செவ்வாய், 11 டிசம்பர், 2018
வடக்குவீட்டு சாமி!
பூசை முடிந்து பிரசாதம் கொடுத்த கையோடு,அம்மன் கோயிலில் வில்லுப்பாட்டு ஆரம்பமானது. கோயில் திடலுக்குக் கூட்டம்கூட்டமாக வந்தவர்களில், ஒருசிலர் விரிப்பிலும் மற்றவர்கள் குளிர்ந்த மணலிலும் உட்கார்ந்து, வில்லுப்பாட்டுக் கேட்கிற பாவனையில், கோயிலுக்கு வருகிற போகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஊரே கோயிலில் கூடிக்கிடந்தாலும், துரைப்பாண்டிக்கு மட்டும் கடையே கோயில், கல்லாப்பெட்டியே தெய்வமாக இருந்தது. காலையிலிருந்து கடை வேலையாக அங்குமிங்கும் அலைந்ததும், சாயங்காலம்,கடைக்கு வந்திருந்த சின்னவயசுக் கூட்டாளிகள் சிலருடன் நுங்கு போட்டுக்குடித்த மாலைப் பதநீருமாகச் சேர்ந்து, துரைப்பாண்டிக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. கடையைச் சாத்தி, வாசலில் கற்பூரம் ஏற்றிவைத்துவிட்டு,வீட்டை நோக்கி நடந்தார் அவர். மனைவி செல்லக்கனியும், மகள் வனஜாவும் வில்லுப்பாட்டு முடிந்ததும்தான் வீட்டுக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தார்கள். பரீட்சையிருப்பதால் கொடைக்கு வரமுடியாதென்று, காரைக்குடியில் இஞ்சினீயரிங் படித்துக்கொண்டிருந்த மகன் கணேசன் சொல்லிவிட, துரைப்பாண்டிக்கும் அவர் மனைவிக்கும் ஏகப்பட்ட வருத்தம்.
ஊர்க்கோடியில், சுற்றிலும் தென்னத்தோப்புக்கு மத்தியில் தன்னந்தனியாய் இருந்தது துரைப்பாண்டியின் பண்ணை வீடு. பத்து ஏக்கர் தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒற்றையாய் வீடு. வீட்டைப்பூட்டி, அடுப்படிக் கதவுக்குப் பின்னாலிருந்த ஆணியில் சாவியை மாட்டிவிட்டுப் போவதாக மனைவி சொன்னது நினைவிருந்தாலும்,கதவைத் திறக்க மனசில்லாமல், திண்ணையில் கிடந்த நார்க்கட்டிலில் படுத்தார் துரைப்பாண்டி. கோயிலில், வனவாசம் போன பாண்டவர்களைப் பற்றி, வில்லுப்பாட்டுக்காரர் பாடியது ஒலிபெருக்கியில் தெள்ளத்தெளிவாகக் கேட்டது. படுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு, அடிவயிறு கனத்தது போலிருக்க, எழுந்து வடக்குவீட்டுக்குப் பின்னால், வேலிப்பக்கம் போய்விட்டு வந்தார்.
வடக்குவீடு, புதிதாய்க் கட்டிய மேலவீட்டை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்தது. அது, துரைப்பாண்டியின் அப்பா அம்மா வாழ்ந்த வீடு. பத்துக்குப் பதினைந்தில் ஒற்றை அறையும் முற்றத்துத் திண்ணையும் மட்டுமேயுள்ளது.சின்னதாக இருந்தாலும் உத்திரக் கட்டைகளும் முன்வாசல் கதவும் சுத்தத்தேக்கு என்று அப்பா பெருமையாகச் சொல்லுவார். அம்மா இருக்கிற வரைக்கும் அந்த வீட்டில்தான் இருந்தார்கள். அப்புறம், இன்னும் கொஞ்சம் வசதிக்காகக் கட்டியதுதான் மேலவீடு. புதுவீடு கட்டியதும் வடக்குவீடு, வயலிலிருந்து வரும் நெல்லையும், தோட்டத்துத் தேங்காய்களையும் சேமித்து வைக்கிற இடமாகிப்போனது. இப்பவும் பெற்றவர்களின் ஞாபகம் வரும்போதெல்லாம் வடக்குவீட்டுத் திண்ணையில்போய் வெறுந்தரையில் கொஞ்சநேரம் படுத்திருப்பார் துரைப்பாண்டி.
பழைய நினைவுகளுடன் பாதையில் நடந்தவர், அப்போதுதான் கவனித்தார். வடக்குவீட்டுத் திண்ணையில் எப்பவும் எரிகிற குண்டு பல்பு அன்றைக்கு ஏனோ எரியவில்லை. அனிச்சையாய் அவரது பார்வை கதவுப்பக்கம்போக, கதவின் இடைவெளியிலிருந்து வெளிச்சம் கசிந்தது தெரிந்தது. சந்தேகமாய்ப் பார்த்தார் துரைப்பாண்டி. உள்ள யாரு லைட்டைப் போட்டிருப்பாங்க என்ற கேள்வியுடன், திண்ணைப் படியேறி, கதவில் கைவைத்தார்.
கதவு, உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. திக்கென்றிருந்தது அவருக்கு. இந்நேரத்தில் இங்கே யார் வந்திருப்பார்கள்? எவனாவது, திருட வந்திருப்பானோ என்ற சந்தேகத்தோடு, வலப்பக்கத்து ஜன்னல் பக்கம் போய்ப் பார்த்தார். அதுவும் உள்பக்கம் பூட்டப்பட்டிருக்க, மெல்ல வந்து, மீண்டும் கதவு இடைவெளியில் எட்டிப்பார்த்தார் துரைப்பாண்டி.
உள்ளே, அரைக்கை சட்டையும்,கைலியுமாகக் கதவுக்கு முதுகுகாட்டி யாரோ நின்றுகொண்டிருக்க, அவன் கையில் புகைந்துகொண்டிருந்தது சிகரெட். ஒருசில வினாடிகளில், அவன் மிகமெதுவாக, யாருடனோ பேசியபடித் திரும்பினான். திரும்பிய அவன் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார் துரைப்பாண்டி. தேரிக்காட்டு ஏலத் தகறாரில் அவருடன் பகைத்துக்கொண்ட பக்கத்துத்தெரு பால்த்துரையின் மகன் தாமோதரன். அப்பனைப்போலவே இவனும் சண்டை சச்சரவுக்குப் பயப்படாதவன். உள்ளே, அவனுடன் இன்னும் சிலரும் இருக்கிறார்களென்று தோன்றியது அவருக்கு.
அவன் எதுக்காக இந்த நேரத்தில் இங்கே வந்தான்? நிச்சயம்,ஏதாவது கெடுதல் செய்வதற்காகத்தானிருக்குமென்று தோன்றியது அவருக்கு. ஒருவேளை, பழைய பகையை மனதில்வைத்து, தன்னை அடித்துப்போட வந்திருப்பானோ? அல்லது, ஊரே கோயிலில் இருக்கும்போது, உள்ளே நுழைந்து, கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருப்பானோ என்று பலவாறாய் எண்ணியபடி, உள்ளே தாளிட்டிருந்த வடக்குவீட்டுக் கதவைச் சத்தமின்றி வெளியில் தாளிட்டார் துரைப்பாண்டி. வில்லுப்பாட்டுச் சத்தத்தில், வெளியில் பூட்டியது அவனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.
மேலவீட்டுப்பக்கம் போய்ப் பார்த்தார். அங்கேயும் வாசல்கதவு பூட்டப்படாமல் சாத்தியிருந்தது. உள்ளறையிலிருந்த அலமாரி மட்டும் திறந்திருந்தது. மற்றபடி என்னவெல்லாம் இல்லையென்று அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. "பாவிப்பய, பாட்டுச்சத்தத்துல, வீட்டைக் கொள்ளையடிக்கலாம்னு வந்திருக்கிறானென்று நினைத்து ஆத்திரத்துடன் வெளியேவந்தார். மறுபடிபோய், வடக்குவீட்டுக் கதவைப் பூட்டு வைத்துப் பூட்டினார். அந்தச் சத்தம் உள்ளே கேட்டிருக்கவேண்டும். ஒருசில வினாடிகளில், உள்ளிருந்து 'யாரு'ன்னு கேட்டபடியே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
அலட்சியப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றார் அவர். பின்னால், ஜன்னல் திறக்கிற சத்தம் கேட்டது. எவ்வளவு தைரியமிருந்தா என்னோட வீட்டுக்குள்ளயே நுழைஞ்சிருப்பானுங்க என்று நினைக்க நினைக்க ரத்தம் கொதித்தது அவருக்கு. "இருங்கடா, இன்னிக்கு ஊரைக்கூட்டி உங்க திருட்டுத்தனத்தை எல்லாருக்கும் தெரியவச்சிட்டுத்தான் மறுவேலை" என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு, காம்பவுண்ட் கேட்டைத் தாண்டித் தெருவில் இறங்கி நடந்தார்.
கதவு தட்டப்படுவது இப்போது காதில் விழவில்லை. எட்டிநடந்தார் அவர். அதற்குள் குப்பென்று ஒரு வெளிச்சம் வரத் திரும்பிப்பார்த்தார். வடக்கு வீட்டின் ஜன்னல் பக்கத்திலிருந்து, நெருப்பின் ஜுவாலை தெரிந்தது. திக்கென்று அதிர்ந்தார் அவர். வடக்கு வீட்டுக்குள், டிராக்டருக்கு வாங்கிவைத்த டீசல், ஜெனெரேட்டருக்கு வாங்கிவைத்த பெட்ரோல், காலிக் கோணிகளென்று எரிவதற்குத் தோதான ஏகப்பட்டபொருட்கள் இருந்தது நினைவுவந்தது அவருக்கு. விக்கித்து நின்றார். சட்டென்று சமாளித்துக்கொண்டு ஓடிப்போய் கதவைத் திறக்க எத்தனிக்க, அதற்குள், கெட்டிக்கதவோடு, வடக்குவீடு மொத்தமாகப் பற்றி எரியத் தொடங்கியது.
அடப்பாவமே, அவசரப்பட்டுட்டானே, அவமானத்துக்குப் பயப்பட்டு அவனுக்கே தீ வச்சுக்கிட்டானோ? அவனோட, உள்ளே இன்னும் யாரெல்லாம் இருந்திருப்பார்களோ என்ற கேள்விகளோடு, இப்போ யாரைக்கூப்பிடுவது? எப்படிப்போய்ச் சொல்வது? யாரிடம் சொன்னாலும் நான்தான் பற்றவைத்தேனென்று நினைப்பார்களோ என்று யோசித்து, மொத்தமாய் அதிர்ந்துபோன அவர், சத்தமில்லாமல் அங்கிருந்து வேகவேகமாய் வெளியேறி நடந்தார்.
வழியில் போகும்போதே, கோயிலில் வேட்டுச்சத்தம் கேட்டது. மண்டபத்தில்போய் உட்கார்ந்தார் அவர். அவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அவரை மேலும் அதிரவைக்க, அங்கே, பாண்டவர்களைத் தங்கவைத்த அரக்குவீடு பற்றியெரிந்த கதையைப் பாடிக்கொண்டிருந்தார் பாட்டுக்காரர். அதற்குள், கோயிலில்,நள்ளிரவு பூஜைக்கான மணியொலித்தது. வில்லுப்பாட்டை நிறுத்திவிட்டு, எல்லாரும் பூஜையைப் பார்க்க எழுந்துபோனார்கள்.
பூஜை நடந்துகொண்டிருக்கும்போதே, "ஐயோ,துரையண்ணன் வீடு தீப்பிடிச்சு எரியுது"ன்னு யாரோ சத்தமாய்க் குரல்கொடுக்க, மொத்தக் கூட்டமும் கலைந்து ஓடியது. "ஐயையோ..." என்று குரல்கொடுத்தபடி செல்லக்கனி ஓட, அவளுக்குப் பின்னால் துரைப்பாண்டியும் ஒன்றுமறியாதவர்போல ஓடிப்போனார். ஆளாளுக்கு, தோட்டத்துப் பம்புசெட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அணைப்பதற்குள், வடக்குவீடு மொத்தமாய் எரிந்துபோயிருந்தது.
பத்துமூடை நெல்லு, மூணு மூடை கடலை, ஐநூறு அறுநூறு தேங்கா, என் மாமியார் புழங்கின அருமையான தேக்குமர பீரோ அத்தனையும் போச்சே என்று அலறினாள் செல்லக்கனி. அதிர்ந்துபோனவராய் மேலவீட்டுத் திண்ணையில் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றார் துரைப்பாண்டி. எரிந்ததை அணைத்துவிட்டு, அவரவருக்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டு, மீண்டும் கோயிலுக்குப் புறப்பட்டது ஊர். அழுதுகொண்டிருந்த செல்லக்கனி அப்போதுதான் கவனித்தாள், இத்தனை ஆர்ப்பாட்டத்திலும், தன் வயசுப் பெண்பிள்ளைகளோடு உட்கார்ந்து வில்லுப்பாட்டு கேட்கப்போகிறேனென்று சொல்லிப்போன வனஜா, இதுவரைக்கும் வீடு வரவில்லையென்று.
கண்ணைத் துடைத்துக்கொண்டவளுக்கு மனதில் என்னென்னவோ பயம் கிளம்ப, மகளைப் பாத்தீங்களா என்று கணவரிடம் கேட்டாள். அவர் இல்லையென்று தலையசைக்க, மறுபடியும் கோயில் பக்கம் ஓடினாள் அவள். வனஜாவைக் காணவில்லை. அவளுடைய தோழிப்பெண்கள் ஒவ்வொருவர் வீடாய்ப் போய்த்தேடினாள். யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொல்ல, அதிர்ந்துபோனாள் அவள். வீடு பற்றியெறிந்த துயரம் சட்டென்று தொலைந்துபோக,பொட்டப்புள்ளயப்போயி எங்கேன்னு தேடுவேன் என்று தலையைப் பற்றி அழுதபடி வீட்டைநோக்கி நடந்தாள் அவள்.
அதற்குள், ஊருக்குள் அரசல்புரசலாய்ப் பேசிக்கொண்டார்கள், வனஜாவும் பால்த்துரை மகன் தாமோதரனும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, ஊரைவிட்டு ஓடிப்போய்விட்டார்களென்று. மகன் எழுதிவைத்திருந்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அந்த மாய்மாலக்காரி, என்ன பொடிபோட்டாளோ என் புள்ளையை மயக்கிக் கூட்டிட்டுப்போயிட்டா... அவ எங்கபோனாலும் வெளங்கமாட்டா. அவ பண்ணின காரியத்துக்குத்தான், வேட்டு நெருப்பால வீட்டை எரிச்சிட்டாரு சாமி என்று, வாசலில்வந்து மண்ணைவாரித் தூற்றிவிட்டுப்போனாள் தாமோதரனின் தாய்.
கேட்டுக்கொண்டிருந்த துரைப்பாண்டி, நெடுமரமாய்ச் சரிந்தார். சட்டென்று வடக்குவீடு பற்றிக்கொண்டதன் மர்மம் விளங்கிப்போனது அவருக்கு. நடந்ததெல்லாம் கேள்விப்பட்டு, ஊரிலிருந்து அரக்கப்பரக்க ஓடிவந்தான் கணேசன். "அந்த கழுத, செத்துப்போச்சுதுன்னு நினைச்சுக்கோங்கப்பா. எங்களுக்கு நீங்க வேணும். நீங்க தைரியமாயிருங்கப்பா"ன்னு கையைப் பிடித்துக்கொண்டு அழுதான் அவன்.
துரைப்பாண்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. மகள் வனஜாவின்மேல் ஏகப்பட்ட பாசம் அவருக்கு. குலதெய்வம் வனபத்ரகாளியின் பெயரையொட்டி அவரது அம்மா, ஆசையாய்ப் பேத்திக்கு வைத்த பெயர். பக்தியில்லையென்றாலும் அழகாயிருந்ததென்பதால் அந்தப்பெயர் பிடித்துப்போனது அவருக்கு. மகளை வாய்நிறையக் கூப்பிடுவார் அவர்.
அந்த மகள், அப்பாவின் முன்னால் அசிங்கப்பட்டு நிற்க அஞ்சி, அவளையும் அவளோடு சேர்ந்தவனையும் அனலில் பொசுக்கிக்கொண்டாளென்பதை நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்துவிடும்போலிருந்தது அவருக்கு. உடைத்துச் சொல்லிவிட்டால் ரெண்டு குடும்பத்து நிம்மதியும் போய்விடும் என்பதோடு, செய்யாத கொலைப்பழியையும் சுமக்கவேண்டிவருமோவென்று அச்சமும் தோன்றியது அவருக்கு.
கணவனின் உள்ளத்துத் தவிப்பினை உணராதவளாக, "கவலைப்படாதீங்க...பொம்பளப்புள்ளமேல இம்புட்டுப்பாசம் வைக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன். என்னிக்கிருந்தாலும் ஒருநாள், அது கல்யாணம் கட்டிக்கிட்டு இன்னொரு வீட்டுக்குப் போகவேண்டியதுதான். ஆனா, இன்னிக்கி, நம்மளை அவமானப்படுத்தி அழவச்சிட்டுப் போயிருக்கு. பட்டுத் திருந்தினபிறகு, அந்த ரெண்டு கழுதையும் நம்ம கால்ல வந்து விழத்தான் போகுது. நீங்க கவலைப்படாதீங்க..." என்று அவரது கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்தாள் அவர் மனைவி.
அவள் சொல்லச்சொல்ல, இன்னுங்கொஞ்சம் அழுகைவந்தது அவருக்கு. மகள், ஓடிப்போகவில்லை, ஒரேயடியாய்ப் போய்விட்டாளென்ற உண்மை தெரிந்தால், செல்லக்கனி என்ன ஆவாள் என்று நினைக்க நினைக்க இற்றுப்போனது அவர் மனசு.
மொட்டைக் கட்டிடமாய் நின்றது வடக்குவீடு. அதைப் பார்க்கப்பார்க்க ஆறவில்லை அவருக்கு. எரிந்து கிடந்தவற்றின் மிச்சத்தை மனைவி தடுக்கத்தடுக்க தானே ஒற்றை ஆளாய்ச் சுத்தம் செய்தார் துரைப்பாண்டி. சுற்றி நின்ற சுவரை, மொத்தமாய்த் தட்டிவிட்டு, கெட்டித்தூண்களும், நடுவில் ஒற்றைப் பீடமுமாய் அங்கே ஒரு கோயில் கட்டச்சொன்னார்.
நடப்பது என்னவென்று புரியாமல் நின்ற மனைவியிடம், "இதுவரைக்கும் நடந்ததெல்லாம் குலதெய்வக் குத்தம் கனி...நம்ம சாமி, வனபத்ரகாளியை நெனைச்சு, இனி இங்க நித்தமும் வெளக்கேத்தணும்" என்றார் அவர். சாமியுமாகாது கோயிலுமாகாது என்றிருந்த கணவனின் அந்தத் திடீர் பக்திக்குக் காரணம் புரியாவிட்டாலும், இப்பவாவது புத்தி வந்ததேயென்ற திருப்தியுடன், சம்மதமாய்த் தலையாட்டினாள் செல்லக்கனி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக