ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

உறங்கா நகரம் மதுரை!

சென்னைக்குச் செல்கிற அந்தத் தனியார் பேருந்து மதுரை ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தத்தில் நின்றது. மணி இரவு 10. எடுத்து வந்திருந்த இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு, சாப்பாடு கட்டியிருந்த இலையினையும் காகிதத்தையும் போட்டுவிட்டு வரலாமென்று கீழே இறங்கினேன். பளிச்சென்ற விளக்குகள்,  போவதும் வருவதுமாய் மக்கள் கூட்டம், இரவென்று சொல்லமுடியாதபடி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது மதுரை.

சுற்றிலும் தனியார் பேருந்துகளுக்கான சிறு அலுவலகங்கள், பெட்டிக்கடைகள், பழக்கடைகள், தேநீர்க் கடைகள் தெரிந்ததேயன்றி குப்பைகளைப் போட குப்பைத் தொட்டியொன்றும் கண்ணில் படவில்லை.

சுற்றிலும் பார்த்த என்னிடம் அக்கா, ரெண்டு பத்து ரூவாக்கா வாங்குங்கக்கா என்றபடி அருகில் வந்த செயற்கைப் பூச்சாடி விற்றுக்கொண்டிருந்த சிறுவனிடம், தம்பி குப்பையைப் போட குப்பைத்தொட்டி எங்கேயிருக்குப்பா? என்றேன். அக்கா, சும்மா இந்த பஸ்ஸுக்கு அடியில போடுங்கக்கா என்று சொல்லிவிட்டு, அக்கா ஒண்ணாச்சும் வாங்குங்கக்கா என்றான். பஸ் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. இருப்பா, ரெண்டாவே குடு என்றேன். இருந்ததிலேயே பளிச்சென்ற நிறத்தில் இரண்டு பூச்சாடிகளை நீட்டினான்.

கொடுத்ததை வாங்கிக்கொண்டு அவனிடம், தம்பி உன் பேரென்னப்பா என்றேன். 'அழகர்க்கா...' என்று சட்டென்று கண்கள் மின்னச் சொன்னவனிடம் 'படிக்கிறியா...' என்றேன். 'ம்ம்...எட்டாப்புப் படிக்கிறேன்க்கா. வீட்ல படிச்சுமுடிச்சிட்டு சாப்பாட்டுக்கு அப்புறம்தான் பூ விக்க வருவேன். எனக்கு முன்னாடி என் அண்ணன் வருவான்' என்றான்.

'ஆமா, உங்க ஊர்ல என்ன ஸ்பெஷல்?' என்றவுடன், ஒருநிமிடம் யோசித்துவிட்டு 'மீனாச்சி கோயில்க்கா...' என்றான். அதுதவிர என்றவுடன் 'மல்லிப்பூ, இட்லி, ஜிகர்தண்டா, திருமலை நாயக்கர் மஹால்,  திருப்பரங்குன்றம் அப்புறம் அழகர் கோயில்' என்றவனிடம் நீ அடிக்கடி எந்த கோயிலுக்குப் போவே? என்ற கேள்விக்கு, மடப்புரம் காளி கோயில்க்கா. அங்கதான் எங்கம்மா அடிக்கொருக்கா கூட்டிட்டுப் போகும் என்றான். அப்போ, மீனாட்சி அம்மன் கோயில்? என்று கேட்டவுடன், எப்பவாச்சும் போவோம்க்கா என்றான்.

ஆமா, எத்தனை மணிவரைக்கும் பூச்சாடி வியாபாரம் பண்ணுவே என்று கேட்க? இப்ப போயிருவேன்க்கா. இனி நாளைக்கு சாயந்திரம் எட்டுமணிக்கு வருவேன் என்றவனிடம், 'சரி தம்பி படிப்பை மட்டும் விட்டுராதே' என்றதும் சரிங்கக்கா என்று சிரித்தபடி நகர்ந்துபோனான் அவன். சுற்றிலும் அவனைப்போல் நிறைய சிறுவர்கள் பழங்கள், பைகள், தொப்பிகள், பொம்மைகள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள்.

கூவிக்கூவி விற்கிற சத்தங்கள், புறப்படுகிற பேருந்துகளின் ஒலி, சென்னை, திருச்சி, பேருந்துகளுக்குப் பயணிகளைக் கூப்பிடுகிற நடத்துனர்களின் சத்தம், பக்கத்துப் பரோட்டாக் கடையில் கொத்துப் பரோட்டா போடுகிற சத்தம், இடையிடையே அங்கே திரிகிற மாடுகள் எழுப்புகிற சத்தம் என்று கலவையான சத்தங்கள் நிறைத்திருக்க இரவென்ற எண்ணமே எழவில்லை. உறங்கா நகரம் அந்த நள்ளிரவிலும் உற்சாகமாகவே தெரிந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக