சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

ஒன்றொடு இன்னொன்று!

வசு, இந்த ஒருவிஷயத்தைமட்டும் எனக்காகச் செய்யிம்மா...சஷ்டியில இருந்தா அகப்பையில வரும்னு அந்தக் காலத்துலயே சொல்லிவச்சிருக்காங்க.அதனால, சஷ்டியில, ஒரே ஒருநாள்மட்டும் விரதமா இருந்து, நாம திருச்செந்தூருக்குப் போயிட்டுவருவோம். என்னோட நம்பிக்கைக்காக இதுக்குமட்டும் நீ சம்மதிச்சா, நிச்சயம் அந்த முருகன் கருணையால நம்ம வீட்லயும் குழந்தைச்சத்தம் கேக்கும்...திரும்பத்திரும்பச்சொன்ன மாமியாரின் வார்த்தைகள் இளகவைத்தன வசுமதியின் பிடிவாதத்தை.

சரி அத்தை...உங்க விருப்பத்துக்காக நான் வரேன்.சொல்லாம போனோம்னா திட்டுவாங்க...அதனால, சென்னைக்குப் போயிருக்கிற உங்க மகனுக்கு ஒரு ஃபோன் பண்ணிச்சொல்லிட்டு, நாம புறப்படுவோம்னு ஒருவழியா ஒத்துக்கிட்டா வசு. மூன்றுமுறை அழைத்துப்பார்த்தாயிற்று, சரவணனின் கைபேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

அம்மாடி, நீ எங்கூடத்தானே வர்றே, அவன் ஒண்ணும் சொல்லமாட்டான். போற வழியில திரும்பவும் ஃபோன் பண்ணிப்பார்த்து, விஷயத்தை அவங்கிட்ட சொல்லிக்கலாம். நீ குளிச்சிட்டு, வெறும்வயிறாப் புறப்படு...கோயிலுக்குப்போயி, சாமி தரிசனம் பண்ணிட்டு, நாம சாப்பிட்டுக்கலாம் என்று சொன்னபடி வேகவேகமாக் குளிக்கப்புறப்பட்டாள் வசுமதியின் மாமியார். கண்ணைமூடுவதற்குள் எப்படியாவது ஒரு பேரப்பிள்ளையைப் பார்த்துவிடவேண்டுமென்ற பரிதவிப்பு அவளுக்கு.

வசுமதிக்கும் சரவணனுக்கும் கல்யாணமாகி மூன்று வருஷம்தான் ஆகியிருந்தது. சரவணனுக்கு வசுமதி தூரத்து சொந்தம்தான். கல்யாணமானபின்னாலும்,வியாபார விஷயமாக மாதத்தில் பாதிநாள் வெளியூருக்குப் போய்விடுவான் சரவணன். வசுமதியும் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்ததால், அவளுக்கும் சரவணனின் தொழில்முறைப் பயணங்கள் அத்தனை பாதிப்பைக்கொடுத்ததில்லை.

அன்றைக்கும் தூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் எப்பவும்போல கூட்டமாய்த்தான் இருந்தது. வரிசையாக நான்கு பஸ்போனபிறகு, ஐந்தாவது பஸ்சில்தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. திருச்செந்தூர் போய்ச் சேர்ந்தபோது மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. தரிசனத்துக்கான வரிசை, வாசலைத் தாண்டி வெளியேயும் நீண்டிருந்தது.டிக்கெட் எடுத்துவிட்டு வந்து, வரிசையில் நின்றார்கள் வசுமதியும் அவள் மாமியாரும்.

வரிசை நகராமலே இருந்தது. உள்ளே சாமிக்கு அலங்காரம் ஆயிட்டிருக்கு. திரைபோட்டிருக்காங்க அதனாலதான் நகரலை... என்று ஒருவர் சொல்லிவிட்டுப்போனார். வாசல் முகப்பில், முருகன் வள்ளி தெய்வானையோடும், கூடவே மாலையோடு நிற்கும் யானைகளோடும் காட்சியளித்தார். தரிசனத்துக்காக வரிசையில் நின்றாலும், வசுமதியின் மனசு பள்ளிக்கூடத்தில்தான் இருந்தது. இப்ப கடைசி பீரியட் நடந்துகொண்டிருக்கும் என்று தன் வாட்சைப் பார்த்தபடி நினைத்துக்கொண்டாள் வசுமதி.

அப்போது, 'வீலெ'ன்று ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. கோயில்வாசலின் வலதுபக்கம், காதுகுத்துமிடத்தில், மொட்டைபோட்ட ஒரு சின்னக் குழந்தைக்குக் காதுகுத்திக்கொண்டிருந்தார்கள். உறவுக்காரர்கள் ஒன்றிரண்டுபேர் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த வசுமதியின் மாமியார்,"நான் நினைச்சமாதிரியே ஒரு வாரிசைக் கொடுத்துட்டா, குழந்தை பிறந்த ஒரு வருஷத்துல, இங்கவந்து பிள்ளைக்கு மொட்டையெடுத்துக் காதுகுத்தி வாளிபோட்டு விடுறேன் முருகா" என்று வசுமதிக்குக் கேட்கிறாற்போல, வாய்விட்டு வேண்டிக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா, வசுமதியின் மாமியார்.

காதுகுத்திய குழந்தையை ஒவ்வொருத்தராய் மாற்றி, அழுகையை நிறுத்தப்பார்த்தும் முடியாமல்போக, இந்தா,அப்பா பாரு, அப்பா பாரு... என்று அதன் அப்பாவிடம்கொண்டு காட்டினாள் குழந்தையின் அம்மா. திரும்பி உட்கார்ந்திருந்த அந்தக்குழந்தையின் அப்பா, எழுந்து, குழந்தையை வாங்கினான். திரும்பிய அவன் முகத்தைப்பார்த்த நிமிஷத்தில், ஆடிப்போனாள் வசுமதி. அதிர்ச்சியில் தன் மாமியாரின் தோளைத்தொட்டு, அங்கே கையை நீட்டிக்காட்டினாள் அவள்.

கைகாட்டியதிசையில், கையில் குழந்தையுடன் தன் மகன் சரவணனைப் பார்த்ததும், கணநேரத்தில் விஷயத்தை கிரகித்துக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா. ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட்டுக்கொண்டுவர,வரிசையிலிருந்து வெளியேறி அவனருகில் சென்றவள், "அடப்பாவி, நல்லாருப்பியாடா நீ...பெத்தவளுக்கும் பொண்டாட்டிக்கும் தெரியாம, இங்கே இன்னொரு வாழ்க்கையா நடத்திக்கிட்டிருக்க? இந்தப் பொண்ணோட பாவம், உன்னைச் சும்மாவாடா விடும்?

வேலைவிஷயமாப் போறேன் போறேன்னு சொல்லி இப்படி வப்பாட்டி வச்சுக்கிட்டு நம்ம வம்சத்துப் பேரையே கெடுத்திட்டியேடா பாவி...என்று வாய்விட்டு அரற்றினாள் முத்துலட்சுமி. சுற்றியிருந்தவர்கள் வசுமதியைப் பரிதாபமாகப் பார்க்க, அதற்குள், அப்பா என்றபடி வந்து, இன்னொரு ஐந்துவயசு மதிக்கத்தக்க குழந்தையொன்று, சரவணனின் கையைப்பிடித்தபடி,சத்தம்போட்டுக்கொண்டிருந்த முத்துலட்சுமியை ஏறிட்டது.

அஞ்சு வயசுல அவருக்கு இன்னொரு குழந்தையும் இருக்குதா? அப்போ, நாந்தான் அவருக்கு ரெண்டாம்தாரமா? ஐயோ, இப்படி ஏமாந்திருக்கேனே... என்று வசுமதிக்குள் உள்ளூர எழுந்தது ஓவென்ற ஒரு அழுகை. கூடவே,பசித்த வயிறும் வேதனையும் சேர்ந்து கண்ணை இருட்டிக்கொண்டுவர, சரிந்துவிழுந்தாள் வசுமதி. அவளை,வரிசையிலிருந்து வெளியே கூட்டிப்போய் உட்காரவைத்து,முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள் ஒரு பெண்மணி.

"வருத்தப்படாத தாயி, தன்னோட சபலத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும், சாமிக்கே ரெண்டு சம்சாரம் கட்டிவச்சுப்பார்க்கிற சமூகம் இது...இதையெல்லாம் எதிர்கொண்டு நாமளும் இந்த பூமியில தைரியமா வாழ்ந்துதான் தீரணும்...மனசைத் தளரவிடாதே" என்றபடி அவளுக்கு ஆறுதல் சொன்னாள் அந்த அம்மா.

மகனிடம் கத்திப் புலம்பிக்கொண்டிருக்கையில், மயங்கிவிழுந்த வசுமதியைப்பார்த்ததும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டாள் முத்துலட்சுமியம்மா.ஒரு பேரப்பிள்ளையாவது வேண்டுமென்ற ஏக்கத்துடன் இருந்தபோது, ஒன்றுக்கு ரெண்டு பேரக்குழந்தைகளைக் கண்முன்னால் பார்த்தபின்னாலும், அதைக் கொண்டாடாமல், தனக்காகக் கண்ணீர்விட்டு அழுத மாமியாரை நினைக்கையில் மனசு இளகியது வசுமதிக்கு.

அப்போது, என்னை ஏமாத்திட்டு, இங்கே இன்னொருத்தியைக் கட்டிவச்சிருக்கியா? பெத்தவுங்களும் இல்ல, உறவுன்னும் யாரும் பெருசா இல்லேன்னு சொல்லி என்னையும் பிள்ளைகளையும் ஏமாத்திட்டு, இத்தனை கள்ளத்தனம் பண்ணியிருக்கியே, நீயெல்லாம் மனுஷனா? உன்னோட சுகத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும் என்ன வேணும்னாலும் செய்வியா நீ? அதையெல்லாம் சகிச்சுக்கிட்டு உன்னோட குடும்பம் நடத்த என்னாலமுடியாது என்றபடி, பிள்ளைகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு, தன் தாய் தந்தையுடன் நடந்தாள் சரவணனின் முதல் மனைவி.

இருதலைக்கொள்ளி எறும்பாகத் திகைத்துநின்ற சரவணனைப் பார்த்தாள் வசுமதி.பெண்களென்றால் கிள்ளுக்கீரைகளென்று நினைத்த அவனுக்குத் தனிமையும் நிராகரிப்பும்தான்தான் சரியான தண்டனை என்று எண்ணியது அவள் மனது. இதழ்களில், ஏளனம் நெளிய,கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் அவள். கால்கள் நடுங்கினாலும்,மனசை உறுதியாக்கிக்கொண்டு நிமிர்ந்துநின்றாள். அழுதுகொண்டிருந்த தன் மாமியாரைக் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு, கோயிலைவிட்டு வெளியே நடந்தாள்.

சொந்தக்காலில் நின்று அவனுக்கு முன்னால் ஜெயித்துக்காட்டவேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது அவளுக்குள். இனிமேல் தான் போகவேண்டிய பாதையை மனதில் தீர்மானித்துக்கொண்டவளாய், திடமாக்கிக்கொண்ட மனதோடும்,தெளிவுடனும் திரும்பிநடந்தாள் வசுமதி. பின்னால், ஆர்ப்பரித்த அலைக்கரங்களுடன் அவளது முடிவை ஆமோதித்தது கடல். 

*******  

திங்கள், 11 அக்டோபர், 2010

மருமக வந்த நேரம்!



காலைலேருந்தே தூறல் விழுந்துகிட்டுதான் இருக்கு...வங்காள விரிகுடாவுல புயல் வந்துருக்காம். இன்னும் நாலுநாளைக்கு மழை இருக்கும்னு சொல்றாக... என்று மதினிக்காரியிடம் சொன்னபடி, ரேடியோவைப் போடப்போனா செவந்தி.

கரண்டு இல்லாம இருந்தது தெரியவர, போச்சா...எலக்ட்ரி லைட்ட நம்பி எல போடாதன்னு சும்மாவா சொன்னாக...உரக்க நாலுதூறல் விழுந்தாப்போதும், உடனே கரண்டை நிப்பாட்டிருவானுங்களே,வேலையத்தபசங்க...என்று வைதபடி வெளியே போனா செவந்தி.

எதிரே, பேச்சியக்கா வீட்டுல போட்டிருந்த கல்யாணப் பந்தலில் ஆட்டுக்குட்டிகள் ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தன. வெளியூர்ல கல்யாணம் முடிஞ்சி, விளக்குவச்சதும் பொண்ணும் மாப்பிள்ளையும் வருவாகன்னு ராசாத்தி சொன்னது ஞாபகம் வந்தது அவளுக்கு.

சாயங்காலத்துக்குள்ள நாலுநேரம் வந்துவந்து போயிட்டுது கரண்டு. திரும்ப வந்ததும், குறை கரண்டாயிருக்க, எதுக்கும் தேவைன்னு, சிம்னி விளக்கத் தொடச்சு மண்ணெண்ணெய் ஊத்தி,எடுத்து வச்சா செவந்தி.

அதுக்குள்ள, செவந்தியக்கா, பேச்சியக்கா வீட்டு மாப்பிள்ளையும் பொண்ணும் தெருமுக்குல வந்துட்டாகளாம்...என்று குரல் கொடுத்தபடி, வேடிக்கைபாக்க ஓடிப்போனா லெச்சுமி. விடாம, தூறல் விழுந்துகிட்டேயிருக்க, அக்கம்பக்கத்துக்காரவுகல்லாம் அவுகவுக வீட்டுவாசல் கிட்டயே நின்னு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சாக.

நாலுவீடுதள்ளிக் காரு வரும்போது, மறுபடியும் பட்டுன்னு போயிட்டுது கரண்டு. மணமகளே மருமகளேன்னு பாட ஆரம்பிச்சு, விக்கிக்கிட்டு நின்னுபோச்சு பாட்டு. "அடி ஆத்தி, பேச்சியம்மா வீட்டுக்கு மருமக வாரநேரம், பூரா ஊரும்ல இருட்டாப் போச்சுது... என்று, நீட்டி முழக்கியது நல்லம்மாக் கிழவி.

அட, ஆமால்ல... என்று உச்சுக்கொட்டியபடி ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டாங்க அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க. அதுவரைக்கும், பளிச்சுன்னு இருந்த பேச்சியக்கா முகமும், தீஞ்சுபோன பல்பாட்டம் ஓஞ்சு போக, உள்ள வரும்போதே நல்ல யோகத்தோடதான் வந்திருக்க.... என்று, வந்த மருமக கிட்ட வாசப்படியிலயே எரிஞ்சு விழுந்தா பேச்சியக்கா.

**********

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

குழந்தைகளைக் குற்றம் சொல்லாதீங்க...

"எட்டுப் புள்ளைங்க எங்க வீட்ல...ஆனா, வீட்டுச்சத்தம் வெளியில கேக்காது. ஆனா, இந்த ஒண்ண வச்சுக்கிட்டு நான் படுறபாடு இருக்கே...கடவுளே, இன்னும் தலை இருக்கிற இடத்துக்குக் கழுத்து வந்தா இன்னும் என்னென்ன பண்ணுமோ..." என்று அலுத்துக்கொள்ளும் அம்மாக்களைப் பார்க்கும்போது, இந்தக்காலத்துக் குழந்தைகள்தான் அதிகமா குறும்புத்தனம் பண்றாங்களா, இல்லேன்னா, அப்பா அம்மாதான் அவங்களை அதிகமா குத்தம் சொல்றாங்களா என்ற கேள்வி இப்பல்லாம் அடிக்கடி மனசில் எழுகிறது.

"இப்பல்லாம், விருந்து விசேஷம்னு எங்கேயும் போறதில்லை, எல்லாம் இவங்க வளந்த பிறகுதான்..." என்ற என் உறவுக்காரப் பெண்ணை ஏனென்று கேட்டபோது, "எங்க போனாலும் இவனுங்க பண்ற சேட்டையில திட்டு வாங்கிட்டுத்தான் திரும்பவேண்டியிருக்குது. அதனால இவன்களுக்குப் புத்தி தெரிஞ்சப்புறம்தான் எல்லாம்" என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோதே, கையை உதறிவிட்டுத் தெரிச்சு ஓடித் தெருவில் விளையாடப்போன அந்தச் சிறுவனைப் பார்க்கும்போது மனசில் சங்கடம்தான் தோன்றியது.

"அன்னிக்கு, ஒரு கிரகப்பிரவேசத்துக்குப் போயிருந்தேன். எல்லாரும் வீட்டை சுத்திப்பாத்துட்டு இருந்தப்ப, எங்கே இவன்னு பாத்தா மொட்டை மாடி கட்டைச் சுவரில் ஏறி நிக்கிறான்.ஒற்றை நிமிஷம் பார்க்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சுப்பார்க்கவே முடியல..." என்று சொல்லிவிட்டுக் கண்கலங்கிய அந்தத் தோழியைப் பார்க்கையிலும் கஷ்டமாகத்தான் இருந்தது.

இங்கே அமீரகத்தில், காருக்கு அடியில் ஒளிந்து விளையாடிய ரெண்டு குழந்தைகள், தந்தை வந்து காரை ஸ்டார்ட் பண்ணின பிறகும்கூட வெளியே வராமல், விளையாட்டில் திளைத்திருக்க, சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் பத்திரிகைகளில் வந்தது.

அன்றைக்கு, அந்தச் சிறுமியைக் காணவில்லையென்று தெருவே தேடிக்கொண்டிருந்தது. பக்கத்துப் பள்ளிக்கூடத்தில், சாலையில், கடைகளில், அடுத்தவீடு எதிர்த்தவீடென்று எல்லா இடத்திலும் தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல்போகவே, மொட்டைமாடியில் பாத்தீங்களா என்று ஒருவர் கேட்க, மொத்தக் கூட்டமும் மொட்டைமாடிக்கு ஓடியது. அங்கே ஒற்றையாய் வசிக்கும் இளைஞனுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள் அந்த மூன்றுவயசுக் குழந்தை.

இந்தக் குழந்தையாக மாடிக்குப்போனதா, அல்லது அவன்தான் கூட்டிட்டுப்போனானா என்று ஆளாளுக்கு அவரவர் மனப்போக்கின்படிப் பேச, "இன்னும் கொஞ்சநேரம் கதை கேட்டுட்டு வரேம்மா..." என்று தன் அம்மாவிடம் கள்ளமில்லாமல் கேட்டது அந்தக் குழந்தை. ஆனா, அதுக்குப் பதிலாகக் கிடைச்சதோ கூட ரெண்டு அடி மட்டும்தான்.

பக்கத்து வீட்டுக்காரி பொறாமை பிடிச்சவ, மாடி வீட்டுக்காரன் ஒரு மாதிரி, எதிர்த்த வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியல என்று அக்கம்பக்கத்தில் யாருடனும் நட்புப் பாராட்டமுடியாமல் கட்டிப்போடப்படுகிற மொட்டுகள் என்னதான் செய்யும்? காலையில் எட்டுமணிக்கு ஆட்டோவில் ஏத்தி அனுப்பினா, மாலை நாலரை மணிக்கு வந்து, நாலு பிஸ்கட்டும் பாலும் குடிச்சிட்டு, டாம் அண்ட் ஜெரியையோ, டோரா புஜ்ஜியையோ பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அடுத்து, இருக்கவே இருக்கு ஹோம் வொர்க்.

கதையில் வருகிற டாம் அண்ட் ஜெரி மாதிரி குறும்பும் கும்மாளமுமாய் இருக்கவோ, டோராவை மாதிரி தானும் வெளியில் செல்லவும் விளையாடி மகிழவும் அந்தக் குழந்தையும் ஆசைப்படுமென்று ஏன் அம்மா அப்பாக்களுக்குப் புரியமாட்டேனென்கிறது?

என்றைக்காவது ஒருநாள் பார்க்கில் விளையாடக் கூட்டிப்போனால்கூட, ஒன்னோட சைக்கிளை வச்சு நீ மட்டும் விளையாடு, விச்சுகிட்ட குடுத்தே பிச்சுப் போட்டுடுவான், என் கண்ணை விட்டு விலகி, தள்ளிப்போகக்கூடாது, கடையில இருக்கிற கருமத்தையெல்லாம் கேக்கக்கூடாது, கண்டவங்ககூடல்லாம் கதை பேசக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டளைகள் விதிக்கப்பட, என்னசெய்வதென்றே புரியாமல் திணறித்தான்போகிறது குழந்தை.

குச்சி மிட்டாயும், குருவி பிஸ்கட்டும், பச்சை மாங்காயும், பப்படமும் வாங்கி எச்சில் ஒழுகச் சாப்பிட்டுவிட்டு, பச்சைக்குதிரை, பம்பரம், பாண்டி, குச்சிக்கம்பு, கோலிவிளையாட்டென்று இச்சைப்படி தெருவில் விளையாடி வளர்ந்த தலைமுறை, தன் பிள்ளைகளைக் கயிற்றில் கட்டிய கன்றுக்குட்டிகளைப்போல் வளர்ப்பதைப் பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச்சொல்லப்போனால், 'அட, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...காலம் கெட்டுக்கிடக்குது' என்றுசொல்லிவிட்டுக் கடந்து போய்விடுகிறார்கள் பெற்றவர்கள்.

விபாஷா...வயது பத்து, சிம்லாவில் ஐந்தாம்வகுப்புப் படிக்கும் இந்தச் சிறுமி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதிக்கு இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள். விஷயம் என்னன்னா, சிம்லாவில் சின்னக் குழந்தைகள் விளையாட வசதியாகப் பூங்கா ஏதும் இல்லாத காரணத்தால், குழந்தைகள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்க நேரிடுகிறது. அதனால் எங்களுக்கு வசதியாகப் பூங்கா ஒன்று அமைத்துத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறாள் அந்தச் சிறுமி. சிறுமியின் வேண்டுகோளைப் பரிசீலிக்கும்படி, அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்.

வெளையாடப்போறேன், வெளையாடப்போறேன்னு, சொன்னதையே திரும்பத்திரும்பச்சொல்லித் தொல்லை கொடுக்காதே சனியனே...என்று அர்ச்சனையை ஆரம்பிக்குமுன்னால் கொஞ்சம் யோசியுங்க. படிப்பு, ட்யூஷன், பரீட்சை, மதிப்பெண் என்று ஏகப்பட்ட இறுக்கத்திலிருக்கிற குழந்தைகள் கொஞ்சம் மனதைத் தளர்த்திக்கொள்ள நாம் அனுமதித்தே ஆகவேண்டும்.அவர்களுக்குப்பிடிக்கிற விதத்தில் அவ்வப்போதாவது விளையாட அனுமதிக்கவேண்டும். கூடி விளையாடச்செய்தல் குழந்தைகளுக்குள் குழுவாகச் சேரும் மனப்பான்மையை உண்டுபண்ணும்.

மனமகிழ்ச்சியுடன் வளரும் குழந்தைகள் வளர்ந்தபிறகு, தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அடக்குமுறைக்குள் சிக்கிய குழந்தைகள் வளர்ந்த பின்னாலும், அவசரமும் ஆத்திரமும்தான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நாம் யோசிக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.