அது ஒரு அடர்ந்த கானகம்...அங்கே ஒரு கொள்ளைக்காரன். அவன் பேரு ரத்னாகரன். அந்தக் காட்டுப்பகுதியில, வருகிற போகிறவங்ககிட்டயெல்லாம், வழிப்பறி செய்து வாழ்க்கையை நடத்திக்கிட்டிருந்தானாம்.
ஒருநாள், வழிப்பறி பண்ண யாருமே கிடைக்காம அலைஞ்சப்ப, அவங்கிட்ட, முதன்முதலாக வந்து மாட்டினாராம் ஒருத்தர். ஆனா, அவர்கிட்டே கொள்ளையடிக்கிறதுக்கு எதுவுமே இல்லையாம். கோபம் வந்திச்சு அந்தக் கொள்ளைக்காரனுக்கு.
கையிலயும் பையிலயும் ஒண்ணுமே இல்லாம இப்படி சுத்திக்கிட்டிருக்கியே, எப்படின்னு அவரைப் பார்த்துக் கேட்டானாம் கொள்ளையன். அதற்கு அந்த வழிப்போக்கர், என் பெயர் நாரதன்...திரிலோக சஞ்சாரி, காசில்லாமலே எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடியவன் என்று சொல்லிவிட்டு. "நீ ஏன் இவ்வாறு கொள்ளைத் தொழில்செய்து காலம் கடத்துகிறாய் ?..." என்று கேட்டாராம்.
அதற்கு அந்தக் கொள்ளையன், "என்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்களையும் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்" என்று சொன்னானாம். அதற்கு நாரதர், "அப்படியானால் நீ செய்கிற இந்தப் பாவமாகிய வழிப்பறியில், அவர்களுக்கும் பங்கிருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தக் கொள்ளையன், "ஏன் இல்லை, நான் கொள்ளையடிக்கிற பொருளில் பங்கிருக்கிற மாதிரியே, இந்தப் பாவத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றானாம்.
அதற்கு நாரதர், "எதற்கும், நீ இதை உன் குடும்பத்தினரிடம் கேட்டுவிட்டு, வந்து பதிலைச்சொல்" என்றாராம். அதற்கு அவன், நாரதரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தன் வீட்டுக்குப்போய், கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளப்போனானாம் ரத்னாகரன். திரும்பிவந்தபோது, திகைத்துப்போயிருந்தானாம் அவன்.
என்னாச்சு ரத்னாகரா? என்று அவனைக் கேட்டாராம் நாரதர். அதற்கு அவன், கட்டிவைத்திருந்த நாரத முனிவரை அவிழ்த்து விட்டுவிட்டு,"எங்கள் அனைவரையும் காப்பாற்றுவது உன்னுடைய கடமையேயன்றி, நீ செய்யும் எந்தப் பாவத்திலும் எங்களுக்குப் பங்கில்லை என்று என் பெற்றவர்கள் முதற்கொண்டு எல்லாரும் மறுதலித்துவிட்டார்கள் ஐயா..." என்று மனவருத்தத்தோடு சொன்னானாம்.
அதற்கு நாரதர், "அதுதான் உண்மை ரத்னாகரா...பாவமோ புண்ணியமோ, அவனவன் செய்யும் செயல்களுக்கு அவனவனே பொறுப்பாவான். பாவப்பொருளில் மற்றவர்களுக்குப் பங்கிருந்தாலும், பெறப்போகும் தண்டனையில் அவர்களுக்குப் பங்கு கிடையாது" என்று கூறினாராம்.
தான் செய்த செயல்களால், தனக்குப் பாவங்கள் சேர்ந்துவிட்டதே என்று அஞ்சி நடுங்கினானாம் அவன். அன்றைக்கு மனம்திருந்திய அந்த ரத்னாகரனாகிய வால்மீகியிடமிருந்துதான் இன்றைக்கும் பேசப்படுகிற ராமாயணம் எனும் இதிகாசம் பிறந்தது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக