திங்கள், 24 மார்ச், 2014

சோறென்று சொன்னால் கேவலமா?

சில வருடங்களுக்குமுன், பழைய காகிதங்களைப் புரட்டிக்கொண்டிருந்த என் மகள், அம்மா, 'late' என்கிற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்னம்மா? என்றாள். தாமதம், அல்லது காலம் தாழ்த்தி என்று பொருள் கொள்ளலாமென்று செய்துகொண்டிருந்த வேலைகளுக்கிடையே சொல்லிவிட்டு மறந்துபோனேன். 

மறுநாள், பத்திரிகையில் நினைவு அஞ்சலியில் இருந்த ஒருத்தரைப் பார்த்து இவர் ''காலதாமதமான தாத்தாவா அம்மா?'' என்றாள். சட்டென்று எனக்கு எதுவும் விளங்கவில்லை. "அட, ட்யூப்லைட்  அம்மா, 'லேட்' ன்னா காலந்தாழ்த்தி, அல்லது தாமதம்ன்னு நேத்து நீங்கதானே சொன்னீங்க? என்றாள். 

முந்தினநாள் அவள் கேட்டது கல்யாணப்பத்திரிகையொன்றில் மணமகனின் தந்தை பெயருக்கு முன்னாலிருந்த 'லேட்' என்ற சொல்லைப் பார்த்து என்பது அப்புறம்தான் தெரிந்தது. "அட, அதைக் கேக்கிறியா? அந்த இடங்களில் 'லேட்' என்கிற வார்த்தை 'காலமான, இறந்துபோன' என்ற பொருளில் 'மங்கலமான' வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலப் பயன்பாட்டை அப்படியே பற்றிக்கொள்வதில் நம் மக்களுக்கு அலாதி ஈடுபாடு உண்டு. அப்படி வந்ததுதான் இதுவும்..." என்று விளக்கிச்சொன்னேன். 

இறந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படும் late மாதிரியே 'லேட்' என்கிற ஆங்கிலச்சொல்லுக்கான நேரடித் தமிழ் வார்த்தைகளும் பேச்சுவழக்கில் இறந்துபோனதாகத்தான் தோன்றியது எனக்கு. 
காலந்தாழ்த்தி, தாமதமாக எனும் வார்த்தைகள் உரைநடையில் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதோடு சரி. மற்றபடி, பல்லில்லாத பாட்டி முதல் பள்ளிக்கூடம் போகாத குழந்தை வரை எல்லாருக்குமே தாமதமாகிவிட்டது என்பதெல்லாம் மறந்துபோய் , 'லேட்டாயிருச்சு' என்று சொல்வதே லேட்டஸ்ட் ஃபாஷனாகி விட்டது. 

அப்டின்னா, இறந்தவர் என்பதைக் குறிப்பிடத் தமிழில் வார்த்தைகளே இல்லையா? என்றாள் மகள் மறுபடியும். ''ஏன் இல்லை? இருக்குதே... 'மறைந்த, காலமான, இறைவனடி சேர்ந்த' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்றேன்.'' அப்போ, இருக்கிற எத்தனையோ வார்த்தைகளை விட்டுவிட்டு எங்கிருந்தோ வந்த வார்த்தைகளைப் பிடிச்சு வச்சிருக்கோம் என்று சொல்லிச் சிரித்தாள் அவள். 

அவள் சிரிக்கையில், இந்த ஒருவார்த்தைக்கு மட்டுமா இந்த நிலைமை என்று நினைத்து எனக்கு மனசு வலித்தது, காலமாகிப்போன இன்னும் பல தமிழ் வார்த்தைகளை நினைத்து.

'late' மாதிரியே மிகச் சாதாரணமாகப் புழங்கப்படுகிற இன்னொரு வார்த்தை 'rice' செந்தமிழ்ச் சொல்லான சோறு என்பதைச் சொல்லவே சங்கடப்படுகிறது நம் நாகரீகத் தமிழ் மக்கள்கூட்டம். நினைக்கவே கஷ்டமாயிருக்கிற விஷயம் என்னன்னா, "சோழநாடு சோறுடைத்து" என்று பாடப்பட்ட பகுதியில்கூட "meals ready" போர்டுகளும், 'ரைஸ் வைக்கட்டுமா?' என்ற வார்த்தைகளையும், 'சாதம் போடவா?' என்ற கேள்விகளையும்தான் கேட்கமுடிகிறதே தவிர "இன்னுங் கொஞ்சம் சோறு போட்டுக்கோ..." என்று சொல்கிற வழக்கம் அனேகமாக மறைந்துவருகிறது. மொத்தத்தில், சோறும் "late சோறு" ஆகிவிட்டதென்று தோன்றுகிறது.


ஆங்கிலத்தில், ரைஸ் (rice) என்றால் அரிசி. வெறும் வேகாத அரிசி. Cooked rice, Steamed rice என்றால் அது வேகவைத்துச் சமைக்கப்பட்ட சோறு. இதை விட்டு, எல்லாமே ரைஸ் ஆகிப்போனது இன்று. வெந்ததுக்கும் வேகாததுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நம் தமிழ்மக்கள் என்று நினைக்கையில் வருத்தம்தான் வருகிறது. இனி, யாராவது ரைஸ் போடவா என்று கேட்டால், அவர்களிடம் எங்கே அரிசி போடணும், எங்கே சோறு போடணும் என்று கேள்வி கேட்டுக் கொஞ்சம் அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும் என்று ஆத்திரம்தான் வருகிறது.

ஆனால், மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் கொடுக்கிற விஷயம், தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோறு என்கிற சொல் இன்னும் மறக்காமல் உபயோகிக்கப்படுகிறது என்பதுதான். ஆனால், அதுவும் இந்தத் தலைமுறை தாண்டினால் இருக்குமா என்பது சந்தேகம்தான். 

அம்மா அப்பா என்று சொல்வதையே அகற்றி, மம்மி டாடியாக்கிவிட்ட தமிழகத்துக்கு, அவர்களுடைய முக்கிய உணவான சோற்றின் பெயர் மறந்துபோனதோ மறைந்து போவதோ ஒண்ணும் பெரிய விஷயமாயிருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக