புதன், 5 பிப்ரவரி, 2014

மண்ணும் மனசும்


மத்தியானம் போச்சுது கரண்டு, இன்னமும் வரல... பெருசா ஏதாவது பிரச்சனையாயிருக்குமோ? வந்ததும் சாப்பிடலாம்னு பாத்தா, இன்னும் வரக்காணமே... மனசிலோடிய கேள்விகளோடு, வாசல்நடையில் தலையைவச்சுப் படுத்திச்சு அன்னம்மா பாட்டி.

ராத்திரிச் சாப்பாட்டுக்கு மதியம் பொங்கின சோறும்,மீன் குழம்பும் பாத்திரத்தில் இருந்தது. சின்னவயசில, முள்ளையெல்லாம் எடுத்துட்டு, மீனைப்போட்டு பிசைஞ்சு குடுத்தா அள்ளிஅள்ளி ஆசையாச் சாப்பிடுவான் பாட்டியின் மகன் குமரேசன். இப்ப கடல்கடந்து தள்ளிப்போய் இருக்கிறதால தன் கையால மகனுக்கு ஆசையாச் சமைச்சுப்போடக்கூடமுடியல, என்று நினைக்கையிலேயே கண்ணீர் வந்திச்சு பாட்டிக்கு. குமரேசன், சோமசுந்தரம் தாத்தாவுக்கும் அன்னம்மா பாட்டிக்கும் பிறந்த ஒரே மகன். பள்ளிக்கூட நேரம் போக மத்த நேரமெல்லாம் மகனைப் பக்கத்திலேயே வச்சிருக்கும் பாட்டி.

வெளியே ஆள்நடமாட்டமே தெரியல.தெருவில் நாயெல்லாம் சேர்ந்து, உச்சஸ்தாயியில் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க,  "நாயோட கண்ணுக்குத்தான் பேய், பிசாசெல்லாம் தெரியுமாம்ன்னு, யாரோ கூடப்படிக்கிற பையன் சொன்னதைக் கேட்டுட்டு, இரவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டாலே ஓடிவந்து அம்மாவின் முந்தானைச் சேலைக்குள் புதைந்துகொள்ளும் குமரேசனின் ஞாபகம் வந்தது பாட்டிக்கு. மகனை தைரியப்படுத்த, "காக்கக் காக்க கனகவேல் காக்க..." ன்னு சொல்லிக்கொடுத்தது நினைவுக்குவர, தானும் அந்த வரிகளை மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டது. வயசானாலும்கூட, இந்த பயம்மட்டும் போகமாட்டேங்குது என்று நினைக்கையில் தனக்குத் தானே சிரிப்பு வந்தது பாட்டிக்கு.

சோமசுந்தரம் தாத்தா உசுரோட இருந்தப்போ, கருக்கல்ல, கொல்லையில கட்டின மாடு சத்தம் போட்டாக்கூட, "கொஞ்சம் எந்திரிச்சு என்னோட வாங்களேன்..." என்று துணைக்கு அவரை எழுப்பும் பாட்டி.  இப்போ தாத்தாவும் இல்லை, தான் பெற்ற மகனும் கூட இல்லை. ஆனாலும் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கையையும், மகனின் இளவயது நினைவுளையும் சுமந்திருக்கும் இந்த வீட்டையும் ஊரையும் விட்டுப்போக விருப்பமில்லாமல், பயத்தோடு தனிமையையும் தாங்கிக் கிடக்குது பாட்டி.

முன்னெல்லாம், மழைவிட்ட ராத்திரி நேரங்களில், சில்வண்டுச் சத்தமும், மழைத்தவளைகளின் முணுமுணுப்பும் சேர, முற்றத்தில் காடாவிளக்கை வச்சுக்கிட்டு, பாட்டியின் மகன் குமரேசனும், அவன் வயசுப் பிள்ளைகளும், வட்டமா இருந்து பாட்டிகிட்ட கதைகேட்டதும், கொலகொலயா முந்திரிக்கா விளையாடியதும் நினைவுக்கு வர, கடல்கடந்து வசிக்கிற மகனையும் மருமகளையும், பேரன் பேத்தியையும் நினைத்துக் கண்ணீர் பெருகியது அன்னம்மா பாட்டிக்கு.

வருஷத்துக்குப் பதினஞ்சு நாள், வசந்தம்போல் வந்து போவாங்க பாட்டியோட பேரப்பிள்ளைங்க. அதுவும் அங்கே இங்கேன்னு சுத்திப்பார்க்கிறதிலயும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வர்றதிலயேயும் முக்கால்வாசி கழிஞ்சுபோகும். பாட்டியோட வீட்டுல அஞ்சாறு நாள் இருக்கிறதுக்குள்ள "பொழுதேபோகல பாட்டி..." என்று அலுத்துக் கொள்வார்கள் குழந்தைகள். அப்புறம் மறுபடியும் அடுத்த வருஷம். ஒவ்வொரு தடவையும் "நீ எங்களோடு வந்துடு பாட்டி''ன்னு பேரப்பிள்பிள்ளைகள் எவ்வளவோ கூப்பிட்டாலும் மண்ணையும் மனுஷங்களையும் விட்டுட்டுப்போக மனசுதான் ஒத்துக்கல பாட்டிக்கு.

நினைப்புகளில் முங்கிப்போக, நேரம் போனதே தெரியல. கழுத்துப்பக்கமெல்லாம் வியர்வையில் கசகசக்க, முந்தானையால் துடைச்சிக்கிட்டு, மணியைப் பார்க்க எழுந்துபோச்சு அன்னம்மா பாட்டி.

வாசல் பக்கம் பேச்சுச்சத்தம் கேட்டுது. இன்னிக்கி ராத்திரிக்குக் கரண்டு வராதாம். மழையில மரம்விழுந்து வயரு அறுந்துபோச்சாம்...பக்கத்துவீட்டு சிவந்தியின் புருஷன் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மதியம் போனது,  இனிமே இப்போதைக்கு வராதுன்னு தெரிஞ்சுபோச்சு. எப்பவும், ஒத்தையாப் படுக்கிறதுக்கு அந்த விடி பல்பைப் போட்டுட்டுப் படுத்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும் பாட்டிக்கு. விடிவிளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் மாட்டிய  தாத்தாவின் படத்தைப் பாத்துகிட்டா கொஞ்சம் நிம்மதியாயிருக்கும். மெழுகுவத்தியைப் பொருத்திவச்சுட்டுப் படுக்கவும் பயமாயிருக்கவே, சிம்னி விளக்கில் எண்ணெய ஊத்தி சின்னதா எரியவச்சுட்டு, கையிலெடுத்த மெழுகுவத்தியைக்கொண்டு கடிகாரத்தில் மணியைப் பார்த்தது பாட்டி.

மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. வயிறு பசிச்சுது, ஆனா, சாப்பிட மனம்வரல. ஆறிப்போன சோத்துல, அரைச்செம்புத்தண்ணியை ஊத்திட்டு, மீதித்தண்ணியை 'மடக் மடக்'குன்னு குடிச்சிட்டு, தனிமையோட வேதனையைத் தண்ணியாலயா கழுவமுடியும்? என்று தனக்குத்தானே நினைத்தபடி பெருமூச்சுவிட்டுது பாட்டி.

தூரத்தில் எங்கோ கேட்ட கோட்டானின் சத்தத்தில் உடல் நடுங்கியது பாட்டிக்கு. விசிறியை வீசி மெழுகுவர்த்தியை அணைச்சிட்டு, விட்ட இடத்தைத் தொட்ட நினைவுகளோடு கட்டிலில் படுத்த பாட்டி,  முட்டிவந்த கண்ணீரை முந்தானையில் துடைச்சிட்டு, "எங்கயிருந்தாலும் என் புள்ளைக நல்லாருக்கட்டும் கடவுளே..."என்றபடி கண்களை இறுகமூடிக்கிருச்சு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக