திங்கள், 10 பிப்ரவரி, 2014

ஊரார் பிள்ளை



தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவரவர் பிள்ளைகளைப் பிடித்து, இழுத்துக்கொண்டுபோய் ட்யூஷன் நடத்துமிடங்களில் அடைத்துவிட்டு, அம்மாக்கள் டீயும் கையுமாய் டி.வி சீரியல்களில் ஆழ்ந்திருந்த நேரம்...வீட்டுக்கருகிலிருந்த  காந்திசிலைகிட்ட கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள் எட்டுவயசு சிந்துவும் அவள் தம்பி அருணும்.

அம்மா வர நேரமானால், அண்ணாச்சி கடையில் ஆளுக்கொரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கிட்டு, நாலைந்து வீடுகள் தள்ளியிருந்த இந்திரா ஆன்ட்டி வீட்டில் தொல்லைபண்ணாம உட்கார்ந்திருக்கணுமென்பது ஏற்கெனவே அவர்கள் அம்மா அனு சொல்லிவைத்திருந்த விஷயம். இந்திராவும் அனுவும் ஒரே ஊர்க்காரங்க என்பதோடு ஒரே பள்ளியில் படித்தவர்களும் கூட.

பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு, இந்திரா ஆன்ட்டி வீட்டுக் காலிங்பெல்லை மாற்றிமாற்றி அடித்தார்கள் ரெண்டுபேரும். வழக்கத்துக்கு மாறாக, சந்துரு அங்கிள், இந்திரா ஆன்ட்டியின் கணவர்வந்து கதவைத் திறந்தார்.

கையிலிருந்த கண்ணாடி கிளாசில் மிரிண்டாவுடன் நின்ற அவர், "என்ன பசங்களா, உங்க அம்மா இன்னும் வரலியா? என்றார். அம்மாவுக்கு இன்னிக்கு ஓவர்டைம் இருக்குதாம். அவங்க வரவரைக்கும் இங்கயே இருக்கச்சொன்னாங்க அங்கிள்...என்றான் அருண். அதற்குள், "ஆன்ட்டி, குடிக்கத் தண்ணி வேணும்..." என்று உட்புறம் பார்த்துக் குரல்கொடுத்தாள் சிந்து

"ஆன்ட்டி வீட்ல இல்லைடா, கோயிலுக்குப் போயிருக்காங்க...தண்ணிதானே வேணும், நானே கொண்டுவரேன்" என்றபடி உள்ளேபோனார் அங்கிள். ஆன்ட்டி வீட்ல இல்லேன்னதும் சந்தோஷம் கிளம்பியது அருணுக்கு. ஆன்ட்டி பார்க்கிற அறுவையான சீரியல்களைப் பார்க்காமல், ஆதித்யா சேனல் பார்க்கலாமென்று வேகவேகமாக ரிமோட்டைக் கையிலெடுத்தான். "ஆதித்யா வேண்டாண்டா அருண்...அனிமல் ப்ளானட் பார்க்கலாம்" என்றாள் சிந்து அதற்குள், இரண்டு டம்ளர்களில் மிரிண்டாவும் சின்ன பாட்டிலில் தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தார் சந்துரு அங்கிள்.

நீங்க ரெண்டுபேரும் சண்டைபோட்டுக்க வேணாம்..."அருண், நீ பெட்ரூம் டிவியில ஆதித்யா பாரு, நானும் சிந்து குட்டியும் ஹால் டிவியில அனிமல் ப்ளானட் பாக்குறோம்  என்று ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்து உட்காரவைத்தார் அங்கிள். உடனே, மிரிண்டா கிளாசுடன் சந்தோஷமாக அறைக்குள் ஓடினான் அருண் .கையிலிருந்த மிரிண்டாவை ஒரேமூச்சில் குடித்துவிட்டு, படுக்கையில் சரிந்தபடி டிவியைப் பார்க்க ஆரம்பித்தான் அவன்.  கொஞ்ச நேரம் கார்டூன் கதாபாத்திரங்களுடன் கூடக்கூடப் பேசிக்கொண்டிருந்தவன் பத்துநிமிஷத்தில் தூங்கிப்போய்விட்டான்.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான் சந்துரு.  பிரதோஷ பூஜை முடித்து, பிரசாதத்துடன் உள்ளே நுழைந்தாள் இந்திரா. இன்னிக்கும் நீங்க சீக்கிரமா வந்துட்டீங்களா?  வந்து ஒண்ணும் சாப்பிட்டிருக்கமாட்டிங்கல்ல, காபி போட்டுத்தரவா என்று கேட்டபடி ஹாலுக்கு வந்தாள். அதற்குள் சிந்துவும் சோஃபாவில் சரிந்து உறங்கியிருந்தாள். இன்னிக்கும் இந்தப் பசங்க இங்க வந்துதான் லூட்டியடிச்சுதா? என்று எரிச்சலுடன் கேட்டவள் எப்பத்தான் இவங்க அப்பாவும் அம்மாவும் புள்ளைங்க விஷயத்துல கரிசனம் காட்டப்போறாங்களோ என்று கணவனிடம் சொன்னபடி பூஜையறைக்குப் போனாள் இந்திரா.

படுக்கையறையிலும் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, அங்கே உறங்கிக்கொண்டிருந்த அருணைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் அளவு மீறிப்போய்விட்டது. அழுக்குக் காலோட இதுங்கள சோபாவுலகூட நான் உக்காரவிடமாட்டேன். நீங்க என்னன்னா, படுக்கைல ஏறி அழுக்காக்கவிட்டுட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க" என்று இறைந்தவளிடம் "இதுக்குப்போயி கோவப்படுறியே இந்திரா, நம்ம வீட்ல குழந்தைங்க இருந்திருந்தா கட்டில்ல ஏறி விளடமாட்டாங்களா?" என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முற்பட, "ஓ... எனக்குக் குழந்தையில்லைன்னு வேற குத்திக் காட்டுறீங்களோ?

காசு காசுன்னு இவங்க அப்பாவும் அம்மாவும் காலநேரம் தெரியாம அலையிறாங்க...அவங்க வரதுக்குள்ள இதுங்க தூங்கிடுது. காலையில, விடிஞ்சும் விடியாமலும் எழுப்பி மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்பிடுறாங்க. ஸ்கூல்ல இருந்து வந்ததும் தண்ணியைக் குடுங்க, டிவியைப் போடுங்க ன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க. சொல்லப்போனா இதுங்க அப்பா அம்மா இதுங்ககிட்ட உட்கார்ந்து அஞ்சு நிமிஷமாவது பேசுவாங்களோ என்னவோன்னு கூடத் தெரியலை. ஆனா நாம  இதுங்களோட கேள்விக்கெல்லாம் பதில்சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு..." என்று அவள் எரிச்சலில் படபடக்க,

"நாம தெரிஞ்சவங்க பக்கத்துல இருக்கோம்னு தைரியம்தான் இந்திரா. அவங்க ரெண்டு பேரும் குறைஞ்ச சம்பளக்காரங்க. குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கணும்னா ஓவர்டைம் பாத்தாதான் ஓரளவுக்கு அவங்களுக்குக் கட்டுப்படியாகும் என்ற கணவனிடம், "ஓ, அப்போ அவங்க காசு சம்பாதிக்கிறதுக்காக நான் அவங்க புள்ளைங்களுக்கு ஆயா வேலை பாக்கணுமோ?  என்று அவள் குரலை உயர்த்திக் கூப்பாடு போட,

தெருமுனையில், நிறுத்தத்தில் நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினாள் அருணின் அம்மா அனு.  ஓவர்டைமோட சேர்த்து இந்த மாசம் ஒம்பதாயிரம் கிடைச்சிருக்கு. சிந்து கேட்ட வீடியோ கேமும், அருணுக்கு ஒரு சைக்கிளும் இந்த மாசம் கட்டாயம் வாங்கிரணும் என்று மனசுக்குள் நினைத்தபடி, முக்குக் கடை அண்ணாச்சியிடம் குழந்தைகளுக்குப் பிடித்த ரெண்டு மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொண்டு, ஓட்டமும்நடையுமாக வீட்டை நோக்கி வேகவேகமாய் வந்தவள் இந்திரா வீட்டில் போய்ப் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்காய் அழைப்புமணியை அழுத்துவதற்குள் அங்கே கேட்ட சம்பாஷணை அவளை முகத்திலறைந்தது. ஒருநிமிஷம் செயலற்றுப்போய் நின்றுவிட்டாள் அவள்.

அதே நேரம், இந்திராவிடம் மேலும்மேலும் பேசிச் சண்டையை வளர்க்க விரும்பாத சந்துரு,  "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்னு பழமொழியே சொல்லுவாங்க...இருக்கிற நிலையைப் பார்த்தா இனி நமக்கு அந்த பாக்கியமே இல்லாம போயிடும்போல.." என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி,..."சரி, நான், கடைக்குப்போயி சிகரெட் வாங்கிட்டு வந்துடறேன். நீ கதவைச் சத்திக்கோ..." என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான்.

வாசலில் நின்ற அனுவைப் பார்த்ததும் சட்டென்று அவன் முகம் சங்கடத்தில் வெளிர, அதைக் கண்டுகொள்ளாமல், அப்போதுதான் வந்தவள்போல, கையிலிருந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள்.  "இந்திராவையும் கூப்பிடுங்க... எங்க வீட்டுக்காரருக்கு அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதனால நான் இன்னியோட வேலையை விட்டுட்டேன். கூடிய சீக்கிரம் அந்தப்பக்கமாவே வீடு பாத்திட்டுப் போயிரலாம்னு இருக்கோம்" என்றவள், "சிந்தூ, அருண்..." என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தாள். உள்ளிருந்து அவர்களை எழுப்பிக் கூட்டிக்கொண்டுவந்தாள் இந்திரா. அப்பாடா என்ற ஒரு விடுதலை அவள் முகத்தில் தெரிந்தது. "இன்னிக்கும் இங்கயே தூங்கிருச்சுங்களா? தேங்ஸ் இந்திரா..." என்று அவள் முகத்தைப் பார்த்து மெல்லச் சொன்னவள் பிள்ளைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஆனால், அனு, சொல்வது உண்மையில்லை என்று உள்ளுக்குள் ஏதோ உணர்த்த, மறுகிய மனத்துடன் வெளியிறங்கி நடந்தான் சந்துரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக