வெள்ளி, 6 ஜூன், 2014

ஆடி அழைப்பு!

போனவருஷம் ஆனிமாதம் கடைசீ முகூர்த்தத்துல, திருவளர்ச்செல்வி அகிலாவுக்கும் திருவளர்ச்செல்வன் தினகரனுக்கும் கல்யாணம், அதாங்க எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும். கல்யாணமான மூணாவது நாள் மறுவீட்டுக்குப் போயிட்டு அதே நாள் திரும்பி வந்தா, அஞ்சாவது நாள் காலையில அப்பாவும் அம்மாவும் என் புகுந்த வீட்டுக்கு வந்து நிக்கிறாங்க. ஓடிப்போயி அம்மாவைக் கட்டிக்கிட்டேன்.

அவங்க வந்த விஷயம் என்னன்னு பாத்தா, "நாளைக்கு ஆடி பிறக்குது சம்பந்தி... முன்னமாதிரி இப்பல்லாம் ஒரு மாசம் பிரிச்சு வைக்கிறது சாத்தியமில்லேன்னாலும் சாஸ்திரத்துக்கு ஒரு வாரமோ இல்ல நாலஞ்சு  நாளாவது பிரிச்சு வைக்கணும்னு எங்கம்மா அபிப்ராயப்படுறாங்க..." என்று அவங்கம்மாவை நடுவில் நிறுத்தி, அப்பா என் மாமனாரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் "அதுக்கென்ன சம்பந்தி...உங்க பொண்ணு, உங்க வீட்டுல இருந்துட்டு வரதுல என்ன தப்பு? அதுவுமில்லாம பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரி... அதுக்கெல்லாம் ஒரு காரண காரியம் இருக்கும் என்று ஆமோதித்தார்.

ஆஹா, இதுதானா விஷயம்? ஆனா, நம்ம ஆத்துக்காரர் இதுக்கு அக்செப்ட் பண்ணமாட்டாரேன்னு நினைச்சிக்கிட்டு அவரைப் பாத்தா, அவரும் மாமனார் சொன்னா மறுவார்த்தை கிடையாதுங்கிறமாதிரி  சந்தோஷமாத்தான் தலையாட்டிட்டு இருந்தாரு. "என்னடா இது? அஞ்சே நாளுக்குள்ள மனுஷன் ரங்கமணீ என்ஜாய்னு என்னை விட்டுட்டு சந்தோசமா இருக்க ப்ளான் பண்ணுறாரோன்னு சந்தேகத்தோட பாத்தா, அந்தநேரம் பாத்து அவரும் என்னைப் பார்த்துட்டு, சட்டுன்னு "அச்சச்சோ...நான் எப்படி சமாளிப்பேன்..."என்கிற தோரணையில் முகத்தை மாற்றி வைத்துக்கொண்டார்.

ஆஹா, இந்தக் கூட்டணியை உடைச்சு, ஆடித் தீர்மானத்தைத் தோற்கடிக்கணுமே என்ற திட்டம் மனசில் எழ, என் மாமனார் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசியே தீரணும் என்ற திட சித்தம் கொண்ட என் மாமியாரை  எங்கே என்று தேடின என் கண்கள். அத்தை அப்போ தான் குளிச்சுமுடிச்சு குங்குமமும் மஞ்சளுமா வந்து நின்னங்க. "வாங்க அண்ணி, உங்களை இப்படிப் பார்த்தா, அப்படியே சாட்சாத் அம்பாளைப் பாக்கிற மாதிரியே இருக்குன்னு..." எங்க அம்மா சொல்ல, அத்தை அப்படியே 'அவுட்' ஆனது அப்பட்டமாய்த் தெரிஞ்சது. "ஆஹா, அம்மா கவுத்திட்டியே..." என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அத்தை உட்பட அத்தனைபேருமாய்ச் சேர்ந்து ஆடித் தீர்மானத்தைக் கூடி நிறைவேற்றியிருந்தார்கள்.

வேறு வழியில்லை... நாளைக்குப் புறப்பட்டுத்தான் ஆகவேண்டும். என்னதான் சொல்லுங்க, கல்யாணமான உடனே பொண்ணுங்களுக்கு புருஷன் மேல அதீதப் பாசம் வந்துருது. அம்மா வீட்டுக்குப் போகணும்னு ஆசை இருந்தாலும்கூட அங்கயும் அவர் கூட இருந்தால் நல்லாருக்கும்னு தோணுது. 

அடுப்படியில் இருந்த என்கிட்ட இவர், "அம்மு, நீ உன்னோட ட்ரெஸ் எல்லாம் எடுத்து தயாரா வச்சுக்கோ... நளைக்குக் கிளம்பணும்ல" என்று சொல்ல, மனுஷன் என்னைத் தள்ளிவிடுறதுல எவ்வளவு குறியா இருக்காரு பாரு...ஒருவேளை, நாலஞ்சு நாள்ன்னு சொன்னது இவருக்கு நாலஞ்சு வாரம்னு புரிஞ்சிருச்சோ? என்று மனக்குரல் எச்சரிக்க, "நாலே நாள் தானேங்க... அங்கயே தேவையானதெல்லாம் இருக்கு" என்றேன் நான். 

"ஓ...அப்போ சரி" என்றவரைப் பார்த்தால், இவருக்கு என்னை அணுப்பணுமேன்னு கொஞ்சம் கூட வருத்தம் இருக்கிறமாதிரி தெரியலை...ஒருவேளை அவங்க அப்பா அம்மாவோட கண்டிப்புக்காகத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ? என்ற ரீதியில் ஒரு பார்வையை வீச,அதைக் கரெக்டாப் புரிஞ்சுகிட்ட அவர், "நாலஞ்சு நாள்தானேம்மா... உன்னைக் கொண்டு விட்டுட்டு நான் வந்துருவேன். அப்புறம் இடையில ரெண்டே நாள். மூணாவதுநாள் நான் திரும்பவும் கூப்பிட வரப்போறேன். அதுக்கெதுக்குக் கவலைப்படுறே?" என்று அவர் கெஞ்சலாய்ச் சொல்லவும், "சேச்சே, எங்க வீட்டுக்குப் போறதுல எனக்கு என்ன வருத்தம்...உங்களை நினைச்சாத்தான்..."என்று கீழே விழுந்தாலும் மூக்கில மண் ஒட்டாத பாவனையில் சமாளித்தேன். 

மறுநாள், காலையில சாப்பிட்ட கையோடு கிளம்பினோம். பைக்கில ஏறிப் புடவைத் தலைப்பை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவர் தோளையும் பிடித்துக்கொண்டு பிரயாணிக்கையில், மனசுக்குள்ள திக்குதிக்குனு இருந்திச்சு. இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போயிட்டிருக்கக்கூடாதான்னு நினைக்கிறதுக்குள்ள, திடுக்குன்னு அம்மாவீடு வந்திருச்சு. உள்ளபோயி கொஞ்சநேரம் சம்பிரதாயமாப் பேசிட்டிருந்துட்டு, மதியம் விருந்தைச் சாப்பிட்ட கையோடு இவர் கிளம்ப எத்தனிக்க, எனக்குக் கண்ணீர் குளம்கட்ட ஆரம்பித்தது.  தொண்டைக்குள்ள  வேற, என்னவோ அடைச்ச மாதிரி வலிக்குது. ஆனாலும், அதை அடக்கு அடக்குன்னு அடிமனசு சொல்லவே அழுத்தமா முகத்த வச்சுக்கிட்டேன்.

அவர் என்னன்னா போருக்குப் புறப்பட்ட கட்டபொம்மன் ஜக்கம்மா கிட்ட சொன்ன கணக்கா, போயிட்டு வரேன் அம்மு, ரெண்டுநாள்ல வரேன்" என்று சொல்லிட்டுக் கிளம்பினார். நானும் அவரோட வாசல் வரைக்குக் கூடப்போனேன். அழுகை அழுகையா வந்தாலும், அழுகைக்குள் அலட்சியத்தை நுழைத்துச் சிரிக்கிறமாதிரி சிரித்து, "ஆல் த பெஸ்ட்" என்று  அவரைப் பார்த்துச் சொன்னேன். அதை என் முகம் எப்படிப் பிரதிபலிச்சுதோ தெரியலை, "என்ன ஆச்சு உனக்கு? முகமே சரியில்லை...எதுக்கும் டாக்டரைப் பாத்து சைனஸ் இருக்கானு செக் பண்ணிட்டு வந்துரு..." என்று சொல்ல, எனக்கு என் மண்டையைக் கொண்டுபோயி மாடிப் படிக்கட்டுல முட்டிக்கலாம் போல இருந்திச்சு. ஆனாலும், மௌனமாத் தலையாட்டிக்கிட்டேன்.

ஆனாலும் இவருக்கு எவ்வளவு கல் மனசு? ஒருவேளை, இந்த ஆம்பளைங்களோ இப்படித்தானோ? என்று அலுத்துக்கொண்டபடி வீட்டுக்குள் நுழைய, "என்ன அகிலாக்குட்டி, ஒரு மாசம்கூட ஆகல அதுக்குள்ள வீட்டுக்காரனை விட்டுப் பிரியமுடியலை போலிருக்குதே..." என்று பாட்டி  என் வாயைப் பிடுங்க, "அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி, புறப்படும்போதே  கொஞ்சம் தலைவலி என்று சொல்லிவிட்டு அருகில் உட்கார்ந்தேன். 

ம்ம்... நீ சொல்லலேன்னாலும் உன் முகம்தான் முழுசையும் சொல்லுதே... கல்யாணமான கொஞ்சநாள்ல கட்டிக்கிட்டவனைப் பிரியிறது கஷ்டமாத்தான் இருக்கும். அந்தக் காலத்துலல்லாம் ஆடியில பிரிச்சு வைக்கிறதுக்கு ஆளுக்கொரு காரணம் சொல்லுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரே காரணம்தான். பிரிச்சு வைக்கையில் பிரியம் கூடும். 

அதுமட்டுமில்லாம ஆடிமாசம் அம்மனோட மாசம். ஒரு குடும்பத்தில பொறக்குற ஒவ்வொரு பொண்ணும் அந்த சக்தியோட அம்சம். அவளை ஆடியில அழைச்சு அவளுக்கு சீர்செய்து சந்தோஷப்படுத்துறது அந்தப் பராசக்தியையே சந்தோஷப்படுத்துறது மாதிரி... அதுமட்டுமில்லாம பொண்களை மதிக்கணும்னு வாயால சொல்லி, வார்த்தைகளால எழுதினாமட்டும் பத்தாது, இதமாதிரி வீட்டில இருந்தே சொல்லிக்கொடுக்கணும். 

ஆடிமாசம் பொறந்தா அண்ணன், தம்பிகள் அவங்க கூடப்பிறந்தவளுக்குப் பச்சைப்புடவை குடுக்கணும், மஞ்சள் புடவை குடுக்கணும்னு புரளி பரப்பி விடறாங்களே அதெல்லாம் இந்தமாதிரி விஷயங்களை மனசுல வச்சுத்தான். அதனாலதான் நானும், உங்க அப்பா கிட்ட சொல்லி உன்னை ஒண்ணுரெண்டு நாளாவது வந்து இருக்கட்டும்னு அழைச்சிட்டு வரச்சொன்னேன் என்று என் தலையை ஆதுரமாய் வருடியபடி பாட்டி சொல்லிவிட்டு,"சரி கண்ணு...தலை வலிக்குதுன்னு சொன்னேல்ல, நீ போயி கொஞ்சநேரம் படுத்துக்கோ" என்று சொல்ல, எழுந்து அறைக்குள்போய்க் கட்டிலில் விழுந்தேன். 

இப்ப அவர் எங்க போயிருப்பார்? வீட்டுக்குப் போயிருப்பாரா, இல்லே வழியில இருப்பாரா? ஃபோன் போட்டுக் கேட்டுப் பாப்போமா என்ற நினைப்பு வர, "அடங்குடி அகிலா, முதல்ல அவரு பத்திரமா பைக்க ஓட்டிக்கிட்டு வீடுபோய்ச் சேரட்டும் என்று எச்சரித்தது மனக்குரல். அப்படியே கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அதில இருந்த அவரோட ஒவ்வொரு பழைய மெசேஜையும் படிச்சுப் பாத்து மனசு நெகிழ, அதற்குள் கையிலிருந்த ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது. 

நான் எதிர்பார்த்தமாதிரி, அவரே தான்...ஆனாலும் உடனே எடுக்காதே, நாமளும் பிசியாத்தான் இருக்கோம்னு காட்டிக்கவேண்டாமா என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்ல, ஏழெட்டு ரிங் போனதும் எடுத்து, "சொல்லுங்கங்க, வீட்டுக்குப் போயிட்டீங்களா? என்றேன். 

"ம்ம்...வந்துட்டேன் அம்மு. ஆனா, உன்னை அங்கே விட்டுட்டு வரும்போதுகூட எனக்கு ஒண்ணும் தெரியல. ஆனா, இங்க வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சா, ஒவ்வொரு இடத்துலயும் நீதான் தெரியிற. எனக்கு நம்ம ரூம்க்குள்ள இருக்கவே முடியல தெரியுமா? அழகா விரிச்சிருக்கிற படுக்கை, அடுக்கி வச்சிருக்கிற துணிகள், பளிச்சுன்னு சுத்தமா இருக்கிற மேஜைன்னு எதைப் பாத்தாலும் உன்னோட ஞாபகம்தான் வருது. 

ஏதோ தொண்டைக்குள்ள கல்லைப் போட்டுக்கிட்டமாதிரி, நெஞ்சுக்குள்ள அடைக்குது. நீ என்னன்னா, கூலா, போயிட்டு வாங்க, பெஸ்ட் ஆஃப் லக்னு சொல்லி வழியனுப்புறே. ஆனாலும் பொண்ணுங்க மனசு கல்லுதான் போல... என்று எதிர்முனையில் அவர் புலம்ப, "ஆஹா...நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று கத்தவேண்டும்போலிருந்தது எனக்கு. ஆனாலும், ஒரு ஓரத்துல, இவர் உண்மையாத்தான் சொல்றாரா? என்ற பொண்ணுங்களுக்கே உரிய சந்தேகமும் எழாமல் இல்லை.

சரி சரி, மூணு நாள் தானே, சமாளிச்சுக்கங்க...என்று என் பங்குக்கு அவர் வீசிய ஈட்டியையே திருப்பி எடுத்து வீச, "இல்லம்மா, என்னால முடியாது... என்னதான் அப்பா அம்மா கூட இருந்தாலும் நீ இல்லாதது வீடே வெறுமையாத் தெரியிது. இன்னிக்கி மட்டும் சமாளிச்சுக்கிறேன். நாளைக்குக் காலையில நீ கிளம்பிரு. ஆடியும் போதும் அவங்க சம்பிரதாயமும் போதும்" என்று அவர் சொல்ல, மனசுக்குள் ஒரு இனம்புரியாத கர்வம் எட்டிப்பார்த்தது. அத்தோடு, அவரை நினைக்கப் பாவமாவும் இருந்தது. 

இப்படிப்பட்ட ஒரு தேடலைக் கணவன் மனைவிக்குள் உண்டாக்குவதற்காகத்தான் இதுமாதிரிப் பிரித்துவைக்கிற சம்பிரதாயத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் என்று பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. ஒன்றிரண்டு நாளுக்கே இப்படியென்றால் முன்னை மாதிரி ஒருமாசம் பிரித்துவைத்தால், ஐயோ முடியவே முடியாது என்ற எண்ணத்துடன்,"சரி...சரி, அவசரப் படாதீங்க, நாளைக்குக் காலையில ஆஃபீஸ் போனீங்கன்னா நாள் முழுக்க ஓடிப்போயிரும். அப்புறம் நாளை மறுநாள் ஒரேநாள். அதுக்கடுத்தநாள் நீங்களே இங்க வரப்போறீங்க. வரும்போது உங்களுக்காக, உங்களுக்குப் பிடிச்ச ஒரு பரிசோட காத்திருப்பேன், சரியா? என்று நான் சொல்ல, அவர் அது என்னவென்று கேட்டு என்னை நச்சரிக்க, அப்புறம் என்ன, அந்த அஞ்சாறு நாளும் ஏர்டெல்லுக்கு எங்களால் நிறைய்ய வருமானம்!

                         ******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக