்லாப் பெருவாழ்வினை அடைந்திட வேண்டுகிறேன்.

*************

திங்கள், 8 ஜூன், 2009

மிரள வைத்த புரளிகள்!

புரளி, இந்த வார்த்தைக்கு இருக்கும் மவுசு மிகமிக அதிகம்ங்க...காத்தைக்காட்டிலும் வேகமா பரவுவது இதோட முக்கியமான ஸ்பெஷாலிடி...மறக்கமுடியாத அந்த சுனாமிக்கப்புறம், எங்கே பூகம்பம் வந்தாலும் கூடவே சுனாமி புரளி...அடிக்கடி ரயிலிலும், விமானத்திலும் வெடிகுண்டு புரளி. இருப்பவரை இறந்துட்டார்ன்னும், இறந்தவரை இருக்கிறார்ன்னும் சொல்லும் இதுமாதிரி ஏகப்பட்ட புரளிகளை இன்றைக்கும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

சின்ன வயசில் கேட்டு, அச்சத்தோடு அம்மா முந்தானையைப் பிடித்துக்கொண்டு தூங்கவைத்த இதுமாதிரி விஷயங்களின் எண்ணிக்கை நிஜமாகவே அதிகம்ங்க. அப்போ, செல்லம்மா பாட்டி சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆடிமாச சீசன்ல, நெசவாளிங்க, சிவப்புப் புடவையில சாயம் சரியா ஏறலேன்னா, ஏதாவது புரளியைக் கிளப்பிவிடுவாங்கன்னு....இது என்ன டெக்னிக்கோ என்னவோ, அப்ப விபரம் புரியாம கேட்டுக்கிட்டிருந்தாச்சு. இப்ப விபரம் கேட்க பாட்டிவேற உசுரோட இல்ல...

ஆலங்குளத்துல தலையில்லாத முண்டமொண்ணு அலையுதாம்ன்னு சொல்லி, அறுவது கிலோமீட்டர்க்கு அப்பால கிலியைக் கிளப்பின அந்த நினைவுகளை இன்னும் மறக்கமுடியல. வீட்டு வாசல்ல, வேப்பிலையைச் சொருகி வச்சிட்டு, பாத்ரூமுக்குப் போகையில், படு சத்தமாகப் பாடுப்பாடிய அந்தநாள் நினைவுகளை இப்ப நினைச்சா சிரிப்புத்தான் வருது ( சத்தமா பாட்டுப் பாடினா பக்கத்துல ஏதும் வராதுன்னு ஒரு அசட்டு தைரியம்...அதிலயும் நல்ல சாமிப் பாட்டா தேர்ந்தெடுத்துப் பாடுவோம்ல...)

அது மாதிரி இன்னோண்ணு...இருக்கன்குடி மாரியம்மனுக்கு, இருக்கிற இடத்தில் ஒழுங்காக மரியாதை செய்யப்படலியாம். அதனால ஆத்தா கோவிச்சுக்கிட்டு, சின்னக்குழந்தையா உருவமெடுத்து, அழகா பட்டுப்பாவாடையெல்லாம் கட்டி, அந்த ஊர் டவுண் பஸ்ஸில ஏறி, டிக்கெட் எடுக்காம, அடுத்த ஊர்ல போயி அலுங்காம இறங்கிடுச்சாம். 

ஒத்தையா இறங்கின சின்னப்பொண்ணைப் பார்த்து, எங்கேதான் போகுதுன்னு பார்க்க பஸ் கண்டக்டர் பின்னாடியே போனாராம். சட்டுன்னு பார்த்தா அந்த குட்டிப்பொண்ணு கல்லு சிலையா மாறிப்போக, பஸ் டிக்கட்டுக்கான காசு, சிலையோட காலடியில் சில்லறையா இருந்துச்சாம்.

இந்தக் கதையைக் கேட்டுட்டு, அப்ப ஏராளம்பேர், செவப்புச்சேலை கட்டிக்கிட்டு இருக்கன்குடி பக்கம் போனாக. போய்ட்டு வந்து அவுக சொன்ன கதைகள் அதைவிட இன்னும் ஏராளம் ஏராளம்.

இந்தியாவில ஏதோ ஒரு மூலையில பரப்பப்படும் ஒரு புரளி, எந்தச் செலவுமில்லாம கடல் கடந்துவந்து, இங்கேயும் பரவுவது இன்னும் அதிசயம்தான். ரெண்டு வருஷமிருக்கும்... திருப்பதியில அம்மா அலர்மேல் மங்கையோட கழுத்தில இருந்த தாலிச்சரடு கழண்டு விழுந்திடுச்சாம்னு சொல்லி, அவங்கவங்க ஆத்துக்காரருக்கு ஆயுசு கெட்டியா இருக்கணும்னா, எல்லாரும் கழுத்தில மஞ்சள் கயிறு கட்டிக்கோங்கன்னு ஊர்லேருந்து உத்தரவுவர, அக்கம்பக்கமிருந்தவங்கல்லாம் அலைஞ்சு திரிஞ்சு கயிறு வாங்கிக் கட்டிக்கொண்டது தனிக்கதை.

ஆக, வெருள வைக்கும் புரளிகள் அப்பப்போ வந்து கிலியைக் கிளப்பினாலும் அப்புறம் கேட்க, எல்லாமே சுவாரஸ்யம்தான்.

************

வெள்ளி, 5 ஜூன், 2009

பாரதம் படிக்கலாம் வாங்க...(6)

அம்பாவின் அவலமும்,அவள்செய்த சபதமும்
************************************************

பீஷ்மர் அனுப்பிய பாதுகாவலர்களுடன் சௌபல நாட்டை அடைந்தாள் அம்பா. தான் விரும்பிய மன்னன் சால்வனிடன் சென்று நடந்த விபரங்களை எடுத்துரைத்தாள். பீஷ்மர் தன்னை விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுமாறு அனுப்பிவைத்ததையும் கூறினாள் அவள்.

அம்பாவின் வாய்மொழியைக் கேட்ட மன்னன் சால்வன், ஏற்கெனவே தான் பீஷ்மரிடம் தோல்வி அடைந்த கசப்பான நினைவினில் தோய்ந்திருந்தபடியால்,

" சுயம்வரத்தில் நடந்த போரில் இறுதிவரை போராடி பீஷ்மரிடம் தோற்றுப்போனேன் நான். இனி என்னால் உன்னை மணக்க இயலாது. நீ சென்று உன்னைச் சிறையெடுத்துச்சென்ற பீஷ்மரையே திருமணம் புரிந்துகொள்"

என்று மனவெறுப்புடன்கூறி, அம்பாவை மீண்டும் அஸ்தினாபுரத்துக்கே அனுப்பிவிட்டான்.

மீண்டும் வந்து பீஷ்மரைச் சந்தித்தாள் அம்பா. மன்னன் சால்வன் தன்னை நிராகரித்ததைக் கூறினாள் அவரிடம். அம்பாவின் துயரம் கண்டு மனவருத்தமடைந்த பீஷ்மர், தம்பி விசித்திரவீரியனிடம் அம்பாவையும் மணம்புரிந்துகொள்ளுமாறு கூறினார்.

" இன்னொருவனை விரும்பிய பெண்னை நான் மணம்புரியமாட்டேன்" என்று விசித்திரவீரியனும் மறுக்க,அம்பாவின் மனதில் இயலாமையால் எழுந்த கோபம் இன்னும் அதிகமாகியது.

"பீஷ்மரே, உம்மால்தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. அதனால் நீரே என்னைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்"

என்று சினத்துடன் கூற, சத்தியம் தவறாத பீஷ்மர், தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாய் வாழ்வதாகச் செய்த சபதத்தை எடுத்துரைத்து, அம்பாவின் வேண்டுகோளை மறுத்தார்.

அம்பாவின் கோபம் அளவின்றிப் பெருக, பீஷ்மரைப் பழிவாங்கிடும் வெறியும், வெறுப்பும் அவள் மனதில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

"பீஷ்மரே, என் வாழ்வின் அத்தனை வலிகளுக்கும் காரணமான உம்மைக் கொல்லாமல் விடமாட்டேன்"

என்று சபதம் செய்தாள் அம்பா.

பீஷ்மருக்கு எதிரியான மன்னர்களை ஒன்றுகூட்டி அஸ்தினாபுரத்தின்மேல் படையெடுக்கத் திட்டமிட, பீஷ்மரின் போர்த்திறமைக்கு அஞ்சிய மன்னர்கள் அம்பாவின் வேண்டுகோளை நிராகரித்தனர்.

மன்னர்கள் மறுதலிக்க, மாயோன் மருகனாகிய சுப்ரமணியக்கடவுளின் கருணை வேண்டினாள் அம்பா. அம்பாவின்முன் தோன்றிய அழகுக்கடவுள் அவளுக்கு வாடாத மலர்களுடைய தாமரைமலர் மாலையைக் கொடுத்து,

"இந்த மாலையைச் சூடுபவன் எவனோ, அவன் பீஷ்மருக்கு எதிரியாவான்"

என்று கூற,வாடாமலர் மாலையைச் சூடும் வீரனைத் தேடலானாள் அம்பா. பீஷ்மரின் பராக்கிரமம் அறிந்த யாரும் அம்மாலையைச் சூட முன்வராதுபோக, இறுதியாக மன்னன் துருபதனின் மாளிகைக்குச் சென்று, தன் வேண்டுதலை ஏற்று, மாலையைச் சூடிக்கொள்ளுமாறு கூற, அம்பாவின் துயரம் அதிகரிக்கும்படியாக, துருபத மன்னனும் அதைச் சூட மறுத்துவிட்டான்.

மன்னன் மறுத்த மாலையை, அவன் மாளிகையின் வாயிற்கதவில் தொங்கவிட்டுவிட்டு, கானகம் நோக்கிக் கவலையுடன் சென்றாள் அம்பா. கானகத்தில் கண்ட துறவிகளில் சிலர், அவளுடைய சோகக்கதையைக் கேட்டு, பீஷ்மரின் குருவாகிய பரசுராமரிடம் செல்லும்படி அறிவுறுத்தினர்.

குருவின் ஆணையை பீஷ்மர் மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன், பரசுராமரைச் சென்று சந்தித்தாள் அம்பா. தன் அளவிலாத சோகத்தை அவரிடம் எடுத்துரைத்தாள். அம்பாவின் கதை அவரை நெகிழச்செய்ய, தன் சீடனான பீஷ்மரிடம் அவளை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார் பரசுராமர். தன் உறுதிமொழியை மனதில்கொண்டு மறுத்தார் பீஷ்மர். எடுத்த சபதத்தை எக்காரணம்கொண்டும் விடமாட்டேன் என்று கூறிய பீஷ்மரின் பதில் பரசுராமரையும் ஆத்திரம் கொள்ளச் செய்தது.

ஆத்திரம் வலுத்து, ஆசானும் மாணவனும் ஆயுதமேந்திப் போரிட ஆரம்பித்தனர். பலநாள் நீடித்தபோர் இறுதியில் பரசுராமர் பீஷ்மரிடம் தன் தோல்வியை ஒத்துக்கொள்ள, பரசுராமர் அம்பாவிடம், பீஷ்மரின் கருணையைப் பெறுதலே கடைசி வழியென்று கூற,பீஷ்மரின் காலில் விழுவதைக் காட்டிலும் பிறைசூடிய பரமனின் பாதத்தில் சரணடைவதே சிறந்தவழியென்று எண்ணி, சிவனை நாடி இமயம் சென்று கடுந்தவம் இயற்றலானாள் அம்பா.

தவத்தில் அகமகிழ்ந்து அம்பாவின் முன் தோன்றினார் ஆலகாலமுண்ட சிவபெருமான். பீஷ்மரைக் கொல்லவேண்டுமென்ற அம்பாவின் வேண்டுகோளைக் கேட்டு,

" பெண்ணே, நீ வேண்டும் வரம் இறை நியதிக்கு மாறானது. யாராலும் கொல்ல இயலாத ஆசிகளையும்,வரத்தையும் பெற்றவன் பீஷ்மன்.ஆனால், மனிதப் பிறவியெடுத்த எவரும் ஒருநாள் மரணமடைந்துதான் ஆகவேண்டும். அதனால், பீஷ்மரை கொல்லும் வரத்தை உனக்கு நான் வழங்குகிறேன். ஆயினும், உன்னுடய இந்தப் பிறவியில் நீ அவரை வெல்ல இயலாது. இன்னொரு பிறவியெடுத்து நீ துருபத மன்னனின் மகளாகப் பிறக்கும்போது உன்னுடைய இந்த ஆசை நிறைவேறும்"

என்று வரமளித்தார் சிவபெருமான்.

அடுத்த பிறவிவரை காத்திருந்து தன் ஆவேசத்தைத் தீர்த்துக்கொள்ள இயலாத அம்பா, துருபத மன்னனின் நாட்டுக்குச் சென்று அங்கு அரண்மனை முன்னர், தீயை வளர்த்து, அந்த நெருப்பில் புகுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

தோல்வியும்,துயரமுமாய், தன் உயிரைமுடித்த அம்பா, துருபத மன்னனின் மகளாக மறுபிறவியெடுத்தாள். பிறவியைக் கடந்தும் பிறழாத உறுதியுடன், இளமை முதலே யுத்தநெறிகளைக் கற்றுத் தெளிந்தாள் அவள். சில ஆண்டுகளுக்குப்பின் அரண்மனை வாயிலில் கிடந்த, அச்சத்தின் காரணமாய் யாரும் தொடாமலே இருந்த, ஆறுமுகக்கடவுள் கொடுத்த அழகிய மலர்மாலையை எடுத்துச் சூடிக்கொண்டாள்.

மகள் சிகண்டினியின் செயலால், அவளுக்கும் தனக்கும் பீஷ்மரால் ஆபத்துவரும் என்று எண்ணிய துருபத மன்னன், அவளை அரண்மனையைவிட்டு காட்டுக்கு அனுப்பிவிட்டான்.காட்டில் கந்தர்வன் ஒருவனின் உதவியால் ஆணாக மாறி சிகண்டி என அழைக்கப்பட்டாள் சிகண்டினி.

சிகண்டி எனும் ஆணின் உருவத்தில் இருந்தபடி,தன் இணையற்ற போர்த்திறனால் புகழ்பெற்று ,மக்களால் மஹாரதி என்று அழைக்கப்பட்டாள் அவள். மனமெங்கும் பரவிய பழியுணர்ச்சியுடன் பீஷ்மரைக் கொல்லும் நாளுக்காகக் காத்திருக்கலானாள் சிகண்டியின் உருவிலிருந்த சினம்கொண்ட அம்பா.

வியாழன், 4 ஜூன், 2009

கோதுமைப் பணியாரம் | காரம் & இனிப்புப் பணியாரம்இது, மிகவும் எளிதான ஒரு சிற்றுண்டியாகும்.

கோதுமை மாவை பணியாரம் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்றுமணிநேரம் முன்பாகவே உப்பு மட்டும் சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவேண்டியது மிகவும் முக்கியம். கரைத்து ஊறவிட்ட மாவில், இனிப்பு, காரம் இரண்டு வகைப் பணியாரமும் செய்துகொள்ளலாம்.

காரப்பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்:-

கோதுமை மாவு - 1 கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

தேங்காய்த்துருவல் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

சோடா உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:-

கோதுமை மாவை மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே கெட்டியாகக் கரைத்துவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இட்டுத் தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை அணைத்துவிடவும்.

வதக்கிய வெங்காயக் கலவையை, கரைத்து வைத்த கோதுமை மாவில் சேர்த்து, திட்டமாக உப்புப் போட்டுக்கொள்ளவும். அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து, குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும், சிறு கரண்டியால் மாவை முக்கால் குழி நிரம்புமளவுக்கு ஊற்றி, முள்கரண்டியால் திருப்பி, இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட, இந்தப் பணியாரம் மிகச் சுவையாக இருக்கும்.

                                                           ********
இனிப்புப் பணியாரம்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்

வெல்லம் / சீனி - 1/2 கப்

துருவிய தேங்காய் - 1/4 கப்

பொடித்த முந்திரிப்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்

ஏலப்பொடி - சிறிதளவு

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

உப்பு ஒரு சிட்டிகைகோதுமை மாவை மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே கெட்டியாகக் கரைத்துவைக்கவும்.

கரைத்துவைத்த மாவில், தேவையான அளவு வெல்லம் அல்லது சீனி, துருவிய தேங்காய், ஏலப்பொடி, பொடித்த முந்திரிப்பருப்பு, உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

 மேலே கூறியதுபோலவே குழிகளில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பணியாரம் செய்யலாம்.

சுவையான, சுலபமான மாலை நேரப் பலகாரம் தயார்!

                                                   ********

கடலை மாவு அடை - உடனடி செய்முறை

காலையோ மாலையோ டிபனுக்கு என்ன பண்ணன்னு தெரியலியா?

சட்டுன்னு செய்ய எளிதான அடை செய்முறை இதோ...

Instant Kadalai maavu adai


தேவையான பொருட்கள்:-

கடலைமாவு - 1 கப்

கோதுமை மாவு - 1/2 கப்

நறுக்கிய வெங்காயம் - 1

நறுக்கிய பச்சைமிளகாய் - 2

துருவிய கேரட் - 1/4 கப்

நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி - 1/4 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 1 மேஜைக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

மேலே கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அடைமாவு பக்குவத்தில் கலந்துக்கங்க. 

சூடான தோசைக்கல்லில், ஒரு கரண்டி மாவை ஊற்றி, தேவைக்கேற்ப நெய்யோ, நல்லெண்ணெயோ விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். அடை ரெடி...

இதை அப்படியே சாப்பிடலாம். அவசியம்னா, கொத்துமல்லிச் சட்னியோடவும் சாப்பிடலாம். கூடவே பக்கத்தில் ஒரு கப் சூடான காஃபியும் இருந்தா ரொம்பவே நல்லாயிருக்கும்.

                                                         *******