புதன், 25 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டும் சிறுவீட்டுப் பொங்கலும்

தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்று எப்போதும் சொல்வார்கள் நம் மக்கள். இந்தத் தை, இதுவரை உறங்கிக்கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒரு உத்வேகத்தையும் ஒற்றுமையையும் ஒன்றாய்க் கொண்டுவந்திருக்கிறது. இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்.

மாற்றங்கள் மட்டுமே மாறாதிருக்கிற இந்த உலகில், மாறி மறந்துபோன விஷயங்களுள் ஒன்றாகிவிடுமோ என்று அச்சப்பட வைத்த ஜல்லிக்கட்டு இன்றைக்கு மீண்டும் சாத்தியமாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானதொரு விஷயம்.

இப்போதெல்லாம் ஊருக்குள் நான்கைந்துபேர் சொந்தமாக மாடு வளர்ப்பதைப் பார்ப்பதே அரிதாகி, ஆவினும் ஆரோக்யாவும் ஆட்சி செய்கிற தமிழ்நாட்டில், அன்றைக்கெல்லாம், பத்து வீட்டுக்கு ஒரு வீட்டில் கட்டாயம் மாடுகள் இருக்கும். பொங்கலுக்கு மறுநாள்,  மாடு வளர்க்கிற வீடுகளில் அவற்றைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணமடித்து, கொம்புகளைச் சுற்றிலும் பூச்சூட்டி, சுத்தம் செய்த தொழுவத்தில் பொங்கல் வைத்துப் படையலிட்டு, மாடுகளுக்கும் பொங்கலை ஊட்டி விடுவார்கள்.

பின்னர், அலங்கரித்த காளைகள் மற்றும் கன்றுக்குட்டிகளின் கழுத்தில் சல்லிக்காசுகள் அதாவது நாணயங்கள் மற்றும் தேங்காய் பழம் முதலியவற்றையும் துணியில் முடிந்து மாலையுடன் கட்டிவிடுவார்கள். பின்னர் பறையடித்து ஒலியெழுப்பி அந்த மாடுகளைத் தெருவில் ஓடவிடுவார்கள். இளவட்டங்களும் சிறுவர்களும் மாட்டையும் கன்றையும் விரட்டிக்கொண்டு போய், அதன் கழுத்திலிருக்கிற காசு முடிப்பைக் கழட்டி எடுத்துக்கொள்வார்கள். இது கிராமங்களில் போட்டியாக நடத்தப்படாமல் அவரவர் தங்கள் காளைகளைக் கொண்டு தெருவில் மகிழ்ச்சிக்காக நடத்துவது. மாட்டுப் பொங்கலைச்  சிறப்பிக்கிற ஒரு மரபு விளையாட்டு.

இன்றைக்குக் காணும் பொங்கலென்று கொண்டாடப்படுகிற தினத்தில், சிறுவீட்டுப் பொங்கலென்று ஒரு கொண்டாட்டமும் இருந்தது. பெண் குழந்தைகள் இருக்கிற வீடுகளில் இது கொண்டாடப்படும். வீட்டு முற்றத்தில் மணலால் கரைகட்டி, ஒரு சிறுவீடு செய்து, அதன் வாசலில் கோலமிட்டு, சாணத்தில் பூச்சொருகி அலங்கரிப்பார்கள். பின், அந்த வாசலில் அடுப்புக்கூட்டி, சிறிய பொங்கல் பானையில் பொங்கல் வைப்பார்கள். அந்தப் பொங்கலை, அந்தச் சிறுவீட்டுக்குள், சாணத்தில் பிடித்துவைத்த பிள்ளையாரின் முன் வைத்துப் பூசை செய்வார்கள்.

அவர்களின் சிறிய வீட்டில் வைத்த பொங்கலை அண்டை அயலில் உள்ள குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ணும் அந்தக் குழந்தைகளின் முகத்தில் அன்றைக்கு ஒரு அதீத மகிழ்ச்சி தென்படும். இது பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கும் ஒருநாள். தமிழரின் பண்பாட்டைச் சொல்லும் திருநாள்.

ஆக, தமிழர் திருநாளின் முதல்நாள் சூரியப் பொங்கலாகவும், மறுநாள் உழவுக்கு உறுதுணையான மாடுகளைச் சிறப்பிப்பதாகவும், மூன்றாம் நாள் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கல் என்பதை ஆங்காங்கே கேள்விப்பட்டாலும் சிறுவீட்டுப் பொங்கல் என்பது கிட்டத்தட்ட மறந்துபோன ஒரு நிகழ்வாகி விட்டது.

ஆணின் வீரத்தைச் சிறப்பிக்க ஜல்லிக்கட்டை நடத்தும் நாம் பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கச் சிறுவீட்டுப் பொங்கலையும் கொண்டாடி மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக