செவ்வாய், 7 டிசம்பர், 2010

உள் வீட்டுச் சண்டை


ஏண்டா, வாணி வீட்டுக்குப் போனியா? வாசல்பக்கத்திலிருந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா, பார்வையை உயர்த்திக்கேட்டார்.

ஆஹா, மாட்டிக்கிட்டமோன்னு, மனசு படபடத்தது அகிலுக்கு.

இல்லப்பா...வந்துப்பா...விளையாடும்போது, பந்துபோயி அவங்க பால்கனியில விழுந்துருச்சு. அதான், கொண்டுவந்து குடுங்கன்னு கேக்கப்போனேன்.

அப்போ, பந்தை வாங்கிட்டுப் பேசாம வந்துட்டே...அப்டித்தானே? சந்தேகக் கண்களோடு கொக்கிபோட்டான் சண்முகம், அகிலின் அப்பா.

நானாப் பேசலப்பா...வாணியக்காதான் வந்து பேசிச்சு. அரைப்பரிச்சை எப்படான்னு அவங்கம்மாவுக்குக் கேக்காம மெதுவாக் கேட்டுச்சு...நான் அடுத்த வாரம்னேன். அதுக்கு, பரிட்சைக்குப் படிக்காம பந்து விளையாடுறியாடா நீன்னு கேட்டுட்டு, காதைப் பிடிச்சுத் திருகிட்டே சிரிச்சுச்சு. அதுக்குக்கூட நான் பதிலே சொல்லலப்பா...அப்பாவியாய்ச் சொன்னான் அகில்.

அப்புறம், இந்தப் பச்ச மாங்காகூட, நானாக் கேக்கல. அக்காவாத்தான் ரெண்டு துண்டு குடுத்துச்சு. உச்சுக் கொட்டிக்கொண்டே சொன்னான் அகில்.

அதற்குள், காப்பியுடன் அங்கே வந்தாள் அகிலின் அம்மா.

புள்ளைகிட்ட என்ன புலன் விசாரணை நடக்குது? என்று சந்தேகமாய்ப் பார்க்க, ஒண்ணுமில்ல புனிதா, அரைப் பரிச்சை லீவுக்கு அம்மாச்சி வீட்டுக்குப் போகலாமான்னு கேட்டான்...அப்பாவுக்கு, ஆஃபீஸ்ல வேலையிருக்கு. நீயும் அம்மாவும் போயிட்டுவாங்கன்னு சொன்னேன்...என்று சண்முகம் சொல்ல, காப்பாற்றிய அப்பா முகத்தையும், காப்பி ஆற்றிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தையும் மாறிமாறிப்பார்த்தபடி, அங்கிருந்து மெதுவாய் நகர ஆரம்பித்தான் அகில். மகனின் கைகளைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டான் சண்முகம்.

எப்பத்தான் உங்களுக்கு வேலையில்லாம இருந்திச்சு? என்னவோ பண்ணுங்க" என்று சலித்தபடி, உள்ளே போனாள் புனிதா. கேட்காத தூரத்துக்கு அவள் போய்விட்டதை உறுதிசெய்துகொண்டவனாய், மகனிடம் விட்டதைத் தொடர்ந்தான் சண்முகம்.   அக்காவைத் தவிர,வேற யாரையும் பாக்கலயாடா நீ? மகனின் கண்களை ஊடுருவினான் அவன்.

அப்பா, அதுவந்து...அதுவந்து...ஆச்சியையும் பாத்தேம்ப்பா...

ஆச்சியைப் பாத்தியா? என்னடா சொன்னாங்க ஆச்சி? உள்பக்கம் பார்த்துவிட்டு, மெதுவாகக் கேட்டான் சண்முகம்.

என் கன்னத்தைத் தொட்டு முத்தம் கொடுத்துட்டு, கண்ணத் தொடைச்சிக்கிட்டாங்கப்பா. அப்புறம், உங்க அப்பன் எப்பிடியிருக்கான்னு எங்கிட்ட மெள்ளமா கேட்டாங்கப்பா... என்றான் அகில்.

கண்கள் நிறைந்தது சண்முகத்துக்கு. வேறெங்கோ பார்த்தபடி சில நிமிஷங்கள் சண்முகம் பேசாமல் உட்கார்ந்திருக்கவே, அப்பா நான் போகவாப்பா? என்றான் அகில்.

இருப்பா, என்று மகனை இருத்திய சண்முகம், "தம்பி, இன்னும் ஒருதடவை அங்க பந்துபோய் விழுந்திச்சுன்னா, எங்க அப்பாவுக்கு, எப்பவும் அவங்க அம்மா நெனைப்பாவே இருக்காம்னு ஆச்சிகிட்ட சொல்லுப்பா... என்றபடி, வந்த கண்ணீரை மகனிடமிருந்து மறைக்க முயற்சித்தான் அவன்.

அப்பாவின் கவலைக்கு முழுசாக அர்த்தம் புரியலேன்னாலும், ஆச்சியைப் பார்த்தால் அது தீருமென்று விளங்கியது அகிலுக்கு. தன் கையிலிருந்த பந்தை அங்கிருந்தபடியே ஓங்கிஅடித்தான் அவன். தடுப்புச்சுவரைத் தாண்டிப்போய், அடுத்த வீட்டுத் தாழ்வாரத்தில் விழுந்தது அது.

யார்டா அது? வீட்டுக்குள்ள பந்தடிக்கிறது? வெளியே வந்து  குரல் கொடுத்தாங்க ஆச்சி.

அப்பாவைத் தூக்கிவிடச்சொல்லி, அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தபடி, 'நாந்தான் ஆச்சி' என்றான் அகில். அந்தப் பக்கமிருந்து பந்தும் பார்வையும் இந்தப்பக்கம் வந்துவிழ, பாசத்தைப் பரிமாறிக்கொண்டன பார்வைகள்.
 
அப்பாவின் முகத்தைத் திரும்பிப்பார்த்துச் சிரித்தான் அகில். பரிசாக, மகனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான் சண்முகம்.

********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக