செவ்வாய், 8 செப்டம்பர், 2020

நூறு அடி நடை - மருத்துவக் குறிப்பு | நடத்தல் நன்று!

நடப்பது நல்லதென்பது நம் எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவழியும் என்றெல்லாம் கணக்கிட்டு அன்றாடம் நடைப் பயிற்சி செய்வதை நம்மில் பலர் வழக்கமாக்கியிருக்கிறோம்.

ஆனால், உண்ட உணவைச் செரிக்கவைக்கும் நடையைப் பற்றிய, ஒரு நல்ல மருத்துவக்குறிப்பு ஒரு பழந்தமிழ் நூலிலே உள்ளது. அதைப் படித்து, நாமும் நடை பழகினால் நல்ல முறையில் உண்ட உணவு செரித்துவிடும்.

இந்தப் பாடல், அங்காதிபாதம் எனும் அருமையான சித்த மருத்துவ நூலில் இடம்பெற்றிருக்கிறது.இந்த நூலில், உணவு முறைகள் பற்றியும் உண்ணவேண்டிய முறைகள் பற்றியும், இன்னும் பலப்பல மருத்துவ முறைகள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. 100 அடி நடை பற்றிய அந்தப் பாடலை முதலில் பார்க்கலாம்.

தேன் நிறந்த மலர்களைச் சூடிய பெண்ணே, மனம் நிறைய உணவு உண்டபின், நூறு அடிகள் நடக்காவிட்டால், உணவு செமிக்காமல் வயிற்றில் பிரச்சனைகள் உண்டாகும். நூறு அடிகளைக் காட்டிலும் அதிகம் நடந்தால், வாய்வு உண்டாகும். நடக்காமல், ஓடினால் மரணமேகூட உண்டாகும். அவ்வாறின்றி, இதமாகப் படுத்திருந்தால் நோய்கள் அதிகரிக்கும் என்கிறது இந்தப் பாடல்.

அதனால், உணவு உண்டபின், நூறு அடிகள் மெதுவாக நடப்பது உடம்புக்கு நல்லது. எல்லா நேரமும் இயலாவிட்டாலும், இரவு உணவுக்குப் பின் மட்டுமாவது இதனைக் கடைப்பிடிக்கலாம்.

******


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக