செவ்வாய், 11 டிசம்பர், 2018

பாலும் சோறும், பக்கோடாக் கூட்டணியும்!

மதுரையில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். இரவில், பரோட்டா சப்பாத்தி, இடியாப்பம் குருமாவுக்குப்பின் கொஞ்சமாய்ச் சோறு வைத்தார்கள். குழைவாய்ப் பிசைந்த தயிர்ச்சோறு போலிருந்தது அது. ராத்திரியில் தயிர் சாப்பிடுவதில்லை, வேண்டாமென்று மறுத்தபோது, இது பால்சோறு, இதைச் சாப்பிட்டால்தான் விருந்து சாப்பிட்ட நிறைவே வரும் என்று கட்டாயப்படுத்திச் சாப்பிடவைத்தார்கள்.

அப்போதுதான், பத்துப்பதினைந்து வயதில் விருதுநகரில் அத்தைவீட்டுக் கல்யாணத்தின்போது பக்கோடாக் கூட்டணியுடன் பால்சோறு சாப்பிடுவதைப்பற்றி அங்கேயிருந்த ஒரு பாட்டி சொன்னது நினைவுக்குவந்தது.

விருதுநகர் சிவகாசிப்பக்கம் பெண்கள் பலரும் மதியத்துக்குமேல் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத்தொழிலில் ஈடுபடுவதால் இரவில், எளிதாக ஏதாவது சமைத்துச் சாப்பிடும் நோக்கத்தில் உண்டாக்கியதுதான் இந்தப் பால்சோறுக்கும் பக்கோடாவுக்குமான கூட்டணி என்று பாட்டி சொன்னாங்க. பாட்டி சொல்லைத் தட்டாமல் அதன் பின் சில நாட்கள் பக்கோடாவும் பால்சோறுமாகவே கழிந்தது. ஆனா, சும்மா சொல்லக்கூடாது, இது சூப்பர் கூட்டணிதான்.

பொங்கலன்றைக்கு எங்க ஊர்ப்பக்கம், வெறும் பச்சைஅரிசியில் வெள்ளைப் பொங்கல் வைப்பார்கள்.வழக்கமாக அதை, அவியலுடனும் சாம்பாருடனும் சேர்த்துச் சாப்பிடுவார்கள். ஆனால்,அந்தப் பொங்கல் சோற்றில் பசும்பால் அல்லது தேங்காய்ப்பாலும் சீனியும் சேர்த்துச் சாப்பிடுவார்களாம் என் தாத்தா. அம்மா, சொன்னதிலிருந்து வெள்ளைப்பொங்கலும் தேங்காய்ப்பாலும் இன்றைக்கு எங்க வீட்டிலும் வழக்கமாகிவிட்டது.

பாலுக்கும் சோறுக்குமான பந்தம், பத்து மாசக்குழந்தையிலிருந்து பல்லில்லாத பாட்டி தாத்தா வரைக்கும் எல்லாருக்கும் ஏற்றது. ஆனால், பக்கோடா சேர்த்துச்
சாப்பிடுவது எல்லாருக்கும் ஒத்துவராத ஒன்று. அது மட்டுமல்லாமல்,
சோறு என்று பேச்சை எடுத்தாலே இன்றைக்கு அநேகர், சோறா, அதுவும் ராத்திரியா? அதெல்லாம் விட்டுப் பல வருஷமாச்சு என்று சொல்வதைத்தான் கேட்கவேண்டியிருக்கிறது. இன்னும் சிலரோ, சோறு என்ற சுத்தத் தமிழ்ச் சொல்லையே மறந்து, ஒருவேளை மட்டும் சாதம், ஒயிட் ரைஸ் என்ற லெவலுக்கு உயர்ந்துவிட்டார்கள்!

ஆக, கலோரி கணக்கும், கார்போஹைட்ரேட் அளவும், கொழுப்பின் சதவீதமும் பார்த்துச் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த பால்சோறு பக்கோடாக்கூட்டணி ஆகாத கூட்டணி. மற்றபடி, உடல் உழைப்பும் உற்சாகமுமாயிருக்கிற எல்லாருக்கும் ஏற்ற கூட்டணி இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக