செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை!

படம்: நன்றி!

வீதியெங்கும் மக்கள் கூட்டம். வருவோரும் போவோருமாக உயிர்ப்போடு விளங்கும் தெருக்கள். மதுரை நகரத்தின் நாளங்காடி...

"மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்"

அங்கே, விற்க விற்கக் குறையாமல் பொருட்கள் வந்திறங்கியபடியே இருக்க, விற்பனைக்கு வந்த பொருட்களை இறக்கிவைக்கிற ஓசையும், அவற்றை விலைகொடுத்து அள்ளிச்செல்லுகின்ற மக்கள் கூட்டம் எழுப்பும் ஒலியும் சேர்கையில் ஆற்றுநீர் ஓடிவந்து அலைகடலோடு கலப்பதுபோன்ற  ஆரவாரம் அங்கே.

தெருக்களில், சுவை மிக்க பலகாரக்கடைகள், வட்டத் தட்டுக்களில், கட்டிவைத்த, கொட்டிவைத்த பூக்களை விற்கும் கடைகள், மகரந்தம் போல மென்மையாக வாசனைத் திரவியங்களைப் பொடித்து விற்கும் கடைகள், வெற்றிலை பாக்குக் கடைகள், சங்கு மற்றும் சுட்ட சுண்ணாம்பினை விற்கும் கடைகள் என்று பலவிதமான கடைகள். 

சங்குகளை அறுத்துப் பதமாக்கி அவற்றில் வளையல் செய்கிறவர்களும், ஒளிபொருந்திய வயிரக்கல்லில் துளையிடும் தொழில் செய்பவர்களும், பொன்னை உரசிப்பார்த்து வாங்குகிற பொன் வியாபாரிகளும், செம்பினை எடைபோட்டு வாங்கும் வணிகர்களும், ஆடை விற்பனை செய்பவர்களும், குஞ்சம் கட்டி விற்பவரும், பூக்களும், சந்தனமுமாகிய நறுமணப் பொருட்களை விற்பவர்களும், ஓவியம் வரைபவர்களும், கடலின் கரையில் படியும் கருமணல் படிவுகளைப்போல, தெருவோரங்களில் புடவைகளை விரித்துக்கட்டி நெசவு செய்பவர்களும், ஒருவர் கால் மற்றவர்மேல் படுமளவுக்கு நெருக்கமாக நின்று விற்பனை செய்துகொண்டிருந்தனர்.

"பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர"

மா, பலா போன்ற இனிய கனிவகைகளையும், கீரைவகைகளையும் விற்கிறவர்களும், அமிர்தம் போன்ற இனிமையுடைய கற்கண்டினை விற்பவர்களும், இறைச்சியுடன் கலந்து சமைத்த சோறாகிய உணவினை (பிரியாணி???) விற்பவர்களும், கிழங்கு வகைகளை விற்பவர்களும், இனிப்புச் சுவையுடைய சோற்றினை வழங்குபவர்களும் இருக்க, அவற்றை வாங்கி ஆங்காங்கே நின்று உண்பவர்களுமாகக் கலகலப்பாகக் காணப்பட்டது அந்த வீதி.

இவை தவிர, இரவு நேர அங்காடிகளில், மரக்கலங்களில் வந்திறங்குகிற பொருட்களை வாங்குவோரும், தாம் கொண்டுவந்த பொருட்களை விலைக்கு விற்றுக் கிடைத்த பொருளுக்கு மதுரை மாநகரில் கிடைக்கிற அழகிய அணிகலன்களை வாங்கிச்செல்லுகிற வெளிநாட்டு வணிகர்களும் சேர, அலை ஓசையும் அவற்றோடு விளையாடும் நீர்ப்பறவைகளின் ஓசையும் இயைந்ததுபோல எங்கும் ஓசை நிறைந்திருந்தது. 

இவையெல்லாம், பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சி காட்டுகிற மதுரையும் அவற்றில் நடக்கிற வியாபாரங்களைப் பற்றிய செய்தியுமாகும். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்திருந்தும், இன்னும் அதே உயிர்ப்புடன் உறங்கா நகரமாக இயங்குகிற மதுரையை நினைக்கையில் மனசு வியக்கத்தான் செய்கிறது. இன்றைக்கு வைகையைக் காணோம், வறட்சியாகிப்போச்சு என்று ஆயிரம்தான் சொன்னாலும் என்றைக்கும் மதுரை மதுரைதான்!!!


-சுந்தரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக