தனிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 அக்டோபர், 2018

உறக்கமில்லாத இரவு

தட்டிலிருந்த கடைசிக் கவளத்தை மனைவியின் வாயில் ஊட்டியவன், "உனக்கு ஒண்ணும் பயமில்லையே மீரா? என்று சோகமாய்க் கேட்க, வாய் நிறைய சாதத்துடன் சிரித்தபடி, குறுக்கும் நெடுக்குமாகத் தலையசைத்தாள் மீரா.  தண்ணீரைக் குடித்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்தவள்,  "தைரியத்துல நானெல்லாம் திருநெல்வேலிலயே நம்பர் ஒன் தெரியுமா?  ஹாஸ்டல்ல இருந்தப்ப என்னோட தோழிங்க எல்லாரும், நைட்ல பாத்ரூம் போணும்னாகூட பாடிகார்டா என்னைத்தான் கூப்பிடுவாங்க. நீங்க எதுக்கு சின்னப்பிள்ளை மாதிரி கவலைப்படுறீங்க? என்று கணவனைத் தேற்றினாள் அவள்.

கல்யாணம் முடிந்து ஒருமாசம் ஆன பிறகு சரவணனுக்கு இன்றைக்குத்தான் முதலாவதாக நைட் ஷிஃப்ட். இரவு பத்திலிருந்து காலை ஆறுவரைக்கும். சுற்றிலும் வீடுகள், குடும்பங்கள் இருக்கிற பகுதியாய்ப் பார்த்துத்தான் வீடு எடுத்திருந்தான் என்றாலும் மனசுக்குள் மனைவியைத் தனியாக விடுவதற்குத் தைரியம் வரவில்லை அவனுக்கு.

"நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க...நான் என்னோட சின்ன அரண்மனையை 'சிக்'குன்னு பூட்டிக்கிட்டு செல்ஃபோன்ல பாட்டுக் கேட்டுக்கிட்டே தூங்கிருவேன் என்றவளை, அருகணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான் சரவணன்.

வாசலில் நின்றவன், " நீ உள்ள போயி பூட்டிக்கோ... அப்புறம் நான் கிளம்பறேன்" என்று சொல்ல, "அடடா... இது ரொம்ப சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு" என்றவள், கணவனின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். வெளியே சரவணனின் பைக் புறப்படும் சத்தம் கேட்டது. 

மெல்லிய முறுவலுடன் அடுக்களைப் பாத்திரங்களை ஒதுக்கி, சமையலறையைச் சுத்தம்செய்துவிட்டுத் திரும்புகையில், பின்னால் எதுவோ விழுந்து பாத்திரம் அதிர்ந்த சத்தம் கேட்டது. பதறிப்போய்த் திரும்பினாள் அவள். சுவரோரத்தில், குடத்தின் மூடியின் மேல் தலையை உயர்த்தியபடி உட்கார்ந்திருந்தது பல்லி ஒன்று. அவள் அருகில் செல்லவும், குதித்து மேடைக்கு அடியில் ஓடியது.  மேலே ட்யூப் லைட்டுக்குப் பின்னாலிருந்து விழுந்திருக்கும் போல... அதுதான் சத்தம் என்று நினைத்தவள், தண்ணீர்ப் பாத்திரங்களை நாளைக்கு வேறு இடத்தில் வைக்கணும் என்று நினைத்தபடி அடுக்களை விளக்கை அணைத்தாள்.

செல்போனைக் கையிலெடுத்து பாட்டுக்கேட்கலாம் என்று நினைத்த தருணத்தில் சட்டென்று அது சிணுங்கியது. சரவணனாய்த்தான் இருக்கும் என்று சந்தோஷத்துடன் எடுத்தவளை ஏதோ ராங் நம்பர் ஒன்று வெறுப்பேற்ற, அணைத்துவிட்டுப் படுக்கையில் உட்கார்ந்தாள்.  அருகிலிருந்த ஸ்டூலில் அடுக்கியிருந்த புத்தகங்கள் கண்ணில் படவே அந்த வாரத்துப் பெண்கள்  இதழைக் கையில் எடுத்தாள். 

முன்னெல்லாம் புத்தகம் வாங்கினால் வாங்கிய கையோடு அதை முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பாள். இப்போ, பதினைந்துநாள் முன்னால் வாங்கிய புத்தகம் பாதிகூடப் படிக்கப்படாமல் இருந்தது. நான்குபேராயிருந்த பிறந்த வீட்டிலிருந்து விலகிக் கணவனும் அவளுமாய் இரண்டுபேரே இருக்கிற குடும்பத்துக்கு வந்தாலும் எந்த நேரமும் ஏதாவது செய்வதற்கு இருந்தது அவளுக்கு. உறக்கம் வருவதற்குள் எடுத்த புத்தகத்தைப் படித்து முடித்துவிடவேண்டுமென்ற உத்வேகத்துடன் பக்கங்களைப் புரட்டுகையில் வாசல் பக்கம் ஏதோ கதவைப் பிறாண்டுகிற சத்தம் கேட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுக் கேட்ட அந்தச் சத்தம் ஏதோ சமிக்ஞை போல் தோன்றியது அவளுக்கு. இதயத்தின் துடிப்பு எகிறத் தொடங்கியது அவளுக்கு.

வாசலுக்குப் பக்கத்தில் சிறிய சன்னல் ஒன்றிருந்தது. வாசலில் விளக்கு எரிந்துகொண்டுதான் இருந்தது. எட்டிப்பார்க்கலாம் என்று நினத்தவளை ஏதோ உணர்வு பின்னுக்கு இழுத்தது. பூனையோ நாயாகவோ இருக்கும் அல்லது கீரிப்பிள்ளையாக இருக்குமோ என்று நினைத்தவள், என்ன சத்தம் வந்தாலும் கதவைமட்டும் திறக்கக்கூடாது என்று சரவணன் சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தச் சத்தம் நின்றுவிட, மறுபடியும் படுக்கையில் வந்து உட்காந்தாள்.

முள்காடாகவும் விளைநிலமாகவும் இருந்த பகுதியை அழித்து உருவான குடியிருப்புப் பகுதி அது. இப்போது குடியிருப்புப் பகுதியாய் மாறியிருந்தாலும், முன்னாளைய இப்பகுதி வாசிகளான பாம்பு, ஓணான், கீரிப்பிள்ளை ஆகியவை இன்றைக்கும் அவ்வப்போது வந்துபோவதுண்டு என்று வீடு பார்க்கவந்த அன்றைக்கே பக்கத்துவீட்டு வான்மதியின் மாமியார் சொன்னது நினைவுக்கு வந்தது.

  மனுஷங்களோட ஆக்ரமிப்புல உலகத்துல உள்ள உயிரினங்கள் ஒண்ணொண்ணா அழிஞ்சுகிட்டு வருது. அதுங்களும்தான் எங்க போகும் பாவம் என்று எண்ணியபடியே புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள். 

நான்கைந்து பக்கம்தான் புரட்டியிருப்பாள் அதற்குள் எரிந்துகொண்டிருந்த ட்யூப்லைட்டும் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் பட்டென்று நின்றுபோனது, "ஆஹா, கரண்ட் கட்...ஆனா, இன்வெர்டர் ஏன் வேலை செய்யலை? என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் உரைத்தது. இந்த மாசத்துல இருந்து ராத்திரி பத்து டூ பன்னிரண்டு கரண்ட் கட் என்று.

சரவணன் புறப்பட்டப்பவே கரண்ட் போயி, இவ்ளோ நேரம் இன்வெர்டர்லதான் ஓடியிருக்கும்போல என்று நினைத்தவள், கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்தில் அடுக்களைக்கு நடந்தாள். 

அடுக்களை அலமாரியில் மெழுகுவர்த்தியைத் தேடுவதற்குள் வெளிச்சம் அணைந்துவிட, கைகளால் தடவிக் கண்டுபிடித்தவள் மறுபடியும் செல்போனை உயிர்ப்பிக்காமல் தீப்பெட்டியை எடுக்க விளக்கு மாடத்தை நோக்கி நடந்தாள். சட்டென்று யார் மேலேயோ மோதியதுபோலிருந்தது அவளுக்கு. அவளையுமறியாமல் 'வீல்' என்று சத்தமிட்டவள், நடுங்குகிற கரங்களால் செல்ஃபோனை மறுபடியும் உயிர்ப்பித்தாள். சுற்றிலும் வெளிச்சம் பரவ அங்கே எதுவும் தென்படவில்லை.

பின்பக்கமாகவே நடந்து, மாடத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். ஆறுக்கு எட்டு அடுப்படியும் பத்துக்குப் பத்து படுக்கையறையும், சின்னதொரு குளியலறையும் உள்ள அந்த வீட்டில் அவளைத்தவிர யாரும் இல்லை. ஆனால், அவள்மீது மோதியது யார்? அது நிச்சயம் பிரமையில்லை, நிஜம்தான் என்று அவள் உள்ளுணர்வு உறுத்த, அதற்குள் கரண்ட் வந்துவிட்டது.

அடுக்களை லைட்டையும் எரியவிட்டாள். வீடு பளிச்சென்றிருந்தது. கட்டிலுக்கடியில் குனிந்து பார்க்காமலே தெரிந்தது. அங்கே அவளைத் தவிர யாருமில்லை. குளியலறைக் கதவு வெளிப்பக்கம் தாளிடப்பட்டிருந்தது ஆனாலும் விளக்கைப் போட்டுவிட்டுத் திறந்துபார்த்தாள். அதுவும் காலியாக இருந்தது. வாசல்கதவும் பூட்டித் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. முதல்முறையாக மனசிலிருந்த தைரியம் போக, பயம் வந்து ஒட்டிக்கொண்டதை உணர்ந்தாள். 

இனிமேல் நிச்சயம் உறங்கமுடியாது என்று தோன்றவே, செல்போனை உயிர்ப்பித்து, சரவணனின் எண்ணை அழுத்தினாள். நடந்ததைச் சொன்னால் அவனும் பயப்படுவானா அல்லது பகடி பண்ணுவானா என்ற எண்ணம் வர, அதை நேரிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள்.

அலைபேசியில், "என்னடா, இன்னுமா நீ தூங்கல? என்றான் சரவணன். "என்னமோ தெரியலங்க...தூக்கமே வரல. இனிமே, நானும் ராத்திரி பூரா முழிச்சிருந்துட்டு, பகல்ல நீங்க வந்ததும் தூங்கலாம்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, "அசட்டுக் கழுத...விளையாடாம சீக்கிரம் தூங்கு. எனக்கு வேலை இருக்கு என்று சிரித்தபடி இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.
மனதில் பயம் பிறாண்ட,அம்மா சொல்வதுபோல சஷ்டிக் கவசத்தின் வரிகளை உச்சரித்தபடியே கணினியை எடுத்து உயிர்ப்பித்தாள்.

தனக்குத் தோன்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டு கூகிளில் தேட ஆரம்பித்தாள். அவளைப் போலவே இன்னும் பலர் எழுதியிருக்க, அதை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தாள். சுவாரசியம் பற்றிக்கொண்டது. சிலரின் அனுபவங்கள் சிரிக்கவைப்பதாயும் சில அனுபவங்கள் சில்லிடவைப்பதாயும் இருந்தது. அடுத்ததாய், தனிமையின் பயத்தை விரட்டுவது எப்படி என்று இன்னொரு தலைப்பைத் தேட ஆரம்பித்தாள். பக்கம்பக்கமாய் விரிந்தது பலரின் அனுபவங்களும் அறிவுரைகளும். சுற்றியிருந்த அத்தனையும் மறந்துபோக புதுப்புது விஷயங்களை வாசித்து அதிலேயே ஆழ்ந்துபோனாள். ஆக, அன்றைக்கு கூகிளின் துணையுடன் தொலைந்துபோனது அவளது தூக்கமும்  தனிமையும்.



புதன், 5 பிப்ரவரி, 2014

மண்ணும் மனசும்


மத்தியானம் போச்சுது கரண்டு, இன்னமும் வரல... பெருசா ஏதாவது பிரச்சனையாயிருக்குமோ? வந்ததும் சாப்பிடலாம்னு பாத்தா, இன்னும் வரக்காணமே... மனசிலோடிய கேள்விகளோடு, வாசல்நடையில் தலையைவச்சுப் படுத்திச்சு அன்னம்மா பாட்டி.

ராத்திரிச் சாப்பாட்டுக்கு மதியம் பொங்கின சோறும்,மீன் குழம்பும் பாத்திரத்தில் இருந்தது. சின்னவயசில, முள்ளையெல்லாம் எடுத்துட்டு, மீனைப்போட்டு பிசைஞ்சு குடுத்தா அள்ளிஅள்ளி ஆசையாச் சாப்பிடுவான் பாட்டியின் மகன் குமரேசன். இப்ப கடல்கடந்து தள்ளிப்போய் இருக்கிறதால தன் கையால மகனுக்கு ஆசையாச் சமைச்சுப்போடக்கூடமுடியல, என்று நினைக்கையிலேயே கண்ணீர் வந்திச்சு பாட்டிக்கு. குமரேசன், சோமசுந்தரம் தாத்தாவுக்கும் அன்னம்மா பாட்டிக்கும் பிறந்த ஒரே மகன். பள்ளிக்கூட நேரம் போக மத்த நேரமெல்லாம் மகனைப் பக்கத்திலேயே வச்சிருக்கும் பாட்டி.

வெளியே ஆள்நடமாட்டமே தெரியல.தெருவில் நாயெல்லாம் சேர்ந்து, உச்சஸ்தாயியில் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க,  "நாயோட கண்ணுக்குத்தான் பேய், பிசாசெல்லாம் தெரியுமாம்ன்னு, யாரோ கூடப்படிக்கிற பையன் சொன்னதைக் கேட்டுட்டு, இரவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டாலே ஓடிவந்து அம்மாவின் முந்தானைச் சேலைக்குள் புதைந்துகொள்ளும் குமரேசனின் ஞாபகம் வந்தது பாட்டிக்கு. மகனை தைரியப்படுத்த, "காக்கக் காக்க கனகவேல் காக்க..." ன்னு சொல்லிக்கொடுத்தது நினைவுக்குவர, தானும் அந்த வரிகளை மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டது. வயசானாலும்கூட, இந்த பயம்மட்டும் போகமாட்டேங்குது என்று நினைக்கையில் தனக்குத் தானே சிரிப்பு வந்தது பாட்டிக்கு.

சோமசுந்தரம் தாத்தா உசுரோட இருந்தப்போ, கருக்கல்ல, கொல்லையில கட்டின மாடு சத்தம் போட்டாக்கூட, "கொஞ்சம் எந்திரிச்சு என்னோட வாங்களேன்..." என்று துணைக்கு அவரை எழுப்பும் பாட்டி.  இப்போ தாத்தாவும் இல்லை, தான் பெற்ற மகனும் கூட இல்லை. ஆனாலும் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கையையும், மகனின் இளவயது நினைவுளையும் சுமந்திருக்கும் இந்த வீட்டையும் ஊரையும் விட்டுப்போக விருப்பமில்லாமல், பயத்தோடு தனிமையையும் தாங்கிக் கிடக்குது பாட்டி.

முன்னெல்லாம், மழைவிட்ட ராத்திரி நேரங்களில், சில்வண்டுச் சத்தமும், மழைத்தவளைகளின் முணுமுணுப்பும் சேர, முற்றத்தில் காடாவிளக்கை வச்சுக்கிட்டு, பாட்டியின் மகன் குமரேசனும், அவன் வயசுப் பிள்ளைகளும், வட்டமா இருந்து பாட்டிகிட்ட கதைகேட்டதும், கொலகொலயா முந்திரிக்கா விளையாடியதும் நினைவுக்கு வர, கடல்கடந்து வசிக்கிற மகனையும் மருமகளையும், பேரன் பேத்தியையும் நினைத்துக் கண்ணீர் பெருகியது அன்னம்மா பாட்டிக்கு.

வருஷத்துக்குப் பதினஞ்சு நாள், வசந்தம்போல் வந்து போவாங்க பாட்டியோட பேரப்பிள்ளைங்க. அதுவும் அங்கே இங்கேன்னு சுத்திப்பார்க்கிறதிலயும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வர்றதிலயேயும் முக்கால்வாசி கழிஞ்சுபோகும். பாட்டியோட வீட்டுல அஞ்சாறு நாள் இருக்கிறதுக்குள்ள "பொழுதேபோகல பாட்டி..." என்று அலுத்துக் கொள்வார்கள் குழந்தைகள். அப்புறம் மறுபடியும் அடுத்த வருஷம். ஒவ்வொரு தடவையும் "நீ எங்களோடு வந்துடு பாட்டி''ன்னு பேரப்பிள்பிள்ளைகள் எவ்வளவோ கூப்பிட்டாலும் மண்ணையும் மனுஷங்களையும் விட்டுட்டுப்போக மனசுதான் ஒத்துக்கல பாட்டிக்கு.

நினைப்புகளில் முங்கிப்போக, நேரம் போனதே தெரியல. கழுத்துப்பக்கமெல்லாம் வியர்வையில் கசகசக்க, முந்தானையால் துடைச்சிக்கிட்டு, மணியைப் பார்க்க எழுந்துபோச்சு அன்னம்மா பாட்டி.

வாசல் பக்கம் பேச்சுச்சத்தம் கேட்டுது. இன்னிக்கி ராத்திரிக்குக் கரண்டு வராதாம். மழையில மரம்விழுந்து வயரு அறுந்துபோச்சாம்...பக்கத்துவீட்டு சிவந்தியின் புருஷன் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மதியம் போனது,  இனிமே இப்போதைக்கு வராதுன்னு தெரிஞ்சுபோச்சு. எப்பவும், ஒத்தையாப் படுக்கிறதுக்கு அந்த விடி பல்பைப் போட்டுட்டுப் படுத்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும் பாட்டிக்கு. விடிவிளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் மாட்டிய  தாத்தாவின் படத்தைப் பாத்துகிட்டா கொஞ்சம் நிம்மதியாயிருக்கும். மெழுகுவத்தியைப் பொருத்திவச்சுட்டுப் படுக்கவும் பயமாயிருக்கவே, சிம்னி விளக்கில் எண்ணெய ஊத்தி சின்னதா எரியவச்சுட்டு, கையிலெடுத்த மெழுகுவத்தியைக்கொண்டு கடிகாரத்தில் மணியைப் பார்த்தது பாட்டி.

மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. வயிறு பசிச்சுது, ஆனா, சாப்பிட மனம்வரல. ஆறிப்போன சோத்துல, அரைச்செம்புத்தண்ணியை ஊத்திட்டு, மீதித்தண்ணியை 'மடக் மடக்'குன்னு குடிச்சிட்டு, தனிமையோட வேதனையைத் தண்ணியாலயா கழுவமுடியும்? என்று தனக்குத்தானே நினைத்தபடி பெருமூச்சுவிட்டுது பாட்டி.

தூரத்தில் எங்கோ கேட்ட கோட்டானின் சத்தத்தில் உடல் நடுங்கியது பாட்டிக்கு. விசிறியை வீசி மெழுகுவர்த்தியை அணைச்சிட்டு, விட்ட இடத்தைத் தொட்ட நினைவுகளோடு கட்டிலில் படுத்த பாட்டி,  முட்டிவந்த கண்ணீரை முந்தானையில் துடைச்சிட்டு, "எங்கயிருந்தாலும் என் புள்ளைக நல்லாருக்கட்டும் கடவுளே..."என்றபடி கண்களை இறுகமூடிக்கிருச்சு.