திங்கள், 22 மார்ச், 2010

தண்ணீரின்றித் தவிக்கிற தெய்வங்கள்!

 


களத்துமேட்டுல ஊரே கூடிக்கிடந்தது. பூசாரியும் பண்ணையாரும் பக்கத்துலபக்கத்துல உட்கார்ந்து மும்முரமா ஏதோ பேசிக்கிடிருந்தாங்க. வெடிச்சுக்கிடந்த வயல்காடும், குடிக்கத் தண்ணியில்லாம வறண்டுபோன கிணறுகளும்தான் மொத்த மக்களும் பேசிக்கிற விஷயமாயிருந்திச்சு. பட்டுப்போன பனைகளும், மொட்டைமொட்டையாய் மரங்களும் மக்களோடு சேர்ந்து மழைவேண்டி நின்றுகொண்டிருந்தன.

மாரியம்மன் கோயில்ல மழைக்காக ஒரு பூசை போடலாம்னு மனசு ஒத்து முடிவுபண்ணினாங்க பெரியவுங்க. காய்ஞ்சு கிடந்த குளத்தில் கிரிக்கெட் விளையாடுற பிள்ளைகள்மட்டும் மழையெல்லாம் வேண்டாம்னு மனசுக்குள் வேண்டிக்கிட்டிருந்தாங்க. வைகாசி மூணாம் வாரம் மாரியம்மனுக்குப் பொங்கல் வச்சு பூசை நடத்த ஏற்பாடாயிருச்சு.

வயசுப்பொண்ணுகளும் வயசானவுகளும் பொங்கல் வைக்கிற அன்னிக்கி, குளிக்க மொழுக,கோயிலுக்குக் கொண்டுபோக எங்கேருந்து தண்ணி எடுக்குறதுன்னு இப்பவே கவலையோட பேசிக்கிட்டிருந்தாங்க. அம்மனுக்கு அபிசேகம் பண்ண அஞ்சாறு குடமாவது தண்ணி வேணும். அதையும் சேர்த்துக்கங்கம்மான்னு சந்தடியில் நுழைந்தார் கோயில் பூசாரி.

மொத்தத்தில எல்லாரும் மழை வேண்டி மாரியம்மனுக்குப் பூசை செய்ய முழுமனசோடு தயாரானாங்க.

அப்ப, கூட்டத்தைக் கிழிச்சுக்கிட்டு "ஏய்ய்ய்ய்..."ன்னு ஒரு அலறல் சத்தம். என்னன்னு பார்த்தா, வடக்குக்கரைக் கோயில் சாமியாடி, ரெண்டு கையாலயும் தலையப் புடிச்சிக்கிட்டு ஆடத்தொடங்கிட்டாரு.

"எல்லாருமாச் சேந்து என்ன மறந்திட்டீங்களேடா...தண்ணி வேணுமுன்னா தாயை நினக்கிறீங்க. ஆனா, என்ன நினைக்கணும்னு யாருக்குமே தோணலியா? கறுத்த கிடாவெட்டி, கலயத்துல கள்ளுவச்சு என்ன நெனைச்சுக் கும்புட்டுருந்தா நடக்குமாடா இப்பிடி?

என்னோட கோவத்தாலதான் இந்த ஊரே இப்பிடி பொட்டல் காடாக்கியிருச்சு. இன்னும் என்னை கவனிக்கலேன்னா இந்த ஊரே இல்லாம போயிடும். சொல்லிட்டேன்...சொல்லிட்டேன்..." என்று சொன்னபடி சுழன்று நிலத்தில் விழுந்தார் அவர். விழுந்த அவர் வாய் தண்ணி, தண்ணின்னு முணுமுணுக்க ஆரம்பிச்சிது.

"ஏய் யாராவது தண்ணி கொண்டு வாங்கப்பா" என்று ஆளாளுக்கு திரும்பி்ப் பார்த்துச் சொன்னபடி விழுந்த சாமியாடியை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க. யாரும் தண்ணி கொண்டுவந்து கொடுத்தபாடில்லை. ஆக்ரோஷமாகக் கத்தியதில் அநியாயத்துக்கு வறண்டுபோயிருந்த தொண்டையோடு எழுந்து நடக்க ஆரம்பித்தார் சாமியாடியவர்.

இன்னும் என்ன நடக்குமென்று வேடிக்கை பார்க்கும் ஆசையில் அவருக்குப் பின்னால் நடந்தது தண்ணீருக்காக வந்த கூட்டம். வானத்தில், ஆங்காங்கே தென்பட்ட ஒற்றைஒற்றை மேகங்களும்கூட சாமிக்கும் மக்களுக்குமான சண்டையில் சிக்கிக்கவேண்டாமேன்னு வேகவேகமாய்க் கலைய ஆரம்பித்தன.

**********