புதன், 28 செப்டம்பர், 2011

இப்படியும் ஒரு கொடுமை நடக்குமா???

இரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கியமான பேச்சாக இருக்கிறது. ஆனால், படிக்கப்படிக்கப் பெருகுகிறது, பேசப்பேசப் பொங்குகிறது நெஞ்சிலிருக்கிற சோகம்.

அதிகாலை ஐந்துமணியிலிருந்து எழுமணிவரைக்கும் எல்லா அம்மாக்களும் ஏகப்பட்ட பிஸியாக இருப்பது வழக்கம். பிள்ளைகளை எழுப்பி, உணவு தயாரித்துக்கொடுத்து பள்ளிக்கு அனுப்புதல், கணவருக்கான பணிவிடைகளைச் செய்தல், இத்தோடு தானும் வேலைக்குச் செல்வதென்றால் அதற்கான ஏற்பாடுகளைச்செய்தலென்று இயந்திரகதியில் இயங்கிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்காகச் சில குடும்பங்களில் அந்த அவசரவேளையில் அப்பாக்களும் சற்று உதவிசெய்வதுண்டு.

அப்பா வெளிநாடு சென்றிருக்க, அம்மாமட்டுமே அத்தனையையும் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்த அந்தக் குடும்பத்தில் அன்றைக்கு விழுந்திருக்கிறது விதியின் பார்வை. பதினான்கு வயது மகளைப் பள்ளிப்பேருந்தில் ஏற்றிவிட்டுவருவதற்காக அம்மா கீழே சென்றிருக்க, (அநேகமாக அதுவரை உறங்கிக்கொண்டிருந்த) ஐந்தே வயதான அந்தச் சிறுவன் விழித்து எழுந்து, எட்டாவது மாடியின் கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே நிற்கிற அம்மாவையும் அக்காவையும் எட்டிப்பார்த்திருக்கிறான்.

எப்படி ஏறினானென்றும் தெரியவில்லை, எப்படித் தவறினானென்றும் புரியவில்லை. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்த சிறுவனைப்பார்த்து கட்டிடத்துக் காவலரும் மற்றவர்களும் சேர்ந்து அதிர்ந்து அலற, கவனித்த அந்தச் சிறுவனின் தாய் அலறியடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு ஓடியிருக்கிறார், மகனை உள்ளே இழுத்துக் காப்பாற்ற.

அங்கே, அம்மாவையும் முந்திவிட்டிருக்கிறது அநியாய விதி. அதற்குள் சிறுவன்  எட்டாவது மாடியிலிருந்து விழுந்து, ரத்தக் குளத்தில் மூழ்கிப்போனான். வீட்டுக்கு வந்து, ஜன்னல்வழியாக மகனின் நிலையைக்கண்ட அந்த அம்மா, மறுபடியும் கீழே ஓடியிருக்கிறாள்.

செத்துக்கொண்டிருந்த மகனின் கையைப் பற்றியபடி அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்தவள், "இது துரதிருஷ்டமான நாள்" என்று அரபியில் சொல்லி அலறியபடியே, மறுபடியும்  தன் வீட்டுக்கு ஓடிச்சென்று, மகன் விழுந்த அதே ஜன்னல் திறப்பின் வழியே, தன் உடலை வலுக்கட்டாயமாக நுழைத்து, அத்தனைபேர் கண்முன்னாலும் விழுந்து உயிரைவிட்டிருக்கிறாள். மகனை முந்தி, முதலில் போயிருக்கிறது அவளது உயிர்.

அம்மாவும் தம்பியும் கண்முன்னே அடுத்தடுத்து விழுந்து இறந்துபோக, அப்பாவும் அருகிலில்லாமல், என்ன நிலையிலிருந்திருக்கும் அந்தப் பதினான்கு வயதான சிறுமியின் மனசு என்று எண்ணிப்பார்க்கக்கூடமுடியவில்லை. 

பிள்ளைகளுக்குச் சிறுதுயரம் வந்தால்கூடத் தாங்காது பெற்றமனசு. அதில் இப்படிப்பட்ட இடியே விழுந்தால்????
இது, உயரமான மாடிக் கட்டிடங்களில் வசிக்கிற சிறுகுழந்தைகளை வைத்திருக்கிற பெற்றோருக்கான எச்சரிக்கைப் பதிவு. குழந்தைகளை உங்கள் கண்காணிப்பின்றி, ஒருபோதும் வீட்டில் தனியே விடாதீர்கள். அது பின்னர், தாங்கமுடியாத துயரங்களுக்கு வழிவகுத்துவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக