செவ்வாய், 25 அக்டோபர், 2011

தித்திப்பாய் ஒரு தீபாவளி!


டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திறந்து கடைக்குள் நுழைந்தார் கதிரேசன். காலையிலேயே, தீபாவளிக்கான கடைசிநேர வியாபாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. காசை வாங்கிப்போடுவதும் கடன் சொல்லுபவர்களுக்குக் கணக்கெழுதிவைப்பதுமாக விறுவிறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தார் கணக்கப்பிள்ளை கருணாகரன்.

முதலாளி கதிரேசன் உள்ளே நுழைந்ததும் அவரது கண்களை ஒரேயொரு வினாடி நேரடியாகச் சந்தித்து மீண்டது கருணாகரனின் கண்கள். ஒன்றும் விசேசமில்லை என்று அந்தப் பார்வையிலிருந்து புரிந்துகொண்டார் கதிரேசன். மனசுக்கு சங்கடமாயிருந்தாலும் பிரச்சனையைத் தன்னால் தீர்த்துவிடமுடியுமென்ற தெளிவோடு தானும் கடைப்பையன்களுடன் சேர்ந்து வியாபாரத்தில் மூழ்கினார் கதிரேசன்.

பதினோருமணி சுமாருக்குக் கடையில், கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தது. தனக்கும் மற்றவர்களுக்கும் தேனீர் வாங்கிவரச்சொல்லிவிட்டு, கணக்கப்பிள்ளையிடம் கல்லாவில் எவ்வளவு தேறும் பாருங்க என்றார் கதிரேசன். சில்லறையும் தாளுமா ரெண்டாயிரத்துக்கிட்ட இருக்கும்ங்க, என்ற கணக்கப்பிள்ளை, "அண்ணாச்சி, நாம வேணும்னா டீச்சர் வீட்டுக்கும், வக்கீலய்யா வீட்டுக்கும் ஒருதடவை ஆளனுப்பிக் கேட்டுப்பாப்பமா?" என்றார்.

"இல்லையில்லை...வேணாம் கணக்கு...அவுக ரெண்டுபேரும் கைக்குக் காசு வந்ததும் தவறாம கொண்டுவந்து குடுக்கிறவங்க. என்ன பிரச்சனையோ, இப்பக் கொஞ்சம் தாமதமாயிருச்சு. நாமளா போய்க் கேட்டா சங்கடப்படுவாக" என்று அவசரமாய்க் கதிரேசன் மறுக்க, "அதுவும் சரிதான்... "என்றபடி அமைதியாகத் தன் கோப்பைத் தேநீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார் கணக்கு கருணாகரன்.

கடையின் மற்ற சம்பளக்காரர்களுக்கெல்லாம் ஒருவாரம் முன்னதாகவே சம்பளம் போட்டுவிட்டார் கதிரேசன். தீபாவளிக்கென்று, புதுக்கம்பெனியொன்றிலிருந்து, முறுக்கு, சீடை, மைசூர்பாகு, சோன்பப்டியென்று நிறைய வாங்கி அடுக்கிவிட்டதால், கையிருப்புக் கரைந்துவிட, கடைசியில், கணக்குப்பிள்ளைக்கும் தன் வீட்டுச் செலவுக்கும் பணம் தட்டுப்பாடாகிப்போனது அவருக்கு. அதற்கு, முக்கியமான ரெண்டு இடத்திலிருந்து வரவேண்டிய பணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கதிரேசன். அந்தப் பணம் மட்டும் கிடைத்திருந்தால் தீபாவளிக்கு முந்தினநாளில் உட்கார்ந்து, காசுக்காக யோசித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்காதே என்ற எண்ணம் ஓடியது அவர் மனதில்.

மதியத்துக்குமேல் வீட்டுக்குத் துணியெடுக்க விடுப்புக்கேட்டிருந்தார் கணக்கு.  அதற்குள், எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டுமேயென்ற தவிப்பு கதிரேசனுக்கு. அவரிடம், "கடையைப் பாத்துக்கங்க கணக்கு, நான் வீடுவரைக்குப் போயிட்டுவந்துர்றேன் என்றார் கதிரேசன். அவரது மனதின் நோக்கம் புரிந்த பதைப்புடன், "அண்ணாச்சி, இப்ப ஒண்ணும் அவசரமில்லை. வருசாவருசம் தீபாவளி வரும். பணம் வரட்டும் நாம பாத்துக்கிடலாம்" என்றார் கணக்குப்பிள்ளை கருணாகரன். அவரைத் திரும்பிப்பார்த்துப் புன்னகைத்த கதிரேசன், காசுக்காகக் கத்திச் சண்டைபோடுகிற வேலையாட்களுக்கு மத்தியில் இத்தனை நல்ல ஊழியர் கிடைத்திருக்கிற சந்தோஷத்துடன்  "இருங்க, நான் இப்ப வந்துர்றேன்..." என்றபடி புறப்பட்டார்.

வீட்டுக்குள் நுழையும்போதே அதிரச வாசனை ஆளைத் தூக்கியது. "அடடா, அதுக்குள்ள சாப்பாட்டு நேரமாயிருச்சா? காலையிலயே, பலகாரம் செய்ய உட்காந்ததால, சமையல் கொஞ்சம் தாமதமாயிருச்சு என்றபடி, கழுவின கையைத் தலைப்பில் துடைத்தபடி அடுப்படியிலிருந்து வெளியில் வந்தாள் கற்பகம்.

கைச்செலவுக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் அவருக்குக் கடைசியாய் உதவுகிற அட்சயபாத்திரம் அவள்தான். "ஒண்ணும் அவசரமில்லம்மா... நீ நிதானமாப் பண்ணு. நான் ஒரு அவசரமான வேலையா வந்தேன்" என்றபடி அமர்ந்தவர், மெல்ல அவளுடைய முகத்தை நிமிர்ந்துபார்த்தார்.

என்ன கேட்டாலும் மறுக்காத மனைவியென்றாலும், அவளை நல்லநாளும் அதுவுமாய் சங்கடப்படுத்தப்போகிறோமேயென்று கதிரேசனின் மனசு மறுகியது. தாலிக்கொடியும் ரெண்டு வளையலும் தவிர, ஒரு ரெட்டைவடச் சங்கிலியுண்டு அவளிடம். விசேச நாட்களில் மட்டும் அந்த ரெட்டைச்சரம் அவள் கழுத்தில் மின்னும். மற்றபடி அநேக நாட்கள் அடகுக்கடையிலோ அல்லது அடுப்படி அலுமினிய டப்பாவிலோதான் இருக்கும்.

கறுப்புக்கு நகை போட்டா கண்ணுக்கு நிறைவா இருக்கும்னு அப்ப அம்மா சொன்னமாதிரி, அந்த ஒத்தை நகையைப்போட்டதும் பட்டுன்னு ஒரு பிரகாசம் கூடிரும் அவ முகத்தில். அந்தப் பிரகாசத்தை நாளைக்குப் பார்க்கமுடியாதேயென்ற தவிப்புடன், கைவிரல்களால் கணக்குப்போட்டபடி குனிந்து உட்கார்ந்திருந்தார் அவர். "என்னங்க, உடம்புக்கு முடியலியா? காலையிலேருந்து கடையில நிறைய வேலையா? சூடா காப்பி போட்டுத்தரவா?" என்றபடி அவருடைய நெற்றியைத் தொட்டுப்பார்த்தாள் அவள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..." என்றவர்,  "குடிக்க ஒரு டம்ளர் தண்ணி எடுத்துக்கிட்டு, அதோட, அந்த..." என்று தொடங்கியவர், "சொல்ல மறந்துபோச்சுங்க..." என்றபடி அவள் ஆரம்பிக்கவும்,  முகத்தைப்பார்த்து நிறுத்தினார். "நம்ப டீச்சரம்மா இல்ல, அவங்க வீட்ல, ஊர்லேருந்து விருந்தாளிங்க வந்திருக்காங்களாம். அதனால,கடைப்பக்கம்வந்து காசு குடுக்க முடியலன்னு, இப்பத்தான் வந்து ஆறாயிரம் பணமும், அவங்க வீட்ல செஞ்ச அச்சுமுறுக்கும் கொண்டுவந்து கொடுத்துட்டுப்போனாங்க" என்றாள் கற்பகம்.

"அடக் கழுத... இத, நான் வந்ததும் சொல்லியிருந்தா நான் இங்க உக்காந்துகிட்டு, உன்னயும் உன் அழகையும் நினைச்சு மறுகியிருக்கமாட்டேன்ல்ல" என்றபடி கண்கள் மின்னச் சிரித்தார் அவர். கணவனின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்டவளாக, "ஓ...நீங்க ரெட்டைவடத்தைத் தட்டிட்டுப்போக வந்தீங்களாக்கும்" என்றபடி சிரித்தவள், "ஒண்ணும் பிரச்சனையில்லை, அதிகமாக் காசு தேவைப்பட்டா அதையும் வேணுன்னா கொண்டுபோங்க" என்றாள்.

"அதெல்லாம் இனி தேவைப்படாது கற்பகம். இப்பவே ஆரம்பிச்சாச்சு நமக்கு தீபாவளி என்றவர், நீ, சாயங்காலம், பிள்ளைகளைக் கூட்டிட்டுப்போயி, அவுங்களுக்குப் பிடிச்ச பட்சணம், பட்டாசு எல்லாம் வாங்கிக்குடு. கடையடைச்சிட்டு வரும்போது நான் எல்லாருக்கும் துணியெடுத்துட்டு வந்துர்றேன்.  இப்போதைக்கு, நீ செஞ்சு வச்சிருக்கிற அதிரசத்துல, கொஞ்சம்  எடுத்துக்குடு என்றபடி, வாசலை நோக்கி நடந்தார் அவர்.

அலைபேசி ஒலித்தது. குரலிலேயே விஷயம் புரிந்தது அவருக்கு. "அண்ணாச்சி, நீங்க புறப்பட்ட பத்தே நிமிஷத்துல வக்கீலய்யா வீட்லருந்து மொத்தப் பணமும் வந்திருச்சு. நீங்கவேற அவசரப்பட்டு வேற எந்த ஏற்பாடும் செஞ்சிடாதீங்க..." என்றார் கணக்கப்பிள்ளை கருணாகரன்.

சந்தோஷம் கணக்கு...இங்கயும் ஒரு வரவு வந்திருக்கு. நான் இப்பவே, இனிப்போட வரேன். இந்த தீபாவளி நம்ம எல்லாருக்கும் சந்தோஷமான தீபாவளிதான் என்றபடி, அலைபேசியை அணைத்துவிட்டு, மனைவியின் பக்கம் திரும்பினார் கதிரேசன். கணவனின் சந்தோஷத்தைப்பார்த்து கற்பகத்தின் முகமும் மகிழ்ச்சியில் நிறைய, ரெட்டைவடம் போடாமலே இன்னிக்கி ரெட்டை அழகாயிருக்கே நீ"  என்றபடி மனைவியின் கன்னத்தில் தட்டிவிட்டுக் கடைக்குப் புறப்பட்டார் கதிரேசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக