புதன், 27 மே, 2026

பேராசையும் மண் குடமும்

 

எந்த ஒரு காரியமும் நடந்து முடிவதற்கு முன்னால், அதைப்பற்றி அளவுக்கு அதிகமாகக் கற்பனை செய்து வீணாக மனக்கோட்டை கட்டக் கூடாது என்பதை அறிவுறுத்தும் கதை இது.

சோலைமலை என்ற ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பெற்றவர்களோ, கூடப் பிறந்தவர்களோ யாருமே கிடையாது. அன்றாடம் கிடைக்கிற கூலி வேலையைச் செய்து, அதில் வரும் வருமானத்தில் உணவைச் சாப்பிட்டுத் தன் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான்.

அப்படி இருக்கும்போது, ஒரு நாள் பக்கத்து ஊரில் நடந்த ஒரு விசேஷ வீட்டில் அவனைக் கூலி வேலைக்குக் கூப்பிட்டிருந்தார்கள். அவனும் அங்குச் சென்று நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்தான். வேலை எல்லாம் முடிந்த பிறகு, அவனுக்குச் சாப்பாடு கொடுத்ததோடு மட்டுமில்லாமல், கூலியாக ஒரு மண் பானை நிறைய வறுத்த அரிசி மாவும், இன்னும் சில பொருட்களும் கொடுத்தனுப்பினார்கள்.

அன்று, அந்த விசேஷ வீட்டில் நல்ல பருப்பும் சோறும் வயிறு நிறையச் சாப்பிட்டிருந்ததால், அவனுக்கு ஒரே மயக்கமாகவும் தூக்கமாகவும் இருந்தது. தன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் வழியில், ஒரு பெரிய மரத்தின் நிழலைக் கண்டதும், சற்று நேரம் ஓய்வெடுப்பதற்காக அங்குத் தங்கினான். அரிசி மாவு இருந்த மண் குடத்தைத் தன் தலைக்கு அருகில் பத்திரமாக வைத்துவிட்டு, நிழலில் படுத்துக் கண்ணை மூடினான்.

அவன் படுத்ததும் அவனுடைய மனசில் அலை அலையாக எண்ணங்கள் எழ ஆரம்பித்தன. அப்படியே ஒரு பெரிய கற்பனை உலகத்திற்குள் நுழைந்து மனக்கோட்டை கட்டத் தொடங்கினான்.

"இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற இந்த ஒரு குடம் அரிசி மாவை சந்தையில் கொண்டு போய் விற்றால், நல்ல விலைக்குப் போகும். அந்தப் பணத்தை வைத்து ஒரு ஆடு வாங்கலாம். அந்த ஆட்டை நன்றாக மேய்த்து வளர்த்தால், அது இரண்டு குட்டிகளைப் போடும். அந்த இரண்டு ஆடுகளில் ஒன்றை நல்ல கிடாவாக வளர்த்து விற்றால், இன்னும் இரண்டு பெண் ஆடுகள் வாங்கலாம். அப்படியானால் மொத்தம் நாலு ஆடுகள் ஆகிவிடும்.

அந்த நாலு ஆடுகளும் தலா இரண்டு குட்டிகள் போட்டால் மொத்தம் பன்னிரண்டு ஆடுகள் வந்துவிடும். இந்தப் பன்னிரண்டு ஆடுகளையும் விற்றால், நல்ல இரண்டு பசு மாடுகளை விலைக்கு வாங்கிவிடலாம். கொஞ்ச நாளைக்கு அந்தப் பசுக்களை நன்றாக மேய்த்து வளர்த்தால், அவை இரண்டும் கொழுத்து தலா ஒரு கன்றுக்குட்டியை ஈனும். அப்புறம் அந்தப் பசு மாடுகள் மூலமாகக் கிடைக்கிற பாலையும் நெய்யையும் விற்று, இன்னும் இரண்டு பசு மாடுகளை வாங்கலாம்.

இப்படியே மாடுகளை விற்றுப் பணம் சேர்த்து, அந்தப் பணத்தைவைத்து நிறைய நிலம் வாங்கலாம். அந்த நிலத்தில் நல்ல தானியங்களைப் பயிரிடலாம். விளைந்து வரும் தானியங்களை விற்று, அதில் இருந்து மூட்டை மூட்டையாகப் பணத்தைச் சம்பாதிக்கலாம். அப்புறம் அந்தப் பணத்தை வைத்து ஒரு பெரிய பங்களா வீடு வாங்க வேண்டும். அந்த வீட்டில் காசு, பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு, தேவையான சொகுசுப் பொருட்களை எல்லாம் வாங்கிப் போட்டுச் சந்தோஷமாக வாழவேண்டும்.

நான் இவ்வளவு பெரிய பணக்காரன் ஆனதும், என்னைத் தேடி வந்து மற்றவர்கள் பெண் கொடுப்பார்கள். அப்படி வரும் வரன்களில், நல்ல வசதியான ஒரு குடும்பத்துப் பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொண்டால் பணத்திற்குப் பணமும் ஆச்சு, அழகான பெண்ணும் ஆச்சு!

அப்புறம் என் மனைவி மூலமாக ஒரு நல்ல பையனைப் பெற்று, அவனுக்கு 'சோமரசன்' என்று பெயர் வைக்க வேண்டும். இப்படி இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாள் மேயப் போன பசுக்கள் எல்லாம் சாயங்காலம் வீட்டுக்குத் திரும்பி வரும். என் மனைவி குழந்தையைக் கீழே வைத்துவிட்டு, மாடுகளைத் தொழுவத்தில் கட்டப் போவாள். அப்போது அம்மா தன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போனதால் குழந்தை அழத் தொடங்கும்.

அதைப்பார்த்து எனக்குக் கோபம் வரும். நான் ஓடிப்போய், 'புள்ளையை இப்படி அழ வச்சிட்டு வந்துட்டியே!' என்று கோவித்துக்கொண்டு, என் மனைவியின் முதுகில் இப்படி ஒரு அடி, அப்படி ஒரு அடி என்று பலமாக அடிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் தீவிரமாகக் கற்பனை செய்து கொண்டிருந்த அந்த இளைஞன், உணர்ச்சிவசப்பட்டுத் தன் அருகில் கிடந்த ஒரு தடியை (கம்பை) எடுத்து, "என் மனைவியை இப்படித்தான் அடிப்பேன்" என்று காற்றில் ஓங்கி அடித்தான். ஆனால், அவன் ஓங்கிய அடி, நேராக அவன் தலைக்கு அருகில் இருந்த அரிசி மாவு மண் குடத்தின் மீது பலமாக விழுந்தது!

அது மண் குடமாக இருந்ததால், 'டொம்' என்று ஒரே அடியில் நொறுங்கித் தூள் தூளாக உடைந்தது. குடத்திற்குள் இருந்த வறுத்த அரிசி மாவு முழுவதும் சிதறி, மண்ணோடு மண்ணாகக் கலந்து வீணாய்ப் போனது.

குடம் உடையும் சத்தம் கேட்டுத்தான் அவன் தன் கற்பனை உலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு வந்தான். கண் விழித்துப் பார்த்தபோது, அங்கே மனைவியும் இல்லை, குழந்தையும் இல்லை, மாடுகளும் இல்லை. சிதறிக் கிடக்கும் அரிசி மாவும் உடைந்த குடமும் தான் இருந்தன.

தேவையில்லாத கற்பனையால், கஷ்டப்பட்டுச் சம்பாதித்துக் கொண்டு வந்த அரிசி மாவு குடமும் போய்விட்டதே என்று அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. தன் முட்டாள்தனத்தை நினைத்துத் தன் தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, ஒரு பைத்தியக்காரனைப் போலத் தரையில் புரண்டு புரண்டு அழுதான் அந்த இளைஞன்.

கதையின் நீதி: நடக்கப் போவதை நினைத்துக் கற்பனை செய்வதில் தவறில்லை. ஆனால், கையில் இருக்கும் நிஜத்தை மறந்துவிட்டு, வீணான மனக்கோட்டைகளில் வாழக் கூடாது. உழைப்பும் நிதானமுமே ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

சிற்பியின் மன்னிப்பு ( திருக்குறள் கதை -1)




சிற்பியின் மன்னிப்பு (திருக்குறள் கதை)

ஒரு அழகான கிராமத்தில் மாணிக்கம் என்ற முதிய சிற்பி வாழ்ந்து வந்தார். அவர் கைகளில் கல்லைக் கொடுத்தால், அது ஒரு சிலையாக அல்ல, உயிரோட்டமுள்ள ஒரு காவியமாக மாறும். அவரிடம் கதிர் என்ற இளைஞன் உதவியாளராக இருந்தான். கதிரும் திறமையானவன்தான், ஆனால் அவனுக்குள் ஒரு தீராத பொறாமை இருந்தது. மாணிக்கத்தின் புகழைத் தான் அடைய வேண்டும் என்றும், அதற்கு அவர் செதுக்கும் சிலைகளே தடையாக இருப்பதாகவும் அவன் நினைத்தான்.

ஒருமுறை மாணிக்கம் ஒரு அபூர்வமான சிலையினைப் பல மாதங்கள் கஷ்டப்பட்டுச் செதுக்கிக் கொண்டிருந்தார். அந்தச் சிலையின் நேர்த்தியைப் பார்த்த கதிர், "இந்தப் படைப்பு மட்டும் முடிவடைந்தால், மாணிக்கத்தின் புகழ் உச்சாணிக்கே சென்றுவிடும்" என்று பொறாமையில் எரிந்தான்.

ஒருநாள் நள்ளிரவு, கிராமமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கதிர் ரகசியமாகச் சிற்பக் கூடத்திற்குள் நுழைந்தான். கையில் சுத்தியலும் உளியும் ஏந்தி, மாணிக்கம் செதுக்கிய அந்த அழகான சிலையின் ஒரு பகுதியை ஆவேசமாக அடித்து உடைத்தான். சிலையும் சிதைந்தது. அந்த அவசரத்தில், கதிர் பயன்படுத்திய உளியின் முனை உடைந்து சிலையின் அடியிலேயே விழுந்துவிட்டது. அதை கவனிக்காமல் அவன் இருட்டில் தப்பி ஓடிவிட்டான்.

அதிகாலையில் அங்கு வந்த மாணிக்கம், தன் பலமாத உழைப்பு சிதைந்து கிடப்பதைக் கண்டு நிலைகுலைந்தார். ஆனால், கீழே கிடந்த அந்த உடைந்த உளித் துண்டை எடுத்தபோது, அது கதிரின் உளி என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அவர் கதிரைத் தேடிச் சென்று சத்தம் போடவில்லை, யாரிடமும் புகார் சொல்லவுமில்லை.

அன்று இரவு முழுவதும் மாணிக்கம் அந்தச் சிலையுடனேயே இருந்தார். அவர் அழுவதற்குப் பதிலாக, ஒரு உண்மையான கலைஞனாகச் சிந்திக்கத் தொடங்கினார். விளக்கு வெளிச்சத்தில், உடைந்த அந்தப் பகுதியை ஒரு புதிய வடிவம் கொண்ட கலைப்படைப்பாக மாற்றத் தொடங்கினார். அந்த உடைந்த பகுதியையே ஒரு அழகான ஆபரணமாகவும், ஒரு பூவாகவும் மாற்றி, அந்தச் சிலைக்கு ஒரு புதிய அழகைக் கொடுத்தார்.

மறுநாள் காலை, அங்கு வந்த கதிர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றான். தான் உடைத்த அதே இடத்தில், ஒரு பேரழகு கொஞ்சும் புதிய கலை உருவம் செதுக்கப்பட்டிருந்தது. அது முன்பு இருந்ததை விட விசித்திரமாகவும், அழகாகவும் இருந்தது.

அப்போது மாணிக்கம் கதிரின் அருகில் சென்று, அமைதியாகத் தன் கையை நீட்டினார். அவர் கையில் கதிர் விட்டுச் சென்ற அந்த உடைந்த உளித் துண்டு இருந்தது.

மாணிக்கம் மென்மையாகச் சொன்னார், "கதிர், சிலையைச் செதுக்குவது மட்டும் கலை அல்ல... உடைந்த கல்லையும், சிதைந்த மனதையும் மீண்டும் ஒரு அழகான படைப்பாக மாற்றுவதும்தான் உண்மையான கலை. உன்னுடைய உளி உடைந்திருக்கிறது, அதைப்போலவே உன் குணமும் உடையாமல் பார்த்துக்கொள்" என்று.

கதிர் எதற்கும் துணிந்தவன்தான், ஆனால் மாணிக்கத்தின் அந்தப் பெருந்தன்மையான மன்னிப்பு அவனைச் சுக்குநூறாக உடைத்தது. தண்டனையை விட அந்த அன்பு அவனைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. மறு நிமிடமே தன் குருவான அவரின் காலில் விழுந்தான். அவருடைய மன்னிப்பைக் கோரினான். அன்று முதல், கதிர் தன் பொறாமையைத் துறந்து, மாணிக்கத்தின் உண்மையான சீடனாக மாறினான்.

நீதி: பகைவனுக்கும் அருள் புரியும் குணமும், தவறை மன்னிக்கத் தெரிந்த மனமுமே ஒருவரை உயர்ந்த மனிதராக மாற்றும்.

 குறள் : 

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்."

 

பொருள்: தீங்கு செய்தவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்வதே சிறந்த தண்டனை.

வெள்ளி, 14 அக்டோபர், 2022

பார்த்திபன் கனவு

 பார்த்திபன் கனவு, இது கல்கி இதழில் தொடராக வெளிவந்த வரலாற்றுப் புதினம். பல்லவப் பேரரசன் நரசிம்ம வர்மனையும், சோழமன்னன் பார்த்திபனின் நிறைவேறாத கனவையும் பற்றிய கல்கியின் விறுவிறுப்பான வரலாற்று நாவல். 

பல்லவ இளவரசி குந்தவிக்கும் பார்த்திபச் சோழனின் மகன் விக்ரமனுக்குமான காதலையும், பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிரான சதிகளையும் அவை எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பதையும் கலந்து அருமையாக எழுதியிருக்கிறார் அமரர் கல்கி அவர்கள்.

கதை வடிவில் கேட்க...

முதல் பாகம் 

https://youtu.be/3A-tMoW3-To

இரண்டாம் பாகம்

https://youtu.be/KzkjWO1bQqo

மூன்றாம் பாகம்

https://youtu.be/eTBaCaHWG-4

புதன், 8 ஜூன், 2022

10 நிமிஷத்தில் பிரெட் பணியாரம்| Bread Paniyaram in Tamil | Snacks Recipe...

வீட்டில் பிரெட் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடக்கூடிய, சத்தான மாலை நேரப் பலகாரம்!

வெள்ளி, 27 மே, 2022

சிறுதானிய அடை செய்முறை | Millet Adai Dosa | Adai Recipe in Tamil

சுலபமான சிறுதானிய அடை செய்முறை. ஊறவைக்க 3 மணி நேரம் இருந்தால் போதும். உடனே இந்த சுவையான அடையை செய்து பரிமாறலாம். காலை உணவுக்கும் இரவு உணவுக்கும் சாப்பிடக்கூடிய அருமையான பலகாரம் இந்த சிறுதானிய அடை.

Adai recipe




புதன், 10 மார்ச், 2021

ரவா லட்டு செய்முறை | Rava Laddu Recipe

பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய ரவா லட்டு செய்முறை. பண்டிகைக் காலத்தில் மட்டுமல்ல, சாதாரண நாட்களிலும் மிகச் சுலபமாகத் தயாரிக்கக்கூடிய, அனைவரும் விரும்பும் ரவா லட்டு செய்முறை.

Rava Laddu in 10 minutes.



தேவையான பொருட்கள்:-

ரவை - 1 கப்

சர்க்கரை - 1 1/4 கப்

நெய் - 1/4 கப்

துருவிய தேங்காய் - 1/2 கப்

காய்ச்சிய பால் - 1/2 கப்

முந்திரி - 15 

பாதாம் பருப்பு - 10

ஏலக்காய் - 2

செய்முறை:-

சர்க்கரையுடன் ஏலக்காயைச் சேர்த்து, பொடியாக அரைத்து வைக்கவும்.

தேங்காயை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.

முந்திரி, பாதாம் பருப்புகளை சிறிசிறு துண்டுகளாக உடைத்து, 1/4 கப் நெய்யில் வறுத்து எடுத்துத் தனியாக வைத்துக்கொள்ளவும்.

அதே நெய்யில், ரவையை வாசனை வரும்வரை வறுக்கவும்.

சூடாக இருக்கும் வறுத்த ரவையுடன், பொடியாக்கிய சர்க்கரையைச் சேர்க்கவும்.

ரவை, சர்க்கரைக்கலவையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்திரி, பாதாம் பருப்புகளைச் சேர்க்கவும். அத்துடன், வெதுவெதுப்பான பாலைச் சிறிது சிறிதாகச் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இந்த ரவா லட்டு, உடனடியாகச் சாப்பிடுவதைவிட ஒன்றிரண்டு நாள் கழித்துச் சாப்பிட மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

எளிதான, ரவா லட்டு தயார்.

திங்கள், 14 செப்டம்பர், 2020

திரிபலா சூரணத்தின் பலன்கள் & உண்ணும் முறை



திரிபலா சூரணம், இதனைத் தாய் மருந்து என்று சொல்வார்கள். அதாவது, தாய்க்கு நிகராக, ஒரு மனிதனைப் பாதுகாக்கக் கூடியது என்று அதற்குப் பொருள். 

திரிபலா சூரணம் என்பது மூன்று பழங்கள் அல்லது மூன்று காய்கள் சேர்ந்த ஒரு பொடி. இந்தப் பொடியில், நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று காய்கள் அல்லது பழங்கள் சேர்ந்திருக்கின்றன. உணவு செரிப்பதற்கும், வயிறு சுத்தமாகவும் உதவி செய்யக்கூடிய ஒரு அருமையான மருந்து திரிபலா சூரணம் என்று சொல்லுவார்கள்.

மனிதனுடைய உள் உறுப்புகள் சரிவர வேலை செய்யும் போது, மனிதனுடைய முகம் தெளிவாக இருக்கும். இந்தத் திரிபலா சூரணத்தின் முக்கியமான பலன் என்னவென்றால், இது வயிற்றைச் சுத்தபடுத்தி, உடம்பு சரிவர இயங்க உதவி செய்கிறது. வயிறு சுத்தமாக இருந்தால் முகம் தெளிவாகிவிடும்.

அதனால், முகப்பரு மற்றும் பல தோல் நோய்கள் போன்றவை இந்தத் திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நீங்கிவிடும். இந்தத் திரிபலா சூரணம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது.

திரிபலா சூரணத்தை, நீரிழிவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு திரிபலா சூரணம் ஒரு சிறந்த தீர்வு. இரவில் இந்த திரிபலா சூரணத்தை வென்னீருடன் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் தீர்ந்துவிடும்.

இந்தத் திரிபலா சூரணத்தில் கலந்திருக்கின்ற  நெல்லிக்கனியை உயிரை வளர்க்கும் அமிர்தம் என்று சொல்லுவார்கள். அதனால்தான், அவ்வளவு சிறந்த நெல்லிக்கனியை, அதியமான் அவ்வை எனும் தமிழ்ப் புலவருக்கு கொடுத்ததாகச் சொல்லுவார்கள். 

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது. அடுத்ததாக, திரிபலா சூரணத்தில் கலந்திருக்கும் இன்னொரு பொருள் கடுக்காய். இந்தக் கடுக்காயும் தாய்க்கு நிகராக நோயைத் தீர்க்கக் கூடியது என்று சொல்வார்கள். இந்தக் கடுக்காயில் விதை நஞ்சு. அதனால், அதன் தோலை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதனால், விதையை நீக்கிவிட்டுத் தோலைப் பொடி செய்து அதை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். இந்த கடுக்காயைக் குழந்தைகளுக்கு மருந்தாகக் கல்லில் உரசிக் கொடுப்பார்கள். 

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு 

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் 

விருத்தனும் பாலனாமே" 

என்கிறது ஒரு பழம்பாடல். 

காலையில் இஞ்சியும், கடும்பகல் சுக்கும், மாலையில் கடுக்காயும் சாப்பிட்டால், முதியவர்கள் கூட இளமையாகிவிடுவார்கள் என்பது இதன் பொருள். இந்தக் கடுக்காய்ப்பொடியைத் தனியாக வாங்கியும் பயமன்படுத்தலாம்.

அடுத்ததாக, தான்றிக்காய். தான்றிக்காய் துவர்ப்பு சுவை உடையது. இது, நுரையீரல் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த மருந்து. இதன் பிஞ்சுகளை பேதி மருந்தாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மூன்று காய்களையும் காயவைத்துத் தயாரிக்கும் பொடிதான் திரிபலா சூரணம். 

இந்தத் திரிபலா சூரணத்தை, தினமும் எந்த அளவு சாப்பிடலாம் என்ற கேள்வி எழலாம். பொதுவாக, திரிபலா சூரணத்தை ஒரு வெருகடி அளவு சாப்பிடவேண்டும் என்பார்கள். வெருகடி என்பதற்கு,  பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் ஆகிய மூன்று விரல்களால் ஒரு பொடியை எடுத்தால் எந்த அளவு வருமோ அதுதான் வெருகடி அளவு.

வெருகடி அளவு பொடியை, இரவில் சுடு தண்ணீர் அல்லது தேனில் குழைத்துச் சாப்பிடலாம். திரிபலா சூரணத்தை இரவில் எடுத்துக்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது. 

இந்தத் திரிபலா சூரணம், பொடியாக மட்டுமன்றி, திரிபலா மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. திரிபலா சூரணம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, வீட்டிலேயே அவற்றைப் பொடி செய்தும் நாம் பயன்படுத்தலாம்.

இந்தத் திரிபலா சூரணப் பொடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வயிற்று பிரச்சினைகளைத் தீர்க்கவும், நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்புக்கும் ரொம்பவே உதவக்கூடியது. இதனை, நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். 

திரிபலா சூரணம் பற்றியும், அதனை, எப்படி வாங்கலாமென்றும் மேலும் தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள்.

நலமுடன் வாழ்வோம்!

******

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

நூறு அடி நடை - மருத்துவக் குறிப்பு | நடத்தல் நன்று!

நடப்பது நல்லதென்பது நம் எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவழியும் என்றெல்லாம் கணக்கிட்டு அன்றாடம் நடைப் பயிற்சி செய்வதை நம்மில் பலர் வழக்கமாக்கியிருக்கிறோம்.

ஆனால், உண்ட உணவைச் செரிக்கவைக்கும் நடையைப் பற்றிய, ஒரு நல்ல மருத்துவக்குறிப்பு ஒரு பழந்தமிழ் நூலிலே உள்ளது. அதைப் படித்து, நாமும் நடை பழகினால் நல்ல முறையில் உண்ட உணவு செரித்துவிடும்.

இந்தப் பாடல், அங்காதிபாதம் எனும் அருமையான சித்த மருத்துவ நூலில் இடம்பெற்றிருக்கிறது.



இந்த நூலில், உணவு முறைகள் பற்றியும் உண்ணவேண்டிய முறைகள் பற்றியும், இன்னும் பலப்பல மருத்துவ முறைகள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. 100 அடி நடை பற்றிய அந்தப் பாடலை முதலில் பார்க்கலாம்.

தேன் நிறந்த மலர்களைச் சூடிய பெண்ணே, மனம் நிறைய உணவு உண்டபின், நூறு அடிகள் நடக்காவிட்டால், உணவு செமிக்காமல் வயிற்றில் பிரச்சனைகள் உண்டாகும். நூறு அடிகளைக் காட்டிலும் அதிகம் நடந்தால், வாய்வு உண்டாகும். நடக்காமல், ஓடினால் மரணமேகூட உண்டாகும். அவ்வாறின்றி, இதமாகப் படுத்திருந்தால் நோய்கள் அதிகரிக்கும் என்கிறது இந்தப் பாடல்.

அதனால், உணவு உண்டபின், நூறு அடிகள் மெதுவாக நடப்பது உடம்புக்கு நல்லது. எல்லா நேரமும் இயலாவிட்டாலும், இரவு உணவுக்குப் பின் மட்டுமாவது இதனைக் கடைப்பிடிக்கலாம்.

******


வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மதுரை யானை மலை யோகநரசிங்கப் பெருமாள் ஆலயம்

மதுரை - மேலூர் நெடுஞ்சாலையில், கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமும், முன்னூறு அடி உயரமுமாய் ஒரு யானை அமர்ந்திருப்பதுபோன்ற அருமையான தோற்றத்துடன் மதுரைக்கு அழகு சேர்க்கும் விதமாய் அமைந்திருக்கிறது இந்த யானை மலை.


இந்த யானை மலையில் இரண்டு குடைவரைக்கோயில்கள், சமணர் குகைகள், மகாவீரர், கோமதேஷ்வரர் போன்ற சமணத்துறவிகளின் உருவங்கள் மற்றும் சமணத்துறவிகள் படுத்து உறங்கிய கல்லாலான படுக்கைகளும் இங்கே உள்ளதாக அறியமுடிகின்றது. இந்த மலைப்பகுதி முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இயற்கையாகவே மிக மிக அழகாக அமைந்துள்ள இந்த மலையின் அடிவாரத்தில், மக்களுக்கு அருளையும் வழங்கும் விதத்தில் இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒன்று குன்றுதோறாடும் குமரனுக்குரியது. மற்றொன்று நான்கு வகை யோகங்களை அருளும், யோக நரசிங்கப்பெருமாளுக்கு உரியது. இரண்டுமே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள்.


இதில், முருகனுக்குரிய கோயில், லாடன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. லாட தேசத்திலிருந்து வந்த சித்தர் ஒருவர் அங்கு தங்கியிருந்ததால் லாடன் கோயில் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இந்தக் கோயிலில் முருகனும் தெய்வானையும் அமர்ந்திருக்கும் தோற்றம் மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாக அமைந்திருக்கிறது.

யோக நரசிங்கப்பெருமாள் ஆலயத்தில் கருவறை மட்டும் குடைவரைக் கோயிலாகவும், மூலவரின் உருவம் மிகப் பெரிதாக மலைப்பாறையைச் செதுக்கியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.



கோயிலைப் பற்றிய விரிவான தகவல்களைக் கீழுள்ள காணொளியில் காணலாம்....

புதன், 15 ஏப்ரல், 2020

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்





அம்மை நோய் மற்றும் தோல் நோய்களுக்கும், நோய்கள் பரவும் காலத்தில் நோய் எதிர்ப்பிற்கும் வேப்பிலையைப் பயன்படுத்துவது நம் மக்களின் பாரம்பரிய வழக்கம். 

வீட்டு முற்றத்திலும், வீதியோரங்களிலும், கோயில்கள், பள்ளிகள் மற்றும் மைதானங்களிலும் வேப்ப மரங்கள் பெருமளவில் வளர்ப்பதை நாம் வழக்கமாகப் பார்த்திருப்போம்.

வேப்ப மரத்துக் காற்று வியாதிகளை விரட்டும் என்று வாய்வழியாகச் சொல்லப்படுவதும் வழிவழியாக நம்பப்படுவதும் நம் சமூகத்தில் வழக்கம்.

வேப்பிலையைப் பறித்து உடம்புக்கும் தலைக்கும் தேய்க்கப் பயன்படுத்துவதும், அரைத்துக் குடிப்பதும் தொன்றுதொட்டு கிராமத்து மக்கள் கடைப்பிடிக்கும் வழக்கங்களாகும். தற்காலத்தில் வேப்பிலை கிடைக்காத பகுதிகளில் நாம் இருந்தாலும், கடைகளில் கிடைக்கும் வேப்பிலைப் பொடி அல்லது வேப்பிலை மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நோய் பரவும் காலங்களில், பொதுவாக,  விஷக்காய்ச்சல்கள் மற்றும் அம்மை பரவும் சமயங்களில், எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்காக முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டி வைத்தியமான, விஷக்குறுணி எனும் சிறப்பான மருந்து தயாரிக்கும் செய்முறையையும் கீழுள்ள காணொளியில் காணலாம்.

வேம்பின் மருத்துவ குணங்களையும், அதன் 10 சிறப்பான பயன்களையும் பற்றிக் கீழுள்ள 👇👇👇 காணொளியில் காணலாம்.

திங்கள், 2 மார்ச், 2020

தேவாரம் - கூற்றாயினவாறு விலக்ககலீர் | திருநாவுக்கரசர் தேவாரம்




வயிற்று நோய்களைத் தீர்க்கும் அப்பரின் (திருநாவுக்கரசரின்) தேவாரப்பாடலும் அதன் விளக்கமும். 

இளம் வயதில் தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தைச் சார்ந்திருந்த திருநாவுக்கரசருக்குச் சூலை நோய் எனும் தாங்க முடியாத வயிற்று வலி உண்டாகிறது. 

சைவ சமையத்தைச் சார்ந்த அவருடைய தமக்கையார் திலகவதியாரின் வேண்டுகோளின்படி, திருவதிகை வீரட்டானேசுவரராகிய சிவனிடம் வந்து, தம்முடைய வலியை, வேதனையை முறையிட்டு, பதிகம் எனும் பத்துப் பாடல்களை மனமுருகிப் பாடி, தம் வயிற்று நோயிலிருந்து விடுபட்டார் தருமசேனர். அதன் பின் தருமசேனராயிருந்த அவர் திருநாவுக்கரசரானார்.

அந்தப் பத்துப் பாடல்களில், முதலாவது பாடலே கூற்றாயினவாறு விலக்ககலீர் எனும் இப்பாடல். மனமுருகி முறையிட்ட பாடல், மருந்தாகி வேதனைகளைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை.

பாடலுக்கான முழுமையான விளக்கம், கீழுள்ள காணொளியில் உண்டு 👇👇👇

செவ்வாய், 12 நவம்பர், 2019

ஷாம்பூ, சீயக்காய் இல்லாமல் இயற்கையாகத் தலை அலசும் வழி!




தலை முடியைச் சுத்தம் செய்ய விலை அதிகமான பொருட்கள் தேவையில்லை. வீட்டிலிருக்கும் எளிதான பொருட்களே போதும். மூன்றே பொருட்களால் மின்னும் தலை முடியைப் பெறலாம். 

இயற்கையான இந்த முறையில் தலை அலசும்போது, முடிகளுக்கு மினுமினுப்பும், கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியும் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

இது, நம் முன்னோர் உபயோகித்த முறை மட்டுமல்ல, இன்னமும் சிலரால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் முறை.

செயற்கையான ஷாம்பூக்களில் கலக்கப்படும் இரசாயனங்கள் வேண்டாம் என்று இயற்கையான, பழங்காலத்து முறையான சீயக்காய் பயன்படுத்துவதுண்டு. ஆனால், சீயக்காயில் தலை அலசும்போது, கண்களில் பட்டால் கண்கள் சிவந்துபோகும். இந்தப் பொடியை நாம் பயன்படுத்தும்போது, அத்தகைய பிரச்சனை வருவதில்லை.

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்தக் குளியல் பொடியப் பற்றி விபரமாக அறிந்துகொள்ள, கீழுள்ள காணொளியைப் பாருங்கள்.

திங்கள், 4 நவம்பர், 2019

ஆசாரக்கோவை - ஒரு அறிமுகம்



ஆசாரங்கள் எனப்படும் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் பற்றி விவரிக்கும் நூல் ஆசாரக்கோவை. இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்த நூலை எழுதியவர், கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் காலம், ஐந்தாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.

மக்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க முறைகளைப் பற்றி இந்த நூல் தொகுத்துத் தருகிறது. கோவை என்ற பெயருக்குத் தொகுப்பு என்று பொருள். இந்த நூலில், 100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும், வெண்பா எனும் பாடல் வகையைச் சார்ந்தது. வெண்பா என்பது, இறுதி அடி மூன்று சீராகவும் மற்ற அடிகள் நான்கு சீராகவும் அமைந்து வரக்கூடிய பாடல் வகை. 

ஆசாரக்கோவையில், உண்ணும் முறை பற்றிச் சொல்லவே பல பாடல்கள் உள்ளன. எந்த திசை நோக்கி உணவு அருந்த வேண்டும், பெரியோர் இருக்குமிடத்தில் எப்படி உணவருந்த வேண்டும், எந்த உணவை முதலிலும் எதனைக் கடைசியிலும் உண்ணவேண்டும் என்றெல்லாம் பலவிதமான நெறிமுறைகளைப் பற்றி ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

இது தவிர, உறங்கும் முறை, நீராடும் முறை, காலை எழுந்ததும் என்னென்ன செய்யவேண்டும், நீராட வேண்டிய சமயங்கள் எவையெவை, பழங்கால மக்கள் கடைப்பிடித்த வழக்கங்கள் என்னென்ன, எவையெல்லாம் செய்யத்தகாத காரியங்கள் என்றெல்லாம் பலவிதமான நடைமுறை ஒழுக்கங்கள் பற்றி இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த நூலிலுள்ள பாடல்களை ஒவ்வொன்றாக அறிந்துகொள்ள கீழிருக்கும் இணைப்பை பாருங்கள்...

செவ்வாய், 22 அக்டோபர், 2019

பிறவிக்குணங்கள் எவை எவை? | ஔவையார் தனிப்பாடல் திரட்டு



பிறவிக்குணங்கள் எவை எவையென்று ஔவை மூதாட்டி ஒரு அழகான பாடலில் சொல்லியிருக்கிறார். ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலின் முதல்வரி நம்மில் நிறைய பேருக்குத் தெரியும். அதாவது 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' இதனை ஒரு பழமொழி மாதிரி நாம் உபயோகிப்போம். 

ஆனால் இது, ஔவையினுடய ஒரு பாடலின் முதல் வரி. இந்தப் பாடலில் ஔவையார் என்ன சொல்லி இருக்காங்கன்னா, எவையெல்லாம் பிறவிக் குணங்கள், எவையெல்லாம் பழகப் பழக வந்துவிடும் குணங்கள் என்று சொல்லி இருக்காங்க. இது தான் அந்தப் பாடல்...

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

சித்திரமும் கைப்பழக்கம், அதாவது  சித்திரம் வரைவது நம்முடைய கையினால் வரும் பழக்கம். அதாவது வரைய வரைய ஓவியம் பழகிவிடும். தொடர்ந்து வரைய வரைய நம் விரல்கள் வசப்படும். அதனால், அழகான சித்திரம் வரைய முடியும். 

செந்தமிழும் நாப்பழக்கம், செந்தமிழ் அதாவது தமிழில் தொடர்ந்து பேசப் பேச தமிழ் நமக்குப் பழகிவிடும். இது, செந்தமிழுக்கு மட்டுமல்ல, எந்த மொழியாக இருந்தாலும், திரும்பத் திரும்ப நாம் அதனைப் பேசிப் பழகும்போது அதில் நாம் நல்ல புலமை பெற்றுவிடலாம். 

அடுத்ததாக, வைத்ததொரு கல்வி மனப்பழக்கம், நாம் சின்ன வயதில் படித்த சில பாடல்கள்கூட ரொம்ப நாளைக்கு நம் மனதில் நிற்கும். காரணம் என்னவென்றால் நாம் அவற்றைத் திரும்பத் திரும்பப் படித்து, மனதில் ஓடவிட்டுப் பார்த்திருப்போம். ஒரு விஷயம் மனதில் பதிய வேண்டுமென்றால், அதனைத் திரும்பத் திரும்ப மனதில் நினைத்துப் பார்க்கவேண்டும். அதாவது மனதில் ஓடவிட்டுப் பார்ப்பது. அந்த மாதிரி பழகும்போது, படித்த எதுவும் மறந்து போகாது. 

அடுத்ததாக, நித்தம் நடையும் நடைப்பழக்கம், நித்தம் அதாவது அன்றாடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது. நாம் வாழும் ஒழுக்கம், அல்லது நெறிமுறை, வழக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து வந்தால், எடுத்துக்காட்டாக, காலையில் எழுதல், இன்சொல் பேசுதல் இந்த மாதிரி விஷயங்கள் அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும். 

கடைசியாக, நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம், நட்பு என்பது நாம் பிறருடன் தோழமையுடன் பழகும் குணத்தைக் குறிக்கும். பிறரோடு நாம் பழகும் தன்மை என்பது நம் பிறவிக் குணத்தைப் பொருத்தது.

அடுத்தது, தயை என்னும் இரக்க குணம். இதனைக் கருணை என்றும் சொல்லலாம். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் மாதிரி, ஒரு பயிராக இருக்கட்டும், ஒரு உயிரினமாக இருக்கட்டும் அல்லது சக மனிதராக இருக்கட்டும். பிறரின் கஷ்டத்தைப் பார்க்கும்போது நம்முடைய மனமும் வருந்தி இரக்கம் கொண்டால், அதுவே தயை. 

கொடை என்ற எண்ணமும் இயற்கையாக வருவது. அனைவராலும்அதனைக் கடைப்பிடிக்க முடியாது.  செயற்கையாக, விளம்பரத்துக்காகக் கொடுக்கும் கொடை என்றைக்கும் பேசப்படாது. இயற்கையாக, தன்னிடத்தில் இருப்பதை, பலனை எதிர்பாராமல் கொடுப்பதே கொடை. அதனால், அதுவும் பிறவிக்குணம் என்கிறார் ஔவை மூதாட்டி.

ஆகவே, நட்பு, தயை, கொடை இந்த மூன்றும் பிறவிக் குணங்கள். மற்றதெல்லாம் நாம் பழகப் பழக வந்துவிடும் என்பது ஔவையின் அருள்மொழி.


வெள்ளி, 14 டிசம்பர், 2018

கொள்ளை கொண்ட கதை!

அது ஒரு அடர்ந்த கானகம்...அங்கே ஒரு கொள்ளைக்காரன். அவன் பேரு ரத்னாகரன். அந்தக் காட்டுப்பகுதியில, வருகிற போகிறவங்ககிட்டயெல்லாம், வழிப்பறி செய்து வாழ்க்கையை நடத்திக்கிட்டிருந்தானாம்.

ஒருநாள், வழிப்பறி பண்ண யாருமே கிடைக்காம அலைஞ்சப்ப, அவங்கிட்ட, முதன்முதலாக வந்து மாட்டினாராம் ஒருத்தர்.  ஆனா, அவர்கிட்டே கொள்ளையடிக்கிறதுக்கு எதுவுமே இல்லையாம். கோபம் வந்திச்சு அந்தக் கொள்ளைக்காரனுக்கு.
கையிலயும் பையிலயும் ஒண்ணுமே இல்லாம இப்படி சுத்திக்கிட்டிருக்கியே, எப்படின்னு அவரைப் பார்த்துக் கேட்டானாம் கொள்ளையன். அதற்கு அந்த வழிப்போக்கர், என் பெயர் நாரதன்...திரிலோக சஞ்சாரி, காசில்லாமலே எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடியவன் என்று சொல்லிவிட்டு.  "நீ ஏன் இவ்வாறு கொள்ளைத் தொழில்செய்து காலம் கடத்துகிறாய் ?..." என்று கேட்டாராம்.

அதற்கு  அந்தக் கொள்ளையன், "என்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்களையும் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்" என்று சொன்னானாம். அதற்கு நாரதர், "அப்படியானால் நீ செய்கிற இந்தப் பாவமாகிய வழிப்பறியில், அவர்களுக்கும் பங்கிருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தக் கொள்ளையன், "ஏன் இல்லை, நான் கொள்ளையடிக்கிற பொருளில் பங்கிருக்கிற மாதிரியே, இந்தப் பாவத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றானாம்.

அதற்கு நாரதர், "எதற்கும், நீ இதை உன் குடும்பத்தினரிடம் கேட்டுவிட்டு, வந்து பதிலைச்சொல்" என்றாராம்.  அதற்கு அவன், நாரதரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தன் வீட்டுக்குப்போய், கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளப்போனானாம் ரத்னாகரன். திரும்பிவந்தபோது, திகைத்துப்போயிருந்தானாம் அவன்.

என்னாச்சு ரத்னாகரா? என்று அவனைக் கேட்டாராம் நாரதர். அதற்கு அவன், கட்டிவைத்திருந்த நாரத முனிவரை அவிழ்த்து விட்டுவிட்டு,"எங்கள் அனைவரையும்  காப்பாற்றுவது உன்னுடைய கடமையேயன்றி, நீ செய்யும் எந்தப் பாவத்திலும் எங்களுக்குப் பங்கில்லை என்று என் பெற்றவர்கள் முதற்கொண்டு எல்லாரும் மறுதலித்துவிட்டார்கள் ஐயா..." என்று மனவருத்தத்தோடு சொன்னானாம்.

அதற்கு நாரதர், "அதுதான் உண்மை ரத்னாகரா...பாவமோ புண்ணியமோ, அவனவன் செய்யும் செயல்களுக்கு அவனவனே பொறுப்பாவான். பாவப்பொருளில் மற்றவர்களுக்குப் பங்கிருந்தாலும், பெறப்போகும் தண்டனையில் அவர்களுக்குப் பங்கு கிடையாது" என்று கூறினாராம்.

தான் செய்த செயல்களால், தனக்குப் பாவங்கள் சேர்ந்துவிட்டதே என்று அஞ்சி நடுங்கினானாம் அவன். அன்றைக்கு மனம்திருந்திய அந்த ரத்னாகரனாகிய வால்மீகியிடமிருந்துதான்  இன்றைக்கும் பேசப்படுகிற  ராமாயணம் எனும் இதிகாசம் பிறந்தது!

செவ்வாய், 11 டிசம்பர், 2018

விரிச்சி கேட்டல்!

பிரச்சனைகளின் கனம்தாளாமல் மனசுகிடந்து மறுகும்போது, அருகிலிருந்து யாராவது ஆறுதலாய் நாலு நல்லவார்த்தை சொல்லமாட்டார்களா என்று ஏங்கிப்போகிறது மனித மனது. அப்போது, மனசு நிறைகிறமாதிரி, நல்ல நிகழ்வுகளேதேனும் நடந்தாலோ, நல்ல வார்த்தைகளைக் கேட்டாலோ சுமை குறைந்து நம்பிக்கை பிறக்கிறது வாழ்க்கையில்.

படிக்கிற காலத்தில், கல்லூரி விடுதியிலிருந்தபோது, மனதின் இத்தகைய ஆதங்கம் இன்னோர் வடிவில் விரிவதைப் பார்த்ததுண்டு. வீட்டிலிருந்து, மாதக்கட்டணம் கட்ட மணியார்டர் வரவில்லையே என்ற கவலை,  போன கடிதத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்த தவிப்பு, எழுதிய செமஸ்டரில் எல்லாப் பாடமும் பாஸாகவேண்டுமென்ற வேண்டுதல் எல்லாவற்றிற்கும் பதிலாக, யார் கையிலாவது பைபிளைக் கொண்டுவந்து கொடுத்து, ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து அதிலிருக்கிற முதல்வசனத்தைப் படி என்று கேட்பாள் எஸ்தர் மரியம்.

நல்லதாய் ஏதாவது வசனம் வந்துவிட்டால், அன்றைக்கு முழுக்க அவள்முகம் சந்தோஷத்தில் ஜொலிக்கும். இல்லாமல், ஏதாவது வித்தியாசமாய் வந்தாலோ, நாள் முழுக்கப் புலம்பிக்கொண்டே இருப்பாள். எஸ்தர் மாதிரியில்லாமல், இன்னும் சிலர், தாங்களாகவே ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வாசித்துவிட்டு, ஆண்டவர் என்னோடு பேசிவிட்டார் என்று, இறுக்கம் தளர்ந்தவர்களாய் எழுந்துபோவார்கள்.

இங்கேயும் அப்படியொரு காட்சி...

"அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை 
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரனோக்கி யாய்மகள்
நடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாய ரென்போள்

நன்னர் நன்மொழி கேட்டன மதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது நீநின்
பருவர லெவ்வம் களைமாயோயென"

கார்காலம் வந்துவிட்டது. போருக்குச் சென்ற தலைவனைக் காணாமலும் அவனிடமிருந்து செய்தியேதும் வராமலும் கலங்கிநிற்கிறாள் தலைவி. அவளுடைய அந்த நிலையைக் காணப்பொறுக்காத அவளின் வீட்டிலிருந்த  முதிய பெண்கள், நெல்லுடன் முல்லை மலர்களைத் தூவி, இறைவனை வழிபட்டுவிட்டு, ஊருக்குள்ளே சென்று, தலைவிக்காக விரிச்சி கேட்டு நிற்கின்றனர். 

அப்போது, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட சிறு பசுங்கன்றானது, பசியினால் சுற்றிச்சுற்றி வருவதைக்கண்ட ஆயர்குலத்துப் பெண்மணியொருத்தி, அக்கன்றினை நோக்கி, "கோலுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்ற கோவலர்கள் பின்னேயிருந்து வழிநடத்த, உன் தாய் 
இப்போது வந்துவிடுவாள், வருந்தாதே" என்று கூறியதைக் கேட்கிறார்கள். 

நல்லமொழியை விரிச்சியாகக் கேட்ட அவர்கள், சஞ்சலத்தில் தவிக்கும் தலைவியிடம் வந்து, நாங்கள் கேட்ட நல்ல வார்த்தைகளும், கண்ட சகுனமும் நல்லதையே சொல்லுகிறது. அதனால்,போருக்குச் சென்ற தலைவன் பகைவர்களை வெற்றிகொண்ட திறைப்பொருளுடன் விரைவில் உன்னிடம் வருவான். நீ கலங்காமல் காத்திரு என்று கூறுகிறார்கள். 

இது, முல்லைப்பாட்டு காட்டுகிற சங்ககாலக் காட்சி. அக்காலக் காட்சியை அடியொற்றிய நிகழ்வுகளை இக்காலத்திலும் நாம் காணும்போது, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்களில் சிலவற்றை இன்றைக்கும் நம் மக்களில் சிலர் மறவாதிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.  


பெண்களின் தேசம் - (1) பார்வதியின் சபதம்

பாதிக்கப்பட்ட பெண்கள் பலநூறாயிருந்தாலும், சாதிக்கும் துடிப்புடன் தடைகளைமீறி வெற்றிகொண்ட பெண்கள் சிலநூறுபேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனைப்பெண்களைப்பற்றிப் பேசப்போகும் பகுதி இந்தப் பெண்டிர் தேசம்.

இதில் முதலாவதாக வருவது பார்வதியம்மாளின் கதை. தொடர்ச்சியாய் இன்னும்பல சாதனைக்கதைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும்.


பார்வதியின் சபதம்
--------------------------

 


நாட்டையும் பெண்ணென்போம்
நடை நெளிந்து ஓடுகிற
ஆற்றையும் பெண்ணென்போம்
அளவிலா அறிவுதரும்
ஏட்டையும் பெண்ணென்போம்
இடையின்றித் தேடுகிற
தேட்டையும் பெண்ணென்போம்
ஆனால்,
வீட்டுப் பெண்ணைமட்டும்
வேலைசெய்யும் அடிமையென்போம்

என்று ஆதிக்கக் கட்டுக்குள் பெண்களை அடைத்துவைத்திருந்த காலம்...

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளின் (1920) தொடக்கம். ஆங்கில அரசின் ஆட்சியில் காவல்துறையில் பணியாற்றிய கணவருக்கு வாழ்க்கைப்பட்டுவந்த ஒரு பெண்ணின் கதை. சத்தமின்றிச் சாதனை படைத்த ஒரு பெண்ணின் சரித்திரம்.

திண்ணைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் மட்டுமே கற்றுக்கொண்ட அந்தப் பெண்ணுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டைப்பற்றியெல்லாம் கற்றுத்தரப்படவில்லை. அதனால் பெற்றெடுத்ததோ பன்னிரண்டு குழந்தைகள். பிள்ளைப்பிராயத்தில் நோய்க்குப் பறிகொடுத்த மூன்று குழந்தைகளைவிடுத்து, ஐந்து பெண்குழந்தைகள், நாலு ஆண்குழந்தைகள்.

கணவரின் ஒற்றைச் சம்பளம். சுற்றிலும் தோட்டமும் துரவுமிருக்க, கிட்டவே ஓடிய தாமிரபரணியின் புண்ணியத்தில், வயிற்றுப்பாடு வயல் விளைச்சலில் கழிந்தாலும், பதினோரு பேருக்கான மற்ற செலவினங்கள் மலைபோல நிற்கும். இடையிடையே மருத்துவச்செலவுகள்வேறு.

அடிக்கடி குழந்தைப்பேறும் ஆளை வருத்திய ஆஸ்துமாவுமாக நலிவுற்றுப்போன உடம்பு. பெண்குழந்தைகளைப் படிக்கவைத்து என்ன செய்யப்போகிறாய்? படிப்பை நிறுத்திவிட்டுப் பக்கத்தில் வைத்துக்கொள். ஒத்தாசையாயிருப்பார்கள் என்ற உறவுக்காரர்களின் நச்சரிப்பு. அதற்கு ஆமோதித்த கணவரின் பேச்சு என்ற அத்தனையையும் சமாளித்து ஒற்றைப் பெண்ணாகப் போராடி, அத்தனை பிள்ளைகளையும் படிக்கவைத்துப் பணியிலமர்த்திவிடவேண்டுமென்ற உறுதியுடன் இருந்தார்கள் பார்வதியம்மாள்.

பெண்களைப் படிக்கத்தான் வைக்கிறாய், படிப்பை முடித்ததும் கட்டிக்கொடுத்துவிடு என்ற சுற்றியிருந்தவர்களின் சொல்லழுத்தங்களையும் மீறி, மூன்று பெண்களை ஆசிரியைகளாக்கி அழகு பார்த்தார். மொத்தத்தில், ஒன்பது பிள்ளைகளில் ஐந்து பேரை ஆசிரியப்பணிக்கும், ஒருவரைக் காவல்துறைக்கும், ஒருவரைக் கப்பற்படைக்கும் வேலைக்கு அனுப்பிவைத்தார்.

மேல்சட்டைகூட அணியாமல், சுற்றுக்கட்டுச்சேலையுடன் வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணின் முகத்தில் மெத்தப் பெருமிதம் வந்தது, படித்துப் புகழ்பெற்று நின்ற தன் பிள்ளைகளைப் பார்த்து. பெண்ணென்றால் பார்வதியை மாதிரி இருக்கணும் என்று மற்றவர்கள் பெருமை பேசினார்கள் பின்னால். ஆனால், அதற்கு முன்னால், அந்தச் சாதனைகளுக்காகப் பார்வதியம்மாள் சமாளித்த கஷ்டங்கள்,
இன்றைய பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.


பெண்டிர் தேசம் (2) * நெருப்பினில் கருகாத நம்பிக்கை *


முகத்தில் பரு வந்தால்கூட முகத்தை மறைக்கிற பெண்களையும், ஒப்பனை செய்துகொள்ளாமல் வெளியுலகிற்கு முகம்காட்டாத பெண்களையும்கூடப் பார்த்திருப்போம். ஆனால், இந்தப் பெண்ணின் கதை, தன் தோற்றத்தினால் கிடைத்த அவமானங்களையும் மீறி, சாதனை படைத்த ஒரு பெண்ணின் கதை.

அன்றைக்கு, வீட்டில் யாருமில்லாத நேரத்தில், வீட்டிலிருந்த பம்ப் ஸ்டவ்வில் தேநீர் போடப்போன எட்டுவயதுச் சிறுமி பிரேமாவின் உடலில்,  நெருப்புப் பற்றிக்கொண்டது. 50 சதவீதம் நெருப்புக் காயங்களுடன், அடையாளம் தெரியாத சதைக் கோளமாய் வெந்துபோனது அந்தச் சிறுமியின் முகம்.

வேலூரிலுள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரேமா, உயிருக்குப் போராடியதைப் பார்த்த அவரின் அன்னை, மகள் உயிர் பிழைத்தால் அவளை அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே மக்களுக்குச் சேவை செய்யவைக்கிறேனென்று கடவுளை வேண்டிக்கொண்டாராம்.

அந்தச் சின்ன முகத்தில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்தபின், நான்கு வருடம் கழித்து மீண்டும் பள்ளிக்குப்போன சிறுமி பிரேமாவுக்குப் பரிசாகக் கிடைத்ததோ அவமானமும் நிராகரிப்புமே. 13 வயதிலேயே பள்ளியிறுதித் தேர்வெழுதி, அடுத்த ஆண்டே பி.யூ.சி யில் சேர, அங்கே, அவரது உழைப்புக்குக் கிடைத்தது உயர்ந்த மதிப்பெண்கள்.

மதிப்பெண் அதிகம் வாங்கியதும் அருகில்வர ஆரம்பித்தார்கள் உடன் பயின்றவர்கள். பி யூ சியில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக வந்து, அடுத்து ஹூப்ளி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டமும் பெற்றார் பிரேமா. 

அடுத்தபடியாக, அவரது அன்னை செய்த வேண்டுதல் நிறைவேற, தனக்குச் சிகிச்சையளித்த பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர்.ஜோசஃப்பிடமே பிளாஸ்டிக் சர்ஜரியில் மேல் படிப்புக்காக மாணவியாகச் சேர்ந்தார். அது தவிர அமெரிக்காவிலும் சென்று, பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிப் படித்துவந்தார்.

அமெரிக்காவில் மட்டுமன்றி, நார்வே,கென்யா, எதியோப்பியா, தான்சானியா போன்ற நாடுகளுக்கும் சென்று, அங்கிருக்கும் பலருக்கும் மருத்துவ சேவையாற்றியிருக்கிறார் டாக்டர் பிரேமா. அன்றைக்குப் பலர் பார்க்க வெறுத்த அவரது முகமே, இன்றைக்கு பாதிக்கப்பட்ட பலருக்கு நம்பிக்கையளிப்பதாகக் கூறுகிறார் அவர்.

தற்போது, பிளவுபட்ட உதடுகளுடையவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளித்தும், பெங்களூரில் அக்னி ரக்ஷா என்ற சேவை நிறுவனத்தை நடத்தியும், பலருக்கு ஒளிவிளக்காகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் டாக்டர் பிரேமா தன்ராஜ். இவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி பற்றிய (Plastic Surgery Made Easy) என்ற நூலும் எழுதியிருக்கிறார்.

*** தகவல்கள் அனைத்தும் இணையத்திலிருந்து திரட்டப்பட்டவை ***