இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 டிசம்பர், 2018

விரிச்சி கேட்டல்!

பிரச்சனைகளின் கனம்தாளாமல் மனசுகிடந்து மறுகும்போது, அருகிலிருந்து யாராவது ஆறுதலாய் நாலு நல்லவார்த்தை சொல்லமாட்டார்களா என்று ஏங்கிப்போகிறது மனித மனது. அப்போது, மனசு நிறைகிறமாதிரி, நல்ல நிகழ்வுகளேதேனும் நடந்தாலோ, நல்ல வார்த்தைகளைக் கேட்டாலோ சுமை குறைந்து நம்பிக்கை பிறக்கிறது வாழ்க்கையில்.

படிக்கிற காலத்தில், கல்லூரி விடுதியிலிருந்தபோது, மனதின் இத்தகைய ஆதங்கம் இன்னோர் வடிவில் விரிவதைப் பார்த்ததுண்டு. வீட்டிலிருந்து, மாதக்கட்டணம் கட்ட மணியார்டர் வரவில்லையே என்ற கவலை,  போன கடிதத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்த தவிப்பு, எழுதிய செமஸ்டரில் எல்லாப் பாடமும் பாஸாகவேண்டுமென்ற வேண்டுதல் எல்லாவற்றிற்கும் பதிலாக, யார் கையிலாவது பைபிளைக் கொண்டுவந்து கொடுத்து, ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து அதிலிருக்கிற முதல்வசனத்தைப் படி என்று கேட்பாள் எஸ்தர் மரியம்.

நல்லதாய் ஏதாவது வசனம் வந்துவிட்டால், அன்றைக்கு முழுக்க அவள்முகம் சந்தோஷத்தில் ஜொலிக்கும். இல்லாமல், ஏதாவது வித்தியாசமாய் வந்தாலோ, நாள் முழுக்கப் புலம்பிக்கொண்டே இருப்பாள். எஸ்தர் மாதிரியில்லாமல், இன்னும் சிலர், தாங்களாகவே ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வாசித்துவிட்டு, ஆண்டவர் என்னோடு பேசிவிட்டார் என்று, இறுக்கம் தளர்ந்தவர்களாய் எழுந்துபோவார்கள்.

இங்கேயும் அப்படியொரு காட்சி...

"அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை 
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரனோக்கி யாய்மகள்
நடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாய ரென்போள்

நன்னர் நன்மொழி கேட்டன மதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது நீநின்
பருவர லெவ்வம் களைமாயோயென"

கார்காலம் வந்துவிட்டது. போருக்குச் சென்ற தலைவனைக் காணாமலும் அவனிடமிருந்து செய்தியேதும் வராமலும் கலங்கிநிற்கிறாள் தலைவி. அவளுடைய அந்த நிலையைக் காணப்பொறுக்காத அவளின் வீட்டிலிருந்த  முதிய பெண்கள், நெல்லுடன் முல்லை மலர்களைத் தூவி, இறைவனை வழிபட்டுவிட்டு, ஊருக்குள்ளே சென்று, தலைவிக்காக விரிச்சி கேட்டு நிற்கின்றனர். 

அப்போது, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட சிறு பசுங்கன்றானது, பசியினால் சுற்றிச்சுற்றி வருவதைக்கண்ட ஆயர்குலத்துப் பெண்மணியொருத்தி, அக்கன்றினை நோக்கி, "கோலுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்ற கோவலர்கள் பின்னேயிருந்து வழிநடத்த, உன் தாய் 
இப்போது வந்துவிடுவாள், வருந்தாதே" என்று கூறியதைக் கேட்கிறார்கள். 

நல்லமொழியை விரிச்சியாகக் கேட்ட அவர்கள், சஞ்சலத்தில் தவிக்கும் தலைவியிடம் வந்து, நாங்கள் கேட்ட நல்ல வார்த்தைகளும், கண்ட சகுனமும் நல்லதையே சொல்லுகிறது. அதனால்,போருக்குச் சென்ற தலைவன் பகைவர்களை வெற்றிகொண்ட திறைப்பொருளுடன் விரைவில் உன்னிடம் வருவான். நீ கலங்காமல் காத்திரு என்று கூறுகிறார்கள். 

இது, முல்லைப்பாட்டு காட்டுகிற சங்ககாலக் காட்சி. அக்காலக் காட்சியை அடியொற்றிய நிகழ்வுகளை இக்காலத்திலும் நாம் காணும்போது, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்களில் சிலவற்றை இன்றைக்கும் நம் மக்களில் சிலர் மறவாதிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.  


ஞாயிறு, 2 மார்ச், 2014

காதல் தமிழ்

ஒரு குடும்பக் காட்சி...வேலைக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் கணவனை எண்ணிக் கலங்குகிறாள் ஒரு கிராமத்துப்பெண்.

"கல்யாணம் கழிஞ்ச இருபதாவது நாள் வேலைக்காக வெளிநாட்டுக்குப் போனாங்க. ரெண்டு வருஷத்துக்கப்புறம் ஒருமாசம் லீவுல வந்தாங்க. வந்தநாள் தொடங்கி இன்னிக்கி இருவத்தாறு நாள் ஆச்சு. இன்னும் ரெண்டு மூணு நாள்ல திரும்பவும் பிரயாணம். இடையில, இவங்க வர நாளைக் கணக்குவச்சி, அக்கா பொண்ணுக்குக் கல்யாணம், தம்பி மகனுக்குக் காதுகுத்து,இன்னும் எங்க அத்தை வேண்டிக்கிட்ட கோயிலுக்கெல்லாம் வழிபாடு, பிரயாணம், இன்னும் விருந்து விசேஷமுன்னு போனதுல அவுகளோட உக்காந்து பேச எனக்கு ஒருமணி நேரம் சேர்ந்தாப்பல கிடைக்கல.

இதுல, இனி அவுக கிளம்புறதுக்கு முன்னாடி பண்டம் பலகாரம் செய்யவும், சேகரிச்சுக் குடுக்கவேண்டிய மருந்து, மசாலாப்பொடியெல்லாம் தயார் பண்ணவும் ரெண்டு நாளும் போயிரும். நேத்து மெதுவா, "ஏங்க, இன்னும் ஒரு வாரம் இருந்துட்டுப் போகக்கூடாதா...ன்னு கேட்டா, "கிறுக்குக் கழுத, முட்டாத்தனமாப் பேசாத...இப்பவே நாலு காசு சம்பாதிச்சாத்தானே நாளைக்கு கௌரவமா வாழமுடியும். அதனால, வேலைதான் முக்கியம்"னு எனக்கு உபதேசம் பண்றாக.

"இருக்கட்டும்...இங்க ஒருத்தி நம்மளையே உசிரா நெனைச்சிக்கிட்டு இருக்காளேன்னு கொஞ்சமும் கரிசனமோ, பிரியமோ இல்லாம அவுக வேலைதான் முக்கியம்னா அவங்க பத்திரமாப் போயிட்டுவரட்டும். பைத்தியக்காரி எம்மேலயும், என் மனசு மேலயும் அக்கறையே இல்லாத அவங்க அறிவாளின்னா, அவுகளையே நினைச்சிட்டு இருக்கிற நான் முட்டாளாவே இருந்துட்டுப்போறேன்..." என்று அழுகை முட்டிக்கொண்டுவர, அதை அடக்கத் தவிக்கிறாள் அன்னலட்சுமி.

இன்றைக்கு நாம் பார்க்கிற அன்னலட்சுமிக்கும், அன்றைய குறுந்தொகைத் தலைவிக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே பாருங்கள்...

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து    
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,    
உரவோர் உரவோர் ஆக!   
மடவம் ஆக, மடந்தை, நாமே!

"பொருள்தான் முக்கியமென்று அருளும் அன்பும் இன்றி என்னைப் பிரிந்து செல்லும் என் தலைவன் அறிவுடையவன் என்றால் அவனைப் பிரியமுடியாமல் தவிக்கிற நான் அறிவிலியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று தலைவனின் பிரிவுபற்றி அறிவுறுத்துகிற தோழியிடம் புலம்புகிறாள் நம் சங்க காலத் தலைவி.
இது கோப்பெருஞ்சோழன் இயற்றிய குறுந்தொகைப் பாடல் காட்சி.

காலம் மாறியிருக்கலாம்,காட்சிகள் மாறியிருக்கலாம்,வாழ்க்கையும் வசதிகளும் மாறியிருக்கலாம். ஆனால்,காதலும் அன்பும் காலங்காலமாய் என்றைக்கும் அதேபோலத்தான் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. இன்றைக்கும் மனிதனை மனிதனாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இது இன்னோர் குடும்பக் காட்சி.

பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து சென்றுவிட்டான் தலைவன். கண்கள் நீரணியக் கலங்கித் தவிக்கிற தலைவியைக் காணப் பொறுக்கவில்லை தோழிக்கு. தலைவியாகிய உன்னை இவ்வாறு தவிக்க விட்டுவிட்டு, இத்தனை காலம் பிரிந்திருத்தல் பொறுப்புள்ள தலைவனுக்கு அழகோ? என்று அவனைப் பழித்துரைக்கிறாள் தோழி. அதைக்கேட்ட தலைவி முன்னிலும் வருத்தமுற்று அழுகிறாள்.  "பொருள்தேடிப் பிரிந்து சென்ற என் தலைவனின் பிரிவைக்கூட கண்ணீருடன் நான் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், நீ உன் வாயால் தலைவனைப் பழித்துரைக்கிற வார்த்தைகள்தான் என்னை மிகவும் வருத்தமுறச் செய்கின்றன" என்று.

"நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்த நங்காதலர்
அமைவில ராகுதல் நோமென் நெஞ்சே."

இமைகளைச் சுடும்படி கண்ணீர் பெருகிவரப் பிரிவினால் தவிப்பதைக் காட்டிலும், தோழியின் பழித்துரைக்கும் சொற்கள் ரொம்பவே வதைக்கின்றன தலைவியை!

இப்போதும், பட்டிக்காட்டுப்பெண்ணோ, பட்டினத்து யுவதியோ, தன்னுடைய கணவனை அவனுடைய தாயோ தந்தையோ, அல்லது அவனது உடன்பிறந்தவர்களோ திட்டினால் கூட அதைத் தாங்கிக்கொள்வது ஒரு மனைவிக்குக் கஷ்டம்தான். அவனுக்காகத் தான் பரிந்துபேசி அவர்களிடம்  அவப்பெயர் சம்பாதித்தாலும் அவள் அதற்காக வருந்துவதில்லை. அவளுக்கு அவள் கணவன் முக்கியம். தன் கணவனைத் தான் என்னசொல்லியும் பழிக்கலாம், ஆனால்,அதேசமயம் அடுத்தவர் யாரேனும் பழித்துச் சொல்லிவிட்டால், அவளுக்கு அழுகையோ ஆங்காரமோ அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு வந்துவிடுகிறது. காலங்கள் கடந்து, கலாச்சாரம் நவீனப்பட்டும்கூட இந்தக் குணமும் இன்னும் மாறாமல்தான் இருக்கிறது. ஆக மொத்தத்தில், எல்லாம் காதல் செய்கிற வேலை...

- சுந்தரா

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை!

படம்: நன்றி!

வீதியெங்கும் மக்கள் கூட்டம். வருவோரும் போவோருமாக உயிர்ப்போடு விளங்கும் தெருக்கள். மதுரை நகரத்தின் நாளங்காடி...

"மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்"

அங்கே, விற்க விற்கக் குறையாமல் பொருட்கள் வந்திறங்கியபடியே இருக்க, விற்பனைக்கு வந்த பொருட்களை இறக்கிவைக்கிற ஓசையும், அவற்றை விலைகொடுத்து அள்ளிச்செல்லுகின்ற மக்கள் கூட்டம் எழுப்பும் ஒலியும் சேர்கையில் ஆற்றுநீர் ஓடிவந்து அலைகடலோடு கலப்பதுபோன்ற  ஆரவாரம் அங்கே.

தெருக்களில், சுவை மிக்க பலகாரக்கடைகள், வட்டத் தட்டுக்களில், கட்டிவைத்த, கொட்டிவைத்த பூக்களை விற்கும் கடைகள், மகரந்தம் போல மென்மையாக வாசனைத் திரவியங்களைப் பொடித்து விற்கும் கடைகள், வெற்றிலை பாக்குக் கடைகள், சங்கு மற்றும் சுட்ட சுண்ணாம்பினை விற்கும் கடைகள் என்று பலவிதமான கடைகள். 

சங்குகளை அறுத்துப் பதமாக்கி அவற்றில் வளையல் செய்கிறவர்களும், ஒளிபொருந்திய வயிரக்கல்லில் துளையிடும் தொழில் செய்பவர்களும், பொன்னை உரசிப்பார்த்து வாங்குகிற பொன் வியாபாரிகளும், செம்பினை எடைபோட்டு வாங்கும் வணிகர்களும், ஆடை விற்பனை செய்பவர்களும், குஞ்சம் கட்டி விற்பவரும், பூக்களும், சந்தனமுமாகிய நறுமணப் பொருட்களை விற்பவர்களும், ஓவியம் வரைபவர்களும், கடலின் கரையில் படியும் கருமணல் படிவுகளைப்போல, தெருவோரங்களில் புடவைகளை விரித்துக்கட்டி நெசவு செய்பவர்களும், ஒருவர் கால் மற்றவர்மேல் படுமளவுக்கு நெருக்கமாக நின்று விற்பனை செய்துகொண்டிருந்தனர்.

"பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர"

மா, பலா போன்ற இனிய கனிவகைகளையும், கீரைவகைகளையும் விற்கிறவர்களும், அமிர்தம் போன்ற இனிமையுடைய கற்கண்டினை விற்பவர்களும், இறைச்சியுடன் கலந்து சமைத்த சோறாகிய உணவினை (பிரியாணி???) விற்பவர்களும், கிழங்கு வகைகளை விற்பவர்களும், இனிப்புச் சுவையுடைய சோற்றினை வழங்குபவர்களும் இருக்க, அவற்றை வாங்கி ஆங்காங்கே நின்று உண்பவர்களுமாகக் கலகலப்பாகக் காணப்பட்டது அந்த வீதி.

இவை தவிர, இரவு நேர அங்காடிகளில், மரக்கலங்களில் வந்திறங்குகிற பொருட்களை வாங்குவோரும், தாம் கொண்டுவந்த பொருட்களை விலைக்கு விற்றுக் கிடைத்த பொருளுக்கு மதுரை மாநகரில் கிடைக்கிற அழகிய அணிகலன்களை வாங்கிச்செல்லுகிற வெளிநாட்டு வணிகர்களும் சேர, அலை ஓசையும் அவற்றோடு விளையாடும் நீர்ப்பறவைகளின் ஓசையும் இயைந்ததுபோல எங்கும் ஓசை நிறைந்திருந்தது. 

இவையெல்லாம், பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சி காட்டுகிற மதுரையும் அவற்றில் நடக்கிற வியாபாரங்களைப் பற்றிய செய்தியுமாகும். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்திருந்தும், இன்னும் அதே உயிர்ப்புடன் உறங்கா நகரமாக இயங்குகிற மதுரையை நினைக்கையில் மனசு வியக்கத்தான் செய்கிறது. இன்றைக்கு வைகையைக் காணோம், வறட்சியாகிப்போச்சு என்று ஆயிரம்தான் சொன்னாலும் என்றைக்கும் மதுரை மதுரைதான்!!!


-சுந்தரா