நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தானும் பஸ்ஸுக்குப் பின்னால் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, மூச்சிரைக்க வந்து உட்கார்ந்தாள் முத்துப்பேச்சி.
சவத்துப்பய புள்ளைக...ஒத்த ரூவாய்க்குக் கூடவா வழியில்லாமப் போச்சு என்று திட்டியபடி, இடுப்பிலிருந்த துணி மூட்டையைத் தரையில் இறக்கிவைத்துவிட்டு, தன் பரட்டைத் தலைமுடியைத் தூக்கி முடிந்துகொண்டாள்.
அதற்குள் அடுத்தபஸ் வர, அவசர அவசரமாய் மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட எத்தனிக்கையில், சாலையிலிருந்த கல்லில் கால்தடுக்கி, கையிலிருந்த அவளது அழுக்கு மூட்டை விழுந்து சிதறியது. உள்ளிருந்த பழைய பள்ளிக்கூட யூனிஃபார்ம், பச்சைக்கலர் தாவணி, அட்டை கிழிந்துபோன ஐந்தாறு புத்தகங்கள், சட்டையில் குத்துகிற பேட்ஜ், குட்டிக்குட்டியாய்ப் பென்சில்களென்று அத்தனையும் தார்ச்சாலையில் பரவிக்கிடக்க, அதையெல்லாம் வேகமாகப் பொறுக்கியெடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பஸ் போயிருந்தது.
ஐயையோ... என்றபடி, திரும்பி நடந்தாள் அவள். எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்தார் தபால்காரர் சாமிக்கண்ணு. "என்ன, சாமிக்கண்ணு மாமா, வேலைக்கிப் போறியளா?" என்றபடி தன் காவிப்பற்களைக் காட்டிச் சிரித்தாள். "வீட்ல அத்தையும் மக்களும் சௌக்கியமா?", என்று அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டு, ஒரு அஞ்சு ரூவா இருந்தாக் குடுங்க மாமா, காப்பித் தண்ணி வாங்கணும் என்று உரிமையுடன் கேட்க, "ஏய், அவனவன் இங்க கஞ்சிக்கே திண்டாடுறான், கிறுக்குக் கழுதைக்குக் காப்பி கேக்குதோ காப்பி" என்றபடி சைக்கிளை வேகமாய் மிதித்துக் கடந்துபோனார் அவர்.
எதிரில், கூட்டமாய் பஸ்சுக்குக் காந்திருந்தவர்களையும் ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு நலம் விசாரித்தபடிக் காசு கேட்டும், காப்பிக்கான காசு தேறவில்லை அவளுக்கு. நகர்ந்துபோய், அங்கிருந்த கொடிமரத் தூணில் சரிந்து, காலை நீட்டி உட்கார்ந்தாள். கால் பெருவிரலில் நகம் பெயர்ந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அதை அவள் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. வாய் மட்டும் எதையோ விடாமல் முணுமுணுத்தபடியிருக்க, கை அனிச்சையாய் அசைந்து அசைந்து போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக்கொண்டிருந்தது.
முத்துப்பேச்சிக்கும் அது தான் சொந்த ஊர். பத்தாவது படிக்கும்போது, அவளது மொத்தக் குடும்பமும் படகு விபத்தொன்றில் செத்துப்போக, ஒற்றையாய் உயிர்பிழைத்தவள் அவள். படித்த படிப்பும் பெற்றவர்களோடு போய்விட, ஒட்டுத்திண்ணையுடன்கூடிய ஓட்டுவீடு ஒன்றைத் தவிர வேறெதுவும் சொந்தமில்லாமல் போனது அவளுக்கு. வயிற்றுப் பாட்டுக்காக, பத்துப் பாத்திரம் விளக்கியும், பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர்க்குடம் சுமந்தும் பாடுபட்டவளை விட்டுவைக்கவில்லை விதி.
பள்ளத்துத் தெருவிலிருக்கிற தன் வீட்டுக்கு ஒருநாள், பனங்காட்டு வழியே நடந்துகொண்டிருந்தபோது, முகம்தெரியாத மனித மிருகங்கள் சில ஒன்றுசேர்ந்து அவளைச் சீரழித்துவிட, பித்துப்பிடித்தவளாகிப்போனாள் அவள்.
அதற்குப்பிறகு, இரவு பகலென்ற வித்தியாசங்களெல்லாம் அவளுக்கு மறந்துபோனது. ஆனால், உறவுமுறை சொல்லி அழைப்பது மட்டும் மறந்துபோகவில்லை. அத்தை, மாமா, சித்தி, பெரியம்மா என்று ஊர்க்காரர்கள் அத்தனை பேரையும் உறவுசொல்லிக் கூப்பிடுவாள். பதிலுக்கு அவளிடம் பாசமாய்ப் பேசவேண்டிய உறவுகளெல்லாம் முறைத்துக்கொண்டு போனாலும், மூச்சிரைக்கிறவரைக்கும் அவர்களுக்குப் பின்னால் ஓடிப்போய் காசு கேட்பாள்.
அவள் துரத்தலுக்குப் பயப்படாதவர்கள்கூட, அவள் உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவதைக் கேட்க விருப்பமில்லாமல், சில்லறையைக் கொடுத்துவிட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்து போவதுண்டு.
சுத்தமாய்க் கையில் காசு கிடைக்கவில்லையென்றால், முக்குக்கடைக் குமரேசன் கடையில் அக்கவுண்ட் உண்டு அவளுக்கு. கடை வாசலில்போய், "சித்தப்பா..." என்றபடி சிரித்துக்கொண்டு நிற்பாள். அவரும், கடை வாசலிலிருந்து அவளை நகர்த்துகிற மும்முரத்தில், காப்பியையும் ரொட்டியையும் வேலையாளிடம் கொடுத்து, வேகமாய்க் கொடுத்தனுப்பச் சொல்லுவார். ரொட்டியும் காப்பியும் தவிர, தட்டு நிறையப் பலகாரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளமாட்டாள்.
பதிலாகச் சில சமயம், காசென்று கையில் என்ன கிடைத்தாலும், கொண்டுபோய் காப்பிக்கடைக் குமரேசனிடம் நீட்டுவாள். அவரும் அதைப் பேசாமல் வாங்கிக்கொள்ளுவார். வாங்காமல் போனால் உறவுமுறையோடு வசவுமுறையையும் அவள் வாயிலிருந்து வந்து விழும்.
அவளைப் பற்றி, ஊருக்குள் யாருக்கும் அக்கறையில்லையென்றாலும், அவள் எப்போதாவது சோறு தின்பாளா என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் காப்பிக் கடைக் குமரேசன் மனசில் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.
நாலு நாளாய் அடைமழையடித்து அன்றைக்குத்தான் வானம் வெளிச்சத்தைப் பார்த்திருந்தது. மழைநேரமென்பதால் காப்பி, டீ வியாபாரத்துக்குக் குறைவில்லாமல்தான் இருந்தது. சட்டென்றுதான் முத்துப்பேச்சியின் ஞாபகம் வந்தது குமரேசனுக்கு. ஐந்தாறு நாளாய் அவள் கடைப்பக்கம் வரவில்லையென்று தோன்றவே, கடைப் பையனிடம் விசாரித்தார். அவனும் பார்க்கவில்லையென்று பதில் சொன்னான்.
சரக்கெடுக்க சந்தைப்பக்கம் போகையில், பஸ் ஸ்டாண்ட் திண்ணைகளில் தேடினார். அங்கும் அவள் தென்படவில்லை. பள்ளத்துத் தெரு வீடும் பஸ்டாண்டுமே கதியென்று இருப்பவள் எங்கே போயிருப்பாள் என்ற கேள்வி அவரது மனதைக் குடைந்தபடியிருக்க, அவரையுமறியாமல் அவரது சைக்கிள் அவளது ஓட்டு வீடிருந்த தெருப்பக்கம் போனது.
இறங்கிப்போய்ப் பார்க்கத் தோன்றாமல் ஏதோ உணர்வு பின்னுக்கு இழுக்க, ஐந்தாறு வீடு தள்ளியிருந்த தனலச்சுமியிடம் விசாரித்தார். "தெரியலண்ணே, முந்தாநாளு ராத்திரி பெய்த மழையில அவ இருந்த வீடு சரிஞ்சுபோச்சு. அவ இப்ப, எந்த வீட்டுத் திண்ணையில ஏச்சுபேச்சு வாங்கிக்கிட்டுக் கெடக்காளோ என்றபடி, காலிக்குடத்தை எடுத்தபடி வெளிக்கிளம்பினாள் தனலச்சுமி.
எதற்கும் பார்ப்போமே என்று, இடிந்துகிடந்த அவளது ஓட்டு வீட்டுப்பக்கம் போனார் குமரேசன். திண்ணையில் அவளுடைய அழுக்குத்துணி மூட்டை அடைமழையில் நனைந்து கிடந்தது. உள்ளே இறங்கிச் சரிந்திருந்த ஓட்டுக் குவியலுக்குள் எட்டிப்பார்த்தார். ஒன்றும் தென்படவில்லை அவருக்கு. திரும்பி நாலைந்து அடிவைத்தபோது, "காப்பி குடு சித்தப்பா...காலெல்லாம் வலிக்குது..." என்று ஈனஸ்வரத்தில் கேட்டது அவளது குரல் .
உடம்பெல்லாம் அதிரத் திரும்பினார் அவர். ஓட்டுக் குவியலுக்குள் மறுபடியும் அவளைத் தேடியது அவரது பார்வை. உடைந்த வீட்டின் ஒருபக்கத்து மண்சுவர் அவள் இடுப்புக்குக் கீழே விழுந்து நசுக்கியிருக்க, அங்கே, ஓடுகளுக்கிடையே ஒடுங்கிக்கிடந்தாள் அவள். அழுத்துகிற சுவருக்கும் அடைமழைக்கும் நடுவே சிக்கி உரக்கக் குரல்கொடுக்கக்கூடமுடியாமல் துவண்டுபோயிருந்தாள் முத்துப்பேச்சி. எப்போதும்போல, அவளது ஒற்றைக் கை மட்டும் ஓடுகளுக்கு வெளியே நீண்டபடி, தன்னிச்சையாக எதையோ யாசித்தபடி அசைந்துகொண்டிருந்தது.