ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

யார் அம்மா?

"அம்மா....இவளப் பாரும்மா...கலரிங் புக்கைக் குடுக்கமாட்டேங்கறா..."என்று கத்தினான் சின்னவன் சதீஷ்

"அடியேய், உனக்கும் அவனுக்கும் அஞ்சு வயசு வித்தியாசம்டி, அவன்கிட்ட போயி மல்லுக்கட்டறியே என்றாள் கோமதி", பன்னிரண்டு வயதான சாருவின் அம்மா.

"அஞ்சு வயசு வித்தியாசம்...அதுக்கு நான் என்னம்மா பண்ணட்டும்? அஞ்சு வயசு சின்னவங்கிறதுக்காக இந்தப் பையன் பண்ற தொல்லையெல்லாம் தாங்கிக்கணுமா நான்?" என்று அழத் தயாரானாள் சாரு.

"அதென்னடி, இந்தப்பையன், அந்தப்பையன்னு பேசறே... அவன் உன் தம்பிடீ..." என்றவளிடம்,

"இதையே திருப்பி அவனுக்கும் சொல்லிக்குடும்மா... அவ உன்னோட அக்காடா..."ன்னு என்றாள் சாரு.

"அவனுக்கும் உன்னோட வயசு வந்தா அவனும் புரிஞ்சுக்குவான். கொஞ்சநாள் பொறுத்துக்கோடீ..."

"ஓ...அவனுக்கும் என்னோட வயசு வரணும்னா இன்னும் அஞ்சு வருஷம்...அதுவரைக்கும் இந்தக் கழுதை பண்ணுறதையெல்லாம் நான் தாங்கிக்கணும். ஆனா, அப்பவும் அவன் என்னோட அஞ்சு வயசு சின்னவனா தானே இருப்பான். அதுமட்டுமில்லாம, இதே வசனத்தை நீயும் மறக்கமாட்டியே..." என்று சாரு பதில் சொல்ல, அவளிடம்

"பெரிய பொண்னுன்னா கொஞ்சம் பொறுத்துத்தான் போகணும்டா குட்டி" என்றாள் கோமதி.

"ஆமாம்மா, நீ பெரியவ... நீ பெரியவன்னு சொல்லியே என்னோட சின்னவயசு  ஆசையெல்லாம் மழுங்கடிச்சிட்டே... ஏம்மா நீ என்ன மொதல்ல பெத்தே?  இவன் பொறந்த அன்னிலேருந்து நான் நானா இல்லை... அவனுக்கு அக்காவாதான் இருக்கேன்.

அவன் பொறந்ததுலே இருந்து, ஒரு அஞ்சு வயசுப் பொண்ணுக்குரிய என்னோட எதிர்பார்ப்புகளை நீங்க யாரும் புரிஞ்சுக்கலை. ஆனா, ஒரு அக்காவா, மூத்த பொண்ணா உங்க எதிர்பார்ப்புகளைத்தான் நான் நிறைவேத்தியிருக்கேன்.

அவனைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிட்டுப் போணும். பஸ்ல இருந்து இறக்கி வகுப்புல கொண்டு விடணும்.  பஸ்ல போகும்போது தூங்கிட்டா எழுப்பி விடணும். வாந்தி எடுத்தா துடைச்சு விடணும். லஞ்ச் டைம்ல, அவனைச் சாப்பிட வைக்கணும். அவன் க்ளாஸில எதையாச்சு தொலைச்சிட்டா தேடிக் குடுக்கணும். இவன் கூட யாராச்சும் சண்டை போட்டா விலக்கி விடணும். திரும்பி வரும்போது பஸ்ஸுக்கு வராம விளையாடிட்டு இருக்கிறவனைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து பஸ்ல உக்கார வைக்கணும். ஆக, இவனையே கவனிச்சு கவனிச்சு, எனக்கு என்னோட வேலையைக் கூடக் கவனிக்கமுடியாமப் போகுது"  என்று சாரு அடுக்கிக்கொண்டே போக,

"ஏய், என்ன இது... கொஞ்சம் விட்டா பெரியமனுஷி மாதிரி பேசிட்டே போறே..." என்றாள் கோமதி.

"ம்ம்...ஆமாம்மா...பெரியவ மாதிரி நடந்துக்கணும்...ஆனா, பேசக்கூடாது...அப்டித்தானே?

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. நான் நாலாவது படிச்சப்ப அரைப் பரிட்சையில கணக்குல கம்மி மார்க்ன்னு என்னைக் கரண்டிக் கணையால அடிச்சே ஞாபகம் இருக்கா? உனக்கு எங்கே இருக்கப்போகுது... இன்னமும் பாரு... அந்தத் தழும்பு என் கால்லயும் மனசுலயும் அப்டியே இருக்கு. ஆனா, அந்தப் பரிட்சைக்கு முந்தினநாள் என்ன நடந்திச்சுன்னு ஞாபகம் இருக்கா? இருக்காது உனக்கு.

அன்னிக்கி இந்தப் பையன், அதான் உன்னோட அருமை மகன், அப்பாவோட சைக்கிள்ல ஏறி, கீழே விடுந்து அடிபட்டுக்கிட்டான். அவனைத் தூக்கிட்டு நீங்கல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஓடுனீங்க... என்னை அடுத்த வீட்டுல விட்டுட்டு... நான் அங்கேயிருந்து அழுது அழுது எதுவுமே படிக்கல. ஸோ, நான் குறைஞ்ச மார்க் வாங்கக் காரணம் நீங்க... ஆனா, அடி வாங்கினது நான். 

இது மட்டுமா, இன்னும் பாட்டி வீட்டுக்குப் போனப்ப அவன் பைப் தொட்டியில விழுந்து அடிபட்டுக்கிட்டான். ஓடிவந்த நீ, அப்பவும் என்னைத்தான் திட்டினே... நான் ஏன் அவனைக் கவனிச்சுக்கலேன்னு...

நீயே நினைச்சுப் பாரும்மா. நான் சின்னவளா இருந்தப்ப எனக்கு அம்மாவா இருந்த மாதிரி, தம்பிக்கும் நீதானே அம்மா? அப்போ, நீ ஏன் அவனை கவனிச்சுக்கக்கூடாது? உன்னோட பொறுப்பையெல்லாம் என் மேல இறக்கி வச்சிட்டமாதிரி, அவனை  நான் ஏன் கவனிச்சுக்கணும்?  அவன் செய்யிறதெல்லாம் நான் ஏன் பொறுத்துக்கணும்? அவனால நான் ஏன் திட்டும் அடியும் வாங்கி அழணும்?

போனவாரம் கூட இப்படித்தான்... என்று அவள் இன்னொரு சம்பவத்துக்கு  நீதி கேட்க ஆயத்தமாக, அவளை ஓடிச்சென்று இறுக அணைத்துக்கொண்டாள் கோமதி. அம்மாவின் அணைப்பில் குலுங்கிக்குலுங்கி அழுதுவிட்டாள் குழந்தை.

 அழுகிற அந்தக் குழந்தையின் உடல் குலுங்கக் குலுங்க, கோமதியின் மனசில் குற்றவுணர்ச்சி பெருக்கெடுத்தது. சின்னச் சின்ன விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியம், இந்தக் குழந்தையின் மனசில் எத்தனை பரிதவிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று நினைக்கையில் அவளுக்கு உடம்பு நடுங்கியது.

மகளின் மனபாரத்தைக் குறைப்பதற்கான முதல் முயற்சியாக, "அம்மாவை மன்னிச்சுக்கடா குட்டி" என்று சொல்லி, அழுகிற மகளின் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டாள்.  இனி, அவனுக்கும் அம்மாவா உங்க ரெண்டு பேரையும் நானே கவனிச்சிக்கிறேன் என்று சொன்னபோது, அவள் கண்களும் நிறைந்திருந்தது.

                                                          *******


வெள்ளி, 6 ஜூன், 2014

ஆடி அழைப்பு!

போனவருஷம் ஆனிமாதம் கடைசீ முகூர்த்தத்துல, திருவளர்ச்செல்வி அகிலாவுக்கும் திருவளர்ச்செல்வன் தினகரனுக்கும் கல்யாணம், அதாங்க எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும். கல்யாணமான மூணாவது நாள் மறுவீட்டுக்குப் போயிட்டு அதே நாள் திரும்பி வந்தா, அஞ்சாவது நாள் காலையில அப்பாவும் அம்மாவும் என் புகுந்த வீட்டுக்கு வந்து நிக்கிறாங்க. ஓடிப்போயி அம்மாவைக் கட்டிக்கிட்டேன்.

அவங்க வந்த விஷயம் என்னன்னு பாத்தா, "நாளைக்கு ஆடி பிறக்குது சம்பந்தி... முன்னமாதிரி இப்பல்லாம் ஒரு மாசம் பிரிச்சு வைக்கிறது சாத்தியமில்லேன்னாலும் சாஸ்திரத்துக்கு ஒரு வாரமோ இல்ல நாலஞ்சு  நாளாவது பிரிச்சு வைக்கணும்னு எங்கம்மா அபிப்ராயப்படுறாங்க..." என்று அவங்கம்மாவை நடுவில் நிறுத்தி, அப்பா என் மாமனாரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் "அதுக்கென்ன சம்பந்தி...உங்க பொண்ணு, உங்க வீட்டுல இருந்துட்டு வரதுல என்ன தப்பு? அதுவுமில்லாம பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரி... அதுக்கெல்லாம் ஒரு காரண காரியம் இருக்கும் என்று ஆமோதித்தார்.

ஆஹா, இதுதானா விஷயம்? ஆனா, நம்ம ஆத்துக்காரர் இதுக்கு அக்செப்ட் பண்ணமாட்டாரேன்னு நினைச்சிக்கிட்டு அவரைப் பாத்தா, அவரும் மாமனார் சொன்னா மறுவார்த்தை கிடையாதுங்கிறமாதிரி  சந்தோஷமாத்தான் தலையாட்டிட்டு இருந்தாரு. "என்னடா இது? அஞ்சே நாளுக்குள்ள மனுஷன் ரங்கமணீ என்ஜாய்னு என்னை விட்டுட்டு சந்தோசமா இருக்க ப்ளான் பண்ணுறாரோன்னு சந்தேகத்தோட பாத்தா, அந்தநேரம் பாத்து அவரும் என்னைப் பார்த்துட்டு, சட்டுன்னு "அச்சச்சோ...நான் எப்படி சமாளிப்பேன்..."என்கிற தோரணையில் முகத்தை மாற்றி வைத்துக்கொண்டார்.

ஆஹா, இந்தக் கூட்டணியை உடைச்சு, ஆடித் தீர்மானத்தைத் தோற்கடிக்கணுமே என்ற திட்டம் மனசில் எழ, என் மாமனார் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசியே தீரணும் என்ற திட சித்தம் கொண்ட என் மாமியாரை  எங்கே என்று தேடின என் கண்கள். அத்தை அப்போ தான் குளிச்சுமுடிச்சு குங்குமமும் மஞ்சளுமா வந்து நின்னங்க. "வாங்க அண்ணி, உங்களை இப்படிப் பார்த்தா, அப்படியே சாட்சாத் அம்பாளைப் பாக்கிற மாதிரியே இருக்குன்னு..." எங்க அம்மா சொல்ல, அத்தை அப்படியே 'அவுட்' ஆனது அப்பட்டமாய்த் தெரிஞ்சது. "ஆஹா, அம்மா கவுத்திட்டியே..." என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அத்தை உட்பட அத்தனைபேருமாய்ச் சேர்ந்து ஆடித் தீர்மானத்தைக் கூடி நிறைவேற்றியிருந்தார்கள்.

வேறு வழியில்லை... நாளைக்குப் புறப்பட்டுத்தான் ஆகவேண்டும். என்னதான் சொல்லுங்க, கல்யாணமான உடனே பொண்ணுங்களுக்கு புருஷன் மேல அதீதப் பாசம் வந்துருது. அம்மா வீட்டுக்குப் போகணும்னு ஆசை இருந்தாலும்கூட அங்கயும் அவர் கூட இருந்தால் நல்லாருக்கும்னு தோணுது. 

அடுப்படியில் இருந்த என்கிட்ட இவர், "அம்மு, நீ உன்னோட ட்ரெஸ் எல்லாம் எடுத்து தயாரா வச்சுக்கோ... நளைக்குக் கிளம்பணும்ல" என்று சொல்ல, மனுஷன் என்னைத் தள்ளிவிடுறதுல எவ்வளவு குறியா இருக்காரு பாரு...ஒருவேளை, நாலஞ்சு நாள்ன்னு சொன்னது இவருக்கு நாலஞ்சு வாரம்னு புரிஞ்சிருச்சோ? என்று மனக்குரல் எச்சரிக்க, "நாலே நாள் தானேங்க... அங்கயே தேவையானதெல்லாம் இருக்கு" என்றேன் நான். 

"ஓ...அப்போ சரி" என்றவரைப் பார்த்தால், இவருக்கு என்னை அணுப்பணுமேன்னு கொஞ்சம் கூட வருத்தம் இருக்கிறமாதிரி தெரியலை...ஒருவேளை அவங்க அப்பா அம்மாவோட கண்டிப்புக்காகத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ? என்ற ரீதியில் ஒரு பார்வையை வீச,அதைக் கரெக்டாப் புரிஞ்சுகிட்ட அவர், "நாலஞ்சு நாள்தானேம்மா... உன்னைக் கொண்டு விட்டுட்டு நான் வந்துருவேன். அப்புறம் இடையில ரெண்டே நாள். மூணாவதுநாள் நான் திரும்பவும் கூப்பிட வரப்போறேன். அதுக்கெதுக்குக் கவலைப்படுறே?" என்று அவர் கெஞ்சலாய்ச் சொல்லவும், "சேச்சே, எங்க வீட்டுக்குப் போறதுல எனக்கு என்ன வருத்தம்...உங்களை நினைச்சாத்தான்..."என்று கீழே விழுந்தாலும் மூக்கில மண் ஒட்டாத பாவனையில் சமாளித்தேன். 

மறுநாள், காலையில சாப்பிட்ட கையோடு கிளம்பினோம். பைக்கில ஏறிப் புடவைத் தலைப்பை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவர் தோளையும் பிடித்துக்கொண்டு பிரயாணிக்கையில், மனசுக்குள்ள திக்குதிக்குனு இருந்திச்சு. இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போயிட்டிருக்கக்கூடாதான்னு நினைக்கிறதுக்குள்ள, திடுக்குன்னு அம்மாவீடு வந்திருச்சு. உள்ளபோயி கொஞ்சநேரம் சம்பிரதாயமாப் பேசிட்டிருந்துட்டு, மதியம் விருந்தைச் சாப்பிட்ட கையோடு இவர் கிளம்ப எத்தனிக்க, எனக்குக் கண்ணீர் குளம்கட்ட ஆரம்பித்தது.  தொண்டைக்குள்ள  வேற, என்னவோ அடைச்ச மாதிரி வலிக்குது. ஆனாலும், அதை அடக்கு அடக்குன்னு அடிமனசு சொல்லவே அழுத்தமா முகத்த வச்சுக்கிட்டேன்.

அவர் என்னன்னா போருக்குப் புறப்பட்ட கட்டபொம்மன் ஜக்கம்மா கிட்ட சொன்ன கணக்கா, போயிட்டு வரேன் அம்மு, ரெண்டுநாள்ல வரேன்" என்று சொல்லிட்டுக் கிளம்பினார். நானும் அவரோட வாசல் வரைக்குக் கூடப்போனேன். அழுகை அழுகையா வந்தாலும், அழுகைக்குள் அலட்சியத்தை நுழைத்துச் சிரிக்கிறமாதிரி சிரித்து, "ஆல் த பெஸ்ட்" என்று  அவரைப் பார்த்துச் சொன்னேன். அதை என் முகம் எப்படிப் பிரதிபலிச்சுதோ தெரியலை, "என்ன ஆச்சு உனக்கு? முகமே சரியில்லை...எதுக்கும் டாக்டரைப் பாத்து சைனஸ் இருக்கானு செக் பண்ணிட்டு வந்துரு..." என்று சொல்ல, எனக்கு என் மண்டையைக் கொண்டுபோயி மாடிப் படிக்கட்டுல முட்டிக்கலாம் போல இருந்திச்சு. ஆனாலும், மௌனமாத் தலையாட்டிக்கிட்டேன்.

ஆனாலும் இவருக்கு எவ்வளவு கல் மனசு? ஒருவேளை, இந்த ஆம்பளைங்களோ இப்படித்தானோ? என்று அலுத்துக்கொண்டபடி வீட்டுக்குள் நுழைய, "என்ன அகிலாக்குட்டி, ஒரு மாசம்கூட ஆகல அதுக்குள்ள வீட்டுக்காரனை விட்டுப் பிரியமுடியலை போலிருக்குதே..." என்று பாட்டி  என் வாயைப் பிடுங்க, "அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி, புறப்படும்போதே  கொஞ்சம் தலைவலி என்று சொல்லிவிட்டு அருகில் உட்கார்ந்தேன். 

ம்ம்... நீ சொல்லலேன்னாலும் உன் முகம்தான் முழுசையும் சொல்லுதே... கல்யாணமான கொஞ்சநாள்ல கட்டிக்கிட்டவனைப் பிரியிறது கஷ்டமாத்தான் இருக்கும். அந்தக் காலத்துலல்லாம் ஆடியில பிரிச்சு வைக்கிறதுக்கு ஆளுக்கொரு காரணம் சொல்லுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரே காரணம்தான். பிரிச்சு வைக்கையில் பிரியம் கூடும். 

அதுமட்டுமில்லாம ஆடிமாசம் அம்மனோட மாசம். ஒரு குடும்பத்தில பொறக்குற ஒவ்வொரு பொண்ணும் அந்த சக்தியோட அம்சம். அவளை ஆடியில அழைச்சு அவளுக்கு சீர்செய்து சந்தோஷப்படுத்துறது அந்தப் பராசக்தியையே சந்தோஷப்படுத்துறது மாதிரி... அதுமட்டுமில்லாம பொண்களை மதிக்கணும்னு வாயால சொல்லி, வார்த்தைகளால எழுதினாமட்டும் பத்தாது, இதமாதிரி வீட்டில இருந்தே சொல்லிக்கொடுக்கணும். 

ஆடிமாசம் பொறந்தா அண்ணன், தம்பிகள் அவங்க கூடப்பிறந்தவளுக்குப் பச்சைப்புடவை குடுக்கணும், மஞ்சள் புடவை குடுக்கணும்னு புரளி பரப்பி விடறாங்களே அதெல்லாம் இந்தமாதிரி விஷயங்களை மனசுல வச்சுத்தான். அதனாலதான் நானும், உங்க அப்பா கிட்ட சொல்லி உன்னை ஒண்ணுரெண்டு நாளாவது வந்து இருக்கட்டும்னு அழைச்சிட்டு வரச்சொன்னேன் என்று என் தலையை ஆதுரமாய் வருடியபடி பாட்டி சொல்லிவிட்டு,"சரி கண்ணு...தலை வலிக்குதுன்னு சொன்னேல்ல, நீ போயி கொஞ்சநேரம் படுத்துக்கோ" என்று சொல்ல, எழுந்து அறைக்குள்போய்க் கட்டிலில் விழுந்தேன். 

இப்ப அவர் எங்க போயிருப்பார்? வீட்டுக்குப் போயிருப்பாரா, இல்லே வழியில இருப்பாரா? ஃபோன் போட்டுக் கேட்டுப் பாப்போமா என்ற நினைப்பு வர, "அடங்குடி அகிலா, முதல்ல அவரு பத்திரமா பைக்க ஓட்டிக்கிட்டு வீடுபோய்ச் சேரட்டும் என்று எச்சரித்தது மனக்குரல். அப்படியே கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அதில இருந்த அவரோட ஒவ்வொரு பழைய மெசேஜையும் படிச்சுப் பாத்து மனசு நெகிழ, அதற்குள் கையிலிருந்த ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது. 

நான் எதிர்பார்த்தமாதிரி, அவரே தான்...ஆனாலும் உடனே எடுக்காதே, நாமளும் பிசியாத்தான் இருக்கோம்னு காட்டிக்கவேண்டாமா என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்ல, ஏழெட்டு ரிங் போனதும் எடுத்து, "சொல்லுங்கங்க, வீட்டுக்குப் போயிட்டீங்களா? என்றேன். 

"ம்ம்...வந்துட்டேன் அம்மு. ஆனா, உன்னை அங்கே விட்டுட்டு வரும்போதுகூட எனக்கு ஒண்ணும் தெரியல. ஆனா, இங்க வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சா, ஒவ்வொரு இடத்துலயும் நீதான் தெரியிற. எனக்கு நம்ம ரூம்க்குள்ள இருக்கவே முடியல தெரியுமா? அழகா விரிச்சிருக்கிற படுக்கை, அடுக்கி வச்சிருக்கிற துணிகள், பளிச்சுன்னு சுத்தமா இருக்கிற மேஜைன்னு எதைப் பாத்தாலும் உன்னோட ஞாபகம்தான் வருது. 

ஏதோ தொண்டைக்குள்ள கல்லைப் போட்டுக்கிட்டமாதிரி, நெஞ்சுக்குள்ள அடைக்குது. நீ என்னன்னா, கூலா, போயிட்டு வாங்க, பெஸ்ட் ஆஃப் லக்னு சொல்லி வழியனுப்புறே. ஆனாலும் பொண்ணுங்க மனசு கல்லுதான் போல... என்று எதிர்முனையில் அவர் புலம்ப, "ஆஹா...நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று கத்தவேண்டும்போலிருந்தது எனக்கு. ஆனாலும், ஒரு ஓரத்துல, இவர் உண்மையாத்தான் சொல்றாரா? என்ற பொண்ணுங்களுக்கே உரிய சந்தேகமும் எழாமல் இல்லை.

சரி சரி, மூணு நாள் தானே, சமாளிச்சுக்கங்க...என்று என் பங்குக்கு அவர் வீசிய ஈட்டியையே திருப்பி எடுத்து வீச, "இல்லம்மா, என்னால முடியாது... என்னதான் அப்பா அம்மா கூட இருந்தாலும் நீ இல்லாதது வீடே வெறுமையாத் தெரியிது. இன்னிக்கி மட்டும் சமாளிச்சுக்கிறேன். நாளைக்குக் காலையில நீ கிளம்பிரு. ஆடியும் போதும் அவங்க சம்பிரதாயமும் போதும்" என்று அவர் சொல்ல, மனசுக்குள் ஒரு இனம்புரியாத கர்வம் எட்டிப்பார்த்தது. அத்தோடு, அவரை நினைக்கப் பாவமாவும் இருந்தது. 

இப்படிப்பட்ட ஒரு தேடலைக் கணவன் மனைவிக்குள் உண்டாக்குவதற்காகத்தான் இதுமாதிரிப் பிரித்துவைக்கிற சம்பிரதாயத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் என்று பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. ஒன்றிரண்டு நாளுக்கே இப்படியென்றால் முன்னை மாதிரி ஒருமாசம் பிரித்துவைத்தால், ஐயோ முடியவே முடியாது என்ற எண்ணத்துடன்,"சரி...சரி, அவசரப் படாதீங்க, நாளைக்குக் காலையில ஆஃபீஸ் போனீங்கன்னா நாள் முழுக்க ஓடிப்போயிரும். அப்புறம் நாளை மறுநாள் ஒரேநாள். அதுக்கடுத்தநாள் நீங்களே இங்க வரப்போறீங்க. வரும்போது உங்களுக்காக, உங்களுக்குப் பிடிச்ச ஒரு பரிசோட காத்திருப்பேன், சரியா? என்று நான் சொல்ல, அவர் அது என்னவென்று கேட்டு என்னை நச்சரிக்க, அப்புறம் என்ன, அந்த அஞ்சாறு நாளும் ஏர்டெல்லுக்கு எங்களால் நிறைய்ய வருமானம்!

                         ******

திங்கள், 24 மார்ச், 2014

சோறென்று சொன்னால் கேவலமா?

சில வருடங்களுக்குமுன், பழைய காகிதங்களைப் புரட்டிக்கொண்டிருந்த என் மகள், அம்மா, 'late' என்கிற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்னம்மா? என்றாள். தாமதம், அல்லது காலம் தாழ்த்தி என்று பொருள் கொள்ளலாமென்று செய்துகொண்டிருந்த வேலைகளுக்கிடையே சொல்லிவிட்டு மறந்துபோனேன். 

மறுநாள், பத்திரிகையில் நினைவு அஞ்சலியில் இருந்த ஒருத்தரைப் பார்த்து இவர் ''காலதாமதமான தாத்தாவா அம்மா?'' என்றாள். சட்டென்று எனக்கு எதுவும் விளங்கவில்லை. "அட, ட்யூப்லைட்  அம்மா, 'லேட்' ன்னா காலந்தாழ்த்தி, அல்லது தாமதம்ன்னு நேத்து நீங்கதானே சொன்னீங்க? என்றாள். 

முந்தினநாள் அவள் கேட்டது கல்யாணப்பத்திரிகையொன்றில் மணமகனின் தந்தை பெயருக்கு முன்னாலிருந்த 'லேட்' என்ற சொல்லைப் பார்த்து என்பது அப்புறம்தான் தெரிந்தது. "அட, அதைக் கேக்கிறியா? அந்த இடங்களில் 'லேட்' என்கிற வார்த்தை 'காலமான, இறந்துபோன' என்ற பொருளில் 'மங்கலமான' வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலப் பயன்பாட்டை அப்படியே பற்றிக்கொள்வதில் நம் மக்களுக்கு அலாதி ஈடுபாடு உண்டு. அப்படி வந்ததுதான் இதுவும்..." என்று விளக்கிச்சொன்னேன். 

இறந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படும் late மாதிரியே 'லேட்' என்கிற ஆங்கிலச்சொல்லுக்கான நேரடித் தமிழ் வார்த்தைகளும் பேச்சுவழக்கில் இறந்துபோனதாகத்தான் தோன்றியது எனக்கு. 
காலந்தாழ்த்தி, தாமதமாக எனும் வார்த்தைகள் உரைநடையில் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதோடு சரி. மற்றபடி, பல்லில்லாத பாட்டி முதல் பள்ளிக்கூடம் போகாத குழந்தை வரை எல்லாருக்குமே தாமதமாகிவிட்டது என்பதெல்லாம் மறந்துபோய் , 'லேட்டாயிருச்சு' என்று சொல்வதே லேட்டஸ்ட் ஃபாஷனாகி விட்டது. 

அப்டின்னா, இறந்தவர் என்பதைக் குறிப்பிடத் தமிழில் வார்த்தைகளே இல்லையா? என்றாள் மகள் மறுபடியும். ''ஏன் இல்லை? இருக்குதே... 'மறைந்த, காலமான, இறைவனடி சேர்ந்த' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்றேன்.'' அப்போ, இருக்கிற எத்தனையோ வார்த்தைகளை விட்டுவிட்டு எங்கிருந்தோ வந்த வார்த்தைகளைப் பிடிச்சு வச்சிருக்கோம் என்று சொல்லிச் சிரித்தாள் அவள். 

அவள் சிரிக்கையில், இந்த ஒருவார்த்தைக்கு மட்டுமா இந்த நிலைமை என்று நினைத்து எனக்கு மனசு வலித்தது, காலமாகிப்போன இன்னும் பல தமிழ் வார்த்தைகளை நினைத்து.

'late' மாதிரியே மிகச் சாதாரணமாகப் புழங்கப்படுகிற இன்னொரு வார்த்தை 'rice' செந்தமிழ்ச் சொல்லான சோறு என்பதைச் சொல்லவே சங்கடப்படுகிறது நம் நாகரீகத் தமிழ் மக்கள்கூட்டம். நினைக்கவே கஷ்டமாயிருக்கிற விஷயம் என்னன்னா, "சோழநாடு சோறுடைத்து" என்று பாடப்பட்ட பகுதியில்கூட "meals ready" போர்டுகளும், 'ரைஸ் வைக்கட்டுமா?' என்ற வார்த்தைகளையும், 'சாதம் போடவா?' என்ற கேள்விகளையும்தான் கேட்கமுடிகிறதே தவிர "இன்னுங் கொஞ்சம் சோறு போட்டுக்கோ..." என்று சொல்கிற வழக்கம் அனேகமாக மறைந்துவருகிறது. மொத்தத்தில், சோறும் "late சோறு" ஆகிவிட்டதென்று தோன்றுகிறது.


ஆங்கிலத்தில், ரைஸ் (rice) என்றால் அரிசி. வெறும் வேகாத அரிசி. Cooked rice, Steamed rice என்றால் அது வேகவைத்துச் சமைக்கப்பட்ட சோறு. இதை விட்டு, எல்லாமே ரைஸ் ஆகிப்போனது இன்று. வெந்ததுக்கும் வேகாததுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நம் தமிழ்மக்கள் என்று நினைக்கையில் வருத்தம்தான் வருகிறது. இனி, யாராவது ரைஸ் போடவா என்று கேட்டால், அவர்களிடம் எங்கே அரிசி போடணும், எங்கே சோறு போடணும் என்று கேள்வி கேட்டுக் கொஞ்சம் அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும் என்று ஆத்திரம்தான் வருகிறது.

ஆனால், மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் கொடுக்கிற விஷயம், தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோறு என்கிற சொல் இன்னும் மறக்காமல் உபயோகிக்கப்படுகிறது என்பதுதான். ஆனால், அதுவும் இந்தத் தலைமுறை தாண்டினால் இருக்குமா என்பது சந்தேகம்தான். 

அம்மா அப்பா என்று சொல்வதையே அகற்றி, மம்மி டாடியாக்கிவிட்ட தமிழகத்துக்கு, அவர்களுடைய முக்கிய உணவான சோற்றின் பெயர் மறந்துபோனதோ மறைந்து போவதோ ஒண்ணும் பெரிய விஷயமாயிருக்காது.

சனி, 8 மார்ச், 2014

பெண்ணாகிய பெருமானும் பாரதியின் கண்ணம்மாவும்!

இலக்கியத்திலும் சரி, இறைவழிபாட்டிலும் சரி, நம் நாட்டில் பெண்மைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு மிகப் பெருமையுடையது. 

முறமெடுத்துப் புலிவிரட்டியதும்தந்தையுடன்கூட என் சின்னஞ்சிறு புதல்வனும் போரில்வீரமரணமுற்றான். இதுவல்லவோ எமக்குக் கிடைத்த வெற்றி என்று  போர்க்களத்திலே பூரித்ததும் ம் தமிழ்குடிப் பெண்டிர்தான்.

"எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலு முளகொ னமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை"

அத்தகைய பெண்களின் வீரத்தைக் கண்டு கூற்றுவனும் நாணினானென்று புறநானூறு பாராட்டும்.


இறைவழிபாட்டில், அன்னை பராசக்தியே அகிலமனைத்துக்கும் காரணியென்று அவளை வழிபடுதலும்,  அவள் அம்சமான சக்தியாகவே பெண்ணைப் போற்றுதலும் பரவலாகக் காணப்படுகிற பழக்கம். 

அன்பே சிவமாகி ஆட்கொள்ளுகிற சிவபெருமானும் தன் இடப்பாகத்தை இறைவிக்குக் கொடுத்தவன்.  அவனை,

"மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே"

என்று திருஞானசம்பந்தரும்

"ஒருமை பெண்மையுடையன் சடையன் விடையூரும் மிவனென்ன
அருமையாக வுரைசெய்ய வமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்"

என்று திருநாவுக்கரசரும் போற்றிப் பாடியிருக்க,

அப்பேற்பட்ட இறைவனின் இயக்கத்திற்கும்கூட, இறைவியின் துணை அவசியம் என்று ஆதிசங்கரர் அவரது சௌந்தர்யலஹரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். வரது சௌந்தர்யலஹரிப் பாடலொன்றின் தமிழாக்கத்தில்,

"திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால் 
தேவி நீ அன்புடன் ஒன்றித் 
தங்கிடி லன்றி இயங்கிடும் திறமும் 
இறைவனே இழந்திடும் என்னில் 
கங்கைவார் சடையன் அயன்திருமாலும்
கைதொழுதேந்தியே போற்றும் 
பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் 
நின் பாதமே தொழுவதும் எளிதோ?” 

என்று  பாடிப் பரவுகிறார்.

மனித உடலின் இடப்பாகம் இதயத்தைக் கொண்டது. உடலின் அத்தனை பகுதிக்கும் ரத்தத்தையும் பிராணவாயுவையும் செலுத்தி மனிதனைச் சக்தியுடன் நடமாட வைப்பது இதயத்தின் வேலை. அத்தகைய இடப்பக்கத்தைத் தனக்களித்த இறைவனையும் இயங்கவைப்பது இறைவியின் வேலையென்று புகழ்கிறார் ஆதிசங்கரர்.

அத்துடன், பெண்ணைப் பராசக்தியாகப் போற்றிப் பெருமைப் படுத்தியதில் நம் எட்டையபுரத்து கவிஞன் இன்னும் சிறந்தவன்.                

தன்னுடைய புதுமைப்பெண் என் பாடலில்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்

என்று, இப்பூவுலகில் பெண்களாகப் பிறப்போரெல்லாம் அன்னை சிவசக்தியே என்று அடித்துச் சொல்லுகிறார் அழகாக.

அத்தகைய பெண்மைக்கு இன்னும் சிறப்புச்செய்யும் விதமாக,

"வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!"

என்றும்,

"மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று
நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!"

என்றும் கண்ணம்மா எனும் தன் கனவுப்பெண்ணிடம் தான் சரணடைந்ததாகப் போற்றிப் பாடுகிறார் பாரதி.

இப்படிப்பட்ட பெண்மை, தாயாய், தாதியாய், தங்கையாய், தமக்கையாய், தாரமாய், தோழியாய் எத்தனையோ வடிவில்  ஒவ்வொருவர் வாழ்வையும் அன்றாடம் புதுப்பிக்கிறது, புத்தொளி ஊட்டுகிறது. அத்தகைய மாண்புடைய பெண்டிர் 
அனைவருக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

- சுந்தரா