ஒரு குடும்பக் காட்சி...வேலைக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் கணவனை எண்ணிக் கலங்குகிறாள் ஒரு கிராமத்துப்பெண்.
"கல்யாணம் கழிஞ்ச இருபதாவது நாள் வேலைக்காக வெளிநாட்டுக்குப் போனாங்க. ரெண்டு வருஷத்துக்கப்புறம் ஒருமாசம் லீவுல வந்தாங்க. வந்தநாள் தொடங்கி இன்னிக்கி இருவத்தாறு நாள் ஆச்சு. இன்னும் ரெண்டு மூணு நாள்ல திரும்பவும் பிரயாணம். இடையில, இவங்க வர நாளைக் கணக்குவச்சி, அக்கா பொண்ணுக்குக் கல்யாணம், தம்பி மகனுக்குக் காதுகுத்து,இன்னும் எங்க அத்தை வேண்டிக்கிட்ட கோயிலுக்கெல்லாம் வழிபாடு, பிரயாணம், இன்னும் விருந்து விசேஷமுன்னு போனதுல அவுகளோட உக்காந்து பேச எனக்கு ஒருமணி நேரம் சேர்ந்தாப்பல கிடைக்கல.
"கல்யாணம் கழிஞ்ச இருபதாவது நாள் வேலைக்காக வெளிநாட்டுக்குப் போனாங்க. ரெண்டு வருஷத்துக்கப்புறம் ஒருமாசம் லீவுல வந்தாங்க. வந்தநாள் தொடங்கி இன்னிக்கி இருவத்தாறு நாள் ஆச்சு. இன்னும் ரெண்டு மூணு நாள்ல திரும்பவும் பிரயாணம். இடையில, இவங்க வர நாளைக் கணக்குவச்சி, அக்கா பொண்ணுக்குக் கல்யாணம், தம்பி மகனுக்குக் காதுகுத்து,இன்னும் எங்க அத்தை வேண்டிக்கிட்ட கோயிலுக்கெல்லாம் வழிபாடு, பிரயாணம், இன்னும் விருந்து விசேஷமுன்னு போனதுல அவுகளோட உக்காந்து பேச எனக்கு ஒருமணி நேரம் சேர்ந்தாப்பல கிடைக்கல.
இதுல, இனி அவுக கிளம்புறதுக்கு முன்னாடி பண்டம் பலகாரம் செய்யவும், சேகரிச்சுக் குடுக்கவேண்டிய மருந்து, மசாலாப்பொடியெல்லாம் தயார் பண்ணவும் ரெண்டு நாளும் போயிரும். நேத்து மெதுவா, "ஏங்க, இன்னும் ஒரு வாரம் இருந்துட்டுப் போகக்கூடாதா...ன்னு கேட்டா, "கிறுக்குக் கழுத, முட்டாத்தனமாப் பேசாத...இப்பவே நாலு காசு சம்பாதிச்சாத்தானே நாளைக்கு கௌரவமா வாழமுடியும். அதனால, வேலைதான் முக்கியம்"னு எனக்கு உபதேசம் பண்றாக.
"இருக்கட்டும்...இங்க ஒருத்தி நம்மளையே உசிரா நெனைச்சிக்கிட்டு இருக்காளேன்னு கொஞ்சமும் கரிசனமோ, பிரியமோ இல்லாம அவுக வேலைதான் முக்கியம்னா அவங்க பத்திரமாப் போயிட்டுவரட்டும். பைத்தியக்காரி எம்மேலயும், என் மனசு மேலயும் அக்கறையே இல்லாத அவங்க அறிவாளின்னா, அவுகளையே நினைச்சிட்டு இருக்கிற நான் முட்டாளாவே இருந்துட்டுப்போறேன்..." என்று அழுகை முட்டிக்கொண்டுவர, அதை அடக்கத் தவிக்கிறாள் அன்னலட்சுமி.
இன்றைக்கு நாம் பார்க்கிற அன்னலட்சுமிக்கும், அன்றைய குறுந்தொகைத் தலைவிக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே பாருங்கள்...
இன்றைக்கு நாம் பார்க்கிற அன்னலட்சுமிக்கும், அன்றைய குறுந்தொகைத் தலைவிக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே பாருங்கள்...
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!
"பொருள்தான் முக்கியமென்று அருளும் அன்பும் இன்றி என்னைப் பிரிந்து செல்லும் என் தலைவன் அறிவுடையவன் என்றால் அவனைப் பிரியமுடியாமல் தவிக்கிற நான் அறிவிலியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று தலைவனின் பிரிவுபற்றி அறிவுறுத்துகிற தோழியிடம் புலம்புகிறாள் நம் சங்க காலத் தலைவி.
இது கோப்பெருஞ்சோழன் இயற்றிய குறுந்தொகைப் பாடல் காட்சி.
காலம் மாறியிருக்கலாம்,காட்சிகள் மாறியிருக்கலாம்,வாழ்க்கையும் வசதிகளும் மாறியிருக்கலாம். ஆனால்,காதலும் அன்பும் காலங்காலமாய் என்றைக்கும் அதேபோலத்தான் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. இன்றைக்கும் மனிதனை மனிதனாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
இது இன்னோர் குடும்பக் காட்சி.
பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து சென்றுவிட்டான் தலைவன். கண்கள் நீரணியக் கலங்கித் தவிக்கிற தலைவியைக் காணப் பொறுக்கவில்லை தோழிக்கு. தலைவியாகிய உன்னை இவ்வாறு தவிக்க விட்டுவிட்டு, இத்தனை காலம் பிரிந்திருத்தல் பொறுப்புள்ள தலைவனுக்கு அழகோ? என்று அவனைப் பழித்துரைக்கிறாள் தோழி. அதைக்கேட்ட தலைவி முன்னிலும் வருத்தமுற்று அழுகிறாள். "பொருள்தேடிப் பிரிந்து சென்ற என் தலைவனின் பிரிவைக்கூட கண்ணீருடன் நான் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், நீ உன் வாயால் தலைவனைப் பழித்துரைக்கிற வார்த்தைகள்தான் என்னை மிகவும் வருத்தமுறச் செய்கின்றன" என்று.
"நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்த நங்காதலர்
அமைவில ராகுதல் நோமென் நெஞ்சே."
இமைகளைச் சுடும்படி கண்ணீர் பெருகிவரப் பிரிவினால் தவிப்பதைக் காட்டிலும், தோழியின் பழித்துரைக்கும் சொற்கள் ரொம்பவே வதைக்கின்றன தலைவியை!
இப்போதும், பட்டிக்காட்டுப்பெண்ணோ, பட்டினத்து யுவதியோ, தன்னுடைய கணவனை அவனுடைய தாயோ தந்தையோ, அல்லது அவனது உடன்பிறந்தவர்களோ திட்டினால் கூட அதைத் தாங்கிக்கொள்வது ஒரு மனைவிக்குக் கஷ்டம்தான். அவனுக்காகத் தான் பரிந்துபேசி அவர்களிடம் அவப்பெயர் சம்பாதித்தாலும் அவள் அதற்காக வருந்துவதில்லை. அவளுக்கு அவள் கணவன் முக்கியம். தன் கணவனைத் தான் என்னசொல்லியும் பழிக்கலாம், ஆனால்,அதேசமயம் அடுத்தவர் யாரேனும் பழித்துச் சொல்லிவிட்டால், அவளுக்கு அழுகையோ ஆங்காரமோ அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு வந்துவிடுகிறது. காலங்கள் கடந்து, கலாச்சாரம் நவீனப்பட்டும்கூட இந்தக் குணமும் இன்னும் மாறாமல்தான் இருக்கிறது. ஆக மொத்தத்தில், எல்லாம் காதல் செய்கிற வேலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக