ஔவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஔவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 அக்டோபர், 2019

பிறவிக்குணங்கள் எவை எவை? | ஔவையார் தனிப்பாடல் திரட்டு



பிறவிக்குணங்கள் எவை எவையென்று ஔவை மூதாட்டி ஒரு அழகான பாடலில் சொல்லியிருக்கிறார். ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலின் முதல்வரி நம்மில் நிறைய பேருக்குத் தெரியும். அதாவது 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' இதனை ஒரு பழமொழி மாதிரி நாம் உபயோகிப்போம். 

ஆனால் இது, ஔவையினுடய ஒரு பாடலின் முதல் வரி. இந்தப் பாடலில் ஔவையார் என்ன சொல்லி இருக்காங்கன்னா, எவையெல்லாம் பிறவிக் குணங்கள், எவையெல்லாம் பழகப் பழக வந்துவிடும் குணங்கள் என்று சொல்லி இருக்காங்க. இது தான் அந்தப் பாடல்...

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

சித்திரமும் கைப்பழக்கம், அதாவது  சித்திரம் வரைவது நம்முடைய கையினால் வரும் பழக்கம். அதாவது வரைய வரைய ஓவியம் பழகிவிடும். தொடர்ந்து வரைய வரைய நம் விரல்கள் வசப்படும். அதனால், அழகான சித்திரம் வரைய முடியும். 

செந்தமிழும் நாப்பழக்கம், செந்தமிழ் அதாவது தமிழில் தொடர்ந்து பேசப் பேச தமிழ் நமக்குப் பழகிவிடும். இது, செந்தமிழுக்கு மட்டுமல்ல, எந்த மொழியாக இருந்தாலும், திரும்பத் திரும்ப நாம் அதனைப் பேசிப் பழகும்போது அதில் நாம் நல்ல புலமை பெற்றுவிடலாம். 

அடுத்ததாக, வைத்ததொரு கல்வி மனப்பழக்கம், நாம் சின்ன வயதில் படித்த சில பாடல்கள்கூட ரொம்ப நாளைக்கு நம் மனதில் நிற்கும். காரணம் என்னவென்றால் நாம் அவற்றைத் திரும்பத் திரும்பப் படித்து, மனதில் ஓடவிட்டுப் பார்த்திருப்போம். ஒரு விஷயம் மனதில் பதிய வேண்டுமென்றால், அதனைத் திரும்பத் திரும்ப மனதில் நினைத்துப் பார்க்கவேண்டும். அதாவது மனதில் ஓடவிட்டுப் பார்ப்பது. அந்த மாதிரி பழகும்போது, படித்த எதுவும் மறந்து போகாது. 

அடுத்ததாக, நித்தம் நடையும் நடைப்பழக்கம், நித்தம் அதாவது அன்றாடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது. நாம் வாழும் ஒழுக்கம், அல்லது நெறிமுறை, வழக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து வந்தால், எடுத்துக்காட்டாக, காலையில் எழுதல், இன்சொல் பேசுதல் இந்த மாதிரி விஷயங்கள் அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும். 

கடைசியாக, நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம், நட்பு என்பது நாம் பிறருடன் தோழமையுடன் பழகும் குணத்தைக் குறிக்கும். பிறரோடு நாம் பழகும் தன்மை என்பது நம் பிறவிக் குணத்தைப் பொருத்தது.

அடுத்தது, தயை என்னும் இரக்க குணம். இதனைக் கருணை என்றும் சொல்லலாம். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் மாதிரி, ஒரு பயிராக இருக்கட்டும், ஒரு உயிரினமாக இருக்கட்டும் அல்லது சக மனிதராக இருக்கட்டும். பிறரின் கஷ்டத்தைப் பார்க்கும்போது நம்முடைய மனமும் வருந்தி இரக்கம் கொண்டால், அதுவே தயை. 

கொடை என்ற எண்ணமும் இயற்கையாக வருவது. அனைவராலும்அதனைக் கடைப்பிடிக்க முடியாது.  செயற்கையாக, விளம்பரத்துக்காகக் கொடுக்கும் கொடை என்றைக்கும் பேசப்படாது. இயற்கையாக, தன்னிடத்தில் இருப்பதை, பலனை எதிர்பாராமல் கொடுப்பதே கொடை. அதனால், அதுவும் பிறவிக்குணம் என்கிறார் ஔவை மூதாட்டி.

ஆகவே, நட்பு, தயை, கொடை இந்த மூன்றும் பிறவிக் குணங்கள். மற்றதெல்லாம் நாம் பழகப் பழக வந்துவிடும் என்பது ஔவையின் அருள்மொழி.


புதன், 9 டிசம்பர், 2015

அடைமழையும் ஔவையின் மொழியும்!



மாரி அல்லது காரியம் இல்லை இது ஔவையின் மொழி. மழையில்லாவிட்டால் இவ்வுலகில் எதுவுமே இல்லைதான். ஆனால், இப்படியொரு மழையை சென்னை மாநகரமோ அதைச் சுற்றியிருக்கிற மக்களோ எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். 

ஆனால், இந்த மழை ஏகப்பட்ட காரியங்களைச் சத்தமின்றிச் செய்திருக்கிறது என்பதும் நிஜம். மக்களின் மனதில் நிறைய மாற்றங்களை விதைத்திருக்கிறது. இவர் இன்னார் என்பதையும் இது இன்னாதது என்பதையும் உரக்கச் சொல்லியிருக்கிறது, அடித்துச் சொல்லியிருக்கிறது. இந்த மாற்றம் எளிதில் நீங்காது என்றுதான் தோன்றுகிறது. 

மாரி அல்லது காரியம் இல்லை என்ற மொழி எவ்வளவு உண்மையோ அதைப்போல, அடுத்து வரும் ஔவையின் மொழியும். வானம் சுருங்கில் தானம் சுருங்கும். உண்மைதான். அப்படியென்றால் வானம் பெருகின் தானம் பெருகும் என்பதுதானே பொருள்? இங்கே வானம் பெருகி எம்மக்களின் தானம் செய்யும் குணத்தை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. இங்கே, பாதிக்கப்பட்டவர்களைவிட உதவி செய்ய முன்வருபவர்கள் அதிகம் என்று பாராட்டவைத்திருக்கிறது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரும் பணக்காரர்கள்வரை எத்தனையோபேர் பணமும் பொருளுமாக மனமுவந்து கொடுத்திருக்கிறார்கள்.  எத்தனை எத்தனையோ மக்கள் தங்கள் மக்களின் இன்னல் காணப் பொறுக்காமல் இறங்கி வந்து வேலை செய்கிறார்கள். எத்தனை எத்தனையோ இளைஞர்கள் ஓய்வு உறக்கமின்றி, ஓடி ஓடி உழைக்கிறார்கள். இவற்றையெல்லாம் காணக் கொடுத்ததும் இந்த மழையின் செயல்தான்.

அடுத்ததாக இன்னொரு ஔவையின் மொழி... நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. இதைத்தான் நம் மக்கள் தவறாக உணர்ந்துகொண்டார்கள் போலிருக்கிறது. நீர்நிலைகளை உடைய ஊரில் குடியிரு என்பது இதற்கான பொருள். ஆனால் நேரடியாக நீர்நிலைகளிலேயே குடியேறிவிட்டார்கள் நம் மக்கள். குடியேறியது மட்டுமா மிச்சமிருக்கிற நீர் வழித்தடங்களையும் மக்காத கழிவுகளால் மறைத்துவிட்டார்கள். இங்கே விளைந்ததுதான் அத்தனை துயரமும்.

இதைத்தான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தன் இன்னொரு மொழியால் எச்சரிக்கிறாள் ஔவை. இந்த மழை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைதான். இப்படியே போனால் இந்தச் சென்னையை என்னால் கூடக் காப்பாற்றமுடியாது என்று இயற்கையின் வாயிலாக இறைவன் கொடுத்திருக்கிற எச்சரிக்கை. 

அன்றைக்குச் செய்ததற்கெல்லாம் இன்றைக்கு பலன் கிடைத்திருக்கிறது. இனி, என்றைக்கும் இது நடக்காமலிருக்கவேண்டுமானால், இனிவரும் மழைக்குள் நம் தவறுகளைத் திருத்திச் சீர்செய்தல் மிக மிக அவசியம்.

                                                              ******

சனி, 15 பிப்ரவரி, 2014

மூதுரைக் கதைகள் - 1 ஆளில்லா மங்கைக்கு அழகு

கல்யாணம் பண்ணி இன்னிக்கி நாப்பத்தெட்டு வருஷமாச்சு. கட்டிக்கிட்டு வந்ததிலிருந்து கஷ்ட ஜீவனம் தான். பொறந்த இடத்திலயும் பெருசா எதுவும் வசதியாயிருக்கல. கடவுள் புண்ணியத்துல பிள்ளைங்க நாலுபேரும் நல்லாப் படிச்சதால இன்னிக்கி எல்லாக் கஷ்டமும் தீர்ந்துபோச்சு. ஆனா, இதையெல்லாம் பார்க்க அவங்க அப்பாவுக்குத்தான் குடுத்துவைக்காம போச்சு.

அப்பல்லாம், நாலு பிள்ளைங்களும் படிச்ச காலத்துல அவங்க அப்பா ஒரு ஆள் சம்பளம். அதுல, அம்பது ரூவா  ஒதுக்கி பெரியவனுக்கு இஞ்சினீயரிங் காலேஜ் புஸ்தகம் வாங்கவும், சின்னவனுக்குக் கிழிஞ்சுபோன பள்ளிக்கூடத்து யூனிஃபாரத்துக்குப் பதிலா புதுசு வாங்கவும்கூட எவ்வளவோ சிரமப்பட்டிருக்கோம். 

ஆனா, இப்பப் பாருங்க,  பிள்ளைங்க  தலையெடுத்த பிறகு, என்ன வேணும்னு நெனச்சாலும், அது அடுத்த நிமிஷமே கிடைக்குது. ஆனா, கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு, காசு செலவழிக்கத் தெரியாம பழகிப்போன இந்தப் பிறவிக்கு, இப்போ அதை அனுபவிக்க நினைச்சாலும் முடியல.

நேத்துப் பாருங்க பேச்சுவாக்குல, "கல்யாணத்தப்போ மாம்பழக் கலருல பச்சைக்கரை போட்ட பட்டுச் சேலை வாங்கணும்னு ஆசைப்பட்டதையும், உனக்கு அறுவதாம் கல்யாணத்துக்கு அந்தக் கலர் சேலை வாங்கிருவோம்னு அவங்கப்பா கிண்டலா சொன்னதையும் சின்னப்பையன் குமார் கிட்ட விளையாட்டா சொல்லிட்டிருந்தேன், கிறுக்குப்பய,  அங்க இங்க அலைஞ்சு, அதே நிறத்துல ஒரு பட்டுச் சேலையக் கொண்டு வந்து சாயங்காலமே கையில குடுக்குறான்.

எனக்கு சட்டுன்னு கண்ணுல நீர் கோர்த்துக்கிச்சு கண்ணம்மா. போற வயசுல இதைக் கட்டிக்கிட்டு நான் எங்க போகப்போறேன் வரப்போறேன்?" என்று சொன்ன காந்திமதிப் பாட்டியிடம், "இதெல்லாம் குடுப்பினை காந்திமதி, அன்னிக்கி அத்தனை வறுமையிலயும், பொறுமையே தவமா நீ குடும்பத்தைக் காப்பாத்தினதுக்குக் கிடைச்ச பரிசு. இந்தப் பரிசுக்கு நீ முழுக்க முழுக்க தகுதியானவதான். ஆனா என்ன, கொஞ்சம் காலங்கடந்து ஒனக்குக் கிடைச்சிருக்கு... அவ்வளவுதான்" என்றாள் காந்திமதியின் தோழி கண்ணம்மா பாட்டி.

இப்போ, நீ சொல்லிப் புலம்புற இதே விஷயத்தைப் பத்தி,
நம்ம ஔவையார் அப்பவே மூதுரைப் பாட்டுல எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காங்க தெரியுமா?

"இன்னா விளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா வளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு"


"அதாவது, சுபமான, மங்கல விழாக்காலங்களில் இல்லாமல் மற்றைய காலங்களில் பூக்கிற அழகிய பூக்களையும், துணைவனில்லாத ஒரு இளம் பெண்ணுக்கு அமைந்திருக்கிற அழகையும்போல,  இளமைப் பருவத்தில் வந்து வாட்டுகிற வறுமையும், அனுபவிக்க இயலாத முதுமைப் பிராயத்திலே வந்து சேர்கின்ற இனிமையும் துன்பத்தையே தரும் என்று மூதுரையின் மூன்றாவது பாட்டில் அன்னிக்கே சொல்லியிருக்காங்க..." என்று கண்ணம்மா பாட்டி சொல்ல,

" அடடே...நம்ம மனசு புரிஞ்சாப்பல எவ்வளவு அருமையா அப்பவே சொல்லி வச்சிருக்காங்க பாரு!" என்று ஔவையின் பாடலைக் கேட்டு வியந்து போனாள் காந்திமதிப் பாட்டி.