செவ்வாய், 11 டிசம்பர், 2018

பெண்களின் தேசம் - (1) பார்வதியின் சபதம்

பாதிக்கப்பட்ட பெண்கள் பலநூறாயிருந்தாலும், சாதிக்கும் துடிப்புடன் தடைகளைமீறி வெற்றிகொண்ட பெண்கள் சிலநூறுபேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனைப்பெண்களைப்பற்றிப் பேசப்போகும் பகுதி இந்தப் பெண்டிர் தேசம்.

இதில் முதலாவதாக வருவது பார்வதியம்மாளின் கதை. தொடர்ச்சியாய் இன்னும்பல சாதனைக்கதைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும்.


பார்வதியின் சபதம்
--------------------------

 


நாட்டையும் பெண்ணென்போம்
நடை நெளிந்து ஓடுகிற
ஆற்றையும் பெண்ணென்போம்
அளவிலா அறிவுதரும்
ஏட்டையும் பெண்ணென்போம்
இடையின்றித் தேடுகிற
தேட்டையும் பெண்ணென்போம்
ஆனால்,
வீட்டுப் பெண்ணைமட்டும்
வேலைசெய்யும் அடிமையென்போம்

என்று ஆதிக்கக் கட்டுக்குள் பெண்களை அடைத்துவைத்திருந்த காலம்...

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளின் (1920) தொடக்கம். ஆங்கில அரசின் ஆட்சியில் காவல்துறையில் பணியாற்றிய கணவருக்கு வாழ்க்கைப்பட்டுவந்த ஒரு பெண்ணின் கதை. சத்தமின்றிச் சாதனை படைத்த ஒரு பெண்ணின் சரித்திரம்.

திண்ணைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் மட்டுமே கற்றுக்கொண்ட அந்தப் பெண்ணுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டைப்பற்றியெல்லாம் கற்றுத்தரப்படவில்லை. அதனால் பெற்றெடுத்ததோ பன்னிரண்டு குழந்தைகள். பிள்ளைப்பிராயத்தில் நோய்க்குப் பறிகொடுத்த மூன்று குழந்தைகளைவிடுத்து, ஐந்து பெண்குழந்தைகள், நாலு ஆண்குழந்தைகள்.

கணவரின் ஒற்றைச் சம்பளம். சுற்றிலும் தோட்டமும் துரவுமிருக்க, கிட்டவே ஓடிய தாமிரபரணியின் புண்ணியத்தில், வயிற்றுப்பாடு வயல் விளைச்சலில் கழிந்தாலும், பதினோரு பேருக்கான மற்ற செலவினங்கள் மலைபோல நிற்கும். இடையிடையே மருத்துவச்செலவுகள்வேறு.

அடிக்கடி குழந்தைப்பேறும் ஆளை வருத்திய ஆஸ்துமாவுமாக நலிவுற்றுப்போன உடம்பு. பெண்குழந்தைகளைப் படிக்கவைத்து என்ன செய்யப்போகிறாய்? படிப்பை நிறுத்திவிட்டுப் பக்கத்தில் வைத்துக்கொள். ஒத்தாசையாயிருப்பார்கள் என்ற உறவுக்காரர்களின் நச்சரிப்பு. அதற்கு ஆமோதித்த கணவரின் பேச்சு என்ற அத்தனையையும் சமாளித்து ஒற்றைப் பெண்ணாகப் போராடி, அத்தனை பிள்ளைகளையும் படிக்கவைத்துப் பணியிலமர்த்திவிடவேண்டுமென்ற உறுதியுடன் இருந்தார்கள் பார்வதியம்மாள்.

பெண்களைப் படிக்கத்தான் வைக்கிறாய், படிப்பை முடித்ததும் கட்டிக்கொடுத்துவிடு என்ற சுற்றியிருந்தவர்களின் சொல்லழுத்தங்களையும் மீறி, மூன்று பெண்களை ஆசிரியைகளாக்கி அழகு பார்த்தார். மொத்தத்தில், ஒன்பது பிள்ளைகளில் ஐந்து பேரை ஆசிரியப்பணிக்கும், ஒருவரைக் காவல்துறைக்கும், ஒருவரைக் கப்பற்படைக்கும் வேலைக்கு அனுப்பிவைத்தார்.

மேல்சட்டைகூட அணியாமல், சுற்றுக்கட்டுச்சேலையுடன் வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணின் முகத்தில் மெத்தப் பெருமிதம் வந்தது, படித்துப் புகழ்பெற்று நின்ற தன் பிள்ளைகளைப் பார்த்து. பெண்ணென்றால் பார்வதியை மாதிரி இருக்கணும் என்று மற்றவர்கள் பெருமை பேசினார்கள் பின்னால். ஆனால், அதற்கு முன்னால், அந்தச் சாதனைகளுக்காகப் பார்வதியம்மாள் சமாளித்த கஷ்டங்கள்,
இன்றைய பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக