புதன், 8 ஜூன், 2022
10 நிமிஷத்தில் பிரெட் பணியாரம்| Bread Paniyaram in Tamil | Snacks Recipe...
வெள்ளி, 27 மே, 2022
சிறுதானிய அடை செய்முறை | Millet Adai Dosa | Adai Recipe in Tamil
புதன், 10 மார்ச், 2021
ரவா லட்டு செய்முறை | Rava Laddu Recipe
தேவையான பொருட்கள்:-
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
நெய் - 1/4 கப்
முந்திரி - 15
செய்முறை:-
சர்க்கரையுடன் ஏலக்காயைச் சேர்த்து, பொடியாக அரைத்து வைக்கவும்.
ரவை, சர்க்கரைக்கலவையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்திரி, பாதாம் பருப்புகளைச் சேர்க்கவும். அத்துடன், வெதுவெதுப்பான பாலைச் சிறிது சிறிதாகச் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
எளிதான, ரவா லட்டு தயார்.
திங்கள், 14 செப்டம்பர், 2020
திரிபலா சூரணத்தின் பலன்கள் & உண்ணும் முறை
திரிபலா சூரணம், இதனைத் தாய் மருந்து என்று சொல்வார்கள். அதாவது, தாய்க்கு நிகராக, ஒரு மனிதனைப் பாதுகாக்கக் கூடியது என்று அதற்குப் பொருள்.
திரிபலா சூரணம் என்பது மூன்று பழங்கள் அல்லது மூன்று காய்கள் சேர்ந்த ஒரு பொடி. இந்தப் பொடியில், நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று காய்கள் அல்லது பழங்கள் சேர்ந்திருக்கின்றன. உணவு செரிப்பதற்கும், வயிறு சுத்தமாகவும் உதவி செய்யக்கூடிய ஒரு அருமையான மருந்து திரிபலா சூரணம் என்று சொல்லுவார்கள்.
மனிதனுடைய உள் உறுப்புகள் சரிவர வேலை செய்யும் போது, மனிதனுடைய முகம் தெளிவாக இருக்கும். இந்தத் திரிபலா சூரணத்தின் முக்கியமான பலன் என்னவென்றால், இது வயிற்றைச் சுத்தபடுத்தி, உடம்பு சரிவர இயங்க உதவி செய்கிறது. வயிறு சுத்தமாக இருந்தால் முகம் தெளிவாகிவிடும்.
அதனால், முகப்பரு மற்றும் பல தோல் நோய்கள் போன்றவை இந்தத் திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நீங்கிவிடும். இந்தத் திரிபலா சூரணம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது.
திரிபலா சூரணத்தை, நீரிழிவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு திரிபலா சூரணம் ஒரு சிறந்த தீர்வு. இரவில் இந்த திரிபலா சூரணத்தை வென்னீருடன் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் தீர்ந்துவிடும்.
இந்தத் திரிபலா சூரணத்தில் கலந்திருக்கின்ற நெல்லிக்கனியை உயிரை வளர்க்கும் அமிர்தம் என்று சொல்லுவார்கள். அதனால்தான், அவ்வளவு சிறந்த நெல்லிக்கனியை, அதியமான் அவ்வை எனும் தமிழ்ப் புலவருக்கு கொடுத்ததாகச் சொல்லுவார்கள்.
நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது. அடுத்ததாக, திரிபலா சூரணத்தில் கலந்திருக்கும் இன்னொரு பொருள் கடுக்காய். இந்தக் கடுக்காயும் தாய்க்கு நிகராக நோயைத் தீர்க்கக் கூடியது என்று சொல்வார்கள். இந்தக் கடுக்காயில் விதை நஞ்சு. அதனால், அதன் தோலை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதனால், விதையை நீக்கிவிட்டுத் தோலைப் பொடி செய்து அதை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். இந்த கடுக்காயைக் குழந்தைகளுக்கு மருந்தாகக் கல்லில் உரசிக் கொடுப்பார்கள்.
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே"
என்கிறது ஒரு பழம்பாடல்.
காலையில் இஞ்சியும், கடும்பகல் சுக்கும், மாலையில் கடுக்காயும் சாப்பிட்டால், முதியவர்கள் கூட இளமையாகிவிடுவார்கள் என்பது இதன் பொருள். இந்தக் கடுக்காய்ப்பொடியைத் தனியாக வாங்கியும் பயமன்படுத்தலாம்.
அடுத்ததாக, தான்றிக்காய். தான்றிக்காய் துவர்ப்பு சுவை உடையது. இது, நுரையீரல் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த மருந்து. இதன் பிஞ்சுகளை பேதி மருந்தாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மூன்று காய்களையும் காயவைத்துத் தயாரிக்கும் பொடிதான் திரிபலா சூரணம்.
இந்தத் திரிபலா சூரணத்தை, தினமும் எந்த அளவு சாப்பிடலாம் என்ற கேள்வி எழலாம். பொதுவாக, திரிபலா சூரணத்தை ஒரு வெருகடி அளவு சாப்பிடவேண்டும் என்பார்கள். வெருகடி என்பதற்கு, பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் ஆகிய மூன்று விரல்களால் ஒரு பொடியை எடுத்தால் எந்த அளவு வருமோ அதுதான் வெருகடி அளவு.
வெருகடி அளவு பொடியை, இரவில் சுடு தண்ணீர் அல்லது தேனில் குழைத்துச் சாப்பிடலாம். திரிபலா சூரணத்தை இரவில் எடுத்துக்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது.
இந்தத் திரிபலா சூரணம், பொடியாக மட்டுமன்றி, திரிபலா மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. திரிபலா சூரணம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, வீட்டிலேயே அவற்றைப் பொடி செய்தும் நாம் பயன்படுத்தலாம்.
இந்தத் திரிபலா சூரணப் பொடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வயிற்று பிரச்சினைகளைத் தீர்க்கவும், நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்புக்கும் ரொம்பவே உதவக்கூடியது. இதனை, நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.
திரிபலா சூரணம் பற்றியும், அதனை, எப்படி வாங்கலாமென்றும் மேலும் தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள்.
நலமுடன் வாழ்வோம்!
******
செவ்வாய், 8 செப்டம்பர், 2020
நூறு அடி நடை - மருத்துவக் குறிப்பு | நடத்தல் நன்று!
நடப்பது நல்லதென்பது நம் எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவழியும் என்றெல்லாம் கணக்கிட்டு அன்றாடம் நடைப் பயிற்சி செய்வதை நம்மில் பலர் வழக்கமாக்கியிருக்கிறோம்.
ஆனால், உண்ட உணவைச் செரிக்கவைக்கும் நடையைப் பற்றிய, ஒரு நல்ல மருத்துவக்குறிப்பு ஒரு பழந்தமிழ் நூலிலே உள்ளது. அதைப் படித்து, நாமும் நடை பழகினால் நல்ல முறையில் உண்ட உணவு செரித்துவிடும்.
இந்தப் பாடல், அங்காதிபாதம் எனும் அருமையான சித்த மருத்துவ நூலில் இடம்பெற்றிருக்கிறது.
இந்த நூலில், உணவு முறைகள் பற்றியும் உண்ணவேண்டிய முறைகள் பற்றியும், இன்னும் பலப்பல மருத்துவ முறைகள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. 100 அடி நடை பற்றிய அந்தப் பாடலை முதலில் பார்க்கலாம்.
தேன் நிறந்த மலர்களைச் சூடிய பெண்ணே, மனம் நிறைய உணவு உண்டபின், நூறு அடிகள் நடக்காவிட்டால், உணவு செமிக்காமல் வயிற்றில் பிரச்சனைகள் உண்டாகும். நூறு அடிகளைக் காட்டிலும் அதிகம் நடந்தால், வாய்வு உண்டாகும். நடக்காமல், ஓடினால் மரணமேகூட உண்டாகும். அவ்வாறின்றி, இதமாகப் படுத்திருந்தால் நோய்கள் அதிகரிக்கும் என்கிறது இந்தப் பாடல்.
அதனால், உணவு உண்டபின், நூறு அடிகள் மெதுவாக நடப்பது உடம்புக்கு நல்லது. எல்லா நேரமும் இயலாவிட்டாலும், இரவு உணவுக்குப் பின் மட்டுமாவது இதனைக் கடைப்பிடிக்கலாம்.
******
வியாழன், 27 ஆகஸ்ட், 2020
மதுரை யானை மலை யோகநரசிங்கப் பெருமாள் ஆலயம்
மதுரை - மேலூர் நெடுஞ்சாலையில், கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமும், முன்னூறு அடி உயரமுமாய் ஒரு யானை அமர்ந்திருப்பதுபோன்ற அருமையான தோற்றத்துடன் மதுரைக்கு அழகு சேர்க்கும் விதமாய் அமைந்திருக்கிறது இந்த யானை மலை.
இந்த யானை மலையில் இரண்டு குடைவரைக்கோயில்கள், சமணர் குகைகள், மகாவீரர், கோமதேஷ்வரர் போன்ற சமணத்துறவிகளின் உருவங்கள் மற்றும் சமணத்துறவிகள் படுத்து உறங்கிய கல்லாலான படுக்கைகளும் இங்கே உள்ளதாக அறியமுடிகின்றது. இந்த மலைப்பகுதி முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இயற்கையாகவே மிக மிக அழகாக அமைந்துள்ள இந்த மலையின் அடிவாரத்தில், மக்களுக்கு அருளையும் வழங்கும் விதத்தில் இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒன்று குன்றுதோறாடும் குமரனுக்குரியது. மற்றொன்று நான்கு வகை யோகங்களை அருளும், யோக நரசிங்கப்பெருமாளுக்கு உரியது. இரண்டுமே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள்.
இதில், முருகனுக்குரிய கோயில், லாடன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. லாட தேசத்திலிருந்து வந்த சித்தர் ஒருவர் அங்கு தங்கியிருந்ததால் லாடன் கோயில் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இந்தக் கோயிலில் முருகனும் தெய்வானையும் அமர்ந்திருக்கும் தோற்றம் மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாக அமைந்திருக்கிறது.
யோக நரசிங்கப்பெருமாள் ஆலயத்தில் கருவறை மட்டும் குடைவரைக் கோயிலாகவும், மூலவரின் உருவம் மிகப் பெரிதாக மலைப்பாறையைச் செதுக்கியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.
கோயிலைப் பற்றிய விரிவான தகவல்களைக் கீழுள்ள காணொளியில் காணலாம்....
புதன், 15 ஏப்ரல், 2020
வேப்பிலையின் மருத்துவ குணங்கள்
திங்கள், 2 மார்ச், 2020
தேவாரம் - கூற்றாயினவாறு விலக்ககலீர் | திருநாவுக்கரசர் தேவாரம்
செவ்வாய், 12 நவம்பர், 2019
ஷாம்பூ, சீயக்காய் இல்லாமல் இயற்கையாகத் தலை அலசும் வழி!
திங்கள், 4 நவம்பர், 2019
ஆசாரக்கோவை - ஒரு அறிமுகம்
செவ்வாய், 22 அக்டோபர், 2019
பிறவிக்குணங்கள் எவை எவை? | ஔவையார் தனிப்பாடல் திரட்டு
வெள்ளி, 14 டிசம்பர், 2018
கொள்ளை கொண்ட கதை!
ஒருநாள், வழிப்பறி பண்ண யாருமே கிடைக்காம அலைஞ்சப்ப, அவங்கிட்ட, முதன்முதலாக வந்து மாட்டினாராம் ஒருத்தர். ஆனா, அவர்கிட்டே கொள்ளையடிக்கிறதுக்கு எதுவுமே இல்லையாம். கோபம் வந்திச்சு அந்தக் கொள்ளைக்காரனுக்கு.
கையிலயும் பையிலயும் ஒண்ணுமே இல்லாம இப்படி சுத்திக்கிட்டிருக்கியே, எப்படின்னு அவரைப் பார்த்துக் கேட்டானாம் கொள்ளையன். அதற்கு அந்த வழிப்போக்கர், என் பெயர் நாரதன்...திரிலோக சஞ்சாரி, காசில்லாமலே எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடியவன் என்று சொல்லிவிட்டு. "நீ ஏன் இவ்வாறு கொள்ளைத் தொழில்செய்து காலம் கடத்துகிறாய் ?..." என்று கேட்டாராம்.
அதற்கு அந்தக் கொள்ளையன், "என்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்களையும் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்" என்று சொன்னானாம். அதற்கு நாரதர், "அப்படியானால் நீ செய்கிற இந்தப் பாவமாகிய வழிப்பறியில், அவர்களுக்கும் பங்கிருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தக் கொள்ளையன், "ஏன் இல்லை, நான் கொள்ளையடிக்கிற பொருளில் பங்கிருக்கிற மாதிரியே, இந்தப் பாவத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றானாம்.
அதற்கு நாரதர், "எதற்கும், நீ இதை உன் குடும்பத்தினரிடம் கேட்டுவிட்டு, வந்து பதிலைச்சொல்" என்றாராம். அதற்கு அவன், நாரதரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தன் வீட்டுக்குப்போய், கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளப்போனானாம் ரத்னாகரன். திரும்பிவந்தபோது, திகைத்துப்போயிருந்தானாம் அவன்.
என்னாச்சு ரத்னாகரா? என்று அவனைக் கேட்டாராம் நாரதர். அதற்கு அவன், கட்டிவைத்திருந்த நாரத முனிவரை அவிழ்த்து விட்டுவிட்டு,"எங்கள் அனைவரையும் காப்பாற்றுவது உன்னுடைய கடமையேயன்றி, நீ செய்யும் எந்தப் பாவத்திலும் எங்களுக்குப் பங்கில்லை என்று என் பெற்றவர்கள் முதற்கொண்டு எல்லாரும் மறுதலித்துவிட்டார்கள் ஐயா..." என்று மனவருத்தத்தோடு சொன்னானாம்.
அதற்கு நாரதர், "அதுதான் உண்மை ரத்னாகரா...பாவமோ புண்ணியமோ, அவனவன் செய்யும் செயல்களுக்கு அவனவனே பொறுப்பாவான். பாவப்பொருளில் மற்றவர்களுக்குப் பங்கிருந்தாலும், பெறப்போகும் தண்டனையில் அவர்களுக்குப் பங்கு கிடையாது" என்று கூறினாராம்.
தான் செய்த செயல்களால், தனக்குப் பாவங்கள் சேர்ந்துவிட்டதே என்று அஞ்சி நடுங்கினானாம் அவன். அன்றைக்கு மனம்திருந்திய அந்த ரத்னாகரனாகிய வால்மீகியிடமிருந்துதான் இன்றைக்கும் பேசப்படுகிற ராமாயணம் எனும் இதிகாசம் பிறந்தது!
செவ்வாய், 11 டிசம்பர், 2018
விரிச்சி கேட்டல்!
படிக்கிற காலத்தில், கல்லூரி விடுதியிலிருந்தபோது, மனதின் இத்தகைய ஆதங்கம் இன்னோர் வடிவில் விரிவதைப் பார்த்ததுண்டு. வீட்டிலிருந்து, மாதக்கட்டணம் கட்ட மணியார்டர் வரவில்லையே என்ற கவலை, போன கடிதத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்த தவிப்பு, எழுதிய செமஸ்டரில் எல்லாப் பாடமும் பாஸாகவேண்டுமென்ற வேண்டுதல் எல்லாவற்றிற்கும் பதிலாக, யார் கையிலாவது பைபிளைக் கொண்டுவந்து கொடுத்து, ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து அதிலிருக்கிற முதல்வசனத்தைப் படி என்று கேட்பாள் எஸ்தர் மரியம்.
நல்லதாய் ஏதாவது வசனம் வந்துவிட்டால், அன்றைக்கு முழுக்க அவள்முகம் சந்தோஷத்தில் ஜொலிக்கும். இல்லாமல், ஏதாவது வித்தியாசமாய் வந்தாலோ, நாள் முழுக்கப் புலம்பிக்கொண்டே இருப்பாள். எஸ்தர் மாதிரியில்லாமல், இன்னும் சிலர், தாங்களாகவே ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வாசித்துவிட்டு, ஆண்டவர் என்னோடு பேசிவிட்டார் என்று, இறுக்கம் தளர்ந்தவர்களாய் எழுந்துபோவார்கள்.
இங்கேயும் அப்படியொரு காட்சி...
அப்போது, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட சிறு பசுங்கன்றானது, பசியினால் சுற்றிச்சுற்றி வருவதைக்கண்ட ஆயர்குலத்துப் பெண்மணியொருத்தி, அக்கன்றினை நோக்கி, "கோலுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்ற கோவலர்கள் பின்னேயிருந்து வழிநடத்த, உன் தாய்
பெண்களின் தேசம் - (1) பார்வதியின் சபதம்
இதில் முதலாவதாக வருவது பார்வதியம்மாளின் கதை. தொடர்ச்சியாய் இன்னும்பல சாதனைக்கதைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும்.
என்று ஆதிக்கக் கட்டுக்குள் பெண்களை அடைத்துவைத்திருந்த காலம்...
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளின் (1920) தொடக்கம். ஆங்கில அரசின் ஆட்சியில் காவல்துறையில் பணியாற்றிய கணவருக்கு வாழ்க்கைப்பட்டுவந்த ஒரு பெண்ணின் கதை. சத்தமின்றிச் சாதனை படைத்த ஒரு பெண்ணின் சரித்திரம்.
திண்ணைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் மட்டுமே கற்றுக்கொண்ட அந்தப் பெண்ணுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டைப்பற்றியெல்லாம் கற்றுத்தரப்படவில்லை. அதனால் பெற்றெடுத்ததோ பன்னிரண்டு குழந்தைகள். பிள்ளைப்பிராயத்தில் நோய்க்குப் பறிகொடுத்த மூன்று குழந்தைகளைவிடுத்து, ஐந்து பெண்குழந்தைகள், நாலு ஆண்குழந்தைகள்.
கணவரின் ஒற்றைச் சம்பளம். சுற்றிலும் தோட்டமும் துரவுமிருக்க, கிட்டவே ஓடிய தாமிரபரணியின் புண்ணியத்தில், வயிற்றுப்பாடு வயல் விளைச்சலில் கழிந்தாலும், பதினோரு பேருக்கான மற்ற செலவினங்கள் மலைபோல நிற்கும். இடையிடையே மருத்துவச்செலவுகள்வேறு.
அடிக்கடி குழந்தைப்பேறும் ஆளை வருத்திய ஆஸ்துமாவுமாக நலிவுற்றுப்போன உடம்பு. பெண்குழந்தைகளைப் படிக்கவைத்து என்ன செய்யப்போகிறாய்? படிப்பை நிறுத்திவிட்டுப் பக்கத்தில் வைத்துக்கொள். ஒத்தாசையாயிருப்பார்கள் என்ற உறவுக்காரர்களின் நச்சரிப்பு. அதற்கு ஆமோதித்த கணவரின் பேச்சு என்ற அத்தனையையும் சமாளித்து ஒற்றைப் பெண்ணாகப் போராடி, அத்தனை பிள்ளைகளையும் படிக்கவைத்துப் பணியிலமர்த்திவிடவேண்டுமென்ற உறுதியுடன் இருந்தார்கள் பார்வதியம்மாள்.
பெண்களைப் படிக்கத்தான் வைக்கிறாய், படிப்பை முடித்ததும் கட்டிக்கொடுத்துவிடு என்ற சுற்றியிருந்தவர்களின் சொல்லழுத்தங்களையும் மீறி, மூன்று பெண்களை ஆசிரியைகளாக்கி அழகு பார்த்தார். மொத்தத்தில், ஒன்பது பிள்ளைகளில் ஐந்து பேரை ஆசிரியப்பணிக்கும், ஒருவரைக் காவல்துறைக்கும், ஒருவரைக் கப்பற்படைக்கும் வேலைக்கு அனுப்பிவைத்தார்.
மேல்சட்டைகூட அணியாமல், சுற்றுக்கட்டுச்சேலையுடன் வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணின் முகத்தில் மெத்தப் பெருமிதம் வந்தது, படித்துப் புகழ்பெற்று நின்ற தன் பிள்ளைகளைப் பார்த்து. பெண்ணென்றால் பார்வதியை மாதிரி இருக்கணும் என்று மற்றவர்கள் பெருமை பேசினார்கள் பின்னால். ஆனால், அதற்கு முன்னால், அந்தச் சாதனைகளுக்காகப் பார்வதியம்மாள் சமாளித்த கஷ்டங்கள்,
இன்றைய பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
பெண்டிர் தேசம் (2) * நெருப்பினில் கருகாத நம்பிக்கை *
முகத்தில் பரு வந்தால்கூட முகத்தை மறைக்கிற பெண்களையும், ஒப்பனை செய்துகொள்ளாமல் வெளியுலகிற்கு முகம்காட்டாத பெண்களையும்கூடப் பார்த்திருப்போம். ஆனால், இந்தப் பெண்ணின் கதை, தன் தோற்றத்தினால் கிடைத்த அவமானங்களையும் மீறி, சாதனை படைத்த ஒரு பெண்ணின் கதை.
அன்றைக்கு, வீட்டில் யாருமில்லாத நேரத்தில், வீட்டிலிருந்த பம்ப் ஸ்டவ்வில் தேநீர் போடப்போன எட்டுவயதுச் சிறுமி பிரேமாவின் உடலில், நெருப்புப் பற்றிக்கொண்டது. 50 சதவீதம் நெருப்புக் காயங்களுடன், அடையாளம் தெரியாத சதைக் கோளமாய் வெந்துபோனது அந்தச் சிறுமியின் முகம்.
வேலூரிலுள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரேமா, உயிருக்குப் போராடியதைப் பார்த்த அவரின் அன்னை, மகள் உயிர் பிழைத்தால் அவளை அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே மக்களுக்குச் சேவை செய்யவைக்கிறேனென்று கடவுளை வேண்டிக்கொண்டாராம்.
அந்தச் சின்ன முகத்தில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்தபின், நான்கு வருடம் கழித்து மீண்டும் பள்ளிக்குப்போன சிறுமி பிரேமாவுக்குப் பரிசாகக் கிடைத்ததோ அவமானமும் நிராகரிப்புமே. 13 வயதிலேயே பள்ளியிறுதித் தேர்வெழுதி, அடுத்த ஆண்டே பி.யூ.சி யில் சேர, அங்கே, அவரது உழைப்புக்குக் கிடைத்தது உயர்ந்த மதிப்பெண்கள்.
மதிப்பெண் அதிகம் வாங்கியதும் அருகில்வர ஆரம்பித்தார்கள் உடன் பயின்றவர்கள். பி யூ சியில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக வந்து, அடுத்து ஹூப்ளி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டமும் பெற்றார் பிரேமா.
அடுத்தபடியாக, அவரது அன்னை செய்த வேண்டுதல் நிறைவேற, தனக்குச் சிகிச்சையளித்த பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர்.ஜோசஃப்பிடமே பிளாஸ்டிக் சர்ஜரியில் மேல் படிப்புக்காக மாணவியாகச் சேர்ந்தார். அது தவிர அமெரிக்காவிலும் சென்று, பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிப் படித்துவந்தார்.
அமெரிக்காவில் மட்டுமன்றி, நார்வே,கென்யா, எதியோப்பியா, தான்சானியா போன்ற நாடுகளுக்கும் சென்று, அங்கிருக்கும் பலருக்கும் மருத்துவ சேவையாற்றியிருக்கிறார் டாக்டர் பிரேமா. அன்றைக்குப் பலர் பார்க்க வெறுத்த அவரது முகமே, இன்றைக்கு பாதிக்கப்பட்ட பலருக்கு நம்பிக்கையளிப்பதாகக் கூறுகிறார் அவர்.
தற்போது, பிளவுபட்ட உதடுகளுடையவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளித்தும், பெங்களூரில் அக்னி ரக்ஷா என்ற சேவை நிறுவனத்தை நடத்தியும், பலருக்கு ஒளிவிளக்காகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் டாக்டர் பிரேமா தன்ராஜ். இவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி பற்றிய (Plastic Surgery Made Easy) என்ற நூலும் எழுதியிருக்கிறார்.
*** தகவல்கள் அனைத்தும் இணையத்திலிருந்து திரட்டப்பட்டவை ***
வடக்குவீட்டு சாமி!
பூசை முடிந்து பிரசாதம் கொடுத்த கையோடு,அம்மன் கோயிலில் வில்லுப்பாட்டு ஆரம்பமானது. கோயில் திடலுக்குக் கூட்டம்கூட்டமாக வந்தவர்களில், ஒருசிலர் விரிப்பிலும் மற்றவர்கள் குளிர்ந்த மணலிலும் உட்கார்ந்து, வில்லுப்பாட்டுக் கேட்கிற பாவனையில், கோயிலுக்கு வருகிற போகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஊரே கோயிலில் கூடிக்கிடந்தாலும், துரைப்பாண்டிக்கு மட்டும் கடையே கோயில், கல்லாப்பெட்டியே தெய்வமாக இருந்தது. காலையிலிருந்து கடை வேலையாக அங்குமிங்கும் அலைந்ததும், சாயங்காலம்,கடைக்கு வந்திருந்த சின்னவயசுக் கூட்டாளிகள் சிலருடன் நுங்கு போட்டுக்குடித்த மாலைப் பதநீருமாகச் சேர்ந்து, துரைப்பாண்டிக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. கடையைச் சாத்தி, வாசலில் கற்பூரம் ஏற்றிவைத்துவிட்டு,வீட்டை நோக்கி நடந்தார் அவர். மனைவி செல்லக்கனியும், மகள் வனஜாவும் வில்லுப்பாட்டு முடிந்ததும்தான் வீட்டுக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தார்கள். பரீட்சையிருப்பதால் கொடைக்கு வரமுடியாதென்று, காரைக்குடியில் இஞ்சினீயரிங் படித்துக்கொண்டிருந்த மகன் கணேசன் சொல்லிவிட, துரைப்பாண்டிக்கும் அவர் மனைவிக்கும் ஏகப்பட்ட வருத்தம்.
ஊர்க்கோடியில், சுற்றிலும் தென்னத்தோப்புக்கு மத்தியில் தன்னந்தனியாய் இருந்தது துரைப்பாண்டியின் பண்ணை வீடு. பத்து ஏக்கர் தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒற்றையாய் வீடு. வீட்டைப்பூட்டி, அடுப்படிக் கதவுக்குப் பின்னாலிருந்த ஆணியில் சாவியை மாட்டிவிட்டுப் போவதாக மனைவி சொன்னது நினைவிருந்தாலும்,கதவைத் திறக்க மனசில்லாமல், திண்ணையில் கிடந்த நார்க்கட்டிலில் படுத்தார் துரைப்பாண்டி. கோயிலில், வனவாசம் போன பாண்டவர்களைப் பற்றி, வில்லுப்பாட்டுக்காரர் பாடியது ஒலிபெருக்கியில் தெள்ளத்தெளிவாகக் கேட்டது. படுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு, அடிவயிறு கனத்தது போலிருக்க, எழுந்து வடக்குவீட்டுக்குப் பின்னால், வேலிப்பக்கம் போய்விட்டு வந்தார்.
வடக்குவீடு, புதிதாய்க் கட்டிய மேலவீட்டை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்தது. அது, துரைப்பாண்டியின் அப்பா அம்மா வாழ்ந்த வீடு. பத்துக்குப் பதினைந்தில் ஒற்றை அறையும் முற்றத்துத் திண்ணையும் மட்டுமேயுள்ளது.சின்னதாக இருந்தாலும் உத்திரக் கட்டைகளும் முன்வாசல் கதவும் சுத்தத்தேக்கு என்று அப்பா பெருமையாகச் சொல்லுவார். அம்மா இருக்கிற வரைக்கும் அந்த வீட்டில்தான் இருந்தார்கள். அப்புறம், இன்னும் கொஞ்சம் வசதிக்காகக் கட்டியதுதான் மேலவீடு. புதுவீடு கட்டியதும் வடக்குவீடு, வயலிலிருந்து வரும் நெல்லையும், தோட்டத்துத் தேங்காய்களையும் சேமித்து வைக்கிற இடமாகிப்போனது. இப்பவும் பெற்றவர்களின் ஞாபகம் வரும்போதெல்லாம் வடக்குவீட்டுத் திண்ணையில்போய் வெறுந்தரையில் கொஞ்சநேரம் படுத்திருப்பார் துரைப்பாண்டி.
பழைய நினைவுகளுடன் பாதையில் நடந்தவர், அப்போதுதான் கவனித்தார். வடக்குவீட்டுத் திண்ணையில் எப்பவும் எரிகிற குண்டு பல்பு அன்றைக்கு ஏனோ எரியவில்லை. அனிச்சையாய் அவரது பார்வை கதவுப்பக்கம்போக, கதவின் இடைவெளியிலிருந்து வெளிச்சம் கசிந்தது தெரிந்தது. சந்தேகமாய்ப் பார்த்தார் துரைப்பாண்டி. உள்ள யாரு லைட்டைப் போட்டிருப்பாங்க என்ற கேள்வியுடன், திண்ணைப் படியேறி, கதவில் கைவைத்தார்.
கதவு, உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. திக்கென்றிருந்தது அவருக்கு. இந்நேரத்தில் இங்கே யார் வந்திருப்பார்கள்? எவனாவது, திருட வந்திருப்பானோ என்ற சந்தேகத்தோடு, வலப்பக்கத்து ஜன்னல் பக்கம் போய்ப் பார்த்தார். அதுவும் உள்பக்கம் பூட்டப்பட்டிருக்க, மெல்ல வந்து, மீண்டும் கதவு இடைவெளியில் எட்டிப்பார்த்தார் துரைப்பாண்டி.
உள்ளே, அரைக்கை சட்டையும்,கைலியுமாகக் கதவுக்கு முதுகுகாட்டி யாரோ நின்றுகொண்டிருக்க, அவன் கையில் புகைந்துகொண்டிருந்தது சிகரெட். ஒருசில வினாடிகளில், அவன் மிகமெதுவாக, யாருடனோ பேசியபடித் திரும்பினான். திரும்பிய அவன் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார் துரைப்பாண்டி. தேரிக்காட்டு ஏலத் தகறாரில் அவருடன் பகைத்துக்கொண்ட பக்கத்துத்தெரு பால்த்துரையின் மகன் தாமோதரன். அப்பனைப்போலவே இவனும் சண்டை சச்சரவுக்குப் பயப்படாதவன். உள்ளே, அவனுடன் இன்னும் சிலரும் இருக்கிறார்களென்று தோன்றியது அவருக்கு.
அவன் எதுக்காக இந்த நேரத்தில் இங்கே வந்தான்? நிச்சயம்,ஏதாவது கெடுதல் செய்வதற்காகத்தானிருக்குமென்று தோன்றியது அவருக்கு. ஒருவேளை, பழைய பகையை மனதில்வைத்து, தன்னை அடித்துப்போட வந்திருப்பானோ? அல்லது, ஊரே கோயிலில் இருக்கும்போது, உள்ளே நுழைந்து, கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருப்பானோ என்று பலவாறாய் எண்ணியபடி, உள்ளே தாளிட்டிருந்த வடக்குவீட்டுக் கதவைச் சத்தமின்றி வெளியில் தாளிட்டார் துரைப்பாண்டி. வில்லுப்பாட்டுச் சத்தத்தில், வெளியில் பூட்டியது அவனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.
மேலவீட்டுப்பக்கம் போய்ப் பார்த்தார். அங்கேயும் வாசல்கதவு பூட்டப்படாமல் சாத்தியிருந்தது. உள்ளறையிலிருந்த அலமாரி மட்டும் திறந்திருந்தது. மற்றபடி என்னவெல்லாம் இல்லையென்று அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. "பாவிப்பய, பாட்டுச்சத்தத்துல, வீட்டைக் கொள்ளையடிக்கலாம்னு வந்திருக்கிறானென்று நினைத்து ஆத்திரத்துடன் வெளியேவந்தார். மறுபடிபோய், வடக்குவீட்டுக் கதவைப் பூட்டு வைத்துப் பூட்டினார். அந்தச் சத்தம் உள்ளே கேட்டிருக்கவேண்டும். ஒருசில வினாடிகளில், உள்ளிருந்து 'யாரு'ன்னு கேட்டபடியே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
அலட்சியப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றார் அவர். பின்னால், ஜன்னல் திறக்கிற சத்தம் கேட்டது. எவ்வளவு தைரியமிருந்தா என்னோட வீட்டுக்குள்ளயே நுழைஞ்சிருப்பானுங்க என்று நினைக்க நினைக்க ரத்தம் கொதித்தது அவருக்கு. "இருங்கடா, இன்னிக்கு ஊரைக்கூட்டி உங்க திருட்டுத்தனத்தை எல்லாருக்கும் தெரியவச்சிட்டுத்தான் மறுவேலை" என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு, காம்பவுண்ட் கேட்டைத் தாண்டித் தெருவில் இறங்கி நடந்தார்.
கதவு தட்டப்படுவது இப்போது காதில் விழவில்லை. எட்டிநடந்தார் அவர். அதற்குள் குப்பென்று ஒரு வெளிச்சம் வரத் திரும்பிப்பார்த்தார். வடக்கு வீட்டின் ஜன்னல் பக்கத்திலிருந்து, நெருப்பின் ஜுவாலை தெரிந்தது. திக்கென்று அதிர்ந்தார் அவர். வடக்கு வீட்டுக்குள், டிராக்டருக்கு வாங்கிவைத்த டீசல், ஜெனெரேட்டருக்கு வாங்கிவைத்த பெட்ரோல், காலிக் கோணிகளென்று எரிவதற்குத் தோதான ஏகப்பட்டபொருட்கள் இருந்தது நினைவுவந்தது அவருக்கு. விக்கித்து நின்றார். சட்டென்று சமாளித்துக்கொண்டு ஓடிப்போய் கதவைத் திறக்க எத்தனிக்க, அதற்குள், கெட்டிக்கதவோடு, வடக்குவீடு மொத்தமாகப் பற்றி எரியத் தொடங்கியது.
அடப்பாவமே, அவசரப்பட்டுட்டானே, அவமானத்துக்குப் பயப்பட்டு அவனுக்கே தீ வச்சுக்கிட்டானோ? அவனோட, உள்ளே இன்னும் யாரெல்லாம் இருந்திருப்பார்களோ என்ற கேள்விகளோடு, இப்போ யாரைக்கூப்பிடுவது? எப்படிப்போய்ச் சொல்வது? யாரிடம் சொன்னாலும் நான்தான் பற்றவைத்தேனென்று நினைப்பார்களோ என்று யோசித்து, மொத்தமாய் அதிர்ந்துபோன அவர், சத்தமில்லாமல் அங்கிருந்து வேகவேகமாய் வெளியேறி நடந்தார்.
வழியில் போகும்போதே, கோயிலில் வேட்டுச்சத்தம் கேட்டது. மண்டபத்தில்போய் உட்கார்ந்தார் அவர். அவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அவரை மேலும் அதிரவைக்க, அங்கே, பாண்டவர்களைத் தங்கவைத்த அரக்குவீடு பற்றியெரிந்த கதையைப் பாடிக்கொண்டிருந்தார் பாட்டுக்காரர். அதற்குள், கோயிலில்,நள்ளிரவு பூஜைக்கான மணியொலித்தது. வில்லுப்பாட்டை நிறுத்திவிட்டு, எல்லாரும் பூஜையைப் பார்க்க எழுந்துபோனார்கள்.
பூஜை நடந்துகொண்டிருக்கும்போதே, "ஐயோ,துரையண்ணன் வீடு தீப்பிடிச்சு எரியுது"ன்னு யாரோ சத்தமாய்க் குரல்கொடுக்க, மொத்தக் கூட்டமும் கலைந்து ஓடியது. "ஐயையோ..." என்று குரல்கொடுத்தபடி செல்லக்கனி ஓட, அவளுக்குப் பின்னால் துரைப்பாண்டியும் ஒன்றுமறியாதவர்போல ஓடிப்போனார். ஆளாளுக்கு, தோட்டத்துப் பம்புசெட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அணைப்பதற்குள், வடக்குவீடு மொத்தமாய் எரிந்துபோயிருந்தது.
பத்துமூடை நெல்லு, மூணு மூடை கடலை, ஐநூறு அறுநூறு தேங்கா, என் மாமியார் புழங்கின அருமையான தேக்குமர பீரோ அத்தனையும் போச்சே என்று அலறினாள் செல்லக்கனி. அதிர்ந்துபோனவராய் மேலவீட்டுத் திண்ணையில் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றார் துரைப்பாண்டி. எரிந்ததை அணைத்துவிட்டு, அவரவருக்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டு, மீண்டும் கோயிலுக்குப் புறப்பட்டது ஊர். அழுதுகொண்டிருந்த செல்லக்கனி அப்போதுதான் கவனித்தாள், இத்தனை ஆர்ப்பாட்டத்திலும், தன் வயசுப் பெண்பிள்ளைகளோடு உட்கார்ந்து வில்லுப்பாட்டு கேட்கப்போகிறேனென்று சொல்லிப்போன வனஜா, இதுவரைக்கும் வீடு வரவில்லையென்று.
கண்ணைத் துடைத்துக்கொண்டவளுக்கு மனதில் என்னென்னவோ பயம் கிளம்ப, மகளைப் பாத்தீங்களா என்று கணவரிடம் கேட்டாள். அவர் இல்லையென்று தலையசைக்க, மறுபடியும் கோயில் பக்கம் ஓடினாள் அவள். வனஜாவைக் காணவில்லை. அவளுடைய தோழிப்பெண்கள் ஒவ்வொருவர் வீடாய்ப் போய்த்தேடினாள். யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொல்ல, அதிர்ந்துபோனாள் அவள். வீடு பற்றியெறிந்த துயரம் சட்டென்று தொலைந்துபோக,பொட்டப்புள்ளயப்போயி எங்கேன்னு தேடுவேன் என்று தலையைப் பற்றி அழுதபடி வீட்டைநோக்கி நடந்தாள் அவள்.
அதற்குள், ஊருக்குள் அரசல்புரசலாய்ப் பேசிக்கொண்டார்கள், வனஜாவும் பால்த்துரை மகன் தாமோதரனும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, ஊரைவிட்டு ஓடிப்போய்விட்டார்களென்று. மகன் எழுதிவைத்திருந்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அந்த மாய்மாலக்காரி, என்ன பொடிபோட்டாளோ என் புள்ளையை மயக்கிக் கூட்டிட்டுப்போயிட்டா... அவ எங்கபோனாலும் வெளங்கமாட்டா. அவ பண்ணின காரியத்துக்குத்தான், வேட்டு நெருப்பால வீட்டை எரிச்சிட்டாரு சாமி என்று, வாசலில்வந்து மண்ணைவாரித் தூற்றிவிட்டுப்போனாள் தாமோதரனின் தாய்.
கேட்டுக்கொண்டிருந்த துரைப்பாண்டி, நெடுமரமாய்ச் சரிந்தார். சட்டென்று வடக்குவீடு பற்றிக்கொண்டதன் மர்மம் விளங்கிப்போனது அவருக்கு. நடந்ததெல்லாம் கேள்விப்பட்டு, ஊரிலிருந்து அரக்கப்பரக்க ஓடிவந்தான் கணேசன். "அந்த கழுத, செத்துப்போச்சுதுன்னு நினைச்சுக்கோங்கப்பா. எங்களுக்கு நீங்க வேணும். நீங்க தைரியமாயிருங்கப்பா"ன்னு கையைப் பிடித்துக்கொண்டு அழுதான் அவன்.
துரைப்பாண்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. மகள் வனஜாவின்மேல் ஏகப்பட்ட பாசம் அவருக்கு. குலதெய்வம் வனபத்ரகாளியின் பெயரையொட்டி அவரது அம்மா, ஆசையாய்ப் பேத்திக்கு வைத்த பெயர். பக்தியில்லையென்றாலும் அழகாயிருந்ததென்பதால் அந்தப்பெயர் பிடித்துப்போனது அவருக்கு. மகளை வாய்நிறையக் கூப்பிடுவார் அவர்.
அந்த மகள், அப்பாவின் முன்னால் அசிங்கப்பட்டு நிற்க அஞ்சி, அவளையும் அவளோடு சேர்ந்தவனையும் அனலில் பொசுக்கிக்கொண்டாளென்பதை நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்துவிடும்போலிருந்தது அவருக்கு. உடைத்துச் சொல்லிவிட்டால் ரெண்டு குடும்பத்து நிம்மதியும் போய்விடும் என்பதோடு, செய்யாத கொலைப்பழியையும் சுமக்கவேண்டிவருமோவென்று அச்சமும் தோன்றியது அவருக்கு.
கணவனின் உள்ளத்துத் தவிப்பினை உணராதவளாக, "கவலைப்படாதீங்க...பொம்பளப்புள்ளமேல இம்புட்டுப்பாசம் வைக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன். என்னிக்கிருந்தாலும் ஒருநாள், அது கல்யாணம் கட்டிக்கிட்டு இன்னொரு வீட்டுக்குப் போகவேண்டியதுதான். ஆனா, இன்னிக்கி, நம்மளை அவமானப்படுத்தி அழவச்சிட்டுப் போயிருக்கு. பட்டுத் திருந்தினபிறகு, அந்த ரெண்டு கழுதையும் நம்ம கால்ல வந்து விழத்தான் போகுது. நீங்க கவலைப்படாதீங்க..." என்று அவரது கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்தாள் அவர் மனைவி.
அவள் சொல்லச்சொல்ல, இன்னுங்கொஞ்சம் அழுகைவந்தது அவருக்கு. மகள், ஓடிப்போகவில்லை, ஒரேயடியாய்ப் போய்விட்டாளென்ற உண்மை தெரிந்தால், செல்லக்கனி என்ன ஆவாள் என்று நினைக்க நினைக்க இற்றுப்போனது அவர் மனசு.
மொட்டைக் கட்டிடமாய் நின்றது வடக்குவீடு. அதைப் பார்க்கப்பார்க்க ஆறவில்லை அவருக்கு. எரிந்து கிடந்தவற்றின் மிச்சத்தை மனைவி தடுக்கத்தடுக்க தானே ஒற்றை ஆளாய்ச் சுத்தம் செய்தார் துரைப்பாண்டி. சுற்றி நின்ற சுவரை, மொத்தமாய்த் தட்டிவிட்டு, கெட்டித்தூண்களும், நடுவில் ஒற்றைப் பீடமுமாய் அங்கே ஒரு கோயில் கட்டச்சொன்னார்.
நடப்பது என்னவென்று புரியாமல் நின்ற மனைவியிடம், "இதுவரைக்கும் நடந்ததெல்லாம் குலதெய்வக் குத்தம் கனி...நம்ம சாமி, வனபத்ரகாளியை நெனைச்சு, இனி இங்க நித்தமும் வெளக்கேத்தணும்" என்றார் அவர். சாமியுமாகாது கோயிலுமாகாது என்றிருந்த கணவனின் அந்தத் திடீர் பக்திக்குக் காரணம் புரியாவிட்டாலும், இப்பவாவது புத்தி வந்ததேயென்ற திருப்தியுடன், சம்மதமாய்த் தலையாட்டினாள் செல்லக்கனி.
பாலும் சோறும், பக்கோடாக் கூட்டணியும்!
அப்போதுதான், பத்துப்பதினைந்து வயதில் விருதுநகரில் அத்தைவீட்டுக் கல்யாணத்தின்போது பக்கோடாக் கூட்டணியுடன் பால்சோறு சாப்பிடுவதைப்பற்றி அங்கேயிருந்த ஒரு பாட்டி சொன்னது நினைவுக்குவந்தது.
விருதுநகர் சிவகாசிப்பக்கம் பெண்கள் பலரும் மதியத்துக்குமேல் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத்தொழிலில் ஈடுபடுவதால் இரவில், எளிதாக ஏதாவது சமைத்துச் சாப்பிடும் நோக்கத்தில் உண்டாக்கியதுதான் இந்தப் பால்சோறுக்கும் பக்கோடாவுக்குமான கூட்டணி என்று பாட்டி சொன்னாங்க. பாட்டி சொல்லைத் தட்டாமல் அதன் பின் சில நாட்கள் பக்கோடாவும் பால்சோறுமாகவே கழிந்தது. ஆனா, சும்மா சொல்லக்கூடாது, இது சூப்பர் கூட்டணிதான்.
பொங்கலன்றைக்கு எங்க ஊர்ப்பக்கம், வெறும் பச்சைஅரிசியில் வெள்ளைப் பொங்கல் வைப்பார்கள்.வழக்கமாக அதை, அவியலுடனும் சாம்பாருடனும் சேர்த்துச் சாப்பிடுவார்கள். ஆனால்,அந்தப் பொங்கல் சோற்றில் பசும்பால் அல்லது தேங்காய்ப்பாலும் சீனியும் சேர்த்துச் சாப்பிடுவார்களாம் என் தாத்தா. அம்மா, சொன்னதிலிருந்து வெள்ளைப்பொங்கலும் தேங்காய்ப்பாலும் இன்றைக்கு எங்க வீட்டிலும் வழக்கமாகிவிட்டது.
பாலுக்கும் சோறுக்குமான பந்தம், பத்து மாசக்குழந்தையிலிருந்து பல்லில்லாத பாட்டி தாத்தா வரைக்கும் எல்லாருக்கும் ஏற்றது. ஆனால், பக்கோடா சேர்த்துச்
சாப்பிடுவது எல்லாருக்கும் ஒத்துவராத ஒன்று. அது மட்டுமல்லாமல்,
சோறு என்று பேச்சை எடுத்தாலே இன்றைக்கு அநேகர், சோறா, அதுவும் ராத்திரியா? அதெல்லாம் விட்டுப் பல வருஷமாச்சு என்று சொல்வதைத்தான் கேட்கவேண்டியிருக்கிறது. இன்னும் சிலரோ, சோறு என்ற சுத்தத் தமிழ்ச் சொல்லையே மறந்து, ஒருவேளை மட்டும் சாதம், ஒயிட் ரைஸ் என்ற லெவலுக்கு உயர்ந்துவிட்டார்கள்!
ஆக, கலோரி கணக்கும், கார்போஹைட்ரேட் அளவும், கொழுப்பின் சதவீதமும் பார்த்துச் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த பால்சோறு பக்கோடாக்கூட்டணி ஆகாத கூட்டணி. மற்றபடி, உடல் உழைப்பும் உற்சாகமுமாயிருக்கிற எல்லாருக்கும் ஏற்ற கூட்டணி இது.
செவ்வாய், 23 அக்டோபர், 2018
உறக்கமில்லாத இரவு
மனுஷங்களோட ஆக்ரமிப்புல உலகத்துல உள்ள உயிரினங்கள் ஒண்ணொண்ணா அழிஞ்சுகிட்டு வருது. அதுங்களும்தான் எங்க போகும் பாவம் என்று எண்ணியபடியே புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள்.
சரவணன் புறப்பட்டப்பவே கரண்ட் போயி, இவ்ளோ நேரம் இன்வெர்டர்லதான் ஓடியிருக்கும்போல என்று நினைத்தவள், கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்தில் அடுக்களைக்கு நடந்தாள்.
அலைபேசியில், "என்னடா, இன்னுமா நீ தூங்கல? என்றான் சரவணன். "என்னமோ தெரியலங்க...தூக்கமே வரல. இனிமே, நானும் ராத்திரி பூரா முழிச்சிருந்துட்டு, பகல்ல நீங்க வந்ததும் தூங்கலாம்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, "அசட்டுக் கழுத...விளையாடாம சீக்கிரம் தூங்கு. எனக்கு வேலை இருக்கு என்று சிரித்தபடி இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.
மனதில் பயம் பிறாண்ட,அம்மா சொல்வதுபோல சஷ்டிக் கவசத்தின் வரிகளை உச்சரித்தபடியே கணினியை எடுத்து உயிர்ப்பித்தாள்.
தனக்குத் தோன்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டு கூகிளில் தேட ஆரம்பித்தாள். அவளைப் போலவே இன்னும் பலர் எழுதியிருக்க, அதை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தாள். சுவாரசியம் பற்றிக்கொண்டது. சிலரின் அனுபவங்கள் சிரிக்கவைப்பதாயும் சில அனுபவங்கள் சில்லிடவைப்பதாயும் இருந்தது. அடுத்ததாய், தனிமையின் பயத்தை விரட்டுவது எப்படி என்று இன்னொரு தலைப்பைத் தேட ஆரம்பித்தாள். பக்கம்பக்கமாய் விரிந்தது பலரின் அனுபவங்களும் அறிவுரைகளும். சுற்றியிருந்த அத்தனையும் மறந்துபோக புதுப்புது விஷயங்களை வாசித்து அதிலேயே ஆழ்ந்துபோனாள். ஆக, அன்றைக்கு கூகிளின் துணையுடன் தொலைந்துபோனது அவளது தூக்கமும் தனிமையும்.
திங்கள், 10 செப்டம்பர், 2018
சங்ககால சமையல்
ஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :-
வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத்துச் சித்திரங்களாக விளங்குகின்றன சங்ககால இலக்கியங்கள்.
படிக்கப்படிக்கப் பெருமிதமும் வியப்பும் தொன்றுமளவுக்கு வாழ்ந்த நம் மூத்த தமிழ்க்குடியின் வாழ்வியல் நெறிகள், வளர்த்த உயிரினங்கள், ஆடிய நடனம், அணிந்த அணிகலன்கள், சூடிய மலர்கள், பாடிய பண், பசித்துப் புசித்த உணவு, ரசித்து விளையாடிய விளையாட்டுக்கள் என்று அவர்கள் வாழ்வின் அத்தனை செய்திகளையும் பொக்கிஷமாய்ச் சேர்த்து வைத்திருக்கிற இந்த இலக்கியங்களுக்குள் ஆங்காங்கே விரவிக்கிடக்கின்ற அந்நாளைய உணவுகள் பற்றிய செய்திகள் நம் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
இன்றைக்கு, பச்சரிசி, புழுங்கலரிசி, சிவப்பரிசி, பாசுமதி அரிசி என்று நெல்லரிசி வகைக்குள்ளே நிறைவடைந்துவிட்ட நம் தமிழர்கள், முற்காலத்தில், நெல்லரிசியோடு, வரகரிசி, தினையரிசி, புல்லரிசி, மூங்கிலரிசி என்ற பல்வேறு அரிசி வகைகளைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளும் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள்
பரந்து கிடக்கிற சங்க இலக்கியத்தில் உணவு பற்றிய ஏகப்பட்ட செய்திகள் இருக்குமென்பதால் முதலில் பத்துப்பாட்டின் ஆற்றுப்படைப் பாடல்களின் மூலம் நமக்குக் கிடைக்கிற அந்நாளைய உணவுப்பழக்கவழக்கங்கள் மட்டும் இங்கே...
முதலில், ஆற்றுப்படை பற்றி, வள்ளல் ஒருவனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்ற புலவன் வறுமையில் வாடுகிற இன்னொரு புலவனை வழிப்படுத்தி அனுப்புகிற பாடல் வகையே சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படை எனும் துறையாகும்.
பத்துப்பாட்டில்,
1. திருமுருகாற்றுப்படை
2.பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
5. மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படை
எனும் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உண்டு.
மன்னன் வீட்டு விருந்தும் உபசரிப்பும்
பொருநராற்றுப்படையில் பரிசில் வேண்டிச்சென்ற ஏழையொருவனுக்கு, தணலில் வேகப்பட்ட தந்தூரி வகை உணவைக் கரிகால் வளவன் வழங்கி உபசரித்த காட்சி காணக்கிடைக்கிறது.
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை
அவையவை முனிகுவ மெனினே..."
அதுவும் எப்பேற்பட்ட உணவு, அறுகம்புல்லைத் தின்று கொழுத்த செம்மறியாட்டின் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவு. அந்த இறைச்சியை, இரும்புக் கம்பிகளில் குத்தி பக்குவமாகச் சமைத்துப் பரிமாற, அந்தச் சுவையான உணவினை ஆசையுடன், சூட்டோடு வாயிலிட்டுவிட்டு, அதன் வெம்மை தாளாமல் வாயில் இடப்புறமும் வலப்புறமுமாக மாற்றிமாற்றிச் சுவைத்து, இனி போதும் போதுமென மறுக்குமளவுக்குத் தான் உணவு உண்டதாகச் சொல்கிறான் அந்தக் கூத்தன்.
அதுமட்டுமன்றி, வேறுவேறு வடிவங்களில் சமைக்கப்பட்ட பல்வேறு தின்பண்டங்களையும் கொண்டு வந்துகொடுத்து அவற்றை முழவின் இசைக்கு விரலியர் நடனமாட, அதனை ரசித்தவாறே உண்ணவைத்து மகிழ்ச்சிப்படுத்துகிறான் மன்னன்.
மருத நிலமான ஆமூரில்,
"இருங்காழ் உலக்கை இரும்புமுகந் தேய்த்த
அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு"
இரும்பு உலக்கையால் தீட்டிய வெண்ணெல் சோற்றினை, சமைத்த நண்டுக்கறியுடன் பரிமாறியதையும்,
குறிஞ்சி நிலத்துக் கானவர் வீட்டில்,
"சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்"
சிவப்பரிசிச் சோற்றை மூடுமளவுக்கு உடும்புக் கறிப் பொரியலைப் பரிமாறி உண்ணச்செய்த உபசரிப்பையும்,
பசுக்களைப் பராமரித்து, அவற்றின் பாலையும், மோரையும் விற்றுத் தொழில் செய்யும் கோவலர் குடியிருப்புகளில்,
"இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பன்ன
பசுந்திணை மூரல் பாலொடும் பெருகுவீர்"
பசுந்தினை அரிசிச் சோறும் பாலும் சேர்த்த பால்சோற்றினை உண்ணத்தருவார்கள்.
மேலும், முல்லை நிலமக்களின், வைக்கோல் வேயப்பட்ட குடியிருப்புகளில்,
"நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவை மூரற் பெறுவிர்"
பூளைப்பூவினைப்போன்ற சிறிய வரகரிசிச் சோற்றுடன், வேங்கைப் பூப்போன்ற அவரையின் பருப்பைக் கலந்து பிசைந்த பருப்புச் சோற்றினைப் படைத்துப் பரிமாறிய பாங்கினையும் காணமுடிகிறது.
இவை மட்டுமன்றி, கூத்தராற்றுப்படை காட்டும் கானகக் குறமகளின் வீட்டில்,
"வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து..."
சமைத்த கடமானின் கொழுப்புமிக்க தசையினையும், பன்றியின் தசையினையும், உடும்பின் கறியோடு, புளியும், பசுமோரும் கலந்து உலையிலேற்றிச் சமைத்த மூங்கிலரிசிச் சோற்றுடன் தருவார்கள் என்று நாம் அறியத்தருகிறார் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.
அந்தணர் வீட்டு அடிசில்
பெரும்பாணாற்றுப்படையில், வீடுகளில், நாய், கோழி இவற்றை வளர்க்காமல் கிளிகளை வளர்த்து அவற்றுக்கு வேதத்தைக் கற்றுக்கொடுக்கும் அந்தணர் வீடுகளில்,
"வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்"
கருடச் சம்பா அரிசியில் சமைத்த சோற்றையும், மோரில் கடைந்தெடுத்த வெண்ணெய்யில் மிளகுத்தூளும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிய காய்கறிப் பொரியலையும், ஊறுகாயுடன் உண்டு மகிழலாம் என்று பாணன் கூறுவதாகப் பாடல்கள் உள்ளன.
வறியவன் வீட்டு உணவு
வள்ளலும் வசதி படைத்தவர்களும் விருந்தளித்த விஷயங்கள் மட்டுமல்லாமல், வறியவரின் உணவுமுறையும் இங்கே காணக்கிடைக்கிறது. நல்லியக்கோடன் எனும் வள்ளலொருவனைக் காணச் செல்கின்றான் பாணன். வறியவனான அவன் வீட்டில்,
"ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்கில்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்..."
வாட்டுகிற பசித்துன்பத்திலிருந்து தக்களைக் காத்துக்கொள்ள, உப்பில்லாமல் சமைக்கப்பட்ட வேளைக்கீரையை மற்றவர்கள் தங்கள் வறுமையை அறிந்துவிடக்கூடாதென்று அஞ்சி, வாயிலின் கதவடைத்துக்கொண்டு குடும்பத்தோடு உண்ணுகின்ற காட்சியைச் சிறுபாணாற்றுப்படை சொல்ல,
வறுமையிலே வாழ்ந்தாலும் கூட வந்தவர்க்கு உணவளித்து வாழும் நிலைமையையும் பெரும்பாணாற்றுப்படை எடுத்தியம்புகிறது.
"நெடுங்கிணற்று
வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல் . . ."
எயினர் எயிற்றியர் வாழும் ஈச்ச இலையினால் வேயப்பட்ட குடிசை. சமைப்பதற்கு எதுவுமின்றி, தரிசு நிலத்தைத் தோண்டிக்கிளறிச் சேகரித்துக் கொண்டுவந்த புல்லரிசியைக் குத்தி சுத்தம் செய்து, உப்பு நீர்க் கிணற்றில் ஊறிய நீரை உடைந்த பானையிலிட்டு, உலையிலேற்றிச் சமைத்த சோற்றை, சுட்ட கருவாட்டுடன் பரிமாறும் காட்சியையும் காணமுடிகிறது.
இது வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த நம் தமிழர்களின் பெருமை.
இவ்வாறாக ஆற்றுப்படை நூல்கள் நம் மக்களின் அக்கால உணவுப் பழக்கத்தையும் உயர்ந்த நெறிமுறைகளையும் எடுத்தியம்புகிறது.
*****
புதன், 25 ஜனவரி, 2017
ஜல்லிக்கட்டும் சிறுவீட்டுப் பொங்கலும்
மாற்றங்கள் மட்டுமே மாறாதிருக்கிற இந்த உலகில், மாறி மறந்துபோன விஷயங்களுள் ஒன்றாகிவிடுமோ என்று அச்சப்பட வைத்த ஜல்லிக்கட்டு இன்றைக்கு மீண்டும் சாத்தியமாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானதொரு விஷயம்.
இப்போதெல்லாம் ஊருக்குள் நான்கைந்துபேர் சொந்தமாக மாடு வளர்ப்பதைப் பார்ப்பதே அரிதாகி, ஆவினும் ஆரோக்யாவும் ஆட்சி செய்கிற தமிழ்நாட்டில், அன்றைக்கெல்லாம், பத்து வீட்டுக்கு ஒரு வீட்டில் கட்டாயம் மாடுகள் இருக்கும். பொங்கலுக்கு மறுநாள், மாடு வளர்க்கிற வீடுகளில் அவற்றைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணமடித்து, கொம்புகளைச் சுற்றிலும் பூச்சூட்டி, சுத்தம் செய்த தொழுவத்தில் பொங்கல் வைத்துப் படையலிட்டு, மாடுகளுக்கும் பொங்கலை ஊட்டி விடுவார்கள்.
பின்னர், அலங்கரித்த காளைகள் மற்றும் கன்றுக்குட்டிகளின் கழுத்தில் சல்லிக்காசுகள் அதாவது நாணயங்கள் மற்றும் தேங்காய் பழம் முதலியவற்றையும் துணியில் முடிந்து மாலையுடன் கட்டிவிடுவார்கள். பின்னர் பறையடித்து ஒலியெழுப்பி அந்த மாடுகளைத் தெருவில் ஓடவிடுவார்கள். இளவட்டங்களும் சிறுவர்களும் மாட்டையும் கன்றையும் விரட்டிக்கொண்டு போய், அதன் கழுத்திலிருக்கிற காசு முடிப்பைக் கழட்டி எடுத்துக்கொள்வார்கள். இது கிராமங்களில் போட்டியாக நடத்தப்படாமல் அவரவர் தங்கள் காளைகளைக் கொண்டு தெருவில் மகிழ்ச்சிக்காக நடத்துவது. மாட்டுப் பொங்கலைச் சிறப்பிக்கிற ஒரு மரபு விளையாட்டு.
இன்றைக்குக் காணும் பொங்கலென்று கொண்டாடப்படுகிற தினத்தில், சிறுவீட்டுப் பொங்கலென்று ஒரு கொண்டாட்டமும் இருந்தது. பெண் குழந்தைகள் இருக்கிற வீடுகளில் இது கொண்டாடப்படும். வீட்டு முற்றத்தில் மணலால் கரைகட்டி, ஒரு சிறுவீடு செய்து, அதன் வாசலில் கோலமிட்டு, சாணத்தில் பூச்சொருகி அலங்கரிப்பார்கள். பின், அந்த வாசலில் அடுப்புக்கூட்டி, சிறிய பொங்கல் பானையில் பொங்கல் வைப்பார்கள். அந்தப் பொங்கலை, அந்தச் சிறுவீட்டுக்குள், சாணத்தில் பிடித்துவைத்த பிள்ளையாரின் முன் வைத்துப் பூசை செய்வார்கள்.
ஆக, தமிழர் திருநாளின் முதல்நாள் சூரியப் பொங்கலாகவும், மறுநாள் உழவுக்கு உறுதுணையான மாடுகளைச் சிறப்பிப்பதாகவும், மூன்றாம் நாள் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கல் என்பதை ஆங்காங்கே கேள்விப்பட்டாலும் சிறுவீட்டுப் பொங்கல் என்பது கிட்டத்தட்ட மறந்துபோன ஒரு நிகழ்வாகி விட்டது.
ஆணின் வீரத்தைச் சிறப்பிக்க ஜல்லிக்கட்டை நடத்தும் நாம் பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கச் சிறுவீட்டுப் பொங்கலையும் கொண்டாடி மகிழ்வோம்.