மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மதுரை யானை மலை யோகநரசிங்கப் பெருமாள் ஆலயம்

மதுரை - மேலூர் நெடுஞ்சாலையில், கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமும், முன்னூறு அடி உயரமுமாய் ஒரு யானை அமர்ந்திருப்பதுபோன்ற அருமையான தோற்றத்துடன் மதுரைக்கு அழகு சேர்க்கும் விதமாய் அமைந்திருக்கிறது இந்த யானை மலை.


இந்த யானை மலையில் இரண்டு குடைவரைக்கோயில்கள், சமணர் குகைகள், மகாவீரர், கோமதேஷ்வரர் போன்ற சமணத்துறவிகளின் உருவங்கள் மற்றும் சமணத்துறவிகள் படுத்து உறங்கிய கல்லாலான படுக்கைகளும் இங்கே உள்ளதாக அறியமுடிகின்றது. இந்த மலைப்பகுதி முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இயற்கையாகவே மிக மிக அழகாக அமைந்துள்ள இந்த மலையின் அடிவாரத்தில், மக்களுக்கு அருளையும் வழங்கும் விதத்தில் இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒன்று குன்றுதோறாடும் குமரனுக்குரியது. மற்றொன்று நான்கு வகை யோகங்களை அருளும், யோக நரசிங்கப்பெருமாளுக்கு உரியது. இரண்டுமே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள்.


இதில், முருகனுக்குரிய கோயில், லாடன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. லாட தேசத்திலிருந்து வந்த சித்தர் ஒருவர் அங்கு தங்கியிருந்ததால் லாடன் கோயில் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இந்தக் கோயிலில் முருகனும் தெய்வானையும் அமர்ந்திருக்கும் தோற்றம் மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாக அமைந்திருக்கிறது.

யோக நரசிங்கப்பெருமாள் ஆலயத்தில் கருவறை மட்டும் குடைவரைக் கோயிலாகவும், மூலவரின் உருவம் மிகப் பெரிதாக மலைப்பாறையைச் செதுக்கியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.



கோயிலைப் பற்றிய விரிவான தகவல்களைக் கீழுள்ள காணொளியில் காணலாம்....

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை!

படம்: நன்றி!

வீதியெங்கும் மக்கள் கூட்டம். வருவோரும் போவோருமாக உயிர்ப்போடு விளங்கும் தெருக்கள். மதுரை நகரத்தின் நாளங்காடி...

"மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்"

அங்கே, விற்க விற்கக் குறையாமல் பொருட்கள் வந்திறங்கியபடியே இருக்க, விற்பனைக்கு வந்த பொருட்களை இறக்கிவைக்கிற ஓசையும், அவற்றை விலைகொடுத்து அள்ளிச்செல்லுகின்ற மக்கள் கூட்டம் எழுப்பும் ஒலியும் சேர்கையில் ஆற்றுநீர் ஓடிவந்து அலைகடலோடு கலப்பதுபோன்ற  ஆரவாரம் அங்கே.

தெருக்களில், சுவை மிக்க பலகாரக்கடைகள், வட்டத் தட்டுக்களில், கட்டிவைத்த, கொட்டிவைத்த பூக்களை விற்கும் கடைகள், மகரந்தம் போல மென்மையாக வாசனைத் திரவியங்களைப் பொடித்து விற்கும் கடைகள், வெற்றிலை பாக்குக் கடைகள், சங்கு மற்றும் சுட்ட சுண்ணாம்பினை விற்கும் கடைகள் என்று பலவிதமான கடைகள். 

சங்குகளை அறுத்துப் பதமாக்கி அவற்றில் வளையல் செய்கிறவர்களும், ஒளிபொருந்திய வயிரக்கல்லில் துளையிடும் தொழில் செய்பவர்களும், பொன்னை உரசிப்பார்த்து வாங்குகிற பொன் வியாபாரிகளும், செம்பினை எடைபோட்டு வாங்கும் வணிகர்களும், ஆடை விற்பனை செய்பவர்களும், குஞ்சம் கட்டி விற்பவரும், பூக்களும், சந்தனமுமாகிய நறுமணப் பொருட்களை விற்பவர்களும், ஓவியம் வரைபவர்களும், கடலின் கரையில் படியும் கருமணல் படிவுகளைப்போல, தெருவோரங்களில் புடவைகளை விரித்துக்கட்டி நெசவு செய்பவர்களும், ஒருவர் கால் மற்றவர்மேல் படுமளவுக்கு நெருக்கமாக நின்று விற்பனை செய்துகொண்டிருந்தனர்.

"பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர"

மா, பலா போன்ற இனிய கனிவகைகளையும், கீரைவகைகளையும் விற்கிறவர்களும், அமிர்தம் போன்ற இனிமையுடைய கற்கண்டினை விற்பவர்களும், இறைச்சியுடன் கலந்து சமைத்த சோறாகிய உணவினை (பிரியாணி???) விற்பவர்களும், கிழங்கு வகைகளை விற்பவர்களும், இனிப்புச் சுவையுடைய சோற்றினை வழங்குபவர்களும் இருக்க, அவற்றை வாங்கி ஆங்காங்கே நின்று உண்பவர்களுமாகக் கலகலப்பாகக் காணப்பட்டது அந்த வீதி.

இவை தவிர, இரவு நேர அங்காடிகளில், மரக்கலங்களில் வந்திறங்குகிற பொருட்களை வாங்குவோரும், தாம் கொண்டுவந்த பொருட்களை விலைக்கு விற்றுக் கிடைத்த பொருளுக்கு மதுரை மாநகரில் கிடைக்கிற அழகிய அணிகலன்களை வாங்கிச்செல்லுகிற வெளிநாட்டு வணிகர்களும் சேர, அலை ஓசையும் அவற்றோடு விளையாடும் நீர்ப்பறவைகளின் ஓசையும் இயைந்ததுபோல எங்கும் ஓசை நிறைந்திருந்தது. 

இவையெல்லாம், பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சி காட்டுகிற மதுரையும் அவற்றில் நடக்கிற வியாபாரங்களைப் பற்றிய செய்தியுமாகும். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்திருந்தும், இன்னும் அதே உயிர்ப்புடன் உறங்கா நகரமாக இயங்குகிற மதுரையை நினைக்கையில் மனசு வியக்கத்தான் செய்கிறது. இன்றைக்கு வைகையைக் காணோம், வறட்சியாகிப்போச்சு என்று ஆயிரம்தான் சொன்னாலும் என்றைக்கும் மதுரை மதுரைதான்!!!


-சுந்தரா

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

உறங்கா நகரம் மதுரை!

சென்னைக்குச் செல்கிற அந்தத் தனியார் பேருந்து மதுரை ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தத்தில் நின்றது. மணி இரவு 10. எடுத்து வந்திருந்த இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு, சாப்பாடு கட்டியிருந்த இலையினையும் காகிதத்தையும் போட்டுவிட்டு வரலாமென்று கீழே இறங்கினேன். பளிச்சென்ற விளக்குகள்,  போவதும் வருவதுமாய் மக்கள் கூட்டம், இரவென்று சொல்லமுடியாதபடி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது மதுரை.

சுற்றிலும் தனியார் பேருந்துகளுக்கான சிறு அலுவலகங்கள், பெட்டிக்கடைகள், பழக்கடைகள், தேநீர்க் கடைகள் தெரிந்ததேயன்றி குப்பைகளைப் போட குப்பைத் தொட்டியொன்றும் கண்ணில் படவில்லை.

சுற்றிலும் பார்த்த என்னிடம் அக்கா, ரெண்டு பத்து ரூவாக்கா வாங்குங்கக்கா என்றபடி அருகில் வந்த செயற்கைப் பூச்சாடி விற்றுக்கொண்டிருந்த சிறுவனிடம், தம்பி குப்பையைப் போட குப்பைத்தொட்டி எங்கேயிருக்குப்பா? என்றேன். அக்கா, சும்மா இந்த பஸ்ஸுக்கு அடியில போடுங்கக்கா என்று சொல்லிவிட்டு, அக்கா ஒண்ணாச்சும் வாங்குங்கக்கா என்றான். பஸ் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. இருப்பா, ரெண்டாவே குடு என்றேன். இருந்ததிலேயே பளிச்சென்ற நிறத்தில் இரண்டு பூச்சாடிகளை நீட்டினான்.

கொடுத்ததை வாங்கிக்கொண்டு அவனிடம், தம்பி உன் பேரென்னப்பா என்றேன். 'அழகர்க்கா...' என்று சட்டென்று கண்கள் மின்னச் சொன்னவனிடம் 'படிக்கிறியா...' என்றேன். 'ம்ம்...எட்டாப்புப் படிக்கிறேன்க்கா. வீட்ல படிச்சுமுடிச்சிட்டு சாப்பாட்டுக்கு அப்புறம்தான் பூ விக்க வருவேன். எனக்கு முன்னாடி என் அண்ணன் வருவான்' என்றான்.

'ஆமா, உங்க ஊர்ல என்ன ஸ்பெஷல்?' என்றவுடன், ஒருநிமிடம் யோசித்துவிட்டு 'மீனாச்சி கோயில்க்கா...' என்றான். அதுதவிர என்றவுடன் 'மல்லிப்பூ, இட்லி, ஜிகர்தண்டா, திருமலை நாயக்கர் மஹால்,  திருப்பரங்குன்றம் அப்புறம் அழகர் கோயில்' என்றவனிடம் நீ அடிக்கடி எந்த கோயிலுக்குப் போவே? என்ற கேள்விக்கு, மடப்புரம் காளி கோயில்க்கா. அங்கதான் எங்கம்மா அடிக்கொருக்கா கூட்டிட்டுப் போகும் என்றான். அப்போ, மீனாட்சி அம்மன் கோயில்? என்று கேட்டவுடன், எப்பவாச்சும் போவோம்க்கா என்றான்.

ஆமா, எத்தனை மணிவரைக்கும் பூச்சாடி வியாபாரம் பண்ணுவே என்று கேட்க? இப்ப போயிருவேன்க்கா. இனி நாளைக்கு சாயந்திரம் எட்டுமணிக்கு வருவேன் என்றவனிடம், 'சரி தம்பி படிப்பை மட்டும் விட்டுராதே' என்றதும் சரிங்கக்கா என்று சிரித்தபடி நகர்ந்துபோனான் அவன். சுற்றிலும் அவனைப்போல் நிறைய சிறுவர்கள் பழங்கள், பைகள், தொப்பிகள், பொம்மைகள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள்.

கூவிக்கூவி விற்கிற சத்தங்கள், புறப்படுகிற பேருந்துகளின் ஒலி, சென்னை, திருச்சி, பேருந்துகளுக்குப் பயணிகளைக் கூப்பிடுகிற நடத்துனர்களின் சத்தம், பக்கத்துப் பரோட்டாக் கடையில் கொத்துப் பரோட்டா போடுகிற சத்தம், இடையிடையே அங்கே திரிகிற மாடுகள் எழுப்புகிற சத்தம் என்று கலவையான சத்தங்கள் நிறைத்திருக்க இரவென்ற எண்ணமே எழவில்லை. உறங்கா நகரம் அந்த நள்ளிரவிலும் உற்சாகமாகவே தெரிந்தது.