திங்கள், 16 பிப்ரவரி, 2009

ஐன்ஸ்டீன் ரொம்ப நல்லவர்!

ஆண்களைப்பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக அவதூறுகள் அவ்வப்போது கிளம்பினாலும், சில ஆண்கள் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்கன்னு இன்னிக்கி கேள்விப்பட்ட சம்பவம் ஒண்ணு பளிச்சுன்னு புரியவச்சுது...

அப்படிப்பட்ட 'அநியாயத்துக்கு நல்லவங்க' பட்டியலில் நம்ம ஐன்ஸ்டீனுக்கு முதலிடம் கொடுக்கலாம்ன்னு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்கல்லாம் அழுத்தமா சொல்றாங்கன்னா பாருங்களேன்...

ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். குறிப்பா சொல்லணும்ன்னா நம்ம புவியோட ஈர்ப்பு விசையைப்பற்றி எல்லாருக்கும் எடுத்துச்சொன்னவர், தன்னோட மனைவிமேல எவ்வளவு அன்பாகவும், குடும்ப வாழ்க்கையில எத்தனை பொறுமையாவும் இருந்திருக்கார் தெரியுமா?

பகல் இரவென்று பாராமல், தனது ஆராய்ச்சிகளிலேயே எப்போதும் மூழ்கிக்கிடந்த ஐன்ஸ்டீன் வீட்டிலும், "விடிஞ்சது முதல் அத்தனை வேலையும் நானே தான் இழுத்துப்போட்டுட்டு செய்யறேன். வீட்டிலே இருக்கிறப்பவாவது ஏதாவது உதவி செய்யக்கூடாதா?" என்பது மாதிரியான புலம்பல்கள் அடிக்கடி உண்டுபோலிருக்கிறது.

அன்றும் ஏகப்பட்ட எரிச்சலில் அந்தம்மா, முன்னால் நடந்தது, பின்னால் நடக்கப்போவது என்று எல்லாவற்றையும் கூட்டிப்பெருக்கி உச்சஸ்தாயியில் உச்சாடனம் பண்ண, அசையவேயில்லையே மனுஷர்.

"நோபல் பரிசு வாங்கினாப் போதுமா? மனைவியோட மனசைப் புரிஞ்சுக்க வேண்டாமா?" என்று புலம்பி, எதற்கும் அசையாமல் அமைதியாயிருந்த ஐன்ஸ்டீனின் மேல் கோபம் இன்னும் அதிகமாக, ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டுபோய் அவரது அறையில்,ஆராய்ச்சி பற்றிய புத்தகங்களோடும் கட்டுரைகளோடும் உட்கார்ந்திருந்த அவர் தலையில் போய் மொத்தமாய்க் கவிழ்த்தாள் அவர் மனைவி. அத்தனை பொருட்களும், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிப் புத்தகங்களும் தொப்பலாய் நனைந்துபோக,..............................................................................................................................................................................................................................................................................ஐன்ஸ்டீன் என்ன செய்திருப்பார்ன்னு நினைக்கிறீங்க???............................................................................................................................................................

முகத்தில் வழிந்த நீரைக் கையால் வழித்துவிட்டு, சிரித்தபடி, "இவ்வளவு நேரமும் இடி இடிச்சுது, இப்போ, மழையும் பெய்யிது" ன்னு சொன்னாராம்!!!

எவ்வளவு நல்லவர் பாருங்க நம்ம ஐன்ஸ்டீன்!!!

***********

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

துபாய் மால் (The Dubai Mall)

பன்னிரண்டு மில்லியன் சதுரஅடிப் பரப்பளவு, கிட்டத்தட்ட 50 கால்பந்தாட்ட மைதானங்களின் அளவைவிடப் பெரியதாய்ப் பரந்துவிரிந்திருக்கும் துபாய் மால், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் துபாயின் (Burj dubai) அடிவாரத்தில் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரும் ஷாப்பிங் மால்களுள் ஒன்று. உலகப்புகழ்பெற்ற 600 நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள் தற்போது இங்கே இருக்கிறது. இதுதவிர,இன்னும் 600 கடைகளுக்கான இடம் இன்னும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கிறதாம்.

இங்கே அமைந்திருப்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய தங்க ஆபரணங்களுக்கான விற்பனைப்பகுதி என்று சொல்கிறார்கள். 220 நகைக்கடைகள் இங்கே ஒரே இடத்தில் இருக்கிறதாம். அதனால் வரும்போது மறக்காம பை நிறைய்ய்ய பணம் எடுத்துட்டு வாங்க.

இதோ, தங்கச்சுரங்கத்தின் நுழைவாயிலில்...இதுதவிர பொழுதுபோக்குக்காக, டிஸ்கவரி செண்டர், துபாய் ஐஸ் ரிங் எனும் பனிச்சறுக்கு விளையாட்டுத்திடல் மற்றும் துபாய் அக்வேரியமும்(மீன் காட்சியகம்) இங்கே அமைக்கப்பட்டுள்ளது.காலையிலேயே நுழைந்தாலும் இரவுக்குள் முழுப்பகுதியையும் சுற்றிப்பார்க்கமுடியுமா என்பது சந்தேகம்தான்.

மீனோடு மீனாக மனிதர் ஒருவர்...பனியில் சறுக்கி விளையாடுகிறார்கள் சிறியவர்களும் பெரியவர்களும்...உற்சாகமாய் உறைபனியில் விளையாட்டு நடக்கையில் சட்டென்று ஒரு விபரீதம் நடந்தது.
கீழே விழுந்த ஒரு பெண் வலியில் துடிக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த முதலுதவிக்குழுவினர்...

மையப்பகுதியில், உலோகத்தால் அமைக்கப்பட்ட தரைஓவியம்...மையப்பகுதியிலுள்ள இந்த விதானத்தில் ஏற்படும் நிறமாற்றத்திற்கேற்ப தரையிலுள்ள உலோகப்பரப்பும் அழகழகாய் மாறுகிறது.விளக்கொளியில் பொன்னாக மின்னும் அழகு...அன்றைய பொழுதில் பார்க்கமுடிந்தது இவ்வளவுதான். சுற்றிய காலுக்கு ஆறுதலாக, பரந்துகிடக்கும் food court ல் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, மிச்சப்பகுதிகளை இன்னொரு நாளுக்கு ஒதுக்கிவிட்டுத் திரும்பினோம்.

*******

சனி, 7 பிப்ரவரி, 2009

நாசமத்துப்போற மக்கா...நல்லதமிழ் பேசுங்க!

அம்மா, இன்னிக்கு என்ன டே?

வியாழக்கிழமை...

அப்டின்னா?

வெள்ளிக்கிழமைக்கு முன்னாடி வருமே அது...

time-table எடுத்துவைக்கணும்...சரியாச் சொல்லும்மா...

வெள்ளிக்கிழமைன்னா friday..அப்ப, இன்னிக்கு thursday,வியாழக்கிழமை...

thursday ன்னு முதல்லயே தெளிவாச் சொல்லவேண்டியதுதானே?

முகத்தைக் கோணலாக்கிச் சொல்கிறது வாண்டு...

இப்படியே இங்கேயிருந்துகிட்டு, வீட்டில தமிழ்லதான் பேசணும்னு எங்ககிட்ட சொல்றமாதிரி, தமிழ்நாட்டுல போய் சொல்லிப்பாருங்க...அப்புறம் என்னதான் பாஸ்போர்ட்டைக் காட்டினாக்கூட நீங்க துபாய்லதான் இருக்கிறீங்கன்னு நம்பமாட்டாங்க யாரும். பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்னாலும் நிஜம் சுடத்தான் செய்தது.

"வங்கிக்குப் போகணும், தானி ஒண்ணு கூட்டிக்கொண்டுவா" ன்னு சொன்னா, தமிழ்நாட்டுக்காரங்களே ஏதோ கீழ்ப்பாக்கத்து உருப்படியோன்னு சந்தேகமாத்தான் பார்ப்பாங்க.

அடுக்குப்பானையும் குதிருமா அழகா செம்மண் காவிபூசி, திண்ணையும் தூணுமா இருந்த கிராமத்துவீடுகளும், மாமம்மா பேசிய அழகு தமிழும்கூட இன்று மாறித்தான் போய்விட்டது.டவுண்பஸ்,லேட்டு,லெட்டர்,ஸ்டேஷன்,ஸ்பீக்கர்செட்டுன்னு அடுக்கடுக்கா ஆங்கிலத்தில் பேச ஆரம்பிச்சுட்டாங்க நம்மாளுங்க.

குதிருன்னு சொன்னதும் நம்ம ஊர்ப் பழமொழி ஒண்ணு நினைவுக்கு வந்திருக்குமே... இடம் பொருள் அறியாமல் ஏதாவது உளறிக்கொட்டும்போது, "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லே"ங்கிற மாதிரி இப்படியா பேசுறதுன்னு கடிஞ்சுக்குவாங்க பெரியவங்க.

குதிர், நெல்லைச் சேமித்துவைக்க அந்நாளைய வீடுகளில் ஆளுயரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் மண்பாண்டங்களின் பெயராகும். இதைக் குலுக்கை என்றும்கூடச் சொல்லுவாங்க.

குதிரிலில் சேமித்த நெல்லை எடுத்து,பெரிய பெரிய குத்துப்போணிகளில்,புழுங்க வச்சு, தட்டடியில கொட்டி, வரிவரியா கிண்டிக் காயவச்சு, பறவைகள் கொத்தாமலிருக்க பிள்ளைகளைக் காவல் வைக்க,

அக்கம்பக்கத்துப் பிள்ளைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு,

மழ வருது மழ வருது நெல்லள்ளுங்க
முக்காப்படி அரிசிபோட்டு முறுக்கு சுடுங்க
தஞ்சாவூரு மாமனுக்குக் கொஞ்சம் குடுங்க
சும்மா வார மாமனுக்குச் சூடுபோடுங்க

என்று கூடிப்பாடிக் குதூகலித்ததாக மாமம்மா கதை சொல்ல,விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்ததுண்டு.மாமனின் அம்மா மாமம்மா, அம்மாவுடன் பிறந்த சகோதரன் அம்மாமன். எத்தனை அருமையான உறவுப்பெயர்களை மறந்துவிட்டோம்?...

வெள்ளென எழுந்திருச்சி, செம்பு நெறைய நீத்துப்பாவத்தைக் குடிச்சிட்டு,வயலுக்குப்போயி வேர்க்க விறுவிறுக்க கமலையில தண்ணியெறச்சு வயலுக்குப் பாய்ச்சிட்டு,வீட்டுக்குவந்து, கும்பா நிறைய பழைய சோறும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட அந்தக்கால மக்களின் உடலுரம் எங்கே, நாமெல்லாம் எங்கே!

வெள்ளென என்ற வார்த்தையை, விடியலில், அதிகாலையில் என்ற பொருளில் இன்னும் உபயோகிப்பார்கள்.நீராகாரத்தை நீத்துப்பாவம் என்று சொல்லுவதைச் நெல்லை மாவட்ட முதியவர்களிடம் இன்னும் கேட்கலாம்.கமலை என்பது மாடுகளை வைத்துக் கிணறுகளில் நீரிறைக்கும் முறை.

கும்பா, வட்டில் இரண்டும் அந்தக்காலத்து உணவு உண்ணும் பாத்திரங்களின் பெயர்களாம். கும்பா என்பது கிட்டத்தட்ட நம் சந்தனக் கிண்ணம் போலப் பெரியதாக இருக்குமாம்.நீருடன் உண்ணும் பழையசாதம் போன்றவற்றை உண்ண ஏற்றதாக இருக்குமாம். வட்டில் என்பது, தட்டுப்போல இன்னும் கொஞ்சம் உயரமான விளிம்புடன் வேலைப்பாடுகளுடன் கூடியதாய் இருக்குமென்று கூறக்கேட்டிருக்கிறேன்.(பெரிதாக்கிப் பார்க்க படத்தின்மேல் சொடுக்குங்க...)


வைக்கப்படப்புல வாழக்காய் பழுக்கவச்சு, கொச்சக்கயித்தில மட்டைவச்சு ஊஞ்சல்கட்டி, கருக்கலானதுகூடத் தெரியாம கூட்டாளிகளோட விளையாடிட்டு வீட்டுக்குவந்தா, அம்மா சட்டகப்பையை அடுப்பில வச்சு, சூடுவைப்பேனென்று சுத்திவர, ஆச்சியோட மடியில் அடைக்கலம் புகுந்து...நம் தமிழ்க் குடும்பங்களில்தான் நினைத்து ரசிக்க எத்தனை எத்தனை விஷயங்கள்...

வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்

கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு

சட்டகப்பை - தோசை திருப்பும் கரண்டி

கருக்கல் - மாலை மயங்கிய வேளை

ஆச்சி - அப்பாவின் அம்மா.

இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ...

கடைசியா, தலைப்புக்கு வருவோம்...

அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது "அழிவில்லாமல் இரு" என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்...

ஆக, நாசமத்துப்போற மக்கா, மறந்துபோன நல்லதெல்லாம் மறுபடியும் நினைவில்கொண்டுவந்து,  நல்லதமிழை எல்லாரும் பேசிடுவோம்.