பட்டென்று அந்த இடத்தை ஒரு உற்சாகம் சூழ்ந்துகொண்டது. "ஏய், யாராரு என்னென்ன கொண்டுவரணும்னு இப்பவே பேசிக்கிட்டாத்தான் நாளைக்குள்ள எல்லாத்தையும் சேக்கமுடியும். ஏல செல்வி, நான் காப்படி அரிசி" என்று ஆரம்பித்து வைத்தாள் கன்னியம்மா.
"காப்படியரிசி யாருக்குப்போதும்? அரப்படியாச்சும் வேணும். அதனால நான் காப்படி எடுத்துட்டு வாரேன்" என்றாள் குமுதா.
"எங்கம்மா பருப்பு டப்பாவ எங்க வச்சிருக்குன்னு எனக்குத் தெரியும். அதனால, நான் பருப்பு" என்றாள் கோமதி. "உப்பு, புளி,மொளகா என்னோட பங்கு" என்றாள் மாலதி.
ஆமா, கூட்டாஞ்சோறுக்கு வேறென்ன வேணும்? என்று அப்பாவியாய் லச்சுமி கேக்க, அத்தனை சாமானையும் எதுல போட்டுப் பொங்குறது? அதுக்கு சட்டிப்பானை வேணும் என்று சண்முகவடிவு சொல்ல, "அப்ப சட்டியும் பானையும் நாங்கொண்டுவாரேன்" என்ற லச்சுமியிடம், அப்ப கரண்டியென்ன உங்க பாட்டி கொண்டுவருவாகளா? அதையும் நீயே எடுத்துட்டு வந்துரு என்றாள் வடிவு. 'களுக்'கென்று சிரித்தபடியே சரியென்று தலையாட்டினாள் லச்சுமி.
அதற்குள், பொம்பிளப்பிள்ளைகளெல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறாக்கப்போகிற விஷயம் பயலுகளுக்கும் தெரிந்துபோக, "ஏய், எங்களையுஞ் சேத்துக்கோங்கப்பா..." என்று ரெண்டொருத்தர் வந்து நிக்க, "அப்ப சரி. ஏலேய் ஆறுமுகம், நீ உங்க தோட்டத்லேருந்து வெறகு எடுத்துட்டு வந்துரு. மாணிக்கம் நீ எல்லாருஞ் சாப்டுறதுக்கு எலையறுத்துட்டு வந்துரு" என்றாள் அவைத் தலைவியாயிருந்து ஆரம்பித்துவைத்த செல்வி.
எல்லாத்தையும் கேட்டுக்கிட்டிருந்த எட்வின், "எப்பவுமே இந்தப் பொம்புளப்புள்ளைகளுக்கு புத்தி கம்மிதான்" என்று சொல்ல "ஏலேய்ய்ய்ய்ய்...." என்று மொத்தப் பிள்ளைகள் கூட்டமும் எகிற, "பின்ன என்ன? காய்கறியே இல்லாம கூட்டாஞ்சோறாக்கப் போறீகளா?" என்று சிரித்தான் எட்வின். "அட ஆமால்ல..."என்று அசடு வழிந்த பிள்ளைகளிடம், "சரி, என்னோட பங்குக்கு நான் கத்திரிக்காயும், தக்காளியும் கொண்டுவாரேன்" என்றான் எட்வின்.
"ஏல எட்வினு, நீ புத்திசாலிதான்..." என்று சிரித்த குமார், "நா உருளக்கிழங்கு கொண்டாறேன். வேறெதாச்சும் வேணுமாப்பா?" என்றான். "கூட ரெண்டு வெங்காயமும் பச்சமொளகாயும் கொண்டாந்துரு" என்று லச்சுமி சொல்ல சரியென்று தலையாட்டினான் குமார்.
"முக்கியமான ஒண்ண விட்டுட்டீங்களே..." என்று நக்கலாகச் சிரித்த பாண்டியிடம் "என்னடா அது?" என்று அப்பாவியாய்க் கேட்டாள் வடிவு. "காயெல்லாம் வெட்டுறதுக்குக் கத்திய விட்டுட்டீங்களே..." என்று பாண்டி சிரிக்க, "அதெல்லாம் ஒன்ன மாதிரி ரவுடிப் பையனுக்குத்தான் தோணும்" என்று குமுதா அவனை வாற, "சரிசரி...நீ வரும்போது சின்னதா ஒரு கத்தியெடுத்துட்டுவா...மறந்தாப்புல அருவாளத் தூக்கிட்டு வந்துறாத..."என்று அவனைப் பார்த்து சிரித்தாள் செல்வி.
அடுத்தநாள், அடுப்புக்குக் கல்லைக் கூட்டி, நெருப்புப் பெட்டி கொண்டுவர, ஆரம்பமானது கூட்டாஞ்சோறுப் படலம். "ஏய், யாருமே தண்ணியெடுத்துட்டு வரலேல்ல? ஏலேய், நீங்கபோயி பம்புசெட்டுல தண்ணி புடிச்சிட்டுவாங்க" என்று செல்வி சொல்ல, "ஏய், அதெல்லாம் பொம்புளப்புள்ளைகளோட வேல..." என்று மறுதலித்தான் மாணிக்கம்.
"ஏலேய், இங்க பார்டா, வெளையாட்டுன்னு வந்துட்டா ஆம்பள பொம்பளன்னு வித்தியாசம் பாக்கக்கூடாது ஆமா..." என்று வடிவு சொல்ல, "சரி மொதல்லயே இப்டி பக்குவமாச் சொல்லியிருக்கலாம்ல..." என்று பானையை வாங்கிக்கொண்டு புறப்பட்ட பயல்களிடம், "பானை நெறய தண்ணி வேணும், எங்கியும் போட்டு ஒடைக்காம பத்திரமா கொண்டுவாங்கடா... அப்றம், எங்க அம்மா வையும்" என்று எச்சரித்தாள் லச்சுமி.
"சரி தாயி, உன் பானைக்கு நான் காவல்" என்று பாண்டி சொல்ல, பம்புசெட்டுக்குப் புறப்பட்டார்கள் ஆண்பிள்ளைகள். பானை நிறைய வந்த தண்ணீரில் பருப்பையும் அரிசியையும் கொட்டி, ஓலைக்குமேல் உட்காந்து ஒவ்வொரு காயாக நறுக்கிப்போட்டாள் கன்னியம்மா. அரிசியும் பருப்பும் கொதிக்கையில், அத்தனை பேருஞ் சேர்ந்து ஆரவாரம் செய்ய, உப்பு, புளியைக் கரைத்து ஊற்றிய லட்சுமிக்கு ஒரே சந்தோஷம், நாமளும் சமையல் செய்றோம்ல்ல என்று.
"ஏய், வெந்துருச்சான்னு பாருப்பா...வாசத்தைப் பாக்கும்போது, இப்பவே பசிக்குது" என்றான் பாண்டி. "பொறுடா, சாப்பாட்டுராமா, உங்க வீட்டுக் கத்திய வச்சு எலைய நறுக்கி வையி" என்று அவனுக்கொரு வேலை கொடுத்தாள் செல்வி.
பத்து நிமிஷத்தில் கூட்டாஞ்சோறு தயாராயிருச்சு. மத்தியில் உட்கார்ந்தபடி எல்லாருக்கும் எடுத்தெடுத்து இலையில் வைத்தாள் வடிவு. உப்பிருக்கா உரைப்பிருக்கா என்று உணரத் தோன்றாமல், சிரிப்பும் பேச்சுமாக விறுவிறுவென்று உள்ளே போனது சாப்பாடு. சோற்றுப் பாத்திரம் காலியாக, அங்கே அத்தனை முகங்களிலும் நிரம்பி வழிந்தது பொய்க்கலப்பில்லாத உண்மையான உற்சாகம்.
*********
பின்குறிப்பு: பிள்ளைப்பருவத்தில் விளையாடிய விளையாட்டுக்களும், இது போன்ற இனிய நிகழ்வுகளும் என்றைக்கும் மனதில் இளமையாய் நிலைத்திருக்கக்கூடியவை. இதையெல்லாம் இழந்து, கணினியும், கைபேசியும், தொலைக்காட்சியுமே கதியென்று வளருகிற இந்தக் காலத்துக் குழந்தைகளை நினைக்கையில், மனதில் வருத்தம்தான் மேலிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக